Saturday, March 19, 2011

கண்ணன் வருவான், கதை சொல்லுவான், 2-ம் பாகம்!

. ஆஹா, எப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலையில் நம்மை மாட்டிவிட்டான் அந்த இடையன்! பலி கொடுக்கப்போகும் ஆட்டை அலங்கரிப்பது போலவே நமக்கும் யுவராஜ பட்டாபிஷேஹம் நடக்கப் போகிறது. சந்தன, குங்குமங்களால் அலங்கரிக்கப்பட்டு மலர்மாலை சூட்டப் பட்டுச் செல்லும் ஆடு, பலிபீடத்திற்குச் செல்கிறோம் என நினைத்தாவது பார்க்குமா! அதேதான் எனக்கும் நடக்கப் போகிறது. அந்த பலியாடு கனைத்துக்கொண்டே செல்வதைப் போல நானும்……… இல்லை, இல்லை, எனக்குக் கனைக்கக் கூடத் தெம்பில்லை. அதற்கும் தைரியம் இல்லை. நான் சிரித்த வண்ணம் செல்லவேண்டும், ஒரு வீரதீர சாகசங்கள் செய்யும் கதாநாயகனைப் போல, ஜராசந்தன் என் தொண்டையைத் தன் கத்தியால் அறுக்க வருவதைப் போலவும், அதையும் எதிர்க்கும் வீரனைப் போலவும் நடக்கவேண்டும்.

அந்த பீஷ்மகன் தன் மகள் ருக்மிணியின் சுயம்வரத்திற்கு யாதவர்களை அழைத்தால் என்ன, அழைக்காவிட்டால் என்ன! இதிலே யாதவர்களுக்குப் பெருத்த அவமானம் எங்கிருந்து வந்தது? அவர்கள் கெளரவம் இதில் என்ன பாழ்பட்டுப் போனது! பீஷ்மகனுக்கு யாரை அழைக்க இஷ்டமோ அவர்களை அழைக்கட்டுமே. யாதவர்களில் உக்ரசேனன் வயதானவர், ஆகையால் அவரை அழைக்கமுடியாது. அதோடு அடுத்த இளவரசனும் இல்லை. மேலும் பெயருக்குத் தானே யாதவர்கள் அரசன் என்று அழைக்கப் படுகிறார்கள். உண்மையாகவே ராஜவம்சத்து சிம்மாதனத்தை அலங்கரிக்க எந்த யாதவனாலும் இயலாதே! வம்ச பரம்பரையாகத் தொடரும் சாபம் தடுக்கிறதே! பீஷ்மகன் ஒரு அரசனுக்கோ, அல்லது இளவரசனுக்கோ தான் தன் பெண்ணைக் கொடுக்க ஆசைப்படுவான். அது தான் இயற்கை.

ஏற்கெனவே சொல்லி இருந்தாலும் இந்த இடத்தில் ஒரு முறை, யாதவர்கள் ஏன் அரசனாக முடியாது என்பதற்கான காரணத்தை நினைவூட்டுகிறேன்.

{ நஹுஷன் என்பவனின் மகனான யயாதிக்கு தேவயானி, ஷர்மிஷ்டை என்னும் இரு மனைவியர். இவர்களில் யயாதிக்கு தேவயானி மூலம் இரு மகன்களும், ஷர்மிஷ்டை மூலம் மூன்று மகன்களும் உண்டு. தேவயானி தான் பட்டத்தரசி. தேவயானி அசுரர்களின் குருவான சுக்ராசாரியாரின் மகள். அவளுக்கு ஷர்மிஷ்டையை யயாதி மணந்ததும், அவள் மூலம் மூன்று மகன்கள் இருப்பதும் தெரியாது. ஒரு நாள் திடீரெனத் தெரிய வந்ததும், தன் கணவன் தனக்கும் தன் இரு மகன்களுக்கும் செய்த துரோகத்தால் மனம் வருந்தித் தன் தகப்பனான சுக்ராசாரியாரிடம் சென்றுவிடுகிறாள். சுக்ராசாரியாருக்கு மகளின் துன்பம் தாங்க முடியாமல் யயாதியைக் கிழப்பருவம் எய்தும்படி சபிக்கிறார்.

இளமையும் அழகும், வீரமும் வாய்ந்த யயாதி திடீரெனத் தனக்கு நேரிட்ட முதுமையால் மனமும் உடலும் குன்றிப் போனான். தன் மாமனாரிடம் சாபத்தைத் திரும்ப வாங்கச் சொல்லிக் கெஞ்சிக் கேட்க இதில் தன் மகளின் சுகமும், துக்கமும் அடங்கியுள்ளதைப் புரிந்துகொண்ட சுக்ராசாரியார், சாபம் கொடுத்தது கொடுத்ததே, அதைத் திரும்பப் பெற இயலாது. ஆனால் ஒரே ஒரு வழி நிவர்த்திக்கு எனச் சொல்லி, வேறு எவரேனும் தங்கள் இளமையை யயாதிக்கு அளித்தால் அவர்களுக்குத் தன் முதுமையைக் கொடுத்துவிட்டுப் பின்னர் யயாதி அவன் விரும்பும் காலம் வரை அந்த இளமையை அநுபவிக்கலாம் என்று கூறுகிறார். ஐந்து மகன்களைப்பெற்றிருக்கிறோமே எவரேனும் முன் வராமலா போவார்கள் என்ற மகிழ்வோடு அரண்மனைக்கு வந்த யயாதி தன் முதல்மகனும் பட்டத்து இளவரசனுமான யதுவிடம் கேட்கிறார்.


யது தேவயானி மூலம் பிறந்த பிள்ளை. யது கண்டிப்பாகத் தன் தகப்பனின் முதுமையைத் தான் வாங்க இயலாது என மறுத்துவிடுகிறான். ஒவ்வொரு பிள்ளையாகக் கேட்ட யயாதிக்கு ஷர்மிஷ்டையின் மகன் ஆன புரு ஒருத்தன் மூலமே அவன் இளமை கிடைக்கிறது. அனைவரையும் விட வயதில் குறைந்த மகனின் இந்தத் தியாகத்தைக் கண்ட யயாதி தன் ராஜ்யம் இனி புருவின் வம்சத்துக்கே செல்லும் என அறிவித்துவிட்டுப் புதல்வனின் இளமையைத் தான் வாங்கிக்கொண்டு அநுபவித்துவிட்டுப் பின்னர் அவனுக்கே பட்டம் கட்டுகிறான். தேவயானியின் மகனும் உண்மையில் பட்டத்து இளவரசனும் ஆன யதுவிற்குப் பட்டம் கட்டாததோடு அவன் வம்சத்தினரும் இனி அரியணையிலேயே ஏறக் கூடாது எனவும், ஏற முடியாது எனவும் சபிக்கிறான்.

இந்த யாதவர்கள் அனைவருமே யதுவின் வழித்தோன்றல்கள். யதுவின் குலத்தவர் அனைவருமே யாதவர்கள் எனப்பட்டனர். இப்போது எல்லாரும் நினைக்கிறாப் போல் இடையர்கள் அல்ல. யாதவர்கள் க்ஷத்திரியர்களே. அரச வம்சத்தினரும் ஆவார்கள். }

மேற்கண்ட சாபத்தின் மூலம் உக்ரசேனருக்கு முறையாகப் பட்டாபிஷேஹமோ அப்போது செய்யப் படும் ஐந்திரிய அபிஷேஹங்கள் செய்து பட்டாபிஷேஹம் செய்து வைக்கப் படவில்லை. பெயருக்கே அவர் அரசர். அவர் பெயரில் எந்த ராஜமுத்திரையோ, ராஜாங்கத்துக்கான நாணயங்களோ கிடையாது. ஆகவே மதுராவிற்கு அரசன் என்பவனே கிடையாது. அப்படி இருக்கையில் பட்டத்து இளவரசனுக்கு எங்கே போவது? ஆஹா, இப்போது புரிகிறது. அந்தக் கிருஷ்ணன் ஏன் தனக்கு மதுராவின் ஆட்சி வேண்டாம் என்று சொன்னான் என்பது! சாபம் உள்ள ஒரு நாட்டின் அரசனாக அவன் விரும்பவில்லை. அதோடு அரியணை ஏறும் பாக்கியமும் கிட்டாதே. இங்கே அரசுப்பட்டம் கிடையாதே, சிங்காதனத்தில் ஏற முடியாதே! அதான் சாமரத்தியமாகத் தவிர்த்திருக்கிறான் அந்த இடையன். ஆனால் காலம் காலமாய், தொடர்ந்து கொண்டே வந்திருக்கும் சாபத்தின் தாக்கத்தையும் மீறி நான் அரசனாக முடியுமா? என்ன செய்யலாம்?


. ம்ம்ம்ம் ஆனால் இதை எல்லாம் மீறிக்கொண்டல்லவோ மாமன் கம்சன் தன்னை ஒரு அரசனாக்கிக்கொள்ளத் தீவிர முயற்சிகள் செய்தான். ஆனால் ஜராசந்தனின் வலுவான துணையும், உதவியும் கிடைத்தும் அவனுக்கு மரணமே பரிசாகக் கிடைத்தது. நம் அம்மாவான கம்சாவும் நம்மை எப்படியாவது அரசனாக்கிவிடவேண்டும் என்றே பார்க்கிறாள். சாப விமோசனம் கிடைக்குமா?

ஹும், ஹூம், நண்பர்களாம், நண்பர்கள். சுயநலக்காரர்கள். எல்லாருக்கும் பதவி ஆசை பிடித்து ஆட்டுகிறது. என் மூலமாய் மதுராவை ஆள நினைக்கின்றனர். அதிலும் இந்த சாத்யகி இருக்கிறானே, எப்போவுமே தான் ஏதோ அதி வீரன் போலவும், வீரதீர சாகசங்களைச் செய்துகொண்டே இருக்கவேண்டும் என்றும் நினைப்பு. சரி, அவன் அப்படி என்றால் என் சொந்த மனைவி விஷாகா! அவளுக்கென்ன வந்தது! அவளும் அன்றோ என்னை இந்த விஷப் பரிக்ஷைக்குத் தூண்டுகிறாள். வீர சாகசங்கள் செய்து இறந்தாலும் பரவாயில்லை என்கிறாளே. அவளுக்குத் தேவை கதாநாயகன் போல் வீரம் நிறைந்த ஒருவனைக் கணவனாய்ப் பெற்றேன், அவன் இந்த யுத்தத்தின் மூலம் இறந்துவிட்டான் என்று சொல்வதில் பெருமை அடைவேன் என்பதே. அவள் கணவன் உயிரோடு இருப்பதில் அவளுக்கு எந்தப் பெருமையும் இருப்பதாய்த் தெரியவில்லை. இவர்கள் அனைவருக்குமே குறுகிய பார்வையே உள்ளது. ஜராசந்தனின் பலம் அறியவில்லை.

1 comment:

priya.r said...

53 வது அத்தியாயத்தையும் படித்து முடித்து விட்டேன்

யயாதி ,யது ,யாதவ வம்ச சாபம் இதை பற்றி எல்லாம் தெரிந்து கொண்டேன்

பதிவுக்கு நன்றி கீதாம்மா