இந்த இளைஞனையும், அவன் மலர்ந்த புன்னகை ததும்பும் முகத்தையும், சிரிக்கும் கண்களையும், தலையில் சூடி இருக்கும் மயில் பீலியையும் எல்லாவற்றிற்கும் மேல் அவன் நிறம்..... இப்படி ஒரு கருநீல நிறத்தை இதற்கு முன்னரும் பார்த்ததில்லை;  இனிமேலும் பார்க்கப் போவதில்லை.  இவற்றை எல்லாம் மறக்க முடியுமா?  அந்த இருவரும் உடனே கிருஷ்ணனை அடையாளம் கண்டுகொண்டார்கள்.  இவன் தான் அந்தக் கூட்டத்தை, மாபெரும் கூட்டத்தை வழிநடத்திச் சென்றான்.  இவனை அருகில் கண்டாலேயே அந்த மக்கள் உற்சாகப் பெருக்கெடுத்து ஜெயஶ்ரீ கிருஷ்ணா, என்று கோஷித்தனர்.  அவ்வளவு ஏன்?  வெகு நாட்களாக உணவு கிடைக்காமல் பட்டினியாக இருந்த அவர்களுக்கு வேண்டிய உணவு, தானியங்களையும் வழங்கினார்களே!  இவனைக் காட்டிக் கொடுப்பதா?  நன்றி ஒருபக்கமும், காலயவனனின் கொடுமையை நினைத்து அச்சம் இன்னொரு பக்கமும் வாட்டி வதைத்தது இருவருக்கும்.  கிருஷ்ணன் அந்த இருவரின் நிலைமையைப் பார்த்தான்.  அவர்களுடைய தர்மசங்கடத்தைப் புரிந்து கொண்டான்.
""ஏன் அவர்களைக் கேட்கிறீர்கள்? என்னைப் பற்றிக் கேட்க வேண்டுமானால் என்னிடமே கேட்கலாமா?" காலயவனனைப் பார்த்துக் கூறிய  கிருஷ்ணன், மேலும், " ஒரு மாதம் முன்னால் தான் நான் இந்தப் பாதையைக் கடந்து சென்றேன்." என்று நேருக்கு நேரே காலயவனனை விழிகளோடு மோதவிட்டவண்ணம் கூறினான். "ஆஹா, அதுவும் அப்படியா?  யார் இருந்தார்கள் உன்னோடு?" கேட்டவண்ணமே காலயவனன் தன் உடைவாளை உருவினான்.  "மதுராவின் யாதவர்கள்."  சற்றும் தயக்கமின்றி பதில் வந்தது கிருஷ்ணனிடமிருந்து. "என்றால் நீ என்னிடம் பொய் சொல்லி இருக்கிறாய்!" காலயவனன் முகம் பயங்கரமாக மாறியது.
"இல்லை; நான் பொய்யெல்லாம் சொல்லவில்லை.  மதுரா உனக்காகக் காத்திருக்கிறது.  காலியாகத் தன்னந்தனியாகக் காத்திருக்கிறது.  காப்பாற்ற எவருமில்லாமல் உன்னால் ஆக்கிரமிக்கப்படவெனக் காத்திருக்கிறது."  என்றான் கண்ணன்.
"அப்படி என்றால் யாதவர்கள் நகரை விட்டு நாட்டை விட்டு ஓடிவிட்டார்கள்? இல்லையா?  வஞ்சகா, சூழ்ச்சிக்காரா!" காலயவனன் தன் வாளை உருவிக்கொண்டு  தன் குதிரையைக் கிருஷ்ணன் இருக்கும் பக்கம் செலுத்திய வண்ணம் அவன் மேல் பாயத் தயாரானான்.  கிருஷ்ணன் இந்த நிமிடத்திற்காகவே காத்திருந்தான்.  எப்படியாவது இம்மாதிரியான ஒரு தருணம் வரும் எனவே காத்திருந்தான்.  தன்னிரு கால்களால் குதிரையின் விலாவில் ஓர் அழுத்து அழுத்தினான்.  அவனுடைய சமிக்ஞையைப் புரிந்து கொண்டாற்போல் அந்தக் குதிரை தன் முன்னிரு கால்களை உயரத் தூக்கிப் பெரிதாகக்கனைத்தது. பின்னர் ஒரு அரை வட்டம் அடித்துச் சுற்றிச் சூழ்ந்திருந்த காவலர்களை லக்ஷியம் செய்யாமல் அந்த வட்டத்தை உடைத்துக்கொண்டு தெற்கு நோக்கிப் பாய்ந்தது. கண்ணன் இவ்வளவு நாட்களாக இந்தக் குதிரையைப் பழக்கி வந்ததற்கு அது அவனை ஏமாற்றவில்லை.
காலயவனனும், அவன் ஆட்களும் திகைத்து நின்றனர்.  காலயவனன் உடனடியாக சுதாரித்துக்கொண்டான்.  தன் பற்களைக் கடித்தான்.  ஆத்திரம் அலை மோதியது அவனுக்கு.  உடனடியாகத் தான் கிருஷ்ணனைத் தொடரவேண்டும் என்ற எண்ணம் தலை தூக்கத் தன் குதிரையைக் கிருஷ்ணன் சென்ற திசை நோக்கிச் செலுத்தினான்.  ஒரு சில காவலாட்களும், வீரர்களும் அவனைப் பின் தொடர்ந்தார்கள்.  கிருஷ்ணனின் மெல்லிய உடலும் ஆயுதங்கள் இல்லாமையும் அவனுக்குப்பல விதத்திலும் உதவி செய்தது.  குதிரையால் அவனுடைய பாரத்தைச் சுமக்க கஷ்டப்பட வேண்டி இருக்கவில்லை.  அதே அவனுடைய எதிரிகளின் வலுவான புஷ்டியான கட்டுமஸ்தான உடலின் எடையும், பல்வேறுவிதமான ஆயுதங்களின் எடையும் அந்தக் குதிரைகளால் சுமக்க முடியாமல் காணப்பட்டது.
கண்ணனின் குதிரையோ வில்லில் இருந்து கிளம்பிய அம்பைப்போல் நேரே வேகமாய்ச் சென்றது.  விரைவில் தன்னைப் பின் தொடர்பவர்களின் பாரவையில் இருந்து விலகிச் சென்றுவிட்டது.  மாலையில் ஒரு ஊற்றின் அருகே கண்ணன் குதிரையை நிறுத்திக் அதற்கு நீர் காட்டினான். பின்னர் குதிரை அவிழ்த்து மேய விட்டு விட்டுத் தானும் ஒரு மரத்தடியில் படுத்துக் கொஞ்சம் ஓய்வு எடுத்தான்.  சிறிது நேரம் கழித்துக் குதிரையை மீண்டும் சேணம் பூட்டி மெல்ல நடத்திச் சென்றான்.  இருள் கவ்வ ஆரம்பித்துவிட்டது.  கிருஷ்ணன் காதுகளில் சற்றுத் தூரத்தில் குதிரை கனைக்கும் சப்தம் கேட்டது.  உற்றுக் கேட்டான். சந்தேகமே இல்லை.  இன்னொரு குதிரை முன்னே செல்கிறது அல்லது இந்தப் பக்கமாய் வருகிறது.  ம்ம்ம்ம்?  பின் தொடர்ந்தவர்களில் எவரோ நம்மைக் கண்டு விட்டார்கள். ம்ம்ம்ம் இல்லை; இல்லை பின் தொடர்கிறது.  கண்ணன் தன் குதிரையின் மேல் ஏறி அமர்ந்தான். எச்சரிக்கையுடன் மெல்ல மெல்ல நகர்ந்தான். ஆனால் அதே எச்சரிக்கையுடனேயே பின் தொடர்ந்த குதிரையும் வந்து கொண்டிருந்தது.
மெல்ல இரவு கடந்தது;  பின் தொடர்ந்த குதிரையும் விடவில்லை.  கண்ணனும் பயணத்தைத் தொடர்ந்தான்.  ஆனால் என்ன இது?  கண்ணனின் குதிரை திடீரெனக்கால்கள் மடிந்து கீழே வீழ்ந்துவிட்டதே!  கண்ணனுக்கு நிலைமையின் தீவிரம் புரிந்தது.  எந்த நிமிடமும் பின் தொடருபவன் தன்னை வந்து அடைந்துவிடுவான். என்ன செய்யலாம்? சுற்றும்முற்றும் பார்த்தான்.  புலர்ந்தும் புலராத அந்தக் காலைப் பொழுதிலே அரை இருட்டிலே ஒரு சிறு பாதை தெரிந்தது.  அதிலே ஒரு மனிதனோ அல்லது ஆடோ, மாடோ ஓடிக் காட்டுக்குள் ஒளியலாம். தன் குதிரையைப் பச்சாத்தாபத்துடன் திரும்பிப் பார்த்த கண்ணன் வேறு வழியில்லாமல் அந்தப் பாதையோடு செல்லத் தீர்மானித்தான்.
 
1 comment:
கால யவனனின் கண்ணில் மண்ணை தூவி விட்டு கண்ணன் தப்பி செல்லும் விதம் நன்றாக இருக்கிறது ..
Post a Comment