Tuesday, December 20, 2011

கண்ணன் வருவான் 3-ம் பாகம்! ஞாபகம் வருதா! ஞாபகம் வருதா!

இன்றைக்குச் சுமார் ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கும் முன்னர் இந்தியாவின் முக்கிய மன்னர்களாக ஆரியர்கள் திகழ்ந்தார்கள். நாகர்களுக்குள் பெண் கொடுத்துப் பெண் எடுத்துத் திருமண பந்தம் ஏற்படுத்திக்கொண்டு மாபெரும் சாம்ராஜ்யங்களை ஸ்தாபிதம் செய்திருந்தனர். அவர்களில் யாதவர்கள் முக்கியமானவர்கள். ஒரு சாபத்தால் அரியணை ஏறமுடியாத அரசகுலத்தவரான அவர்கள் தலைவராக உக்ரசேனர் , பெயரளவில் அரசராக அழைக்கப்பட்டும், அறியப்பட்டும் வந்தார். இவர்களை அடுத்து ஹஸ்தினாபுரத்தின் அரசர்களாக சக்கரவர்த்தி பரதனின் வம்சாவழியினர் ஆண்டு வந்தார்கள். இவர்களுக்கு நிகர் யாருமில்லை என்று சொல்லும்படியாக முழு பலத்தோடு இவர்கள் ஆட்சி புரிந்து வந்ததோடு யாதவகுலத்தோடு பெண் கொடுத்து சம்பந்தமும் வைத்திருந்தனர். இவர்களையே குருவம்சத்தினர் எனவும் அழைத்தனர். இவர்களில் சக்கரவரத்தி ஷாந்தனுவுக்குப் பின்னர் அவரின் மகனான காங்கேயன் சிம்மாசனம் ஏற மாட்டேன் என கடும் சபதம் செய்திருந்த காரணத்தால் மற்றொரு மனைவியின் மூலம் பிறந்த விசித்திரவீரியன் அரியணை ஏறி வம்சம் விருத்தியடையாமல் இறந்தான்.

விசித்திரவீரியனின் தாயாரான சத்தியவதி காங்கேயனோடு கலந்து ஆலோசித்தபின்னர் தன் இரு விதவை மருமகள்களுக்கும் தன் இன்னொரு மகனான வியாசர் மூலம் புத்ரதானம் அளிக்கச் செய்தாள். அதன்படி பிறந்தவர்களில் மூத்தவரான திருதராஷ்டிரன் பிறக்கையிலேயே கண் தெரியாமல் பிறவிக்குருடராகவும், அடுத்துப் பிறந்த பாண்டு, பிறக்கையிலேயே தீராத நோயோடும், வெளுத்த சரீரத்தோடும் பிறந்தார்கள். விசித்திரவீரியனின் தாசியான பெண் மிகுந்த மனோ வலிமையோடு வியாசரை எதிர்கொள்ளவே அவள் வயிற்றில் தர்மத்தின் அதிதேவதையின் அம்சமாக ஒரு பிள்ளை பிறந்து விதுரர் எனப் பெயரிடப்பட்டு அரசகுமாரர்களோடு சரிசமமாக வளர்ந்து எல்லாப் பயிற்சிகளையும் பெற்று தர்மத்தில் சிறந்து விளங்கினார். முதல் இரு அரசகுமாரர்களில் திருதராஷ்டிரனுக்கு காந்தாரி என்னும் காந்தார தேசத்து அரசகுமாரி காந்தாரியை மணந்து துரியோதனன், துஷ்சாசனன் முதலான நூறு ஆண்மக்களையும் ஒரு பெண் குழந்தையையும் பெற்றான். பாண்டுவுக்குக் குந்திபோஜனால் வளர்க்கப்பட்ட ப்ரீதா என்னும் பெயர் கொண்ட, குந்தி என அழைக்கப்பட்ட பெண் மனைவியாகவும் ஆனார்கள். இதன் பின்னரும் மாத்ரி என்னும் ராஜகுமாரியையும் பாண்டு மணந்தான். பாண்டுவிற்கு இல்லற சுகம் அனுபவிக்கையில் அவன் இறந்து போவான் என்ற சாபம் இருந்து வந்தமையால் இரு மனைவியர் இருந்தும் அவனுக்குக் குழந்தை இல்லை.

திருதராஷ்டிரனுக்குக் கண்கள் இல்லாமையால் அவனால் அரியணை ஏறி அரசாட்சி செய்யமுடியாது என்று பாண்டுவுக்குப் பட்டம் சூட்டினார்கள். பாண்டுவும் மக்கள் மனம் நிறைய நல்லாட்சியே புரிந்து வந்தான். காங்கேயன் என்ற பீஷ்ம பிதாமஹர் துணை புரிய, விதுரர் நல்லமைச்சராக நிர்வாகத்தில் ஆலோசனைகள் கூற குற்றம் குறைகளின்றி ஆட்சி புரிந்தாலும் பாண்டுவுக்கு வாழ்க்கை ரசிக்காமல் காட்டிற்குச் சென்றான். அங்கு சென்றும் தன்னுடைய நிலையை நினைத்தும் தன் மனைவியருக்குக்குழந்தை இல்லாமை குறித்து வருந்திய பாண்டுவுக்குக்குந்தி தன் இளம் வயதில் துர்வாசமுனிவர் மூலம் தனக்குக் கிட்டிய வரத்தையும் அதன் மூலம் குழந்தைகள் பிறக்கும் என எடுத்துச் சொன்னதன் பேரில் குந்திக்கு முதலில் தர்மராஜாவின் மூலம் யுதிஷ்டிரன் என்னும் மகனும், வாயுவின் மூலம் பீமன் என்னும் மகனும், இந்திரனின் மூலம் அர்ஜுனன் என்னும் மகனும் பிறந்தனர். அதன் பின்னர் குந்தி மாத்ரிக்கும் இந்த வரத்தின் பலனைக்கொடுக்கும் மந்திர உபதேசம் செய்து அவளுக்கும் இரட்டையர்களான நகுலனும், சகாதேவனும் பிறந்தனர். ஒருநாள் துரதிர்ஷ்டவசமாக பாண்டு மனைவி மாத்ரியைப் பார்த்து மோகவசப்பட அவளும் அவனுக்கு இணங்க மனைவியோடு இல்லற சுகம் அனுபவிக்க விரும்பிய பாண்டு இறந்தான். தன்னாலேயே இது நடந்தது என்ற காரணத்தால் தன்னிரு குழந்தைகளையும் குந்தியை நம்பி அவளிடம் ஒப்படைத்த மாத்ரி கணவனோடு உடன்கட்டை ஏறினாள்.

காட்டில் இருந்த ரிஷிகள், முனிவர்கள் அனைவரின் உதவியோடும் ஹஸ்தினாபுரத்திற்குப் பாண்டுவின் புத்திரர்களை அழைத்துக்கொண்டு வந்து சேர்ந்தாள் குந்தி. பிதாமகர் பீஷ்மர் அவளையும், குழந்தைகளையும் அன்போடும், பாசத்தோடும் வரவேற்று அரண்மனையில் வசிக்கச் செய்தார். வேத வியாசரின் ஆலோசனைகளின்படி அந்தக் குழந்தைகளுக்குச் சிறந்ததொரு ஆசிரியர்கள் மூலம் கல்வி, கேள்விகளில் சிறந்தவர்களாக்கினார். இவர்களோடு திருதராஷ்டிரனின் புத்திரர்களும் கல்வி கற்றனர். பாண்டுவின் புத்திரர்கள் பாண்டவர்கள் என அழைக்கப்பட்டனர். திருதராஷ்டிரனுடைய புத்திரர்களோ குலப் பெயராலேயே கெளரவர்கள் என அழைக்கப்பட்டனர். பாண்டவகுமாரர்கள் தங்கள் நடத்தைகளாலும், வித்தியா அப்பியாசங்களைக் கற்றதன் மூலமும் அனைத்திலும் சிறந்து விளங்கியதோடு அனைவராலும் விரும்பப் பட்டனர். ஆனால் கெளரவர்களோ வித்தைகளை நன்கு கற்றாலும் மற்றவற்றில் சிறந்து விளங்காமல் பாண்டவர்களிடம் அசூயையும், கோபமும், பொறாமையும் கொண்டு விளங்கினார்கள்.

அந்தக் காலகட்டத்தில் ஆசாரியர்களிலேயே சிறந்து விளங்கியவர் துரோணர் எனப்படுபவர். இவர் பாரத்வாஜ ரிஷியின் குமாரர். இவர் குருகுல அப்பியாசம் மேற்கொண்ட சமயம் பாஞ்சால தேசத்து ராஜகுமாரன் யக்ஞசேன துருபதனும் அவருடன் சக மாணவனாக இருந்தான். துரோணரும், யக்ஞசேனரும் ஒருவருக்கொருவர் இணை பிரியா நண்பர்களாக இருந்து வந்தனர். எதிர்காலத்தில் யாருக்கு என்ன கிடைத்தாலும் அதை இருவரும் பங்கிட்டுக்கொள்ளவேண்டும் என்றூ இளமையின் வேகத்தில் சபதம் எடுத்துக்கொண்டனர். குருகுலவாசம் முடிந்தபின்னர் யக்ஞசேனன் தன்னுடைய பாஞ்சால நாட்டிற்குத் திரும்பினான். குருவம்ச அரசர்களுக்கு அடுத்தபடியாக செல்வாக்கும், வலிமையும், நில ஆளுமையும் இருந்த நாடாகப் பாஞ்சாலம் திகழ்ந்து வந்தது. காம்பில்ய நகரத்தைத் தலைநகராகக் கொண்டு அவர்கள் ஆண்டு வந்தனர். அப்போது………பி.கு. தொடர்ந்து சொல்லப்படும் கதை பாண்டவர்களைச் சுற்றியே செல்லும். ஆகவே இந்தப் பின்னணி புரிந்திருக்க வேண்டும்.

4 comments:

priya.r said...

சிறந்ததொரு முன்னுரையை கொடுத்ததற்கு நன்றி கீதாம்மா

மூன்றாம் பாகத்திற்கு நல்வரவு மற்றும் வாழ்த்துக்கள் !

priya.r said...

நன்று., தொடர்ந்து எழுதுங்கள் கீதாமா..

sambasivam6geetha said...

நன்றி ப்ரியா.

priya.r said...

கொஞ்சம் குழப்பமாக இருக்கே :(

நான் தொடார்ந்து படித்து கொண்டு தானே வருகிறேன்..

சென்ற மூன்று அத்தியாயங்கள் எப்படி விடுபட்டன?

ஒருவேளை நீங்க இடைசெறுகலாக சேர்த்து கொண்டீர்களோ ?!