Wednesday, December 14, 2011

கண்கள் உறங்கலெனும் காரியமுண்டோ!

ருக்மிணியின் மனம் மீண்டும் காட்சிகளைக் கண்டு கொண்டிருந்தது...............


"கிருஷ்ணனின் அம்புகளால் ருக்மி துளைக்கப்பட்டு ரத்தம் வழிந்து கொண்டிருந்தது. உத்தவன் தன் குதிரையிலிருந்து கீழே இறங்கி ருக்மியின் பெருகும் ரத்தத்தைத் துடைத்து நிறுத்த முயன்று கொண்டிருந்தான். ருக்மிணியின் நெஞ்சம் பதறியது. மஹாதேவா! மஹாதேவா! என் அண்ணனைக்கண்களைத்திறக்கச் செய்வாயாக! நான் மஹாருத்ர ஜபம் செய்து முடிக்கிறேன். தேவாதி தேவா! நீ தான் கருணை செய்ய வேண்டும். ருக்மிணியின் வேண்டுகோளுக்குச் செவி சாய்த்தார் போலும் மஹாதேவன். ருக்மி மெல்லக்கண்களைத் திறந்து பார்த்தான். அதைக்கண்ட கிருஷ்ணன் ரதத்தில் இருந்து கீழே இறங்கினான். ருக்மிக்கு அவ்வளவு பலமான அடி பட்டிருந்தாலும் அவன் சமாளித்துக்கொண்டு எழுந்து அமர முயன்றான். கண்ணனைக்கண்டதும் அவனுக்கு ஆத்திரம் பொங்கிக் கொண்டு வந்தது. உறுமிய வண்ணம் எழ முயன்றான். கண்ணனுக்கு ஏதேதோ சாபங்கள் வேறு கொடுத்தான். பலராமனுக்கு இதைக் கண்டதும் சிரிப்பு அதிகமானது. சத்தம் போட்டுச் சிரித்தான்.

இவை எதையும் லக்ஷியம் செய்யாமல் கிருஷ்ணன் கீழே குனிந்து உத்தவன், சாத்யகி ஆகியோரின் உதவியோடு ருக்மியைத் தூக்கி எடுத்துத் தன் ரதத்தில் ருக்மிணியின் அருகே கிடத்தினான். ருக்மிணி அண்ணனைக் கவனித்தாள். இரக்கமும், அன்பும், கருணையும் பொங்க அண்ணனைத் தொட முயன்றாள். உத்தவன் கட்டுகள் போட்டுக்கட்டியிருந்தும் ருக்மியின் காயங்களிலிருந்து ரத்தம் கொட்டிக்கொண்டிருந்தது. ஆனாலும் ருக்மியோ தன் தங்கையைக் கடுமையாகவும் கொடூரம் கொப்பளிக்கும்படியும் பார்த்துவிட்டு அவள் முகத்தில் எச்சிலைத் துப்பினான். அதைத் தடுத்த கண்ணன் ருக்மியைப் பார்த்து, “ருக்மி, எல்லாவற்றையும் மறந்துவிடு. உன் தங்கையை மன்னித்துவிடு. அவளாலேயே நீ இன்று உயிருடன் இருக்கிறாய். இல்லை எனில் உன் பிணம் தான் இங்கே கிடந்திருக்கும்.” என்றான். ருக்மியோ கோபமும்,ஆங்காரமும் பொங்க கிருஷ்ணனைப் பார்த்து, “மோசக்கார இடையனே! கேடுகெட்டவனே!” எனக் கத்தினான். ருக்மிணியின் மனம் கோபத்தில் கொதித்தது. என் கோவிந்தனைப் பார்த்தா இப்படிச் சொல்கிறான். எனக்காகவன்றோ கோவிந்தன் இவனைக் கொல்லாமல் உயிர் பிழைக்க வைத்தான்.

“உன் கோபத்தைக் கட்டுப்படுத்திக்கொள் ருக்மி! நான் உன்னைக்குண்டினாபுரத்திற்குத் திருப்பி அனுப்பப் போகிறேன்.” சிரித்த வண்ணம் மென்மையான குரலில்கூறினான் கண்ணன். தொடர்ந்து, அவன் பேசுவதற்குள்ளாக ருக்மி குறுக்கிட்டான். தான் குண்டினாபுரம் திரும்ப முடியாது என்றும் கிருஷ்ணனின் தலையைக் கொய்து எடுத்துவராமல் திரும்பப் போவதில்லை என சபதம் செய்திருப்பதாகவும் கூறினான். தான் அங்கே போகப்போவதில்லை எனவும் தன் கைகளால் கிருஷ்ணனின் கழுத்தை நெரித்துக்கொன்று தலையை எடுத்துப்போகவேண்டும் எனக் கூறினான். “ஓ, அப்படியா? உன் தங்கையை விதவையாக்கிப் பார்ப்பது நல்லதென உனக்குப் படுகிறதா?” கண்ணன் கேட்டான். மேலும் தொடர்ந்து, “சரி, நீ குண்டினாபுரம் செல்லவில்லை எனில் நான் உன்னை வற்புறுத்தவில்லை ருக்மி. உன்னை என்னுடன் துவாரகைக்கு அழைத்துச் செல்கிறேன். என் வருங்கால மனைவியின் சகோதரனான உனக்கு கெளரவமான வரவேற்புக் கிடைக்கும். யாதவர்களோடு ஒத்துக்கலந்து வாழலாம்.” என்றான்.

பலராமன் அப்போது அங்கே வந்து என்ன நடக்கிறது இங்கே என்று கேட்டான். அவனுக்கு விஷயம் புரிந்ததும் ருக்மியின் மேல் பரிதாபம் பொங்கியது. எப்போதுமே அவனுக்கு ருக்மியின் மேல் பச்சாத்தாபம் உண்டு. தன்னுடைய பெரிய குரலில் கண்ணனைப் பார்த்து, “கண்ணா, ருக்மியின் இடத்தில் எவர் இருந்தாலும் இப்படித்தான் நடந்துகொள்வார்கள., குடும்ப கெளரவத்தை மீட்டெடுக்க ருக்மி இப்படித்தான் நடந்துகொள்வான்; வேறு மாதிரி அவனிடம் எதிர்பார்க்க முடியாது. அவனுடைய அருமைத் தங்கையைக்கடத்தி வந்திருக்கிறாய். அவனால் உன்னைத் தன் தங்கையின் கணவனாக ஏற்க முடியவில்லை. அது அவனுடைய முட்டாள்தனமாக இருக்கலாம். ஆனால் அவன் செய்வது தப்பெல்லாம் இல்லை. அவனைக் குண்டினாபுரத்திற்கு நான் அழைத்துச் செல்கிறேன்.” என்றான். ஆனால் ருக்மியோ கண்ணனின் தலையைத் தன் வாள்களால் அறுத்து எடுத்துக்கொண்டே தான் குண்டினாபுரம் திரும்பப் போவதாய் மீண்டும் மீண்டும் திடமாய்க் கூறினான். பலராமன் அவனைப் பார்த்து,” நீ இங்கேயே இருந்து உன் ஆட்களுடன் என்ன வேண்டுமானாலும் செய்து கொள். துவாரகைக்கு வந்தாயானால் உனக்கு மரியாதை கிட்டாது!” எனக்கோபமாய்ச் சொல்லிவிட்டு அங்கிருந்து அகன்றான்.

பின்னர் அனைவரும் சந்தோஷமாக சூரிய தீர்த்தத்திற்கு வந்து சேர்ந்தோம். காத்திருந்த கப்பல்களில் ஏறிக்கொண்டோம். பிரபாச க்ஷேத்திரத்தை வந்து அடைந்தோம். அங்கே தான் மஹாதேவரும், தேவாதிதேவரும் ஆன ஈசன் சோமநாதராகக் குடி இருக்கிறார். அங்கே நாங்கள் அனைவரும் வந்து சேர்ந்ததும் யாதவர்கள் அனைவரும் எங்களை மிகவும் மகிழ்வோடு வரவேற்றனர். கீதங்கள் இசைக்கப்பட்டன. மலர்கள் தூவப்பட்டன. முரசுகளும், சங்கங்களும், எக்காளங்களும் ஊதப்பட்டன. மணிகள் அடிக்கப்பட்டன. அனைவரும் ஆடிப்பாடி வண்ணப் பொடிகளைத் தூவிய வண்ணம் ஒருவருக்கொருவர் விளையாடி மகிழ்ந்தனர். அம்மா தேவகி என்னைக் கண்டதும் எவ்வளவு மகிழ்ந்தார். திரும்பத் திரும்ப என்னை அருகே அழைத்து அணைத்து மகிழ்ந்தார். கண்களில் கண்ணீரோடு என்னை உச்சிமுகர்ந்து ஆசிகள் கூறிய வண்ணம் இருந்தார். ஆஹா, அந்த ரேவதி அக்கா! பெரிய அண்ணா பலராமனின் மனைவி! அவருக்கேற்றவண்ணம் அவளும் ஆகிருதியோடு காணப்படுகிறாளே! என்னை எவ்வளவு அன்பாய்த் தன் சொந்த சகோதரியைப் போல் கனிவுடன் விசாரித்தாள்.

திரிவக்கரையும் அங்கே தன் சந்தோஷத்தைக் காட்டிய வண்ணம் தன்னால் தயாரிக்கப்பட்ட வாசனாதி திரவியங்களை எனக்குப் பரிசளித்தாள். பின்னர் நான் தந்தையார் வசுதேவர், பாட்டனார் உக்ரசேனர், அக்ரூரர், சித்தப்பா தேவபாகர் போன்றோரை வணங்கினேன். இன்னமும் யாரெல்லாமோ இருந்தனர் அங்கே. அவள் வயதுப்பெண்களும், வயதில் மூத்த பெண்களும், இளைய பெண்களும் காணப்பட்டனர். அனைவரும் என் அழகைப் பார்த்து வியந்தனர். அவர்களால் இயன்ற பரிசுகளை எனக்கு அளித்து மகிழ்ந்தனர். கடலுக்கு என்னை அழைத்துப் போய் அங்கே ஸ்நாநம் செய்ய வைத்தனர். ஒரே ஒரு கஷ்டம் என்னவெனில் கண்ணனோடு திருமணம் இன்னும் நடத்தவில்லை; எப்போது எனத் தெரியவில்லை. கண்ணனைத் திருமணம் செய்து கொள்ளப் போகும் மணப்பெண்ணாக அந்த அரண்மனையில் வசித்து வந்தேன். கண்ணனைப் பார்த்தால் பேச முடியாது. திருட்டுத்தனமாகப் பார்த்து மகிழ வேண்டியது தான். அதிலும் பெரியவர்கள் இருக்கையில் கண்ணனோடு சகஜமாய்ப் பேசுவது மரியாதைக் குறைவும் கூட. அப்புறம் என்ன நினைத்துக்கொள்வார்கள் என்னை! குண்டினாபுரத்து ராஜகுமாரிக்குப் புகுந்த வீட்டில் மரியாதை கொடுத்து நடந்து கொள்ளத் தெரியவில்லை என்றல்லவோ நினைப்பார்கள்!

3 comments:

priya.r said...

பதிவுக்கு நன்றி கீதாமா

எப்படியோ ருக்மணி வர வேண்டிய இடத்துக்கு வந்து சேர்ந்தாள் என்ற திருப்தி
படிக்கும் போது தெரிகிறது !

priya.r said...

தொடர்ந்து எழுதுங்கள் ..

sambasivam6geetha said...

நன்றி ப்ரியா.