Friday, December 16, 2011

நிதம் மேகம் அளந்தே பெற்றதுன் முகமன்றிப் பிறிதொன்றில்லை

ஆனால் அதற்காக என் கோவிந்தனும் சும்மா இருக்கவில்லையே! திரிவக்கரை மூலமோ உத்தவன் மூலமோ செய்திகளைச் சொல்லி அனுப்புவான்; அவ்வப்போது சிறு பரிசுகளைக் கொடுத்து அனுப்புவான். பின்னர்….பின்னர் திருமண நிகழ்ச்சிகள் ஆரம்பமாயின. துவாரகை முழுதும் களியாட்டங்கள், கொண்டாட்டங்கள். அனைவரும் சந்தோஷத்தின் உச்சிக்கே போனார்கள். அனைத்துவீடுகளும் அலங்கரிக்கப்பட்டுக் குழந்தைகளுக்கும் பட்டாடைகள் உடுத்தப்பட்டு பாடலும், ஆடலுமாய்க் காட்சி அளித்தது. கப்பல்களின் மாலுமிகள்; அவர்களின் தலைவனாம் ஒருவன்; அவன் பெயரை என்னால் நினைவு கூர முடியவில்லை; அனைவரும் தங்களுக்கெல்லாம் கடவுளைப் போன்ற கண்ணன் மணக்கப் போகும் பெண்ணைப் பார்க்கவேண்டும் என்று கூறினார்கள். என்னை வந்து பார்த்தார்கள். பின்னர் ஷக்ரதேவன் வந்தான். விந்தன், அனுவிந்தன் மற்ற அரசகுமாரர்கள் அனைவருக்கும் அழைப்பு அனுப்பப்பட்டு அனைவரும் வந்தனர். ஷக்ரதேவனுடன் ஷாயிபாவும் வந்தாள். அவளால் அன்றோ இன்று எனக்கு இந்த வாழ்க்கை கிடைத்திருக்கிறது! ருக்மிணியின் நெஞ்சம் நன்றியால் நிரம்பி இருந்தது.


குலகுருவான கர்காசாரியார் முன்னிலையில் முறைப்படி அக்னி வளர்த்து ஹோமங்கள் செய்து கண்ணன் ருக்மிணியின் கரங்களைப் பிடித்தான். ஆஹா! கண்ணன் என் கைகளைப் பிடித்த அந்த முதல் தொடுகை! எனக்குள்ளாக ஏதோ புது ரத்தம் பாய்ந்தாற்போல! என் நாடி, நரம்புகளை எல்லாம் இனியதொரு வீணை போலவும், கண்ணனின் கரங்கள் அவற்றை மீட்டியது போலவும் அன்றோ தோன்றியது. எந்த நேரம் என் நாடி,நரம்புகளிலிருந்து சுநாதம் கிளம்பி என்னைக் காட்டிக்கொடுத்துவிடுமோ என அஞ்சினேனே! இப்போது நினைத்தாலும் மெய் சிலிர்க்க வைத்த அந்த அனுபவத்தை மறக்க இயலாது. பின்னர் அக்னியை வலம் வந்து இருவரும் ஏழடிகள் ஏழு புனிதமான அடிகள் சேர்ந்து எடுத்து வைத்தோம். அந்த அடிகளே கண்ணனை என்னோடு ஒன்று சேர்த்தது. என்னில் அவனும், அவனில் நானும் ஒன்று கலந்தோம்; பிரிக்க முடியாதவர்கள் ஆனோம். அங்கே இருந்த அனைத்துப் பெரிய மனிதர்கள்; உறவினர்கள்; நண்பர்கள் முன்னிலையிலும், அனைத்துக்கடவுள்களையும் அக்னியையும் சாட்சியாகக் கொண்டு நான் கண்ணனின் மனைவியாகிவிட்டேன். இனி எங்களை மரணம் கூடப் பிரிக்க முடியாது; ஆம். மரணத்திலும் கண்ணனோடு சேர்ந்தே செல்வேன்.


ஆஹா! கண்ணனின் மனைவியானது போன்றதொரு அற்புதமான ஒன்று வேறெதுவும் இல்லை. கண்ணன் எத்தனை கம்பீரமாகத் தன் தலையில் சூடிய மயில்பீலி அசைந்து ஆட, சிரிக்கும் கண்களோடும், இளநகை மாறாமல் அனைவரையும் பார்த்துச் சிரித்துக்கொண்டும் கனிவோடு பேசிக்கொண்டும், அதே சமயம் அவளையும் மறவாமல் கனிவுப் புன்னகையை வீசிக்கொண்டும் காணப்படுகிறான். இது அவனால் அன்றி வேறு எவரால் இயலும்! பின்னர் வந்த இரவு! அவளால் மறக்க இயலாத ஒன்று. அவள் கோவிந்தன் அவளுக்குத் தன்னை ஒப்புக்கொடுத்ததை நூற்றுக்கு நூறு நிரூபித்தான். அவளைப் புதியதோர் மனுஷியாக்கிக் காட்டினான். பின்னர் மறுநாள் எப்போதும்போல் கோவிந்தன் தன்னுடைய பயிற்சிகளை மேற்கொள்ள அனைவரோடும் சேர்ந்து கொள்ள வேண்டிச் சென்றுவிட்டான். இங்கே நான் என் படுக்கையில் தன்னந்தனியாகப் படுத்திருக்கிறேன். என் மனதில் பொங்கும் சந்தோஷத்தை எனக்குள் நானே வெளிப்படுத்திக்கொண்டு கனவுகளில் மிதந்த வண்ணம் இருக்கிறேன். அந்த தேவகி அம்மா! அவளைக்கோயிலில் வைத்துக் கும்பிட வேண்டும். என் மனநிலையைப் புரிந்து கொண்டவள் போல் மதிய உணவு சமயம் வந்து கலந்து கொள் எனச் சொல்லிவிட்டுச் சென்றுவிட்டாள். இந்த மாளிகையின் வெளிப்புறச் சுவர்களில் கடலின் அலைக்கரங்கள் வந்து மோதுகின்றன போலும். என் உள்ளத்து அலைகள் என்னுள்ளே மோதி மோதித் ததும்புவதைப் போல் அவையும் இந்த மாளிகையின் சுவர்களை மோதி மோதித் திரும்புகின்றன. அதான் “ஓ”வென்ற இரைச்சல்.


அப்போது தான் உத்தவன் அங்கே வந்தான்.

3 comments:

priya.r said...

பதிவுக்கு நன்றி கீதாமா

திருமணமும் அதை தொடர்ந்த நிகழ்வுகளை எழுதிய விதம் மிக சிறப்பாக இருந்தது .

சென்ற அத்தியாயத்துடன் இரண்டாம்பாகம் முடிந்து விட்டதாக குறிப்பிட்டு இருந்தீர்கள்
முதல் அத்தியாயம் எங்கே ,எந்த ப்லோக்ளில் பதிவிட்டு இருக்குறீர்கள் என்று தெரிவித்தால்
எங்களுக்கு படிக்க உதவியாக இருக்கும் !

sambasivam6geetha said...

முதல் பாகம் இதே தலைப்பில் எண்ணங்கள் வலைப்பக்கம் கிடைக்கும் ப்ரியா. அதிலே கொஞ்சம் தொந்திரவு இருந்ததால் இங்கே மாற்றினேன். அதோட அப்போ திடீர்னு வலைப்பக்கத்தை வேறே ப்ளாக் செய்துட்டாங்க யாரோ! :(((((

priya.r said...

நன்றி கீதாமா!

நாங்களும் தொடர்ந்து படிக்க வந்துட்டோம் :)