Friday, December 23, 2011

துரோணர்---- அர்ஜுனன் --------கர்ணன்!

குரு வம்சத்தினருக்கு அப்போது கிருபர் ஆசாரியராக இருந்து வந்தார். அவர் தங்கையை துரோணர் திருமணம் செய்து கொண்டு அஸ்வத்தாமா என்ற பெயரில் ஒரு ஆண் குழந்தையையும் பெற்றார். துரோணருக்குத் தன் மகனைச் சீரும் சிறப்புமாக ஒரு ராஜகுமாரனைப் போல் வளர்க்க எண்ணம். மேலும் குழந்தைக்குப் பால் கொடுக்கப் பசுக்களும் ஆசிரமத்தில் இல்லை. ஆகவே அவர் தன் பால்ய நண்பன் ஆன துருபதனைச் சென்று பார்த்து முன்னர் குருகுலத்தில் தாங்கள் செய்து கொண்ட சபதத்தின்படி அவனிடம் இருந்து அவனுக்குக்கிடைத்ததில் பாதியை வாங்கி வரலாம் என எண்ணிப் பாஞ்சாலத்திற்குச் சென்றார். அங்கே துருபதனைக் கண்டார். துருபதனுக்கு இவர் வந்திருப்பது அவ்வளவாய்ப் பிடிக்கவில்லை. எனினும் வெளிக்காட்டிக்கொள்ளாமல் வரவேற்று உபசரித்தான். அப்போது துரோணர் தாங்கள் குருகுலத்தில் செய்து கொண்ட பிரதிக்ஞையின்படி துருபதன் தன்னுடைய செல்வத்தில் பாதியைத் தருமாறு வேண்டினார். துருபதனுக்குத் தூக்கிவாரிப் போட்டது.

துரோணரைப் பார்த்து, “துரோணரே, அறியாப் பருவத்தில் அப்போது இளம்வயதில் என்ன என்னமோ பிதற்றி இருந்தால் அதை எல்லாம் உண்மை என நம்பிவிடுவதா? நான் யாரென நினைத்தீர்? இந்த ஆர்யவர்த்தத்தின் மாபெரும் சக்கரவர்த்திகளில் ஒருவன். என்னுடைய பரம்பரையான சாம்ராஜ்யத்தை உம்முடன் நான் பங்கிட்டுக்கொள்வதா? நீர் என்ன என்னை யுத்தத்தில் ஜெயித்தீரா? எப்போதோ, என்றோ உணர்ச்சி வேகத்தில் எதையோ கூறி இருந்தால் அதை உண்மை என நம்புவதா? போம்,போம், போய் உம் வேலைகளைப் பாரும்! ஆசாரியராக நடந்து கொள்ளும்!” என்று பேசி அவரை அங்கிருந்து வலுக்கட்டாயமாக வெளியேறச் செய்தான். துரோணரால் இந்த அவமானத்தைச் சகித்துக்கொள்ள முடியவில்லை. இதை அவரால் மன்னிக்கவோ, மறக்கவோ முடியாது என்று தோன்றியது. தீவிரமாக யோசித்தார். பின்னர் தன் திறமைகளை அதிகப்படுத்திக்கொண்டு எவரேனும் ஒரு சக்கரவர்த்தியிடம் குல குருவாகச் சென்றால் ஒழியத் தன்னால் எதுவும் செய்ய இயலாது என்று நினைத்தவராய் அப்போது அனைவருக்கும் மேல் மஹா ஆசாரியராக இருந்து வந்த குரு பரசுராமரிடம் சென்றார். அவரின் அடி பணிந்து தன்னைச் சீடனாக ஏற்கச் செய்தார். அனைத்துக்கலைகளையும் கற்றுத் தேர்ந்தார். பரசுராமரின் சீடர்களிலே துரோணருக்கு நிகரில்லை என்னும்படி வில் வித்தையில் சிறப்பு வாய்ந்தவரானார். இத்தகைய சிறப்பினால் அவருக்குக் குரு வம்சத்தினருக்குக் கலைகளைக் கற்பிக்கும் வாய்ப்பும் கிடைத்தது. இளம் சிறார்களாக இருந்த கெளரவர்களுக்கும், பாண்டவர்களுக்கும் துரோணரின் குருகுலத்தில் வித்தைகள் கற்கும் வாய்ப்புக் கிடைத்தது.

துரோணர் அனைத்துச் சீடர்களுக்கும் சிறப்பான கவனம் எடுத்துச் சொல்லிக் கொடுத்தாலும் அனைவரிலும் அர்ஜுனன் மட்டுமே அவர் எதிர்பார்த்த அளவுக்கும் மேல் சிறப்பாகக் கற்று வந்தான். அவனுக்கு அடுத்தபடி வசுசேனன் என்னும் பெயர் கொண்ட கர்ணன். இவன் ராதேயன் என்னும் தேர்ப்பாகன் ஒருவனால் வளர்க்கப்பட்டவன். துரியோதனின் ஆத்ம நண்பன். அவனால் அங்க தேசத்து மன்னனாக கெளரவிக்கப் பட்டவன். என்றாலும் துரோணருக்குக் கர்ணனை விடவும், அர்ஜுனனே தனிச்சிறப்பு வாய்ந்தவனாக இருந்து வந்தான். மேலும் சிறு வயது முதலே கர்ணனுக்கு என்ன காரணத்தாலோ அர்ஜுனனைப் பிடிக்கவில்லை. துரோணர் அனைத்துக்கலைகளையும் எல்லோருக்கும் சமமாய்க் கற்பித்தாலும் இந்த பிரம்மாஸ்திரத்தை மட்டும் இன்னமும் ஒருவருக்கும் கற்பிக்கவில்லை. அர்ஜுனன் ஒருவனே அதற்குத் தக்கவன் என்ற எண்ணத்தில் இருந்து வந்தார். ஆனால் கர்ணனும் அதைக் கற்க ஆவலோடு இருந்தான். அவன் உள்ளக்கிடக்கை இந்த பிரம்மாஸ்திரத்தை என்றாவது ஓர் நாள் பிரயோகித்து அர்ஜுனனைத் தான் அழிக்க வேண்டும் என்பதே. கர்ணனுடைய எண்ணங்களை நன்கறிந்த துரோணர் அதை அவனுக்குக் கற்பிக்க மறுத்துவிட்டார்.

தம்மைப் பொறுத்தவரையில் அனைவரும் சமமே என்றாலும் தகுதியின் அடிப்படையில் பார்க்கையில் பிரம்மாஸ்திரப் பிரயோகத்தைக் கற்கும் அளவுக்கு மன ஒருமைப்பாடும், சிறந்த சீரிய சிந்தனைப்போக்கும் அர்ஜுனனுக்கே இருப்பதாகவும் கூறிவிட்டார். மேலும் பிரம்மாஸ்திரத்தைத் தவறாகப் பிரயோகம் செய்வது கூடாது என்றார். அதன் மேல் கர்ணன் மிகவும் யோசித்து பரசுராமரிடம் சென்றான். அவர் க்ஷத்திரிய குல விரோதி. அவரின் தாய், தகப்பன் இருவரும் க்ஷத்திரியர்களால் உயிர் இழந்த காரணத்தால் 21 தலைமுறை க்ஷத்திரியர்களை அழித்து பூமியையே வென்று வந்தவர். பின்னர் காச்யபரின் வேண்டுகோளுக்கிணங்கி தன் கோபத்தைத் தணித்துக்கொண்டு பூமியை அவருக்கு தானமாகக் கொடுத்துவிட்டுத் தான் மேற்குக் கடலோரமாக ஒதுங்கி வாழ்ந்து வந்தார். அவரைத் தேடிச் சென்ற கர்ணன் அவரிடம் தான் ஒரு பிராம்மணன் என்று கூறித் தனக்குக் கல்வி கற்பிக்கவும், முக்கியமாய் பிரம்மாஸ்திரப் பிரயோகம் செய்யக்கற்றுக்கொடுக்கவும் வேண்டினான். மறந்தும் தான் க்ஷத்திரியன் என்பதை அவரிடம் வெளிக்காட்டவில்லை. ஆனால்…………….

2 comments:

priya.r said...

மகா பாரதத்தில் இவையெல்லாம் படித்தது தான் ;

இருந்தாலும் எவ்வளோ படித்தாலும் இன்னும் படிக்கவே விருப்பம் கீதாமா

priya.r said...

மகா பாரதத்தில் இவையெல்லாம் படித்தது தான் ;

இருந்தாலும் எவ்வளோ படித்தாலும் இன்னும் படிக்கவே விருப்பம் கீதாமா