Saturday, December 17, 2011

நேசம் மறக்கவில்லை நெஞ்சம்! நினைவு முகம் மறக்கலாமோ!

ருக்மிணி கனவுலகிலிருந்து நனவுலகுக்கு வந்தாள்.


உத்தவன் முகமே ஏதோ முக்கிய செய்தி இருப்பதைச் சொன்னது. உத்தவன் கிருஷ்ணனின் இளைய சகோதரன் என்ற முறையிலும் தனிப்பட்ட முறையில் ருக்மிணிக்கு உதவிகள் செய்தவன் என்ற முறையிலும் எப்போது வேண்டுமானாலும் ருக்மிணியை வந்து பார்க்கும் உரிமையை அவன் எடுத்துக்கொண்டிருந்தான். ஆனால் ருக்மிணிக்கு அவனைப் பார்க்கையில் எல்லாம் அவன் என்னதான் நெருங்கிப் பழகினாலும் வேறு ஏதோ உலகிலிருந்து வந்தவன் போலவே காட்சி அளிப்பான். உத்தவன் வந்து அவளை வணங்கி நின்றான். அவளை விட வயதில் பெரியவனாக இருந்தாலும் கண்ணனுக்கு மனைவி என்பதால் அவளுக்கு உரிய அண்ணி ஸ்தானத்தையும், அதற்குரிய மரியாதையும் கொடுத்தான். அதோடு அவனுடைய பார்வையைப் பார்த்தபோது ஏதோ முக்கியச் செய்தி, தன் மனதுக்குப் பிடிக்காத செய்தியைக் கொண்டு வந்திருக்கிறான் என்று நினைத்தாள் ருக்மிணி. அதே போல் உத்தவன் அவளிடம், “இன்று கண்ணன் உங்களை வந்து பார்ப்பான் என்று நிச்சயமாய்ச் சொல்லமுடியாது அண்ணி, நான்கு கப்பல்கள் மூழ்கிவிட்டதாய்ச் செய்தி வந்திருக்கிறது. கண்ணன் சாத்யகியையும், விராடனையும் அழைத்துக் கொண்டு அந்தக் கப்பல்களைக் காப்பாற்றி மீட்க முடியுமா எனப் பார்க்கச் சென்றுவிட்டான். உங்களைக் கவனித்துக்கொள்ள என்னை அனுப்பி வைத்தான்.” என்று கூறிவிட்டு ருக்மிணியின் உத்தரவுக்குக் காத்திருந்தான்.

ருக்மிணி ஒரேயடியாகப் பயந்து போனாள். பதட்டத்துடன், “கோவிந்தனால் எப்படி எல்லாக்கப்பல்களையும் மீட்க முடியும்?” என்று கேட்டாள். அதற்கு உத்தவன், அவன் குக்குராவையும் அழைத்துப் போயிருப்பதாகவும், குக்குராவுக்குக் கடலைப் பற்றித் தெரியாததே இல்லை எனவும். சிறிய படகுகளில் அவர்கள் சென்றிருப்பதாகவும் கூறினான். கப்பல் மூழ்கிவிட்டால் அதிலிருந்தவர்களையாவது காப்பாற்றி அழைத்துவரலாம் எனவும் கூறினான். ருக்மிணி யோசனையுடன் நேற்றிலிருந்து கடல் ஒரேயடியாகக் கொந்தளித்து ஆர்ப்பரித்துக்கொண்டிருக்கிறதே. கண்ணன் எங்காவது மூழ்கிப் போய்விட்டால்!” எனத் தனக்குத் தானே பேசிக்கொண்டாள். அவளால் இப்படித் திடீரென ஏற்பட்ட மாற்றத்தைத் தாங்க இயலவில்லை. கண்ணன் ஏன் போகவேண்டும் என்றும் கூறவே உத்தவன், முப்பது யாதவக் குடும்பங்கள் பிருகு தீர்த்தத்திற்கு அந்தக் கப்பல்களில் சென்றதாகவும், அவர்கள் அத்தனை பேரையும் அப்படியே விடக்கண்ணன் எப்படிச் சம்மதிப்பான் எனவும் மறுமொழி கூறினான்.

ருக்மிணிக்கோ கண்களில் கண்ணீர் வந்தது. “உத்தவா, அவர் எப்போதும் யாதவர்களைப் பற்றியே எண்ணுகிறார்; என்னைக் குறித்தும் எண்ணலாமே! அவர் கடலில் மூழ்கிப் போய்விட்டால் எனக்கு என்ன கதி! நான் என்ன ஆவது! மஹாதேவா! இது என்ன சோதனை!” புலம்பினாள் ருக்மிணி. அதைக் கேட்டுச் சிறிதும் பதட்டமடையாமல் உத்தவன் அவளுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் பேசினான். கண்ணனை எவரால் தடுக்க முடியும் என்றும், கண்ணனுக்கு எதுவும் ஆகாது என்றும் எடுத்துக்கூறினான். ஜராசந்தனாலும், காலயவனனாலும் கூடக் கண்ணனைத் தடுத்து நிறுத்த முடியவில்லை. யாதவர்களால் எப்படி இயலும்! அவனுக்கு ஒன்றும் நேராது என்று உறுதிபடச் சொன்னான். ஆனால் ருக்மிணியோ உத்தவனுக்கு இதயமே இல்லை எனக் கடுமையாகச் சொன்னாள். கண்ணன் தன் உயிரைப் பணயம் வைத்துக் கடலுக்குள் சென்றிருப்பதைச் சுட்டிக்காட்டினாள். ஆனால் அப்போதும் உத்தவன் கோபம் கொள்ளாமலேயே சாந்தமாக ஒரு மூத்த சகோதரன் தன் சகோதரியிடம் வாஞ்சையாகப் பேசுவதைப் போலவே பேசினான். தனக்கும் கண்ணனிடம் பாசம், அன்பு எல்லாம் உண்டு என்றும் தான் மட்டும் இல்லை எனவும், இங்கே உள்ள அனைவருக்குமே கண்ணனிடம் பாசம் உண்டு என்றும் கூறிய உத்தவன் கண்ணன் தன் வாழ்க்கையை ருக்மிணியுடன் மட்டும் பங்கு போட்டுக்கொள்ளவில்லை என்றும் அவர்கள் அனைவரோடும் பங்கு போட்டுக்கொள்வதாகவும் எடுத்துக் கூறினான். இதுதான் கோவிந்தனின் உண்மையான முகம் எனவும் நாம் அனைவரும் இதை ஒப்புக்கொண்டு கண்ணனிடம் பரிபூரணமாகச் சரணடைந்துவிடவேண்டும் என்றும் கூறினான்.

ருக்மிணி பொறுமையின்றி தன் உதட்டைக் கடித்துக்கொண்டாள். “ஆமாம், அனைவரும் கண்ணனை விரும்புகிறார்கள்; கண்ணனும் அனைவரையும் விரும்புகிறான்; எல்லாரிடமும் அன்பு செலுத்துகிறான். இதில் நான் எங்கே நடுவில் வருவது? எனக்கும் இதற்கும் என்னதான் சம்பந்தம்! நான் யார் நடுவில்!’ என்றாள் கோபமாக. உத்தவனோ பொறுமையை இழக்காமல், :பீஷ்மகனின் மகளாகப் பேசுகிறாய் ருக்மிணி. காலயவனனின் கைகளில் சிக்கி இறக்கத் தயாராகச் சென்ற அந்த நிமிடத்தில் கூடக் கண்ணன் உன்னை மறக்கவில்லை. அவனோடு சேர்ந்து நீயும் தான் நினைக்கப்படுவாய். உன்னை விட்டு அவனை மட்டும் எவரும் இனி தனியாக நினைக்கமாட்டார்கள்.” உத்தவன் சாந்தமாகப் பேசினாலும் அதில் இருந்த உள்ளார்ந்த கடுமையை உணர்ந்தாள் ருக்மிணி. “அவன் கடைப்பிடிக்கும் தர்மத்தை நீயும் கடைப்பிடி. அவனுடைய தர்மத்தைக் காக்கும் பணியில் உன்னுடைய பங்கும் இருக்கட்டும். முதலில் உன்னுடைய தர்மம் கிருஷ்ணனுக்கு உதவுவது தான் என்பதைக் கற்றுக்கொள். அவனோடு சேர்ந்து நீயும் தர்மத்தைக்காக்க உதவி செய்.” என்றான்.

“நான் என்ன செய்வேன்! என்னால் இயலாத ஒன்று! எனக்குத் தெரியும். ஒருக்காலும் என்னால் கண்ணனுக்கு உதவியாக இருக்க முடியாது என்பது எனக்கு நன்றாகத் தெரியும். அவனுடைய வாழ்க்கையை அவன் வாழப்போகும் சமயம் நான் நிச்சயம் அதைப் பங்கிட்டுக்கொள்ளப் போவதில்லை. நான் அருகதை அற்றவள். எனக்குத் தகுதியே இல்லை. அவன் சஹதர்மிணியாக ஆக நான் தகுதி அற்றவள். அந்த ஈசன், மஹாதேவன் என்னை இப்படிப் படைத்துவிட்டார். கண்ணனின் பாரங்களைக் கூடச் சேர்ந்து சுமக்கும் அளவுக்கு வல்லமையும், துணிவும் உள்ளவளாக என்னைப் படைக்கவில்லையே!” ருக்மிணி புலம்பினாள். சொல்லிக்கொண்டே தன் படுக்கையில் துவண்டாள் ருக்மிணி. பின்னர் மெதுவாக தனக்குத் தனியாகச் செய்தி ஏதும் கண்ணன் அனுப்பி உள்ளானா? என்று கேட்டாள். ஆமென்ற உத்தவன் தொடர்ந்து சொன்னான்:

“ருக்மிணி, தைரியமாக இரு! யாதவர்களிடையேயும் தைரியத்தை ஊட்டு. யாதவர்களின் குலதெய்வமாக இருந்து வருவாய். அவர்களின் காவல் தெய்வமாக இருப்பாய். அவர்கள் என்னில் இணைந்தவர்கள். “ இதுதான் உனக்குச் சொல்லி இருப்பது. இதைச் சொல்லிவிட்டு என்னிடம் உத்தவா, நீ அவளைக் கண்காணித்துக்கொள். அவள் இட்ட வேலைகளைச் செய்துவா. அவள் சொல்வதைத் தட்டாதே! என்று சொல்லிவிட்டுச் சென்றுவிட்டான். ருக்மிணி! அவனும் இதில் உள்ள ஆபத்தை உணர்ந்திருக்கிறான். உணர்ந்தே சென்றிருக்கிறான்.” என்றான். ருக்மிணியின் மனம் திடீரென கிருஷ்ணன் காலயவனன் கரங்களில் மாட்டிக்கொண்டு இறந்துவிட்டான் என நினைத்து அவளும் ஷாயிபாவும் அழுத அந்த தினம் நினைவில் வந்தது. ஷாயிபாவைப் பார்க்கவேண்டும்போல் இருந்தது அவளுக்கு. ஷாயிபா எங்கே எனக் கேட்டாள். கண்ணன் ஷாயிபாவுக்குச் செய்தி அனுப்பி இருக்கிறானா என்றும் கேட்டாள். அவளுக்கும் செய்தி இருப்பதாய்க் கூறிய உத்தவன், கண்ணன் திரும்பவில்லை எனில் அவனுடைய சக்கரத்தை ஷாயிபாவிடம் கொடுக்கும்படி அவன் கூறி இருப்பதாகவும், ஷாயிபா அந்தச் சக்கரத்தை வாழ்நாள் முழுதும் பூஜித்து வருவாள் எனக் கூறியதாகவும் சொன்னான்.

ருக்மிணி அழ ஆரம்பித்தாள். “நான் ஒரு மோசமான பெண். நேற்றைய என் சந்தோஷத்தில் நான் ஷாயிபாவை முற்றிலும் மறந்து போனேன். அவளைப் போய்ப்பார்க்கக் கூட இல்லை. ஒருமுறையாவது அவளை நான் போய்ப் பார்த்திருக்கவேண்டும். உத்தவா, அவளிடம் போய் நான் அவளை உடனே சந்திக்க விரும்புவதாய்ச் சொல். நான் அவளைப் பார்த்தாக வேண்டும்.” என்றாள்.

உத்தவனோ ருக்மிணியைப் பார்த்து அவளுடைய குழந்தைத்தனத்தைப் பார்த்துச் சிரித்தான். “சகோதரி, விடிகாலையிலேயே கண்ணன் கப்பல்களை மீட்கச் சென்ற செய்தி கிட்டியதும் கண்ணனைத் தொடர்ந்து ஷாயிபா ஒரு ரதத்தில் பிரபாஸ க்ஷேத்திரத்துக்குச் சென்றுவிட்டாள். கண்ணன் திரும்பி வரும்வரையில் பிரபாஸ க்ஷேத்திரத்தின் கடற்கரையிலேயே தான் காத்திருக்கப் போவதாய் ஷக்ரதேவனிடம் கூறி இருக்கிறாள். கண்ணன் பத்திரமாய்த் திரும்பி வரப் பிரார்த்தித்துக்கொண்டிருக்கிறாள்.” ருக்மிணிக்கு இதைக்கேட்டதும் மனம் கொதித்தது. ஷாயிபாவின் மேல் பொறாமை மூண்டது. அவள் நன்கறிவாள்; ஷாயிபா கண்ணனை மணந்து கொள்ள விரும்புகிறாள்; கண்ணன் அவளை நிராகரித்தாலும் அவள் கண்ணன் மனதைக் கவர்ந்துவிட்டாள்; அதுவும் தன் பரிபூரண சரணாகதி மூலம் அவனை, அவன் அன்பை வென்றுவிட்டாள். அவனுக்காக அவன் சந்தோஷத்துக்காக அவள் என்னதான் செய்யவில்லை! இதோ நானே ஒரு சாட்சி! கண்ணனுக்காகவே அவள் அத்தனை கஷ்டப்பட்டுத் தன்னைக்கடத்திக்கொண்டு வர ஏற்பாடுகள் செய்தாள். தன்னிடத்தில் அவள் இருந்து கொண்டு என்னை வெளியே அனுப்பி வைத்தாள்.

1 comment:

priya.r said...

ருக்மணி இன்னும் சாதாரண பெண்ணாக கோபம் பொறாமை கொண்டவளாகவே இருக்கிறாளே !