Wednesday, March 21, 2012

ஆசாரியரின் பெருமிதம்!

துரோணர் குருவம்சத்து இளவரசர்களுக்கு ஆசாரியராக அமர்ந்ததன் பலனை முழுவதும் அனுபவித்தார். அதுவும் பாண்டுவின் புத்திரன் ஆன அர்ஜுனனின் வில் வித்தையின் மூலம் துருபதனைத் தோற்கடித்து நாட்டைப் பங்கிட வைத்தது. ஒரு கோடி தான் காட்டினார் அர்ஜுனனிடம். திடீரென ஒரு நாள் அர்ஜுனன் தன் வலிமையைப் பிரயோகித்து துருபதனை துரோணரின் காலடியில் விழச் செய்தான். அர்ஜுனனின் அபார யுத்தத் திறமையின் முன்னர் துருபதன் தோற்றே போனான். அதோடு அரை மனதாகத் தன் நாட்டைப் பங்கிடவும் சம்மதித்தான். ஆம், இப்போது கங்கைக்கு வடக்கே உள்ள பாஞ்சாலப் பிரதேசங்கள் துரோணரின் ஆளுமைக்கு உட்பட்டவை. ஆனால் ஆஹிசாத்ரா என்னும் அந்தப் பிரதேசத்தின் அரசனாக ஆனதோடு துரோணரின் ஆசைகள் நின்றுவிடவில்லை. அவருக்கு மேலும் மேலும் குறிக்கோள்கள் பரந்து விரிந்தன. வெறும் அரசனாக இருப்பதோடு மட்டுமே திருப்தி அடைய முடியுமா என்ன?? குருவம்சத்தின், பலம் பொருந்திய குரு வம்சத்தின் மாபெரும் தலைவனாக இருப்பதில் தான் துரோணரின் வாழ்நாளின் லட்சியமே நிறைவேறுகிறது. இதன் மூலம் பல நாட்டு அரசர்களும் அவரையே நாடுவதோடு அவருடைய உதவியையே எதிர்பார்த்துக் காத்தும் கிடப்பார்கள் அல்லவா! எத்தனை பெரிய பதவி இது! இறுமாப்பில் முகம் மலர்ந்தார் துரோணர்.

அதோடு ஹஸ்தினாபுரத்தின் சூழ்நிலைகளும் துரோணரின் விருப்பத்துக்குச் சாதகமாகவே இருந்து வருகிறது. அப்படி ஏதேனும் கொஞ்சம் மாறுதல் தென்பட்டாலும் துரோணர் அதைத் தன் விருப்பத்திற்கு ஏற்ப மாற்றிவிடுவார். பீஷ்மபிதாமகர் இருக்கிறார்தான். அவரிடமே அனைத்து அதிகாரங்களும் கொட்டிக்கிடக்கிறது என்பது வெறும் ஊருக்காகத் தான். அவருக்கோ வயதாகி வருகிறது. திருதராஷ்டிரனோ கண் தெரியாதவன். அத்தோடு தன் மக்களிடம் உள்ள பாசத்தாலும், பாண்டவர்களுக்கு உரிய நாட்டைத் தான் அபகரிக்கக் கூடாது என்ற நியாய உணர்வுக்கும் இடையில் தத்தளிக்கிறான். இதில் அவன் மக்களிடம் அவன் கொண்டுள்ள பாசமே வென்று வருகிறது. அவன் மக்களான கெளரவர்களோ! கேட்கவே வேண்டாம்; பொறாமை, பேராசை, வெறுப்பு, பாண்டவர்களிடம் அன்பில்லாமல் அவர்களைக் கண்ணால் கண்டாலே தூற்றுவது என இருக்கின்றனர். ஆனால் என்ன இருந்தாலும் பாண்டுவின் புத்திரர்கள் நம்பிக்கைக்கு உகந்தவர்கள் தான்; அதை மறுக்கவே முடியாது. அவர்கள் சத்தியத்துக்குக் கட்டுப்பட்டு தர்மத்துக்குக் கட்டுப்பட்டு ஒழுங்காகவும் நடந்து கொள்கின்றனர். இந்தச் சூழ்நிலையை துரோணர் தனக்கு ஏற்றவாறு பயன்படுத்திக்கொண்டார்.

பாண்டவர்கள் தங்களுக்குள் ஒவ்வொரு வகையில் சிறந்தவர்களாக இருந்தனர். அவர்களே துரோணருக்கு முழு உதவியும் செய்தும் வந்தனர். அர்ஜுனன் தன் ஆசாரியரான குரு துரோணரிடம் மிகுந்த பக்தி கொண்டிருந்தான். திருதராஷ்டிரன் மகனான துரியோதனனோ அவ்வளவு பக்தி சிரத்தை கொண்டிருக்கவில்லை என்பதோடு தான் ஒரு அரசகுமாரன் என்பதை ஒவ்வொரு கணமும் உணர்த்திக்கொண்டிருப்பான். அவனை நம்பவே முடியாது. ஆனால் ஆனால் துரோணரின் ஒரே மகன் அஸ்வத்தாமாவுக்கோ துரியோதனன் தான் ஆப்த நண்பன். இது தான் துரோணருக்குக் கொஞ்சம் உறுத்தியது. பாண்டவர்களால் தான் குரு வம்சமும் சாம்ராஜ்யமும் உன்னதத்துக்கு வரமுடியும் என்பதில் சந்தேகமே இல்லை. அதிலும் யுதிஷ்டிரனைப் போன்ற ஒரு நேர்மையும், தர்மவானுமான அரசன் கிடைப்பதே அரிது. பீமனும் அர்ஜுனனும் நல்ல வீரர்கள். நகுலனுக்கோ குதிரைகளைப் பழக்க நன்கு தெரியும். இதில் அவனை விடச் சிறந்தவர் எவரும் இல்லை. சகாதேவனோ வருங்காலத்தை நன்கு அறிந்து சொல்வதில் வல்லவன். சாத்திரங்களின் நுணுக்கங்களை நன்கு அறிந்தவன். அவனைப் போல் படித்தவர்கள் எவரும் இலர். இவர்கள் ஐவரும் ஒன்று சேர்ந்தால் இவர்கள் வலிமையை எவனாலும் வெல்ல இயலாது. “ம்ம்ம்ம்ம்ம்ம்… இவர்கள் ஆட்சிக்கு வந்தால், இவர்களுக்கு ஆலோசனைகள் சொல்லி வழிநடத்த என்னை விட்டால் வேறு எவர் இருக்கின்றனர்.” துரோணருக்கு மீண்டும் பெருமிதம் ஏற்பட்டது.

No comments: