Saturday, March 24, 2012

அஸ்வத்தாமாவின் ஆச்சரியம்!

வெளிப்படையாகக் காட்டிக்கொள்ளாவிட்டாலும் திருதராஷ்டிரனுக்குப் பாண்டுவின் புத்திரன் யுவராஜாவானது உள்ளூரப் பிடிக்கவில்லை என்பதை துரோணர் அறிவார். திருதராஷ்டிரன் மகனான துரியோதனன் இருக்கப் பாண்டு புத்திரன் யுவராஜா ஆனதைக் கெளரவர்கள் எவருமே விரும்பவில்லை. துரியோதனனோ கொதித்துக்கொண்டிருந்தான். அவனுடைய நெருங்கிய நண்பர்களிடம் சொல்லிப் புலம்பினான். அவனை அடக்கி வைத்துக்கொண்டிருப்பது அஸ்வத்தாமா தான். மீண்டும் துரோணருக்குப் பெருமை ஏற்பட்டது. ஆம், துரியோதனன் எப்படி இருந்தாலும் அஸ்வத்தாமாவுடனான அவன் நட்பு பிரிக்க முடியாத ஒன்று. தன் வசதிக்காகவே துரோணர் தன் அருமைப் பிள்ளை அஸ்வத்தாமா மூலம் துரியோதனனை அடக்கி வைத்துக் கொண்டிருந்தார். ஆனால் இப்போதோ நிலைமை மாறுகிறது. குருவம்சத்தினருக்கும், யாதவர்களுக்கும் வாசுதேவ கிருஷ்ணன் மூலம் கூட்டணி ஏற்பட்டுவிட்டால்?? இந்தக் கூட்டணிக்குப் பிதாமகர் பீஷ்மர் முழு மனதோடு சம்மதமும் கொடுப்பார்! அப்படி மட்டும் நடக்கக் கூடாதெனில்! துரியோதனின் பொறாமைத் தீக்கு நெய் வார்க்க வேண்டும். துரியோதனன் யுவராஜாவாக இருந்தால் மட்டுமே துரோணர் நினைத்தது நடைபெறும். அதிகாரமும், செல்வாக்கும் அவர் கையில் இருக்கும்.

துரியோதனன் நம்பிக்கைக்கு உகந்தவன் அல்லதான். துடுக்காகவும் அவமரியாதையாகவும் பேசக் கூடியவனே. அவனுக்கு ஆலோசனைகள் சொல்பவர்களும் நல்லவிதமாய்ச் சொல்வதில்லை; என்றாலும் எல்லா விதத்தில் திறமையும், வலிமையும், நீதி, நேர்மை, நியாயத்துக்குக் கட்டுப்பட்டவனாயும் இருக்கும் யுதிஷ்டிரனைக் காட்டிலும் துரியோதனனைச் சீக்கிரம் நம் இஷ்டத்துக்கு வளைக்க முடியும். தனக்குள் புன்னகைத்துக்கொண்ட துரோணர் கைகளைத் தட்டி ஒரு வேலையாளை அழைத்துத் தன் மகன் அஸ்வத்தாமாவை உடனடியாகக் கூட்டி வரச் சொன்னார். பின்னர் மீண்டும் மீன்களுக்கும், ஆமைகளுக்கும் உணவு கொடுப்பதில் முனைந்தார். சற்று நேரத்தில் அஸ்வத்தாமா வந்தான்.

நல்ல உயரமாகவும், வலிமையான உடல்கட்டோடும் காணப்பட்ட அஸ்வத்தாமா சிறிதும் பொறுமையின்றிக் காணப்பட்டான். அதுதான் அவன் இயல்பான குணமோ என்னும்படிக்குக் காணப்பட்டான். தந்தையை வணங்கிவிட்டு அவரின் உத்தரவுக்குக் காத்திருந்தான். “மகனே, உன்னிடம் சிறிது பேசவேண்டும்.” என்றார் துரோணர். “காத்திருக்கிறேன் தந்தையே!” என்ற அஸ்வத்தாமன் தந்தையைக் கூர்ந்து நோக்கினான்.

“அஸ்வத்தாமா, நான் பாண்டவர்களுக்கு ஆதரவாகவும், யுதிஷ்டிரன் யுவராஜாவாய்த் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு ஆதரவும் ஆசிகளும் தெரிவித்த போது உனக்கு என் மீது பயங்கரக் கோபம் இல்லையா? கெளரவர்களுக்கு, முக்கியமாய் துரியோதனனுக்கு நான் கேடு இழைத்துவிட்டதாய்க் கூறினாய். அவர்களுக்கு நியாயம் கிடைக்கவில்லை என்றும், நானும் அதற்குத் துணை போனதாகவும் கூறினாய்.”

அஸ்வத்தாமாவின் கண்கள் கோபத்தில் சிவந்தன. தந்தையிடம் உள்ள மரியாதையை நினைவு கூர்ந்து தன் பார்வையைத் தாழ்த்திக்கொண்டான் அவன். “அதனால் என்ன தந்தையாரே! நான் சொன்னது தவறாகவும் இருக்கலாம். அப்படிச் சொன்னதற்கு வருந்துகிறேன். ஆனால் என் மனதில் உள்ளவற்றைத் தங்களிடம் அல்லாமல் வேறு எவரிடம் நான் பகிர்ந்து கொள்ள இயலும்?” பணிவோடு பேசுவது போல் காட்டிக்கொண்டாலும் உள்ளூரத் தனக்கு இருந்த வெறுப்பை அஸ்வத்தாமாவால் மறைக்க இயலவில்லை. துரோணருக்கும் அது புரியவே செய்தது.

புன்னகையுடன், “மகனே! நான் அநீதி தான் செய்துவிட்டேன். என் மாணாக்கர்களுக்குள் நான் வேறுபாடுகளைக் காட்டி வருகிறேன். நீ சொல்வதில் உண்மை உள்ளது. “ தூக்கிவாரிப் போட்டது அஸ்வத்தாமாவுக்கு. அவனுக்கு விபரம் தெரிந்ததில் இருந்து தான் தவறு செய்துவிட்டதாக துரோணர் ஒத்துக்கொண்டது இதுவே முதல் முறை. அடுத்து அவர் என்ன சொல்லப் போகிறார் என்பதற்குக் காத்திருந்தான் அஸ்வத்தாமா. “நாம் பேசிக்கொள்வதை துரியோதனனுடம் பகிர்ந்து கொள்வாயா மகனே?”

“ஆம் தந்தையே, அவன் என் நெருங்கிய நண்பன்.”

“எனில் இப்போதும் அவனிடம் இதைக் கூறு. கெளரவர்களுக்கும் பாண்டவர்களுக்குமான இடையே உள்ள பங்கீட்டுப் பிரச்னைகளில் நான் கலந்து கொள்ளப் போவதில்லை. நான் எவர் பக்கமும் சார்ந்து எதுவும் கூறப்போவதில்லை. இதை நீ துரியோதனனிடம் தாராளமாய்க் கூறலாம்.”

“தந்தையே, மகிழ்ந்தேன். உண்மையாக மகிழ்ந்தேன். “ ஆனந்தக் கூச்சலிட்ட அஸ்வத்தாமா, “இதை நான் இப்போதே போய் துரியோதனனிடம் சொல்லி அவனும் மகிழ்வதைக் காண வேண்டும். தங்கள் அனுமதியுடன் போய்ச் சொல்லட்டுமா? கடைசியில் இதற்கு ஒரு வழி கிடைத்ததே!”

“சென்று வா மகனே, உனக்கு என் ஆசிகள்.”

No comments: