Friday, March 2, 2012

எல்லாம் வல்ல இறைவனின் ஆணை! சத்தியம், இது சத்தியம்

சில நாட்களில் நண்பர்கள் பிரிந்தனர். துருபதன் தன் நாட்டிற்குச் சென்றுவிட்டான். துரோணரோ மேலும் மேலும் அஸ்திரப் பயிற்சிகளில் தன்னை மேம்படுத்திக்கொள்ள அதிலேயே மூழ்கிப் போனார். சில வருடங்களில் பாஞ்சால மன்னன் இறந்து போகப் பட்டத்து இளவரசன் ஆன துருபதன் அரியணை ஏறினான். இந்தச் செய்தி காதில் விழுந்ததுமே துரோணருக்கு ஆனந்தம் அளப்பரியதாக இருந்தது. ஆஹா, கடைசியில் தான் நினைத்த தருணம் வந்தேவிட்டது. அவர் தன் படிப்பு முடியும் வரை பொறுமையாகக் காத்திருந்தார். குருகுலத்தை விட்டு வெளியே வந்ததுமே பாஞ்சாலத்திற்குச் சென்றார். காம்பில்யத்தில் அரசாட்சி புரிந்து வந்த துருபதனைக் கண்டார். துருபதனும் துரோணரை மறக்கவில்லை. தக்க முறையில் வரவேற்று உபசரித்தான். துரோணரும் உபசாரங்களை ஏற்றுக்கொண்டதோடு நிற்காமல் துருபதன் கங்கையை சாட்சியாக வைத்துத் தனக்குச் செய்து கொடுத்த சத்தியத்தை நினைவூட்டினார். இப்போது பாஞ்சாலம் முழுதும் துருபதன் கைகளுக்கு வந்துவிட்டதால் தன்னோடு நாட்டைப் பகிர்ந்து கொள்ள இதுவே தக்க தருணம் என்றும் அவன் எடுத்துக்கொண்ட சத்தியத்தை நிறைவேற்றவேண்டிய சமயம் வந்துவிட்டது என்றும் கூறினார்.

“சத்தியமா? நானா! இது என்ன துரோணரே! விளையாடுகிறீரா? நான் ஏன் அப்படி எல்லாம் சத்தியம் செய்கிறேன். கனவு ஏதும் கண்டீரா? என் நாட்டை உங்களுடன் பகிர்ந்து கொள்வதாவது! துரோணரே, அரச பதவியைப் பற்றி ஏதேனும் அறிந்திருக்கிறீரா? இது என் தந்தை வழிச் சொத்து. இதை நான் எனக்குப் பின்னர் என் மகன்களோடு தான் பகிர்ந்து கொள்வேன். உங்களுடன் ஏன் பகிரவேண்டும்? அப்படி எந்தச் சத்தியமும் நான் செய்து கொடுத்ததாக நினைவில் இல்லையே!”

உண்மையில் துருபதன் மறந்து தான் போயிருந்தான். ஓடி, ஆடி, விளையாடிய சின்னஞ்சிறு பிள்ளைகளாய் இருந்தபோது எத்தனையோ கனவுகள்! கொள்கைகள்! சத்தியங்கள், உறுதிமொழிகள்! அனைத்தும் இப்போது நினைவில் கொள்ள முடியுமா என்ன? இது என்ன இந்த ஆசாரியன் இப்படி ஒரு முட்டாளாய் இருக்கிறானே! என்ன படித்து என்ன! அஸ்திரப் பிரயோகங்களில் வல்லவனாய் இருந்து என்ன! இது கூடத் தெரியவில்லையே! என் ராஜ்யத்தை நான் இவனோடு பகிர்ந்து கொள்வதாவது! துருபதனுக்கு உள்ளூர இகழ்ச்சி மேலோங்கியது. வெளிக்காட்டிக்கொள்ளாமல் இருக்கப் பார்த்தும் அவனால் முடியவில்லை. மேலும் தன் நாடு எத்தனை வலிமையான நாடு என்பதை அவன் அரியணையில் ஏறிய இந்தக் கொஞ்ச காலத்திற்குள் நன்கு புரிந்து கொண்டிருந்தான் துருபதன். ஆர்யவர்த்தத்திலேயே மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நாட்டிற்கு அரசனாகி இருக்கிறோம் என்பதை நன்கு உணர்ந்திருந்தான்.

ஆனாலும் நட்பை மறக்காமல், பொன்னாலும், பொருளாலும், ஆடை, ஆபரணங்களாலும் துரோணரை மூழ்கடித்தான். துரோணருக்கு குருகுலம் அமைக்க விருப்பம் இருந்தால் பாஞ்சாலத்தில் அமைக்குமாறும் அதற்கு வேண்டிய நிலம், மற்ற வசதிகளைத் தான் செய்து தருவதாகவும் வாக்களித்தான். ஆனால்!!! துரோணரோ, பிள்ளைப் பருவத்துச் சத்தியத்தை இன்னமும் உண்மை என நம்பிக் கொண்டிருந்தார். அந்த நேரத்து உணர்வில் துருபதன் செய்து கொடுத்த சத்தியத்தை அவன் காப்பாற்றுவான் என்றும் தனக்குப் பாஞ்சாலத்தில் சரிபாதி கிடைக்கும் எனவும் மிகவும் நம்பிக்கை கொண்டிருந்தார். துரோணரால் இந்த அவமானத்தைச் சகித்துக்கொள்ள முடியவில்லை. சத்தியம் செய்துவிட்டு இப்போது செல்வமும், செல்வாக்கும், அதிகாரமும் வந்ததும் மனம் மாறித் தனக்கு துரோகம் செய்கிறான் துருபதன் என நினைத்தார். இங்கே ஆசாரியராகவோ அல்லது மந்திரி பதவி ஏதேனும் ஒன்றை ஏற்றுக்கொண்டு துருபதனுக்குக் கீழ் வேலை செய்யவோ அவர் வரவில்லை. அவருக்கு வேண்டியது சமமான பதவியே! துருபதன் எப்படி ஒரு அரசனாக இருக்கிறானோ அவ்வாறே அவரும் அரசனாக இருக்க வேண்டியவரே. அதை எப்படி துருபதன் மறுக்கலாம்! துரோணருக்குக் கோபம் குமுறிக்கொண்டு வந்தது.

துருபதன் தன் சத்தியத்தை நிறைவேற்ற வேண்டும் என வற்புறுத்தினார். நாட்டு விவகாரங்களிலும், அரசியல் விவகாரங்களிலும் இப்போது மிகவும் தேர்ச்சி அடைந்திருந்த துருபதன் தன் மந்திரிகளைக் கலந்து ஆலோசித்துவிட்டும் தன் தகப்பன் காலத்திலிருந்து ஊழியம் செய்யும் ஊழியர்களோடு பேசியும் தன் சிறு வயதில் அறியாப் பருவத்தில் செய்த சத்தியத்தை இப்போது தான் நிறைவேற்ற வேண்டிய தேவையோ அவசியமோ இல்லை என்பதை எடுத்துக் கூறினான்.

“துரோணரே, நீர் என் நண்பர் தான்! அருமையானவரும் கூட! திறமை வாய்ந்தவரும் தான். ஆனால் அதற்காக என் நாட்டை உம்முடன் நான் பகிர்ந்து கொள்வது என்பது இயலாது. “ தன்னால் இயன்றவரை துரோணரிடம் மரியாதையுடனும், மிகப் பணிவோடும் எடுத்துக் கூறினான் துருபதன். ஆனால் துரோணருக்குக் குரோதம் பொங்கியது. அவனைக் கண்டவாறு வசைமாரி பொழிந்தார். எனினும் துருபதன் நிதானம் இழக்காமல் தன் நாட்டின் மேல் தான் கொண்டிருக்கும் பொறுப்புக்களை நட்புக்காகத் தியாகம் செய்ய முடியாது என்பதை வலியுறுத்தினான். துருபதனின் சபை கூடியது. படைத்தளபதிகள், அமைச்சர்கள், மற்றப் பெரியோர்கள், பாஞ்சாலத்தின் சிற்றரசர்கள் என நிறைந்திருந்த சபையில் துரோணரின் வேண்டுகோள் முழுமனதாக நிராகரிக்கப் பட்டது. துரோணர் நிறைந்த சபையிலேயே துருபதனை எவ்வளவு அவமானம் செய்யமுடியுமோ அவ்வளவும் செய்தார். சாபங்கள் கொடுத்தார். துருபதன் மனம் வருந்தினான். வேறு வழியில்லாமல் தன் வீரர்களைக் கொண்டு அவரை நாட்டை விட்டு அப்புறப் படுத்துமாறு கூறினான்.

“துருபதா, உன்னை நான் ஜெயித்து இந்த நாட்டைச் சரிபாதி உன்னோடு பகிர்ந்து கொள்கிறேன்.”

துரோணர் காம்பில்யத்தை விட்டு வெளியேறினார்.

No comments: