Saturday, March 31, 2012

என்னதான் நடக்கும், நடக்கட்டுமே!

அன்று காலை உத்தவன் அங்கே வந்து சேர்ந்தபோது பீமனும், அர்ஜுனனுமே கோட்டை வாயிலுக்குச் சென்று அவனை எதிர் கொண்டு அழைத்து வந்தனர். சம்பிரதாயப்படி குந்தியைச் சந்தித்து வணங்கி மூத்தவரான யுதிஷ்டிரரையும் பார்த்துத் தான் கிருஷ்ண வாசுதேவனின் செய்தியைச் சுமந்து வந்திருப்பதை உத்தவன் தெரிவித்தான். கிருஷ்ண வாசுதேவன் ஹஸ்தினாபுரத்துக்கு வரப் போகிறான் என்பதைக் கேட்டுக் கொண்டு யுதிஷ்டிரர் அன்றாட ராஜரீக நிர்வாகங்கள் குறித்தான ஆலோசனைகளில் கலந்து கொள்வதற்காக அரச சபைக்குப் புறப்பட்டுச் சென்றார். சாத்திரங்களில் வல்ல சஹாதேவனும் உடன் சென்றிருந்தான். அவன் இந்த ராஜநீதியிலும், நிர்வாக சம்பந்தமான விஷயங்களிலும் மற்ற சாத்திரங்களிலும் நிபுணனாக இருந்ததோடு இத்தனை சிறிய வயதில் ராஜரீக நிர்வாகக் குழுவில் முக்கியமானதொரு உறுப்பினராகவும் நியமிக்கப் பட்டிருந்தான். இந்த ராஜரீக நிர்வாகக் குழுவே யுதிஷ்டிரருக்கு அவ்வப்போது தக்க ஆலோசனைகளை வழங்கி வந்தது.

பீமனும், நகுலனும் தங்கள் தங்கள் வேலைகளைக் கவனிக்க குந்தியோ அன்றாட வீட்டு நிர்வாகங்களைக் கவனிக்கவும், அன்றைய மதிய உணவுக்கான சிறப்பு ஏற்பாடுகளைக் குறித்துச் சொல்லவும் சென்றுவிட்டாள். உத்தவன் மெல்ல அர்ஜுனனிடம் ஹஸ்தினாபுரத்தின் அப்போதைய சூழ்நிலையைக் குறித்து விசாரித்தான். அர்ஜுனனும் சிறிதும் மறைக்காமல் அனைத்தையும் உத்தவனிடம் பகிர்ந்து கொண்டான். யுதிஷ்டிரரை யுவராஜாவாக ஆக்கினாலும் கூட அவர்களுக்கு நிம்மதி என்பதோ, மனதிலே உற்சாகமோ ஏற்படவில்லை என்பதையும் குறிப்பாகத் தெரிவித்தான். உத்தவனோ பிதாமஹர் பீஷ்மரின் ஆதரவும், நாட்டு மக்களின் ஆதரவும் குறைவற இருக்கும்வரையில் ஏன் கவலைப்படவேண்டும் எனக் கேட்டான். அர்ஜுனன் அவனை நிமிர்ந்து பார்த்தான். அவன் முகத்தில் விசித்திரக் கலவையானதொரு உணர்வு.

வேறொரு அம்பை எடுத்து அதன் கூர்மையைத் தன் கைகளால் பரிசோதித்த அர்ஜுனன், அதைத் தீட்டிய வண்ணமே பேச ஆரம்பித்தான். “ஆம், எங்கள் மூத்தவர் யுவராஜாதான். இந்த நாட்டு மக்களுக்குக் கட்டளையிடக் கூடிய அதிகாரம் படைத்தவரே. ஆனால் அவருடைய கட்டளைகள் எங்கள் தந்தை வழிச் சகோதரர்கள் ஆன பெரியப்பா மகன்களிடம் சிறிதும் எடுபடவில்லை; அவர்கள் யுவராஜா யுதிஷ்டிரரையோ அவரிடும் கட்டளைகளையோ ஒரு பொருட்டாக மதிப்பதே இல்லை. மக்கள் எங்களை எவ்வளவு ஆழ்ந்து நேசித்தாலும், இவர்கள் செய்யும் காரியங்களும் போடும் திட்டங்களும் எங்களைப் படுகுழியில் தள்ளிவிடும் போல் உள்ளன. அவர்கள் எங்களை அடியோடு அழிக்க நினைக்கின்றனர்.” ஒரு சிரிப்போடு சொன்ன அர்ஜுனனைக் கூர்ந்து கவனித்தான் உத்தவன்.

அவனால் அர்ஜுனனின் இந்தச் சிரிப்பைக் கண்ணனின் சிரிப்போடு ஒப்பிடாமல் இருக்க முடியவில்லை. ம்ம்ம்ம்?? அர்ஜுனனும் கண்ணனும் ஒரே மாதிரிச் சிரிக்கின்றார்களே?? இல்லை; இல்லை. ஒரு வித்தியாசம் இருக்கிறது. ஆம், கண்ணனின் புன்னகை மனதை மயக்குவதோடு அல்லாமல் அனைவரின் இதயத்தையும் கவரும்; இல்லை; அது கூடச் சொல்ல முடியாது. அனைவரின் இதயத்தையும் வெல்லும் தன்மையுடையது. அர்ஜுனனின் சிரிப்போ கண்களைக் கவர்வது என்னவோ உண்மைதான்; அதில் நட்பும் தெரிகிறது தான். ஆனால் கண்ணனின் புன்னகையை விட அந்த மாசு மருவில்லாச் சிரிப்பை விட இதயத்தின் ஆழத்தில் சென்று நமக்கு நம்பிக்கையையும், உறுதியையும், பாதுகாப்பையும் கொடுக்கும் புன்னகையை விட இந்த அர்ஜுனனின் புன்னகை பல மாற்றுக் குறைவுதான்.

அர்ஜுனன் இது எதையும் அறியாதவனாகத் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தான். உத்தவன் உடனே, “ உங்கள் ஐவரால் குரு வம்சத்திற்கு எவ்வளவு பெருமை சேர்ந்திருக்கிறது என்பதை அறிவாய் அல்லவா?? தன்னுடைய நியாயமான நேர்மையான வழிகளா யுதிஷ்டிரனும், பீமனும், நீயும் உங்கள் திறமையாலும், வலிமையாலும், மூத்தவனை மதிக்கும் பண்பாலும், நகுலன் குதிரைகளைப் பழக்குவதிலும், உங்களோடு ஒத்து இருப்பதிலும், “ உத்தவன் பேசுகையில் அர்ஜுனன் குறுக்கிட்டு, “அதே போல் சஹாதேவன் இந்த இளம் வயதில் சாத்திரங்களைப் பூரணமாக அறிந்திருப்பதோடு எங்கள் அனைவருக்கும் கட்டுப்பட்டு இருப்பதிலும், எங்கள் ஐவரின் ஒற்றுமையும், பலமும் குருவம்சத்துக்கு மேன்மேலும் பெருமையைத் தேடித் தரும் என்பதில் சந்தேகமே இல்லை.” உத்தவன் நகுலனையும், சஹாதேவனையும் விட்டுவிட்டதில் அர்ஜுனனுக்கு இருந்த வருத்தத்தை அவன் புரிந்து கொண்டான். தன் மாற்றாந்தாயின் மகன்களாக இருந்தாலும் அவர்களைத் தன் சொந்த சகோதரர்களாகவே அவன் மட்டுமின்றி மற்ற இருவரும் கருதுவதையும் புரிந்து கொண்டான்.

No comments: