Thursday, November 14, 2013

வென்றது யார்? துரியோதனனா? பானுமதியா?

“பொய் சொல்கிறாயா?  நீ ஏன் போகிறாய் என்பதை நான் சொல்லட்டுமா?” ஓங்கி அவள் கன்னத்தில் ஓர் அறை கொடுத்தான் துரியோதனன்.  “பொய்யா சொல்கிறாய்? திரெளபதியிடம் என்னைப் பற்றிய அவதூறான தகவல்களைச் சொல்லி என் மேல் அவளுக்கு ஈர்ப்பு ஏற்படக் கூடாது எனக் கண்ணனிடம் கேட்டுக் கொள்ளப் போகிறாய்!  உண்மையா, இல்லையா?  ஆஹா, இந்தச் சின்னச் சின்னஞ்சிறு தங்கை ஹஸ்தினாபுரத்தின் மஹாராணியாக வேண்டும் என்று திட்டம் போட்டு விட்டாள்.  அதற்கான உதவியைப் பெறுவதற்காக அவள் பெரியண்ணனிடம் செல்கிறாள்.  உண்டா, இல்லையா! சொல், உண்மையைச் சொல்!” ஆவேசத்துடன் கத்தினான் துரியோதனன். பானுமதி அப்படியே படுக்கையில் சுருண்டு விழுந்து விட்டாள். பொய் சொல்லிப் பழக்கமே இல்லாத அவளுக்கு இந்தக் கேள்விகளுக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை.

பழி வாங்கும் அசுரனைப் போல் அவளெதிரே வந்து நின்று கொண்டான் துரியோதனன்.  அவள் தோள்களை இறுகப் பிடித்து, முறுக்கித் தன் பக்கம் திருப்பினான் அவளை.  “சொல், என்னிடம் உண்மையை!  எதற்காக நீ அங்கே போகவேண்டும் என்கிறாய்?  என்றேனும் ஒரு நாள் இந்த ஹஸ்தினாபுரத்தின் மஹாராணியாகி விடலாம் எனக் கனவு காண்கிறாய் நீ! ஹூம்!  கவலையே படாதே!  திரெளபதியை நான் மணக்கிறேனோ இல்லையோ! அதை விடு!  ஆனால் நீ  மட்டும் ஹஸ்தினாபுரத்தின் மஹாராணியாகாமல் நான் பார்த்துக் கொள்கிறேன்!  நடத்தை கெட்டவளே! சீ!”  துரியோதனனின் கடைசி வசைச்சொல்லைக் கேட்ட பானுமதியின் உள்ளம் உடைந்தே போனது.

 “தயவு செய்யுங்கள், ப்ரபு,  ஆர்ய புத்திரரே, நீங்கள் சொல்லாலும், செய்கைகளாலும் என்னைப் புண்படுத்திக் கொண்டிருக்கிறீர்கள்.”  அழுது கொண்டே கெஞ்சினாள் பானுமதி.  ஆனாலும் துரியோதனன் அவள் தோள்களை நசுக்கிப் பிழிவதை நிறுத்தவே இல்லை.

“நீ செத்தாலும் எனக்குக் கவலை இல்லை!”  என்றான் அலட்சியமாக.  பானுமதியால் உடல் வலியைப் பொறுக்கவே முடியவில்லை.  மெல்லிய அவள் தேகம் காற்றில் ஆடும் பூங்கொடியை விட மோசமாக நடுங்கியது.  தன் தைரியத்தை எல்லாம் வரவழைத்துக் கொண்டு துரியோதனனைப் பார்த்தாள்.  கிட்டத்தட்ட சவால் விடும் தோரணையில் அவனைப் பார்த்தாள்.

 “ஆம், கொன்று விடு, கொன்று விடு. முதலில் என்னைக் கொல் பார்க்கலாம். பின்னர் நீ உன் அருமை மகனைக் கொன்றதை உணர்வாய்!” நடுங்கும் குரலில் அழுத வண்ணம் கூறினாள் பானுமதி.  துரியோதனனுக்கு பானுமதி சொன்னதின் உண்மையும், நிதரிசனமும் சில விநாடிகள் உறைக்கவே இல்லை.   சற்று யோசித்த பின்னரே அவள் கூறிய செய்தியின் சிறப்பான முக்கியத்துவம் புரிந்தது.   உடனே அவள் மீதிருந்த தன் கைகளை எடுத்துக் கொண்டு அதே கைகளால் தூக்கத்திலிருந்து விழிப்பவன் போல் கண்களைத் தேய்த்துவிட்டுக் கொண்டான்.  பானுமதி கூறிய செய்தியின் தாக்கம் அவனைச் சென்றடைந்தது.  சில விநாடிகளில் முழுதும் மயக்கம் தெளிந்தவனாகக் காணப்பட்டான்.

“ஓஹோ, நீ குழந்தையைச் சுமக்கிறாயா?”  அவன் குரலே இப்போது மாறி இருந்தது.  பானுமதியின் சகோதரியான , அவன் முதல் மனைவியும்  அவள் வயிற்றில் சுமந்திருந்த அவன் குழந்தையும்  அந்தக் குழந்தையை அவள் பிரசவிக்கும்போதே இறந்துவிட்டனர்.  அதன் பின்னர் பானுமதியை அவன் மணந்து இருவருடங்கள் ஆகியும் அவள் குழந்தை உண்டாகவே இல்லை. தாமதம் ஆகிக் கொண்டிருந்தது.  அவன் நீண்ட நாட்களாக ஒரு மகனுக்காகக் காத்திருக்கிறான்.  அந்த மகன் இப்போது வரப் போகிறானா?  “நிச்சயமாகத் தான் சொல்கிறாயா?  இது உண்மை தானா?” என்று மீண்டும் அவளிடம் கேட்டான் துரியோதனன்.   தன் உடல் நடுக்கம் இன்னமும் குறையாமல் காணப்பட்ட பானுமதி, இன்னமும் பயம் நீங்காமல், அதே சமயம் சற்றே பணிவுடன் அவனிடம், “ஆம் , இது உண்மை தான்!”  என்றாள்.

“ஏன் என்னிடம் முன்னரே சொல்லவில்லை?”  பொறுமையில்லாமல் மீண்டும் துரியோதனன் அவளிடம் கேட்டாலும், குரலில் கோபம்  தெரியவில்லை.  “எனக்கு நிச்சயம் ஆக வேண்டாமா?  அதற்கு முன்னர் உங்களிடம் எப்படித் தெரிவிப்பது?” என்றாள் பானுமதி.

 “சரி, இப்போது நிச்சயம் தானே?” துரியோதனன் கேட்க, அதை ஆமோதித்தாள் பானுமதி.  தன்னிலைக்கு முழுதும் வந்து விட்ட துரியோதனன் அப்போது தான் நினைவுக்கு வந்தவன் போல அவளைப் பாதுகாப்பு உணர்வு தெரியும் வண்ணம் அணைத்துக் கொண்டான்.  “சரி, சரி, அழாதே, அழுகையை நிறுத்து.  உன் அழுகை குழந்தைக்குப் பாதிப்பை ஏற்படுத்தும்.  ஆனால் இப்படிப் பட்ட முட்டாள் தனமான காரியங்களை நீ ஏன் செய்கிறாய்?  அது தான் எனக்குப் புரியவே இல்லை.  கிருஷ்ண வாசுதேவனிடம் போய், பாஞ்சால இளவரசி என்னைத் தன் மணமகனாய்த் தேர்ந்தெடுப்பதைத் தடுக்கத் தானே  அவனிடம் கேட்கப்போகிறாய்?”


துரியோதனனின் இந்த மாற்றத்தினால் பானுமதிக்குக் கொஞ்சம் தைரியம் வந்தது.  மீண்டும் அவனைப் பார்த்து அவன் தோள்களைக் கட்டிக் கொண்டு தொங்கிய வண்ணம் பதிலளித்தாள்.  அதுவும் கொஞ்சலாகக் கிசு கிசுவென்ற குரலில் அவனுக்கு மட்டுமே கேட்கும்படியாக:”  ஆர்யபுத்திரா, நான் உங்கள் மகன் ஹஸ்தினாபுரத்தின் சக்கரவர்த்தியாக வேண்டும் என்று விரும்புகிறேன்.” அவள் இதைச் சொல்கையில் அவள் மனதில் எவ்விதமான வேறுபாடான உணர்வுகளும் இல்லை என்பதைத் தெரியும்படியாகவே சொன்னாள்.  அவளின் இந்த வெகுளித்தனமான நடவடிக்கையில் கவரப் பட்ட துரியோதனன் அவளை மிகுந்த அன்புடன் அணைத்துக் கொண்டான்.

“ஆம்,  உன் மகன் தான் இந்த ஹஸ்தினாபுரத்தின் சக்கரவர்த்தியாவான்.  அது திரெளபதியை நான் மணந்தாலும், மணக்காவிட்டாலும் நிச்சயமாய் உன் மகனே அடுத்த சக்கரவர்த்தி.  அதைக் குறித்து நீ கவலைப்படாதே.  பரத குலத்திலேயே முதல்வனாகச் சொல்லும்படி பெயரெடுப்பான்.  ஆனால் நான் திரெளபதியைக் கட்டாயமாக சுயம்வரத்தில் வென்றாக வேண்டும்.   உனக்குத் தெரியுமா?  இப்போது இருப்பதை விடவும் பத்து மடங்கு பலம் உள்ளவனாக நான் ஆகிவிடுவேன், திரெளபதி மட்டும் எனக்கு மாலையிட்டால் துருபதனின் படைபலமும் சேர்ந்து விட்டால், நானே இந்த ஆர்யவர்த்தத்தில் பலமுள்ள அரசனாவேன்! ”

பானுமதிக்கு மீண்டும் தன் விம்மலை அடக்க முடியவில்லை. கஷ்டப்பட்டுச் சமாளித்தாள்.  அவள் விதி முடிந்து விட்டது.  துரியோதனன் என்ன வேண்டுமானாலும் இப்போது சொல்லுவான்.  ஆனால் பாஞ்சால இளவரசியை மட்டும் அவன் மணமுடித்து வந்துவிட்டான் எனில், ம்ஹ்ஹும் ஒரு வித்தியாசமான துரியோதனனையே அவள் காண முடியும். ஆனாலும் தவிர்க்க இயலாத இந்த நிகழ்வை அவள் ஏற்றே ஆகவேண்டும். பானுமதி தன்னைத் தானே சமாதானப் படுத்திக்கொள்ள வேண்டும். ஏனெனில் அவள் அவ்வளவுக்கு துரியோதனனை விரும்புகிறாள். கண்மூடித்தனமான காதலுடன் இருக்கிறாள்.  அவனுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்காத எதையும் அவள் செய்ய விரும்பவில்லை;  விரும்பவும் கூடாது. அவன் மகிழ்ச்சியே அவளுக்கும் மகிழ்ச்சி.


 “ஆர்ய புத்திரரே, உங்கள் கட்டளைக்கு நான் கீழ்ப்படிகிறேன்.  நான் புஷ்கரம் செல்லவில்லை.”  என்றாள் மிகவும் பணிவாக. துரியோதனன் உடனே புன்னகை புரிந்தான்.  ஆனால் ஒரு சந்தேகம் உடனே அவனுக்கு வந்துவிட்டது.  “ஆனால் நீ பாட்டியார் மாட்சிமை பொருந்திய மஹாராணி சத்யவதியிடம் அல்லவோ அநுமதி பெற்றிருக்கிறாய்? அவள் அநுமதி கொடுத்தும் நீ செல்லவில்லை எனில்?  அவள் என்ன நினைப்பாள்? என்னையன்றோ தவறாய் நினைப்பாள்?”  என்று கேட்டான்.  அதற்கு பானுமதி, “ நான் பாட்டியாரிடம் சென்று என் உடல் நிலை அவ்வளவு தூரப் பிரயாணம் செய்ய லாயக்கு இல்லை என்று சொல்கிறேன்.  ஒரு பெண்ணால் மற்றொரு பெண்ணின் உடல் நிலையைக் குறித்துப் புரிந்து கொள்ள முடியும். பாட்டியார் புரிந்து கொள்வார்.”  என்றாள்.

இப்போது துரியோதனன் படுக்கையிலிருந்து எழுந்து கொண்டு தன் கிரீடத்தையும் மற்ற அரச உடைகள், சம்பிரதாயமான ஆபரணங்கள் அனைத்தையும் கழற்றி ஒவ்வொன்றாக பானுமதியிடம் கொடுக்க அவள் அதை வாங்கி எப்போதும் பத்திரமாக வைக்கும் இடத்தில் வைத்து பத்திரப்படுத்தினாள்.  சிறிது நேரம் இருவரும் ஒன்றுமே பேசவில்லை.




10 comments:

sury siva said...

பானுமதி என்னும் ஒரு புகழ் பெற்ற நடிகை எம்.ஜி.ஆர். உடன் மாசிலா உண்மைக்கா தலே பாடியிருக்கிறாள்.

சிவாஜி சாருடன் பல படங்களிலே நடித்து இருக்கிறார்கள்.

அவர்களைப் பற்றித் தான் என்று நினைத்தேன்.

இங்கு ஏதோ துரியோதனன் பற்றி சொல்கிறீர்கள். மகா பாரதம் போல் இருக்கிறது. சீரியலா ?

இங்கேயும் ஒரு பானுமதியா ?

அது சரி , என்னாச்சு கடைசிலே..?


சுப்பு தாத்தா.
ஹி ...ஹி ...எனக்கும் கதை தெரியும்.

ஸ்ரீராம். said...

ஓங்கி அறைவதும், அப்புறம் அன்புடன் அணைப்பதும்.... தமிழ்ப்பட வில்லன் கெட்டான்! துரியோதனனுக்கு பானுமதியின் பணிவிடைகளைப் பற்றி விளக்கமாகச் சொல்வது புதிதாக இருக்கிறது.

வை.கோபாலகிருஷ்ணன் said...

கதையை மிகவும் ரஸித்துப் படித்தேன்.

பானுமதி மிகவும் புத்திசாலியாக இருப்பாள் போலிருக்கிறது.

பகிர்வுக்கு நன்றிகள்.

இராஜராஜேஸ்வரி said...


"வென்றது யார்? துரியோதனனா? பானுமதியா?"

தோற்றவர் வென்றார்.....!

RajalakshmiParamasivam said...

திரியோதனன், பானுமதி இருவரின் குணாதிசயங்கள் வியக்க வைக்கிறது.

sambasivam6geetha said...

வாங்க சூரி சார், தேடிப் பிடிச்சு வந்ததுக்கு நன்றி. பாரதக் கதை எல்லாருக்குமே தெரியுமே! :)

sambasivam6geetha said...

வாங்க ஶ்ரீராம், நன்றி.

sambasivam6geetha said...

வாங்க வைகோ சார், பாவப்பட்ட ஜன்மம்னா அது பானுமதி தான். :(

sambasivam6geetha said...

வாங்க ராஜராஜேஸ்வரி, நன்றி.

sambasivam6geetha said...

வாங்க ராஜலக்ஷ்மி பரமசிவம், முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.