Wednesday, March 26, 2014

க(அ)ண்ணன் காட்டிய வழியம்மா!

“சொல், பானுமதி, அதிலும் அந்த மனைவி உன்னை விட எல்லாவற்றிலும் உயர்ந்தவளாக வேறு இருப்பாள். உன்னுடைய இடத்தை அவள் பிடித்துக்கொள்வாள். “ என்றான் கண்ணன்.  பானுமதி வாயைத் திறப்பதற்குள்ளாக, ஷகுனி குறுக்கே புகுந்து, “இது ஒன்றும் பானுமதியை மட்டம் செய்வதற்கோ, அல்லது அவள் இடத்திற்கு திரெளபதியைக் கொண்டு வருவதற்கோ அல்ல வாசுதேவா!  நீ அறியாததா?  அரசகுலத்தினரின் திருமண நோக்கங்கள் முழுக்க முழுக்க ராஜரீக செயல்களையும், ராஜரீக செயல்களின் விளைவுகளையும் சார்ந்தது என்பது நீ அறியாத ஒன்றா?  அரசாங்கத்தின் நிலையான தன்மைக்காகவும், அதன் வலிமையை மேலும் பலப்படுத்தவும் இம்மாதிரித் திருமணங்கள் அரச குடும்பத்தினரிடையே சகஜம் தானே!” என்று தன் கட்சிக்கு வலு சேர்த்தான் ஷகுனி.

“நான் நன்கறிவேன் காந்தார இளவரசே, அரசர்கள், அரச குல இளவரசர்கள் ஆகியவர்களின் மனப்போக்கையும் அவர்கள் திருமணங்களைச் செய்து கொள்வதில் காட்டும் காரணங்களும் நான் நன்கறிந்தவையே. நான் ஒரு அரசனாக இல்லாதபோதும் இதை நன்கறிந்தே வைத்திருக்கிறேன்.” என்றான் கிருஷ்ணன்.  “ஆனால், காந்தார இளவரசே, என்ன தான் வலிமை வாய்ந்ததொரு ராஜ்யத்தின் ராஜகுமாரியாக இருந்தாலும் அவள் தான் மணப்பவனை விரும்ப வேண்டும் அல்லவா?  நானாக இருந்தால் என்னை விரும்புபவளைத் தான் மணப்பேன்.  அரசாங்கச் சதுரங்க விளையாட்டின் ஒரு பொம்மையாக இருக்கப் போகும் ராணியாக அல்ல. அரசியல் சதுரங்கத்தில் என் மனைவி வெட்டுப்படுவதை நான் விரும்புவதில்லை.” என்றான் கிருஷ்ணன்.

“ஆஹா, ஆஹா, நீ முற்றிலும் வித்தியாசமானவன் வாசுதேவா!  உன் மாட்சிமை நாங்கள் அறியாததா?  நீ அருமையானவன்.  அற்புதமானவன். திரெளபதியை மணந்து கொள்ள உனக்குக் கிடைத்த வாய்ப்பை நீ உதறித்தள்ளிவிட்டாய் என்பதை நாங்கள் அனைவருமே அறிவோம்.  இப்படி ஒரு மகத்தான தியாகத்தை உன்னை அன்றி வேறு யாரால் செய்ய இயலும்?” முகஸ்துதி செய்யும் தன் வழக்கத்தை விடாமல் கண்ணனையும் முகஸ்துதி செய்து பேசினான் ஷகுனி.

“திரெளபதியை என் கணவர், ஆர்யபுத்திரர், துரியோதனன் வென்று மணமுடிக்கவில்லை எனில் எனக்கு மிகவும் துக்கம் ஏற்படும். என் மனதில் மகிழ்ச்சி இருக்காது.  நான் என் கணவரின் மன மகிழ்ச்சிக்காக எதையும் செய்யத் தயாராக இருக்கிறேன். அவர் சந்தோஷமே என் சந்தோஷம். அண்ணா, என் அருமை அண்ணா, தயவு செய்து என்னை துக்கத்தில் ஆழ்த்தி விடாதீர்கள்.” என்று கெஞ்சினாள் பானுமதி. “எனக்கு அது தெரியாதா, நான் அறிவேன் பானுமதி!  உன்னை மகிழ்ச்சியாக வைத்திருக்க நான் எது வேண்டுமானாலும் செய்வேன். “விவரிக்க இயலா ஓர் உணர்வு கிருஷ்ணனின் குரலில் தொனித்தது.  அதிலிருந்து அவன் என்ன பொருளில் மேற்கண்ட வார்த்தைகளைச் சொல்கிறன் என்பது புரிந்து கொள்ள இயலவில்லை. அதற்குள் மீண்டும் ஷகுனி இடையே புகுந்து, “ஆமாம், ஆமாம், பானுமதி, நீ கவலைப்படாதே!  உனக்காகக் கிருஷ்ண வாசுதேவன் எதையும் செய்வான். உன்னை சந்தோஷமாக வைத்திருக்க அவன் உதவி செய்வான்.  யுவராஜாவுக்காக திரெளபதியை ஜெயிக்கவும் அவன் உதவுவதாக வாக்களிப்பான். “ என்று முடித்தான்.

கண்ணன் உடனடியாக ஷகுனியைப் பார்த்து, “தயவு செய்து என்னைத் தவறாக நினைக்காதீர்கள் காந்தார இளவரசரே!  என்னால் ஒரு வாக்குறுதியையும் இப்போது அளிக்க இயலாது.  அதிலும் பாஞ்சால இளவரசியை யுவராஜா துரியோதனனுக்குப் பெற்றுத் தருவதாக என்னால் உறுதி கூற இயலாது. என்னால் முடிந்தது எல்லாம் துரியோதனனின் தகுதிகளைக் குறித்து அங்கே தெரிவிப்பது ஒன்று மட்டுமே.”

“நீ மட்டும் அதை வற்புறுத்திச் சொன்னால் பாஞ்சால இளவரசி கட்டாயமாக துரியோதனனைத் தேர்ந்தெடுப்பாள்.” என்று ஷகுனி இடை மறித்தான். “சுயம்வரத்தில் திரெளபதியால் தேர்வு செய்து கொள்ள அனுமதி கிட்டவில்லை எனில், வழக்கம் போல் ஏற்கெனவே தேர்ந்தெடுக்கப்பட்டவனுக்கு மாலையிட வேண்டும் என்று நிர்ப்பந்தம் இருந்தால் தவிர,” என்ற கிருஷ்ணன் மேலும் ,” ஒரு வேளை சுயம்வரத்தில் போட்டி ஏதேனும் இருந்தால்??? அப்போது துரியோதனன் அதை வென்றே ஆகவேண்டும்.” என்று முடித்தான்.  “ஓஹோ, அப்படியா?  அப்படி எனில் சுயம்வரத்தில் போட்டித் தேர்வு வைக்கப் போகிறார்களா?  உறுதி தானா?” என்று ஷகுனி கேட்டான்.  “துருபதன் என்ன செய்யப் போகிறான் என்பது எவராலும் அறிய முடியா ஒன்று.” என்றான் கிருஷ்ணன்.

“துரியோதனன் எவராலும் தவிர்க்க இயலாத ஒரு மாபெரும் வீரன். ஆயுதப் பயிற்சிகளில் சிறந்தவன். அப்படிப் போட்டி என்று இருந்தால் அவனே நிச்சயமாக அதில் வெல்வான்.” ஷகுனி தீர்மானமாகச் சொன்னான்.   “போட்டி என ஒன்றிருந்தால், துரியோதனன் அதில் ஜெயிப்பான் என நானும் நம்புகிறேன்.” என்றான் கிருஷ்ணன்.

“ஆனால், அண்ணா, உங்களால் முடிந்ததை நீங்கள் செய்வீர்கள் தானே?” மிகவும் பரிதாபமாகக் கேட்டாள் பானுமதி. அவள் நிலையைப் பார்க்கவே சகிக்கவில்லை.  இதைச் சொல்கையில் ஓரக் கண்களால் ஷகுனியைப் பார்த்துக் கொண்டாள்.  ஏனெனில் ஷகுனியின் கண்கள் அவளையே நோட்டம் விட்டுக் கொண்டிருந்தன.  பானுமதியின் மேல் ஷகுனிக்கு நம்பிக்கை இல்லை என்பதை அந்தக் கண்கள் காட்டிக் கொடுத்தன.  பானுமதி தன் உள்ளத்து உணர்வுகளுக்கெல்லாம் ஒரு சவுக்கடி கொடுத்து அவற்றைக் கொன்று புதைத்துவிட்டுத் தான் இவற்றுக்குத் தயாராக வந்திருக்கிறாள் என்பதையும் ஷகுனி எவ்வாறோ அறிந்திருந்தான்.  ஆகவே அவள் கொஞ்சம் வேதனை கலந்த பயத்துடன், கண்ணனிடம், “எனக்குச் சத்தியம் செய்து கொடு சகோதரா, உன்னால் முடிந்ததைச் செய்வேன் என்று சத்தியம் செய்!” என்று கூறிக்கொண்டே தன் கரங்களை நீட்டினாள்.

“என் அருமைத்தங்கையே, என்னால் முடிந்ததைச் செய்கிறேன்.  கவலைப்படாதே!” என அவளுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் சிரித்த வண்ணம் கண்ணன் கூறினான்.  பின்னர்  மேலும் அவளிடம், “காந்தார இளவரசர் தான் என்னிடம் சந்தேகம் கொண்டிருக்கிறார்.   நான் உனக்கு உதவுவேனா, மாட்டேனா என்பதே சந்தேகமாக இருக்கிறது அவருக்கு.  நான் உனக்கு ஒரு உறுதிமொழி கொடுக்கிறேன் பானுமதி.  துரியோதனன் காம்பில்யத்துக்கு வந்ததும் நானே அவனை திரெளபதியைப் பார்க்க நேரில் அழைத்துச் செல்கிறேன்.  இது போதுமா?  இப்போது உனக்குத் திருப்தியா?   ஆனால் ஒரு விஷயம் இப்போதே சொல்லி விடுகிறேன்.  இந்தத் திருமணத்திற்காகப் போட்டி ஏதேனும் ஏற்பாடு செய்திருந்தார்களானால், துரியோதனன் அதில் தேர்ச்சி பெற்றால் தான் திரெளபதியை மணக்கலாம். அதற்கு நான் பொறுப்பல்ல!” என்றான் கண்ணன்.

ஷகுனி சிரித்தான்.  தன்னுடைய அபாரமான வாக்கு வன்மையில் அவனுக்கு மிகுந்த நம்பிக்கை இருந்தது.  தான் சொன்னால் அந்த இனிமையான சொற்களில் மயங்காதவர் எவர் என்னும் எண்ணம் கொண்ட அவன், கண்ணனிடம், “நீ மட்டும் என்னை அவளிடம் அழைத்துப் போய்விடு வாசுதேவா!  பிறகு பார்!  அதோடு யுவராஜா துரியோதனனையும், அவன் வீரத்தையும் குறித்தும் நீ திரெளபதியிடம் சிறப்பாகப் பேசி விடு.  அதன் பின்னர் எல்லாம் சரியாகிவிடும்.  அந்தப் பெண் திரெளபதி தானாகவே துரியோதனனைத் தேர்ந்தெடுத்துவிடுவாள்.  பானுமதி, உனக்கு நல்லதொரு அண்ணன் கிடைத்துள்ளான்.  மிகவும் அன்பானவனாகவும், பெருந்தன்மை உள்ளவனாகவும், நேர்மையானவனாகவும் உள்ளான்.  இப்படி ஒரு அண்ணன்கிடைக்க நீ கொடுத்து வைத்திருக்கிறாய். துரியோதனனுக்கும் மிகவும் நல்ல நண்பனாக அமைவான்.  இவனை விட நல்ல நண்பர்கள் துரியோதனனுக்கும் கிடைக்க மாட்டார்கள்.  வாசுதேவா, உன் தங்கையின் வாழ்க்கை இப்போது உன் கைகளில்.  அவள் சந்தோஷம் உன் கைகளில்!” என்றான் ஷகுனி.

“காந்தார இளவரசரே, பானுமதியின் சந்தோஷத்தைக் குறித்து துரியோதனனுக்குத் தான் முதலில் அக்கறை இருக்க வேண்டும்.  அவளை நான் தங்கையாக வரித்ததால் ஒரு அண்ணனாக எனக்கும் அந்தக் கடமை உண்டு.  “ ஷகுனியிடம் பேசினாலும் கண்ணன் கண்கள் பானுமதியையே அன்போடும், பாசத்தோடும் உன்னை நான் காப்பாற்றுகிறேன் என்னும் வாக்குறுதியோடும் பார்த்து ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தன.  “இது உன் பெருந்தன்மையைக் காட்டுகிறது வாசுதேவா,” என்றபடியே கிளம்பத் தயாராக எழுந்து நின்றான் ஷகுனி.  பின்னர் கண்ணனுக்குத் தன் வணக்கங்களைத் தெரிவித்து விட்டுத் தன் மனைவியும், பானுமதியும் பின் தொடர அங்கிருந்து வெளியேறினான்.  அவர்கள் செல்கையில் பானுமதி மட்டும் கொஞ்சம் நின்று கண்ணனைத் திரும்பிப் பார்த்தாள்.  அவள் கண்கள் கண்ணீரால் நிறைந்திருந்தன.   அவளையே பார்த்துக் கொண்டிருந்த கண்ணன், சற்று தூரம் அவர்கள் சென்றதும், “அருமைத் தங்காய், நான் இப்போதெல்லாம் அனைத்தையும் மறந்து விடுகிறேன்.  அதிலும் நன்றிக்கடனைச் செலுத்துவதில் மறக்கலாமா?  இங்கே வா, உனக்காக ஒரு பரிசு வைத்திருக்கிறேன்.” என்று பானுமதியை அழைத்தான்.  பானுமதி ஓட்டமாய் ஓடி வந்தாள்.

கண்ணன் தன் கைகளில் போட்டிருந்த ஆபரணம் ஒன்றைக் கழட்டினான். சற்றே முன்னால் வந்து பானுமதியின் கைகளைப் பிடித்த வண்ணம் அதைப் போட்டுவிடக் குனிந்தான்.  குனிந்து அதை முடுக்கும்போது, அவள் காதுகளுக்கு மட்டுமே கேட்கும் மெல்லிய குரலில், “கவலைப்படாதே, நான் துரியோதனன் திரெளபதியை மணக்க முடியாவண்ணம் பார்த்துக் கொள்வேன்.  அவள் அவனுக்குக் கிடைக்கவே மாட்டாள்.” என்றான்.  இதைச் சொல்லிய வண்ணம் கங்கணத்தைப் போட்டு முடித்த கண்ணன் தலை நிமிர்ந்து பானுமதியைப் பார்த்தான்.  அவள் முகமே சந்தோஷத்தால் விகசித்துக் கிடந்தது.  அவள் கண்கள் முழுவதும் நன்றி வழிய கண்ணனைப் பார்த்தாள்.   பின் திரும்பிச் சென்றுகொண்டிருந்த ஷகுனியைப்போய்ச் சேர்ந்தாள்.

இரண்டு நாட்களில் பெளர்ணமி வந்தது.  அன்று பலராமன் ஒரு மாபெரும் படையோடு வந்து கண்ணனோடு சேர்ந்து கொண்டான்.  அவனுடன் யாதவத் தலைவர்கள் மட்டுமில்லாமல் நாகர்களின் தலைவர்கள், வீரர்கள் என வந்து சேர்ந்திருந்தனர்.  புஷ்கரத்தைப் போரிட்டுக் கைப்பற்றும் ஆவலில் வந்திருந்தனர்.  ஆனால் இங்கே வந்தாலோ, செகிதனா அங்கே வழக்கம் போல் ஆட்சி செய்து கொண்டிருக்கிறான்.  கிருஷ்ணனோ துரோணரின் விருந்தோம்பலில் திளைத்துக் கொண்டிருந்தான்.  இதை எல்லாம் பார்த்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.  என்றாலும் எந்தப் பக்கமும் ரத்தம் சிந்தாமல் கண்ணன் அடைந்த வெற்றி இருபுறமும் கொண்டாடப் பட்டது. எங்கும் ஒரே ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் தான்! ஒருவரை ஒருவர் கட்டி அணைத்து முகமன்கள் கூறிக் கொண்டு ஆடுவதும், வாத்தியங்களை முழக்குவதுமாக அங்கே கோலாகலமாக இருந்தது.  வீரதீர சாகசக் கதைகளைக் கூறும் நாட்டுப் பாடல்களைப் பாடுவோர் அவற்றைப் பாடி மகிழ்விக்க, மாலை வேளைகளில் நாட்டியங்களும் நடந்தன.   இரண்டு நாட்களுக்கெல்லாம் யாதவ அதிரதர்களோடும், பலராமனோடும்,இளவரசன் மணிமானுடைய படை வீரர்களோடும், கிருஷ்ணன் காம்பில்யத்தை நோக்கிக் கிளம்பினான்.  யாதவப் படைகளுக்கு பலராமனும், நாகர்களின் படைகளுக்கு மணிமானும் தலைமை வகித்தனர்.  அனைவரும் திரெளபதியின் சுயம்வரத்தில் கலந்து கொள்ளச் சென்றனர்.  அவர்கள் விடை பெற்றுச் செல்வதைப் பார்த்துக் கொண்டிருந்த துரோணாசாரியாருக்கு இந்த எளிமையான, குழந்தை போலிருக்கும் இளைஞன் கைகளில் தான் ஆர்யவர்த்தத்தின் எதிர்காலமே இருக்கிறது என்பது தெள்ளத் தெளிவாகப் புரிந்தது.

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

/// இனிமையான சொற்களில் மயங்காதவர் எவர் என்னும் எண்ணம் /// இந்த ஆணவம் எல்லாம் கண்ணனுக்கு முன் செல்லுபடியாகுமா...?

ஸ்ரீராம். said...

ஷகுனிக்குத்தான் தன பேச்சுவன்மை மீது என்ன நம்பிக்கை? லேசான தலைக்கனமும் கூட! பாவம் பானுமதி. அப்பாவி தமிழ்ப்படக் கதாநாயகி போல இருக்கிறாள்!