Wednesday, September 24, 2014

பீமன் பயண ஏற்பாடுகளைச் செய்கிறான்!

இருவரும் துருபதனைப் பார்க்க வேண்டி அங்கிருந்து அகன்றதும் பீமன் சற்று நேரம் காசி ராஜகுமாரியையே பார்த்து அவள் தைரியத்தை நினைத்து வியந்து கொண்டிருந்தான். அவள் பாதங்கள் சிறியனவாயும், அழகாயும் தாமரை மொட்டுக்களைப் போலவும் காட்சி அளித்தன. தன்னை உலுக்கிக் கொண்டான் பீமன். ஆஹா, நான் எவ்வளவு பொல்லாதவன்!  இப்போது தான் திரௌபதியுடன் திருமணம் முடிந்திருக்கிறது.  அதை மறந்து விட்டு…… இன்னொரு பெண்ணைக் குறித்து நினைப்பது…….ஆஹா, அவள் பானுமதியின் தங்கையல்லவோ!  பானுமதி துரியோதனன் மனைவி. ஆஹா, அக்கா, தங்கைகளை நாங்கள் இருவரும் முறையே திருமணம் செய்து கொண்டிருந்தால் நல்ல வேடிக்கையாக இருந்திருக்கும்.  ஒரு பெருமூச்சுடன் பீமன் அங்கிருந்து நகர்ந்தான்.


தன் சகோதரர்களைப் பார்த்ததும், அவர்களிடம் துருபதன் தங்களுக்கு அளிக்கவிருக்கும் பரிசுகளைப் பற்றி பீமன் கூறினான்.  அனைவரும் மனம் நெகிழ்ந்தனர்.  70 யானைகள், நூறு ரதசாரதிகள், போர் வீரர்கள், 400 கறவைப் பசுக்கள், 200 குதிரைகள், அத்துடன் சேர்ந்து பராமரிப்புப் பணிக்கான ஊழியர்கள், மற்றும் படை வீரர்கள், தேவையான சாமக்கிரியைகள், தங்கம், வெள்ளி, ரத்தினங்களால் ஆன ஆபரணங்கள், தங்கக் கட்டிகள், வெள்ளியிலான பாத்திரங்கள்.  இன்னும் கணக்கில்லா சீர் வரிசைகள்.



“மிக அதிகம், மிக அதிகம்,  ஆம் உண்மையிலேயே இவை அதிகம்.” என்றான் யுதிஷ்டிரன்.  “ஆஹா, பீமா, நீ கேட்டாயா இவற்றை எல்லாம்?”


“இல்லை, இல்லை;  நான் கேட்கவே இல்லை.” அவசரம் அவசரமாக மறுத்தான் பீமன்.  “அரசர் தான் இவற்றை எல்லாம் அளித்தே தீருவேன் எனப் பிடிவாதம் பிடித்தார்;  வேறு வழியின்றி நான் ஒத்துக் கொண்டேன்.”


“வற்புறுத்தினாரா?  உண்மையாகவா?  பீமா, நீ சொல்வதெல்லாம் உண்மைதானா?”


“அண்ணாரே, என் பெரிய அண்ணாரே!  உமக்கு என்னைப் பற்றித் தெரியாதா?  நான் பிறந்ததில் இருந்து இன்று வரை ஒரு சின்னப் பொய் கூடச் சொன்னதில்லையே!” அர்ஜுனனைப் பார்த்துக் கண்ணடித்துச் சிரித்தான் பீமன்.  “நான் சொல்வதெல்லாம் உண்மைதான்;  இல்லையென்றால் நான் சொன்னதும் அவை உண்மையாகிவிடும். என் அண்ணாவே, இப்போது புரிந்ததா?”


“அதெல்லாம் சரியப்பா!  இவ்வளவு பெரிய குழுவை வைத்துக்கொண்டு நாம் என்ன செய்யப் போகிறோம்? நமக்கு எதற்கு இவ்வளவு ஆட், படைகள்?” யுதிஷ்டிரனுக்கு என்ன முயற்சித்தும் பீமனின் விளையாட்டுத் தனத்தைப் போக்கவே முடியவில்லையே என்னும் கவலையும் அதிகம் இருந்தது.  பீமனோ இன்னும் விளையாட்டாகவே பேசினான்.


“அது என்னோட ரகசியம், அண்ணாரே!  ஹஸ்தினாபுரப் பயணத்துக்குப் பாதுகாவலனாக நீங்கள் என்னை நியமித்துவிட்டீர்கள் அல்லவா?  அத்துடன் விடுங்கள்!  சுகமான பயணத்துக்கு வேண்டிய அனைத்து ஏற்பாடுகளையும் பண்ணி வைத்துள்ளேன்.  நீங்கள் அவற்றைத் திரும்ப ஒருமுறை பார்க்கவேண்டிய அவசியமே இல்லை.”


“என்ன முடிவு செய்திருக்கிறாய் பீமா?”


“நாம் ஹஸ்தினாபுரத்துக்குச் செல்ல வேண்டிய வழியைத் தேர்ந்தெடுத்திருக்கிறேன்.  யானைகள் நம் பயணத்தில் முன்னிலை வகிக்கும்.  நான் அனைவருக்கும் முன்னால் ஒரு தலைவனாகச் செல்லப் போகிறேன்.  காலாட்படை வீரர்களோடு கால்நடைகள் வரும். அதன் பின்னர் வரும் குதிரைப்படையை நகுலனின் பொறுப்பில் விட்டிருக்கிறேன்.  அவன் அதைக் கவனித்துக் கொள்வான்.  அதன் பின்னர் அதிரதர்கள், மஹாரதர்கள் அனைவரும் அர்ஜுனனின் பொறுப்பில் வருவார்கள்.  அதன் பின்னர் உயர்ந்ததொரு ஆசனத்தில் அமர்ந்த வண்ணம் நீரும், திரௌபதியும் புதுமணத் தம்பதிகளாகத் தொடர்வீர்கள்.  உங்களோடு சித்தப்பா விதுரரும் வருவார்.  அதன் பின்னர் மற்ற அரசர்கள், இளவரசர்கள், அவர்களின் பரிவாரங்கள் பலராமர் தலைமையில் பின் தொடர்வார்கள்.  பின்புறப் படைகள் அனைத்தும் சஹாதேவன் பொறுப்பில் இருப்பார்கள்.  ஹாஹா, சஹாதேவன் மனிதப்படைக்குப் பொறுப்பேற்பதற்குப் பதிலாகச் சீர் வரிசைகளையும் மற்றப் பொருட்களையும் சுமந்து வரும் மாட்டு வண்டிகள், ஒட்டக வண்டிகள் ஆகியவற்றைக் கவனிக்கும் பொறுப்பில் இருப்பான்.”


“அது சரி, கிருஷ்ணன்?  அவன் என்னவானான்?  நீ அவனை மறந்தே விட்டாயே?”அர்ஜுனன் கேட்க, “ என்னவாயிற்று எனக்கு?” என்று கேட்ட வண்ணம் உள்ளே நுழைந்தான் கிருஷ்ணன். மஞ்சள் வண்ணப் பட்டுடுத்தி, தலையில் மயில் பீலியைச் சூடி இருந்த கிருஷ்ணன் வழக்கமான அமைதியான போக்குடன் நிதானமாகவே காணப்பட்டான்.  யுதிஷ்டிரன் அவன் பக்கம் திரும்பிப் பார்த்துப் புகார் சொல்லும் தோரணையில், “கோவிந்தா, பீமனை இந்தப் பயணத்தை ஏற்பாடு செய்யும்படி சொன்னேன்.  அவன் துருபதனிடம் போய்க் கொள்ளை அடித்துக் கொண்டு வந்திருக்கிறான்.  துருபதனின் படை வீரர்களில் பாதிக்கும் மேல் நம்முடன் வருகின்றனர்.  ஆனால் உன்னை மறந்துவிட்டான் பார்!”


ஆகாயத்தை நோக்கி இரு கைகளையும் தூக்கிக் கும்பிட்ட பீமன், “மஹாதேவா, மஹாதேவா, இந்த மக்களின் நன்றி கெட்டதனத்துக்கு ஒரு எல்லையில்லாமல் போய்விட்டது.  என் மூத்த அண்ணா உரிமையுடன் இட்ட கட்டளையை மதித்து நான் கீழ்ப்படிந்தேன்.  எல்லா ஏற்பாடுகளையும் மிக நன்றாகச் செய்திருக்கிறேன்.  ஆனால் எல்லாவற்றையும் செய்வதில் என் நேரத்தை நான் வீணாக்கிவிட்டேனோ?  கிருஷ்ணா, இதோ நீயே பார்க்கிறாயே!  என் மேல் எப்படிக்குற்றம் சாட்டுகின்றனர் என்பதைப் பார்!” எனக் கிருஷ்ணன் பக்கம் திரும்பிக் குற்றம் சாட்டும் தொனியில் கூறி முடித்தான்.


“ஆனால் நீ கிருஷ்ணனுக்கு எங்கேயும் இடம் ஒதுக்கவே இல்லையே அப்பா!” அர்ஜுனன் மீண்டும் குறை கூறினான்.  “என்னை மறந்துவிட்டானா?  ஆஹா, அரசே, வ்ருகோதரரே, இது என்ன?  நீர் என்ன செய்துவிட்டீர்?”  கிருஷ்ணன் பீமனைப் பார்த்துப் புன்னகையுடன் வினவினான்.


“ஆஹா, வ்ருகோதரனா மறப்பவன்?  அவன் யாரையும் மறக்கவே இல்லை.  அதிலும் கோபியர் கொஞ்சம் ரமணனாகிய கோபியரின் உள்ளத்தில் குடி இருப்பவன் ஆன கோவிந்தனையா மறப்பேன்?  ஒருக்காலும் இல்லை.  நான் உனக்கு ஏற்றதொரு நல்ல இடம் கொடுத்திருக்கிறேன் கோவிந்தா!  அரசர்களுக்கும், ஒட்டகங்களுக்கும் இடையில் நீ அம்மா குந்தியுடன் ஒரே ரதத்தில் வருகிறாய்.   ஏனெனில் தனித்து விடப்பட்டால் அம்மாவால் தாங்க முடியாது.  நீ ஒருத்தன் தான் அவளோடு பயணம் செய்ய உகந்தவன்.  அவள் சகோதரர்களைப் பற்றிக் கூறிக்கொண்டு வா!  ஆனந்தமாகக் கேட்டுக் கொண்டே பயணம் செய்வாள்.  எங்களோடு பயணம் செய்து, செய்து அவளுக்கு அலுத்துவிட்டது.  போதும், போதுமென்றாகி விட்டது.” என்றான் பீமன்.


“அதெல்லாம் சரி அப்பா!  ஆனால் ஏன் கடைசியில் போக வேண்டும்? அரசர்களுக்கு முன்னால் கம்பீரமாக ஒரு தலைவனைப் போல் வரவேண்டியவன் கிருஷ்ணன்!” அர்ஜுனன் விடாமல் கேட்டான்.


ஆனால் கிருஷ்ணனோ, “பீமன் சொல்வதே சரியென எனக்குப் படுகிறது.  நானோ ஒரு மாட்டிடையன்.  கால்நடைகளைக் கவனித்துக்கொண்டே பின்னாலேயே வந்துவிடுவேன்.”  என்றான்.


“உன்னை நீயே மட்டம் தட்டிக் கொள்ளாதே கிருஷ்ணா!  நான் உன்னைக் கடைசியில் வரச் சொன்னது உன் நன்மைக்காகவே அல்ல.  எல்லாம் என் நன்மைக்குத் தான்.”  என்றான் பீமன்.


“உன் நன்மைக்கா?” ஆச்சரியத்துடன் கேட்டான் யுதிஷ்டிரன்.  “ஆம், என் நன்மைக்குத் தான்.  ஏற்கெனவே ஆர்யவர்த்தம் முழுவதும் இந்தச் செய்தி போய் விட்டது.  என்ன தெரியுமா?  அதிசயங்களை நிகழ்த்தும் கிருஷ்ண வாசுதேவன், பாண்டவர்கள் ஐவரோடு சேர்ந்து ஹஸ்தினாபுரம் செல்கிறான் என்னும் செய்தி தான்.  வழியெங்கும் மக்கள் வெள்ளமாகக் குவிந்து கிருஷ்ணனைக் காணவேண்டித் தவிப்பார்கள்.  நம் எல்லோருக்கும் முன்னால் முதலில் கிருஷ்ணனை வைத்தோமானால் மக்கள் அனைவரும் கிருஷ்ணனைப் பார்த்து நமஸ்கரிப்பதும், கட்டி அணைப்பதும், அவனோடு பேச வருவதுமாக இருப்பார்கள்.  நம்மை எல்லாம் திரும்பிக் கூடப் பார்க்க மாட்டார்கள்.  இப்போது என்ன நடக்கும் என யோசித்துப் பார்!  அவர்கள் அனைவரும் முதலில் பார்க்கப் போவது என்னைத் தான்.  என்னைப் பார்த்துக் கிருஷ்ணன் என நினைக்கப் போகின்றனர்.  கிருஷ்ணனுக்குக் கிடைக்கவிருக்கும் மாலைகள், தேங்காய்கள் அனைத்தையும் எனக்குக் கொடுக்காவிட்டாலும் பாதியாவது கிடைக்கும்.  அதுக்கப்புறம் புதுமணத்தம்பதிகளுக்கு மிச்சத்தைக் கொடுப்பார்கள்.  வயதான குந்தியுடன் வரும் கிருஷ்ணனைக் கண்டுபிடிப்பதற்குள்ளாக நம் ஒவ்வொருத்தரையும் பார்த்துப் பாராட்டியே ஆகவேண்டும் அவர்கள் அனைவரும். “ பீமன் இளித்தான்.


“இது ரொம்ப மோசமாக இருக்கிறதே! எனக்கு இதெல்லாம் வேண்டாம்.  மக்களின் பக்திபூர்வமான இந்த மரியாதைகள் எல்லாம் கிருஷ்ணனுக்கு மட்டுமே உரியது. உனக்கில்லை.” அர்ஜுனன் கூறினான்.


“ம்ஹூம், வேறே வழியே இல்லையப்பா.  இந்த ஒரு வழியில் தான் என்னால் மக்களின் பக்திபூர்வமான மரியாதைகளைப் பெற முடியும்.  இல்லைனா என்னையா வந்து அனைவரும் பார்க்கப் போகின்றனர்?  கிருஷ்ணன் சிரித்தான்.  “அர்ஜுனா, பீமன் சரியாகவே சொல்கிறான்.  மக்கள் முதலில் தங்கள் மரியாதைகளை பீமனுக்கும், பிறகு உனக்கும் செலுத்தட்டும்.  அதன் பின்னர் புதுமணத் தம்பதிகளுக்கு.  நான் தான் எப்போதுமே சொல்வேனே!  பீமனைப் போல் புத்திசாலிகள் கிடையாது என!  அது சரிதானே பீமா?”  கிருஷ்ணன் கேட்டான். “என்னைக் குறித்தும் என் புத்திசாலித்தனம் குறித்தும் எனக்கு எவ்விதச் சந்தேகமும் இல்லை.  ஆனால் உங்களுக்கெல்லாம் தான் அதில் சந்தேகம் இருக்கிறது.  அதனால் தான் ஒவ்வொரு முறையும் என் அண்ணார் கஷ்டங்களில் மாட்டிக்கொள்ளும்போதெல்லாம் நான் வரைத் தப்புவித்து இழுத்துக் கொண்டு வந்து சேர்க்க வேண்டியுள்ளது.”

1 comment:

ஸ்ரீராம். said...

பீமனின் விளையாட்டுப் பேச்சு பாணியை ஒரே மாதிரி அமைக்க படைப்பாளர் சிரமம் எடுத்துக் கொண்டிருக்க் வேண்டும்!