Sunday, July 19, 2015

தர்ம சாம்ராஜ்யத்தை ஸ்தாபிக்கலாம்!

“எல்லாம் சரி அப்பா! உன் மூத்தவன் என்ன சொல்லப்போகிறான்? அவனைக் கொஞ்சம் நினைத்துப் பார்! அவன் கலவரங்களைக் கண்டாலே வெறுப்பவன். இதை எல்லாம் கண்டால் அவன் தனக்கு அரியணையே வேண்டாம் என்று சொல்லி விடுவான். வெறுப்பில் அனைத்தையும் உதறி விடுவான்.” என்றான் கிருஷ்ணன்.

“கிருஷ்ணா! கிருஷ்ணா! நீ எங்கள் எதிரிகளுக்காகப் பரிந்து பேசுகிறாய்!” பீமனுக்குள் மீண்டும் சந்தேகம் முளை விட்டது.

“இல்லை, பீமா! கொஞ்சம் யோசித்துப் பார்! ஹஸ்தினாபுரத்திலேயே இருந்து நாம் ஆட்சி செய்தால் அதன் மூலம் வரப் போகும் விளைவுகளையும் சிந்தித்துப் பார்த்தாக வேண்டும். யார் யார் என்ன சொல்வார்கள்! என்ன நினைப்பார்கள்! எங்கிருந்து ஆதரவு வரும்! என அனைத்தையும் யோசிக்க வேண்டும்.” என்ற கிருஷ்ணன் அதற்கு ஏதோ முடிவைக் கண்டவன் போல மேலும் பேசலானான். “பீமா! நீ சொல்வது சரியாக இருக்கும் என எனக்குத் தோன்றுகிறது. உன் எண்ணங்கள் சரியே! நீ ஹஸ்தினாபுரத்தை விட்டு வந்ததும் சரியே எனத் தோன்றுகிறது. ஒரு புத்தம்புதிய நகரத்தைக் கண்டு பிடித்து நிர்மாணிப்பது தான் நல்லது. அது தானே உன் திட்டம்? அது தான் சரியானதும் கூட. ம்ம்ம்ம்ம்….விஸ்வாமித்திர முனிவர் கூடக் கடவுளரிடம் சொர்க்கத்தைப் பற்றிக் கெஞ்சிக் கொண்டிருக்காமல் புதியதாய் ஓர் சொர்க்கத்தைப் படைக்க ஆரம்பித்தார். படைத்தும் காட்டினார். அது போல் தான் நாமும் செய்ய வேண்டும்.”

இப்போது உண்மையாகவே பீமனுக்கு ஆச்சரியம் மேலிட்டது. கிருஷ்ணன் தனக்குத் தானே வாதம் செய்து கொள்பவனைப் போல் மேலே பேச ஆரம்பித்தான்.”ஒரு புதிய அரசாங்கத்தை, சாம்ராஜ்யத்தை நிர்மாணிப்பது நல்லது; எளியது: சுலபமாக நிறைவேறக் கூடியதும் கூட! இப்போது நீ ராக்ஷசவர்த்தத்தில் நிர்மாணித்த மாதிரித் தான் அதுவும். அங்கே உன் ராணி  ஹிடிம்பாவும், உன் மகன் கடோத்கஜனும் உன்னை முழு மனதோடு மகிழ்வோடு வரவேற்பார்கள்.”

“எனக்குத் தெரியும்!” என்ற வண்ணம் பீமன் பெருமூச்சு விட்டான். இங்கே ஹஸ்தினாபுரத்தில் இருப்பதை விட அங்கே ராக்ஷசவர்த்தத்தில் நான் மிகவும் மகிழ்ச்சியோடு இருந்தேன். ஆனால் என் தாய்க்கும், என் சகோதரர்களுக்கும் அது பிடிக்கவில்லை. அவர்கள் அங்கே இருப்பதை வெறுத்தார்கள்.”

தன் சிந்தனை மாறாமலே கிருஷ்ணன் மேலே பேசினான்:” ஒரு வேளை நம்மால் ஒரு புத்தம்புதிய நகரத்தைக் கண்டு பிடிக்க முடிந்தால்? அங்கே துரியோதனனின் நிழல் கூட விழாது. அல்லவா? அப்படி ஒரு நகரத்தைக் கண்டு பிடிக்க முடிந்தால்?”

“என் முடிவு அதுதான்! நான் கண்டுபிடிக்கப்போகிறேன்.” என்றான் பீமன் திட்டவட்டமாக.

“ஆம், பீமா, நீ சொல்வது சரியே! நான் உன் ஊழியன் கோபு உன்னுடைய கனவு நகரத்தின் அமைப்பை வரைந்து கொண்டிருக்கும்போது பார்த்தேன்.” என்ற வண்ணம் பீமனின் தோள்களைப் பற்றிக் கொஞ்சம் உணர்ச்சிகரமாகப் பேச ஆரம்பித்தான். அவனுக்குள்ளாக ஏதோ புதிய திட்டம் உருவாகி இருக்குமோ என்னும் எண்ணம் தோன்றியது பீமனுக்கு. “அப்படி ஒரு நகரம் உருவானால், அங்கே துரியோதனன் இருக்க மாட்டான். உங்களுடன் சண்டை போட துரியோதனனும் இருக்க மாட்டான். இடையூறுகளைச் செய்யும் துஷ்சாசனனும் இருக்க மாட்டான். உங்களைத் தனிமைப் படுத்த துரோணாசாரியாரும் இருக்க மாட்டார். ஒரு வேளை அதுதான் உன் எண்ணத்தில் இருக்கிறதோ! ஒரு புதிய நகரத்தைக் கனவு நகரத்தை நிர்மாணிக்கும் எண்ணம்!”

பீமன் முகத்தில் புன்முறுவல் தலை காட்டியது. வெகு நேரத்துக்குப் பிறகு மலர்ந்த முகத்தோடு, “ஆம், அப்படித்தான் நினைக்கிறேன்.” என்றான் பீமன். திடீரெனத் தோன்றியதொரு உணர்ச்சிகரமான நினைப்பிலே பீமன் புதியதொரு நகரத்தை நிர்மாணிக்க வேண்டும் என்று புறப்பட்டிருந்தாலும், இப்போது கிருஷ்ணனின் பேச்சைக் கேட்டதும் அது தான் சரி என்று அவனுக்கும் தோன்றியது. புதிய நகரத்தை நிர்மாணிக்கப் பல காரணங்கள் இருந்தன. எல்லாவற்றையும் விட முக்கியமான காரணம் துரியோதனனைப் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டாம்.

“நான் என்ன செய்தேன் என உனக்குத் தெரியும் அல்லவா? பீமா! இதோ பார்! ஜராசந்தன் என்னையும் மத்ராவையும் சேர்த்து அழிக்கக் கிளம்பி வந்தான். நகரை முற்றுகையிடப் போவதாகத் தெரிந்தது. நகரைத் தீயிட்டு அழிக்கப் போவதாகவும் தகவல்கள் கிட்டின. அதன் பின்னரே நாங்கள் மத்ராவை விட்டு விலகினோம். வெளியேறினோம். சௌராஷ்டிராவுக்குச் சென்று எங்களுக்கென ஒரு புதிய நகரத்தை நிர்மாணித்துக் கொண்டோம். துவாரகை எனப் பெயரிட்டோம். கால்நடைச் செல்வங்களுக்கு மதிப்புக் கொடுத்துக் குதிரைகள், பசுமாடுகள் போன்றவற்றை வளர்த்து அதன் மூலம் பெரும் செல்வந்தர்களாக ஆகி விட்டோம். நாங்கள் நினைத்ததை விடப் பெரிய செல்வந்தர்களாக இருக்கிறோம். ஒரு பெரிய சாம்ராஜ்யத்தையே வென்றிருக்கிறோம். எங்களை விட நீ அறிவுள்ளவன்; விவேகம் நிறைந்தவன். ஹஸ்தினாபுரத்தைத் தான் ஆளுவேன் எனச் சண்டை போட்டுக் கொண்டிருப்பதை விட்டு விட்டுப் புத்தம்புதிதாக ஓர் நகரத்தை, சாம்ராஜ்யத்தை நிர்மாணம் செய்து அதை ஆளலாம். அது தான் நல்லது! அது தான் நமக்கு சொர்க்கமாகவும் இருக்கும். ஹஸ்தினாபுரத்தை ஆள்வது நரகத்தை ஆள்வதற்குச் சமம்.”

பீமன் ஒரேயடியாகக் குதித்தான். “கிருஷ்ணா, கிருஷ்ணா! இது தான்! இது தான்! நான் நினைத்ததும். நான் செய்ய இருந்ததும், இதுவே!” என்றான்.

ஆனால் கிருஷ்ணன் தன் வசத்திலேயே இல்லை போல் தோன்றியது. அவன் தன்னுள் ஆழ்ந்து போயிருந்தான். அவன் கண்கள் தொலைதூரத்தில் ஏதோ ஓர் காட்சியைக் காண்பது போல் மங்கிக் காணப்பட்டது. அவன் பேசினான்; வார்த்தைகள் தெளிவாகவே இருந்தன. ஆகையால் அவன் தனக்குள்ளாக ஏதோ காட்சியைக் கண்டு அதில் மூழ்கி இருக்கிறான் என்பதைப் புரிந்து கொண்டான் பீமன். கிருஷ்ணன் சொன்னான்: “யமுனைக்கரைக்குச் செல்வோம் வா, பீமா! பாஞ்சால அரசன் துருபதன் நமக்கு உதவிகள் செய்வான். நாங்கள் யாதவர்கள் அனைவரும் உங்கள் பக்கமே இருப்போம். நாக தேசத்து அரசன் மணிமானும், தன்னால் இயன்றதை உனக்குக் கட்டாயம் செய்வான். அங்கே ஓர் நகரை நிர்மாணித்து ஓர் சாம்ராஜ்யத்தை ஏற்படுத்தி அதை தர்ம சாம்ராஜ்யமாக மாற்றிக் காட்டுவோம். தர்மத்தின் பாதையில் நல்லாட்சியைக் கொடுப்போம்.”

1 comment:

ஸ்ரீராம். said...

கண்ணன் எனும் கள்வன்! ஒரு கல்லில் எத்தனை மாங்காய்!