Wednesday, July 22, 2015

கனவு நகரம் நிர்மாணிக்கக் கிருஷ்ணன் உதவுகிறான்!

கிருஷ்ணன் முழு மனதோடு பேசுவதைக் கண்ட பீமனுக்கு உண்மையிலேயே ஆச்சரியமாக இருந்ததோடு அல்லாமல் கொஞ்சம் சந்தேகமும் ஏற்பட்டது. “உண்மையாகத் தான் சொல்கிறாயா, கிருஷ்ணா!” என்று மாறாச் சந்தேகத்துடன் கேட்டான் “நீ உன்னுடைய தந்திர வேலைகளைக் காட்டுகிறாய் என எண்ணுகிறேன்.” என்று மேலும் கூறினான். கிருஷ்ணன் அவனையே பார்த்து, “நான் தந்திர வேலைகள் செய்வதாக நீ நினைத்தால்! உன் வழியே செல்! அதோ உன் வழி! தெளிவாக இருக்கிறது. நீ என்னுடைய அத்தை வழி மூத்த சகோதரன். உனக்கு நான் கெடுதல் செய்வேனா? பீமா! உன் ஆயுதங்களை எடுத்துக் கொள்! உன் தண்டாயுதத்தால் என் மண்டையை உடைத்துவிடு! அது தான் நல்லது! இதோ பார் பீமா! நீ என்ன நினைக்கிறாய்! உன் மனதில் இருப்பது என்ன என்பதை நான் புரிந்து கொண்டு விட்டேன். ஆகவே நீ உன்னுடைய கனவு நகரத்தை நிர்மாணிக்க உனக்கு உதவிகள் செய்யத் தீர்மானித்தேன்.” என்றான் கிருஷ்ணன்.  அவன் பேச்சில் இருந்த உண்மையைப் புரிந்து கொண்டான் பீமன். அவன் இதையே நினைத்துக் கொண்டிருந்து இருக்கிறான் என்பதையும் தெரிந்து கொண்டான். ஆகவே உண்மையாகவே கிருஷ்ணன் அவனுக்கு உதவி செய்யும் நோக்கத்தில் தான் இருப்பதையும் அறிந்தான். தன் உள் மனதில் இருந்த எண்ணத்தை அவன் கண்டு கொண்டே தனக்குப் பாராட்டுகள் தெரிவிப்பதையும் உணர்ந்தான்.

“நீ எப்படியோ என் மனதைப் படித்து விட்டாய்! ஆம், கிருஷ்ணா! உண்மையாகவே நான் புதியதொரு நகரத்தை நிர்மாணிக்க எண்ணுகிறேன்.” என்றான் பீமன். “தெரியும், பீமா! நீ ஹஸ்தினாபுரத்தை விட வலுவாக, பலம் உள்ளதாக ஓர் சாம்ராஜ்யத்தையும், நகரத்தையும் நிர்மாணிக்க எண்ணுகிறாய்! அங்கே ஆட்சி செய்ய எவ்வித இடையூறுகளும் எந்தப்பக்கமிருந்தும் வரக் கூடாது என்றும் நினைக்கிறாய். நீ நினைப்பது சரியே! அப்படி ஓர் நகரம் நிர்மாணிக்கப்பட்டால் அது கடவுளரின் சொர்க்கமாகவே இருக்கும்.” என்று சொன்ன கிருஷ்ணன் கைகள் பீமனின் தோள்களில் படிந்திருந்ததே தவிர அவன் பார்வை தூரத்தில் எங்கோ பார்த்த வண்ணம் அவன் கனவுலகில் இருப்பது போல் காட்சி தந்தது.

“ஆம், ஓர் கனவு நகரம், கடவுளரின் சொர்க்கம்! மரங்கள் வீதி ஓரங்களில் செழிப்பாக வளர்ந்து நிழல் கொடுத்துக் கொண்டு காற்றில் கர்வம் பொங்கத் தலையாட்ட வேண்டும். எண்ணிலடங்காப் பழங்கள் நிறைந்த மாந்தோப்புக்கள் இருக்க வேண்டும். தோட்டங்கள், நீரூற்றுக்கள், உல்லாசப் பூங்காக்கள், ஆங்காங்கே அவற்றில் பயமோ, கவலையோ இன்றி இளைப்பாறும் மக்கள்… குளங்கள், தாமரை பூத்திருக்க வேண்டும். மீன்கள் அங்குமிங்கும் நீந்தித் திரிய வேண்டும். குளக்கரைகளில் மக்கள் தாமரைகளைப் பறிக்கவும் மீன்களுக்கு உணவிடவும் வேண்டும். “ கிருஷ்ணன் சற்றே நிறுத்தினான். பீமன் தன் தலையை ஆட்டிச் சம்மதம் தெரிவித்தான். கிட்டத்தட்ட அவன் கனவு கண்ட அதே பாணியில் ஓர் நகரம். இதைத் தான் அவன் பல நாட்களாய்க் கனவு கண்டு வந்தான்.

மேலும் கிருஷ்ணன் பேசிக் கொண்டிருந்தான்:” ஒவ்வொரு வீட்டிலும் பூக்கள் நிறைந்த பூந்தோட்டம் இருக்க வேண்டும்.  ஆங்காங்கே தாழ்வாரங்களில் எல்லாம் நிழல் தரும் மரங்கள் நிழல் கொடுத்த வண்ணம் இருக்கவேண்டும். உங்கள் ஐவரின் வீர, தீர, சாகசங்களை வெளிப்படுத்தும் பற்பல வண்ண ஓவியங்களைத் தீட்டி அனைவர் வீடுகளிலும் மாட்டி இருக்க வேண்டும். உங்கள் புகழ் பாரெங்கும் பரவ வேண்டும்.”

பீமன் அகல விரிந்த கண்களோடு ஆச்சரியம் ததும்ப அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்தான். அவன் அவ்வப்போது தலையை ஆட்டிச் சம்மதம் தெரிவித்த விதம் அவன் அப்போதே அம்மாதிரியானதொரு நகரத்தைத் தன் மனக்கண்களால் கண்டு களிக்கிறான் என்பதை வெளிப்படுத்தியது. கிருஷ்ணன் வர்ணித்த விதம் பீமன் மனதை மிகவும் கவர்ந்தது. ஆகையால் அவன் பேச்சுக்கு எந்தவிதமான இடையூறும் செய்யாமல் வாய் பேசாமல் கேட்டுக் கொண்டு வந்தான் பீமன்.

கிருஷ்ணன் தொடர்ந்தான்:” நூற்றுக்கணக்கில் பசுக்கள், அவையும் குடம் குடமாகப் பால் அளிக்க வேண்டும். அழகான, வலுவான வேகமாக ஓடக்கூடிய குதிரைகள், அவற்றில் ஏறி அமர்ந்து நாம் போட்டி போட்டுக்கொண்டு குதிரைகளை ஓட்ட வேண்டும். பெரிய ரதங்கள், தங்கள் சக்கரங்களை உருட்டிக் கொண்டு தெருக்களில் ஓட வேண்டும். அவற்றில் வீராதி வீரர்கள், அதிரதிகள், மஹாரதிகள் போன்றோர் பயணம் செய்ய வேண்டும். நாம் நிர்மாணிக்கப் போகும் நகரத்திலும், சாம்ராஜ்யத்திலும் வசிக்கப் போகும் பிராமணர்கள் கற்பித்தலைத் தங்கள் முக்கியத் தொழிலாகக் கொண்டு அனைவருக்கும் தக்க கல்வி கற்பித்து வர வேண்டும். வேதங்களிலும், மற்றவற்றிலும் உள்ள விஷயங்களை எடுத்துச் சொல்ல வேண்டும்; க்ஷத்திரியர்கள் ஆன நாமோ அனைத்துத் தரப்பு மக்களையும் பாதுகாக்கும் ஏற்பாடுகளைச் செய்து கொண்டு அனைவரையும் பாதுகாக்க வேண்டும். க்ஷத்திரியர்களுக்கு முழு அதிகாரம் இருந்தாலும் துஷ்பிரயோகம் செய்யக் கூடாது. வைசியர்கள் வியாபாரத்தின் மூலம் சம்பாதிப்பதை நாட்டுக்குச் செலவு செய்வதோடு, தேவை உள்ளவர்களுக்கும், மற்றும் இல்லாதவருக்குக் கொடுப்பதையும் முக்கியக் கடமையாகக் கொள்ள வேண்டும். நீ எங்கு ஆட்சி புரிந்தாலும் அங்கே தர்மத்தின் ஆட்சி நடைபெறும்; நடைபெற வேண்டும்.”

கிருஷ்ணன் அளித்த இந்த ஒளிமயமான எதிர்காலக் கனவுகள், தன் கனவு நகரம் அப்போதே நனவாகி விட்ட குதூகலம் பீமனுக்கு. அவன் கண்ணெதிரே கிருஷ்ணன் விவரித்த காட்சிகள் அப்படியே அப்போது நடப்பவை போல் தோன்றின.. ஆகவே மேலும் பேசச் சொல்லிக் கிருஷ்ணனை ஊக்குவித்தான். கிருஷ்ணன் மேலும் தொடர்ந்து, “ அதோடு மட்டுமா? உன்னுடைய அரச மாளிகையில் மிக அழகான, உலகத்து அழகெல்லாம் திரண்டு வந்த ஓர் அரசகுல மங்கை ராணியாக இருப்பாள். தேவலோகத்து அப்சரஸ்களின் அழகெல்லாம் இவள் கால் தூசிக்குக் காணாது! அத்தனை அழகான அந்தப் பெண்மணி தன் அழகிய கண்களால் உன்னைக் கண்டு நாணத்துடன் சிரிப்பாள். பாண்டுவுடைய பேரன்மார்களுக்குத் தாயாக இருப்பாள். அவள் பெயர் ஜாலந்திரா!” என்று தன் ஜொலிக்கும் கண்களால் சிரித்த வண்ணம் கண்ணன் கூறினான்.  இதைக் கேட்டதுமே பீமன் முகத்தில் ஓர் ஒளி பிறந்தது. விவரிக்க ஒண்ணாத சந்தோஷத்துடன் அவன் கண்ணனைப் பார்த்து, “கோவிந்தா! உண்மையாகவா? இது எல்லாம் நடக்குமா? நீ இதில் தீவிரமாக இருக்கிறாயா?”

“ஆம், நான் இதில் தீவிரமாக இருக்கிறேன். அப்படி ஒரு நகரை நீ நிர்மாணிக்க அனைத்து யாதவர்களையும் இதில் ஈடுபடுத்துகிறேன். குதிரைகள், பசுக்கள், கால்நடைச் செல்வங்கள், ரதங்கள், ஆயுதங்கள், தேவைப்பட்டால் தங்கக் கட்டிகள்! எது ஆனாலும் தரத் தயாராக இருக்கிறோம்.” “கோவிந்தா, கோவிந்தா! உண்மையாகச் சொல்கிறாயா? நீ இதில் நிச்சயமாக இருக்கிறாயா? உன்னுடைய இந்த வாக்குறுதியை நீ நிச்சயமாய் நிறைவேற்றுவாயா? அதில் உறுதியாக இருக்கிறாயா?”

“இதோ பார் பீமா! என் அருமைத் தந்தை நேர்மையும், நீதியும் வடிவான வசுதேவர் மற்றும் அவர் மனைவியான என்னைப் பெற்ற தாய் தேவகி இவர்கள் இருவர் மேலும் ஆணையிட்டுச் சொல்கிறேன். நான் சொன்னதை நிறைவேற்றுவேன்! நானும், பலராமனும் மட்டும் முன்னர் ஓர் நகரை நிர்மாணிக்க வேண்டி இருந்தது. ஆனால் இப்போது நாங்கள் அனைவரும் உங்களுடன் சேர்ந்து அப்படி ஒரு நகரை நிர்மாணிக்க உதவுகிறோம்.”

“ஆஹா! என்ன அருமை! அற்புதம்!” என்றான் பீமன். அவன் கோபம், ஆத்திரம், தாபம், வெறுப்பு அனைத்தும் போன இடம் தெரியவில்லை. பறந்து ஓடி  விட்டது. அவன் சந்தேகங்கள் போன இடம் தெரியவில்லை. “துரியோதனன் யுவராஜாவாக இருக்கும் நகரம் வசிக்க லாயக்கற்றது. அங்கே வசிக்க முடியாது! அதனால் தான் நான் பானுமதிக்கு வாக்களித்தேன். துரியோதனனே ஹஸ்தினாபுரத்தை ஆளுவான் என்னும் வாக்குறுதியை அளித்தேன்.” என்றான் கிருஷ்ணன் அமைதியாக.  பீமனுக்கு ஆச்சரியத்துக்கு மேல் ஆச்சரியம்.

“கிருஷ்ணா, கிருஷ்ணா! இவை அனைத்தையும் நீ என் பொருட்டு யோசித்து வைத்திருக்கிறாய்! ஆஹா! என்ன ஆனந்தம்! ஏன் முதலிலேயே நீ இதைக் கூறவில்லை! என்னுடைய முடிவில்லாத சங்கடங்களை எல்லாம் முதலிலேய்யே தீர்த்திருக்கலாமே! “ என்றான் பீமன்.

“ம்ம்ம்ம்ம். நான் அவ்வளவு வேகமாக யோசிப்பவன் அல்ல! மெல்ல மெல்லத் தான் யோசித்து முடிவெடுப்பேன். மக்களிடமும் மெதுவாகக் கொண்டு சேர்ப்பேன்.”தன்னைத் தானே சுய விமரிசனம் செய்யும் பாணியில் கூறினான் கிருஷ்ணன். மன்னிப்புக் கேட்கும் பாவனையில் புன்னகையும் செய்தான். அதைப் பார்த்த பீமனுக்கும் சிரிப்பு வந்து விட்டது. “கிருஷ்ணா! என் கனவு நகரை நான் நிர்மாணிக்கையில் நீ என்பக்கம் நின்று தோளோடு தோள் கொடுத்து உதவுவாய் அல்லவா?” என்ற வண்ணம் பீமன் அன்பாகத் தன் கரங்களைக் கிருஷ்ணன் தோள்களில் வைத்தான்.

“நான் உன் பக்கம் நின்று உதவிகள் செய்வதோடு நின்றுவிட மாட்டேன், பீமா! என்னோடு சேர்த்து அனைத்து யாதவர்களையும், மற்றும் நாகர்களையும் சேர்த்து உனக்கு உதவச் செய்வேன். இந்த பூவுலகே கண்டு களிக்கும் வண்ணம் ஓர் அற்புத நகரை நாம் நிர்மாணிப்போம்.” என்றான் கிருஷ்ணன்.

1 comment:

ஸ்ரீராம். said...

கண்ணன் பானுமதிக்குக் கொடுத்த வாக்குறுதியும் நிறைவேறுகிறது.