Saturday, January 16, 2016

கொண்டு வா! கிருஷ்ணனை!

“என்ன, சென்று விட்டாரா? யார் நம் பிரபுவா? எங்கே போயிருக்கிறார்?”ஷாயிப்யா ஆச்சரியத்துடன் கேட்டாள். அதோடு அவளுக்குக் கிருஷ்ணன் இப்படி நடந்து கொண்ட முறையும் விசித்திரமாக இருந்தது. கிருஷ்ணன் ஒவ்வொரு நாளும் குளிக்கச் சென்றால் கூட மனைவியர் இருவரிடமும் விடைபெற்றுக் கொண்டு அவர்களின் வாழ்த்துக்களையும் பெற்றுக் கொண்டே செல்வது வழக்கம். துவாரகையில் இருந்தால் இந்த நடைமுறையைக் கட்டாயமாய்க் கடைப்பிடிப்பான் கிருஷ்ணன். ஆனால் இன்று? எவரிடமும் சொல்லாமல் அன்றோ போயிருக்கிறான்? குளிக்கத் தானா?

“அந்த மஹாதேவனுக்குத் தான் தெரியும் அவர் எங்கே சென்றிருப்பார் என்பது!”என்றாள் ருக்மிணி. அவள் செயலற்றுப் போய் இருப்பதை உணர்ந்து கொண்ட ஷாயிப்யா, “வா, நாம் ஆயுதசாலைக்குச் சென்று அங்கே பார்ப்போம். அங்கே ஆயுதங்களைத் தீட்டிக் கொண்டு உட்கார்ந்திருப்பார்.” என்றாள்.  “அதெல்லாம் எங்கேயும் போய்ப் பார்க்கவே வேண்டாம்!” இதைச் சொல்லும்போதே ருக்மிணியின் கண்கள் கண்ணீரை வர்ஷித்ததோடு அல்லாமல் குரலும் தழுதழுத்தது. “அவருடைய கிரீடம், சக்கரம், கத்தி, அவ்வளவு ஏன், அவருடைய பீதாம்பரம் எல்லாம் ஒழுங்காகக் கழற்றி வைக்கப்பட்டுப் படுக்கையில் இருக்கின்றன. அதோடு அவருடைய அரைக்கச்சையைக் கூடக் கழட்டி வைத்துவிட்டுப் போயிருக்கிறார். வா, ஷாயிப்யா, நாம் பெரியவர் பலராமரைச் சென்று பார்ப்போம். அவருக்குச் செய்தியைச் சொல்வோம்.” என்று ஷாயிப்யாவை அழைத்தாள் ருக்மிணி.

பலராமனின் மனைவி ரேவதி, கிருஷ்ணன் மறைந்துவிட்ட செய்தியைக் கேட்டதும் ருக்மிணியையும் ஷாயிப்யாவையும் பலராமனின் படுக்கை அறைக்கே அழைத்துச் சென்று விட்டாள். பலராமன் அப்போது ஸ்வப்பன உலகில் சஞ்சரித்துக் கொண்டிருந்தான். ஏதேதோ இன்பக் கனவுகள் என்பது அவன் புன்முறுவலில் இருந்து தெரிந்தது. அவனை உலுக்கி எழுப்பிக் கிருஷ்ணன் காணாமல் போய்விட்ட செய்தியை மூவரும் அவனிடம் தெரிவித்தார்கள். பலராமனுக்கு ஒன்றுமே புரியவில்லை. தன்னை உலுக்கிக் கொண்டு தூக்கத்தை விரட்டி அடித்த வண்ணம், “என்ன, கோவிந்தன் மறைந்துவிட்டானா?” என்று கேட்டான். எப்போதும் போல் அவன் இரவில் அவனுக்கு மிகவும் பிடித்த மதுபானம் செய்திருந்தான். அதனுடைய தாக்கம் இன்னமும் அவனிடம் இருந்து மறையவில்லை.

உணர்வுகளைக் கட்டுப்படுத்திக் கொண்டு எப்போதும் கவனமாகப் பேசும் ருக்மிணி அப்போது தன்னிலை மறந்திருந்தாள். “அவரை யாரோ கடத்தி இருப்பதாக நினைக்கிறேன். ஆம் நிச்சயமாக நம்புகிறேன்.” என்றாள். “என்ன? கடத்தி இருப்பார்களா? யார் கடத்தி இருப்பார்கள் என நினைக்கிறாய் ருக்மிணி?” என்ற வண்ணம் மீண்டும் தன்னை உலுக்கிக் கொண்டு தலையையும் உலுக்கினான் பலராமன். அவனுக்குத் தான் தூக்கத்தில் கனவு காண்கிறோமோ என்னும் சந்தேகம் போகவில்லை. “வேறு யார்? அந்த மூர்க்கன் சத்ராஜித்தாகத் தான் இருக்கும். பிரபுவால் ச்யமந்தகம் இருக்குமிடம் கண்டுபிடிக்கப்பட்டுவிடுமோ என்னும் சந்தேகம் அவனுக்கு! ஆகையால் அவரைக் கடத்தி இருப்பான்.” என்றாள் ருக்மிணி.

“ஓஓ, சரி, ருக்மிணி, நீ கவலைப்படாதே! நான் அவனைக் கண்டுபிடித்துக் கூட்டி வருகிறேன்.” என்ற வண்ணம் எழுந்த பலராமன், உடனே கடலுக்குச் சென்றான். தன் தூக்கம், மது மயக்கம் இரண்டும் தீரும் வண்ணம் குளித்தான். வீட்டிற்குத் திரும்பித் தன் உடைகளை அணிந்து கொண்டான். தன்னுடைய பிரியமான ஆயுதமான கலப்பையை எடுத்துக் கொண்டான். சத்ராஜித்தைத் தேடிச் சென்றான். துவாரகை அப்போது தான் மெல்ல மெல்ல விழித்துக் கொண்டிருந்தது. அது ஒரு நாளும் பலராமன் இவ்வளவு சீக்கிரம் குளித்து முடித்து உடுத்திக் கொண்டு ஆயுதபாணியாகத் தெருக்களில் விரைவதைக் கண்டதில்லை. ஆகையால் துவாரகை மக்களுக்கு வியப்பு! இவ்வளவு அதிகாலையில் பலராமன் தன் கைகளில் கலப்பையைத் தூக்கிக் கொண்டு கோபக் குறிகளைக் காட்டும் முகத்தோடு, நெருப்புத் தணலெனப் பிரகாசிக்கும் கண்களோடு சத்ராஜித் மாளிகை இருக்கும் திசை நோக்கிச் செல்கிறானே? என்ன காரணமாக இருக்கும்?

ஒரு சிலர் மரியாதையைக் குறிக்கும் விதமாக பலராமனுக்குச் சற்றுப் பின்னால் அவனைத் தொடர்ந்தார்கள். எதோ அசாதாரணமான ஒன்று நடந்திருப்பதோடு அதை விட அசாதாரணமாக இன்னும் வேறு ஏதோ ஒன்று நடக்கப் போகிறது என்றும் உணர்ந்திருந்தார்கள். ஆகவே எவரும் எதுவும் பேசாமல் மௌனமாகவே சென்றனர். சத்ராஜித்தின் மாளிகையை அடைந்ததும் வெளி வாசலில் இருந்து உள்ளே முற்றத்துக்குச் செல்லும் பாதையில் பொருத்தியிருந்த பெரிய கதவைத் தன் கலப்பையால் உலுக்கினான் பலராமன். அங்கிருந்த காவலாளர்கள் ஓடோடி வந்தனர். சத்ராஜித்தின் வீட்டை இப்படி உலுக்கும் வல்லமையும், திறமையும் அந்த நகரில் எவருக்கும் இல்லை என நினைத்திருந்தவர்கள் இப்போது பலராமனின் இந்தத் துணிச்சலான வேலையைக் கண்டு வாய் பேச முடியாமல் திகைத்து நின்றனர். ஆனால் அவர்களுக்கு இதைச் செய்தது பலராமன் என்பது அங்கிருந்த சிறிய திட்டி வாசல் கதவைத் திறந்து வெளியே பார்க்கும்வரை தெரியாது. திறந்து பார்த்தவர்கள் பலராமனைக் கண்டு ஆச்சரியம் அடைந்தனர். அவன் கோபத்தையும் பொறுமையின்மையையும் கண்டு செய்வதறியாது திகைத்தனர்.

“கதவைத் திறவுங்கள்!” என்று ஆவேசமாகக் கட்டளை இட்டான் பலராமன். அவர்களோ தங்கள் கைகளைக் கூப்பினார்கள். பணிவாக, “பிரபுவே, கதவைத் திறக்கும் முன்னர் எங்களுக்கு எங்கள் யஜமானரின் உத்தரவு தேவை!” என்று சொன்னார்கள். “எனக்கு யாருடைய உத்தரவுக்காகவும் காத்திருக்க வேண்டியதில்லை!  எனக்குத் தேவையும் இல்லை. நீங்களும் உங்கள் கதவுகளும்!” என்று சொல்லிய வண்ணம் தன்னுடைய கலப்பையினால் கதவை நோக்கித் திரும்பி நின்ற வண்ணம் ஓங்கி ஓர் அடி அடித்தான் பலராமன். பல்லாயிரம் இடிகளைப் போன்ற சப்தத்தோடு இறங்கிய அந்தக் கலப்பை அந்த மரக்கதவின் சட்டங்களைப் பொடிப்பொடியாக்கியது. கதவு பொடியானது கண்டும், அதனால் அந்தக் கதவைப் பிடித்திருந்த கட்டிட பாகங்கள் கீழே விழுவதைக் கண்டும் பயந்த காவலாட்கள் சற்றே விலகிப் பின்னால் சென்றனர். பலராமன் முற்றத்தை நோக்கிச் சென்றான்.

“உங்கள் யஜமானனை இங்கே உடனே இந்த நிமிடமே வரச் சொல்லுங்கள்!” என உத்தரவிட்டான். “எனக்கு அவருடன் முக்கியமாகப் பேச வேண்டியதிருக்கிறது!” என்றும் கூறினான். “பிரபுவே, தயவு செய்து உள்ளே வாருங்கள். நாங்கள் உள்ளே சென்று யஜமானிடம் உங்கள் வரவைத் தெரிவிக்கிறோம். நீங்கள் அவரைப் பார்க்க விரும்புவதையும் தெரிவிக்கிறோம். “ என்று சொன்னவண்ணம் அவர்களில் ஒருவன் தன் கரங்களைக் கூப்பிய வண்ணம் உள்ளே செல்லத் திரும்பினான். மற்றவர்கள் அவனுக்கு உள்ளே செல்ல வழியை ஏற்படுத்திக் கொடுத்துவிட்டு பலராமனின் கலப்பை அவர்கள் மேல் விழாத வண்ணம் தூரத்தில் பாதுகாப்பாக நின்று கொண்டனர். ஏனெனில் துவாரகை நகரமே பலராமனின் கோபத்திற்கும் அவனுடைய வலிமையான கலப்பைத் தாக்குதலுக்கும் பழகி இருந்தது.

பலராமன் வந்திருக்கும் செய்தி குறித்து அறிந்து கொண்ட பங்ககரா உடனே ஓடி வந்தான். பலராமனை வரவேற்றான். “பிரபுவே, வாருங்கள், வாருங்கள், உள்ளே வாருங்கள்! “ என்றும் அழைத்தான். “உங்களைச் சந்திப்பதில் தந்தை மிக சந்தோஷம் அடைவார்!” என்றும் கூறினான். “சத்ராஜித்தை உடனே இங்கே வரச் சொல்! அவன் இங்கே தான் வரவேண்டும். இங்கேயே வரச் சொல் அவனை! உன் மாளிகைக்குள் நான் நுழையப் போவதில்லை. அப்படி நுழைவதாக இருந்தால் அது மாளிகையைச் சுக்குநூறாக்குவதற்காகத் தான் இருக்கும்.” என்றான். வெளி வாயிலுக்குப் பின்னால் சாலையில் நூற்றுக்கணக்கான யாதவக் குடிகள் அதற்குள் கூடி விட்டார்கள். மாளிகைக்கு உள்ளே வீட்டின் உறுப்பினர்களில் ஆண்கள் சற்று தூரத்தில் என்ன நடக்கிறது என்பதைப் பார்க்கக் கூடி விட்டார்கள். பலராமன் எந்த அளவுக்குப் போவான் என்பதை அவர்களால் கணிக்க முடியவில்லை.

அப்போது சத்ராஜித் மாளிகையின் உள்ளிருந்து வேகமாக வெளியே வந்தான். அவனுடைய மகன்களில் ஒருவனான வடபதி என்பவனும் பங்ககராவுடன் வந்து கொண்டிருந்தான். சத்ராஜித்திற்கு பலராமன் ஏன் இங்கே வந்திருக்கிறான் என்பதே புரியவில்லை. அதுவும் இவ்வளவு கோபமாகப் பொறுமையின்றிக் கதவை உடைத்துத் திறந்து கொண்டல்லவோ வந்திருக்கிறான்! ஏற்கெனவே தன் வீட்டில், தன் குடும்பத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிகழ்வுகளால் அவன் நிலை குலைந்து போயிருந்தான். இப்போது வீட்டின் வெளிவாயில் கதவு உடைக்கப்பட்டது அவன் கௌரவமே சிதைந்து போனாற்போல் அவனுக்குத் தோன்றியது.

இருந்தாலும் கோபத்தை அடக்கியவண்ணம் பலராமனைப் பார்த்து, “ மாட்சிமை பொருந்திய
வாசுதேவனின் மகனே! வருக, வருக! உங்கள் வரவு நல்வரவாகுக! தயவு செய்து மாளிகையின் உள்ளே எழுந்தருள வேண்டும்!” என்று வேண்டினான். “இப்போது தான் உன் மகனிடம் உன் வீட்டினுள் காலடி எடுத்து வைக்க மாட்டேன் என்பதைச் சொன்னேன். அப்படி வந்தால் அது உன் வீட்டை நொறுக்குவதற்காக மட்டுமே இருக்கும்! அதுவும் உன் தலையில் விழும்படி வீட்டை இடிப்பேன். இப்போது நான் கேட்பதற்கு பதில் சொல்! கிருஷ்ணனை எங்கே ஒளித்து வைத்திருக்கிறாய்?” என்று ஆவேசமாகக் கேட்டான். அவன் குரலில் சத்ராஜித்தை மிரட்டும் பாவனை இருந்தது.

“என்ன? கிருஷ்ணனை நான் ஒளித்து வைத்துள்ளேனா? எனக்கு எப்படித் தெரியும் அவன் எங்கே என்பது? இது என்ன புதுக் குழப்பம்?” என்றான் சத்ராஜித். பலராமன் என்ன சொல்கிறான், எதற்காக இங்கே வந்திருக்கிறான், மேலே என்ன நடக்கப் போகிறது என்பது எதையும் அறியாமல் தவித்தான் சத்ராஜித். “ஓஹோ! உனக்குத் தெரியாதா? கிருஷ்ணன் எங்கே இருக்கிறான் என்பது உனக்குத் தெரியாது! அப்படியா? அதை நான் நம்பவேண்டுமா? பொய் சொல்லாதே சத்ராஜித்! கிருஷ்ணனை இப்போதே என் முன்னால் கொண்டு வந்து நிறுத்து! உடனே! நீ தான் அவனை நேற்றிரவு கடத்தி வந்திருக்கிறாய்!”

1 comment:

ஸ்ரீராம். said...

திருப்பத்துக்கு மேல் திருப்பம்!