Sunday, January 17, 2016

பிரசேனன் மரணம்! சத்ராஜித் கலக்கம்!

சத்ராஜித் செய்வதறியாமல் வாயடைத்துப் போய் நின்றான். பலராமன் கூறியவற்றின் பொருளை உள்வாங்கிக் கொள்ளவே அவனுக்கு வெகு நேரம் ஆனது. அப்படியும் அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை. மிகவும் சிரமத்துடன் பேசினான். “கிருஷ்ணனை நான் கடத்தினேனா? என்ன சொல்கிறாய் வாசுதேவ புத்திரனே!”

“அவனை இப்போதே இங்கே கொண்டு வந்து நிறுத்துகிறாயா இல்லையா? முதலில் அதைச் சொல்! அப்போது தான் நான் அடுத்துச் செய்யவேண்டியது என்ன என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியும்.” சத்ராஜித் திகைத்துப் போனான். பலராமனின் தீர்க்கமான உறுதியான பேச்சின் தன்மையை அறிந்து அதன் பொருளை அறிந்து செய்வதறியாமல் தவித்தான். இந்தப் புதிய மாற்றத்தை அவனால் எதிர்கொள்ள முடியவில்லை. வேறு வழியின்றித் தன் கரங்களைக் கூப்பியவண்ணம் சொன்னான். “வாசுதேவ புத்திரரே! நீங்கள் சொல்லித்தான் அதுவும் இப்போது சொல்வதன் மூலம் தான் நான் கிருஷ்ணன் துவாரகையில் இல்லை என்பதையும், அவன் மறைந்துவிட்டான் என்பதையும் அறிந்தேன். இதற்கு முன்னர் எனக்குத் தெரியாது!”

பலராமன் அதை நம்பாமல் தன் தலையை அசைத்தான். “அன்று அவன் உன் மாளிகைக்கு வந்தபோது நீ அவனைக் கொல்ல முயற்சி செய்தாய்! உன்னால் அது முடியவில்லை. ஆகவே இன்று அவனைக் கடத்தி உன் கண்காணிப்பில் வைத்திருக்கிறாய்!” என்றான். “வாசுதேவ புத்திரா! என் தந்தையின் நற்பெயரின் மீது ஆணையாகச் சொல்கிறேன். கிருஷ்ணன் இப்போது காணாமல் போனதற்கும் எனக்கும் சம்பந்தம் ஏதும் இல்லை! நான் இதைக் குறித்து ஏதும் அறியேன்!” என்றான் சத்ராஜித். “அப்படியா? நீ உண்மையைத் தான் பேசுகிறாயா? அப்படி என்றால் என்னுடன் வா! வந்து ராஜா உக்ரசேனரிடம் உன் தரப்பு வாதத்தை எடுத்துச் சொல்! அவர் திருப்தி அடைகிறாரா பார்க்கலாம்.” என்றான் பலராமன்.

சத்ராஜித்திற்கு ஏதும் புரியவில்லை. தன்னைச் சுற்றிலும் பார்த்தான். பலராமனை எதிர்க்கலாம் என்றே முதலில் நினைத்தான். ஆனால் ஏனோ ஒரு தயக்கம் வந்து குறுக்கிடவே தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு தன் எண்ணத்தை மாற்றிக் கொண்டான். ஏற்கெனவே அவன் காவலாளர்கள் தூரத்தில் நின்று கொண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். அருகே வந்தால் பலராமனின் பிடிக்குள் அகப்பட்டுவிடுவோமோ என்னும் பயம் தான் காரணம். இவர்களை எப்படி நம்புவது? அதோடு பலராமனைத் தாக்கினால் என்ன நடக்கும் என்பதை அவன் தன் கண்களாலேயே நுழைவாயில் இடிக்கப்பட்ட விதத்திலிருந்து புரிந்து கொண்டு விட்டான். ம்ம்ம்ம்ம்ம். கிருஷ்ணனைத் தாக்க முயற்சித்திருக்கக் கூடாது! அது தான் செய்த பெரிய தவறு. சத்ராஜித் அதை இப்போது தாமதமாகப் புரிந்து கொண்டுவிட்டான். இந்தத் தவறை அவனால் திருத்தவும் இயலாது. அவனுக்குக் கொஞ்சம் அவகாசம் தேவைப்பட்டது. அது மட்டும் கிடைத்தால் எப்படியாவது பேசிச் சமாளிக்கலாம்.

“நான் இன்னமும் என் காலை நியமங்களை முழுதுமாக முடிக்கவில்லை. பாதியில் எழுந்து வந்திருக்கிறேன். நீங்கள் வந்தபோது காலை அனுஷ்டானங்களைத் தான் செய்து கொண்டிருந்தேன். “ என்று இழுத்ஹ்டான் சத்ராஜித். ஆனால் பலராமன் எதற்கும் அசைந்து கொடுக்கவில்லை. “இதோ பார், நைனனின் மகனே! நான் உன்னை அரச மாளிகைக்கு அழைத்தால் வரவேண்டியது மட்டுமே உன் கடமை! அதை மறவாதே! நீ நித்யகர்மானுஷ்டானங்களைச் செய் அல்லது செய்யாமல் இரு! எனக்கு அதைக் குறித்த கவலை ஏதும் இல்லை. நீ வர மறுத்தால் நான் உன்னை இழுத்துக் கொண்டு செல்வேன்!”

“ஆனால் என்னால் எப்படி வரமுடியும்?” கெஞ்சினான் சத்ராஜித். என் நித்திய கர்மாக்களை நான் இன்னமும் செய்து முடிக்கவில்லை. அதோடு நான் அரசரைச் சந்திக்க வேண்டிய நியமப்படி ராஜ தரிசனத்துக்கான உடைகளை அணியவேண்டும்.”

“உன் பிதற்றல்களை முதலில் நிறுத்து! நான் சொன்னால் சொன்னது தான்! அதுவே முடிவானது! ஒன்று நீயாக என்னுடன் வா, அல்லது நான் உன்னை இழுத்துச் செல்வேன்.” சொல்லிய வண்ணம் பலராமன் சத்ராஜித்தை நோக்கி அடி எடுத்து வைத்தான். அப்போது திடீரென உத்தவன் அந்தக் கூட்டத்தினிடையில் வழியை உண்டாக்கிக் கொண்டு வந்தான். பலராமனிடம் வந்து ரகசியமாக ஏதோ சொன்னான். பலராமன் குனிந்து கொண்டு உத்தவனின் கிசுகிசுப்பேச்சை உன்னிப்பாகக் கவனித்தான். உத்தவன் சொன்னான்.

“பெரியவரே, மாட்சிமை பொருந்திய வசுதேவர் இந்த விஷயத்தை உன்னிப்பாகக் கவனித்து வருகிறார். கிருஷ்ணன் தன்னுடைய சொந்த விருப்பத்தின் பேரில் தான் இங்கிருந்து சென்றிருக்கிறான். செல்லும்போது வேட்டைக்காரர்களின் உடையை அணிந்து சென்றிருக்கிறான்.” என்றான். பலராமன் உள்ளூர நகைத்தான். அவனுக்குத் தான் ஏற்படுத்திய குழப்பம் மிகவும் பிடித்திருந்தது. ஆனாலும் இதிலிருந்து வெளியே வந்தாக வேண்டும். “உத்தவா, நான் சத்ராஜித்தை உக்ரசேன மஹாராஜாவை வந்து சந்திக்கவேண்டும் என்று சொல்லிவிட்டேனே!” என்றான். “அவன் அதற்குக் கீழ்ப்படிந்தே ஆக வேண்டும்! என்னுடன் அவன் வரட்டும்!” என்றான்.

அப்போது திடீரென சத்ராஜித்தின் காவலர்களிடையே பெரும் குழப்பம். அவர்கள் கூடி நின்றவர்கள் பிரிந்து திரும்பிப் பார்த்தார்கள். அவர்களில் ஒருவன் வீரன் ஒருவனை மிகவும் மோசமான கோலத்தில் அழைத்துக் கொண்டு வந்திருந்தான். அந்த வீரன் பார்க்கவே பயங்கரமாகக் காட்சி அளித்தான். அவன் உடலெங்கும் காயங்கள் காணப்பட்டன. மிக மோசமாக ரத்தம் இழந்து கொண்டிருந்தான். தலை எல்லாம் அவிழ்ந்து தொங்கி அங்குமிங்கும் பறந்தது. அவன் காலில் இருந்து ரத்தம் வந்து கொண்டிருந்தது. அவன் கண்கள் வெறி கொண்டவனைப் போலக் காட்சி அளித்தன. அங்குமிங்கும் பார்த்துக் கொண்டு நிலை இல்லாமல் தவித்துக் கொண்டிருந்தான். சத்ராஜித்தைக் கண்டதும் அவன் சத்ராஜித்தின் கால்களில் விழுந்து தன் தலையை அவன் காலடிகளில் வைத்துக் கொண்டு பெரும் குரலெடுத்துக் கதறினான்.

“பிரபுவே, பிரபுவே, தங்கள் அருமைத் தம்பி பிரபு பிரசேனர் நம்மை விட்டுப் பிரிந்து சிவலோகம் அடைந்துவிட்டார்.” என்று சொல்லிய வண்ணம் மீண்டும் பெரும் குரலெடுத்துக் கதறினான். சத்ராஜித் அதிர்ச்சி அடைந்தான். “என்ன?” என்று கேட்டான். “எங்கே என் அருமைத் தம்பி பிரசேனன்?” என்று கேட்டவண்ணம் தன் தலையை இரு கரங்களாலும் அழுத்திப்பிடித்துக் கொண்டான். தன் தந்தையின் திகைப்பைக் கவனித்த சத்ராஜித்தின் மகன்கள் இருவரும் விரைவில் அவன் அருகே வந்தனர். வந்த வீரன் உடல் எல்லாம் நடுங்கிக் கொண்டிருந்தது. குரலும் நடுங்கியது. தான் சொன்னதையே மீண்டும் சொன்னவன், “பிரபுவே, ஒரு சிங்கம் பிரசேனரைக் கொன்று விட்டது!” என்றான் நடுங்கும் குரலில். சத்ராஜித்திற்குத் தான் கேட்டவற்றை நம்பவே முடியவில்லை. “என்ன, ஒரு சிங்கம் அவனைக் கொன்று விட்டதா? எப்படி? அதை நீ எப்படி அறிவாய்?” என்று கேட்டான்.

“ஐயா, அவர் குதிரைக்குப் பின்னே என் குதிரையும் சென்று கொண்டிருந்தது. அப்போது காட்டில் இருந்து ஒரு சிங்கம் அவர் மேல் பாய்ந்தது.” என்று சொன்னவன் மீண்டும் அந்தச் சிங்கம் எதிரே நின்று கொண்டு தன் மேல் பாய்ந்துவிடுமோ என பயந்தவன் போல நடுங்கினான். தான் உயிர் பிழைத்து வந்தது எவ்வளவு பெரிய விஷயம் என நினைக்க நினைக்க அவனுக்குத் திகைப்பாக இருந்தது. “என்ன ஆகிவிட்டது!” என்று நினைத்த சத்ராஜித்திற்கு இந்த விஷயத்தின் இந்தச் செய்தியின் முக்கியத்துவம் அப்போது தான் புரிந்தது. உடனேயே அவன் முகம் கவலையிலும், பயத்திலும் வெளுத்தது! அதைப் பார்த்த பங்ககரா தன் தகப்பனின் தோள்களைச் சுற்றித் தன் கரங்களைப் போட்டு ஆறுதலாக அணைத்துக் கொண்டான்.

சத்ராஜித் இங்கேயும், அங்கேயும் சுற்றிச் சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தான். அவனால் மேலே ஏதும் பேசமுடியவில்லை. அடுத்த கேள்வியை எப்படிக் கேட்பது என்றும் யோசித்துக் கொண்டிருந்தான். அதன் பின்னர் தனக்குள் பேசுவது போல் முணுமுணுத்தான். “பிரசேனனை சிங்கம் கொன்றதை நீ பார்த்தாயா? அது உறுதியா?” என்று கேட்டான். அவன் கேட்டது அந்த வீரனுக்குப் புரியாத காரணத்தால் பங்ககரா அதைத் திரும்ப அவனிடம் சொன்னான்.

“நான் அதைப் பார்க்கவேண்டிக் காத்திருக்கவில்லை ஐயா! பிரபுவே, அந்தச் சிங்கம் பெரும் குரலில் உறுமிக் கொண்டே அவர் மேல் பாய்ந்ததை என் இரு கண்களாலும் பார்த்தேன். அப்போது பிரசேனர் குதிரையின் மேலிருந்து கீழே விழுந்துவிட்டார். என் குதிரை இதைக் கண்டு பயத்தில் திரும்பி விட்டது. என்னைக் கீழே தள்ளிவிட்டுத் தன் உயிரைக் காத்துக்கொள்ள வேண்டி அது ஓடி விட்டது.” என்றான் அந்த வீரன்.

“பிரசேனன் கொல்லப்பட்டான்! பிரசேனன் கொல்லப்பட்டான்!” மீண்டும் மீண்டும் புலம்பினான் சத்ராஜித்.  பயத்திலும் கலக்கத்திலும் அவன் விழிகள் பயங்கரமான ரத்தச் சிவப்பாகக் காணப்பட்டன. அவன் தனக்குள்ளாக முணுமுணுத்துக் கொண்டான். “ச்யமந்தகம், ச்யமந்தகம்! ஆஹா! ச்யமந்தகம்! ஓ, சூரிய பகவானே! நான் என்ன செய்வேன்!” என்று புலம்பிய வண்ணம் தன் கரங்களை பங்ககராவின் மேல் போட்டுக் கொண்டு அவன் துணையோடு நடக்க ஆரம்பித்தான். ஆனால் அவனால் ஓர் அடி  கூட எடுத்து வைக்க முடியாமல் கீழே அப்படியே மயங்கிச் சரிந்தான். இதைப் பார்த்த பலராமன், “பங்ககரா, நான் இப்போது போகிறேன். உன் தந்தையை ஆசுவாசம் செய்! அவரை அதன் பின்னர் வந்து அரசரைக் காணச் சொல்! இல்லை எனில் நான் மீண்டும் இங்கே வந்து அவரை இழுத்துச் செல்லும்படி ஆகும். ஆகவே அதற்கு இடம் வைக்காமல் அவரையே போய்ப் பார்க்கச் சொல்!” என்ற வண்ணம் தனக்குள் சிரித்துக் கொண்ட பலராமன் சத்ராஜித்தின் மாளிகையை விட்டு வெளியேறினான். பங்ககரா, தன் சகோதரர்கள் மற்றும் அங்கிருந்த காவலாளிகளின் உதவியுடன் தன் தந்தையைத் தூக்கிக் கொண்டு மாளிகையின் உள்ளே சத்ராஜித்தின் படுக்கை அறையை நோக்கிச் சென்றான்.


1 comment:

ஸ்ரீராம். said...

இக்கட்டான நிலைமையில் சத்ராஜித்!