Monday, January 18, 2016

கண்ணன் யோசிக்கிறான்!

இப்போது நாம் கிருஷ்ணனைக் கொஞ்சம் கவனிக்கணும். அவன் என்ன செய்தான், எப்படிச் செய்தான் எனத் தெரிந்து கொள்ள அவன் பின்னே செல்ல வேண்டி இருக்கிறது. கொஞ்சம் அலைச்சல் தான். ஆனாலும் என்ன செய்யறது? முதல்நாள் இரவு படுத்துக் கொண்ட கிருஷ்ணன் காலை வெகு சீக்கிரம் கண் விழித்துவிட்டான். சூரியோதயத்திற்கு இன்னும் சில நாழிகைகள் இருக்கின்றன. அதற்கு முன்னாலேயே எழுந்துவிட்டான் கிருஷ்ணன். சப்தமே செய்யாமல் கடலுக்குச் சென்று குளித்து முடித்தான். காலை அனுஷ்டானங்களையும் முடித்துக் கொண்டான். பின்னர் சென்றது போல் சப்தமே இல்லாமல் திரும்பத் தன் மாளிகைக்கு வந்தான். தன்னுடைய உடைகள், ஆயுதங்கள் அனைத்தையும் வைத்திருக்கும் அறைக்குச் சென்றான். தேடிப் பிடித்து ஒரு வேட்டைக்காரனின் உடையை அணிந்து கொண்டான். மடிப்பு மடிப்பாகச் சென்ற அது கிருஷ்ணனின் தலை வரைக்கும் சென்றது. அப்படியே தலையில் அதை முடிந்து கொண்டான். முழங்காலுக்குச் சிறிது மேல் வரை வந்த அந்த உடையை இரு பக்கமாகப் பிரித்து இரு கால்களுக்கிடையில் அணிந்ததால் அவனால் எங்கும், எதிலும் வேகமாகச் செல்லலாம். இடுப்பில் ஒரு உருமாலை இறுக்கிக் கட்டிக் கொண்டான். அரைக்கச்சை போல் அது அமைந்தது. தோல் வாரினால் பிணைத்த மரச் செருப்பை அணிந்து கொண்டான். இப்போது ஆயுதம் தரிக்க வேண்டும்.

ஆயுதங்களைக் கூர்ந்து கவனித்துப் பார்த்து மூங்கிலினால் செய்த வில்லை எடுத்துக் கொண்டான். பொதுவாக வேட்டைக்காரர்கள் இம்மாதிரி வில்லைத் தான் பயன்படுத்துவார்கள். அதற்கேற்றவாறு அம்புகளையும் பொறுக்கி எடுத்துக் கொண்டான். அரைக்கச்சையில் பெரிய கத்தி ஒன்றை உறையோடு செருகிக் கொண்டான். கடைசியாக அரிவாள் ஒன்றைக் கையில் எடுத்துக் கொண்டான். சற்றுத் தயங்கியவன் ஒரு உல்லாசமான அதே சமயம் விசித்திரமான சிரிப்புடன், தன் புல்லாங்குழலை எடுத்தான். அவன் சிறுவனாக இருந்தபோது இந்தப் புல்லாங்குழல் அவனை விட்டுப் பிரிந்தது இல்லை. இப்போதோ அவன் புல்லாங்குழலை இசைப்பது குறைந்தே விட்டது; ஏன் அறவே இல்லை! அதை இப்போது எடுத்துத் தன் இடையில் அரைக்கச்சைக்குள் செருகிக் கொண்டான். பின்னர் அதே புன்னகை மாறாமல் மாளிகையின் சமையல் கூடத்திற்குச் சென்றான். ஓலையினால் பின்னப்பட்ட ஒரு சிறு பையை எடுத்துக் கொண்டு அதில் உணவுப் பொருட்களை நிரப்பிக் கொண்டு அதை நன்கு மூடித் தன் தோளில் தொங்க விட்டுக் கொண்டான். பின்னர் எவரும் அறியாமல் வீட்டை விட்டு வெளியேறி காடு இருக்கும் திசை நோக்கி நடந்தான்.

கடந்து சென்ற மூன்று நாட்களின் சம்பவங்கள் அனைத்தும் அவன் கண் முன்னர் வரிசையாக வந்தன. அவற்றை ஒன்றோடு ஒன்று பொருத்திப் பார்த்துக் கொண்டு நடந்தான். சத்ராஜித்தின் தம்பி பிரசேனன், மூர்க்கத்தனமானவன் ஒரு மோசமான மனிதன், எங்கே எந்தச் சச்சரவு நடந்தாலும் அதில் பங்கெடுத்துக் கொள்பவன், ஒரு ரகசியமான சந்தேகத்துக்கிடமான வேலையைச் செய்ய பாதி ராத்திரியில் சென்றிருக்கிறான். அவன் அப்படி எங்கே, எதற்காக, ஏன் சென்றான்? அதுவும் சத்ராஜித் துவாரகையின் பெரிய பெரிய தலைவர்களை எல்லாம் மிரட்டிப் பயமுறுத்திக் கிருஷ்ணன் தான் ச்யமந்தகத்தைத் திருடினான் என ஒப்புக் கொள்ள வைப்பதற்காகப் போராடிக் கொண்டிருக்கையில் அவனுடன் இல்லாமல் பிரசேனன் மட்டும் எங்கே தனியாகப் போயிருக்க முடியும்? சந்தேகமாக இருக்கிறது. ச்யமந்தகம் காணாமல் போனதற்கும் பிரசேனனுக்கும் நிச்சயம் ஏதோ தொடர்பு உள்ளது.
அதோடு சாத்யகி காணாமல் போனதுக்கும் சத்யபாமா காணாமல் போனதற்கும் சம்பந்தம் இருப்பதாகவும் கண்ணன் நினைக்கவில்லை. இருவரும் ஒருவர் மீது ஒருவர் காதல் கொண்டு இங்கிருந்து ஓடவில்லை. இது காதலர்களின் ஓடுதல் இல்லை. சாத்யகி கிருஷ்ணனிடம் எதையும் எப்போதும் ஒளித்தது இல்லை. அவனிடம் ரகசியம் என்பதே இல்லை. ஹஸ்தினாபுரம் செல்கையில் சத்யபாமாவால் அவன் கடத்திச் செல்லப்பட்டது குறித்து சாத்யகி கிருஷ்ணனிடம் நன்கு விவரித்திருந்தான். அவள் தந்தையால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கொலையாளிகளால் அவன் கொல்லப்படாமல் சத்யபாமா உதவியதையும் கூறி இருந்தான். அதோடு இல்லாமல் சாத்யகியிடம் அவள் திருமணம் கிருஷ்ணனுடன் நடப்பதற்கு அவன் உதவி தேவை என்றும் கூறி அதற்காக அவனிடம் உறுதிமொழியும் வாங்கிக் கொண்டிருக்கிறாள். ஆகவே அவர்கள் இருவரும் ச்யமந்தகத்தைத் தான் தேடிப் போயிருக்க வேண்டும். அதைத் தேடிக் கண்டு பிடித்தால் கிருஷ்ணனின் மேல் விழுந்திருக்கும் பழியை நீக்கலாம். அது தான் அவர்கள் எண்ணம். ஆம், அப்படித்தான் இருக்க வேண்டும்.

சாத்யகியைக் குறித்துக் கிருஷ்ணன் நன்கு அறிவான். கிருஷ்ணனுக்காகத் தன் உயிரையே கொடுக்கும் வண்ணம் விசுவாசம் மிக்கவன் அவன். ஆகவே அவன் கிருஷ்ணனுக்காக ச்யமந்தகத்தைத் தேடிச் சென்றிருந்தால் அதில் ஆச்சரியப்பட ஏதுமில்லை. ஆனால் சத்யபாமாவும் அவனுடன் சென்றிருக்கிறாள் எனில் அதற்கு ஒரே ஒரு காரணம் தான் இருக்க முடியும். பாமாவுக்கு அவள் தந்தை எங்கே ச்யமந்தகத்தை ஒளித்து வைப்பார் என்பது தெரிந்திருக்க வேண்டும். ஆகவே இந்த விஷயத்தில் அவள் சாத்யகியின் உதவியை நாடி இருக்கலாம். ஆகவே இருவரும் ஒன்றாகப் போயிருக்கலாம். இதில் தான் இருவரும் முட்டாள் தனமாக நடந்து கொண்டிருக்கிறார்கள். முட்டாள்கள், முட்டாள்கள்! இப்படிச் செய்ததின் மூலம் இருவரின் நற்பெயர் மட்டுமா கெட்டுப்போகும்? கிருஷ்ணனுக்கும் இதனால் பலன் ஏதும் கிடைக்கப் போவதில்லை. இருவரும் கிருஷ்ணனை எப்படியாவது இந்தப் பழியில் இருந்து காப்பாற்ற வேண்டும் என்னும் ஆவலில் கிளம்பிப் போயிருக்கிறார்கள். இது கிருஷ்ணனுக்கு எவ்வகையிலும் நன்மையைத் தரப் போவதில்லை.

யோசிக்க யோசிக்கக் கிருஷ்ணனுக்கு சத்யபாமா தன்னுடைய மடத்தனத்தினால் இத்தகைய காரியத்தைச் செய்திருப்பதாகவே தோன்றியது. அவனைக் காப்பாற்ற வேண்டி இப்படி ஓர் மடத்தனத்தைச் செய்து தன்னைத் தானே அழித்துக் கொள்ளப் போகிறாள் சத்யபாமா! அப்படித் தான் இருக்க வேண்டும். மேலும் யோசனைகள் ஓடின கிருஷ்ணனுக்குள். சத்யபாமா அந்தப் பிரியாவிடைப் பாடலின் விட்டுப் போன வரிகளை அவனுக்கு அனுப்பி வைத்திருந்தாளே! அதில் அவனுக்கு ஓர் செய்தி இருப்பதாகவும் கூறி இருந்தாள். அதற்குத் தான் ருக்மிணி அவளையும் ஷாய்ப்யாவையும் பாமா மறைமுகமாகத் தாக்கிக் கண்டித்திருப்பதாகக் கூறினாள். ஆனால் அவள் சொன்னது தவறு! ஆம், பாமா அவர்கள் இருவருக்கும் அதில் செய்தி அனுப்பவில்லை. சத்ராஜித்தின் மாளிகைக்குச் சென்றபோது  சத்ராஜித்திடம் பேசியபோது கண்ணன் தானே கூறினான். அவளுக்கு இந்தப் பாடல் தெரிவதற்கு வாய்ப்பே இல்லை என்றும் , இந்தப் பாடலைத் தினமும் பாடி வரும் சாத்யகனின் குடும்பத்திற்கு மருமகளாகச் செல்லும் வாய்ப்பு பாமாவுக்குக் கிடைக்காது என்றும் அப்படி அவள் போனாலும் அது பொருந்தாத திருமணமாக இருக்கும் என்றும் ஏனெனில் க்ஷத்திரிய தர்மம் பற்றி அவள் ஏதும் அறிய மாட்டாள் என்றும் கண்ணன் தானே கூறி இருந்தான்.

அவளுக்கு அந்தப் பாடல் நிச்சயமாகத் தெரியாது; தெரிந்திருந்தாலும் ஓரிரு வரிகள் தான் தெரிந்திருக்கும். இதனால் அவள் மனம் புண்பட்டிருக்கும். அவள் கௌரவத்திற்கும், அகங்காரத்திற்கும் கிருஷ்ணன் மேற்கண்டவாறு கூறியவை பங்கம் விளைவித்திருக்கும். அதனால் தான் அவள் சுபத்ராவிடம் அந்தப் பாடலை முழுதும் பாடுமாறு கேட்டிருக்கிறாள். அதனால் தான் அவள் இப்போது தன்னை இந்த வேலையில் ஈடுபடுத்திக் கொள்வதன் மூலம் தானும் ஒரு க்ஷத்திரியப் பெண்மணி தான்; அதிலும் மற்றப் பெண்களை விடத் தான் சிறந்தவள்; என்றெல்லாம் நிரூபிக்க வேண்டி இந்த வேலையில் இறங்கி இருக்கிறாள். முட்டாள் பெண்! அவள் தந்தையின் கௌரவமும், அவள் குடும்ப கௌரவமும் இதில் அடங்கி இருப்பதை உணரவே இல்லை. அவளும் ஒரு வீரனின் மனைவியாவதற்கு முற்றிலும் தகுதியானவள் என்பதை நிரூபிக்க வேண்டும் அவளுக்கு! இதன் மூலம் அவள் சுய கௌரவம் பாதிக்கப்படுவதோடு அல்லாமல் அவள் உயிருக்கும் ஆபத்து ஏற்படும். அதை உணரவே இல்லையே!

ஏன் இப்படி எல்லாம் நடக்கிறது? இருவரும் மிக மிக அவசரமாக ஏதேதோ செய்துவிட்டார்கள். இப்போது கண்ணனின் தர்மம் அவர்களை எவ்வகையிலாவது காப்பாற்றுவது! இந்த மாபெரும் அபகீர்த்தியில் இருந்தும், உயிருக்கே ஏற்படப் போகும் ஆபத்திலிருந்தும் அவர்களைக் காப்பது கண்ணனின் கடமை! ச்யமந்தகத்துக்கு எது நேர்ந்தாலும் சரி. அவர்கள் இருவரும் காப்பாற்றப்பட வேண்டும். ஹூம்! எனக்கு உதவுவதாக என் மேல் அன்பு கொண்டவர்கள் எடுத்துக் கொள்ளும் நடவடிக்கைகளால் எனக்கு மிக அதிகமான பொறுப்பும், கடமையும் சுமந்து விடுகிறது. இப்போது என் மேலுள்ள அதீத அன்பினால் இவர்கள் செய்த இந்தக்காரியத்தினால் என் பொறுப்பும் அதிகரித்து விட்டது. ஏன் இப்படிச் செய்கின்றனர்? இவர்கள் அன்பே எனக்கு மாபெரும் சுமையாகப் போய் விடுகிறதே!

பாமாவுக்கு பிரசேனன் தான் அந்த ச்யமந்தகத்தை எடுத்துச் சென்றிருக்கிறான் என்பது தெரியுமா? அப்படித் தெரிந்தால் அவள் அவன் சென்றிருக்கும் வழியிலேயே செல்வாள். இந்தப் பிரசேனன் தான் ச்யமந்தகத்தை எடுத்துக் கொண்டு எங்கு தான் சென்றிருப்பான்? கிருஷ்ணன் வியந்தான்.

1 comment:

ஸ்ரீராம். said...

//அதோடு இல்லாமல் சாத்யகியிடம் அவள் திருமணம் கிருஷ்ணனுடன் நடப்பதற்கு அவன் உதவி தேவை என்றும் கூறி அதற்காக அவனிடம் உறுதிமொழியும் வாங்கிக் கொண்டிருக்கிறாள்//

ஆக, பாமாவுக்குத் தன்மேலான காதலைக் கண்ணன் அறிவான்!