Saturday, November 26, 2016

துன்பமுறும் எமக்கென்றே எண்ணி நின் வாய்ச்சொல்லை மறுத்துரைத்தோமா!

ஆயிற்று. அனைவரும் ஹஸ்தினாபுரம் செல்வது முடிவாகி விட்டது. நாளை கிளம்ப வேண்டும். அன்று திரௌபதி யுதிஷ்டிரனைத் தனிமையில் சந்திக்க வந்தாள். அவள் உடல் முழுவதும் கோபத்திலும் துக்கத்திலும் நடுங்கிக் கொண்டிருந்தது. கண்கள் ரத்தச் சிவப்பாகக் காணப்பட்டன. யுதிஷ்டிரன் தன் அறையில் தனிமையில் தான் இருந்தான். திரௌபதி அவனைப் பார்த்த பார்வையைக் கண்டு அவன் உள்ளூர நடுங்கினான். அவன் எதிரே நிதானமாக அமர்ந்தாள் திரௌபதி! திரௌபதியை வேதனையுடன் பார்த்தான் யுதிஷ்டிரன். திரௌபதி கவலையினால் உள்ள வருத்தத்துடன் பிரமை பிடித்தவள் போல் இருந்தாள். வழக்கமான புத்திசாலித்தனமோ, கலகலப்போ அவளிடம் இல்லை!

“பாஞ்சால இளவரசியே! என்ன ஆயிற்று உனக்கு? இது என்ன கோபம்? ஏன் இவ்வலவு கோபத்துடன் இருக்கிறாய்?” என்று யுதிஷ்டிரன் கேட்டான். “கோபமா, ஆரிய புத்திரா, கோபம் என்பது சாதாரண வார்த்தை! எனக்குக் கோபம் இல்லை! சீற்றம். தாங்கொணாச் சீற்றம். சீற்றம் கொண்ட பெண்புலியை ஒத்திருக்கிறேன் இப்போது நான்! நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள் என்பதும் அடுத்து உங்கள் நோக்கம் என்ன என்பதையும் நான் புரிந்து கொண்டு விட்டேன். நீங்கள் ஓர் யுத்தம் நடப்பதை விரும்பவில்லை. என்ன விலை கொடுத்தாலும் அந்த யுத்தத்தைத் தடுக்கவே நினைக்கிறீர்கள். அப்படி எனில், அதாவது நீங்கள் துரியோதனனின் சவாலை ஏற்றுக் கொண்டு இந்த அரசர்களின் விளையாட்டு எனப்படும் சூதாட்டத்தை ஆடி அதில் தோற்றுப் போக முடிவு செய்து விட்டீர்கள். உங்களுக்குக் கீழ்ப்படிந்து நடப்பதாகவும், உங்கள் பேச்சைக் கேட்பதாகவும் நாங்கள் அனைவரும் செய்த சபதத்தால் நீங்கள் எங்களைக் கட்டுப்படுத்தி விட்டீர்கள்!”

“நீங்கள் தான் இந்தக் குடும்பத்துக்கு மூத்தவர்! அது உண்மையே! எங்கள் உடலும், உயிரும் உங்களிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. உங்களுக்கு நாங்கள் அனைவரும் கடமைப்பட்டிருக்கிறோம். ஆனால், ஆரிய புத்திரா, உங்களிடம் கொஞ்சமேனும் எங்களுக்காக அனுதாபமோ, நாங்கள் நன்றாக இருக்கவேண்டுமே என்னும் எண்ணமோ இல்லையா? இல்லை என்றே நினைக்கிறேன். போகட்டும்! உங்கள் குழந்தைகளுக்காகவேனும் இது குறித்து சிந்தித்தீர்களா? இல்லை எனில் இந்த நாட்டு மக்களுக்காக? இந்த நாடு மக்கள் அனைவருமே உங்களை நம்பி நீங்கள் நல்லாட்சி தருவீர்கள் என்பதை நம்பி உங்களுக்காக மட்டுமே இங்கே வந்தவர்கள். இந்திரப் பிரஸ்தத்தையே அவரக்ளுக்காக சொர்க்கமாக மாற்றிக்காட்டுவதாகச் சொல்லிக் கொண்டிருந்தீர்கள்! நினைவில் உள்ளதா? இந்த மக்களை என்ன செய்வதாக உத்தேசம்?”

“பாஞ்சாலி, நான் மரியாதைக்குரிய பெரியப்பாவின் ஆணையைக் கட்டளைகளைச் சிரமேற்கொண்டு ஏற்றாக வேண்டும். அதிலிருந்து நான் தப்ப முடியாது! அது சரியல்ல!” என்றான் யுதிஷ்டிரன். “ஹூம், ஆரியபுத்திரா, இப்போதேனும் சொல்லுங்கள்! ஹஸ்தினாபுரம் செல்ல வேண்டும் என்னும் முடிவை ஏன் எடுத்தீர்கள்? அதற்கு என்ன காரணம்?” என்று கேட்டாள் திரௌபதி.

“இதோ பார் திரௌபதி, என் சகோதரர்கள் மேல் எனக்கூ எவ்வளவு  பாசம் என்றும் அவர்கள் மேல் என் உயிரைக்காட்டிலும் அதிகப் பாசம் வைத்திருப்பதையும் நீ நன்கறிவாய்! அதே போல் என் தாயையும் நான் மதிக்கிறேன் வணங்குகிறேன், அன்பு செலுத்தி வருகிறேன். உன்னிடம் நான் கொண்டிருக்கும் அன்புக்கு அளவு உண்டா? நெஞ்சார உன்னை நேசிக்கிறேன். நான் என்ன செய்யப் போகிறேன் என்பதை நானே நன்கு அறிய மாட்டேன். என்ன நடக்கப் போகிறதோ! ஆனால் கடைசி வரை தர்மம் எனக்குக் காட்டி வரும் பாதையிலேயே நடக்க உத்தேசித்துள்ளேன். என்னை தர்மத்திலிருந்து பிறழ்ந்தவனாகக் காட்ட வேண்டும் என்பது தான் உன் விருப்பமா? என்னை அப்படி எல்லாம் நீ ஏமாற்ற மாட்டாயே?” என்று கேட்டான். திரௌபதி மனம் உடைந்து அழுது விட்டாள். கண்ணீர் வெள்ளமாகப் பெருகியது.

“ஆஹா, இப்படி எல்லாம் வேதனைப்படாதே, திரௌபதி! என்னிடம் முழு நம்பிக்கை வை!” என்றான் யுதிஷ்டிரன்.

“ஆஹா, நம்பிக்கை! அதுவும் உங்களிடம்! உங்களுக்கு யாரிடம் அக்கறை இருக்கிறது? உங்கள் தம்பிகளிடம் கூட இல்லை! உங்கள் பிள்ளைகளிடம்? ம்ஹூம், அதுவும் இல்லை! உங்கள் தம்பிகள் என்ன நினைக்கிறார்கள் இந்த விஷயத்தில் என்பதை நீங்கள் நன்கறிவீர்கள். அப்படி இருந்தும் உங்களுக்குக் கொடுத்திருக்கும் வாக்குக்காக உங்களை எதிர்க்காமல் உங்களுடன் இருப்பதாக முடிவு எடுத்திருக்கிறார்கள். சரி, போகட்டும்! வயதான உங்கள் தாயிடம் ஏதேனும் அக்கறை உங்களுக்கு உண்டா? என்னிடம்? என்னை நீங்கள் ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை! நம் மகனிடம் கூட உங்களுக்கு அக்கறை இல்லை!” என்ற திரௌபதி சற்று நேரம் நிறுத்திவிட்டு அழுதாள். பின்னர் நீண்ட பெருமூச்சு விட்டு விட்டுத் தொடர்ந்து, “துரியோதனன் மனதில் எவ்வளவு விஷம் இருக்கிறது என்பதை நீங்கள் அறிவீர்கள் இல்லையா? அந்த சூழ்ச்சிக்கார நயவஞ்சக ஷகுனியைக் குறித்தும் உங்களுக்குத் தெரியாதா? நாம் இப்போது ஹஸ்தினாபுரத்துக்கு என்ன காரணத்துக்காக அழைக்கப்பட்டிருக்கிறோம் என்பதை அறிய மாட்டீர்களா? அனைத்தையும் நன்கறிந்திருந்தும் நீங்கள் நம்முடைய விதிக்கு அது அளிக்கப் போகும் மாபெரும் தண்டனைக்கு நம்மை எல்லாம் அழைத்துச் செல்லத் தயாராகி விட்டீர்கள்!”

“உன்னை நீயே துன்புறுத்திக் கொள்ளாதே பாஞ்சாலி! நம் தாய் குந்தி தேவி நம்முடன் வருகிறார். சகோதரர்கள் அனைவருமே வருகின்றனர். ஆகவே நீயும் கூட வருகிறாய்! அவ்வளவு ஏன்! பாஞ்சாலி, நம் ஆசாரியர் தௌம்யரும் நம்முடன் வருகிறார்!” என்றான் யுதிஷ்டிரன்.

திரௌபதி எழுந்து நின்றாள். “ஆஹா, இப்போது மட்டும் வாசுதேவக் கிருஷ்ணன் இங்கிருந்தால்! ம்ம்ம்ம்! குறைந்த பட்சமாக நீங்கள் செய்து கொள்ளப் போகும் இந்தத் தற்கொலையிலிருந்து உங்களைக் காப்பாற்றி இருப்பானே! அவன் கிளம்பும்போது என்ன சொன்னான் என்பது நினைவில் இருக்கிறதா? அவன் சொன்னான்;”மூத்தவரே, துரியோதனனின் வலையில் விழுந்துவிடாதீர்கள்!” என்றான். அவன் புத்திசாலி. விவேகம் உள்ளவன். அவன் மட்டும் இங்கிருந்தான் எனில் இந்தப் பொறியில் நீங்கள் மாட்டிக் கொள்வதைத் தடுத்து நிறுத்தி இருப்பான்.” என்றாள் திரௌபதி.

சொல்லொணாத் துயரில் ஆழ்ந்தான் யுதிஷ்டிரன். அவனைப் பார்க்கவே பாவமாக இருந்தது. அவன் அன்புக்கும் பிரியத்துக்கும் உரிய மனைவியும் சகோதரர்கள் நால்வரும் இப்போது வேதனையிலும் ஏமாற்றத்திலும் வெதும்பித் தவிக்கின்றனர். அவன் மரியாதைக்கு உரிய தாயும் அப்படியே இருக்கிறாள். அதுவும் எதற்காக? அவன் செய்திருக்கும் இந்த முடிவினால். தப்பி விட நல்ல வாய்ப்புக் கிடைத்தும் தப்பாமல் குடும்பத்தையும், இந்திரப் பிரஸ்தத்தையும் தியாகம் செய்ய யுதிஷ்டிரன் எடுத்த முடிவினால்! அதனால் தர்மமும் அழிந்து படுமோ? அதையும் தான் விட்டு விட நேருமோ? யுதிஷ்டிரன் குழம்பினான்.

தன் மனக்குமுறல்களால் எழுந்த விம்மல்களை அடக்கிக் கொண்ட திரௌபதி மேலும் சொன்னாள்:”சரி, சரி, ஆரிய புத்திரரே, யோசிக்காதீர். உங்கள் விருப்பம் போல் செய்யுங்கள். நாங்கள் எங்கள் அனைவருடைய உயிரை மட்டுமல்லாமல் நம் அருமைக் குழந்தைகளின் எதிர்காலத்தையும் உங்களிடம் ஒப்படைத்து விட்டோம். நீங்கள் தான் குடும்பத்திற்கு மூத்தவர் என்னும் அதிகாரத்தின் மூலம் எங்கள் அனைவரையும் சர்வ நாசம் செய்து விடுங்கள். அதற்கான அதிகாரம் உம்மிடம் உள்ளதே!” என்றாள்.

யுதிஷ்டிரனுக்கு எப்போதுமே திரௌபதியைப் பார்த்ததில் இருந்தே அவளிடம் அளவில்லா அன்பும் ஈடுபாடும் உண்டு. அவள் புத்திசாலித்தனத்தையும், உள்ளார்ந்த கர்வத்தையும், விவேகமான நடவடிக்கைகளையும் ரசித்ததோடு அல்லாமல் போற்றிப் பாராட்டவும் செய்தான். இப்போது அவள் இப்படிப் பேசினால்? இத்தனைக்கும் இதன் முக்கியத்துவத்தை அவள் உணர்ந்திருக்கிறாள். யுதிஷ்டிரன் ஏன் இந்த முடிவை எடுத்திருக்கிறான் என்பதைப் புரிந்து கொண்டிருக்கிறாள். வேறு வழியே இல்லாத சூழ்நிலையில் தான் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது என்பதையும் அறிவாள். அமைதியும், சமாதானமும் வேண்டுமானால், தர்மம் நிலைத்து இருக்க வேண்டுமானால் துரியோதனனின் சவாலை ஏற்றுக் கொள்வது ஒன்றே சிறந்த வழி! அவனுடைய அரச தர்மம் அவனை ஹஸ்தினாபுரம் நோக்கி இழுக்கிறது. என்ன நடந்தாலும் இந்தச் சவாலைத் துணிந்து ஏற்றுக் கொள் என்று சொல்கிறது. அவன் என்ன செய்வான்? அவன் வேண்டுவதெல்லாம் அமைதியும், சமாதானமுமே!

யுதிஷ்டிரனின் மனது போராட்டங்களால் சுக்குச் சுக்காக நொறுங்கிப் போனது. அவன் உண்மையில் இந்தச் சூதாட்டத்தை ஆடவே விரும்பவில்லை. அவன் அதில் நிபுணனே அல்ல. விளையாட்டாகத் தம்பிகளோடும், மனைவியோடும் எப்போதாவது ஆடும் ஆட்டம் சூதாட்டத்தில் சேர்ந்தது அல்ல! அது வேறு! ஆனால் இப்போது துரியோதனன் அழைத்திருப்பதோ உண்மையான சூதாட்டத்திற்கு! பணயம் வைத்து ஆடும் ஆட்டத்திற்கு! அதிலும் இதை அந்தச் சூழ்ச்சிக்கார ஷகுனியுடன் ஆட வேண்டுமாமே! அதிலும் யுதிஷ்டிரனுக்கு விருப்பமே இல்லை தான்! ஆனால் இப்போதிருக்கும் இந்த மோசமான சூழ்நிலையில் அவன் தப்பிக்க நினைத்தாலும் இயலாது! அவன் ஆடியே ஆகவேண்டும்! வேறு வழியே இல்லை! நினைக்கவே யுதிஷ்டிரன் நடுங்கினான். ஏனெனில் அவன் ஹஸ்தினாபுரம் போக மறுக்கலாம். ஆனால் போரைத் தடுக்க முடியாது. போர் வந்தே தீரும். எங்கும் மக்களும் வீராதி வீரர்களும் கொல்லப்படுவதைத் தவிர்க்க முடியாது! ஆனால் அவன் சகோதரர்கள் இதைத் தான் விரும்புகின்றனர்.

அவனுடைய இந்த நடவடிக்கை அவன் தாய், மற்றும் சகோதரர்கள், மனைவி திரௌபதி ஆகியோருக்கு முற்றிலும் பிடிக்கவில்லை. அவர்கள் அனைவரும் வேதனையுடனே இருந்து வருகின்றனர். யுதிஷ்டிரன் பெருமூச்சு விட்டான்.

மறுநாள் காலை ஆசாரியரும் ஸ்ரோத்திரியர்களும் ஆசிகள் வழங்க நல்ல முஹூர்த்தத்தில் அரச குடும்பத்தினரின் ஊர்வலம் ஹஸ்தினாபுரத்தை நோக்கிப் பயணப்பட்டது. யுதிஷ்டிரன் மனதுக்குள் ஓடிக் கொண்டிருந்த எண்ணங்களையோ துன்பத்தையோ அறியாத இந்திரப் பிரஸ்தத்து மக்கள் இது வழக்கமான ஒன்று. பெரியப்பனைச் சந்திக்க யுதிஷ்டிரன் தன் தாய், மற்றும் குடும்பத்தினருடன் செல்கிறான் என்றே நினைத்துக் கொண்டனர். இதன் மூலம் துரியோதனனுக்கும் பாண்டவர்களுக்கும் இடையே ஒற்றுமை ஏற்படும் என்றும் எண்ணிக் கொண்டனர். ஆகவே வாழ்த்தி வழியனுப்பினார்கள். மெல்ல மெல்ல ஹஸ்தினாபுரம் போய்ச் சேர்ந்து விட்டனர் அனைவரும்.

அங்கே சென்றதும் மூத்தோர் ஆன பிதாமஹர் பீஷ்மர், பெரியப்பா திருதராஷ்டிரன், பெரியம்மா காந்தாரி, ஆசாரியர் துரோணர், கிருபர் போன்றோருக்கும் குடும்பத்தின் மற்ற மூத்தவர்களுக்கும் மரியாதை செலுத்தி வணங்கினார்கள் அனைவரும். யுதிஷ்டிரனின் இடைவிடா வற்புறுத்தலின் காரணமாக சகோதரர்கள் நால்வரும் பீமன் உட்பட எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் துரியோதனனையும், கர்ணனையும் அவரவர் மாளிகையில் சென்று சந்தித்தார்கள். ஆனால் அவர்கள் இருவரும் தங்களுக்குள் வரவழைத்துக் கொண்ட நல்லுறவுடனேயே அரை மனதாக உபசரித்தார்கள். அவர்கள் அனைவருக்குமாகச் செய்திருந்த ஏற்பாடுகளைக் கண்டான் யுதிஷ்டிரன். எல்லாம் நன்றாகவே இருக்கிறது என்பதை உணர்த்தும் விதமாகவே அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருக்கிறது என்பதையும் கண்டு கொண்டான். வெளிப்படையாய்ப் பார்த்தால் எந்த வித்தியாசமும் தெரியாவண்ணம் செய்யப்பட்டிருந்தது.

தன் சகோதரர்கள் அனைவருமே இனம் தெரியாததொரு உணர்வால் பீடிக்கப்பட்டிருப்பதையும், சங்கிலிகளால் கட்டப்பட்டக் காட்டு மிருகங்களைப் போல் உணர்வதையும் புரிந்து கொண்ட யுதிஷ்டிரன் அவர்கள் தன்னுடைய இந்த முடிவால் எரியும் அடுப்பைப் போல் உள்ளுக்குள் எரிந்து கொண்டிருப்பதையும் உணர்ந்தான். அவன் முடிவு என்னவாக இருந்தாலும் சரி, அது அவர்களுக்குத் துன்பத்தைத் தான் தரப் போகிறது.  ஆனால் இத்தனையிலும் யுதிஷ்டிரனால் எடுக்கப்பட்ட முடிவு மாறவே இல்லை. அவன் மனது அது ஒன்றையே திரும்பத் திரும்ப நினைத்தது, அது தான் போரைத் தடுக்க வேண்டுமெனில் இந்திரப் பிரஸ்தத்தையும் தியாகம் செய்து விடுவதே ஆகும். அவனால் போர் ஏற்படக் கூடாது, இந்திரப் பிரஸ்தத்தைக் கொடுத்தானும் அவன் போரைத் தடுப்பான். அதன் பின், அதன் பின் அவர்கள் அனைத்திலிருந்தும் விடுதலை பெற்று விடுவார்கள். காட்டிற்குச் சென்று அங்கே அவர்கள் விரும்பும் வண்ணம் தர்மத்தின் பாதையில் வாழ ஆரம்பிக்கலாம். இது ஒன்றே வழி!

2 comments:

வல்லிசிம்ஹன் said...

நடக்கப் போவதை நினைத்தே நடுக்கம். மிக அழகாக எழுதி வருகிறீர்கள் கீதா.
கண்ணன் காக்கட்டும்.

ஸ்ரீராம். said...

//அவனுடைய அரச தர்மம் அவனை ஹஸ்தினாபுரம் நோக்கி இழுக்கிறது.//

இல்லை விதி அவனை இழுக்கிறது!!!