Monday, November 28, 2016

திருதராஷ்டிரன் வேண்டுகோள்!

பிதாமஹர் பீஷ்மர் திருதராஷ்டிரனைப் பரிதாபமாகப் பார்த்தார். அவன் மேலும் அவருக்குப் பச்சாத்தாபம் பொங்கியது. சின்னக் குழந்தையின் பிதற்றலைப் போன்ற அவன் பேச்சு, நடுங்கும் உதடுகள், உதறும் கைகள் எல்லாமும் சேர்ந்து அவனே ஓர் பரிதாபத்துக்குரிய தோற்றத்தில் காணப்பட்டான். வேறு வழியில்லை, தான் கையாலாகாதவன் என்னும்படி தோற்றமளித்தான். தன் படுக்கையில் நிமிர்ந்து அமர்ந்து கொண்டார் பீஷ்மர். “மகனே, நீ கேட்கும் இந்த வேண்டுகோளுக்கு நான் செவி சாய்க்கவில்லை எனில், துரியோதனனும் அவன் நண்பர்களும் என்ன செய்வதாக உத்தேசித்திருக்கிறார்கள்? ஏன் என்னிடம் மறைக்கிறாய்? அவர்கள் எடுத்திருக்கும் எல்லா முடிவுகளையும் நீ என்னிடம் ஏன் சொல்ல மாட்டேன் என்கிறாய்?” என்று கேட்டார் பீஷ்மர்.

“அவர்கள் என்ன செய்யப் போகிறார்கள் என்பது எனக்கே புரியவில்லை!” என்றான் திருதராஷ்டிரன். “ஆனால் எனக்குத் தெரிந்த உளவுக்காரர்கள் மூலம் அவன் ஏதோ நடவடிக்கை எடுப்பான் என்ற வரையில் செய்தி கிடைத்திருக்கிறது!”அவனால் மேலே பேச முடியாமல் தொண்டை அடைத்துக் கொண்டது. பீஷ்மரிடம் மறைக்கவும் அவனால் முடியவில்லை. சொல்லவும் முடியவில்லை! தன் குருட்டுக் கண்களை சஞ்சயன் நின்றிருக்கும் இடம் நோக்கி உத்தேசமாகத் திருப்பினான். “சஞ்சயா! நீயே சொல்! மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய பிதாமஹரிடம் அவர்கள் எடுத்திருக்கும் முடிவு பற்றி நீ அறிந்திருப்பதைச் சொல்!” என்று சஞ்சயனை இதில் நுழைத்து விட்டான்.

அதற்கு சஞ்சயன், பீஷ்மரைப் பார்த்து, “பிரபுவே, என்னை மன்னியுங்கள்! நான் உண்மையைத் தான் சொல்லப் போகிறேன். ஆனால் அதையும் என்னைக் கேட்டுக் கொண்டதாலேயே சொல்கிறேன்.” என்று மன்னிப்புக் கேட்கும் தோரணையில் சொன்னான். “ஓ, சரி, சரி, சொல், உனக்குத் தெரிந்ததைச் சொல்!” என்று ஆணையிட்டார் பீஷ்மப் பிதாமஹர். மேலும் தொடர்ந்து, “நீ சொல்வதெல்லாம் உண்மையா, பொய்யா என்று கண்டுபிடிப்பது எனக்குக் கஷ்டம் இல்லை! எளிதாகக் கண்டு பிடித்துவிடுவேன்.” என்றார். சஞ்சயன், “பாண்டவர்களை அடியோடு அழிக்க அவர்கள் எந்த வழிக்கும் செல்வதாக முடிவெடுத்துவிட்டார்கள். அவர்கள் ஒரே நோக்கம், பாண்டவர்கள் தலைதூக்க முடியாமல் அடியோடு அழிவது தான்!” என்றான். “ஹூம், நான் இதையா கேட்டேன்? ஏன் என் கேள்வியைத் தவிர்க்கிறாய்? நான் இந்த விஷயத்தில் தலையிடுவதற்கு அவர்கள் என்ன சொல்கின்றனர்? என் தலையீடு அவர்களுக்குச் சம்மதமா?” என்று நேரிடையாகக் கேட்டார் பீஷ்மர்.

சஞ்சயன் தன் கைகளைக் கூப்பிய வண்ணம் வணக்கத்துடன், “அதை நான் சொல்ல முடியாது பிரபுவே! மதிப்புக்குரிய மன்னர் சொல்வார்!” என்றான். பீஷ்மர் தன் புருவங்களை நெரித்துக் கொண்டார். “ஓ, அதனால் என்ன பரவாயில்லை. எனக்கு யார் சொன்னாலும் அதைக் குறித்துக் கவலை இல்லை! எனக்குத் தெரிய வேண்டியது அவர்கள் என்ன முடிவு எடுத்திருக்கிறார்கள் என்பது ஒன்றே! அதை நீ சொன்னாலும் சரி, திருதராஷ்டிரன் சொன்னாலும் சரி!” என்றார். திருதராஷ்டிரன் அதற்குள்ளாக, “பிதாமஹரே, அந்த இளைஞர்கள் எளிதில் உணர்ச்சிவசப் படுகின்றனர்.வேண்டாததை எல்லாம் பேசுகின்றனர்.” என்றான். அவன் கைகள் அதீத உணர்ச்சியில் நடுங்கிக் கொண்டிருந்தன. அவன் பேச்சும் தட்டுத் தடுமாறிக் கொண்டு வந்தது. மேலும் தொடர்ந்தான் திருதராஷ்டிரன்.

“அவர்களுக்கு மூளைக் கோளாறு ஏற்பட்டிருக்கிறது. மோசமான மூளைக் கோளாறு. அதில் அவர்கள் பேசுவது ஒன்றும் சரியல்ல. உங்கள் அதிகாரத்தையே அவர்கள் மீறப் போகின்றனராம். உங்களை எதிர்த்து அறைகூவல் விடப்போகின்றனராம். இந்த முட்டாள்தனமான முடிவை உணர்ச்சி வசப்பட்டு எடுத்திருக்கின்றனர்.” என்றான் திருதராஷ்டிரன். “ம்ம், நீ மேலே ஒன்றும் சொல்ல வேண்டாம்! நீ விரும்பினால் இந்தக் கதையின் அடுத்த பகுதியை நானே சொல்லி முடிக்கிறேன்.” என்று சீறினார் பீஷ்மர். “அவர்கள் எவ்வளவு மோசமான வழியிலும் செல்ல ஆயத்தமாகி விட்டனர்! அது தானே! இன்னும் சொல்லப் போனால் என்னுடைய கழுத்தை அறுக்கக் கூடத் தயங்க மாட்டார்கள்!” என்று சொல்லியவண்ணம் அலட்சியத்துடனும், கோபத்துடனும் சிரித்தார் பீஷ்மர். பின்னர் கொஞ்ச நேரம் மௌனமாக இருந்தார்.

அதன் பின்னர் மேலும் கேட்டார்; “திருதராஷ்டிரா, இந்தக் குரு வம்சத்தினரின் சபை அவ்வளவு மோசமாகி விட்டதா? அதுவும் உன் குமாரன் கைகளுக்கு வந்த பின்னர்? அவன் நண்பர்களுக்கும் அவ்வளவு தைரியம் வந்து விட்டதா? இந்தக் குரு வம்சத்தின் தலைவனையே அதிகாரம் செய்யும் அளவுக்கு அவர்கள் அனைவருக்கும் நெஞ்சில் தைரியம் வந்து விட்டதா? இது சரியல்ல, திருதராஷ்டிரா, சிறிதும் சரியல்ல! உன்னுடைய அன்பினால் அதிலும் நீ குருட்டுத்தனமான பாசம் உன் மகன் மீது வைத்திருக்கிறாய்! அதனால் அந்தப் பாசத்தால், இந்த மகத்தான ராஜசபையின் கண்ணியம், மகத்துவம் எல்லாமும் கெட்டு விட்டது!” என்று துக்கத்துடன் சொன்னார்.

திருதாராஷ்டிரன் நீண்ட பெருமூச்சு விட்டான். “நான் பலஹீனமானவன் தான். உடலளவில் மட்டுமல்ல, மனதளவிலும் பலவீனமானவன். என் மகனின் துன்பத்தை என்னால் பார்க்க முடியவில்லை. அதை என்னால் சகிக்க முடியவில்லை. இரவுகளில் தூங்க முடியவில்லை. பெரும் துன்பத்தில் ஆழ்கிறேன்.” என்றவனுக்கு மேலே தொடர முடியவில்லை. “திருதராஷ்டிரா, நீ வருத்தத்துடன் இருப்பதை என்னால் உணர முடிகிறது. உன் முகத்தில் மகிழ்ச்சி இல்லை என்பதையும் காண்கிறேன். ஆனால் துரியோதனனுக்கு எதனால் மனக்குறைகள்? என்ன குறை அவனுக்கு? இந்த ஹஸ்தினாபுரம் தான் வேண்டும் என்றான். இப்போது ஹஸ்தினாபுரத்தின் பூரண அதிகாரமும் அவன் கைகளில். இங்கே அவன் தான் தலைவன். அவனுடைய யோசனையின் பேரில் பாண்டவர்களுக்கு உரிமையான இந்த ராஜ்யத்தை துரியோதனனுக்குக் கொடுத்துவிட்டு அவர்களை இங்கிருந்து துரத்தி விட்டாயிற்று. அதுவும் காட்டுக்குள்ளாக. பயங்கரமான காட்டைக் கொடுத்து அனுப்பி இருக்கிறோம். அந்தக் காட்டையே அழித்து அவர்கள் நகரமாக்கி அதைக் காண்போர் கவரும் வண்ணம் சொர்க்க பூமியாக மாற்றி இருக்கிறார்கள் எனில் அது அவர்கள் சொந்த முயற்சிகளின் மூலம். நாம் யாரும் அவர்களுக்கு உதவவில்லை. இப்போது துரியோதனன் இந்திரப் பிரஸ்தத்தை அவர்களிடமிருந்து பிடுங்கும் முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறான். இது நியாயமே இல்லை!” என்றார்.

தன் கைகளை விரித்தான் திருதராஷ்டிரன்.”எதுவும் என் கைகளில் இல்லை, பிதாமஹர் அவர்களே! நான் என்ன செய்ய முடியும்?” என்று வேறு வழியில்லாமல் சக்தியற்றுக் கேட்டான். “துரியோதனன் என் புத்திமதிகளைக் கேட்க மாட்டான். அப்படியே அவன் கேட்க நேர்ந்தாலும் அவன் நண்பர்கள் அதைக் கேட்டு அதன்படி நடக்க அவனை அனுமதிக்க மாட்டார்கள்.” அப்போது பீஷ்மர், “சரி, இப்போதே வெகு நேரம் ஆகி விட்டது. இன்னும் ஏதேனும் என்னிடம் சொல்ல வேண்டியது இருக்கிறதா?” என்று கேட்டார். “இவ்வளவு தான்…..” என்று ஆரம்பித்தான் திருதராஷ்டிரன். மீண்டும் அலட்சியமாகச் சிரித்தார் பீஷ்மர். “மகனே, என்ன ஆயிற்று உனக்கு? துரியோதனனின் மிரட்டலை என்னிடம் வந்து சமர்ப்பிக்க உனக்கு வெட்கமாக இல்லையா? அவ்வளவு கோழையாகி விட்டாயா நீ?” என்று கேட்டார்.

“இல்லை, தாத்தா அவர்களே! இல்லை! நானோ துரியோதனனோ உங்களை மிரட்டவே இல்லை. பயமுறுத்தவெல்லாம் இல்லை. துரியோதனன் தற்கொலை செய்து கொண்டு விடுவானோ என்னும் பயம் தான் எனக்குள்!” என்றான் திருதராஷ்டிரன். “இதை மிரட்டல் இல்லை எனில் என்ன சொல்வது? என்னை அச்சுறுத்தத்தானே சொல்லி இருக்கிறான்! நீயும் என்ன நினைக்கிறாய் என்பதைச் சொல்லவா? எனக்கு மிகவும் வயதாகிவிட்டது! இதில் எல்லாம் என்னால் உறுதியுடன் இருக்க முடியாது! என்றே நினைக்கிறாய்! ஆகவே என்னை ஒதுங்கி இருக்கும்படிக் கேட்டுக் கொள்ள வந்திருக்கிறாய்! இல்லையா!” என்றார் பீஷ்மர். தன் நடுங்கும் கைகளைக் கூப்பியவண்ணம் திருதராஷ்டிரன், “அப்படி எல்லாம் இல்லை, நான் அப்படியெல்லாம் நினைக்கவும் இல்லை; சொல்லவும் இல்லை!” என்றான். “என்னை மன்னித்து விடுங்கள்!” என்றும் கேட்டுக் கொண்டான்.

‘நான் மீண்டும் உங்களிடம் கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன், தாத்தா அவர்களே! இந்த முட்டாள் பையன்கள் முட்டாள் தனமான ஓர் முடிவையும் நடவடிக்கையும் எடுக்கும்படியான சந்தர்ப்பத்தை அவர்களுக்குக் கொடுத்து விடாதீர்கள்!” என்று கேட்டுக் கொண்டான் திருதராஷ்டிரன்.

“எனக்குப் புரிகிறது திருதராஷ்டிரா, நன்கு புரிகிறது. நேர்மையாக நடக்கக் கூடாது என்று சொல்கிறாய்! நேர்மையான வழியில் செல்லக் கூடாது என்கிறாய்! நேர்மையைக் கடைப்பிடிக்கும் மனிதர்களை அநீதியாக நடந்து கொள்ளும் மனிதர்களின் ஆவேசக் கோபத்திலிருந்தும் அது சம்பந்தமான கொடூரமான தாக்குதல்களிலிருந்தும் காப்பாற்றக் கூடாது என்கிறாய்! அல்லவா? இது தானே உன் நோக்கம்? ஒன்று நினைவில் வைத்துக் கொள் திருதராஷ்டிரா! நீ மறந்துவிட்டாய் போலும்! இந்த பீஷ்மன் அச்சம் என்பதையே அறியாதவன். அச்சம் என்றால் என்னவென்று இவனுக்குத் தெரியாது!”

சற்று நிறுத்தியவர் பின்னர் சட்டென வெடுக்கென்று, “சரி, என் ஆசிகள் உனக்கு திருதராஷ்டிரா, இப்போது நீ இங்கிருந்து செல்லலாம்!” என்று உத்தரவு கொடுத்தார்.