Wednesday, November 9, 2016

சிசுபாலன் வதம்!

இப்போது சிசுபாலனின் பிறப்பைக் குறித்துக் கொஞ்சம் பார்த்துவிடுவோம். முன்ஷிஜி இது குறித்துச் சொல்லவில்லை என்றாலும் மஹாபாரதத்தில் இது குறித்து வருகிறது. சேதி நாட்டு அரசன் வசுதேவரின் இன்னொரு சகோதரியைத் திருமணம் செய்து கொள்கிறார். வசுதேவரின் ஒரு சகோதரி ப்ரீத்தா என்ற குந்தி, ஹஸ்தினாபுரத்தின் பாண்டுவைத் திருமணம் செய்து கொண்டாள். குந்தி சிறு வயதிலேயே குந்திபோஜனால் வளர்க்கப் பட்டதால் குந்தி என அழைக்கப்பட்டாள். சிசுபாலனின் தாய் பெயர் ஸுஸ்ரவதா ஆகும். இவளுக்கும் சேதி மன்னனுக்கும் காலக் கிரமத்தில் ஓர் பிள்ளைக் குழந்தை பிறக்கிறது. அந்தக் குழந்தை மற்றக் குழந்தைகளைப் போல் இல்லாமல் மூன்றவது கண்ணோடும், இரண்டு அதிகப்படியான கரங்களோடும் பிறந்தான். இதோடு அல்லாமல் அவன் குழந்தைகளைப் போல் அழாமல் கழுதை போன்ற குரலில் கத்தினான். இதைக் கேட்ட மன்னனும், ராணியும் குழந்தையை எங்காவது கொண்டு விட்டு விட முடிவு செய்தனர். ஆனால் அப்போது ஓர் அசரீரி கேட்டது.

அந்த அசரீரி சேதி நாட்டு மன்னனிடம், “ஓ, மன்னா! உன் பிள்ளையை நீ கைவிட வேண்டாம். நீயே வளர்த்து வா. அவன் வீரனாக இருப்பான். வலுவானவனாகவும் இருப்பான். கவலை வேண்டாம். அவனுக்கு இறப்பு இப்போது இல்லை. அவன் இறப்பு எப்போது என்பது ஏற்கெனவே நிர்ணயிக்கப்பட்டு விட்டது. அவன் யாரால் மரணம் அடையப் போகிறானோ அந்த மனிதனும் ஏற்கெனவே பிறந்து விட்டான்! “ என்றது. அதைக் கேட்ட சிசுபாலனின் தாய் அந்தக் குரல் வந்த திக்கை நோக்கி வணங்கிக் கைகளைக் கூப்பிய வண்ணம், “ஏ, அசரீரியே, நான் உன்னை வணங்குகிறேன். என் மகனைக் கொல்லப் போகிறவன் யார்? அவன் தெய்விகத் தன்மை வாய்ந்தவனா? அல்லது வேறு ஏதேனும் உயிர்வகையைச் சேர்ந்தவனா? அவன் யார் என்பதைத் தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.” என்றாள். அதற்கு அந்த அசரீரி, “நீ குழந்தையைப் பார்க்க வருகிறவர்களின் மடியில் இந்தக் குழந்தையை வை. யார் மடியில் இவன் இருக்கையில் அதிகப்படியான மூன்றாவது கண்ணும், இரண்டு கரங்களும் மறைகின்றனவோ அவன் தான் இவனைக் கொல்லப் போகிறான்.” என்று அடையாளம் காட்டியது.

துவாரகையில் இருந்த பலராமனும் கிருஷ்ணனும் தங்கள் இன்னொரு அத்தைக்குக் குழந்தை பிறந்திருக்கும் செய்தியும் அந்தக் குழந்தை விசித்திரமாக மூன்று கண்களோடும், நான்கு கரங்களோடும் இருப்பதையும், குழந்தையை மடியில் வைத்துக் கொள்ளும்போது யாருடைய மடியில் குழந்தை இருக்கையில் அதிகப்படியான உறுப்புகள் மறைகின்றனவோ அவன் தான் குழந்தையைக் கொல்வான் என்று அசரீரி சொன்னதையும் கேள்விப் பட்டனர். தங்கள் அத்தையைக் காணச் சேதி நாட்டுக்கு வந்தார்கள். அவர்களை வரவேற்று உபசரித்த சுஸ்ரவதா முதலில் பலராமன் மடியில் குழந்தையை வைத்தாள். ஏதும் நடக்கவில்லை. பின்னர் சந்தோஷத்துடன் கிருஷ்ண வாசுதேவனின் மடியில் குழந்தையை வைக்க அதிகப்படியான கைகளும், கண்ணும் மறைந்தன. அதைக் கண்டு அதிர்ச்சியுற்றாள் சிசுபாலனின் தாய். பின்னர் துயரம் தாங்க முடியாமல் கிருஷ்ணனைப் பார்த்து, “வாசுதேவக் கிருஷ்ணா, இந்த அத்தைக்கு நீ ஓர் வரம் கொடுக்க வேண்டும். உன்னால் முடியாதது இல்லை. என்னைப் போன்ற துன்பப்பட்டவர்களுக்கு நீ செய்யும் உதவியை நான் நன்கறிவேன். ஆகவே எனக்கு ஓர் உதவி செய்!” என்று கேட்டுக் கொண்டாள். கிருஷ்ணனும் சம்மதிக்க, அவள், “கிருஷ்ணா, சிசுபாலன் என்ன குற்றம் செய்தாலும் நீ எனக்காகப் பொறுத்துக் கொண்டு அவனை மன்னித்துவிடு! இந்த வரத்தைத் தான் நான் கேட்கிறேன்.” என்றாள். அதற்குக் கிருஷ்ணனும், “அத்தை, சிசுபாலனின் நூறு குற்றங்கள் வரை நான் பொறுத்துக் கொள்வேன். நூற்றுக்கும் மேல் அவன் குற்றம் செய்தான் எனில் என்னால் பொறுக்க முடியாது. அவனை அழித்துவிடுவேன்.” என்றான். இத்தகைய பின்னணியில் தான் இப்போது கிருஷ்ணனுக்கும் சிசுபாலனுக்கும் யுதிஷ்டிரனின் சபையில் வாதம் நடக்கிறது.
சிசுபாலன் பீஷ்மர் சொன்னதைக் கேட்டுச் சிரித்தான். “வாசுதேவன்! மனிதர்களுள் சிறந்தவனா? யார் சொன்னது? ஏ, கிழவா? நீ சொல்கிறாயா? உனக்கு வயதாகி விட்டது! அதனால் மனமும் உடலும் தளர்ச்சியுற்று விட்டது. ஓர் அரசவைக் கவிஞன் தன் மன்னனைப் புகழ்ந்து பாடுவது போல் நீயும் வாசுதேவக் கிருஷ்ணனைப் புகழ்கிறாய். அப்படி உனக்குச் செய்ய வேண்டுமெனில் இதோ இங்கே வருகை புரிந்திருக்கும் எத்தனையோ மன்னர்களையும் பேரரசர்களையும் பற்றிப் பாடலாமே! இவர்கள் எதில் குறைந்து விட்டார்கள்? இதோ இந்த துருபதன், பாஞ்சால அரசன்! அதோ அந்தக் கர்ணன், அங்க நாட்டு அரசன், மிகச் சிறந்த வில்லாளி அவன் நண்பனும் உன் பேரனுமான ஹஸ்தினாபுரத்து மன்னன் துரியோதனன்! இவர்கள் அனைவரும் எதில் குறைந்து விட்டனர்? துரியோதனனை விடவா இந்தக் கிருஷ்ணன் வீரத்தில் சிறந்துவிட்டான்?”

“சிசுபாலா! நீ இப்போது கோபத்தில் இருக்கிறாய்! மனிதர்களின் முதல் எதிரியே இந்த ஆத்திரமும், கோபமும் தான்! ஆத்திரம் உன் கண்களை மறைக்கிறது. கிருஷ்ணனுக்கு முதல் மரியாதை செய்து அவனைக் கௌரவப் படுத்தியதன் மூலம் எங்களுக்குத் தனிப்பட்ட லாபம் ஏதும் கிடைத்துவிடவில்லை. அதோடு யாருடைய தயவிலும் நான் வாழவும் இல்லை; வாழ விரும்பவும் இல்லை! மேலும் நீ உத்தரவு போடுவதால் நான் என்னுடைய நேர்மையான வழியிலிருந்து சிறிதும் தவறவோ விலகவோ மாட்டேன். நான் நேரான வழியில் தான் செல்கிறேன். நீ எவ்வளவு வலிமையும், அதிகாரமும் பொருந்தி இருந்தாலும் உன்னால் என்னை ஒன்றும் செய்ய முடியாது!” என்றார் பீஷ்மர்.

அப்போது சிசுபாலனின் அருகே நின்றிருந்த சுனித் என்னும் ஓர் அரசன், “ஏ, கிழவா, கங்கையின் மைந்தனே! நீ பாவம் நிரம்பியவன். உன்னிடம் பாவம் மட்டுமே இருக்கிறது. சிசுபாலன் சொன்னதைப் போல் நீ கொல்லப்பட வேண்டியவனே! உன்னைக் கொன்றே ஆகவேண்டும்!” என்றான் பற்களைக் கடித்த வண்ணம்!

“இளம் அரசனே, உன் வயதை விட என் அனுபவம் அதிகம்! உன்னுடைய பயமுறுத்தல்களுக்கு அடி பணிந்து கொண்டு உயிரோடு இருப்பதைக் காட்டிலும் நானும் இறப்பதையே விரும்புகிறேன். விரும்புவேன்.” என்ற வண்ணம் எழுந்து நின்ற பீஷ்மரின் உயரம் பிரமிக்கும்படியாக இருந்தது. “நான் உண்மை தான் பேசுகிறேன்; பேசுவேன். நேர்மையான பாதையில் சத்தியத்தின் வழியில் நடக்கிறேன்;நடப்பேன். நான் சொல்வது இது தான்! அது என்னவெனில்: வாசுதேவக் கிருஷ்ணன் நம் அனைவரையும் விட அனைத்திலும் சிறந்தவன்; மிகச் சிறந்தவன். வீரம், துணிவு, வல்லமையில் மிகச் சிறந்தவன். கற்பதில் சிறந்தவன்; அபார ஞானம் பெற்றவன்! தர்மத்திற்கெனத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவன்.” என்றார் பீஷ்மர்.

“ஆஹா, இந்தக் கோழை இடையனுடன் நான் தனியாக வைத்துக் கொள்கிறேன். அதற்கு உரிய நேரம் வந்தாலும் இப்போது முன் செய்ய வேண்டியது, ஏ, கிழவா, உன்னைக் கொல்ல வேண்டியது தான்! அதன் பின்னர் உன் அருமைப் பேரன்மார் ஐவரையும் கொல்ல வேண்டும். அவர்கள் தானே சூழ்ச்சிகள் பல செய்து இந்த மாயவலையில் என்னைச் சிக்க வைத்திருக்கிறார்கள். ஆகையால் அவர்களும் தண்டிக்கப்பட வேண்டியவர்களே! அதிலும் இந்த இடையனை நம் அனைவரிலும் சிறந்தவன் என்று சொல்லி அவனுக்கு முதல் மரியாதை செய்ததை ஏற்க வைத்தார்களே, அதை என்னால் ஒருநாளும் மன்னிக்க முடியாது!” அவ்வளவில் தன் இடையிலிருந்து வாளை உருவினான் சிசுபாலன். அவனுடைய நண்பர்களும் அப்படியே செய்தனர். அனைவரும் உருவிய வாளோடு பீஷ்மர் மேல் பாயத் தயார் ஆனார்கள். பீஷ்மரிடமோ, சகோதரர்கள் ஐவரிடமுமோ அல்லது கிருஷ்ணனிடமோ ஆயுதங்கள் ஏதும் கைவசம் இல்லை. அவர்கள் அனைவரும் சம்பிரதாயமான சடங்குகளில் பங்கேற்க வேண்டி இருந்ததால் ஆயுதங்களைக் கைவசமும் வைத்துக் கொள்ளவில்லை. ஆயுதங்களைத் தரிக்கவும் இல்லை!
அங்கிருந்த எவர் கவனத்தையும் சிதறடிக்காமல், ஒருவர் கவனத்தையும் கவராமல் மெல்ல மெல்ல சிசுபாலனுக்கு நேர் எதிரே கிருஷ்ணன் போய் நின்றான். மெல்லப் பேச ஆரம்பித்தான். அவன் குரல் மென்மையாகவும் மிருதுவாகவும் அதே சமயம் கண்டிப்பு நிறைந்தும் காணப்பட்டது. “சிசுபாலா! சேதி நாட்டு மன்னா! உனக்கு மாட்சிமை பொருந்திய பிதாமகர் பீஷ்மரிடமோ அல்லது பாண்டவ சகோதரர்களிடமோ எத்தகைய முன் விரோதமும் இல்லை என்பதை நான் நன்கறிவேன். உனக்கு விரோதம் என்னுடன் தான். என்னுடன் மட்டுமே! நீ என் சகோதரன். அத்தை வழி சகோதரன். ஆனாலும்!!.....நீ எங்களைத் துரத்தினாய்! என்னை மட்டுமல்ல! எங்கள் யாதவ குலத்தையே துரத்தினாய்! எங்களை விஷம் போல் வெறுத்தாய்! நாங்கள் ப்ரக்ஜ்யோதிஷம் சென்றிருந்தபோது துவாரகையை எரித்தாய். என் தந்தை அஸ்வமேத யாகம் செய்ய யத்தனிக்கையில் யாகக் குதிரையைக் கவர்ந்து சென்றாய்!”

கடகடவெனச் சிரித்தான் சிசுபாலன். “ஆம் யாகக் குதிரையைக் கவர்ந்து சென்றேன். அதற்கு இப்போது என்ன வந்தது? துவாரகையையும் நான் தான் எரித்தேன்! அதற்கென்ன இப்போது?” என்று சிரித்தான் மீண்டும். “ஹூம், இந்தத் தீமைகளை நீ தான் செய்தாய் என்று நன்கறிந்தும் நான் உன்னை இத்தனை நாட்கள் சும்மா விட்டு விட்டேன். எப்போதோ தண்டித்திருக்க வேண்டும். அதை நான் செய்தும் இருப்பேன். ஆனால் உன் அன்னைக்கு, என் அத்தை மாட்சிமை பொருந்திய மஹாராணி சுஸ்ரவதாவுக்கு நான் வாக்குக் கொடுத்திருந்தேன். உன்னுடைய நூறு குற்றங்களைப் பொறுத்துக் கொள்வதாக வாக்குக் கொடுத்திருந்தேன். ஆனால் இனியும் இல்லை! நீ உன்னுடைய எல்லையைத் தாண்டி விட்டாய். எல்லை மீறிச் சென்று விட்டாய்!”

அப்போது அங்கே நின்று கொண்டிருந்த மக்கள் அனைவரும் அதிர்ச்சியிலும் திகைப்பிலும் ஆழ்ந்து போகும் வண்ணம் கிருஷ்ணன் முற்றிலும் மாறினான். கிருஷ்ணனின் சுயரூபமே முற்றிலும் மாறிவிட்டது. ஆரம்பத்தில் தயையுடனும் கருணையுடனும் பேசிய குரல் இப்போது கடுமையாக மாறி விட்டது. அவன் முகம் சொல்லவொண்ணாப் பிரகாசத்துடன் காணப்பட்டதோடு அல்லாமல் முகத்தைச் சுற்றிலும் ஓர் ஒளிவட்டம் தெரிந்தது. கம்பீரமும், தெய்விகமும் அந்த முகத்தில் இயல்பாகக்குடி இருந்தது. இந்த நேர்த்தியான அழகான மனிதனில் எவரோ புகுந்து விட்டது போல் தெய்விகம் புகுந்திருந்தது அவனிடம். அவன் இப்போது கடவுளாகவே மாறிவிட்டான். ஒவ்வொரு மனிதர்களின் ஒவ்வொரு செயலையும் அவனே நிறைவேற்றி வைக்கிறான் என்பதை யாரும் விளக்காமலேயே அனைவரும் புரிந்து கொண்டனர். ஆனாலும் சிசுபாலன் இது எதையும் குறித்துக் கவலை கொள்ளாமல், “நான் உனக்குத் தக்க பாடம் புகட்டுகிறேன், மாட்டிடையா! பொறு!” என்ற வண்ணம் தன் வாளை உருவினான். வீசினான். அவன் நண்பர்களும் அப்படியே கிருஷ்ணனைக் கொல்வதற்கென வாளை உருவிய வண்ணம் பாய்ந்தனர். பீமன் கிருஷ்ணனைக் காப்பதற்கென ஓர் அடி முன்னெடுத்து வைத்தான். ஆனால் கிருஷ்ணன் தன் ஒரே சைகையால் அவனை விலகி இருக்கச் செய்தான்.

“சிசுபாலா!” என்று அழைத்த இந்தக் குரல் கிருஷ்ணனின் குரலா? இல்லை, இல்லை. அவன் வாயிலிருந்து தான் வந்தன. ஆனாலும் இந்தக் குரல் இப்போது ஓர் தவிர்க்கவே முடியாத அதிகாரம் படைத்த குரலாகவன்றோ காண்கிறது! “நீ இப்போது பாண்டவசகோதரர்களின் விருந்து உபசாரங்களை மட்டும் அவமதிக்கவில்லை. அவர்களின் மொத்த விருந்தினர்களையும் சேர்த்தே அவமதித்திருக்கிறாய்! அதோடு இல்லை. மாட்சிமை பொருந்திய பிதாமஹர் பீஷ்மரை அவமதித்திருக்கிறாய்! அவமானம் செய்திருக்கிறாய்! அனைத்து ஆரியர்களாலும் மதித்துப் போற்றி வணங்கும் ஒருவரை அவமானம் செய்து விட்டாய்! இந்தப் புனிதமான யாகம் நடைபெறும் இடத்தைக் கொடூரமான செயல்கள் செய்யும் இடமாக ஒரு போர்க்களமாக மாற்றி விட்டாய்!” என்று கிருஷ்ணன் கடுமையான குரலில் சொன்னான். அனைவரும் கிருஷ்ணன் மேல் வைத்த கண்களை எடுக்கவே இல்லை.

கிருஷ்ணன் தொடர்ந்தான். “ஒரு காலத்தில் நான் விதர்ப்ப நாட்டு ராஜகுமாரி ருக்மிணியை உன் பிடியிலிருந்து விடுவிக்க வேண்டி வந்தது. அதே போல் இப்போது நான் தர்மத்தை உன்னிடமிருந்து காப்பாற்றப் போகிறேன். அதர்மமான உன் செயல்களுக்கு முடிவு கட்டப் போகிறேன்.” சிசுபாலன் ஓர் சிரிப்பை உதிர்த்தான். “வெட்கம் கெட்ட மாட்டிடையா! உன்னால் என்ன செய்ய முடியும்? ஹூம் எனக்கென நிச்சயிக்கப்பட்டிருந்த இளவரசியை நீ தூக்கிக் கொண்டு ஓட்டம் காட்டினாய்! உனக்கு அதை நினைத்தால் வெட்கமாக இல்லையா? இன்னொருவனின் மணப்பெண்ணை நீ அபகரித்தாய்!” என்றான். தன் வாளை உயர்த்தியவண்ணம் சிசுபாலன் ஓரடி எடுத்து வைத்தான். கிருஷ்ணனிடம் ஆயுதங்களே இல்லையே என அனைவரும் பதை பதைத்தனர். கிருஷ்ணனின் எதிரிகளோ சந்தோஷம் அடைந்தனர். சஹாதேவனிடமிருந்த வாளை பீமன் உருவிக் கொண்டான். அப்போது அனைவரும் அதிசயிக்கும் ஓர் விஷயம் நடந்தது.

விர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! என்று ஒரு சப்தம் கேட்டது. அனைவர் கண்களும், காதுகளும் அந்தச் சப்தம் கேட்ட திசையை நோக்கின. ஒளி வீசிப் பிரகாசித்த வட்டமான ஓர் தட்டுப் போன்றது ஆனால் வட்டவடிவ முனைகளில் கூராகச் செதுக்கப்பட்டிருந்தது அனைவர் கண்களுக்கும் தெரிந்தது. அங்கே இருந்த சூரிய ஒளி பட்டு அது பளபளவெனப் பிரகாசித்துக் கொண்டிருந்தது. எங்கிருந்து வந்தது என்பதே தெரியாமல் அது விர்ர்ர்ர்ர்ர்ர்ர் எனச் சப்தம் போட்டுக் கொண்டும் பறந்தும் வந்தது. நேரே கிருஷ்ணனின் தலைக்கு மேலே சுற்ற ஆரம்பித்தது.  கிருஷ்ணன் பாய்ந்து அதைத் தன் கரங்களால் பிடித்தான்.  கிருஷ்ணனின் வலக்கரத்தில் அது இப்போது இருந்தது. யாரும் என்ன நடக்கிறது என்பதை ஊகித்து உணரும் முன்னர் கிருஷ்ணன் அதை சிசுபாலன் மீது ஏவி விட்டான். அந்த ஆயுதம் இப்போது சிசுபாலனும் அவன் நண்பர்களும் இருக்கும் இடத்தை நோக்கி வேகமாகப் பறந்தது. பயந்து போன சிசுபாலன் கொஞ்சம் நகர்ந்து கொண்டு தன் கைகளிலிருந்த வாளைக் கீழே போட்டான். வாள் கீழே விழுந்து சப்தம் எழுப்பியது. அந்தச் சக்கரம் வேகமாக வந்து சிசுபாலனின் தலையை மட்டும் அறுத்துக் கீழே தள்ளிவிட்டுப் பின்னர் மீண்டும் கிருஷ்ணனின் கைகளுக்குச் சென்று விட்டது. சிசுபாலன் தலை ஒரு பக்கம் உடல் ஒரு பக்கமாகக் கீழே விழுந்தான்.

2 comments:

ஸ்ரீராம். said...

சக்ரதாரி..

Unknown said...

ஆபத்பாந்தவன்