Friday, July 18, 2014

அர்ஜுனன் முடிவெடுத்தான்!

துரியோதனன் திரும்பிச் சென்றதும் அங்கே அனைவரும் எதிர்பார்த்தாற்போல் நீண்டதொரு மௌனம் நிலவியது. திடீரென அங்கே பல குரல்கள் ஒரே சமயத்தில் பேச ஆரம்பித்தன.  கர்ணன் தன் இருக்கையிலிருந்து எழுந்து மண்டபத்தின் மையத்தை நோக்கி வர வேண்டிக் கீழே இறங்கினான். எவரோடும் ஒப்பிட முடியாததொரு எழிலான கம்பீரத்துடன் நடந்து வந்தவன், துருபதனைப் பார்த்து வணங்கி விட்டு செயற்கைக்குளத்தருகே சென்று நின்று கொண்டு அங்கே குழுமி இருந்தவர்களை ஒரு பார்வை பார்த்துக் கொண்டான். கர்ணனைப் பார்த்த அர்ஜுனனுக்கு மனம் தளர்ந்து விட்டது. அவன் மனம் நம்பிக்கை இழந்தது. சொல்லத் தெரியாததொரு வேதனையில் ஆழ்ந்தான். கர்ணன் எப்போதுமே அவனுக்குச் சரியான போட்டி!  அவன் எதிரி! அதிலும் வில் வித்தையில் அவனுக்கு நிகரானவனே!  அதோ!  தன் இடக்காலை பூமியில் அழுந்த ஊன்றிக் கொண்டு கர்ணன்  சூரியனைப் போல் பிரகாசிக்கும் தன் கண்களில் சிரிப்பின் ஒளி தோன்ற வில்லைக் கையில் எடுத்துவிட்டான். அவையே அமைதியில் மூழ்கிக் கிடந்தது.  அடுத்து நடக்கப் போவதை அனைவரும் ஆவலோடு பார்த்துக் கொண்டிருந்தனர்.  தேர்ந்த திறமையான கைகளுடன் அந்த நாணை வெகு எளிதாக வில்லின் மற்றொரு முனையில் இழுத்துப் பூட்டினான்.  வில்லைத் தன் கைகளில் ஏந்திய வண்ணம் அம்பையும் எடுத்துப் பூட்ட ஆரம்பித்துவிட்டான்.

அதுவரை அமைதியாகச் சிலை போல் நின்றிருந்தாள் திரௌபதி.  அப்போது தான் தனக்கு உயிர் வந்தவள் போல் திடுக்கிட்டு விழித்தாள். கொஞ்சம் முன்னால் வந்து தன் தமையன் த்ருஷ்டத்யும்னன் காதுகளில் ஏதோ மெல்ல முணுமுணுத்தாள்.  உடனே த்ருஷ்டத்யும்னன் குறி பார்த்துக் கொண்டிருந்த கர்ணனைத் தடுத்து நிறுத்திவிட்டு அவன் அருகே வந்தான்.

“அங்க மன்னா!  நமஸ்காரங்கள்.  ஆனால் நீங்கள் இந்தப் போட்டியில் கலந்து கொள்ள இயலாது!” என்று சத்தமாக அனைவருக்கும் கேட்கும்படி சொன்னான்.  “நீர் ஒரு தேரோட்டியின் மகன்!” என்றும் மேலே கூறினான்.  மிகுந்த இறுமாப்புடனும், அவமதிப்புச் செய்யும் தொனியுடனும் பலர் சிரிக்கும் தொனி அங்கே கேட்டது.  ஆனால் கர்ணன் அசைந்து கொடுக்கவில்லை.  புன்னகை மாறாமல் தன் கையிலிருந்த வில்லைக் கீழே தாழ்த்திய வண்ணம் பணிவாக அதே சமயம் தன் கௌரவத்தையும் விட்டுக் கொடுக்காமல் பேச ஆரம்பித்தான்.  “ பாஞ்சால இளவலுக்கு வணக்கம். எனக்குத் தெரியும் நான் வென்றாலும் இளவரசியை மணக்க முடியாது என்பது.  ஆர்ய வர்த்தத்தின் நெறிமுறைகளுக்கு மாறானது என்பதும் அறிவேன்.  அப்படிப்பட்ட மணம் தடை செய்யப்பட்டிருப்பதையும் அறிவேன். தர்மத்திற்குப் புறம்பானது என்றும் அறிவேன்.  ஆனால் நான் இங்கே அனைவருக்கும் காட்ட விரும்பியது குரு வம்சத்தினருக்கு இந்தப் போட்டியில் வெல்லும் அளவுக்குத் திறமைவாய்ந்த நண்பர்கள் உண்டு என்பதைச் சொல்ல வேண்டும் என்பதே!  நான் வெல்வதன் மூலம் குரு வம்சத்தினருக்குத் திறமையான நண்பர்கள் இருப்பது உறுதியாகத் தெரிந்து விடும் அல்லவா?”  சத்தமாய்ச் சிரித்தான் கர்ணன்.  பின்னர் தானே நாணை அகற்றினான். மிகவும் கவனமாக அங்கே இருந்த தர்ப்பைப்புற்களின் மேல் வில்லையும், அம்பையும் வைத்தான்.  தன் நிமிர்ந்த தலை நிமிர்ந்தவாறே கம்பீரம் சற்றும் குறையாமல் சென்று தன் இருப்பிடத்தில் அமர்ந்தான்.

அவன் சென்று அமர்ந்த பின்னரும் எழுந்த சிரிப்புச் சப்தம் அஸ்வத்தாமா எழுந்த வேகத்தில் அடங்கியது. அவன் வந்ததில் இருந்தே காம்பில்யத்தில் அனைவருக்கும் அவன் வரவு பிடிக்கவில்லை.  ஆகவே அவன் எழுந்ததுமே பலர் முகமும் சுளித்துக்கொண்டது.  அஸ்வத்தாமா எதையும் கவனிக்காமல் வேகமாய் நடந்து சென்றவன் சற்றும் பொறுமையின்றிச் செல்லும்போதே துருபதனைப் பார்த்துத் தன் கைகளைத் தூக்கி ஆசீர்வதிக்கும் பாவனையில் உயர்ர்த்தினான்.  விரைவில் குளத்தருகே சென்றான்.  அவன் மிகக் கோபத்தில் இருந்தது அவன் முகத்திலிருந்தே தெரிய வந்தது.  கீழே குனிந்து வில்லை எடுக்க முயன்றான்.  ஆனால் அவனால் குனிந்தவண்ணம் வில்லை எடுக்க முடியவே இல்லை;  தன் பற்களைக் கடித்த வண்ணம் மீண்டும் மீண்டும் முயன்றான்.  அம்முயற்சியில் அவன் நாடி, நரம்புகளெல்லாம் கூடப் புடைத்துக்கொண்டன.  ஆனால் அவனால் முடியவில்லை.  கையில் எடுத்த வில்லின் தண்டை வேகமாய்த் தூக்கி எறிந்தான்.  “வில்லா இது?  இல்லை! இல்லவே இல்லை! இது வில்லே இல்லை.  இதெல்லாம் ஒரு போட்டியா? இப்படி ஒரு போட்டியும் நடக்கக் கூடாது!” எனக் கடித்த பற்களுக்கிடையே சீறினான்.  அவமானத்தால் தலை குனிந்தவண்ணம் தன் இடத்திற்குத் திரும்பினான்.  அவை மீண்டும் சிரிப்பில் ஆழ்ந்தது.

சிறிது நேரத்தில் சபை மீண்டும் அமைதி அடைந்தது.  இப்போது அனைவரின் எதிர்பார்ப்புகளும் உச்சத்தில் இருந்தன.  சிசுபாலன், துரியோதனன், விராடன், அஸ்வத்தாமா போன்ற தேர்ந்த வில்லாளிகளாலேயே முடியாத ஒன்றைத் துணிகரமாக முயலப் போவது யார்?  இந்தப் போட்டியில் வெல்லப் போவது யார்?  அனைவருமே இப்போது யாதவர்கள் பக்கம் பார்த்தார்கள்.  அவர்களில் ஒருவரா?  அர்ஜுனன் இப்போது திரௌபதி மலர்ந்த முகத்துடன் இருப்பதையும், தன் கண்களால் கிருஷ்ணனைப் பார்த்து மௌனமாகக் கேள்விகள் கேட்பதையும் கவனித்தான்.   அவள் கண்கள் அவள் தன் மண வாழ்க்கையின் கதாநாயகனுக்காகக் காத்திருப்பதாகச் சொல்வதாய் அவனுக்குத் தோன்றியது.  அந்த நாயகன் இன்னும் வரக் காணோமே என அந்தக் கண்கள் தேடுவதாகவும் நினைத்தான்.  அவனுக்குள் ஏதோ ஒன்று அவனைத் தூண்டியது.  இது தான் என நிச்சயமாகச் சொல்ல முடியாததொரு ஏதோ ஒரு இனம்புரியா உணர்ச்சி அவனைத் தூண்டிக் கொண்டிருந்தது.  அவன் தான் இதை முடிக்க வேண்டும் என்றும் அது சொன்னது.

ஒரு நிமிடமே தோன்றியதொரு உணர்ச்சிப் பிரவாகத்தில் அவன் தன்னைத் தானே அலசி ஆராய்ந்தான்.  அவன் தான் எவ்வளவு முட்டாளாக இருந்து வருகிறான்!  அவனுக்கென ஏற்பட்டவற்றைக் கூட அடையப் பிறரை எதிர்நோக்கித் தானே எந்த முடிவும் எடுக்காமல் யோசித்துக் காலம் தாழ்த்திக் கொண்டிருக்கிறானே!  முடிவை அவனல்லவோ எடுக்க வேண்டும்!  இது அவன் வாழ்க்கை!  அவன் தான் தீர்க்கமான முடிவை எடுத்தாக வேண்டும்.  இப்போது அவன் எடுக்கப் போகும் இந்த முடிவு தான் அவர்களுக்கு இழந்த வாழ்க்கையை  மீட்டுக் கொண்டு வந்து தரப் போகிறது.  அது அவன் கைகளில் தான் உள்ளது.  அவன் முடிவின் மூலம் அவர்களுக்கு மாபெரும் அதிகாரங்களும், சந்தோஷமும், மகிழ்ச்சியும் கிடைக்கப் போகிறது.  இந்த முடிவை இப்போது அவன் எடுத்துவிட்டான் எனில் பின்னர் திரும்பியே பார்க்க வேண்டாம்.  வாழ்க்கையின் முன்னேற்றப் பாதைக்குப் போய் விடுவான்.  தன் இருக்கையில் இருந்து அவன் எழுந்தான்.  அவனருகே அமர்ந்திருந்த மற்ற பிராமணர்கள் அவனை அமரச் சொல்லி வற்புறுத்தினார்கள்.  அவன் நின்று கொண்டிருப்பது அவர்களுக்கு இடைஞ்சலாக இருந்தது.  குளத்தருகே நடப்பவை பற்றி அவர்கள் பார்க்க முடியவில்லை.  ஆனால் அர்ஜுனன் அவர்களை லக்ஷியம் செய்யவில்லை.

மெல்ல எழுந்து நடந்தான்.  தன் சகோதரர்களைக் கூடக் கலந்து ஆலோசிக்கவில்லை.  பெரிய அண்ணா யுதிஷ்டிரரின் சம்மதத்தை வாங்க வில்லை. ஆகவே தன்னை அமரச் சொன்ன பிராமணர்களையோ, தன்னருகே அமர்ந்திருந்த சகோதரர்களையோ நோக்காமல் நேராகக் குளத்தைப் பார்த்த வண்ணம் நடந்தான். கிட்டத்தட்டக் குதித்தான்.  சற்று நின்று சுற்றும் முற்றும் பார்த்தான்.  அவன் அழகிய முகம் உணர்ச்சி வசத்தில் சிவந்திருந்தது.  கண்கள் பளீரென ஜொலித்தன.

மொத்த சபையும் ஆச்சரியவசப்பட்டு அதே சமயம் சினத்தோடும் பார்த்துக் கொண்டிருந்தது.  எங்கும் நிசப்தம்! ஒரு இளந்துறவி,  அதிலும் பிராமணன் போட்டியில் கலந்து கொள்ளப் போகிறானா?  மோசம், மோசம்! கோரமானதொரு நிகழ்வு இது! அரசர்களும், இளவரசர்களும் ஏளனமாகப் பார்த்து நகைத்தனர்.  பலராமன், கிருஷ்ண வாசுதேவன், உத்தவன் ஆகியோர் மட்டும் அமைதி காத்தனர்.  மற்ற பிராமணர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். இந்த இளைஞன் போட்டியில் தோற்றுப் போய்த் தனக்குத் தானே தன்னை முட்டாளாக்கிக் கொள்வதல்லாமல் நம் குலத்தையும், இந்நிகழ்வையும் மிகவும் மோசமானதாக ஆக்கிவிடப் போகிறான்.  ஆனால் அங்கே அமர்ந்திருந்த யுதிஷ்டிரனோ ஆச்சரியத்தில் மூழ்கி இருந்தான்.  இன்று வரை அவனைக் கேட்காமல் ஓர் அடி கூட அர்ஜுனன் எடுத்து வைத்ததில்லை.  இப்போது எப்படி அவனுக்கு தைரியம் வந்தது?   பீமன் கட்டுக்கடங்காத சந்தோஷத்தால் துள்ளினான்.  நகுலனுக்கோ தன் அண்ணனைக் குறித்த மிதமிஞ்சிய பெருமை.  வழக்கம் போல் சஹாதேவனின் பொருள் புரியாச் சிரிப்பு.

அர்ஜுனன் மிக எளிதாகவும், கலக்கமே இல்லாமலும் துருபதன் அமர்ந்திருக்கும் இடம் சென்றான். பொதுவாக உயர் பதவியிலிருக்கும் அரசர்களானாலும், சக்கரவர்த்திகளே ஆனாலும் பிராமணர்கள் அவர்களை விட வயதில் குறைந்தவர்களாக இருந்தாலும் அரசர்கள் க்ஷத்திரியர்களாக இருப்பதால் பிராமணர்கள் ஆசீர்வதிக்கும் பழக்கம் இருந்தது.  அந்தப் பழக்கப்படித் தன் வலக்கையைத் தூக்கி துருபதனை ஆசீர்வதித்தான் அர்ஜுனன். அவனிடம் போட்டியில் தான் கலந்து கொள்ள அநுமதி அளிக்கும்படி கோரினான்.துருபதன் அவனையே கூர்ந்து கவனித்தான்.  அந்த இளந்துறவியின் இளமை பொங்கும் கவர்ச்சியான முகமும், நெற்றியில் அவன் அணிந்திருந்த திருநீறும், அவன் கண்களில் தெரிந்த உறுதியும், வலிவாகவும் சக்தியுடனும்  காணப்பட்ட தோள்பட்டையின் அமைப்பும், ஆங்காங்கே ஒழுங்கற்றுக்காணப்பட்ட தாடியும் அவன் போர்ப்பயிற்சி உள்ளவன் என்பதை எடுத்துச் சொல்லியது.  அவன் நின்ற கோலமும் துருபதனுக்கு அவன் குருவான பரசுராமரை நினைவூட்டியது.  தன் இளமைக்காலத்தில் அவரும் இப்படித் தானே இருந்திருப்பார் என நினைத்துக் கொண்டான்.  பின்னர் அவனைப் பார்த்துக்கை கூப்பிய வண்ணம், “பிராமணோத்தமரே, உமக்கு என் அநுமதியை அளித்தேன்.  அதுவும் நீங்கள் கேட்டதால் அளித்தேன்.  ஆனால் நீங்கள் என் அனுமதியை வேண்டி இருக்கவே வேண்டாம்.  இந்தப்போட்டியில் கலந்து கொள்ள உமக்குப் பூரண உரிமை உண்டு!” என்றான்.


யாதவர்களிடையே அமர்ந்திருந்த பலராமனுக்குத் தன் ஆவலை அடக்க முடியவில்லை.  துள்ளிக் குதித்தான்.  ஆனால் கிருஷ்ணன் அவனை அடக்கினான்.  “உங்களை நீங்களே அடக்கிக் கொள்ளுங்கள் பெரிய அண்ணா! “ என்றும் கூறினான்.  துரியோதனன் அந்த இளம் துறவி யார் என்பதைப் புரிந்து கொண்டுவிட்டான்.  சிற்றப்பன் மகன் அர்ஜுனன்! சந்தேகமே இல்லை;  அந்த கெக்கலி கொட்டிச் சிரித்த குரலும் பீமனுடையதே!  அதிலும் சந்தேகம் இல்லை.  துரியோதனனின் சந்தேகம் ஊர்ஜிதம் ஆயிற்று.  பாண்டவர்கள் இறக்கவே இல்லை.  உயிருடன் இருக்கின்றனர்.  ஐவரும் இப்போது இந்த நிமிடம் இந்த சபையில் அமர்ந்திருக்கின்றனர்.  அவர்களில் ஒருவனான திறமைசாலி அர்ஜுனன் அதோ போட்டியில் கலந்து கொள்ளப் போகிறான்.  திரௌபதியை வெல்லவும் போகிறான்.  அவனுக்குத் தான் திரௌபதி கிடைக்கப் போகிறாள்.  ஆஹா!  இது என்ன சதி!  சூழ்ச்சி! இத்தனைக்கும் பின்னால் இருப்பது யார்? ஆம், அந்தக் கிருஷ்ண வாசுதேவன் தான்!  ரத்தம் வருவது போல் சிவந்த தன் கண்களைக் கிருஷ்ணன் பக்கம் திருப்பி அவனைக் கொன்றுவிடுவது போல் பார்த்த வண்ணம் தன் மாமன் ஷகுனியிடம், “மாமா, அவர்கள் வந்துவிட்டனர்!” என்றான்.  ஷகுனியின் முகத்தின் நிரந்தரப்புன்னகை மறைந்து எழுத்தில் எழுதமுடியாததொரு வார்த்தையை அவன் பிரயோகம் செய்தான்.

அதற்குள் துஷ்சாசனும் அர்ஜுனனை அடையாளம் கண்டுகொண்டு பற்களைக் கடித்த வண்ணம் தன் தமையன் பக்கம் திரும்பினான்.  “அண்ணா, அவர்கள் வந்துவிட்டனர்!  இது என்ன மாயமா, மந்திரமா, தந்திரமா?” என்றான். “இந்த சுயம்வரமே அதோ எல்லாத் திட்டங்களையும் சப்தமின்றிப்போட்டுவிட்டு ஒன்றும் அறியாதவன் போல் அமர்ந்திருக்கும் அந்த மாட்டிடையனுடைய மாபெரும் திட்டம்!  அதில் இதுவும் ஒன்று!” என்று சீறினான் துரியோதனன்.






Thursday, July 17, 2014

அநுமதி கொடு கிருஷ்ணா!

திரும்பத் திரும்ப யோசித்தாலும் தன்னால் இவர்களிடமிருந்து பிரிந்து செல்வதோ, அறுத்துக்கொண்டு விடுவதோ இயலாத காரியம் என்பது அர்ஜுனனுக்கு நன்கு புரிந்தது.  அவன் ஏதேனும் முன்னேற்றம் அடைய விரும்பினால் அது அவர்கள் ஐவருக்கும் சேர்த்துத் தான் இருக்க முடியும்.  ஏதேனும் நல்ல வழியில் போக விரும்பினாலும் ஐவருக்கும் சேர்த்துச் செல்லும்படியாகத் தான் அவனால் சிந்திக்க முடியும்.  அதை அவன் எப்படிச் செய்யப் போகிறான்!  அவனால் தான் இது நடக்க வேண்டும். இந்தக் கேள்வி அவனை எப்போதும் அடக்கி ஒடுக்கி ஆள நினைக்கிறது.  இதற்கு பதிலை அவனால் சொல்ல முடியவில்லை. அவன் தாயுடனோ மற்ற சகோதர்களுடனோ அவன் இதைப் பகிரவும் முடியவில்லை.  அவனே தான் இதற்கு ஒரு பதிலைக் கண்டு பிடித்து ஆகவேண்டும்.  அர்ஜுனன் முடிவு கட்டினான்.  அதுவும் காம்பில்யத்தை நோக்கி அவர்கள் வந்து கொண்டிருக்கையில் பல சமயங்களிலும் அர்ஜுனன் தனித்து விடப்பட்டான். அப்போது அவன் தனக்குத் தானே சில கேள்விகளைக் கேட்டுக் கொண்டான்.

அவன் வேண்டுவது என்ன? புகழும், பெரும் சிறப்புமா? ஆம், அவனுக்குப் பெரும் புகழும் வேண்டும்;  சிறப்பும் வேண்டும்.  இன்பமும் சந்தோஷமும் வேண்டுமா?  ஆம், அதுவும் வேண்டும்!  வலிமையும், மாபெரும் சக்தியும் பெற வேண்டுமா?  ஆம், ஆம் அவனுக்கு அதுவும் வேண்டும். அதெல்லாம் சரி தான். அவன் சுயம்வரத்துக்குப் போய் என்ன செய்யப் போகிறான்? அவன் பெரியப்பன் வழி சகோதரன் ஆன துரியோதனனுக்கும், அவன் சகோதரர்களுக்கும் அவமதிப்பைச் செய்யப் போகிறானா? அவர்களைப் பல விதங்களிலும் அவமானம் செய்யத் திட்டம் போடப் போகிறானா? ஆர்யவர்த்தத்தின் அனைத்து அரசர்களின் மாபெரும் பரிசுகளையும் அவன் ஒருவனே அடையப் போகிறானா? ஆம், அவன் இவை அனைத்தையும் விரும்புகிறான். எல்லோருக்குமே அபிலாஷைகள் உண்டு.  அவை உயர்ந்தவையாகவும் இருக்கலாம்;  தாழ்ந்தவையாகவும் இருக்கலாம்.  ஆனால் அவன் இவற்றோடு எல்லாம் திருப்தி அடையப் போவதில்லை.  இவை அனைத்துக்கும் மேல் அவனுக்குத் தேவையானது வேறு. அவன் வாழ்நாளில் இழந்ததை எல்லாம் பெற விரும்புகிறான்.  அவன் அவனாக சுயம் அழியாமல் இருக்க விரும்புகிறான்.  அது ஒன்றே ஒரே நிவாரணம்.  ஒரே தீர்வு.

தீர்க்க இயலாத இந்தப் பிரச்னையைத் திரும்பத் திரும்ப யோசித்த அர்ஜுனன் மனம் உறுதியின்மையில் மூழ்கித் தத்தளித்தது.  அதிலிருந்து அவன் கரையேற விரும்பினான்.  தன்மேலேயே அவனுக்குக் கோபம்.  எப்போதும், எந்தக் காரியத்திலும் அவன் பிறரை நம்பியே வாழ வேண்டி உள்ளது. ஆசாரியர் வியாசர், அல்லது விதுரச் சித்தப்பா அல்லது கிருஷ்ண வாசுதேவன் ஆகியோரால் அளிக்கப்படும் ஏதேனும் ஒரு சமிக்ஞை, அல்லது சந்தர்ப்பத்திலேயே அவன் தன் வாழ்க்கையில் சரியான இடத்தில் அமர முடிகிறது. இம்மாதிரியான எண்ணங்களால் நிரம்பப்பட்டே அவன் தன் சகோதரர்களுடன் சுயம்வர மண்டபத்தை அடைந்தான்.  இப்போது அனைத்துமே உண்மையாக அவன் வாழ்க்கையில் நடைபெறப் போகிறது என்பதையும் அர்ஜுனன் உணர்ந்தான்.  ஆனால் எப்போது? எப்படி?  எப்போது கிருஷ்ணன் அவர்கள் உயிருடன் இந்த உலகில் இருப்பதை அறிவிக்கப் போகிறான்?  அவர்கள் ஜீவனுள்ள வாழ்க்கையை எப்போது வாழ ஆரம்பிக்கப் போகின்றனர்!

சுயம்வர மண்டபத்தில் நுழைந்த அர்ஜுனன் அங்கே வீற்றிருந்த ஆயிரக்கணக்கான மன்னர்கள், சக்கரவர்த்திகள், இளவரசர்கள் அனைவரையும் பார்த்தான்.  அனைவரும் ராஜாங்க உடை தரித்து, நல்லாபரணங்கள் பூண்டு, தங்கள் பரிவாரங்களோடு சகலவிதமான ராஜ மரியாதைகளும் அளிக்கப்பட்டு வீற்றிருந்தனர். அவர்களுடைய ரத்தினங்கள் பதிக்கப்பட்ட கிரீடங்களும், மாலைகளின் விலை உயர்ந்த கற்களும், நன்கு செப்பனிடப்பட்டு எண்ணெய் தடவிப் பளபளத்த வாட்களும், மற்ற ஆயுதங்களும் ஜொலித்த ஜொலிப்பில் அர்ஜுனன் கண்கள் மட்டும் கூசவில்லை;  தங்கள் அற்பமான நிலையை நினைத்து அவன் மனமும் கூசியது.  சொல்லப் போனால் அத்தனை மன்னர்களிடமும் அவனுக்குப் பொறாமை  பீறிட்டெழுந்தது.  எல்லாம் சரியாக இருந்திருந்தால், அவனும் அவர்களில் ஒருவனாக ராஜாங்க உடை தரித்து ஹஸ்தினாபுரத்து இளவரசனாக தன்னுடைய அருமை வில்லுடனும், அம்புகள் நிறைந்த அம்புறாத் தூணியோடும் இங்கே வீற்றிருப்பான்.  இத்தனை இளவரசர்களிலும் அவனைப் போல் இளமை, வடிவம், வீரம், துணிச்சல், சுறுசுறுப்பு நிறைந்த இளவரசன் இருக்க மாட்டான். வெகு எளிதாக சுயம்வரத்தில் வென்று திரௌபதியை அடைந்திருப்பான்.  ஆனால், எல்லாம் தங்கள் பெரியப்பன் மகன் துரியோதனனால் பாழாகி விட்டது.  அவன் ஒரு அரசகுமாரனாக இங்கே வந்து கலந்து கொள்ள முடியவில்லை. அவனுக்கு அந்த உரிமை மறுக்கப்பட்டு விட்டது.


வேறு வழியில்லாமல் அவர்கள் பிராமணர்களோடு கலந்து உட்கார்ந்து கொண்ட சமயம் ஒரு வாயாடியான பிராமணன் அங்கே வந்திருக்கும் அரசர்கள், மன்னர்கள், சக்கரவர்த்திகள், இளவரசர்கள் அனைவரையும் குறித்து விளக்கிச் சொன்னான். அப்போது அங்கே வீற்றிருந்த அரசர்களிடையே தன் பெரியப்பன் மகன்களை அர்ஜுனன் உடனடியாக அடையாளம் கண்டு கொண்டான்.  ஆஹா!  அவர்கள் மட்டும் தனியே அவன் கைகளில் சிக்கிக் கொண்டால்!  அர்ஜுனன் கைகளை முறுக்கினான்! அவர்களை எப்படி நசுக்கிக் கொன்றிருக்கலாம்!  என்னையும் என் சகோதரர்களையும் உயிருடன் எரிக்க முற்பட்ட இவர்களைச் சும்மா விடுவதா? ம்ஹூம், இப்போது ஒன்றும் செய்ய முடியாது!  அதோ, கிருஷ்ணன், பலராமன், உத்தவன் மூவரும் மற்ற யாதவத் தலைவர்களுடன் வந்து அவர்களுக்கான இருக்கைகளில் அமர்ந்து கொள்கின்றனர்.  கிருஷ்ணன், எங்களை எப்போது இந்த உலகுக்கு நாங்கள் உயிருடன் இருப்பவர்கள் என அறிவிப்பான்? நமக்கு நாமே சுதந்திரமாக எடுத்துக்கொள்ளக் கூடிய ஒரு முடிவை நமக்காப் பிறர் எடுப்பதும் அவர்கள் அதை அறிவிக்கக் காத்திருப்பதும் மிகவும் தொந்திரவும், கஷ்டமும் கொடுக்கும் ஒரு வேலை.  இதற்காகக் காத்திருந்து தான் ஆக வேண்டும்.

அதற்குள் சங்குகளும், எக்காளங்களும் முழங்க, பேரிகைகளும், முரசங்களும் ஒலிக்க இளவரசி திரௌபதி தன் தமையன் த்ருஷ்டத்யும்னனோடு சுயம்வர மண்டபத்தினுள் நுழைந்தாள்.  அவளுக்குத் துணையாகச் சில இளவரசிகளும் காணப்பட்டனர்.  திரௌபதியைக் குறித்து அவனுக்குக் கூறி இருந்தவற்றை எல்லாம் நினைத்துப் பார்த்தான் அர்ஜுனன்.  அவன் எதிர்பார்த்தது மிகவும் கர்வம் கொண்ட, அபிலாஷைகளால் நிரம்பிய, எதற்கெடுத்தாலும் கோபம் அடையும் ஒரு படபடப்பு மிகுந்த பெண்ணை.  அப்படித் தான் அவன் காம்பில்யம் வரும் வழியில் அனைவரும் பேசிக் கொண்டனர்.  ஆனால் இங்கேயே நேர்மாறாக அன்றோ பார்க்கிறான்!  இங்கே அவன் பார்த்ததோ சுறுசுறுப்பும், அழகும், நளினமும், எளிமையும், நேர்மையும் கண்களில் ஒளி வீசிப் பிரகாசிக்கும் ஒரு அழகான பெண்ணை! அவன் இது வரை பார்த்த பெண்களிலேயே இவளைப் போன்ற ஒருத்தியை அவன் பார்த்திருக்கவில்லை. அவள் முகம் தனித்தனியாக அவன் மனதில் பதிந்தது.  அவள் கன்னங்களின் சிவப்பு, பெரிய கடல் போன்ற பேசும் கண்கள், அவற்றில் நீந்தும் மீன்களைப் போன்ற கண்மணிகள், மாதுளம்பழத்தைப் பிளந்தாற்போல் தெரிந்த சற்றே திறந்திருந்த சிவந்த உதடுகள், அவற்றின் உள்ளே முத்துக்களைப் போன்ற பற்களின் வரிசை, அவளுடைய நீண்ட கூந்தல், அதில் பின்னப்பட்டிருந்த பின்னல்கள், அவள் சூடியிருந்த பூக்கள், கழுத்தில் அணிந்திருந்த வாசனையான மாலை, எடுப்பான மோவாய், கீழ் உதட்டுக்குக் கீழே தெரிந்த சின்னஞ்சிறு குழி, அந்த மோவாயும், அதில் தெரிந்த சின்னக் குழியுமே அவள் தீர்க்கமான முடிவை எடுப்பவள் என்றும், தைரியமானவள் என்பதையும் சொல்லாமல் சொல்லியது.  இவ்வளவு அழகான இளம்பெண்ணை அவன் அன்று வரை பார்த்தது இல்லை.  அழகான இளம்பெண்!  வாழ்க்கையை ரசனையோடு அனுபவிப்பவள் என்பதும் புரிந்தது அர்ஜுனனுக்கு. அகம்பாவமே இல்லாத, கர்வம் துளியும் இல்லாத அரசகுமாரிகளுக்கே இருக்கும் இயல்பான கம்பீரத்துடன் இருக்கும் அவளைப் பார்த்ததுமே அர்ஜுனனின் மனம் கவி பாட ஆரம்பித்துவிட்டது!  ஆஹா!  இவள் மட்டும் எனக்குக் கிடைத்தால்!


அரசர்கள் ஒவ்வொருவராகப் போவதும், முயற்சிகள் செய்வதும், தோற்றுத் திரும்பி வருவதுமாக இருந்தார்கள்.  அர்ஜுனன் அனைத்தையும் பார்த்தான்.  பல அரசர்களாலும் அந்த மாபெரும் வில்லைத் தூக்கக் கூட முடியவில்லை. அனைவருமே அந்த வில்லைச் சரியான முறையில் தூக்க முயலவில்லை என்பதை அர்ஜுனன் நன்கு கவனித்துக் கொண்டிருந்தான்.  வில்லை இப்படித் தான் தூக்க வேண்டும் என்பதை அவர்களுக்குக் காட்ட வேண்டும் என்னும் அவா அவனுள் எழுந்தது.  அவனால் ஒரே நொடியில் அந்த வில்லைத் தூக்க இயலும்,  அவன் அதற்கு அங்கே செல்ல வேண்டும்.  ஆனால்! காத்திருக்க வேண்டும்.  அவன் செல்லலாம் என்பதற்கான சமிக்ஞை கிடைக்கும் வரை அவன் செல்ல முடியாது.  யாரோ கொடுக்கப் போகும் அந்த சமிக்ஞைக்கு அவன் காத்திருந்து தான் ஆக வேண்டும். துரியோதனன் கலந்து கொள்ள எழுந்ததுமே அவன் மனம் மிகவும் கசந்து வழிந்தது.  இங்கே அவன், அர்ஜுனன், ஆர்யவர்த்தத்திலேயே சிறந்த வில்லாளி எதுவும் செய்ய இயலாமல் பார்த்துக் கொண்டிருக்கையிலேயே அவன் பெரியப்பா மகன் இந்தப் போட்டியில் ஜெயித்துத் திரௌபதியை மணந்து விடுவானா?


துரியோதனன் வீணாக வில்லைத் தூக்கி நாண் ஏற்றி அம்புகளைப்பொருத்தும் வேலையில் ஈடுபட்டிருக்கையில் அவன் தடுமாற்றங்களைக் கண்டு பீமனால் சும்மா இருக்க முடியவில்லை.  தன்னை மீறி… தன்னை மறந்து அவன் சிரித்துவிட்டான். அவன் சிரிப்பு சுயம்வர மண்டபம் முழுமையும் எதிரொலித்தது.  துரியோதனன் தோல்வி அடைந்தான்.  அவமானகரமான தோல்வி.  சுயம்வர மண்டபமே அவனைப் பார்த்துச் சிரித்துக் கெக்கலி கொட்டியது.  அர்ஜுனனுக்கு உள்ளூர சந்தோஷமாக இருந்தாலும் அவனுக்குப் பொறுமை கொஞ்சம் கொஞ்சமாகப் போய்க் கொண்டிருந்தது.  அவன் யாதவர்கள் அமர்ந்திருக்கும் இடம் நோக்கித் திரும்பி அங்கே அசையாமல் ஒரு கடவுளைப் போல் அமர்ந்து கொண்டிருந்த கிருஷ்ணனைப் பார்த்தான். அவன் அமைதியாக அமர்ந்திருந்தான்.  அவனைச் சுற்றிலும் பிரகாசமான ஒளி பரவி இருந்தது போல் தோன்றியது அர்ஜுனனுக்கு.






Monday, July 14, 2014

அர்ஜுனன் சிக்கிய அன்பு வலை!

இப்போது நாம் பாண்டவர்கள் அங்கே வந்ததைக்குறித்துப் பார்ப்போம்.  ஐவரும் நீண்ட நெடும் பயணம் மேற்கொண்டு காம்பில்யம் வந்தடைந்தனர்.  அங்கே ஒரு குயவன் வீட்டில் அவர்களுக்குத் தங்க இடம் கிடைத்தது.  அங்கே தங்கிக் கொண்டனர். துறவிகளைப் போல் உடை அணிந்திருந்த ஐவரும் சுயம்வர மண்டபத்துக்குக்கிளம்புகையில் அர்ஜுனன் மனதில் இனம் தெரியா மகிழ்ச்சி. தனக்கென ஒரு அருமையான எதிர்காலம் காத்து இருப்பதாக உள்ளூர நம்பினான். இன்றைய தினம் அவன் செய்யப்போகும் சாகசம் அதற்கு அஸ்திவாரம் அமைக்கப்போகிறது. துணிகர சாகசங்களும், மகிழ்ச்சி நிறைந்த அனுபவங்களுமே அவன் நீண்ட நாள் கனவாக இருந்தது.  இப்போது அந்தக் கனவுகள் நிறைவேறப் போவதை அவன் உணர்ந்து  கொண்டான்.  அவனுடைய முன்னோரான பரதன் செய்த சாகசங்களை விடப் புதுமையாகவும், துணிவாகவும் அவன் செய்யப் போகிறான்.  தேவதையைப் போன்ற அழகுடைய மணமகளை அவன் பொறுமைக்குப் பரிசாகவும், அவன் திறமைக்குப் பரிசாகவும் பெறப் போகிறான். அவன் வாழ்க்கையே கவிதை மயமாகவும், ஆடல், பாடல்களிலும் ஆனந்தமாகக் கழியப் போகிறது.

என்னதான் தன் நான்கு சகோதரர்களையும், தன் தாயையும் அவன் மிகவும் நேசித்தாலும் அவனுக்கென ஒரு தனி உலகம் அவனுள் இருந்து வந்தது. அவன் எண்ணங்கள் அவர்களோடு பகிரப்பட்டது.  வாழ்க்கையையும் பங்கு போட்டுக் கொண்டனர்.  ஆனாலும் தான் மட்டுமே தனியாக வாழ்வது போல ஒரு கனவுலகம் அவனுள் உருவாகி இருந்தது. ராக்ஷசவர்த்தத்தில் அவர்கள் கழித்த மாதங்களில் அவன் மிகவும் மனச்சோர்வு அடைந்திருந்தான்.  அதிலும் பீமனும் அந்த ராக்ஷசி ஹிடும்பியும் ஒருத்தர் மேல் ஒருத்தர் கொண்டிருந்த காதலை நினைக்கையில் எல்லாம் அவனுக்குள் சொல்லவொண்ணா கோபமும் எரிச்சலும் வரும்.  அர்ஜுனன் அழகை மிகவும் ரசிப்பவன்.  தான் இளமையாகவும் அழகாகவும் இருப்பதில் பெருமை கொண்டவன்.  அப்படிப்பட்டவனுக்கு இப்படி ஒரு மனைவியிடம் தன் அண்ணன் பாசமும், காதலும் கொண்டிருப்பதைக் கண்டால் அங்கேயே உள்ள ஒரு பெரிய மரத்தில் முட்டிக் கொண்டு கதறலாம் போல் இருந்தது.   இந்தத் துன்பியல் நாடகத்தை அதன் பின்னராவது தன் அண்ணன் நிறுத்துவானோ என்றெல்லாம் நினைத்துக் கொள்வான்.


ராக்ஷச வர்த்தத்தை விட்டு அவர்கள் கிளம்பியது அவனுக்குள் பெரிய ஆறுதலை ஏற்படுத்தியது. அவனுக்குள் இருக்கும் அனைத்து உணர்வுகளும் புத்துணர்ச்சி பெற்றன.  ஆற்றல் மிகுந்தாற்போல் ஓர் எண்ணம் அவனுள் ஏற்பட்டது.  அவனுடைய நீண்டநாள் ஆசைக்கு ஏற்ப வழியெங்கும் பலவிதமான அனுபவங்கள், சாகச நிகழ்ச்சிகள் ஏற்பட்டன.  அவன் ஆற்றலுக்கும் ஆர்வத்துக்கும் தீனி போட்டாற்போல் இருந்தன அவை. முக்கியமாக வழியில் ஒரு மோகங்கொண்ட கந்தர்வனின் விளையாட்டுக்களை அவன் வெல்ல வேண்டி இருந்தது.  பீமனுக்கோ கேட்கவே வேண்டாம். அவன் இருக்குமிடம் தேடிக் கொண்டு வீர, தீர சாகசங்கள் வந்து விடுகின்றன. அதிர்ஷ்டக்காரன்!  ஏகசக்ரத்தில் ஒரு ராக்ஷசன் தினம் ஒரு வீட்டில் ஒரு நபரை அனுப்பச் சொல்லிக்கொன்று தின்று கொண்டிருந்தான்.  அவனை முடித்துவிட்டான் பீமன்.  பின்னர் அவர்கள் அனைவரும் வியாசர் சொன்னபடி உத்கோசகத்தில் இருந்த தௌம்ய முனிவரின் ஆசிரமத்திற்குச் சென்றனர்.  அவர்களுடைய நீண்ட நெடும் பயணத்தில் இது ஓர் ஓய்வுக்கு உகந்த இடமாக அமைந்தது.  எனினும் காட்டில் முட்கள் நிறைந்த பாதையில் ஆங்காங்கே ஊரும் விஷ நாகங்கள், எப்போது பார்த்தாலும் ஊளையிடும் ஓநாய்கள், மரத்துக்கு மரம் தாவிக் கொண்டிருக்கும் குரங்குகள், காட்டின் பழமரங்களின் வித விதமான பெயர் தெரியாத பழங்கள். அனைத்துமே கவர்ந்தன.

ஆனாலும் ஆசிரமத்தின் அமைதியோ, அங்கே மெல்லப் பின்னணியில் ஒலித்துக் கொண்டிருந்த வேத மந்திர முழக்கங்களோ, பசுக்களைக் கறக்கும் சப்தமோ எதுவுமே அர்ஜுனன் மனதை அமைதிப்படுத்தவில்லை. அவனுக்குள் இனம் புரியாத தவிப்பு.  எப்போது அவன் அவர்களுக்கே உரித்தான அரண்மனைக்குச் செல்வான்? அங்கே நாட்டியத் தாரகைகள் நடனம் ஆட இசை வல்லுநர்கள் இன்னிசை பொழிய உல்லாசமாகப் பொழுதைக் கழிக்க முடியுமா? அவனுக்கென சொந்தமாக ஒரு சாஸ்த்ர சாலையை அவனால் ஏற்படுத்திக் கொள்ள இயலுமா?  அங்கே வித விதமான அம்புகள்  சேகரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருக்க, அவன் வில்லின் நாணைச் சுண்டி விட, அது போடும் “ட்ர்ங்ங்ங்ங்” என்னும் சப்தமே காதுக்கு இனிமையாக இருக்குமே. அதை எல்லாம் எப்போது கேட்கப்போகிறான்?  தௌம்யரும் அவர்களுக்கு ஆசானாக இருப்பதற்கு ஒப்புக் கொண்டு, அவர்களைக் காம்பில்யத்துக்குச் செல்ல அநுமதி கொடுத்ததோடு ஆசிகளும் வழங்கினார்.  ஏதோ போர்க்களத்தில் போரிட்டு வெல்லப் போவதாக அவனுக்குத் தோன்றியது.  இதற்கு முன்னரும் பல அரசர்களும் இப்படியான சாகசங்களைத் தேடிச் சென்றிருக்கின்றனர்.  வெற்றியும் அடைந்திருக்கின்றனர்.  அனைவருக்கும் சொந்தமான ஆசாரியர்கள் இருந்து வழிகாட்டி ஆசிகளையும் தந்திருக்கின்றனர்.

என்றாலும் நடக்கப் போவது என்ன என்பது குறித்து அவன் அறிந்திருக்கவில்லை. அவனுக்குள் ஒரு திருப்தியும் ஏற்படவில்லை.  கொஞ்சம் அமைதியின்றியே காணப்பட்டான்.  காம்பில்யத்தில் என்ன நடக்கப் போகிறது?  அவர்களுக்குக் கிடைக்கப் போவது என்ன?  மேலும் உலகளவில் இப்போது அவர்கள் இறந்தவர்கள்.  கிருஷ்ணன் எப்போது, எந்த சந்தர்ப்பத்தில் அவர்களை உலகுக்குக் காட்டப் போகிறான்?  அவர்கள் இருப்பு எப்போது அனைவராலும் உணரப் படும்? எப்படி ஒரு விசித்திரமான நிலைமை அவர்கள் ஐவருக்கும்!  உயிருடன் இருக்கின்றனர்!  ஆனால் செத்துவிட்டனர்.  வேறு எவராவது அவர்களுக்கு சமிக்ஞை செய்தால் தான் அவர்கள் உயிருடன் இருப்பதாகக் காட்டிக் கொள்ள முடியும்.  புத்துயிர் பெற முடியும்.  கிருஷ்ண வாசுதேவனை அர்ஜுனன் மிகவும் மதிக்கிறான்;  அன்பும் செலுத்தி வருகிறான். ஆனால் இம்மாதிரி மறைந்திருந்து ஒருவர் வெளியே வரலாம் என சமிக்ஞை கொடுத்ததும் வெளியே தலைகாட்டுவதைப் போன்றதொரு அவமானகரமான நிகழ்வு வேறில்லை.  கிருஷ்ணன் பொருட்டல்லவோ இவை எல்லாம் சகிக்க வேண்டி உள்ளது!

அது மட்டுமா?  காம்பில்யத்தில் அவர்கள் தங்கி இருந்த குயவனின் குடிசை துர்நாற்றமடித்துக்கொண்டு இடிந்து விழும் நிலையில் இருந்தது. எல்லாவற்றையும் விட மோசம் என்னவெனில்!  ஒரு ஒழுங்கில்லாமல் அங்குமிங்குமாய் ஆனால் நெருக்கமாய்க் கட்டப்பட்ட குடிசைகள், ஒரு குவியலாகக் காட்சி அளித்தன.  சுத்தமான ஆடை அணியாத சின்னஞ்சிறு குழந்தைகள்,  எந்த நேரமும் கூச்சலிட்டுக் கொண்டிருக்கும் கழுதைகள், ஓயாது சுற்றிக் கொண்டிருந்த குயவர்களின் சக்கரங்கள், எங்கு பார்த்தாலும் மூத்திரநாற்றம், உவர்ப்பு மண்ணின் நாற்றம் என்று போதும் போதுமென்றாகி விட்டது.  அவனுக்கு ஒரு பிராமணனைப் போல் வேஷம் மாற்றிக் கொண்டு சுயம்வரத்தில் கலந்து கொள்வதிலும் விருப்பமே இல்லை.  அவன் விருப்பத்திற்கு விட்டிருந்தால் ஒரு யானையின் மேல் சவாரி செய்து கொண்டு வந்து கலந்து  கொண்டிருப்பான்.  ஆனால் பெரியண்ணா யுதிஷ்டிரன் அதற்குச் சம்மதிக்கவில்லை.  அவர் பிராமணர் வேஷத்தில் தான் செல்ல வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.  கிருஷ்ணன் தோன்றி அவர்கள் உலகுக்குத் தங்களை வெளிப்படுத்திக் கொள்ளலாம் என்று சமிக்ஞை செய்ய வேண்டும். அது வரை பொறுத்துத் தான் ஆகவேண்டும். அதைத் தான் நம்முடைய குருவான வியாசமுனியும் சொல்லி இருக்கிறார்.  நாம் அதைத் தான் பின்பற்றியாக வேண்டும். யுதிஷ்டிரன் உறுதியாகத் தெரிவித்து விட்டான்.

இம்மாதிரியானதொரு நிலைமையைத் தன் சகோதரர்கள் எதிர்கொண்ட விதம் அர்ஜுனனுக்கு வெறுப்பையும், கோபத்தையும் அளித்தது.  யுதிஷ்டிரனைப் பற்றிச் சொல்லவே வேண்டாம்.  எப்போதுமே பொறுமையாக இருப்பவன். எப்படிப்பட்ட கீழ்த்தரமான நிலையிலும் அதற்காகக் கவலைப்படாதவன். அதை அவமானமாகவே நினைக்க மாட்டான்.  எவ்வளவு மோசமான நிலையையும் சந்தோஷத்துடன் வரவேற்று ஏற்றுக் கொள்வான்.  இப்படி ஏற்படும் ஒவ்வொரு சோதனையான நிகழ்விலும் தாங்கள் ஐவரும் புடம் போடப்படுவதாகவும், பக்குவப்படுத்தப்படுவதாகவும் இதுவே தங்கள் ஆன்மாவை சுத்தப்படுத்த ஏற்பட்டதாகவும் நினைத்துக் கொள்வான். இதன் மூலம் பரிசுத்தம் அடைவதாகவும் சொல்வான். பீமனுக்கோ எனில் மனநிலை எப்போதுமே அலைபாய்ந்தது இல்லை.  எப்போதுமே எல்லாவற்றையும் எளிதாக எடுத்துக்கொள்வதோடு அவற்றைக் குறித்து நகைச்சுவையாக ஒரு கருத்தைச் சொல்லி அனைவரையும் சிரிக்க வைப்பான். எப்படிப்பட்ட இழிந்த நிலையிலும்  என்ன நடந்தாலும் அவன் மகிழ்ச்சியை மட்டுமே வெளிப்படுத்துவான்.  நகுலனுக்குக் கொஞ்சம் அதிருப்தி இருந்தாலும் அவனுக்கு அவற்றை வெளிப்படுத்தும் வழக்கம் இல்லை.  சஹாதேவனோ தன் எண்ணங்களில் தானே ஆழ்ந்து போனவனாகக் காணப்படுவதோடு கேட்கப் படும் கேள்விக்கு ஒற்றை வார்த்தையிலேயே பதிலைக் கொடுப்பான். பொதுவாக அவன் மௌனமாகவே இருப்பான்.  தன் தாய் மற்றும் சகோதரர்களிடம் இப்படி ஒரு அன்பு வலையில் தான் சிக்கிக் கொண்டிருப்பதை நினைக்கையில் பல சமயங்களில் அர்ஜுனனுக்குக் கோபமும், எரிச்சலும் வரும்.  ஆனால் அதை உடைக்கவேண்டும் என அவன் நினைத்தாலும் அதை அவனால் செய்யமுடியவில்லை.   அவனால் எப்படி முடியும்?


Thursday, July 10, 2014

பார்வை துரத்தியது!

அதிர்ந்து போனான் துரியோதனன்.  அந்தச் சிரிப்பு.  பலமுறை கேட்ட சிரிப்பு. அங்கே நிலவி இருந்த மௌனத்தைக் கிழித்துக் கொண்டு எழுந்த சிரிப்பு. அவன் எண்ணக் குகையில் அந்தச் சிரிப்பின் அடையாளம் ஆழப் பதிந்து கிடந்தது. அவன் மனமாகிய பிரகாரத்தில் அதன் எதிரொலிகள் இன்னமும் ஒலித்துக் கொண்டிருந்தன.  இந்தச் சிரிப்பை அவன் அடிக்கடி கேட்டிருக்கிறான்.  அவனை அவமதிக்கும் வகையில் சிரிக்கும் சிரிப்பு இது.  அவனை எரிச்சல் படுத்த வைக்கும் சிரிப்பு இது.  அவனிடம் சவால் விடும் தோரணையில் எழும் சிரிப்பு இது. அவனை, திருதராஷ்டிரன் மூத்த மகன் துரியோதனனைக் கீழானவனாக நினைக்க வைத்த சிரிப்பு இது.  அவன் சிறுவனாக இருந்த போதிலும், பதின்ம வயதில் வளரும் பிராயத்தில் இருந்தபோதும் இப்போது வாலிபப் பருவத்தில் ஓரிரு ஆண்டுகள் முன்னரும் கேட்ட அதே சிரிப்பு இது.  இந்தச் சிரிப்பு ஒரே ஒருவரிடமிருந்து தான் வர முடியும்.  அது அவன் தந்தை வழிச் சிற்றப்பன் பாண்டுவின் மகன், துரியோதனனின்  சகோதரன் முறையான பீமனுடைய குரல். அவன் எண்ண ஓட்டத்தில் திடீரென ஒரு திகைப்பு, ஓர் எண்ணம்.  ஆனால்….ஆனால்….அப்படி இருக்க முடியாதே! வாரணாவதத்தில் அரக்கு மாளிகையில் அவனைத் தான் சுட்டெரித்துச் சாம்பலாக்கி விட்டோமே! அவர்கள் ஐவருக்கும் கடைசியாக இறுதிக் காரியங்கள் கூட நடந்து முடிந்து விட்டதே! அவர்கள் ஐவரின் சாம்பலையும் கங்கையில் கரைத்தும் ஆகிவிட்டதே!

இது எங்கனம் நிகழ முடியும்?  துரியோதனன் உடலில் ஓர் நடுக்கம் பாய்ந்தது. அவன் முதுகுத் தண்டு சில்லிட்டது.  ஐவரும் உயிருடன் இருக்கிறார்களா? ஆஹா! அதிலும் அவர்கள் ஐவரும் இங்கேயும் வந்திருக்கிறார்கள்.  மீண்டும் அவனுக்குள் இந்த எண்ணம் ஓட திகில் அவன் நாடி, நரம்புகளில் எல்லாம் ஓடியது.  அவர்கள் ஐவரும் உண்மையாகவே உயிருடன் இருந்தால் அதன் விளைவுகள் மிகக் கொடியவையாக அன்றோ இருக்கும்.  ஒரு கண நேரம் அந்த விளைவுகள் அனைத்துமே அவன் கண்ணெதிரே ஒரு காட்சியாக ஓடி மறைந்தன.  மீண்டும் மிகவும் முயற்சி செய்து  இந்த எண்ணங்களை எல்லாம் தன் மனதிலிருந்து அகற்றினான். வில்லின் நாணை வளைத்து அம்பைத் தொடுப்பதில் முனைந்தான்.  அதிலே தன் முழு கவனத்தையும் பதித்தான். ஆனால்……ஆனால்…..இது என்ன?  சற்று நேரம் முன்னால் மிக சுலபமாகத் தோன்றிய ஒன்று இப்போது நினைக்கவே கடினமாக இருக்கிறதே! அவனால் முடியாது போல் தோன்றுகிறதே!  இதென்ன!  துரியோதனன் கைகள் நடுங்குகின்றனவே.  அவனால் சரியாகக் குறியைப் பார்க்கக் கூட முடியவில்லை.  கண்களை ஏதோ மறைக்கிறது.  அவனுக்கு அடுத்து என்ன நடக்கப் போகிறது என்று புரிந்து விட்டது.  அவன் தோற்கப் போகிறான். ஆஹா!

இல்லை, இல்லை, அவன் தோற்கக் கூடாது;  தோற்க முடியாது.  அவனால் இந்தத் தோல்வியைத் தாங்க முடியாது. என்ன ஆனாலும் அவன் உயிரைக் கொடுத்தாவது இந்தப் போட்டியில் அவன் வென்றே ஆக வேண்டும்.  ஆனால் வில்லோ, அம்போ அவன் சொல்வதைக் கேட்கவே இல்லையே!  இது என்ன கொடுமை!  அம்பு அவன் கைகளிலிருந்து நழுவி அவனைக் காட்டிக் கொடுத்துவிடும் போல் உள்ளதே!  பற்களைக் கடித்த வண்ணம் அம்பை இறுகப் பிடித்து வில்லில் பொருத்தி நாணேற்றி குறியைத் தாக்க முயன்றான் துரியோதனன்.  ஆனால்….ஆனால்…அவன் எண்ணங்கள் இப்போது வேறு திசையில் பயணித்தன.  ஐவரும் உயிருடன் இருப்பது தெரிந்தால் ஹஸ்தினாபுரத்தில் கோலாகலமாக வரவேற்கப் படுவார்கள்.  மீண்டும் யுதிஷ்டிரனை யுவராஜா ஆக்கி விடுவார்களோ!  ஆம், அப்படித் தான் நடக்கும். அதிலும் தாத்தா பீஷ்மர் இதிலே தான் குறியாக இருப்பார்.  விதுரச் சித்தப்பாவும் ஆமோதிப்பார்.  ஒன்று மாற்றி ஒன்றாக வந்த இந்த எண்ணங்களை அவன் தன் தலையை உலுக்கிக் கொண்டு அகற்ற விரும்பினான்.  அவனுடைய நாடி, நரம்புகள் தளர்ந்து போயின.  அவன் கைகளோ, அல்லது விரல்களோ தங்கள் சாமர்த்தியத்தை இழந்து விட்டன.

வில்லின் நடுத்தண்டை இறுகப் பிடித்திருந்த அவன் கைகள் தளர்ந்து போக அவை அவன் கைகளிலிருந்து விடுபட்டன.  அதைத் திரும்பவும் பிடித்து தண்டை வளைக்க முனைந்தான்.  ஆனால் அவனால் இயலவில்லை.  மிக வேகமாக தண்டு பெரியதொரு சப்தத்துடன் நிமிர்ந்தது.   அவன் இடக்காலால் அழுத்திப் பிடித்திருந்த வில்லின் மற்றொரு நுனியானது அவன் பிடியிலிருந்து தளர்ந்து விட்டது. வில் தூக்கி அடிக்க துரியோதனன் தான் நின்று கொண்டிருந்த இடத்திலிருந்து தூக்கி அடிக்கப்பட்டுத் தன் நிலையை இழந்தான். கீழே முழுதும் விழுந்து விடாமல் இருக்கப்பெரும் பிரயத்தனம் செய்த துரியோதனன் அந்த முயற்சியில் தள்ளாடினான்.  தன்னைச் சமாளித்துக் கொண்டவனுக்கு அந்த மாபெரும் சபையிலிருந்து எழுந்த இகழ்ச்சி நிறைந்த கூச்சலைக் கேட்டுச் சகிக்க முடியவில்லை.  ஆர்ப்பரிக்கும் அலைகடலில் அலைகள் எழுப்பிய அலை ஓசை போல் கேட்ட அந்த சப்தத்தால் அவன் அந்தக் கடலின் ஆழத்துக்கே போய்விடுவானோ எனத் தோன்றியது.

கோபத்தை அடக்கிய வண்ணம் மீண்டும் குனிந்து வில்லை எடுக்க முனைந்தான்.  மீண்டும் அதன் தண்டை வளைத்து நாணை இறுகக் கட்டும் முயற்சியில் இறங்கினான்.  சுயம்வர மண்டபத்தில் மீண்டும் கூச்சல் , குழப்பம், சிரிப்புகள், கேலிப் பேச்சுகள்.  அவன் கைகளும், விரல்களும் தளர்ந்து விட்டன.  தண்டு வளைய மறுத்தது.  அவன் எவ்வளவு வலிமையுடன் தண்டை வளைக்க முயற்சித்தாலும் அவனை பலஹீனம் வந்து ஆட்கொண்டதை உணர்ந்தான்.  தண்டு மீண்டும் அவன் கைகளில் இருந்து நழுவியதோடு அல்லாமல் கீழேயும் விழுந்து அவனையும் சேர்த்துக் கீழே தள்ளிவிட்டது.  யாரோ கைகொட்டிச் சிரித்துவிட்டனர்.  சிரிப்புச் சப்தமும், கேலிப்பேச்சுகளும் அந்த சுயம்வர மண்டபத்தை நிறைத்தது.  ஆயிரமாயிரம் மன்னர்களின் கேலிச் சிரிப்பால் துரியோதனன் காதுகள் வலித்தன.  அவன்  முகம் கோபத்தால் சிவந்தது.  ஒரு குரல் அப்போது அங்கே கேட்டது!  அது மிகவும் தெளிவாகப் பேசியது.  ஆனால் வலிமை உள்ள சிங்கத்தின் கர்ஜனை போன்ற குரல்!  அது சொன்னது! “ ஒரு குருட்டுத் தகப்பனின் பிள்ளையால் இதற்கு மேல் என்ன செய்ய இயலும்?” என்றது. இது! இதே வார்த்தைகளை அவன் சிறு வயதில் இருந்து கேட்டு வந்திருக்கிறான்.  எழுந்த துரியோதனன் கோபத்தில் மனமும், கண்களும் பொங்கித் தவிக்க, தன் இருப்பிடத்தை நோக்கி நடந்தான்.  “நான் தோற்று விட்டேன்!’ என்னும் இந்த வாசகம் திரும்பத் திரும்ப அவன் காதுகளில் எதிரொலித்தது.

இத்தனை வருடங்களுக்குப் பின்னர் முதல்முறையாக துருபதனுக்குப் புன்னகை மலர்ந்தது.  தன் முகத்தின் புன்னகை மாறாமலேயே கிருஷ்ணன் அதைக் கவனித்துக் கொண்டான்.  திரௌபதியாலும் மகிழ்ச்சியைக் கட்டுக்குள் வைத்திருக்க இயலவில்லை.  அவள் முகமும் புன்னகையால் மலர்ந்தது.  ஆனால் அப்போது தற்செயலாக துரியோதனனைப் பார்த்த போது அவள் புன்னகை அவள் முகத்திலேயே உறைந்து போனது.  அவன் முகம் மிகவும் வேதனையைச் சகிப்பதை எடுத்துக் காட்டியது.  பார்க்கவே பரிதாபமாகவும் காட்சி அளித்தான் அவன். ஆனால் அவன் கண்கள்!  அந்தப் பார்வை அது அவளுக்கு ஏதோ செய்தியைச் சொல்லாமல் சொல்லியது. முழு வெறுப்பையும் காட்டிய அந்தக் கண்கள்! திரௌபதியையே பார்த்த அந்தக் கண்கள்.  அந்தப் பார்வை அவளைத் திகைக்க வைத்தது.  மனம் பிறழ்ந்த ஒருவன் கொலை செய்யக் கூடத் தயங்க மாட்டான்.  அதே போல் மனம் பிறழ்ந்த நிலையில் அவளைக் கொலை செய்யும் வெறியில் காணப்பட்டது துரியோதனனின்  அந்தப் பார்வை.  இந்தப் பார்வையை திரௌபதி இனி வரும் நாட்களிலும் அவள் வாழ்க்கையின் முடிவு வரையிலும் கண்டே ஆகவேண்டும். அவள் வாழ்நாள் முழுதும் துரத்தப் போகும் பார்வை அது! அத்தகையதொரு பார்வையை துரியோதனன் கண்களில் கண்டாள்.

Saturday, July 5, 2014

துரியோதனன் பலமும், திரௌபதியின் மனமும்!

கண்ணன் பலராமனிடம் திரும்பினான்.  “அண்ணா, பாண்டவர்கள் ஐவரும் உயிருடன் இருக்கின்றனர்!” என்று ஏதும் அறியாதவன் போலச் சொன்னான். “உனக்கு எப்படித் தெரியும்?” பலராமன் சந்தேகத்துடன் கேட்டான்.  “அண்ணா, அதோ நமக்கு எதிரே பிராமணர்கள் அமர்ந்திருக்கும் பக்கம் கொஞ்சம் உங்கள் பார்வையைச் செலுத்துங்கள்.  அவர்கள் அதோ அங்கே வீற்றிருக்கிறார்கள். அந்த பிரம்மாண்டமான உருவம் பீமனைத் தவிர வேறெவரும் இல்லை. அவனுக்கு அடுத்து அமர்ந்திருப்பது தான் பெரியண்ணா யுதிஷ்டிரர்.  அந்த அழகான, நளினமான இளைஞன் அர்ஜுனன்.  அவர்களுக்குப் பின்னர் அமர்ந்திருக்கும் இரட்டையர் நகுல,சஹாதேவர்கள். “

தன் கண்களை நன்கு தேய்த்துவிட்டுக் கொண்டு மீண்டும், மீண்டும் அங்கேயே உற்று நோக்கினான் பலராமன்.  பிராமணர்களிடையே அவர்களும் பிராமணர்களைப் போல் வேஷம் தரித்து அமர்ந்திருந்தாலும் அவர்கள் பாண்டவ சகோதரர்களே என்பதை உறுதிப் படுத்திக் கொண்டான்.  உடனேயே அவனுக்கு விஷயம் புரிந்து, அது பெரியதொரு புன்னகையாக மலர்ந்தது.  திரும்பித் தன் சகோதரன் கண்ணன் முதுகில் ஓங்கி ஓர் அறை அறைந்தான். “தந்திரக்காரா, மாயக்காரா!  இது எல்லாம் உன் சூழ்ச்சி தானே? எனக்குத் தெரியும்டா மாயாவிப் பயலே!” சந்தோஷம் தாங்க முடியா அந்நிலையிலும் பலராமன் கிசுகிசுப்பாகவே கண்ணனிடம் சொன்னான்.  அதற்குள்ளாக யாதவத் தலைவர்களிடையே அமர்ந்திருந்த சாத்யகிக்குப் பொறுமை கொஞ்சம் கொஞ்சமாய்ப் போய்க் கொண்டிருந்தது.  அவன் கிருஷ்ணனின் ஆணைக்குக் காத்திருந்தான்.  கிருஷ்ணனோ வாயைத் திறக்கிற வழியாய்த் தெரியவில்லை. தன்னிடத்திலிருந்து கொஞ்சம் மேலெழும்பிக் கிருஷ்ணனின் பக்கம் சாய்ந்தவண்ணமே, “பிரபுவே, நான் எப்போது போட்டியில் கலந்து கொள்ளலாம் என்பதைத் தெரிவியுங்கள்.” என்று வேண்டிக்கொண்டான்.

அவன் கைகளை ஆறுதலாக அழுத்தினான் கிருஷ்ணன்.  “பொறுமையை இழக்காதே சாத்யகி.  நேரம் வருகையில் உன்னிடம் சொல்வேன்.” என்றான். பின்னர் தன் இன்னொரு பக்கம் அமர்ந்திருந்த உத்தவனிடம், “யாதவத் தலைவர்கள் யாருமே நான் சொல்லும்வரை போட்டியில் கலந்து கொள்ளக் கூடாது என்று தெரிவித்துவிடு!” என்றான்.  “கோவிந்தன் விருப்பமே எங்கள் விருப்பம்.” என்றான் உத்தவன்.

துரியோதனன் போட்டியில் கலந்து கொள்ள ஆர்வமுடன் காத்திருந்தான்.அளவிடமுடியா உற்சாகத்துடன் இருந்தான்.  தான் நிச்சயமாகப் போட்டியில் வென்று விடுவோம் என்னும் நம்பிக்கை அவனிடம் இருந்தது. தன்னுடைய பலத்தையும், திறமையையும் அவன் நன்கறிந்திருந்தான்.  இன்னும் சிறிது நேரத்தில் அவன் போட்டியில் கலந்து கொண்டு குறி இலக்கை ஒரே அம்பில் வீழ்த்தி விடுவான்.  அங்கே சுயம்வர மண்டபத்தில் மன்னர்களுக்கென ஒதுக்கப்பட்டிருந்த கூடத்தில்  அமர்ந்த வண்ணம் அவன் போட்டியில் எவ்வாறு வெல்வது என்பதைக் கணக்கிட்டுக் கொண்டிருந்தான்.  வில்லின் நாணை இழுத்துக் கட்டத் தேவைப்படும் வலிமை, நாணை முறுக்கேற்றி வளைத்து, அம்பைப் பொருத்தி எய்ய வேண்டிய தூரம், சுற்றிக் கொண்டிருக்கும் மீனின் கண்ணின் பாகத்தை எங்கிருந்து தாக்கினால் குறி சரியாகப் போய்த் தைக்கும் என்பதை எல்லாம் ஆராய்ந்து கொண்டிருந்தான். ம்ஹூம், அவன் தோற்க வாய்ப்பே இல்லை.  அவன் தான் வெல்வான்.


அஸ்வத்தாமா துருபதனுக்குள் ஏற்பட்டிருந்த அதிருப்தியை முதல் நாள் இரவு பேசித் தீர்த்துக் கொண்டு வந்து விட்டான்.  ஆகவே அவனுக்கு பாஞ்சால அரச குடும்பத்தினரிடமிருந்து தடைகள் ஏதும் வரப் போவதில்லை.  இங்கிருக்கும் கூட்டமும் அவனை நன்கு வரவேற்று உற்சாகம் செய்யும்.  இப்போதே எதிர்பார்ப்புடன் இருக்கின்றனர்.  அவன் கண்ணெதிரே சில காட்சிகள் தோன்றித் தோன்றி மறைந்தன.  அவனை யுவராஜாவாகத் தேர்ந்தெடுக்காமல் யுதிஷ்டிரனைத் தேர்ந்தெடுத்தது, பின்னர் அவர்கள் நாடு கடத்தப்பட்டது,  துரியோதனன் யுவராஜாவாக ஆனது, வாரணாவதத்தில் பாண்டவர்கள் அனைவரும் உயிருடன் எரிக்கப்பட்டது, துரியோதனனைத் தன் வசம் கொண்டு வரச் செய்த துரோணரின் முயற்சிகள், அதில் அவர் கண்ட தோல்வி…….ஆஹா, இப்போது இனி எந்தத் தடையும் இல்லை.  பாஞ்சால நாட்டு இளவரசி அவன் மனைவியாகப் போகிறாள்.  திரௌபதி அவன் மனைவியாக ஆனதும், வெற்றித் திருமகள் அவனை நாடி வருவதோடல்லாமல் அவனை விட்டுச் செல்லவும் மாட்டாள்.  அவன் வம்சத்து முன்னோரான பரதனை விட அதிக பராக்கிரமத்துடனும், அதிகச் செல்வாக்குடனும் பெரியதொரு சாம்ராஜ்யத்தை அவன் ஆளப் போகிறான்.

அவனுடைய அதீதமான தன்னம்பிக்கை இத்துடன் முடியவில்லை. அவனுடைய மனம் திரும்பத் திரும்ப அவன் தான் வெல்லப் போகிறான் என்று சொல்லிக் கொண்டே இருக்கிறது.  என்றாலும் ஒரு சிறியதொரு தடங்கல் ஏற்பட்டு விடுமோ என்னும் எண்ணம் அவன் மனதில், மூளையில் ஒரு பகுதியில் உறுத்திக் கொண்டே இருக்கிறது.  அவனுடைய அனைத்து நம்பிக்கைகளும் பொய்த்துப் போகும்படி அந்த உறுத்தல் செய்து விடுமோ என்று பயமாகவும் இருந்தது அவனுக்கு.  ஏதேனும் துரதிர்ஷ்டவசமாக நடந்து விடுமோ?  ம்ஹ்ஹூம் அப்படி ஏதும் நடக்காது. தன் தலையை உலுக்கிக் கொண்ட துரியோதனன், தான் நிச்சயமாக ஜெயிப்போம் என நம்பினான்.

ஜராசந்தனும் அவன் பரிவாரங்களும் சென்ற பிறகு ஒரு விசித்திரமான அமைதி அங்கே நிலவியது.  இப்போது அனைவரும் அவன் பக்கம் திரும்பிப் பார்த்துக் கொண்டிருந்தனர்.  துரியோதனன் தான் போட்டியில் நுழைய வேண்டிய வேளை நெருங்கி விட்டதாகக் கருதினான்.  ஆம், வேளை வந்துவிட்டது.  தன்னுடைய வாளையும், தண்டாயுதத்தையும் தன் தம்பி துஷ்சாசனிடம் கொடுத்தான்.  தன் ஆசனத்திலிருந்து எழுந்து கொண்டு அனைத்து அரசர்களையும் பார்த்து நட்பாகச் சிரித்த வண்ணம் அங்கிருந்து கீழிறங்கி செயற்கைக்குளத்தை நோக்கிச் சென்றான்.

நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு, தலையை கம்பீரமாகத் தூக்கியவண்ணம் ராஜநடை நடந்து சென்றான்.  இப்போது கட்டியம் கூறுபவர்கள் அவனுடைய புகழைப் பாடிக் கொண்டிருந்தனர்.  அதைக் கேட்டுக் கொண்டு மனதுக்குள் ரசித்த வண்ணம் உள்ளூர கர்வம் அடைந்தான்.  அவன் புகழைக்கேட்கக்கேட்க அவன் காதுகள் குளிர்ந்தன.  மனம் மகிழ்ச்சியில் மிதந்தது என்பதை அவன் பிரகாசமான முகம் காட்டியது.  அரசர்களுக்குள்ளே பேரரசன் போல் நடந்த அவன் முதலில் நேரே துருபதனை நோக்கிச் சென்றான்.  துருபதனை மரியாதை நிமித்தம் வணங்கியவனுக்கு துருபதன் முகத்தில் தெரிந்த சிந்தனைக் கோடுகளைக் கண்டு ஆச்சரியம் மிகுந்தது.  அவன் ஏதோ தீர்மானத்தில் உறுதியாக இருப்பதை அவன் கண்கள் சொல்லின.  செயற்கைக்குளத்தருகே சென்றவன் ஆசாரியர் சாந்தீபனியை வணங்கிக் கொண்டான்.  பின்னர் தங்கள் குரு வம்சத்தின்  காவல் தெய்வத்தை மானசீகமாகப் பிரார்த்தித்துக் கொண்டான்.  திரௌபதியைப் பாராட்டும் விதமாக ஒரு பார்வை பார்த்தான்.  அவள் உதடுகள் நடுங்கியதைக் கவனித்துக் கொண்டான்.  ஆனால் அது அவன் ஜெயிக்காமல் போய்விடுவானோ என்னும் பயத்தில் அவளுக்கு நடுக்கம் ஏற்பட்டதாகவும் நினைத்துக் கொண்டான். அவன் இதழ்களில் புன்சிரிப்பு மலர்ந்தது.

ஒரு நிமிடம் வைத்த கண் வாங்காமல் வில், அம்பு, வில்லில் கட்டி முறுக்கேற்ற வேண்டிய நாண், செயற்கைக்குளத்தில் நடப்பட்டிருந்த கம்பத்தின் உச்சியில் சுழலும் வட்டவடிவமான சக்கரத்தில் சுற்றிக் கொண்டிருந்த மீன், அதன் கண்களில் தான் வைக்க வேண்டிய குறி,  அதன் பிரதிபலிப்பு குளத்தில் தெரிவது எல்லாவற்றையும் கணக்கிட்டுக் கொண்டான். அவன் உடல் விறைப்பானது.  ஒரு வெற்றிப் புன்னகையுடன் சபையோரைச் சுற்றிப் பார்த்துக் கொண்டான்.  அவன் துரியோதனன் எவ்வளவு வல்லமை மிக்கவன் என்பதை இந்த உலகுக்குக் காட்டப் போகிறான்.  தன் இடக்கையில் வில்லின் ஒரு நுனியை எடுத்தான்.  பின்னர் அதை மெல்ல மெல்லக் கீழே நழுவ விட்டு இப்போது அதன் நாண் கட்டப்படாத மற்றொரு நுனி வரும்வரை கொண்டு வந்தான். தன் முழு பலத்தையும் உபயோகித்து வில்லின் நடுத்தண்டை வளைத்தான்.  அவன் வலக்கையில் வில்லின் மற்றொரு நுனியில் கட்டவேண்டிய  நாண் இருந்தது.  அதை வில்லின் மற்றொரு நுனியில் இறுக்கிக் கட்ட ஆரம்பித்தான். எங்கும் அமைதி.  நிசப்தம்.  அனைவர் கண்களும் துரியோதனன் மேலேயே பதிந்திருந்தன.  துரியோதனன் நாடி,நரம்புகளில் எல்லாம் வெற்றி, வெற்றி என்று துடித்தன.  அப்போது ஒரு பலத்த சிரிப்புச் சப்தம்!  துரியோதனனுக்குத் தூக்கி வாரிப்போட்டது.  அதே சிரிப்பு!

Friday, July 4, 2014

ஜராசந்தன் வெளியேறுகிறான்!

இப்போது நாம் கொஞ்சம் அவசியம் கருதி ஜராசந்தனின் நிலைமையைக் குறித்துப் பார்த்துடுவோம்.  முதல்நாள் நடு இரவில் கிருஷ்ணனோடு ஏற்பட்ட சந்திப்புக்குப் பின்னரே ஜராசந்தனுக்கு இந்தச் சுயம்வரத்தின் மேல் இருந்த ஈர்ப்புக் குறைந்துவிட்டது.  மனதளவில் தளர்ந்திருந்த அவன், வெறுப்பிலும், தாங்கொணாக் கசப்பிலும் திரௌபதியைக் கடத்தச் செய்திருந்த ஏற்பாடுகளைக் கலைத்தான்.  அப்படி மட்டும் கடத்தி இருந்தான் எனில் அது ஓர் துணிகரமும், ஆச்சரியமும் கலந்ததொரு நிகழ்வாகப் பேசப்பட்டிருக்கும். ஆனால் இந்த மாட்டிடையனின் வஞ்சகமும், சூழ்ச்சியும் எந்த அளவுக்குப் போகும் என்றே சொல்ல இயலாது. ஆனால் ஒரு விஷயம் ஒத்துக்கொள்ளத் தான் வேண்டும்.  ஜராசந்தன் மட்டும் இந்த சுயம்வரத்தின் போட்டியில் கலந்து கொள்ளக் கூடாது என்று கண்ணன் சொன்னதில் ஓரளவுக்கு உண்மை இருக்கத் தான் செய்தது.  அவன் போட்டியில் கலந்து கொண்டானென்றால் வென்று விட்டான் எனில்?   அப்படி வென்றால் இங்கு வந்திருக்கும் அனைத்து அரசர்களும் அவன் மேல் வெறுப்பைக் கொட்டுவார்கள்.  இவ்வளவு இளம்பெண்ணை இந்த முதிய கிழவன் மணமகளாக ஏற்கிறானே என கேலியும் செய்வார்கள். வயது முதிர்ந்தும் முட்டாள்தனமாக நடந்து கொள்வதாகச் சொல்வார்கள்.  இல்லாமல் அவன் தோற்றாலோ அங்கிருக்கும் அனைவர் கண்ணெதிரேயும் நகைப்புக்கு இடமாக ஆகிவிடுவான்.  சட்டெனத் தூக்கிவாரிப் போட சுயம்வர மண்டபத்தைக் கவனித்தான் ஜராசந்தன்.

இங்கே சுயம்வர மண்டபத்தில் போட்டி நடந்து கொண்டிருந்தது.  அப்போது தான் மேற்கண்ட எண்ணங்கள் ஜராசந்தனுக்கு வந்து போயின.  ஒவ்வொரு அரசராக வந்து வில்லை எடுக்க முடியாமலோ, அல்லது நாண் ஏற்ற முடியாமலோ அல்லது இழுத்துக் கட்டியும் அம்பைப் பொருத்தி எய்ய முடியாமலோ பின் வாங்கிக் கொண்டிருந்தனர்.  நடப்பதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த ஜராசந்தன் மௌனமாகவே இருந்தான்.  ஆனால் அவனுடன் அமர்ந்திருந்த மற்ற மகத நாட்டினருக்கு ஜராசந்தன் தங்களைப் போட்டியில் கலந்து கொள்ளும்படி ஆணையிடுவான் என்னும் எதிர்பார்ப்பு மாறவில்லை. ஜராசந்தனின் முகத்தையே பார்த்த வண்ணம் அவன் ஆணைக்குக் காத்திருந்தனர்.  அவர்கள் இங்கே வந்திருப்பதே ஜராசந்தன் பேரன் மேகசந்திக்கு திரௌபதியை மணமுடிக்கவேண்டும் என்னும் எண்ணத்தில் தான்.  இப்படி இருக்கையில் மேகசந்தி எவ்வாறு போட்டியிலிருந்து விலக முடியும்?   விலக முடியாது.  ஆனால் என்ன காரணம் சொல்வது?  ஏதேனும் அதிசயம் அவனால், ஜராசந்தனால்  நிகழ வேண்டும்.  ஜராசந்தனுக்கு மீண்டும் எண்ணங்கள் அலைமோதின.

ஏதேனும் ஒரு கௌரவமான வழி கண்டு பிடித்து இந்த இக்கட்டான நிலைக்குத் தீர்வு கண்டே ஆகவேண்டும்.  ஆனால் ஆனால் இந்தக் கிருஷ்ணன் எவ்வகையிலேனும் அவனுக்குப் பழி உண்டாகிற மாதிரி ஒரு காரியம் நடக்கவேண்டும்;  இந்த மண நிகழ்ச்சியில் அதனால் எனக்குக் கெட்டபெயர் உண்டாக்கவேண்டும் என்றே காத்திருக்கிறான் போல் தெரிகிறது. ஜராசந்தனுக்குள் ஒரு எண்ணம் பளிச்சிட,  பெருந்தன்மையை முகத்தில் வரவழைத்த வண்ணம் ஒரு மூத்த தந்தையைப் போல் அன்பையும், ஆதரவையும் காட்டிச் சிரித்துக் கொண்டு ஜராசந்தன் அந்த  சுயம்வர மண்டபத்தில் தன் முழு உயரமும் தெரியும்படி எழுந்து நின்றான்.  கம்பீரமாக அங்கு கூடியிருந்த சபையோரை ஒரு பார்வை பார்த்தான்.  நீண்ட கைதட்டல் எழுந்தது.  ஜராசந்தன் மெல்ல மெல்லத் தான் அமர்ந்திருந்த இடத்திலிருந்து கீழே இறங்குகையில் பலத்த கைதட்டலோடு மன்னர்கள் அவனை வரவேற்றனர்.  மெதுவாக அதே சமயம் தன் கம்பீரத்தையும் விடாமல் ஜராசந்தன் செயற்கைக் குளத்தை நோக்கிச் சென்றான்.  கட்டியங் கூறுபவர்கள் ஜராசந்தனின் பெருமைகளை எல்லாம் இசையாகப் பாடிக் கொண்டிருந்தனர். அவை முடியும்வரை காத்திருந்தான்.  பின்னர் நேரே துருபதனிடம் சென்று அவனை நட்பு முறையில் பார்த்துச் சிரித்து வணக்கம் செலுத்தினான்.   பின்னர் மீண்டும் குளத்தருகே வந்து வில்லை ஒரு நோட்டம் விட்டான்.  பின்னர் மேலே வட்டவடிவச் சக்கரத்தில் சுற்றிக்கொண்டிருக்கும் மீனைப் பார்த்தான்.  மீன் மட்டும் தனியாகச் சுற்றவில்லை.  சக்கரமும் சுழன்றது,  மீனும் சுழன்றது.

பின்னர் அங்கே அருகே நின்று கொண்டிருந்த ஆசாரியர் சாந்தீபனியைப் பார்த்து மரியாதையுடன், “குருதேவரே, வீரர்கள் பங்கேற்கும்படியானதொரு அருமையான போட்டியை ஏற்பாடு செய்திருக்கிறீர்கள்!” என்று பாராட்டும் தெரிவித்தான்.  சாந்தீபனி பதிலுக்கு ஆசிகள் கூறும் தோரணையில் கைகளை உயர்த்தி, “சிரஞ்சீவியாக இருப்பாயாக! நூறாண்டுகளுக்கு மேல் வாழ்வாயாக!  மன்னர்மன்னா, நீரும் போட்டியில் கலந்து கொள்ளப் போகிறீரா?” என்றும் கேட்டார்.  ஜராசந்தன் ஒவ்வொரு சூழ்நிலைக்கும், நிகழ்வுகளுக்கும் ஏற்பத் தன்னை உடனடியாக மாற்றிக்கொள்வதில் சமர்த்தன்.  அதுவும் அந்த நிகழ்வையோ, சூழ்நிலையையோ தனக்கேற்றாற்போல் மாற்றிக் கொள்வதிலும் கெட்டிக்காரன்.  இப்போது மனம் விட்டுச் சிரித்தவண்ணம் பேச ஆரம்பித்தான். “எனக்கும் நிச்சயமாகப் போட்டியில் கலந்து கொள்ளும் ஆசை தான்!  ஆனால்…….மணமகள் மிகவும் இளம்பெண்.  என் பேத்தியாக இருப்பவளை விடச் சிறிய பெண்.  இவளை நான் மணக்க முடியுமா?  அந்தப் பொறுப்பை நான் இளைஞர்களுக்கே விட்டு விடுகிறேன்.” என்று தன் பெருந்தன்மையைக் காட்டிக் கொள்வது போலக் கண்ணனின் கருத்தை அங்கே தன் கருத்தாக மொழிந்தான்.  கூடி இருந்த கூட்டமும் ஜராசந்தனின் பெருந்தன்மையான போக்கைக் கண்டு மகிழ்ந்ததோடு அல்லாமல், “சாது, சாது” என கோஷித்தும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.  அதோடு நிற்காமல் திரௌபதியின் பக்கம் திரும்பினான்.  ஒரு பாட்டனைப் போல் கனிவோடு அவளைப் பார்த்துத் தன் ஆசிகளையும் அறிவுரைகளையும் கூற ஆரம்பித்தான்.

“மாட்சிமை பொருந்திய இளவரசி, மிகச் சிறந்த வில்லாளியும் ஆர்யவர்த்தத்தின் மாபெரும் வீரனாக இருப்பவனையும்  நீ மணமகனாக அடைவாய்.  இது என் ஆசிகள்.  நான் இப்போது இங்கே வந்ததே உனக்கு ஆசிகளைத் தெரிவிக்கத் தான். ம்ம்ம்ம்ம்ம் என் பேரன் மேகசந்திக்கு வில் வித்தையில் அவ்வளவு பயிற்சி இல்லை.  ஆனால் தண்டாயுதத்தில் மிகச் சிறந்தவன்.  போட்டியோ வில் வித்தையில் செய்யப்பட்டுள்ளது.  இல்லை எனில் நான் அவனைக் கலந்து கொள்ளச் சொல்லி இருப்பேன்.  நீயும் எங்கள் மகதத்தின் மஹாராணியாக ஆகி இருப்பாய்!  இப்போது என்ன செய்ய முடியும்? உன்னை ஆசீர்வதித்ததோடு நான் மகதத்தில் எங்கள் தலைநகர் கிரிவ்ரஜத்திற்குத் திரும்புகிறேன்.” என்று நாடகபாணியில் சொல்லி முடித்தான்.  இதை ஏதோ தன் சொந்தக் கருத்துப் போலவே அவன் சொல்லி முடித்தான்.  பின்னர் பெரியதொரு புன்னகையுடன் மிகவும் பெருந்தன்மை மிக்கதொரு சக்கரவர்த்தி என்னும் கோலத்தை மாற்றிக்கொள்ளாமலேயே அரசர்கள் அனைவரும் அமர்ந்திருக்கும் இடம் சென்று அனைவரையும் பார்த்துக் கைகூப்பி நமஸ்கரித்து விடை பெற்றான்.  அனைத்து அரசர்களும் ஆச்சரியத்திலும், மகிழ்ச்சியிலும் மனம் நெகிழ்ந்து ஜராசந்தனை வாழ்த்துக் கூறி கோஷித்தனர்.  ஜராசந்தன அவ்விடத்தை விட்டு அகன்ற பின்னரும் அவர்களின் கோஷ முழக்கங்களும் கைதட்டல்களும் நிற்காமல் ஒலித்துக் கொண்டிருந்தன.

தன்னிடத்துக்குத் திரும்புகையில் கிருஷ்ணனை சவால் விடும் தொனியில் பார்த்தான்.  அவன் தனக்கு ஏற்படுத்தி இருந்த மாபெரும் இடர்களில் தான் முட்டி மோதிக் காயம் அடையாமல் கௌரவமாகத் தப்பி வந்ததைத் தன் கண்களால் அவனுக்கு உணர்த்தினான்.  கிருஷ்ணனும் அதைப்புரிந்து கொண்டதற்கு அடையாளமாகச் சிரித்துக் கொண்டான்.  “சஹாதேவா! “ என்று சப்தமாக அனைவருக்கும் கேட்கும் குரலில் அழைத்த ஜராசந்தன், தன் மகனிடம், “ஏற்கெனவே வெகு நேரம் ஆகிவிட்டது சஹாதேவா! உடனடியாக நாம் அனைவரும் கிரிவ்ரஜம் கிளம்ப ஏற்பாடுகளை கவனி!” என்ற வண்ணம் மீண்டும் துருபதனுக்குத் தன் இடத்திலிருந்தே பிரிவு வணக்கம் செலுத்திவிட்டு மற்ற மன்னர்களிடமும் கை கூப்பி விடை பெற்றான். அவனுக்கு விடைகூறும் வண்ணமாக மீண்டும் சங்கங்கள் ஆர்ப்பரித்தன. முரசங்கள் முழங்கின.  ஜராசந்தன் தன் மகத வீரர்களுடனும், தன் மகன் சஹாதேவன், பேரன் மேகசந்தி ஆகியோருடனும் அவ்விடத்திலிருந்து வெளியேறினான்.  கிருஷ்ணன் மாறாப் புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்தான்.

மாபெரும் மன்னர்கள் அமரும் அந்தக் கூடத்தில் தானும் அமர்ந்திருக்க வரும்போது கிருஷ்ணனுக்கு மனதுக்குள் சந்தோஷம்தான் இருந்தது.  தன்னைப் பார்த்து வணக்கம் தெரிவித்தவர்களுக்கு பதில் வணக்கமும், விசாரித்தவர்களைத் தானும் விசாரித்தும், அங்கிருந்த பிராமணர்கள், ஆசாரியர்களுக்கு மரியாதை கலந்த வணக்கத்தையும் செலுத்தினான் கிருஷ்ணன்.  அனைவரும் “ஜெய கிருஷ்ண வாசுதேவா!” என்று ஜெயகோஷமிட்டனர்.  ஒவ்வொருவரும் கிருஷ்ணன் தான் அங்கே அனைவரையும் விட முக்கியத்துவம் வாய்ந்தவன் என நினைத்ததோடு அல்லாமல் அவன் சிருஷ்டியில் தேர்ந்த பிரம்மாவின் கைவண்ணம் போல் அந்த சுயம்வரத்தைப் பொலியச் செய்து உயிரூட்டுவான் என்றும் நினைத்தனர்.


 இப்போது இந்த மாபெரும் சபையைக் கிருஷ்ணன் கழுகுப் பார்வையோடு கவனித்தான்.  மிகப் பெரிய சபை.  எத்தனை எத்தனை மன்னர்கள்! இளவரசர்கள்! இந்த சுயம்வரமே மாபெரும் சுயம்வரமாக அமைந்து விட்டது. ஒரு சக்கரவர்த்தியைப் போன்ற கௌரவத்துடன் துருபதன் இதற்குத் தலைமை தாங்குகிறான்.  மன்னர்கள், சக்கரவர்த்திகள் நடத்தும் ராஜசூய யாகத்தை விடவும் இந்த சுயம்வரம் பெரும் பெயரையும், புகழையும் பெற்று விட்டது; இனியும் பெறும்.  அதை விட இது அனைவர் மனதையும் கவர்ந்தும் விட்டது. ஒரே ஒரு தடை இப்போது துரியோதனன்.  மேலும் ஒரு சிறிய கீற்றாக  நம்பிக்கை இருந்ததும் பொய்த்துவிடும் போல் உள்ளது.  ஐந்து சகோதரர்களும் இன்னமும் சுயம்வர மண்டபம் வந்து சேரவில்லை.

சுயம்வர மண்டபத்தைச் சுற்றி மீண்டும் தன் பார்வையை ஓடவிட்டான் கிருஷ்ணன்.  இதோ இந்தப் பக்கம் அரசர்கள், அவர்களின் பரிவாரங்கள், இளவரசர்கள், அதோ அங்கே மரப்பலகைகளில் பிராமணர்கள், ஆசாரியர்கள், அவர்களின் சீடர்கள், இந்தப் பக்கம் சுயம்வரத்தை வேடிக்கை பார்க்க வந்த பொதுமக்கள், மீண்டும் அதோ பிராமணர்கள்…..பிராமணர்கள்…… கிருஷ்ணனுக்கு நேர் எதிரே சில பிராமணர்கள் அமர்ந்திருந்தனர்.  அவர்களைப் பார்த்த கிருஷ்ணன் தன்னை மறந்து மீண்டும் அவர்களையே பார்த்தான்.  அவன் முகம் மலர்ந்தது.  கண்கள் பிரகாசித்தன.  அவன் இதயம் அவனுக்குள் ஏற்பட்ட மகிழ்ச்சியில் எழும்பிக் குதித்தது.  வாய் வழியாக வெளியே வந்துவிடுமோ என எண்ணினான் கிருஷ்ணன்.  அதோ அங்கே அந்த ஐவரும்!  சந்தேகமே இல்லை;  ஆம், அவர்களே தான்.  பிராமணர்களுக்கு நடுவே அமர்ந்திருக்கின்றனர்.  பார்க்கத் துறவிகளைப் போல் காட்சி அளிக்கின்றனர்.  மான் தோலை ஆடையாக அணிந்து, தலைமயிரைத் தூக்கிக் குடுமியாகக் கட்டியவண்ணம், உடலெங்கும் விபூதி என்னும் புனிதச் சாம்பலைப் பூசிக் கொண்டு!  ஆஹா!  வந்தே விட்டனர்!  மஹாதேவா!  எனக்கு வெற்றியைக் கொடுத்துவிட்டாய்!



Thursday, July 3, 2014

அரசர்கள் சிரிப்பும், சிசுபாலன் கொதிப்பும்!

திரௌபதியின் கண்கள் கோவிந்தனைத் தேடின.  எங்கே அவன்???  அதோ! அதோ!  அனைத்து யாதவர்களுக்கும் மத்தியில் ஒரு ஒளி வீசும் ரத்தினம் போல் மாறாப் புன்னகையோடு காட்சி அளிக்கிறான்.  அவனுக்கு அருகே பெரியதொரு பருத்த உடலோடும், அதற்கேற்ற உயரத்தோடும் ராக்ஷசன் போல் இருப்பவர் தான் பெரிய அண்ணன் பலராமராக இருக்க வேண்டும்.   ஏர்க்கலப்பையின் சிறிய மாதிரி ஒன்றை அவர் ஆயுதம் என்னும் பாவனையில் கைகளில் ஏந்தியுள்ளார்.  அவர்களுக்குள்ளாக ஏதோ பேச்சு வார்த்தை நடக்கிறது போலும்;  பெரிய அண்ணன் சிரித்துக்கொண்டிருக்கிறார்.  அப்படிச் சிரிக்கும்படியாக எதோ அவர் சொல்லி இருக்க வேண்டும்.  ஒப்பிட முடியா எளிமையுடன் திகழும் கிருஷ்ணன் அனைவரிலும் தனித்துத் தெரிகிறான். கற்கள் ஏதுமில்லா ஒரு சாதாரண கிரீடத்தையே அணிந்திருக்கிறான்;  அதற்கு அழகு செய்வது அவனுடைய மயில்பீலி தான்.  ஒரே ஒரு ஹாரம் அணிந்துள்ளான்.  வேறு ஆடம்பரமான ஆபரணங்கள் இல்லை.  என்றாலும் மற்ற அரசர்களோடு ஒப்பிடுகையில் இவனுடைய கம்பீரமும், எழிலும் ஒப்பிடமுடியவில்லை தான்.  மற்றவர்களை விட அரச லக்ஷணங்கள் அதிகம் பொருந்திக் காணப்படுகிறான்.

அவன் கண்களும், அவள் கண்களும் மோதிக்கொண்டன.  அவன் கண்களில் இருந்து அவளுக்குக் கிடைத்த செய்தியை அவள் புரிந்து கொண்டாள்.  அந்தக் கண்கள் சொன்னவை இது தான்: “கிருஷ்ணா, இந்த சுயம்வரத்தை நீ தைரியத்துடனும், விவேகத்துடனும் எதிர்கொள்ளவேண்டும்.  அது உன் கடமை!”  அவள் கண்களும் அவனுக்கு பதில் சொல்லின: “ ஆம், நான் இதை தைரியமாகவே எதிர்கொள்வேன்.  எனக்குத் தெரியும், நீ ஒருபோதும் என்னைக் கைவிடமாட்டாய் என்பதை அறிவேன்.  என்ன நடந்தாலும் என்னை நீ கைவிடமாட்டாய்!” பின்னர் அந்த அரைவட்ட வடிவக் கூடத்தில் மையத்தில் அமர்ந்திருந்த அவள் தந்தையின் சிம்மாசனத்தின் வலப்பக்கமாய்த் திரும்பினாள்.  அங்கே மரப் பலகைகளில் அமர்ந்திருந்தவர்கள் அனைவரும் தபஸ் செய்யும் ரிஷிகள்; முனிவர்கள். யோகிகள் மற்றும் பல ஆசாரியர்கள்.  தங்கள் மாணாக்கர்கள் புடைசூழ அமர்ந்திருந்தனர்.  மான் தோலைப் போர்த்தியவண்ணம் பலர் காட்சி அளித்தனர்.  பலர் நெற்றியிலும், கழுத்திலும் , உடலிலும் கைகளிலும் திருநீறு எனப்படும் புனிதச் சாம்பல் பூசி இருந்தனர். ஆர்ய வர்த்தம் முழுவதும் பிராமணர்களும் இந்த ரிஷி முனிவர்களும் பிரபலமாக இருந்தபடியால் யாரும் இவர்களைக் கண்டு ஆச்சரியம் அடையவில்லை.

அந்த இரு அரைவட்டவடிவக் கூடமும் இணையும் இடத்தில் கடைசியில் பலிபீடத்துக்கு நேர் எதிரே ஒரு பெரிய கூட்டமாக அமர்ந்திருந்த ஆண்கள் அனைவரும் சுயம்வரம் ஆரம்பிக்கவில்லையே எனப் பொறுமையின்றிக் காத்திருந்தார்கள் என்பதும் தெரிந்தது. புனித அக்னிக்கு முன்னால் போய் வணங்கிய திரௌபதி தனக்கென ஏற்படுத்தி இருந்த ஆசனத்தில் அமர்ந்தாள்.  மந்திரங்கள் ஓதப்பட்டன.  தானங்கள் வழங்கப்பட்டன.  அக்ஷதைகள் தூவி ஆசீர்வதிக்கப்பட்டாள் திரௌபதி.  புனித அக்னியைத் திருப்தி செய்ததும் த்ருஷ்டத்யும்னன் திரௌபதியைத் தங்கள் தந்தையிடம் அழைத்துச் சென்றான்.  துருபதன் தன் அருமை மகளை மீண்டும் ஆசீர்வதிக்க, சகோதரனும், சகோதரியும் செயற்கையாக உருவாக்கப்பட்டிருந்த குளத்தருகே சென்றனர்.  ஒரு நீண்ட கம்பம் அங்கே பதிக்கப்பட்டு அதன் தலைப்பாகத்தில் வட்டவடிவமான ஒரு சட்டத்தில் ஒரு மீன் வடிவம் நன்கு பிணைத்துக் கட்டப்பட்டிருந்தது.  என்றாலும் அந்த வட்டமான சட்டமும் வேகமாய்ச் சுற்றியதோடு இல்லாமல் மீன் வடிவமும் வேகமாய்ச் சுற்றிக் கொண்டிருந்தது. அது சுற்றும் வேகத்தைப் பார்த்தால் பார்ப்பவர்கள் தலையைச் சுற்றும் போல் அவ்வளவு வேகமாய் இரண்டும் தனித்தனியாகச் சுற்றி வந்தன.  இதை அமைத்த பெருமைக்குரிய குரு சாந்தீபனி அதன் பக்கத்திலேயே நின்று கொண்டிருந்தார்.  மெல்லிய அதே சமயம் உறுதியான உடலுடனும், கூரிய கண்களுடனும் வயது முதிர்ந்திருந்தாலும் தன் திறமைக்கு அளவில்லை என்னும்படியான எண்ணத்தை அனைவரிடமும் பிரதிபலித்தார்.  அந்த செயற்கைத் தடாகத்தின் அருகேயே புல்வெளியும் அமைக்கப்பட்டு அதில் ஒரு வில் காணப்பட்டது.

மிகப் பெரியதாகவும், கனமாகவும், வலுவுள்ளதாகவும் காணப்பட்ட அந்த வில்லுக்கு மலர்மாலைகளால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.  அதன் இரு நுனிகளும் தங்கத்தால் தோய்க்கப்பட்டவை போல் மின்னின. வில்லின் ஒரு முனையில்  நாண் நன்கு முறுக்கி இழுத்துக் கட்டப்பட்டிருந்தது.  மீதம் இருந்த நாண் இன்னொரு பக்கம் கட்டப்படாமல் ஒரு பாம்பைப் போல் சுருண்டு கிடந்தது.  வில்லை எடுத்துப் பிரயோகம் செய்யும் வில்லாளி முதலில் அதன் நாணை இழுத்து மறுபுறம் கட்டிவிட்டுப் பின்னரே அம்பை எடுத்துக் குறி பார்க்கவேண்டும்.  நாணைக் கட்டுவதே முதல் பரிக்ஷை!   அதன் அருகே ஒரு அம்புறாத்தூணியில் ஐந்து அம்புகளும் காணப்பட்டன. குரு சாந்தீபனி சொன்னபடி திரௌபதி அந்த வில்லுக்கும் தன் வழிபாட்டைச் செய்தாள். அத்துடன் சடங்குகள் அனைத்தும் பூர்த்தி அடைந்தன.  திரௌபதியும் தன் அருமை சகோதரன் அருகே சென்று நின்று கொண்டாள்.  சூரியோதயமும் ஆரம்பம் ஆகிவிட்டது.  அரசர்கள் அனைவரும் சூரிய ஒளியில் குளித்து தேவர்களைப் போல் காட்சி தந்தனர்.  சங்குகளும், எக்காளங்களும், ஊதப்பட்டு, முரசுகளும் முழங்கின.  நாடோடிப் பாடல்களைப் பாடிய வண்ணம் சிலரும் மங்கல இசை பாடிய வண்ணம் சிலரும் அங்கே இருக்க துருபதனோ சுற்றிலும் உள்ள அரசர்களையே ஊடுருவிப்பார்த்து இவர்களில் தன் மகளை மணக்கப் போகிறவன் யார் என்று ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தான்.

சட்டென வாத்திய முழக்கம் நின்றது. த்ருஷ்டத்யும்னன் விறைப்பாக நின்று கொண்டு பேச ஆரம்பித்தான்: “”மாட்சிமை பொருந்திய மன்னர்களே, மரியாதைக்குரிய ரிஷி, முனிவர்களே, அந்தணர்களே, ஆசாரியர்களே, மற்றும் இளவரசர்களே, சுயம்வரம் ஆரம்பிக்கப்போகிறது!” என்று தன்னால் முடிந்தவரை உரத்த குரலில் அந்தக் கூடத்தின் கடைசி வரையிலும் போய்க் கேட்கும்படி அறிவித்தான்.  “என் சகோதரி கிருஷ்ணா என்னும் திரௌபதி தகுதி வாய்ந்த சிறந்த வில்லாளியைக் கைப்பிடிப்பாள்.  அந்த வில்லாளி  நற்குடிப் பிறப்பைச் சேர்ந்தவனாகவும்,சர்ச்சைகளுக்கு உள்ளாகாதவனாகவும் இருத்தல் வேண்டும் என்பதைத் தவிர இங்கிருக்கும் ஐந்து அம்புகளில் ஒன்றினால் இதோ சுற்றிக்கொண்டிருக்கும் மீனின் கண்களைக் குறி பார்த்துத் தாக்க வேண்டும்.  ஒரே ஒரு முறைதான் குறி பார்க்கலாம். ஆனால் நேரடியாகக் குறி பார்க்கக் கூடாது.  இதோ இந்தத் தண்ணீரில் விழுந்திருக்கும் அதன் பிரதிபலிப்பைப் பார்த்தே ஒரே முறையில் குறி வைத்துத் தாக்க வேண்டும்.  அப்படித் தாக்குபவர்களையே என் சகோதரி மணப்பாள்.  இது தான் பாஞ்சால நாட்டு மன்னனான எங்கள் தந்தை துருபதனின் வாக்குறுதி. அரசர் சொன்ன சொல் தவற மாட்டார்.” என்றும் கூறினான்.

அங்கே விதவிதமான சப்தங்கள் மெல்லென எழுந்து அடங்கின.  அப்போது மீண்டும் அரச சபைக்குள் வாசிக்கப்பட வேண்டிய வாத்தியங்கள் முழக்கம் செய்ய, அங்கிருந்த ரிஷி, முனிவர்கள், “சாது, சாது” என கோஷித்தனர்.  வயது முதிர்ந்த ரிஷி யஜர் மெல்லத் தன்னிடத்திலிருந்து எழுந்து வந்து ஒரு தங்கக் குங்குமச் சிமிழில் இருந்து தன் நடுங்கும் விரல்களால் குங்குமத்தை எடுத்து அவள் நெற்றியில் திலகம் இட்டு ஆசீர்வதித்து ஒரு மாலையையும் அவள் கழுத்தில் போட்டார்.  அவள் இப்போது ஒரு மணப்பெண்.  அவளைப் பார்க்கவே தெய்வீகமாக இருந்தது.  சாதாரண மானுடப் பெண்ணைப் போல் இல்லாமல் விண்ணிலிருந்து இறங்கிய ஒரு தேவதையைப் போல் காட்சி தந்தாள்.

மீண்டும் சங்குகள் முழங்கி ஓய்ந்தவுடன் அங்கே மாபெரும் அமைதி நிலவியது.  மன்னர்கள் தங்களுக்குள்ளாக யார் வெல்லப் போகிறார்களோ என ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டனர்.  அனைவருமே ஒரு ஆவலுடன் காத்திருந்தனர்.  யார் முதலில் செல்வது என யாருக்கும் சரியாகப் புரியாமல் ஒருவரை ஒருவர் பார்த்துக் கேட்டுக் கொண்டனர். அவர்களுடைய ஆவல் நிறைந்த முகங்களையே பார்த்துக் கொண்டிருந்தவளுக்குப் புனித அக்னியிலிருந்து எழும்பிய புகையினால்  பார்வை கொஞ்சம் மங்கியது.  தெளிவில்லாமல் இருந்தது.  அதோடு லேசாகத் தலையையும் சுற்றியது.  எங்கேயோ காற்றில் பறப்பது போல் உணர்ந்தாள்.  அப்படியும் ஒவ்வொருவர் முகத்தையும் பார்த்தபடி வந்தவளுக்குச் சட்டெனத் தூக்கிவாரிப்போட்டது. அரசர்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் போர் புரியும் எண்ணத்தோடு இணக்கமற்றவர்களாகக் காட்சி அளித்தனர்.  அவர்கள் கண்களிலேயே மற்றவரைக் கொல்ல வேண்டும் என்னும் கொடூரமான எண்ணம் தெரிந்தது. ஒருவர் இன்னொருவரைக் கொல்லத் துடித்துக் கொண்டிருந்தார்கள். பார்க்கவே பயங்கரமாக இருந்தது அந்தக் காட்சி.

எங்கும் ரத்த ஆறு ஓடுகிறது. விண்ணிலிருந்தும் சுற்றிச் சுழற்றிக் கொண்டு ரத்த ஆறு மண்ணுக்குப் பாய்ந்து ஓடி வந்து சேர்ந்து கொள்கிறது.  அவர்கள் அனைவரையும் அந்த பலிபீடத்தினருகே அந்த ரத்த ஆற்றின் அலைகள் அடித்துக் கொண்டு சேர்க்கின்றன.  அதன் நடுவே,,,, நடுவே யார் அது?  ஆஹா! கிருஷ்ண வாசுதேவன்!  அனைவரையும் அவன் தான் ஒரு சேர வழி நடத்துகிறான். ஒருவர் பாக்கி இல்லாமல் அனைவரிடமும் அவன் ஆதிக்கமே காணப்படுகிறது.  அவன் வலக்கையில் ஒளி வீசிப் பிரகாசிக்கும் அவன் கண்களோடு போட்டி போட்டுக் கொண்டு சுதர்சனச் சக்கரம் சுழன்று கொண்டே மாபெரும் ஒளியை வீசுகிறது.  அவன் உதடுகளை மடித்த வண்ணம் தீர்மானத்தோடு காணப்படுகிறான்.  இந்த யுத்தக்காட்சிகளினால் பயந்து போன திரௌபதி கிருஷ்ணனைப் போய் அடையத் தான் நினைக்கிறாள்.  ஆனால் முடியவில்லையே!  அவனல்லவோ அழிக்கும் கடவுளைப் போல் தலைமை வகித்து நிற்கிறான்.  ஓர் எண்ணம் அவள் கவனத்தைச் சிதற அடித்தது.  இது அனைத்துக்கும் அவள் தான் காரணமா?  அவளால் தான் இந்தப் போர் நடைபெறுகிறதா?  இந்த ரத்த ஆறு ஓட இவளா காரணம்?  எப்படியானாலும் ஆகட்டும்;  எனக்குக் கிருஷ்ண வாசுதேவன் துணை இருக்கிறான்.  என்னைக் கைவிடமாட்டான்.  திரௌபதி பெருமூச்செறிந்தாள்.  அவள் கண்ட பகல் கனவு கலைந்தது. தன் கண்களைத் தேய்த்துக் கொண்டு தலையையும் உலுக்கிக் கொண்டு பார்த்தாள்.  மண்டபம் அவள் முன்னர் பார்த்தபடியே விருந்தினர்களால் நிறைந்து காணப்பட்டது.

அனைவரும் அவரவர் இடத்தில் இருந்தது போல் கிருஷ்ணனும் யாதவர்கள் மத்தியில் அதே மாறாப் புன்னகையுடன் அமர்ந்திருந்தான்.  ரத்த ஆறு ஓடியதெல்லாம் அவள் பிரமை.  அவள் மீண்டும் அரசர்களைக் கூர்ந்து கவனித்தாள்.  யாருக்கு முதலில் வந்து போட்டியில் கலந்து கொள்ளும் தைரியம் இருக்கிறது? அவள் யோசித்தாள்.  வெகுநேரம் தாமதிக்காமல் சேதி நாட்டு இளவரசன் சிசுபாலன் மிகவும் அகம்பாவத்துடனும், கர்வத்துடனும் எழுந்தான்.  நடுத்தர உயரமானாலும் பார்க்க நன்றாகவே இருந்தான். நல்ல உடல்கட்டுடனும் காணப்பட்டான்.  தன் மீசையை முறுக்கிக் கொண்டான். இதற்கெனக் காத்திருந்த கட்டியக்காரர்கள் சிசுபாலனின் குலம், கோத்திரம், முன்னோர்கள், அவன் ராஜ்யம், அவனுடைய திறமைகள், வீரதீரப் பிரதாபங்களை அனைவரும் கேட்கும்படி முழங்கினார்கள்.  திரௌபதி ஏற்கெனவே சிசுபாலனைப் பற்றிக் கேள்விப்பட்டிருந்தாள்.  சேதி நாட்டரசன் தாமகோஷனுக்கும், வசுதேவரின் சகோதரி ஷ்ருதஷ்ரவாவுக்கும் பிறந்த பிள்ளை என்றும், கண்ணனுக்கு அத்தை முறை சகோதரன் என்றும் பரசுராமரின் சீடன் எனவும் கேள்விப் பட்டிருந்தாள்.

அவன் தன்னிடத்திலிருந்து எழுந்து வந்தான்.  வரும்போதே கண்ணன் இருக்குமிடத்தைப் பார்த்தி விஷமத்தனமாகவும், நச்சு நிறைந்த பார்வையாகவும் பார்த்துச் சிரித்ததைக் கண்டாள் திரௌபதி.  கண்ணனுக்குச் சவால் விடும் தோரணையில் அந்தப் பார்வை இருந்ததையும் கண்டாள். அவனுக்கென நிச்சயிக்கப்பட்டிருந்த விதர்ப்ப நாட்டு இளவரசி ருக்மிணியை அவள் சுயம்வரத்தன்றே கண்ணன் தூக்கிச் சென்று மணந்ததை அவன் இன்னமும் மறக்கவும் இல்லை;  கண்ணனை மன்னிக்கவும் இல்லை.  என்பதை அந்தப் பார்வை சொல்லாமல் சொல்லியது.  மிகவும் பெருமையுடனும், அதீதமான தன்னம்பிக்கையுடனும் வந்த சிசுபாலன் முதலில்  துருபதனிடம் வந்து வணங்கினான்.   பின்னர் செயற்கைக் குளத்தருகே வந்து மேலே சுற்றிக் கொண்டிருந்த குறி இலக்கை ஒரு முறை பார்த்தான்.  பின்னர் கீழே தண்ணீரில் அதன் பிம்பத்தையும் பார்த்துக் கொண்டான்.  பின்னர் வில்லை எடுக்கக் குனிந்தவனால் கொஞ்சம் சிரமத்துடனேயே எடுக்க முடிந்தது.  பின்னர் அதன் நாணை இழுத்துக் கட்ட முயன்றான்.  ஒரு கையில் வில்லைப் பிடித்த வண்ணம் மற்றொரு கையால் நாணை இழுத்து அதன் மறு நுனியில் கட்ட முனைந்தான் சிசுபாலன்.  மிகவும் முயன்று நாணைக் கட்ட வசதியாக வில்லின் நடுத்தண்டைக் கொஞ்சம் வளைத்துக் கொண்டான்.  அது வளைய மறுத்தது.  தன் உதடுகளைக் கடித்த வண்ணம் மிகவும் முயன்று நடுத்தண்டை வளைத்து நாணை இழுத்து வில்லின் இன்னொரு முனையில் கட்ட முயன்றபோது,,,,,ட்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ங்ங் என்ற சப்தம் கேட்டது.  அவன் இழுத்துக்கட்டுவதற்குள்ளாக அந்தப் பிடிவாதக்கார வில்லின் நடுத்தண்டு மீண்டும் நேராகிவிட நாண் “படீர்” எனும் சப்தத்துடன் ஓங்கி அடிக்க  அதிலிருந்து தப்பிக் கீழே விழாமல் பார்த்துக்கொள்வது பெரும்பாடாகி விட்டது சிசுபாலனுக்கு.

கூடி இருந்த அனைத்து மக்களும் “கொல்”லெனச் சிரித்தனர்.  அவையே சிறிது நேரம் சிரிப்பில் ஆழ்ந்தது.  அனைத்து அரசர்களுக்கும் சிசுபாலனால் முடியாததை நினைத்து சந்தோஷம் ஏற்பட அவனோ முகத்தைச் சுளித்தவண்ணம் உள்ளார்ந்த கோபத்துடன் தன்னிடத்துக்குத் திரும்பினான்.  இப்போது அவன் பார்வை எங்கேயும் யாரையுமே பார்க்கவில்லை என்பதையும் திரௌபதி கவனித்துக் கொண்டாள்.  அவளுக்கும் உள்ளூரச் சிரிப்பு வந்தது.  அதை அவளால் அடக்க முடியாமல் தலையைக் குனிந்த வண்ணம் புன்னகை புரிந்தாள். இந்தத் தேர்வு மிகக் கடினமான ஒன்று.  சிசுபாலனும் தேர்ந்த வில்லாளி எனப் பெயர் பெற்றவன்! அவனாலேயே முடியவில்லையே!