Saturday, August 22, 2015

இனி காண்டவப்ரஸ்தமே உங்கள் நாடு!

சற்று நேரம் பழைய நினைவுகளில் ஆழ்ந்த பீஷ்மர், தன்னைச் சுதாரித்துக் கொண்டு, உரத்த குரலில் பேச ஆரம்பித்தார். ஆனால் அவர் குரலில் உணர்ச்சிகள் மிகுந்திருந்தன. இதைக் கண்டோருக்கும், பீஷ்மரின் சொற்பொழிவுகளை ஏற்கெனவே கேட்டிருப்போருக்கும் ஆச்சரியம் அளித்தது. எதற்கும் கலங்காத இரும்புப் பாறை என அனைவரும் நினைத்திருந்த பீஷ்மரா இவ்வளவு உணர்ச்சிகரமாகப் பேசுகிறார்! அனைவரும் கூர்ந்து கவனித்தனர்!

“என் அருமைக் குழந்தாய்! யுதிஷ்டிரா! இதே சபையில் உன் தந்தையையும் பல வருடங்கள் முன்னர் இந்த ஹஸ்தினாபுரத்தின் சக்கரவர்த்தியானதற்கு என் ஆசிகளைத் தெரிவித்தேன். இப்போது அந்த மஹாதேவன் அருளாலும், கடவுளரின் ஆசிகளாலும் இதே ராஜ சபையில் நீ அரியணை ஏறுவதைப் பார்க்கும் மகிழ்ச்சியும், உன்னை ஆசீர்வதிக்கும் பெரும்பேறும் எனக்குக் கிடைத்திருக்கிறது. இது என்னை உவகை கொள்ள வைக்கிறது. மாபெரும் சக்கரவர்த்தியான பரதன் ஆண்ட இந்த நீண்ட பாரம்பரியம் கொண்ட ராஜ வம்சத்தில் உன்னைப் போன்ற தர்ம, நியாயத்துக்குக் கட்டுப்பட்ட இளவரசன் அரியணை ஏறுவது சாலப் பொருந்தும்.”

“என் குழந்தாய்! உன் முன்னோர்கள் எப்படி தர்மத்திற்கும் நியாயத்திற்கும் கட்டுப்பட்டு அரச தர்மங்களையும் அரசனுக்குரிய கடமைகளையும் மறவாமல் ஆட்சி புரிந்து இந்த குரு வம்சத்திற்குப் பெருமை சேர்த்தனரோ அவ்வாறே நீயும் இந்த அரியணையில் நீண்ட காலம் அமர்ந்திருந்து நல்லாட்சி தரப் பிரார்த்திக்கிறேன். உன் ஆட்சியில் தர்மம் ஓங்கிச் செழித்து வளரட்டும்!”

“உன் மூதாதையரைப் போலவே நீயும் ராஜசூய யாகம், அஸ்வமேத யாகம் போன்ற மாபெரும் யாகங்களை மேற்கொண்டு நடத்திப்பெருமை பெறுவாயாக!”

“வீசும் தென்றல் காற்றில் சுகந்த மணமுள்ள பூக்களின் நறுமணம் நானாதிசைகளிலும் அதுவாகச் சென்று பரவுவது போல உன் பெயரும், புகழும், பெருமையும் இந்தப் பரந்த பாரத வர்ஷத்தின் நானாதிசைகளிலும் பரவுவதாக!”

“இறைவன் கருணையினாலும், அவன் அருளினாலும் நீ நல்ல செயல்களையே செய்ய வேண்டும் என்றும், நல்ல யோசனைகளையே யோசிக்க வேண்டும் என வேண்டிப் பிரார்த்திக்கிறேன். இந்தக் குரு வம்சத்தின் புகழை நீ நிலைநாட்ட வேண்டுமென்றும் இந்த சாம்ராஜ்யத்தின் ஒவ்வொரு வீட்டிலும் தர்மம் நிலவ வேண்டும் என்றும் குரு வம்சத்தினருக்கும், இந்த நாட்டு மக்களுக்கும் உன் செயல்கள் அனைத்தும் பெரும் சிறப்பைக் கொண்டு வர வேண்டும் என்றும் பிரார்த்திக்கிறேன்.”


எங்கும் வெற்றி முழக்கமும், “சாது, சாது!” என்னும் கோஷமும் கிளம்பின. அப்போது திருதராஷ்டிரனுக்குப் பின்னர் நின்றிருந்த அவன் அமைச்சரான சஞ்சயன், திருதராஷ்டிரன் காதுகளில் ஏதோ கிசுகிசுக்க, உடனே திருதராஷ்டிரன் தன் தொண்டையைக் கனைத்துக் கொண்டு பேசத் தயார் செய்து கொண்டான். அவையில் இருந்த சப்தம் குறைந்து எங்கும் நிசப்தம் நிலவியது. திருதராஷ்டிரன் மிகவும் முயற்சி செய்து பேச ஆரம்பித்தான். எனினும் அவனுக்கு வார்த்தைகளே வரவில்லை. தடுமாறினான்.

யுதிஷ்டிரனைப் பார்த்து, “குரு வம்சத்து மஹாராஜா! என்னுடைய மகன்களை விட அதிகம் எனக்குப் பிரியமானவனே! என்னுடைய ஆசிகளையும் ஏற்றுக் கொள்வாய்! பரிசுத்தமான நம்முடைய நினைவுகளில் என்றென்றும் தங்கி இருக்கும் நம் முன்னோர்களைப் போல் நீயும் சகல விதத்திலும் மாட்சிமை பொருந்தி பல்லாண்டு ஆட்சி புரிவாயாக!”

திருதராஷ்டிரன் மீண்டும் தடுமாறினான். அவனுக்குப் பேச்சு வரவில்லை. மீண்டும் மீண்டும் தொண்டையைக் கனைத்துக் கொண்டு பேச முயற்சி செய்தான். அவன் உதடுகள் நடுங்கின. மிகவும் உணர்ச்சிவசப் பட்டிருக்கிறான் என்பது பார்ப்போருக்கு எளிதில் புரிந்தது.

“நீ பல வசந்தங்களைக்கண்டு ஆட்சி புரிவாய்! என்னுடைய அருமைச் சகோதரனும், உன் தந்தையுமான  பாண்டு பெற்றிருந்த புகழைப் போல் நீயும் புகழ் பெறுவாயாக!” மீண்டும் நிறுத்திக் கொண்டு தன் வலுவை எல்லாம் சேர்த்துக் கொண்டான் திருதராஷ்டிரன். “……… உன்னால் இந்த நாட்டில் அமைதி நிலவ வேண்டும்……………… சாந்தி நிலவ வேண்டும்…………… மிக மிக மெதுவாக இதைச் சொன்னான் திருதராஷ்டிரன். அவையோருக்கு இது சரியாகக் காதில் விழாததால் உன்னிப்பாய்க் கேட்டனர். “உன்னுடைய இந்தப் பட்டாபிஷேஹ நிகழ்வால் குரு வம்சத்தில் என்றென்றும் அமைதியும், சாந்தியும் நிலவட்டும்.” என்ற திருதராஷ்டிரன் விண்ணை நோக்கித் தன் குருட்டுக் கண்களைத் திருப்பினான். மேலே உள்ள கடவுளரின் ஆசிகளை வேண்டுவது போல் தன் கைகளை விரித்தான். “மேலும்…………..மேலும்………… என் மகன்கள் நூற்றுவர்……………….. அதாவது உன் பெரியப்பன் வழிச் சகோதரர்கள்…………………………….திருதராஷ்டிரனின் தொண்டை அடைத்துக் கொண்டது.

தர்மசங்கடமான அமைதி அங்கே நிலவியது. துரியோதனனையும், அவன் சகோதரர்களையும் இந்த நேரம் சொல்லி இருக்கக் கூடாதோ என்னும் வண்ணம் அனைவரும் சங்கடத்தில் ஆழ்ந்தனர். ஆனால் திருதராஷ்டிரன் மீண்டும் பேச ஆரம்பித்தான். “மாட்சிமை பொருந்திய யுதிஷ்டிரா! நீ எனக்கு ஒரு மாபெரும் பொறுப்பைச் சுமத்தி விட்டாய்! துரியோதனனுக்கு எந்தப் பகுதியை அளிப்பது! உனக்கு எந்தப் பகுதியை அளிப்பது! என்பதை எல்லாம் நீ என்னையே முடிவு செய்யச் சொல்லி விட்டாய்! இதன் மூலம் என் பொறுப்பும், சுமையும் அதிகரித்து விட்டது. உனக்கு எதைக் கொடுப்பேன்? துரியோதனனுக்கு எதைக் கொடுப்பேன்?” திருதராஷ்டிரன் திகைத்தாற்போல் நிறுத்தினான்.  ராஜசபையே நெருப்பின் மீது நிற்பது போல் தத்தளித்தது.

ஆனால் திருதராஷ்டிரன் மீண்டும் தன் சக்தியை எல்லாம் சேர்த்துக் கொண்டு பேசத் தயார் செய்து கொண்டான். அவன் என்ன சொல்ல நினைத்தானோ அதைச் சொல்லியே தீருவான் என அனைவரும் புரிந்து கொண்டனர். “ நம்முடைய சாம்ராஜ்யம் யமுனைக்கரை வரை பரவி விரிந்துள்ளது. காண்டப்ரஸ்தம் யமுனையின் கரையில் உள்ளது, அது தான் ஒரு காலத்தில் நம்முடைய தலைநகரமாக இருந்தது. அங்கே தான் நம் முன்னோர்களான பூருரவஸ், நகுஷன், யயாதி ஆகியோர் ஆட்சி புரிந்தனர். “ இப்போது திருதராஷ்டிரன் குரல் மீண்டும் மெலிந்து நைந்தது. “அது நம்முடைய பூர்வீக முன்னோர்கள் ஆட்சி புரிந்த நகரம். அங்கே சென்று நீங்கள் உங்கள் ஆட்சியைத் தொடரலாம்!”

மெதுவாகச் சொல்லி முடித்தான் திருதராஷ்டிரன். ராஜசபையில் சிறிது நேரம் வரை நிசப்தமே மேலோங்கியது. அனைவரும் திகைத்துப் போய்ப் பேச்சே வராமல் அமர்ந்திருந்தனர். காண்டவப்ரஸ்தமா? அந்தக் காட்டிலா? கடவுளே! காட்டை அழித்தல்லவோ நகரை நிர்மாணிக்க வேண்டும்! நாகரிக வாழ்க்கை வாழும் ஆரியவர்த்தத்தின் எல்லைக்கப்பால் அல்லவோ உள்ளது! அங்கே தானே ராக்ஷசர்களால் பாதிக்கப்பட்டவர்களும், நர மாமிசத்தை இரையாகத் தேடும் கொடிய காட்டு மிருகங்களும் வசிக்கின்றன. மனித நாகரிகமே அங்கே இல்லையே! ஆஹா! இதற்குப் பாண்டவர்களை நாடு கடத்தி இருக்கலாமே! இது அதைவிடக் கொடிய தண்டனையாகவன்றோ இருக்கிறது! ம்ம்ம்ம்…… அப்போது ஹஸ்தினாபுரத்தை துரியோதனனா ஆளப் போகிறான்! இது என்ன கொடுமை!

துரியோதனன் துஷ்சாசனனைப் பார்த்தான். அவன் முகத்திலும் வெற்றிப் புன் சிரிப்பு. இருவரும் தாங்கள் அடைந்த வெற்றியைப் புன்சிரிப்புடன் பரிமாறிக் கொண்டனர். மொத்த சபையும் அடுத்து என்ன நடக்கப் போகிறதோ என்பதற்குக் காத்திருந்தது. இந்தப் பட்டாபிஷேஹம் கடைசியில் சகோதரச் சண்டையில் முடிந்து விடுமோ? அதோ! அங்கே வேதவியாசரும் வியப்பினால் அகன்று விரிந்த கண்களோடு உட்கார்ந்திருக்கிறார். இந்தத் திடீர் மாற்றத்திற்குக் குறிப்பிட்ட காரணம் என்னவென்று தனக்குள் யோசிக்கிறார். ஒரு கணம், ஒரே கணம் பீஷ்மர் சொல்லவொண்ணா ரௌத்திரம் அடைந்தார். அவர் கண்களின் மின்னல் வெட்டு அதை நிரூபித்தது. இந்தக் குருட்டு அரசன் இவ்வளவு வருடங்களாக அவர் பாடுபட்டு வந்ததை எல்லாம் ஒன்றுமே இல்லை என்று ஆக்கி விட்டானே! என்ன கொடுமை இது!

Thursday, August 20, 2015

யுதிஷ்டிரனுக்குப் பட்டாபிஷேஹம்!

சற்று நேரத்தில் யுதிஷ்டிரன் அந்த ராஜசபைக்குள் நுழைந்தான். அவன் ஒரு பக்கம் வேத வியாசரும் இன்னொரு பக்கம் பீஷ்மரும் கூடவே வந்தனர். அவர்களுக்குப் பின்னர் தௌம்யரும், சோமதத்தரும் பின் தொடர்ந்தனர்.  யுதிஷ்டிரன் யுவராஜாவுக்கான கிரீடத்தை அணியவில்லை. தலையில் ஏதும் அணியாமலேயே வந்தான். சிவப்பு நிறப் பீதாம்பரத்தை உடுத்தி இருந்தான். தங்கத்தில் கற்கள் பதிக்கப்பட்ட பல்வகையான ஆபரணங்களை அணிந்திருந்தான். தலை நிமிர்ந்து அனைவரையும் பார்த்து மரியாதையும், அன்பும் ததும்பச் சிரித்தவண்ணம் இயல்பாகவே வந்த ராஜநடையுடன் சென்ற அவனைப் பார்க்கையிலேயே தர்மதேவதையே மண்ணில் இறங்கி நடமாடுவது போல் இருந்தது.

அவன் உள்ளே நுழையும்போதே ஒலிக்க ஆரம்பித்த எக்காளங்கள் இன்னமும் ஒலித்துக் கொண்டிருந்தன. அரசன் வரவை அறிவிக்கும் வண்ணமாகச் சங்கங்கள் முழங்கின. அங்கு குழுமி இருந்த ஆயிரக்கணக்கான மல்லர்களும் சங்குகளை முழங்கித் தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்டனர். அங்கிருந்த அனைவரும் எழுந்து நின்று, “குரு வம்சத்தினருக்கு மங்களம்! குருவம்சத்தினர் நீடூழி வாழ்க!” என்றெல்லாம் முழக்கமிட்டனர்.  சபாமண்டபத்தின் மைய மேடையில் சிங்காதனத்திற்கு அருகே அவர்கள் வந்ததும், தௌம்யர் சந்தனத்தை யுதிஷ்டிரன் தலையிலும் கன்னங்களிலும் பூசி அக்ஷதைகளைத் தூவி அவனை ஆசீர்வதித்தார். அந்தப் பெரிய மேடையின் ஒரு பக்கம் விதுரன் தன் கைகளில்  கிரீடத்தையும் ஷாந்தனு மஹாராஜா பயன்படுத்தி வந்த வில்லையும், அம்புகளையும் வைத்துக் கொண்டு காத்திருந்தார். யுதிஷ்டிரன் தன் தலைமயிரைச் சேர்த்துக் கட்டி இருந்த முடிச்சை அவிழ்த்து விட்டான். பீஷ்மர் விதுரர் கைகளில் இருந்த கிரீடத்தை வாங்கி யுதிஷ்டிரன் தலையில் வைத்தார். விதுரரிடமிருந்து வில்லையும், அம்புகளையும் வாங்கி யுதிஷ்டிரன் கைகளில் கொடுத்தார். இதன் மூலம் குரு வம்சத்தினரை தனக்களிக்கப்பட்டஅதிகாரங்களுக்கு உட்பட்டு யுதிஷ்டிரனே தலைமை வகிப்பான் என்பதை உறுதி செய்தார். யுதிஷ்டிரனும் அந்த வில்லுக்கும், அம்புக்கும் மரியாதை செய்யும் விதமாக அவற்றை வாங்கித் தன் கண்களில் ஒற்றிக் கொண்டு அரியணையில் வைத்தான்.

யுதிஷ்டிரன் தலை குனிந்து அரியணைக்கு எதிரே கைகளைக் கூப்பிய வண்ணம் நிற்க வேத வியாசரும் மற்ற வேத பிராமணர்களுமாக நன்மைகளை வேண்டியும், ஆசீர்வாதங்களை அளிக்கும் விதமாகவும் மந்திர கோஷங்களைச் செய்ய ஆரம்பித்தனர். பாண்டுவின் மறைவுக்குப் பின்னர் சுருட்டி வைக்கப்பட்டிருந்த வெண்கொற்றக் குடையானது இப்போது சோமேஸ்வரால் பிரிக்கப்பட்டு அவன் தன் வயதான தந்தையுடன் சேர்ந்து அரியணைக்குப் பின்னால் குடையைப் பிரித்துப் பிடித்தபடி நின்று கொண்டான். அரியணையில் அமரும் முன்னர் முதலில் வியாசரையும் பின்னர் தாத்தா பீஷ்மரையும் நமஸ்கரித்தான் யுதிஷ்டிரன். பின்னர் முறையே திருதராஷ்டிரன், பலராமன், துரோணர், கிருபர், தன் மதகுருக்களான தௌம்யர், சோமதத்தர் ஆகியோரையும் தன் தாய் குந்தியையும் நமஸ்கரித்தான். பின்னர் கிருஷ்ணன் பக்கம் திரும்பிய யுதிஷ்டிரனைத் தன் இருகரங்களையும் நீட்டி வரவேற்றான் கிருஷ்ணன். அவனை அப்படியே அணைத்துக் கொண்டான் யுதிஷ்டிரன். பின்னரே அரியணையில் அமர்ந்தான். ஒவ்வொரு ஆசனத்திற்கும் பின்னர் நின்று கொண்டிருந்த சேடிப் பெண்கள் அதுவரை பதுமைகள் போல் அசையாமல் நின்று கொண்டிருந்தனர். இப்போது யுதிஷ்டிரன் அமர்ந்ததும் உயிர் பெற்றவர்கள் போல் தங்கள் கரங்களில் இருந்த சாமரங்களை வீச ஆரம்பித்தனர்.

சபையில் கொஞ்சம் கசமுசவென்ற சப்தம் எழுந்திருந்தது. பீஷ்மர் தன் கைகளை உயர்த்திக் காட்டி அமைதியை நிலைநாட்ட முயன்றார். பீஷ்மர் மிகவும் உணர்ச்சி வயப்பட்டிருப்பது அனைவருக்கும் பார்க்கும்போதே புரிந்தது. எத்தனை வருடங்கள்! எத்தனை வருடங்கள்! இந்தக் குரு வம்சத்தினரின் இந்த மாபெரும் சாம்ராஜ்யத்தை தனி ஒருவராக எத்தனை வருடங்களாக பீஷ்மர் கட்டிக் காத்து வருகிறார்! எதற்காக! எல்லாம் இத்தகையதொரு அருமையான தருணத்துக்காகவே! ஆம்! இப்படி ஓர் சர்வ வல்லமையும் பெற்ற இளைஞன் இந்த அரியணையில் அமர வேண்டும்; ஆட்சி புரிய வேண்டும். இங்கே தர்மத்தின் ஆட்சி நிலைபெற்று ஓங்க வேண்டும் என்பதே அவர் விருப்பமாக இருந்தது. கடைசியில் அது நிறைவேறும் தருணம் நெருங்கி விட்டது. இத்தனை வருடங்களாகத் தனி ஒருவனாக அவர் தூக்கிச் சுமந்த பாரத்தை எல்லாம் இறக்கி வைக்கும் நேரம் நெருங்கி விட்டது. தன் வயதான தோள்களினால் சுமக்க முடியாமல் சுமந்து வரும் இந்த மாபெரும் சாம்ராஜ்ய பாரத்தை யுதிஷ்டிரனின் இளந்தோள்களில் இனி சுமத்தலாம். ஆஹா! எத்தகைய அரிய தருணம் வாய்த்துள்ளது! ஆனாலும்!!!!! பீஷ்மரின் மனம் பல்லாண்டுகள் பின்னோக்கிச் சென்றது. பாண்டுவுக்கு ராஜ்ய பட்டாபிஷேஹம் செய்து வைத்த அந்த நாளை அவர் நினைவு கூர்ந்தார். இதே சபாமண்டபத்தில் அதுவும் நடந்தது!
 

Monday, August 17, 2015

பட்டாபிஷேஹ ஏற்பாடுகளில் ஹஸ்தினாபுரம்!

பட்டாபிஷேஹ விழாவை முன்னிட்டு ஹஸ்தினாபுரத்தில் பல நிகழ்ச்சிகள் நடந்தன. யுதிஷ்டிரன் பட்டம் ஏற்கப் போகும் நாளுக்கு முன்னால் வந்த ஒன்பது நாட்களுக்கும் தொடர்ச்சியாக பட்டாபிஷேஹ சம்பந்தமாக நடைபெறும் சம்பிரதாயமான சடங்குகள் நடைபெற்றன. அவை அனைத்தும் பட்டாபிஷேஹம் நடைபெறும் மணிமண்டப அறைக்கு எதிரே இதற்கென நிர்மாணிக்கப்பட்டதொரு பெரிய மண்டபத்தில் நடைபெற்றன. வேத வியாசர் தலைமை தாங்கி அனைத்தையும் ரிஷிகள், முனிவர்கள், வேத பிராமணர்களின் உதவியோடு நடத்தி வைத்தார். மிக விமரிசையாகவும் விரிவாகவும் சாஸ்திர ரீதியான சடங்குகள் நடைபெற்றன. அக்னி தேவனை வழிபட்டுப் பற்பல ஆஹுதிகளும் வழங்கப்பட்டன. தெய்வீகத் தாவரம் ஆன சோமனை வழிபட்டனர். சோம ரசம் பிழியப்பட்டு அங்கிருந்த அதிகாரபூர்வமான மதகுருக்களாலும் மற்றும் வேதபிராமணர்களாலும், அருந்தப்பட்டு யுதிஷ்டிரனுக்கும் அளிக்கப்பட்டது.

மக்கள் கூட்டம் பெருமளவில் கூடி அனைத்து நிகழ்வுகளும் அவர்களால் பங்கெடுக்கப்பட்டது.  நற்குணங்களும், இனிமையான பேச்சுக்களும் நிறைந்த யுதிஷ்டிரன், தர்மத்திலிருந்து சிறிதும் வழுவாத யுதிஷ்டிரன் தங்கள் மன்னன் ஆகப் போவதை உணர்ந்து ஹஸ்தினாபுரத்து மக்கள் ஆனந்தத்தில் ஆழ்ந்திருந்தனர். அக்கம்பக்கம் உள்ள கிராமங்களிலிருந்தும், நகரங்களிலிருந்தும் மக்கள் கூடினர். ஆங்காங்கே இசைக்கச்சேரிகள் நடைபெற்றன. மேள வாத்தியங்கள் முழங்கின. எக்காளங்கள், சங்குகள் முழங்கின. ஆலாட்சி மணிகள் ஒலித்த வண்ணம் இருந்தன. வந்திருந்த அனைவருக்கும் சிறப்பான உணவு அளிக்கப்பட்டது. உணவு அருந்த மக்கள் கூட்டம் கூட்டமாகக் கூடிய வண்ணம் இருந்தனர். ஏழை, பணக்காரர், வலியோர், எளியோர் என்ற வித்தியாசமில்லாமல் அனைவருக்கும் சரிசமமாக உணவு அளிக்கப்பட்டது. வேத மந்திரங்களின் கோஷம் சுற்று வட்டாரத்தையே நிறைத்தது. அனைவர் மனதிலும் மகிழ்ச்சி தாண்டவம் ஆடியது.

ஹோம குண்டங்களிலிருந்து எழும்பிய புகை விண்ணைத் தொட்டது. விண்ணிலிருக்கும் கடவுளரிடம், பூமியில் தர்ம சாம்ராஜ்யம் எழும்பப் போகிறது. யுதிஷ்டிரன் தான் தர்மராஜாவாக ஆளப் போகிறான் என்னும் செய்தியை அந்தப் புகைமண்டலம் சொல்வது போல் இருந்தது. ஒவ்வொரு சடங்குகளாக நடைபெற்று கடைசியில் ஒன்பதாம் நாள் அவை முடிவுக்கு வந்தன. எல்லாம் முடிவடைந்ததும் யுதிஷ்டிரன் வேதவியாசர், பீஷ்ம பிதாமகர், குருவும் ஆசாரியர்களும் ஆன தௌம்யர் மற்றும் சோமதத்தர் புடைசூழ, தங்கள் குல தெய்வமும் தங்கள் முன்னோர்களில் ஒருவர் ஆன பிரதீப அரசனின் பெயரால் வழங்கப்படுபவரும் ஆன பிரதீபேசுவரரைச் சென்று குல வழக்கப்படி வழிபட்டான். ராஜ சபைக்கு வரக்கூடிய உரிமை படைத்தவர்கள் அனைவரும் சபையில் கூடி தங்களுக்கென ஒதுக்கப்பட்டிருந்த இடங்களில் அமர்ந்து கொண்டனர்.

சபாமண்டபத்தின் நடுவில் இருந்த மேடையில் போடப்பட்டிருந்த சிங்காதனங்கள் இப்போது மாற்றி அமைக்கப்பட்டிருந்தன. மான் தோலால் மூடப் பட்டிருந்த வேத வியாசர் அமரும் ஆசனப் பலகை முன்னர் சிங்காதனங்களில் இரு வரிசைக்கும் நடுவில் அமைக்கப்பட்டிருந்தது. இப்போது வலப்பக்கமாகப் போடப்பட்டிருந்தது. நடுவில் உள்ள இடத்தில் இப்போது ஒரு அழகான அலங்கரிக்கப்பட்டிருந்த ரத்தினங்கள் பொதிந்த கிரீடம் வைக்கப்பட்டிருந்தது. புதிய அரசனைக் குறிப்பிடும் விதமாக கிரீடத்தின் நடுவில் ஒரு சிங்க முகம் வாய் திறந்து கர்ஜிக்கும் பாவனையில் செதுக்கப்பட்டு அதில் சிவப்பு நிறக் கற்கள் பதிக்கப்பட்டிருந்தன. கண்களுக்கு நீல நிறக் கற்கள், சுற்றிலும் சிவப்பு. கருமணிக்கண்களால் செக்கச் சிவந்த முகத்தோடு பார்த்து உறுமும் பாவனையில் சிங்கம் வடிக்கப்பட்டிருந்தது.

அரசனின் அரியணைக்கு வலப்பக்கமாக பீஷ்மபிதாமகர் அமரும் ஆசனம் போடப்பட்டிருந்தது. அரசனுக்குச் சரிசமமாக அவர் ஆசனமும் காணப்பட்டது. பீஷ்மரை அடுத்து பலராமன், விராடன், சுநீதன் என அனைவரும் அவரவருக்கென ஒதுக்கப்பட்டிருந்த ஆசனங்களில் வந்து அமர்ந்தனர். அரியணையின் இடப்பக்கம் போடப்பட்டிருந்த ஆசனத்தில் திருதராஷ்டிரனை அழைத்து வந்து அமர வைத்தனர். திருதராஷ்டிரனுக்கு அடுத்துக் கிருஷ்ணனும், மணிமானும் அமர்ந்தனர். வலப்பக்கம் போடப்பட்டிருந்த வெள்ளியால் ஆன சிங்காதனத்தில் துரியோதனன் அமர்ந்திருந்தான். அவன் தன்னை யுவராஜாவாக அறிவிக்கப் போகும் நேரத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தான்.  இந்த நிகழ்ச்சி எப்படி நடந்து முடியப் போகிறது என்னும் எதிர்பார்ப்பிலும் அவன் காத்திருந்தான். ஏதோ நடக்கப் போகிறது என எதிர்பார்த்தான். யுதிஷ்டிரன் அரியணை ஏறினால்? கிருஷ்ணன் பானுமதிக்குச் செய்து கொடுத்திருக்கும் சத்தியத்தை எப்படிக் காப்பாற்றுவான்? என்ன செய்யப் போகிறான் கிருஷ்ணன்? துரியோதனனுக்கு யோசித்து யோசித்து மூளை குழம்பியது.  ஹூம், பானுமதி மட்டும் உயிரோடு இருந்தால்? இந்தக் கிருஷ்ணன் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் பொருட்டாவது அவள் உயிரோடு இருந்திருக்கலாம். இந்த மாட்டிடையன் என்ன செய்யப் போகிறனோ? ஒன்றுமே புரியவில்லை!

இடப்பக்கம் கடைசியில் போடப்பட்டிருந்த வெள்ளிச் சிங்காதனம் பீமனால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது. தன் கண்களில் தெரிந்த இனம் புரியாததொரு ஒளியோடு காணப்பட்ட பீமன் அங்குமிங்கும் பார்த்துக் கொண்டு தன் நீண்ட மீசையை முறுக்கிக் கொண்டும் தடவிக் கொடுத்துக் கொண்டும் அமர்ந்திருந்தான். அவன் மனம் முழுதும் நிறைவாக இருந்தது. இங்குள்ள அனைவரும் அவன் கைப்பொம்மைகள். அவன் ஆட்டுவிக்கும்படி ஆடப் போகிறவர்கள். அவன் தான் தன் கைகளில் வைத்திருக்கும் கயிறுகளால் இந்தப் பொம்மைகளை பொம்மலாட்டம் ஆட வைக்கப் போகிறான். கயிறு அவன் கையில். இதழ்களில் புன்னகையுடனும், முகத்தில் தெரிந்த மன அமைதியுடனும் அங்கு அமர்ந்திருந்த வாசுதேவக் கிருஷ்ணனை அடிக்கொரு முறை பார்த்துக் கொண்டான் பீமன்.

 

Saturday, August 15, 2015

பீமன் ஹஸ்தினாபுரம் திரும்புகிறான்!

“ஹா, கிருஷ்ணா! அவருக்கு என்ன? சந்தோஷமே அடைவார். அதோடு எங்களைக் காட்டுக்கு அனுப்புவதிலும் அவருக்குப் பெரு விருப்பம் இருக்கும். சந்தோஷமே அடைவார்!” என்றான் பீமன்.  “அப்போது, நாம் அவர்களின் மாபெரும் படையில் இருக்கும் குதிரைகள், ரதங்கள், மற்றும் கால்நடைச் செல்வங்கள், கஜானாவின் தங்கங்கள், வைரங்கள்,நவரத்தினங்கள் என அனைத்திலும் சரி பாதி பிரித்துக் கொடுக்கச் சொன்னால்?  அதாவது நாம் காட்டிற்குச் சென்று விட்டோமானால் இவ்வளவையும் கொடுக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கலாம்!” என்றான் கிருஷ்ணன். இதைக் கேட்ட பீமனுக்குள் ஆச்சரியத்தில் கண்கள் விரிந்தன. அவன் கிருஷ்ணனிடம் “இதெல்லாம் நடக்காது, கிருஷ்ணா! என் பெரியப்பாவைப் பற்றி நீ அறிய மாட்டாய்! அவர் இதற்கெல்லாம் ஒப்புக் கொள்ள மாட்டார்!” என்றான்.

“இல்லை, பீமா! நிச்சயமாய் அப்படி எல்லாம் நடந்து கொள்ள மாட்டார். தன் மக்களுக்கு ஹஸ்தினாபுரம் கிடைக்கப் போகிறது என்றால் அதற்காக அவர் என்ன வேண்டுமானாலும் செய்வார்.” என்று கிருஷ்ணன் முழு நம்பிக்கையுடன் பேசினான். மேலும் அவன் கூறினான். “பின்னர் நாமும் அவரிடம் கேட்கலாம். நம்முடன் வரச் சம்மதிக்கும் படை வீரர்கள், ரத சாரதிகள், சேடிப் பெண்கள், சேவகர்கள், காலாட்படையினர், பெருந்தனக்காரர்கள், பிரபுக்கள், மல்லர்கள் மற்றும் வில்லாளிகள் ஆகியோரில் யார் நம்முடன் வரச் சம்மதிக்கின்றனரோ அவர்களை நம்முடன் அனுப்பி வைக்குமாறும் நாம் கேட்டுக் கொள்வோம். அது மட்டும் போதாது. வணிகர்களும் தங்கள் செல்வங்களோடு நம்முடன் வர வேண்டும் என்றும் கேட்டுக் கொள்வோம். வணிகர்கள் இல்லாமல் வியாபாரங்கள் நடைபெறாது.”

“ஹா, உனக்கு என் பெரியப்பாவைப் பற்றி இன்னும் புரியவில்லை. அவர் இதற்கெல்லாம் ஒத்துக்கொள்ளவே மாட்டார்.”

“முயன்று தான் பார்ப்போமே!”


“அதில் நாம் தோல்வி அடைந்தோமானால்?”

“அப்படி இல்லாமல் அவர் நாம் சொல்வதற்கெல்லாம் ஒத்துக்கொண்டாரெனில்? காண்டவப் பிரஸ்தத்துக்கு நம்மோடு நாம் விரும்பும் மக்கள் அனைவரையும் அனுப்பி வைக்கச் சம்மதித்தாரெனில்?”

“அப்படி மட்டும் நடந்தால்!! கிருஷ்ணா! உன்னுடைய யாதவர்களின் துணையுடனும், மணிமான் மற்றும் நாகர்களின் துணையோடும் நாம் அனைவருமாகச் சேர்ந்து காண்டவப் பிரஸ்தத்தை ஒரு அழகான நகரமாக மாற்றிவிடலாம். ஓரிரு வருடங்களில் இதைச் செய்து முடிக்கலாம்.”

“அது தான் நான் சொல்வதும்! அதன் பின்னர் ஓரிரு வருடங்களில் இவை எல்லாம் முடிந்த பின்னர் நீயும் காசி தேசத்து இளவரசியின் சுயம்வரத்தில் பங்கு பெறச் செல்ல முடியும்.”
பீமனுக்கு இவை எல்லாம் நடக்குமா என்னும் பிரமிப்புத் தோன்றியது. அது மாறாமலேயே அவன், “கிருஷ்ணா! நாம் நம்மையே ஏமாற்றிக் கொள்கிறோமா? இந்த மாபெரும் முயற்சியில் நாம் தோல்வி அடைந்தோமெனில்? என்ன ஆவது?”

“இந்த உலகமே என்னைப் பார்த்துத் தான் சிரிக்கும். நாம் தோல்வி அடைந்தால் அது என் தனிப்பட்ட தோல்வி. இதோ பார் சகோதரா! பீமா! நன்றாகக் கேள். நாம் செய்யாத மடத்தனங்களே இல்லை. நிறைய முட்டாள்தனமான வேலைகளைச் செய்திருக்கிறோம். அவற்றோடு இதுவும் ஒன்றாக இருந்துவிட்டுப் போகட்டுமே! இந்த ஒரு முட்டாள் தனத்தால் ஒன்றும் பெரிதாக மாறிவிடப் போவதில்லை.” கிருஷ்ணன் ஒரு சிறுபிள்ளை விஷமம் செய்யும்போது பிடிபட்டால் எப்படிச் சிரிப்பானோ அவ்வாறே சிரித்தான். பீமனும் அவனுடன் கூடச் சேர்ந்து சிரித்தான். “கிருஷ்ணா! திருதராஷ்டிரர் ஒரு கஞ்சன் என்பதை நீ நன்கறிவாய்!  நாம் கேட்பதை எல்லாம் அவர் கொடுக்க மறுத்தால்? அப்போது நாம் என்ன செய்வது?”

“நாம் நம் கோரிக்கையை வெளிப்படையாக வைத்த பின்னரும் திருதராஷ்டிரன் அதற்குச் செவி சாய்க்க மறுத்தார் எனில், இவ்வுலகமே அவரைப் பார்த்து நகைக்கும். அவரைத் தான் பழி கூறும். அவரைக் கண்டிக்கும். இதை திருதராஷ்டிரன் நன்கறிவார். ஆகவே நீ இதைக் குறித்துக் கவலைப்படாதே! இதை மறுத்துத் தன் பெயரைக் கெடுத்துக் கொள்ள அவர் சம்மதிக்க மாட்டார்.  அப்படி மறுத்தால் பிதாமகர் பீஷ்மரும் சரி, ராணிமாதா சத்யவதியும் சரி அவரை மன்னிக்கவே மாட்டார்கள். அதை அவர் விரும்ப மாட்டார். சரி, அது போகட்டும்! நான் இப்போது ஹஸ்தினாபுரம் சென்று இதைச் சோதித்துப் பார்க்க விரும்புகிறேன். செல்லலாமா?”

பீமன் உற்சாகத்துடன், “நல்லது கிருஷ்ணா! கேட்கவே மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. நீ ஓர் அற்புதமான, அதிசயமான மனிதன்.” என்றான். அப்போது ஏதோ முக்கியமான அதே சமயம் கடினமான விஷயம் ஒன்று நினைவுக்கு வந்தது போல் கிருஷ்ணன் பீமனின் மணிக்கட்டை இறுகப் பிடித்தான். “ஆஹா! இதை மறந்தே விட்டேனே! பீமா, பீமா! முக்கியமான விஷயத்தை எப்படி மறந்தேன்! அடக் கடவுளே! மஹாதேவா!” என்று கூவினான். அவன் குரலில் கவலையும், கைவிடப்பட்ட தொனியும் தெரிந்தது.

“என்ன?” என்று கேட்டான் பீமன்.
வருத்தத்துடன் தலையை அசைத்தான் கிருஷ்ணன். “இதோ பார் பீமா! இப்போது நான் தனியாக எப்படி ஹஸ்தினாபுரம் செல்வது? நீ இல்லாமல் சென்றேன் ஆனால், யுதிஷ்டிரன் தான் ஓர் அரசனாக விரும்பவே மாட்டான்; குந்தி அத்தையும் உண்ணாவிரதம் இருந்து உயிரை விடத் தீர்மானிப்பார்.  திரௌபதியோ பாஞ்சாலத்திற்கே திரும்பி விடுவாள். ஜாலந்திராவைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். தன் நாக்கை அறுத்துக் கொண்டு என் காலடியில் உயிரை விட்டு விடுவாள். அடக் கடவுளே, கடவுளே, மஹாதேவா! இந்த பீமன் இல்லாமல் நான் இவற்றை எல்லாம் எப்படி எதிர்கொள்வேன்? ஒன்றுமே புரியவில்லையே!”

“நீ ஓர் ஏமாற்றுக்காரன், வஞ்சகன், கபடநாடகம் ஆடுபவன். ஆரம்பத்திலிருந்து என்னை ஹஸ்தினாபுரம் அழைத்துச் செல்லவே நீ தீர்மானத்துடன் வந்திருக்கிறாய்! வேறு எண்ணங்கள் எதுவும் உன்னிடம் இல்லை!”

“அது சரி அப்பா! ஆனால் நீ மட்டும் இப்போது என்னுடன் ஹஸ்தினாபுரம் வரவில்லை எனில்! நாம் கனவு கண்டு கொண்டிருக்கும் அருமையான புனிதமான கடவுளரின் நகரம் என்பது வெறும் கனவளவிலேயே இருக்கும். அதற்கு மாபெரும் ஆபத்து ஏற்படும். ஆனால் நீ மட்டும் ஹஸ்தினாபுரம் வந்து திருதராஷ்டிரனிடம் நேரில் பேசினால்! எல்லாமும் மாறிவிடும். உன்னுடைய பெருந்தன்மையான போக்கை அவர் புரிந்து கொண்டு நீ கேட்பதை எல்லாம் ஒத்துக் கொண்டு கொடுத்துவிடுவார்.”

“நான் நன்கறிவேன் கிருஷ்ணா! அந்தக் குருட்டு அரசனை நான் மட்டும் நேரில் வந்து சந்தித்து என் தேவைகளைச் சொன்னேன் எனில் அவர் கட்டாயம் அனைத்தையும் நிறைவேற்றி வைப்பார். நான் கேட்பதை மறுக்குமளவுக்கு மனோ தைரியம் அவரிடம் கிடையாது.”

“எனக்குத் தெரியும் பீமா! உன்னால் மட்டும் தான் இது முடியும்!”

“கிருஷ்ணா, இப்படியான எண்ணங்கள் உனக்கு எங்கிருந்து கிளம்புகின்றன?” பீமன் சிரித்த வண்ணம் குறும்பு கொப்பளிக்கக் கிருஷ்ணனை அன்புடன் அணைத்த வண்ணம் கேட்டான்.

“ஓ, அது மிக எளிது! உன்னுடன் சேர்ந்து இருந்தால் இவை எல்லாம் தானாகவே தோன்றுகின்றன, வ்ருகோதர அரசே!”
“ஹா, என்னை, “வ்ருகோதர அரசன்” என அழைக்காதே! அப்படி அழைத்தால் எனக்குக் காஷ்யா, ஜாலந்திராவின் நினைவு வந்துவிடுகிறது. பின்னர் என் இதயம் மிக வேகமாய்த் துடிதுடிக்கிறது.”

“எனக்குத் தெரியும் பீமா! அதனால் தான் நான் என்ன சொல்லவேண்டுமோ அதை உன்னிடம் சொன்னேன். வா, வா விரைந்து வா! கிளம்பு! சீக்கிரமாய் நாம் செல்லவில்லை எனில் அவள் ஏதேனும் செய்து கொண்டு விடுவாள். கங்கையில் போய் விழுந்தாலும் விழுந்து விடுவாள்.”

கோபுவின் பக்கம் திரும்பிய பீமன் அவனை ரதத்தை விரைவில் தயார் செய்யச் சொன்னான். தாங்கள் திரும்பி ஹஸ்தினாபுரம் செல்லப் போவதாகவும் தெரிவித்ஹ்டான். கோபுக்கு அதிர்ச்சியாக இருந்தது. “ஹஸ்தினாபுரமா! ஆஹா! என்ன என் எஜமானுக்கு என்ன ஆயிற்றென்றே தெரியவில்லையே! நாம் நிர்மாணிக்கப் போகும் நகரத்தின் மாதிரியை இதோ கட்டிப் பூர்த்தி செய்து வைத்திருக்கிறேன். எவ்வளவு அருமையாக இருக்கிறது என்று பாருங்கள்!” என்றான்.

“ஹூம், வெறும் கூழாங்கற்களால் ஆன நகரங்கள் நமக்குத் தேவையில்லை.” கோபு கட்டி இருந்த் கூழாங்கற்களால் ஆன நகர மாதிரியைக் கலைத்த வண்ணம் பீமன் பேசினான். “நாம் உண்மையாகவே அழகான ஓர் நகரத்தை நிர்மாணிக்கப் போகிறோம்.”

“நீங்கள் தொந்திரவை விலைக்கு வாங்கிக் கொள்கிறீர்கள், எஜமான்!” என்ற வண்ணம் தரையில் அமர்ந்த கோபு பீமன் கலைத்து விட்ட கூழாங்கற்களையும் தான் கட்டிய மாதிரி நகரத்தையும் வருத்தத்துடன் பார்த்தான். தன் தலையில் கைவைத்துக் கொண்டு சோகத்துடன் அமர்ந்தான்.

“இல்லை, கோபு, நாம் சங்கடங்களிலிருந்து விரைவில் விடுதலை பெறுகிறோம்.”

“பிரபுவுக்குத் தன் நிலைமை புரியவில்லை. அவர் செயலற்றவராகி விட்டார்.” கோபு தனக்குத் தானே முணுமுணுத்துக் கொண்டான். அவனைத் தன் கரங்களால் தூக்கிய பீமன், “இதை விடப் பெரியதொரு நகரை நாம் உண்மையாகவே நிர்மாணிக்கப் போகிறோம். இப்போது எழுந்திரு!” என்றான்.

தன் கண்ணீரைத் துடைத்துக் கொண்ட கோபு, “என்னால் நம்பமுடியவில்லை!” என்றான். “கோபு, கிருஷ்ணா எதற்கு வந்திருக்கிறான் தெரியுமா? அந்தப் பெரிய கனவு நகரை நமக்காக நிர்மாணித்துத் தரத்தான். நமக்கு அதில் உதவி செய்யத் தான் வந்திருக்கிறான். நாம் திரும்ப ஹஸ்தினாபுரம் செல்வோம். அங்குள்ள மக்களில் சிலரும் உதவி செய்ய நாம் நம் கனவு நகரை நிர்மாணிப்போம்.”

“பிரபுவே, நிச்சயமாக ஒன்று கூறுகிறேன். மிக, மிகத் தவறான முற்றிலும் தவறான ஒரு நிகழ்வு விரைவில் நடைபெறப் போகிறது. அதை நான் இன்று அதிகாலையில் மாட்சிமை பொருந்திய வாசுதேவக் கிருஷ்ணன் வந்ததுமே உணர்ந்துவிட்டேன்.  பிரபு, பிரபு, நீங்கள் மீண்டும் சங்கடங்களில் மாட்டிக் கொள்ளப் போகிறீர்கள்!”

“முட்டாளே, விரைந்து வா! அப்படி எல்லாம் நடக்காது!”

Saturday, July 25, 2015

கண்ணனின் கனவில் புதிய நகரம்!

கிருஷ்ணனையே பார்த்துக் கொண்டிருந்த பீமனுக்கு அவன் தன்னுள் ஆழ்ந்து போய் ஏதோ கனவுலகில் இருக்கிறான் என்பதும், அவன் மனதுள் அந்தக் கனவு நகரம் தோன்றிக் கொண்டிருக்கிறது என்பதும் புரிந்தது. இந்த மாறுதலுக்கான காரணத்தையும் அவன் புரிந்து கொண்டான். கிருஷ்ணனின் இந்த உணர்வுகள் அவனுள்ளும் மாற்றத்தை ஏற்படுத்தியது. அவனும் அதில் ஆழ்ந்தான். அவனுள்ளும் கனவு நகரம் விரிந்தது. பரந்தது. மாபெரும் சாம்ராஜ்யம் தோன்றியது. “கிருஷ்ணா! ஆம்! அப்படி ஓர் சாம்ராஜ்யம், தர்ம சாம்ராஜ்யம் உருவாக வேண்டும். அங்கே பெண்கள் இரவு நேரத்திலும் எவ்விதத் தொல்லையும், அச்சமும் இல்லாமல் தன்னந்தனியாகப் பயணிக்க வேண்டும். சுதந்திரமாக நடமாட வேண்டும். எனக்குப் பிறக்கப் போகும் மகன்கள் அதர்மத்தை எதிர்த்துப் போராடும் போருக்குத் தலைமை வகித்து நடத்துவார்கள்; அதில் வெற்றி காண்பார்கள். தங்கமும், வெள்ளியும், சர்வசாதாரணமாக இறைபட வேண்டும். தேவைப்பட்டவர்கள் தங்கள் தேவைக்கு எடுத்துச் செலவு செய்ய வசதியாக இருக்க வேண்டும். அனைவருக்கும் விநியோகிக்க வேண்டும். கோயில்களில் நல்ல முறையில் எல்லாக் காலங்களிலும் வழிபாடுகள் நடந்து கோயிலின் கடவுளர் மட்டுமின்றி அவற்றின் தலைமைப் பூசாரிகளும் நல்ல முறையில் நம்மை வழிநடத்த வேண்டும். என்னால் முடிந்தால் பலஹீனமாய் இருக்கும் ஆரிய இனப் பெண்கள், ஆண்கள் அனைவரையும் வலுவுடன் உள்ளவர்களாய் பலத்துடன் உள்ளவர்களாய் மாற்றிக் காட்டுவேன்.”

“நீ என்ன நினைக்கிறாய் என்பதும், உனக்கு எது வேண்டும் என்பதும் நான் நன்கறிவேன் பீமா! அதனால் தான் உன்னைத் தேடி இங்கே வந்து உன்னுடம் இருக்க விரும்புகிறேன்.”

“அப்படி எனில் வா! கிளம்பு! அப்படி ஓர் நகரைத் தேடிச் செல்வோம்!”

“இரு பீமா! இரு! சற்றுப் பொறு! அவசரப்படாதே! முதலில் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை முடிவு செய்வோம். நம்மிடம் வெறும் நகரம் மட்டும் இருந்தால் போதுமா? அதில் வசிக்க வேதம் படித்த வேதத்தின் உட்பொருளை உணர்ந்து வாழ்க்கை நடத்தும் வேத பிராமணர்கள் தேவை! தைரியமும், மன உறுதியும் கொண்ட உண்மையாக நடக்கும் க்ஷத்திரியர்கள் தேவை! வியாபாரத்தில் ஈடுபட்டு நாட்டுக்கு உண்மையாக உழைத்துப் பெரும் செல்வம் ஈட்டி அதன் மூலம் பலருக்கும் பயன் கிடைக்கச் செய்யும் வைசியர்கள் தேவை! அவர்கள் மூலம் வியாபாரம் மட்டுமின்றி நிலம், குதிரைகள், கால்நடைச் செல்வங்கள் போன்றவையும் தேவை. இவற்றைப் பராமரிக்கும் ஆட்கள் தேவை. எல்லாவற்றுக்கும் மேல் மன உறுதியுடன் நம்முடன் வாழ்ந்து நம் குழந்தைகளைப் பெற்றெடுக்கத் தயாராக இருக்கும் வீரப் பெண்மணிகள் தேவை! இந்தக் குழந்தைகள் மூலம் நாம் புதியதொரு சமுதாயத்தை உருவாக்குவோம்.”  பீமனின் தோள்களைப் பிடித்த வண்ணம் கண்ணன் கூறினான்.

“ம்ம்ம், நமக்கு அனைத்தும் கிடைக்கும்! ஆனால் அதற்குக் கடும் முயற்சிகள் செய்யவேண்டும். காலம் நிறைய ஆகிவிடும்.” பெருமூச்சுடன் கூறிய பீமன் இவை எல்லாம் திடீர் என ஒரே நாளிலோ, ஒரே இரவிலே நடக்கக் கூடிய ஒன்றல்ல என்பதைப் புரிந்து கொண்டான்.

“பீமா! நாம் என்ன செய்தாலும் அதை நன்றாக, நிதானமாகப் பல முறை யோசித்துச் செய்ய வேண்டும். அதைச் சரியாகவும் செய்ய வேண்டும். நாம் காண்டவப்ரஸ்தத்தை ஒரு வருஷத்தில் கட்டி முடிப்போம். அதன் பின்னரே நான் துவாரகை செல்வேன்.”

“ஆனால், அது எவ்வாறு முடியும் கண்ணா? ஒரு வருஷத்தில் எல்லாம் திடீரென்று முளைத்து விடுமா?”

“நம்மால் முடியும்!உங்கள் ஐவரிடமும் துருபதன் கொடுத்த செல்வம் இருக்கிறது. அவன் உங்களுக்குப் பணிபுரியக் கொடுத்த வீரர் படை இருக்கிறது.  சீதனமாகக் கொடுத்த ரதங்கள், குதிரைகள், மாட்டு வண்டிகள், அவற்றுடன் உள்ள பொருட்கள், கால்நடைச் செல்வங்கள் அனைத்தும் உள்ளன. என் தரப்பில் நீ கவலையே அடைய வேண்டாம். யாதவர்கள் அனைவரும் தங்கள் அனைத்து வளங்களையும் உங்களுக்காக அர்ப்பணிப்பார்கள். மணிமான் அவனுடைய நாகர்களை உங்கள் நகர நிர்மாணத்திற்காக வேலைகள் செய்யவும், உதவிகள் செய்யவும் அழைத்து வருவான்.”

“ஆனால் அது மட்டும் எப்படிப் போதும்?”

“போதாது தான்! அதையும் நான் அறிவேன்! பீமா! நாம் நம்முடைய குலகுருவான வியாசரைச் சந்தித்து இதைக் குறித்துப் பேசி அவருடைய ஆசிகளைப் பெற்றாக வேண்டும். அது முக்கியம். அவருடைய ஆசிகள் இல்லாமல் எந்த ஒரு வேலையும் முற்றுப் பெறாது. நகரை நிர்மாணிக்கும் வரை அவரை நம்முடன் இருக்கச் செய்ய வேண்டும்.”

“ஆஹா! அது வேறா? அவர் எனக்கு ஆசிகள் அளிக்க மாட்டார். எனக்கு உதவவும் மாட்டார். எனக்கு மட்டும் தனியாக உதவுவாரா? மாட்டார்! எனக்குத் தெரியும்! அவர் நாங்கள் ஐவரும் சேர்ந்து தான் இதை ஒருமனதாகச் செய்ய வேண்டும் என்பார். என் மூத்தவன் ஆன யுதிஷ்டிரனை விட்டு விட்டு இதைச் செய்தால் நான் தர்மத்திலிருந்து பிறழ்ந்தவன் என்பார். அவன் இல்லை எனில் இந்த மாபெரும் வேலையில் அதர்மமே இருப்பதாகக் கூறுவார்.”

அப்போது கிருஷ்ணன் ஏதோ புதிதாக நினைவில் வந்தவன் போலத் தன் உதடுகளின் மீது விரலை வைத்து யோசித்தான். பின்னர், “திருதராஷ்டிரனை வசப்படுத்தி அவன் மூலம் ஹஸ்தினாபுரத்துச் செல்வங்களில் ஒரு பகுதி, குதிரைகள், கால்நடைச் செல்வங்கள், ஆட்கள் எனக் கேட்டு வாங்கினால் என்ன?” என்று கேட்டவனுக்கு அது சரியான யோசனையாகத் தோன்றவே பீமன் முதுகில் ஓங்கித் தட்டினான்! “ஆம் அது தான் சரி!  திருதராஷ்டிரனிடம் பேசி இதைச் செய்ய வைப்போம். உன்னுடைய கனவுகள் நனவாவதற்கு இதுவே சரியான சுலபமான வழி.”

ஆனால் பீமன் தலையை ஆட்டினான். “ம்ஹூம், பெரியப்பா எங்களுக்கு எதுவும் தர மாட்டார். தர அவருக்கு விருப்பம் இராது!” என்றான் சோகமாக.

கிருஷ்ணன் மீண்டும் யோசனையில் ஆழ்ந்தான். பின்னர் இந்தப் பிரச்னையிலிருந்து விடுபட ஓர் வழி கண்டு பிடித்தவன் போல் பேச ஆரம்பித்தான். “பீமா! நானே நேரில் போய் திருதராஷ்டிரனிடம் பேசி அவரை இவை அனைத்தையும் கொடுக்க வைக்கிறேன். நாம் கேட்பதெல்லாம் அவர் கொடுத்தாக வேண்டும்.” என்றான்.

“முட்டாள்தனமாகப் பேசாதே, கிருஷ்ணா! அவர் தன் நூறு மகன்களுக்காகவும், தன் பேரப்பிள்ளைகளுக்காகவும், மற்றும் ஹஸ்தினாபுரத்துக்காகவும் அந்தச் செல்வங்களை எல்லாம் காப்பாற்றிக் கொள்ளவே முனைவார்.”

“அப்படியா! சரி பார்க்கலாம்.” என்றான் கிருஷ்ணன். பின்னர் வேறு வழி கண்டு பிடிக்க முனைபவனைப் போல் யோசனையில் ஆழ்ந்தான். “இதோ பார் பீமா! நான் உனக்கு ஒரு வழியைக் காட்டுகிறேன். அது தான் நல்ல வழி. அந்த அரசன் திருதராஷ்டிரன் தாத்தா பீஷ்மரை மனம் நோகச் செய்யும்படி விட மாட்டார். அவர் மனம் சந்துஷ்டி அடைய வேண்டும் என்றே நினைப்பார்.. ஆகவே உன் சகோதரனை அரசனாக வேண்டாம் என்று சொல்ல யோசிப்பார். அதன் மூலம் பீஷ்மரின் வெறுப்பைச் சம்பாதிக்க நேரும் என்பதை அவர் அறிவார். ஆனால் அவருக்கு அதே சமயம் தன் மக்கள் அனைவரும் ஹஸ்தினாபுரத்தை ஆள வேண்டும் என்பதையே விரும்புகிறார். அதைச் செயலாக்கவே விரும்புகிறார். அவர் எண்ணத்துக்குத் தடையாக இருப்பது நீ ஒருவன் தான். உன்னைக் கண்டே அவர் அஞ்சுகிறார்.”

“ஆம், அது சரியே!”

“சரி, இப்போது நாம் போய் அவரிடம் சொல்வோம்: “துரியோதனனே ஹஸ்தினாபுரத்தை ஆளட்டும்! ஏனெனில் அவன் தற்கொலை செய்து கொள்வதை நாங்கள் விரும்பவில்லை! ஆகவே, நாங்கள் புதியதாக ஓர் சாம்ராஜ்யத்தைத் தேடிச் சென்று கண்டு கொண்டு புதியதொரு நகரை நிர்மாணிப்பதிலேயே ஆவல் கொண்டிருக்கிறோம். நாங்கள் செல்கிறோம். யமுனைக்கரையில் காடுகளை அழித்துக் காண்டவப்ரஸ்தத்தை நிர்மாணிக்கிறோம்.” என்று சொல்லலாம்.” என்றான் கிருஷ்ணன்,

Thursday, July 23, 2015

கனவு நகரம் நிர்மாணிக்கப் போகும் இடம்!

கிருஷ்ணன் தோள்களில் தன் கரங்களை அன்புடனும், ஆதரவுடனும் வைத்த பீமன், “கிருஷ்ணா! அந்தக் கனவு நகரை நாம் எவ்விதம் நிர்மாணிக்கப் போகிறோம்? நீ எல்லாவற்றையும் யோசித்து வைத்திருக்கிறாய் போல் இருக்கிறதே!” என்று கேட்டான். தன் தலையைத் தடவிக் கொண்டான் கிருஷ்ணன். பின்னர் யோசனையில் ஆழ்ந்தான். அதன் பின்னர் கனவில் பேசுவது போல் பேச ஆரம்பித்தான்.” நான் உன் இடத்தில் இருந்தால் ஹஸ்தினாபுரத்தில் இருந்து தொலைதூரத்தில் அந்த நகரை நிர்மாணிப்பேன்.” என்றான். “நீ சொல்வது சரியே கிருஷ்ணா! துரியோதனனின் நிழல் கூட அங்கே விழக் கூடாது! அப்படி ஓர் இடம் தேர்ந்தெடுக்க வேண்டும்.” என்றான் பீமன்.

“யமுனையைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய்? யமுனையின் ஒவ்வொரு அலையையும் நான் நன்கறிவேன். நீர் மட்டம் எப்போது உயரும், எப்போது தாழும் என்பதிலிருந்து, எப்போது வெள்ளம் வரும் நேரம், வடியும் நேரம் என அனைத்தும் அறிவேன்.  நான் யமுனையிடம் மிகுந்த அன்பு செலுத்துகிறேன். யமுனையின் கரையில் உள்ள காடுகள் அனைத்தும் எனக்குப் பழக்கமானவை. அதன் ஒவ்வொரு செடியையும், மரத்தையும் நான் நன்கறிவேன். ஒவ்வொரு மூலை முடுக்கையும் நன்கு கவனித்து வைத்திருக்கிறேன்.”

“கிருஷ்ணா, கிருஷ்ணா! நீ சொல்வதைப் பார்த்தால் மத்ராவை மீண்டும் நிர்மாணிக்கச் சொல்கிறாய் எனத் தோன்றுகிறதே! அப்படியா?” என்றான் பீமன்.

“ஆஹா! அது எங்கனம்? அது யாதவர்களின் நகரம்! நான் பாண்டுவின் குமாரர்களுக்கென ஒரு தனி நகரத்தை நிர்மாணிக்கச் சொல்கிறேன்.”

“ஆனால் அது எங்கே அப்பா?”

“ம்ம்ம்ம், என்னிடம் மணிமான் ஓர் விஷயம் சொன்னான். உன்னுடைய முன்னோர்கள் ஒரு சமயம் காண்டவப்ரஸ்தம் என்னும் பகுதியில் வசித்திருக்கிறார்கள். அதை மணிமான் என்னிடம் உறுதி செய்தான். இப்போது அது நாடாக இல்லை. காடாக உள்ளது. “

“கிருஷ்ணா, எனக்குள் மீண்டும் சந்தேகம் முளை விட்டு விட்டது! நீ உண்மையாகவே சொல்கிறாயா? அல்லது என்னை முட்டாள் ஆக்கப் பார்ர்க்கிறாயா?” ஆனால் இதைச் சொன்னபோது அவன் சிரித்த விதத்தில் இருந்து அவன் கிருஷ்ணனைச் சீண்டுவதற்குக் கேட்கிறான் என்பதும் அவனுக்குக் கிருஷ்ணனிடம் முழு நம்பிக்கை வந்து விட்டதும் புரிந்தது.

“என் பேச்சுக்கு ஒப்புக் கொள் பீமா! நான் உன்னுடனும் நம் நண்பர்கள் அனைவருடனும் வருகிறேன். ஒரே வருடத்திற்குள் நாம் அனைவருமாக அங்குள்ள காட்டை அழித்து நகரை நிர்மாணிப்போம்.”

“கிருஷ்ணா, அப்படி எனில் எனக்கு உன் முழு மனப்பூர்வமான சம்மதத்தைக் கொடு! அப்படிச் செய்வதாக உறுதி மொழி கொடு!” என்று தன் வலக்கையை அவன் முன் நீட்டினான் பீமன். “ஓஹோ,, பீமா! நான் சத்தியம் செய்கிறேன்!” என்ற வண்ணம் அவன் கரங்களில் ஓங்கி அடித்துத் தன் உறுதிமொழியைத் தந்தான் கிருஷ்ணன். துவாரகையைக் கட்ட யாதவர்களுக்கு எப்படி உதவினேனோ அவ்வாறே உனக்கும் நான் உதவுவேன். ஆனால் ஒரு விஷயம் பீமா! இதை உன் நன்மைக்காக மட்டும் நான் செய்யவில்லை. இதில் என் நன்மையும் அடங்கி உள்ளது. ஏனெனில் நான் இப்படிச் செய்யவில்லை எனில் ஆர்யவர்த்தத்தில் நான் தோற்றவனாகவே கருதப்படுவேன். ஆர்யவர்த்தத்தில் எபோதும் தர்மத்தின் ஆட்சியே நடைபெறவேண்டும். இல்லை எனில் மனிதன் தடம் புரண்டு விடுவான். இவ்வுலக மனிதர்களைக் காப்பாற்ற ஆர்யவர்த்தத்தில் தர்மத்தின் ஆட்சி நடைபெற்றால் தான் முடியும். வரும் நாட்களில் இது தான் இந்த பாரத வர்ஷத்தையே காத்து நிற்கும்.”

“ஓ, இதற்காகவே, இதை நிறைவேற்றவே நீ உயிர்வாழ்கிறாயா கிருஷ்ணா? உன் வாழ்க்கையின் லட்சியமே இது தானா?” என்ற பீமனுக்கு அப்போது தான் அகோரியின் குடிசைக்குச் சென்றிருந்தபோது அகோரியின் உடலில் ஆக்கிரமித்திருந்த தேவி மாதா சொன்னது நினைவில் வந்தது. கிருஷ்ணனின் பிறப்பையும் அவன் எதற்காக வாழ்ந்து வருகிறன் என்பதையும் தேவிமாதா சொன்னவை எல்லாம் அப்போது பீமன் நினைவு கூர்ந்தான். அவனுக்குள்   கிருஷ்ணன் பால் பிரமிப்பும், பக்தியும் பெருகின.  கிருஷ்ணனும் அவன் சொன்னதை ஆமோதித்தான்.

“ஆனால் நீ காண்டவப்ரஸ்தத்தை நகராக நிர்மாணிப்பதன் மூலம் உன்னுடைய லட்சியத்தை நிறைவேற்றியவன் ஆவாயா?” என்று கேட்டான் பீமன்.

“ஆம், நான் நிறைவேற்றியவன் ஆவேன்!” என்றான் கிருஷ்ணன். அவன் கண்களில் ஓர் ஒளி தோன்றியது. அந்த ஒளியினால் கிருஷ்ணன் முகமே பிரகாசம் ஆனது. “இந்த ஆர்யவர்த்தத்தின் எதிர்காலமே நீங்கள் ஐவரும் நடத்தப் போகும் தர்மத்தின் ஆட்சியில் தான் உள்ளது. உங்கள் நல்லாட்சியில் தான் ஆர்யவர்த்தம் தழைக்க வேண்டும்.” என்றான் கிருஷ்ணன்..

Wednesday, July 22, 2015

கனவு நகரம் நிர்மாணிக்கக் கிருஷ்ணன் உதவுகிறான்!

கிருஷ்ணன் முழு மனதோடு பேசுவதைக் கண்ட பீமனுக்கு உண்மையிலேயே ஆச்சரியமாக இருந்ததோடு அல்லாமல் கொஞ்சம் சந்தேகமும் ஏற்பட்டது. “உண்மையாகத் தான் சொல்கிறாயா, கிருஷ்ணா!” என்று மாறாச் சந்தேகத்துடன் கேட்டான் “நீ உன்னுடைய தந்திர வேலைகளைக் காட்டுகிறாய் என எண்ணுகிறேன்.” என்று மேலும் கூறினான். கிருஷ்ணன் அவனையே பார்த்து, “நான் தந்திர வேலைகள் செய்வதாக நீ நினைத்தால்! உன் வழியே செல்! அதோ உன் வழி! தெளிவாக இருக்கிறது. நீ என்னுடைய அத்தை வழி மூத்த சகோதரன். உனக்கு நான் கெடுதல் செய்வேனா? பீமா! உன் ஆயுதங்களை எடுத்துக் கொள்! உன் தண்டாயுதத்தால் என் மண்டையை உடைத்துவிடு! அது தான் நல்லது! இதோ பார் பீமா! நீ என்ன நினைக்கிறாய்! உன் மனதில் இருப்பது என்ன என்பதை நான் புரிந்து கொண்டு விட்டேன். ஆகவே நீ உன்னுடைய கனவு நகரத்தை நிர்மாணிக்க உனக்கு உதவிகள் செய்யத் தீர்மானித்தேன்.” என்றான் கிருஷ்ணன்.  அவன் பேச்சில் இருந்த உண்மையைப் புரிந்து கொண்டான் பீமன். அவன் இதையே நினைத்துக் கொண்டிருந்து இருக்கிறான் என்பதையும் தெரிந்து கொண்டான். ஆகவே உண்மையாகவே கிருஷ்ணன் அவனுக்கு உதவி செய்யும் நோக்கத்தில் தான் இருப்பதையும் அறிந்தான். தன் உள் மனதில் இருந்த எண்ணத்தை அவன் கண்டு கொண்டே தனக்குப் பாராட்டுகள் தெரிவிப்பதையும் உணர்ந்தான்.

“நீ எப்படியோ என் மனதைப் படித்து விட்டாய்! ஆம், கிருஷ்ணா! உண்மையாகவே நான் புதியதொரு நகரத்தை நிர்மாணிக்க எண்ணுகிறேன்.” என்றான் பீமன். “தெரியும், பீமா! நீ ஹஸ்தினாபுரத்தை விட வலுவாக, பலம் உள்ளதாக ஓர் சாம்ராஜ்யத்தையும், நகரத்தையும் நிர்மாணிக்க எண்ணுகிறாய்! அங்கே ஆட்சி செய்ய எவ்வித இடையூறுகளும் எந்தப்பக்கமிருந்தும் வரக் கூடாது என்றும் நினைக்கிறாய். நீ நினைப்பது சரியே! அப்படி ஓர் நகரம் நிர்மாணிக்கப்பட்டால் அது கடவுளரின் சொர்க்கமாகவே இருக்கும்.” என்று சொன்ன கிருஷ்ணன் கைகள் பீமனின் தோள்களில் படிந்திருந்ததே தவிர அவன் பார்வை தூரத்தில் எங்கோ பார்த்த வண்ணம் அவன் கனவுலகில் இருப்பது போல் காட்சி தந்தது.

“ஆம், ஓர் கனவு நகரம், கடவுளரின் சொர்க்கம்! மரங்கள் வீதி ஓரங்களில் செழிப்பாக வளர்ந்து நிழல் கொடுத்துக் கொண்டு காற்றில் கர்வம் பொங்கத் தலையாட்ட வேண்டும். எண்ணிலடங்காப் பழங்கள் நிறைந்த மாந்தோப்புக்கள் இருக்க வேண்டும். தோட்டங்கள், நீரூற்றுக்கள், உல்லாசப் பூங்காக்கள், ஆங்காங்கே அவற்றில் பயமோ, கவலையோ இன்றி இளைப்பாறும் மக்கள்… குளங்கள், தாமரை பூத்திருக்க வேண்டும். மீன்கள் அங்குமிங்கும் நீந்தித் திரிய வேண்டும். குளக்கரைகளில் மக்கள் தாமரைகளைப் பறிக்கவும் மீன்களுக்கு உணவிடவும் வேண்டும். “ கிருஷ்ணன் சற்றே நிறுத்தினான். பீமன் தன் தலையை ஆட்டிச் சம்மதம் தெரிவித்தான். கிட்டத்தட்ட அவன் கனவு கண்ட அதே பாணியில் ஓர் நகரம். இதைத் தான் அவன் பல நாட்களாய்க் கனவு கண்டு வந்தான்.

மேலும் கிருஷ்ணன் பேசிக் கொண்டிருந்தான்:” ஒவ்வொரு வீட்டிலும் பூக்கள் நிறைந்த பூந்தோட்டம் இருக்க வேண்டும்.  ஆங்காங்கே தாழ்வாரங்களில் எல்லாம் நிழல் தரும் மரங்கள் நிழல் கொடுத்த வண்ணம் இருக்கவேண்டும். உங்கள் ஐவரின் வீர, தீர, சாகசங்களை வெளிப்படுத்தும் பற்பல வண்ண ஓவியங்களைத் தீட்டி அனைவர் வீடுகளிலும் மாட்டி இருக்க வேண்டும். உங்கள் புகழ் பாரெங்கும் பரவ வேண்டும்.”

பீமன் அகல விரிந்த கண்களோடு ஆச்சரியம் ததும்ப அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்தான். அவன் அவ்வப்போது தலையை ஆட்டிச் சம்மதம் தெரிவித்த விதம் அவன் அப்போதே அம்மாதிரியானதொரு நகரத்தைத் தன் மனக்கண்களால் கண்டு களிக்கிறான் என்பதை வெளிப்படுத்தியது. கிருஷ்ணன் வர்ணித்த விதம் பீமன் மனதை மிகவும் கவர்ந்தது. ஆகையால் அவன் பேச்சுக்கு எந்தவிதமான இடையூறும் செய்யாமல் வாய் பேசாமல் கேட்டுக் கொண்டு வந்தான் பீமன்.

கிருஷ்ணன் தொடர்ந்தான்:” நூற்றுக்கணக்கில் பசுக்கள், அவையும் குடம் குடமாகப் பால் அளிக்க வேண்டும். அழகான, வலுவான வேகமாக ஓடக்கூடிய குதிரைகள், அவற்றில் ஏறி அமர்ந்து நாம் போட்டி போட்டுக்கொண்டு குதிரைகளை ஓட்ட வேண்டும். பெரிய ரதங்கள், தங்கள் சக்கரங்களை உருட்டிக் கொண்டு தெருக்களில் ஓட வேண்டும். அவற்றில் வீராதி வீரர்கள், அதிரதிகள், மஹாரதிகள் போன்றோர் பயணம் செய்ய வேண்டும். நாம் நிர்மாணிக்கப் போகும் நகரத்திலும், சாம்ராஜ்யத்திலும் வசிக்கப் போகும் பிராமணர்கள் கற்பித்தலைத் தங்கள் முக்கியத் தொழிலாகக் கொண்டு அனைவருக்கும் தக்க கல்வி கற்பித்து வர வேண்டும். வேதங்களிலும், மற்றவற்றிலும் உள்ள விஷயங்களை எடுத்துச் சொல்ல வேண்டும்; க்ஷத்திரியர்கள் ஆன நாமோ அனைத்துத் தரப்பு மக்களையும் பாதுகாக்கும் ஏற்பாடுகளைச் செய்து கொண்டு அனைவரையும் பாதுகாக்க வேண்டும். க்ஷத்திரியர்களுக்கு முழு அதிகாரம் இருந்தாலும் துஷ்பிரயோகம் செய்யக் கூடாது. வைசியர்கள் வியாபாரத்தின் மூலம் சம்பாதிப்பதை நாட்டுக்குச் செலவு செய்வதோடு, தேவை உள்ளவர்களுக்கும், மற்றும் இல்லாதவருக்குக் கொடுப்பதையும் முக்கியக் கடமையாகக் கொள்ள வேண்டும். நீ எங்கு ஆட்சி புரிந்தாலும் அங்கே தர்மத்தின் ஆட்சி நடைபெறும்; நடைபெற வேண்டும்.”

கிருஷ்ணன் அளித்த இந்த ஒளிமயமான எதிர்காலக் கனவுகள், தன் கனவு நகரம் அப்போதே நனவாகி விட்ட குதூகலம் பீமனுக்கு. அவன் கண்ணெதிரே கிருஷ்ணன் விவரித்த காட்சிகள் அப்படியே அப்போது நடப்பவை போல் தோன்றின.. ஆகவே மேலும் பேசச் சொல்லிக் கிருஷ்ணனை ஊக்குவித்தான். கிருஷ்ணன் மேலும் தொடர்ந்து, “ அதோடு மட்டுமா? உன்னுடைய அரச மாளிகையில் மிக அழகான, உலகத்து அழகெல்லாம் திரண்டு வந்த ஓர் அரசகுல மங்கை ராணியாக இருப்பாள். தேவலோகத்து அப்சரஸ்களின் அழகெல்லாம் இவள் கால் தூசிக்குக் காணாது! அத்தனை அழகான அந்தப் பெண்மணி தன் அழகிய கண்களால் உன்னைக் கண்டு நாணத்துடன் சிரிப்பாள். பாண்டுவுடைய பேரன்மார்களுக்குத் தாயாக இருப்பாள். அவள் பெயர் ஜாலந்திரா!” என்று தன் ஜொலிக்கும் கண்களால் சிரித்த வண்ணம் கண்ணன் கூறினான்.  இதைக் கேட்டதுமே பீமன் முகத்தில் ஓர் ஒளி பிறந்தது. விவரிக்க ஒண்ணாத சந்தோஷத்துடன் அவன் கண்ணனைப் பார்த்து, “கோவிந்தா! உண்மையாகவா? இது எல்லாம் நடக்குமா? நீ இதில் தீவிரமாக இருக்கிறாயா?”

“ஆம், நான் இதில் தீவிரமாக இருக்கிறேன். அப்படி ஒரு நகரை நீ நிர்மாணிக்க அனைத்து யாதவர்களையும் இதில் ஈடுபடுத்துகிறேன். குதிரைகள், பசுக்கள், கால்நடைச் செல்வங்கள், ரதங்கள், ஆயுதங்கள், தேவைப்பட்டால் தங்கக் கட்டிகள்! எது ஆனாலும் தரத் தயாராக இருக்கிறோம்.” “கோவிந்தா, கோவிந்தா! உண்மையாகச் சொல்கிறாயா? நீ இதில் நிச்சயமாக இருக்கிறாயா? உன்னுடைய இந்த வாக்குறுதியை நீ நிச்சயமாய் நிறைவேற்றுவாயா? அதில் உறுதியாக இருக்கிறாயா?”

“இதோ பார் பீமா! என் அருமைத் தந்தை நேர்மையும், நீதியும் வடிவான வசுதேவர் மற்றும் அவர் மனைவியான என்னைப் பெற்ற தாய் தேவகி இவர்கள் இருவர் மேலும் ஆணையிட்டுச் சொல்கிறேன். நான் சொன்னதை நிறைவேற்றுவேன்! நானும், பலராமனும் மட்டும் முன்னர் ஓர் நகரை நிர்மாணிக்க வேண்டி இருந்தது. ஆனால் இப்போது நாங்கள் அனைவரும் உங்களுடன் சேர்ந்து அப்படி ஒரு நகரை நிர்மாணிக்க உதவுகிறோம்.”

“ஆஹா! என்ன அருமை! அற்புதம்!” என்றான் பீமன். அவன் கோபம், ஆத்திரம், தாபம், வெறுப்பு அனைத்தும் போன இடம் தெரியவில்லை. பறந்து ஓடி  விட்டது. அவன் சந்தேகங்கள் போன இடம் தெரியவில்லை. “துரியோதனன் யுவராஜாவாக இருக்கும் நகரம் வசிக்க லாயக்கற்றது. அங்கே வசிக்க முடியாது! அதனால் தான் நான் பானுமதிக்கு வாக்களித்தேன். துரியோதனனே ஹஸ்தினாபுரத்தை ஆளுவான் என்னும் வாக்குறுதியை அளித்தேன்.” என்றான் கிருஷ்ணன் அமைதியாக.  பீமனுக்கு ஆச்சரியத்துக்கு மேல் ஆச்சரியம்.

“கிருஷ்ணா, கிருஷ்ணா! இவை அனைத்தையும் நீ என் பொருட்டு யோசித்து வைத்திருக்கிறாய்! ஆஹா! என்ன ஆனந்தம்! ஏன் முதலிலேயே நீ இதைக் கூறவில்லை! என்னுடைய முடிவில்லாத சங்கடங்களை எல்லாம் முதலிலேய்யே தீர்த்திருக்கலாமே! “ என்றான் பீமன்.

“ம்ம்ம்ம்ம். நான் அவ்வளவு வேகமாக யோசிப்பவன் அல்ல! மெல்ல மெல்லத் தான் யோசித்து முடிவெடுப்பேன். மக்களிடமும் மெதுவாகக் கொண்டு சேர்ப்பேன்.”தன்னைத் தானே சுய விமரிசனம் செய்யும் பாணியில் கூறினான் கிருஷ்ணன். மன்னிப்புக் கேட்கும் பாவனையில் புன்னகையும் செய்தான். அதைப் பார்த்த பீமனுக்கும் சிரிப்பு வந்து விட்டது. “கிருஷ்ணா! என் கனவு நகரை நான் நிர்மாணிக்கையில் நீ என்பக்கம் நின்று தோளோடு தோள் கொடுத்து உதவுவாய் அல்லவா?” என்ற வண்ணம் பீமன் அன்பாகத் தன் கரங்களைக் கிருஷ்ணன் தோள்களில் வைத்தான்.

“நான் உன் பக்கம் நின்று உதவிகள் செய்வதோடு நின்றுவிட மாட்டேன், பீமா! என்னோடு சேர்த்து அனைத்து யாதவர்களையும், மற்றும் நாகர்களையும் சேர்த்து உனக்கு உதவச் செய்வேன். இந்த பூவுலகே கண்டு களிக்கும் வண்ணம் ஓர் அற்புத நகரை நாம் நிர்மாணிப்போம்.” என்றான் கிருஷ்ணன்.