Friday, July 15, 2016

மஹாராணிக்கு வரவேற்பு! வாடிகாவுக்குத் தவிப்பு!

மஹா அதர்வர் சிரித்தார். “காலம் மாறி விட்டது ஐயா! நிச்சயமாய் மாறி விட்டது. மதிப்புக்குரிய மஹா முனிவர் வசிஷ்டரின் கொள்ளுப் பேரனுக்கு என் பெண்ணை நான் திருமணம் செய்து கொடுப்பேன் என்று சிறிதும் நினைக்கவே இல்லை!” என்றார். அதன் பின் அனைவரும் அவரவருக்கு என உரிய இடங்களுக்குச் சென்று ஓய்வு எடுத்தனர். யக்ஞம் சிறப்பாக நடைபெறச் செய்ய வேண்டிய ஏற்பாடுகள் குறித்துக் கலந்து ஆலோசித்தனர். மறுநாள் காங்கேயர் நான்கு குதிரைகள் பூட்டிய ரதத்தில் வந்து சேர்ந்தார். ஆஜானுபாகுவான உடலோடும் கண்ணியமான கௌரவமான முகத் தோற்றத்தோடும், பிரகாசமான ஒளி பொருந்திய புத்திசாலித்தனத்தை வெளிப்படுத்தும் கண்களோடும் காணப்பட்ட அவரைப் பார்க்கையிலேயே இவர் பிறவியிலேயே அரசனாக அனைவரையும் கட்டி ஆள்பவராகப் பிறவித் தலைவராகப் பிறந்திருக்கிறார் என அனைவரும் நினைத்தனர். அவர் ஆசாரியர்களைக் கண்டதும் ரதத்தை நிறுத்தி அதிலிருந்து இளவயதுக்கே உரிய சாகசத்துடனும், லாகவத்துடனும் குதித்து அனைவரையும் வணங்கினார். ஆசாரிய விபூதி, ஷௌனக், கௌதமர் மற்றும் த்வைபாயனர் ஆகியோரின் கால்களில் விழுந்து வணங்கிவிட்டு மற்றவர்க்குக் கை கூப்பி நமஸ்காரங்களைத் தெரிவித்தார்.

அவரை வரவேற்க வந்த மக்கள் அனைவரும் ஓர் ஊர்வலமாக அவருடைய முகாமுக்கு அவரை அழைத்துச் செல்லக் காத்திருந்தார்கள். அவர்கள் அங்கிருந்து கிளம்பும் முன்னர் த்வைபாயனரைப் பார்த்து, “எங்களுக்கெல்லாம் நீர் ஓர் ஆச்சரியத்தை வைத்திருக்கிறீர் எனக் கேள்விப் படுகிறேன். எங்கே உங்கள் மனைவி?” என்று கேட்டார். த்வைபாயனர் வாடிகவைச் சுட்டிக் காட்டினார். காங்கேயர் வாடிகாவின் அருகே வந்து சற்றே நின்று விட்டு அவளைப் பார்த்துப் புன்னகை புரிந்தார். “உன் கணவன் உன்னைவிடப் புத்திசாலியாக ஆகிவிடப் போகிறான். அவன் கல்வியில் கொஞ்சம் கவனம் வை!” என்று விளையாட்டாக எச்சரித்தார். காங்கேயரின் ரதத்தைத் தொடர்ந்து சித்திராங்கதனும், விசித்திர வீரியனும் வந்த ரதம் வந்தது. சித்திராங்கதனே ரதத்தை ஓட்டி வந்தான். இருவரும் கீழே இறங்கி அனைத்து ஆசாரியர்களுக்கும் தங்கள் வணக்கத்தைத் தெரிவித்தனர். வாஜ்பேய யக்ஞம் தொடங்குவதற்கு இரு தினங்கள் இருக்கையில் மஹாராஜா ஷாந்தனு தன் மனைவி சத்யவதியோடு அணிமணிகளாலும் பட்டுப் பீதாம்பரங்களாலும் அலங்கரிக்கப் பட்ட யானையின் மேல் தங்கத் தகடுகள் வேயப்பட்ட அம்பாரியில் அமர்ந்து கொண்டு வந்தான். அவர்களைச் சுற்றி ஏராளமான வில்லாளிகளும் ஊழியர்களும் தொடர்ந்து வந்தனர்.

மஹாராஜாவுக்குப் பயணக் களைப்பு ஏற்படாமல் இருக்கவும், அவருடைய உடல் நலம் கருதியும் பயணம் சிறு சிறு கட்டங்களாகப் பிரிக்கப்பட்டு ஆங்காங்கே தங்கி இளைப்பாறி மேலே தொடர்ந்தது. மஹாராஜா படுத்த வண்ணமே பயணிக்க வசதியாக அந்த அம்பாரி தயாரிக்கப்பட்டிருந்தது. அவர்கள் வந்து சேர்ந்ததும் யானை தன் கால்களை மண்டியிடப் பல்லக்காக மாற்றப்பட்டிருந்த அம்பாரி யானையின் முதுகிலிருந்து மெல்ல மெல்ல எடுக்கப்பட்டது. இளவரசன் காங்கேயனும், மஹாராணி சத்யவதியும் துணை செய்ய மன்னன் மெல்ல மெல்ல அம்பாரியிலிருந்து கீழே இறங்கினான். அப்போது அங்கே வாடிகாவும் இருந்தாள். அவள் கண்களில் மஹாராணி சத்யவதியைத் தவிர வேறு யாரும் படவில்லை. சத்யவதியைப் பார்த்ததும் தான் ஏன் இன்னமும் மயக்கம் போட்டு விழவில்லை என்று அவள் நினைத்தாள். தள்ளாடினாள். மயங்கி விடுவோம் என்றே நினைத்தாள். எத்தனை மெல்லிய உடல்! எத்தனை நளினம் அதில்! இளமை ததும்பும் அவள் தோற்றம்!  தேனைப் போன்ற அடர்ந்த நிறத்தில் பளபளவென்று காட்சி அளித்த அவள் முகம், விசாலமான கண்கள், அவளுடைய நளினமான உடலை அலங்கரித்தத் தங்க, வைர ஆபரணங்கள், அங்கே அவள் தோன்றியதே மிகப் பகட்டாகவும் ஆடம்பரமாகவும் அனைவரையும் கவரும் வண்ணமும் இருந்ததாகத் தோன்றியது வாடிகாவுக்கு!

அவளும் பல்லக்கிலிருந்து இறங்கியதும் த்வைபாயனர் அவள் பக்கம் திரும்பினார். தாயைப் பார்க்கும் குழந்தையின் முகமே அவரிடம் காணப் பட்டது. வாடிகாவுக்கோ அவர் சிறு பிள்ளைத் தனமாக நடப்பது போல் இருந்தது. தன் தாயைப் பார்த்து அவர் புன்னகை புரிய தாயின் அன்போடும், பாசத்தோடும் சத்யவதியும் தன் மகனைப் பார்த்துப் புன்னகை புரிந்தாள். அவள் கண்களில் மகனின் மீதிருந்த பாசமும் மகனைக் குறித்த கர்வமும் ஒருங்கே காணப்பட்டன. எல்லா அரசர்களும் அரசிகளும் ரிஷிகள் முனிவர்களைப் பார்த்ததும் கீழே விழுந்து வணங்கும் வழக்கம் இருந்ததை ஒட்டி அவளும் த்வைபாயனரை விழுந்து வணங்கும் விதத்தில் சற்றே குனிந்தாள். அவள் முகத்தில் ஒரு பரிகாசமான சிரிப்பு காணப்பட்டது. இம்மாதிரித் தன் மகனைத் தானே கீழே விழுந்து வணங்குவது என்பது சிரிக்கக் கூடிய ஓர் விஷயமாகவே அவளுக்குத் தோன்றியது.

வாடிகா நினைத்தாள். இந்த மஹாராணி பயங்கரமான அழகுடன் காணப்படுகிறாள். அதோடு இல்லாமல் கவர்ச்சியாகவும் இருக்கிறாள். சற்றும் வெட்கமில்லாமல் பெண்களுக்கே உரிய அடக்கம் சிறிதும் இல்லாமல் தன் கணவனைப் பார்த்துச் சிரிக்கிறாளே! ம்ஹூம், இவள் இப்படியே இருந்தால் சரியாக இருக்காது. இவளுக்கு என உரியதைச் செய்தே ஆகவேண்டும். வேறு வழியில்லை. எதிரி சமாளிக்க முடியாத அழகுடன் இருக்கிறாள். த்வைபாயனர் மற்றும் அங்கு வந்திருந்த ஆசாரியர்கள், ஆசாரிய விபூதி, கௌதமர் முதலானோர் மஹாராஜாவுக்கும் மஹாராணிக்கும் மலர்களைத் தூவி ஆசிகளை பொழிந்தனர். மஹாராஜாவை வரவேற்கும் விதத்தில் சங்குகள் ஊதப்பட்டு பேரிகைகள் முழக்கப்பட்டன. வந்திருந்த மற்ற அரசர்களும் அங்கே வந்திருந்து சக்கரவர்த்தியையும் சக்கரவர்த்தினியையும் வரவேற்றுத் தங்கள் வணக்கத்தை தெரிவித்துக் கொண்டனர்.

வாடிகாவை சக்கரவர்த்தினிக்கு அறிமுகம் செய்து வைத்தார்கள். மஹாராணி அவள் முதுகில் மேல் அன்பாகத் தட்டிக் கொடுத்துவிட்டு அவளை மேலும் கீழும் பார்த்தாள். தன் மகனுக்குப் பொருத்தமானவளா என்பதே அவள் பார்த்ததின் பொருள். ஆனால் வாடிகாவுக்கோ அது பிடிக்கவே இல்லை. சக்கரவர்த்தினி வாடிகாவைப் பார்த்து, “நீ எங்களிடமிருந்தெல்லாம் த்வைபாயனனைத் திருடிக் கொண்டு விட்டாய்!” என்று தன் வழக்கமான கவர்ச்சிச் சிரிப்புடன் கூறிவிட்டு, “உன் கணவனை சந்தோஷப் படுத்துவதன் மூலம் நீயும் சந்தோஷம் அடைவாயாக!” என்று வாழ்த்தினாள். அனைவர் கண்களும் அவர்கள் இருவரின் மீதே இருந்தன. வாடிகாவுக்குக் கோபம் கொந்தளித்தது. மிகவும் கஷ்டப்பட்டு சக்கரவர்த்தினிக்குக் கடுமையாகத் தான் கொடுக்க நினைத்த பதிலை அடக்கிக் கொண்டாள். ஆனால் ஒரு விஷயம் நிச்சயமாகத் தெரிகிறது. இவளுக்கும் நம் கணவனுக்கும் இடையில் ஏதோ ஓர் புரிதல் இருக்கிறது. அது என்னவாக இருக்கும் என்பதை அவளால் கண்டறிய முடியவில்லை. பொறுத்திருக்கலாம். நல்லவேளையாக இவள் மேல் வசிய மந்திரம் ஏவுவதற்கான ஏற்பாடுகளைச் செய்து விட்டேன். என்று வாடிகா மகிழ்ச்சி அடைந்தாள். மன்னனையும் மஹாராணியையும் வரவேற்க வந்தவர்கள் அனைவரும் ஊர்வலமாக இருவரையும் அழைத்துச் சென்றனர். பெண்கள் வரவேற்புக்கு உரிய பாடல்களைப் பாடிக் கொண்டும் ஆடுபவர்கள் ஆடிக் கொண்டும் மன்னனையும் மஹாராணியையும் மீண்டும் பல்லக்கில் ஏற்றிச் சுமந்து கொண்டு வாஜ்பேய யக்ஞம் நடைபெறப் போகும் இடத்தின் அருகிலிருந்த முகாமுக்குக் கொண்டு சேர்த்தார்கள். எங்கும் கோலாகலமாக இருந்தது.

Thursday, July 14, 2016

எதிரிகள் சந்திப்பு!

வாடிகாவும் மிகவும் தர்மசங்கடமானதொரு நிலையில் இருந்தாள். அவள் மனமும் ஒரு நிலையில் இல்லை. இந்த ஏற்பாடுகள் செய்வதில் சிறிதும் தொய்வு இல்லை. கொஞ்சம் ஓய்வு கிடைத்தால் நல்லது என்னும் எண்ணம் வாடிகாவிடம் இருந்தாலும் அவள் தகப்பனின் சம்மதம் இல்லாமல் யாரும் வேலைகளை நிறுத்தப் போவதில்லை. அவள் தந்தையோ எல்லாவற்றிலும் ஊக்கமும், வேகமும் காட்டி வந்தார். பிரச்னைகள் வந்தாலும் சமாளிக்கும் திறனுடன் இருந்தார். இந்த வாஜ்பேய யக்ஞத்தை முழு அளவில் சிறப்பாக நடத்தி அதை வெற்றி அடையச் செய்வதில் தன் மனதை முழுவதும் ஈடுபடுத்தி இருந்தார் மஹா அதர்வர்! அதோடு இல்லாமல் த்வைபாயனரின் பெயர் வருங்காலத்தில் முனிவர், ரிஷிகளின் பெயர்களைச் சொல்லும்போது சிறப்பான இடத்தில் முன் வரிசையில் இடம் பெற்றிருக்க வேண்டும் என்னும் எண்ணமும் அவரிடம் இருந்தது. மஹா அதர்வர் நட்புப் பாராட்டுவதில் வல்லவராக இருந்தது போலவே பகைமை பாராட்டுவதிலும் முன்னணியில் இருந்தார். அவர் ஒரு முனிவராக இருந்தமையால் இந்த வாஜ்பேய யக்ஞத்தில் பிரம்மனாக வீற்றிருக்க அவரால் முடியாது என்று அறிவித்து விட்டார். ஆயினும் அவருடைய முதன்மைச் சீடர்களில் ஒருவரான ஷௌனக் என்பவர் இந்த யக்ஞத்தின் பிரம்மனாக இருக்க வேண்டும் என்று விரும்பினார். ஆசாரிய விபூதி மறுநாளே வந்து சேர்ந்தார். மிக ஆடம்பரமாகவும் அமர்க்களத்தோடும் வந்தார். அவரைப் பல சீடர்கள் சூழ்ந்திருந்தனர். அவர்களில் நான்கு சீடர்கள் அவர் அமர்ந்து வந்த பல்லக்கைச் சுமந்து வந்தனர். அவரும் சந்தோஷமாக இல்லை. வேறு வழியில்லாமலேயே வந்திருந்தார். அவர் அங்கே ஓர் மோதலை எதிர்பார்த்தவராகத் தோன்றியது. ஏனெனில் மஹா அதர்வர் எக்காரணத்தைக் கொண்டும் அவரை அவமதிப்பார் என்று எதிர்பார்த்திருந்தார்.

ஆனால் ஆசாரிய விபூதி பல்லக்கை விட்டு இறங்கியதுமே த்வைபாயனர் தலைமையில் ஷௌனக்குடன் இன்னும் சில ஆசாரியர்கள் அங்கே வந்திருந்து விபூதியை வரவேற்றுத் தங்கள் பணிவான நமஸ்காரங்களைத் தெரிவித்தனர். அவரைப் பார்த்து த்வைபாயனர், “ஆசாரியருக்கு நல்வரவு. ஆயிரமாயிரம் வணக்கங்கள். இதோ இவர் தான் ஷௌனக் என்பார். மஹா அதர்வரின் முதன்மைச் சீடர். மஹா அதர்வர் தனக்கு மிகவும் வயதாகி விட்டதால் இந்த வாஜ்பேய யக்ஞத்தின் பிரம்மனாகத் தான் இருப்பது இயலாது என்று நினைக்கிறார். அவரால் இவ்வளவு பெரிய பொறுப்பை ஏற்க இயலாது. ஆகவே அவரிடத்தில் ஆசாரிய ஷௌனக் பிரம்மனாக வீற்றிருந்து யக்ஞத்தை நடத்தித் தருவார்.”

அவ்வளவு நேரமும் கடுகடுவென்றிருந்த ஆசாரிய விபூதியின் முகத்தின் கோபம் மெல்ல மெல்ல மறைந்தது. ஆஹா, இந்த ஷௌனக் தன்னை விடச் சிறியவன். மிகவும் சிறியவன். ஆகவே மஹா அதர்வர் தன்னை முந்திக் கொண்டு முன்னே சென்று அனைவர் மனதையும் வென்றுவிடுவார். தன்னைச் சிறந்த ஸ்ரோத்திரியராக நிலைநாட்டுவார் என்னும் பயம் இனி வேண்டாம். இவன் எனக்கு அடங்கி இருப்பான்! இவ்வாறு தனக்குள் நினைத்தார் ஆசாரிய விபூதி! த்வைபாயனர் மேலும் கூறினார், “மலை அடிவாரத்தில் மஹா அதர்வர் உங்கள் வருகைக்காகக் காத்திருக்கிறார்.” என்று கூறினார். ஆசாரிய விபூதிக்குத் திகைப்பு ஏற்பட்டது. இத்தகையதொரு மரியாதையை அவர் சிறிதும் எதிர்பார்க்கவே இல்லை. ஆகவே அவர் கோபம் தணிந்ததோடு அல்லாமல் இங்கே எல்லா விஷயங்களும் தான் விரும்பிய வண்ணமே நடப்பதால் இந்த யக்ஞத்தின் அத்வர்யூவாகத் தான் இருந்து யக்ஞத்தைச் சிறப்பாக நடத்தித் தர முடியும் என்றும் நம்பினார்.

மற்ற ஆசாரியர்கள் அனைவரும் ஆசாரிய விபூதிக்கு வணக்கங்களைச் சொல்லி அவரை வரவேற்றுக் கொண்டிருந்தனர். அவர் வந்த பல்லக்குக் காலியாக இருந்தது போலத் தான் அனைவரும் நினைத்தனர். ஆனால் அதிலே ஏதோ சலனம் ஏற்பட்டது. அனைவரும் பார்த்திருக்கையிலேயே ஓர் வயதான சுருங்கிப் போன முகம் அதிலிருந்து மெல்ல மெல்ல மேலெழும்பியது. ஒரு சிறு கூடான உடலைக் கொண்ட ஓர் வயதான மனிதர், வயதின் காரணத்தால் சுருங்கிய உடலோடும் மங்கிய கண்களோடும் காணப்பட்ட அவர் ஆசாரிய விபூதியின் தந்தை மஹாபிரமிஷ்டர். அவர் எழுந்து தன் மங்கிய கண்களால் நாற்புறமும் சுற்றிச் சுற்றிப் பார்த்தார். அனைவருக்கு ஆச்சரியம் ஏற்பட்டது. வேறு ஏதோ ஓர் உலகிலிருந்து இந்த மனிதன் வந்திருக்கிறானோ என்னும் எண்ணம் அனைவருக்கும் ஏற்பட்டது. அவர் தன்னுடைய கரகரத்த குரலில் மேலும் கத்தினார்; “த்வைபாயனா! த்வைபாயனா! எங்கிருக்கிறாய்?”

அப்போது ஆசாரிய விபூதி அனைவருக்கும் அறிமுகம் செய்து வைக்கும் பாவனையில், “இவர் என்னுடைய மதிப்புக்குரிய தந்தை. அனைவரும் மதிக்கும் பிரமிஷ்டர் என்னும் பெயருள்ளவர்!” என்று கூறினார். உடனே த்வைபாயனர் சுமாந்துவிடம், கிசுகிசுவென்ற குரலில், “சுமாந்து, உடனே ஓடிச் சென்று உன் தந்தையை அழைத்து வா! அவரிடம் மரியாதைக்குரிய பிரமிஷ்டரே நேரில் வந்திருப்பதைத் தெரிவி! அதோடு உன் தந்தை இங்கேயே வந்தாரெனில் அனைவரும் மிகவும் மகிழ்ச்சி அடைவார்கள்.” என்றார். அதன் பின்னர் பல்லக்கின் அருகே சென்ற த்வைபாயனர் பிரமிஷ்டரை வணங்கித் தன் மரியாதையைத் தெரிவித்துக் கொண்டார். அவர் த்வைபாயனரின் தலையைத் தொட்டு ஆசிகளை வழங்கினார். பின்னர் த்வைபாயனரின் காதைப் பிடித்துத் தன் பக்கம் இழுத்துக் கொண்டு, ரகசியமாகப் பேசுவதாக நினைத்துக் கொண்டு ஆனால் உரத்த குரலில் பேசினார். “த்வைபாயனா! உன் மனைவி எங்கே? அவளைக் கூப்பிடு இங்கே!” என்றார். த்வைபாயனர் பைலரை அழைத்து வாடிகாவைக் கூட்டி வரும்படி வேண்டுகோள் விடுத்தார். அவள் அங்கேயே பெண்கள் அமர்ந்திருக்கும் இடத்தில் சற்று மறைவாக அமர்ந்திருந்தாள்.

அங்கு வந்திருந்த ஒவ்வொரு ஆசாரியரும் பிரமிஷ்டரை வந்து வணங்கினார்கள். பைலர் அதற்குள்ளாக வாடிகாவைப் போய் அழைத்து வந்திருந்தார். அனைவருக்கும் எதிரே தான் வந்து நிற்கும்படி ஆகி விட்டதை நினைத்துக் கொண்டு வெட்கமுற்ற வாடிகா கொஞ்சம் நடுங்கிய வண்ணமே பல்லக்கின் அருகே சென்றாள். பிரமிஷ்டரை வணங்கினாள். அவளை முதுகில் தட்டிக் கொடுத்த பிரமிஷ்டர், “நீ அழகாக இருக்கிறாயா?” என்று வினவினார். அங்கிருந்த அனைவருக்கும் சிரிப்பை அடக்க முடியவில்லை. வெட்கம் அடைந்த வாடிகா பதிலே சொல்லாமல் மௌனமாக நின்றாள். “நீயும் ஒரு ஸ்ரோத்திரியரா?” என்று வினவினார் பிரமிஷ்டர். “ஆம், ஆசாரியரே!” என்றாள் வாடிகா. “அப்படியா? அப்போது உன்னை நான் எச்சரிக்கிறேன், பெண்ணே! நீ த்வைபாயனருக்கு ஒரு நல்ல மனைவியாக மட்டும் இருந்தாக வேண்டும். அதில் நீ தவறக் கூடாது. பொதுவாக ஸ்ரோத்திரியரான பெண்களால் நல்ல மனைவிகளாகப் பிரகாசிக்க முடிந்ததில்லை. அவர்கள் படிப்பினால் அவர்களுக்குப் பெருமையும், கர்வமும் ஏற்பட்டு விடுகிறது!” என்றார்.

அங்கே மீண்டும் அனைவரும் சிரிக்க வாடிகாவுக்குத் தான் அங்கேயே கீழே விழுந்துவிடுவாள் போல இருந்தது. அவள் வெட்கத்தினால் தலை நிமிரவே இல்லை. பின்னர் த்வைபாயனரை அழைத்த பிரமிஷ்டர, “உன் கையைக் கொடு த்வைபாயனா! நான் பல்லக்கிலிருந்து இறங்கப் போகிறேன்.” என்றார். த்வைபாயனரோ அவரைக் கிட்டத்தட்டப் பல்லக்கிலிருந்து தூக்கிக் கைகளில் அணைத்து எடுத்துக் கீழே இறக்கி விட்டுப் பிடித்துக் கொண்டார். அவருடைய நடுங்கும் கால்கள் நிலை பெற்று பூமியில் அவை நின்ற பிறகே அவரைத் தன் பிடியிலிருந்து விடுவித்தார். அப்படியும் அந்தக் கிழவர் தன் கைகளில் ஒன்றை த்வைபாயனரின் தோள் மேல் போட்டுக் கொண்டு அவரைப் பிடித்துக் கொண்டே நின்றார். ஆசாரிய விபூதிக்கோ தனக்கிருந்த முக்கியத்துவம் இப்போது குறைந்துவிட்டது போலவும் அனைவரின் கவனமும் தன் தந்தையிடம் திரும்பி விட்டதையும் கண்டுக் கொஞ்சம் வருத்தமும் கோபமும் ஏற்பட்டது. ஆனாலும் அவரால் ஏதும் செய்ய முடியவில்லை. அதோடு கௌதம முனிவரும், ஷௌனக்கும் அவரைக் கண்காணித்துக் கொண்டே இருந்தனர். என்னதான் அவர்கள் அவரிடம் மரியாதை காட்டினாலும் அவர்களுக்கு எதிரே தன் மனவேற்றுமையை அவரால் காட்டிக் கொள்ள முடியவில்லை.

அதற்குள்ளாக மஹா அதர்வரின் பல்லக்கு அவர்களை நெருங்கியது. மக்கள் கூட்டம் சற்றே விலகி பல்லக்கு அங்கே வர வழி ஏற்படுத்திக் கொடுத்தது. த்வைபாயனர் பிரமிஷ்டரைப் பல்லக்கின் அருகே கொண்டு செல்ல வேண்டி அவரைப் பிடித்துக் கொண்டு ஒரு சில அடிகள் எடுத்து வைத்தார். இந்த இரண்டு மஹா ஆசாரியர்களும் சந்திக்கப் போகும் அந்தக் கணத்துக்காக அங்கிருந்த அனைவரும் மூச்சைப் பிடித்துக் கொண்டு காத்திருந்தனர்.மஹா அதர்வரோ வாஜ்பேய யக்ஞம் நடைபெறாமல் வெற்றி பெறாமல் போய்விடக் கூடாது என்னும் எண்ணத்திலேயே இருந்தார். ஆகவே அதற்கு இடையூறாக எது வந்தாலும் அதைப் புறம் தள்ளும் மனப்பாங்கைப் பெற்றிருந்தார். பிரமிஷ்டரோடு அவருக்குப் பழைய பகை இருந்து வந்தது தான். அவர் மிகப் பெரிய வயதில் மிகவும் மூத்த ஸ்ரோத்திரியரும் கூட. ஆகவே அவர் வயதுக்கும் அனுபவத்துக்கும் தான் மரியாதை கொடுக்க வேண்டியது தான் நியாயம் என்பதை மஹா அதர்வர் உணர்ந்திருந்தார். எனவே சிறிதும் தயக்கம் இன்றிப் பல்லக்கை விட்டுக் கீழே இறங்கி பிரமிஷ்டரின் அருகே வந்து அவர் கால்களில் விழுந்து வணங்கினார். அனைவருக்கும் அப்போது தான் நிம்மதி ஏற்பட்டது. அனைவரும் ஒழுங்காக மூச்சு விட ஆரம்பித்தனர்.

பிரமிஷ்டரோ மஹா அதர்வரின் தோள்களைப் பிடித்துக் கொண்டு தன்னுடன் சேர்த்து அணைத்துக் கொண்டார். “ஜாபாலி, தர்மக்ஷேத்திரத்திலிருந்து உன்னால் விரட்டப்பட்டவர்களில் நானும் ஒருவன். இப்போது நீயே அதே தர்மக்ஷேத்திரத்துக்கு வந்து என்னை இங்கே வரவேற்கிறாய். இதற்காகவே நம்மைக் கடவுள் இத்தனை வருடங்களாக உயிருடன் விட்டு வைத்திருக்கிறார் என்று எண்ணுகிறேன். பிரிந்த நாம் ஒன்று சேரவேண்டும் என்பது கடவுளின் விருப்பம்.” என்றார்.

Tuesday, July 12, 2016

வாஜ்பேய யக்ஞத்துக்கான ஏற்பாடுகள்!

ஒரு சாமானியமான ஆரியனின் வாழ்க்கை தினந்தோறும் அந்தப் புனித அக்னிக்குண்டத்தைச் சுற்றியே அமைந்திருக்கும். சாஸ்திர சம்பிரதாயங்களிலும் சடங்கு முறைகளிலும் வேதங்களால் அங்கீகரிக்கப்பட்ட மூன்று வேள்விகள் மிக முக்கியமானவையாகக் கருதப்பட்டன. அவை அஸ்வமேத யாகம், ராஜசூய யாகம் மற்றும் வாஜ்பேய யாகம் ஆகியன. இந்த யாகங்களில் முறைப்படி அக்னிக் கடவுளும் ராஜா சோமனும் பல்வேறுவிதமாக வழிபடப்படுவார்கள். மிக விரிவான சடங்குகளைச் செய்து பல்வேறு விதமான தானங்களை முறைப்படி அளித்து இவை நிறைவேற்றப்படும். மேலும் இம்மாதிரியான சமுதாய வழிபாடுகளில், சடங்குகளில் ஆரியர்கள் மட்டுமின்றி நாகர்கள்,மற்றும் நிஷாதர்கள் கூடப் பங்கெடுத்துக் கொள்வார்கள். இவை சாதாரணமான திருவிழாக்களிலும், மற்ற சமயச் சடங்குகளிலும் செய்யப்படும் ஹோமங்களை விட மாறுபட்டுக் காணப்படும். இதை ஏற்று நடத்தும் எஜமானன் அங்கு வரும் அனைத்துவிதமான விருந்தினருக்கும் ஒரே மாதிரியான உணவளிக்கும் கடமையைக் கொண்டிருப்பான். அதைத் தவிரவும் அந்த விரிவான யாகங்களின் செலவுகளையும் முற்றிலுமாக அவன் ஏற்க வேண்டும். வந்திருக்கும் ஸ்ரோத்திரியர்களுக்கும் மற்ற அனைத்து விருந்தினர்களுக்கும் தக்கவாறு பரிசுகளை அளித்து கௌரவப் படுத்த வேண்டும்.

இதற்கு முன்னால் பரதச் சக்கரவர்த்தி அதாவது இப்போது ஹஸ்தினாபுரத்தில் இருக்கும் ஷாந்தனு மஹாராஜாவின் முன்னோர்களில் முக்கியமானவன் ராஜசூய யாகத்தை திறம்படச் செய்து நிறைவேற்றி இருந்தான். அவனுக்குப் பின்னர் இத்தகையதொரு மாபெரும் வேள்வியை ஷாந்தனு நடத்தப்போவதாக ஆர்யவர்த்தம் முழுவதும் செய்தி பரவியது. அதிலும் சாகக் கிடந்த ஷாந்தனுவை பால முனிவர் ஒரு உயிர்ப்பித்தார் என்பதும் ஓர் செய்தியாகப் பரவி இருந்தது. அந்த பால முனிவரின் தலைமையில் தான் இந்த மாபெரும் வாஜ்பேய யாகம் சித்திரை மாதம் சுக்கில பட்சத்தில் நடைபெறப் போவதாகத் தகவல்கள் ஆங்காங்கு பரவின. மேலும் இளவரசன் காங்கேயன் தானே நேரில் சென்று ஆரியவர்த்தத்தின் அக்கம்பக்கத்து அரசர்களையும், அரச குமாரர்களையும் சந்தித்து யாகத்தில் பங்கெடுக்க அழைப்பு விடுத்தார். அதிலும் இவ்வளவு நாட்களாக ஓநாய்கள் குடி இருந்து அட்டகாசம் செய்து வந்த ஓநாய்களின் சாம்ராஜ்யத்தில் இந்த யாகம் முதல் முதலாக நடைபெறப் போகிறது என்றால் அதன் சிறப்பைக் குறித்துச் சொல்லவும் வேண்டுமா! இது நிச்சயமாக ஓர் தனிப்பட்ட சிறப்பானதொரு நிகழ்வாகவே அமையப் போகிறது. இதன் அத்வர்யுவாக ஆசாரிய விபூதி தானே நேரில் கலந்து கொள்ளப் போகிறார். சாஸ்திரரீதியான சடங்குகளுக்கு அவரே தலைமை வகிக்கிறார். மேலும் அதிசயத்திலும் அதிசயமாக மஹா அதர்வர் நேரிலே வந்து கலந்து கொள்ளப் போகிறார். மூன்று வேதங்களையும் படித்தறிந்த திரிவேதிகளிடமிருந்தும் அனைத்து ஸ்ரோத்திரியர்களிடமிருந்தும் இவ்வளவு வருடங்களாக விலகி இருந்த மஹா அதர்வர் இந்த வாஜ்பேய யக்ஞத்தின் பிரம்மனாக இருக்கச் சம்மதித்து விட்டார். இது அதிசயம் அன்றோ! சுற்று வட்டாரங்களில் செய்தி பரவப் பரவக் கூட்டம் தர்மக்ஷேத்திரத்தை நோக்கிப் படை எடுத்தது.

மஹா அதர்வர் வர ஒத்துக் கொண்ட விஷயம் பெரும்பாலானவர்களுக்கு மகிழ்ச்சியைத் தந்தாலும் சிலருக்கு அது முகச் சுளிப்பையே தந்தது. அதிர்ச்சி அடைந்த அவர்கள் தங்கள் தலையை ஆட்டி மறுப்புத் தெரிவித்தார்கள். அவர்களால் திரிவேதிகளான ஸ்ரோத்திரியர்களுக்கும் நான்காம் வேதமும் அறிந்த அதர்வர்களுக்கும் இடையே மீண்டும் இணைப்பு ஏற்படுவதைச் சிறிதும் ஏற்க முடியவில்லை. இது சரியல்ல என்று தங்கள் மறுப்பைத் தெரிவித்தார்கள். வேதம் நான்கு பாகங்களால் ஆனது அல்ல. அது மூன்றே தான் என்பதே அவர்களின் ஒருமித்த கருத்து. ஆனாலும் பல்வேறு ஆசிரமங்களிலிருந்தும் ஸ்ரோத்திரியர்கள் அங்கே வந்த வண்ணமிருந்தனர். அவர்கள் இந்த விஷயத்தைக் குறித்து வாதித்து ஒரு முடிவுக்கு வர விரும்பினார்கள். மேலும் யாகத்தின் முடிவில் பூர்ண ஆஹூதி கொடுப்பது குறித்தும், தலைமை தாங்கி நடத்தும் ஆசாரியர்களைக் கௌரவிப்பது குறித்தும் பேசிக் கொண்டார்கள். அதோடு அல்லாமல் சமீப காலமாக மிகவும் பிரபலம் அடைந்து வந்த த்வைபாயனர் என்னும் பாலமுனியைக் கண்டு வணங்கி அவரின் ஆசிகளையும் பெற்றார்கள்.

மிகச் சிறப்பான ஆசிரமங்களின் ஆசாரியர்களும் அங்கே வந்து தங்கள் ஆசிரமத்தின் ஓர் கிளை அங்கே நிறுவப்பட வேண்டும் என்று விரும்பினார்கள். அவர்கள் ஆசிரமத்தின் ஸ்ரோத்திரியர்கள் வேதங்களை ஓதுவதில் வல்லவர்களாக இருந்தனர். ஆகவே யாகத்தில் பங்கெடுக்கும் ஆர்வத்தோடு வந்திருந்தனர். இன்னும் சிலர் அந்த யாகத்தின் போது கொடுக்கப்படும் தக்ஷிணைக்காகவே வந்திருந்தனர். அவர்களைப் பொறுத்தவரை தக்ஷிணையே முக்கியம். அதுவும் ஒரு சக்கரவர்த்தியால் நடத்தப்படும் யாகத்தில் தக்ஷிணை நிறையக் கிடைக்கும் என்பதே அவர்கள் எதிர்பார்ப்பு! நாட்கள் நெருங்க நெருங்க அக்கம்பக்கத்து அரசர்களும் தங்கள் படைகளோடு வர ஆரம்பித்தனர். அனைவரும் தங்குவதற்காகப் பெரிய பெரிய கூடாரங்கள் நிர்மாணிக்கப் பட்டன. அவை ஆடம்பரமாகவும் வலுவோடும் விளங்கின. சிறு வியாபாரிகள் ஆங்காங்கே சிறு சிறு கடைகளைப் போட்டுத் தங்கள் பிழைப்புக்கு வழி தேடினார்கள். பலி ஆடுகளை வளர்ப்போர் தங்கள் ஆடுகளுடன் அங்கே வந்தனர். ஆடுகள் நல்ல விலைக்குப் போகும் என்னும் எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர்.

ரிஷிகள் முனிவர்களுக்கான மான் தோலை எடுத்துக் கொண்டு வேட்டைக்காரர்கள் சுற்றிக் கொண்டிருந்தனர். அவற்றைப் பல தேசத்து அரசர்களும் போட்டி போட்டுக் கொண்டு வாங்கித் தங்கள் தங்கள் பகுதியில் இருந்த ஆசிரமத்தின் ஆசாரியர்களுக்கு அன்பளிப்பாக வழங்கினார்கள். அக்கம்பக்கம் கிராமங்களிலிருந்து ஏழை எளிய மக்கள் வந்து யாகத்துக்குத் தங்களால் ஆன சிறு உதவியைச் செய்து மகிழ்ந்தனர். அனைவரும் குடும்பத்தோடு வந்திருந்தனர். இதனால் பெண்கள் மிக மகிழ்ச்சி அடைந்தனர். வீட்டில் வேலைகள் இல்லை; இப்படி வெளியே வந்து உல்லாசமாகப் பொழுதையும் போக்கி அரசர்களால் அளிக்கப்படும் விருந்தை உண்டு மகிழ்ச்சியுடன் ஆடிப் பாடித் திரிய இது ஓர் அரிய சந்தர்ப்பம் அல்லவா! அதோடு பல ரிஷிகளையும், முனிவர்களையும் சந்தித்து அவர்கள் ஆசிகளையும் பெற முடிந்தது. திருமணம் ஆகாத பல பெண்களுக்கு அந்த ரிஷிகள் நல்ல கணவன் வாய்ப்பான் என்று ஆரூடம் சொன்னார்கள். அந்தப் பெண்கள் அதை நினைத்து மகிழ்ந்தனர். குழந்தை பிறக்காதவர்களுக்குப் புத்திர பாக்கியம் கிடைக்கும் என்றும் வாழ்த்தினார்கள்.

நடனம் ஆடும் வல்லுநர்கள், பாம்பாட்டிகள், குரங்காட்டிகள், மல்யுத்தக்காரர்கள் என ஒவ்வொருவரும் ஒவ்வொரு இடத்தில் தங்கள் கை வரிசையைக் காட்டி மக்களை மகிழ்வித்தனர். இவர்களோடு ஒரு சில பிச்சைக்காரர்களும் தவிர்க்க முடியாமல் கலந்திருந்தனர். அவர்களுக்கு இப்போதாவது தங்களுக்கு இலவசமாக அறுசுவை உணவு கிடைக்கிறதே என்று சந்தோஷம். யாரும் அழைக்காமலேயே அவர்கள் வந்திருந்தனர். குனிகர் அவர்களை எல்லாம் திருப்திப் படுத்தும் வேலையில் ஈடுபட்டிருந்தார். ஆரம்ப நாள் நெருங்க நெருங்க அரச மாளிகையிலிருந்து அரச விருந்தினர்கள் ஒவ்வொருவராக வர ஆரம்பித்தனர். மேலும் ஒரு சில அரச குடும்பத்தினரின் பிரதிநிதிகள் அங்கே முன்னரே வந்திருந்து தங்கள் எஜமானர்களுக்காகத் தங்குமிடம் ஏற்பாடு செய்தனர்.

இத்தனைக்கும் நடுவில் வாடிகா மனம் விரக்தியில் நம்பிக்கையற்றுக் காட்சி அளித்தாள். ஏற்கெனவே நாள் முழுவதும் போதாது என்று இரவிலும் நடு இரவு வரைக்கும் மக்கள் கூட்டமாக வந்து அவள் கணவனின் தரிசனம் வேண்டும் என்று வந்து கொண்டிருந்தனர். வந்தாலும் தரிசனம் கிடைத்தது என்று போய்விடுவார்களா? மாட்டார்கள்! அவரைச் சுற்றிக் கூடி நின்று கொள்வார்கள். சிலர் அவர் கால்களைப் பிடிப்பார்கள். பலரும் கைகளைப் பிடித்துக் கெஞ்சுவார்கள். அதிலும் நோயுற்றவர்கள் அனைவரும் அன்றே தங்கள் உடல்நிலை குணமடைய வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். மற்றவர்கள் அவர் கால்களில் விழுந்து ஆசிகளை வேண்டுவார்கள். அவர் தினமும் சிறு குழந்தைகளுக்கு உணவைப் பகிர்ந்து அளிக்கிறார் என்பதைக் கேள்விப் பட்டிருக்கும் குழந்தைகள் பலவும் அவர் கையால் உணவு வாங்கவென்று கூடிவிடுவார்கள். அவரைக் கவனிக்கவோ அவருடைய தேவைகளை நிறைவேற்றவோ வாடிகாவுக்கு ஒரு நிமிடம் கூடக் கிடைப்பது இல்லை. முழுக்க முழுக்க விருந்தாளிகளின் பிடியிலேயே அவர் காணப்பட்டார். இருந்தாலும் அவருடைய உடல்நிலை எப்படி இருக்குமோ, நேரத்துக்குச் சாப்பிட முடியவில்லை என்று கவலை கொண்டாலும் அவள் கணவனின் இந்தப் பிரபலமான தன்மையால் அவள் மனம் கர்வமே கொண்டது. காந்தம் இரும்பை ஈர்ப்பது போல் மக்களை அவள் கணவன் ஈர்க்கிறாரே! அவளுக்கு அதில் சந்தோஷம் தான்.

இந்த வாஜ்பேய யக்ஞத்தை மஹா அதர்வர் அவருடைய ஆரம்ப நாட்களில் பொறுப்பேற்று நடத்தி இருக்கிறார். அங்கிருந்தவர்களில் வாஜ்பேய யக்ஞம் குறித்து அறிந்தவர் அவர் ஒருவர் தான். அவருக்குத் தான் முழு விபரங்கள் தெரியும். ஆகவே அவருடைய வழிகாட்டலின்படி கௌதம ரிஷியும் மற்றச் சீடர்களும் யாகத்துக்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் குறைவின்றிச் செய்து வந்தனர். சித்திரை சுக்லபட்சத்தில் ஏழாம் நாள் ரதங்களில் அரச குடும்பத்தின் விருந்தினர்கள் ஒவ்வொருவராக வர ஆரம்பித்தனர். அவரவர் தகுதிக்கு ஏற்றாற்போல் ரதத்தில் தங்கம், வெள்ளி, செம்பு போன்ற உலோகங்களால் தகடுகள் வேயப்பட்டிருந்தது. அதைத் தவிரவும் ரதப் போட்டிக்காகத் தயார் செய்யப்பட்ட சக்தி வாய்ந்த குதிரைகளும் வந்தன. வாஜ்பேய யக்ஞத்தின் முக்கியமான அங்கமாக இந்த ரதப்போட்டி கருதப்பட்டது. தூதுவர்கள் ஹஸ்தினாபுரத்திலிருந்து வந்து ஆசாரிய விபூதி தன்னுடைய முக்கியச் சீடர்களுடன் மறுநாள் வந்து சேருவதாகத் தெரிவித்தனர். ஆசாரிய விபூதி அந்த நாட்களில் திரிவேத பாடசாலைகள், குருகுலங்கள் நடக்கும் கூட்டத்தின் மஹாத் தலைமை ஆசாரியராகக் கருதப்பட்டு வந்தார். ஆகவே அங்கே வந்திருந்த ஸ்ரோத்திரியர்களில் பலருக்கும் உள்ளூர அச்சமே ஏற்பட்டது. அனைவரும் ஓர் கலக்கத்துடனேயே மஹா அதர்வரும், ஆசாரிய விபூதியும் சந்திக்கப் போகும் அந்த நேரத்துக்குக் காத்திருந்தார்கள். இருவரும் ஒருவருக்கொருவர் பல்லாண்டுகளாக எதிரிகள். இப்படிப் பட்டப் பகையாளிகள் ஒன்று சேர்ந்து ஒரு மாபெரும் யக்ஞத்தை நடத்துவதா? எப்படி?

Monday, July 11, 2016

வாடிகாவின் எதிரி!

த்வைபாயனரின் ஸ்பரிசம் மென்மையாக இருந்ததோடு மட்டுமல்லாமல் அதில் இவள் தனக்குச் சொந்தமானவள் என்னும் இறுமாப்பான எண்ணம் வெளிப்படவில்லை. இவள் என் சொத்து என்னும் எண்ணம் நிச்சயமாகத் தெரியவில்லை. ஒரு தாய் தன் குழந்தையை எவ்வளவு மென்மையாகக் கையாளுவாளோ அப்படியே அவரின் ஸ்பரிசமும் இருந்தது. அவள் சொல்ல நினைப்பதைப் புரிந்து கொண்டவர் போல் அப்படியே அவர் நிறைவேற்றினார். அந்தப் பரவசமான பிரவாகம் போன்ற அன்பு வெள்ளத்தில் திக்குமுக்காடிக் கொண்டிருந்த வாடிகா தன்னை முழுவதும் அவருக்கு அர்ப்பணித்தாள். “என்னுடைய உடலுக்கு மட்டுமில்லாமல் உள்ளத்துக்கும் இவரே பிரபு! இவரே என் கடவுள்! நான் அவருடையவள்!” என்று தனக்குள்ளே முணுமுணுத்துக் கொண்டாள் வாடிகா. மேலும் கூறினாள். “வரலாற்றுக்கு முந்தைய அந்தக் காலத்தில் பௌலமி எப்படி பிருகு முனிவருக்கு மனைவியாக இருந்தாளோ அப்படியே இப்போது நான் உங்களுக்கு இருக்க விரும்புகிறேன்.” என்றாள். இருவரும் மகிழ்ச்சியில் ஆழ்ந்தனர்.

த்வைபாயனரிடம் மற்றொரு முக்கிய மாற்றத்தை வாடிகா கண்டாள். அது தான் மஹாராணி சத்யவதி குறித்துப் பேசும்போதெல்லாம் த்வைபாயனரின் மனமும் முகமும் மலர்ந்தது கண்டு அவள் அதிசயித்தாள். அவர் எதிரில் மஹாராணியின் பெயரைச் சொன்னாலே த்வைபாயனர் முகம் மலரும். இந்த விசித்திரத்தை அவளால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் அவள் புரிந்து கொண்டதெல்லாம் த்வைபாயனரால் திருமணத்தின் போது செய்து கொடுத்த சத்தியங்களை ஒருக்காலும் மீற முடியாது என்பதே! அப்படி மீறுவதை அவரால் நினைத்தும் பார்க்க முடியாது என்பதே! சில நாட்கள் சென்றன. ஹஸ்தினாபுரத்திலிருந்து மந்திரி குனிகர் அங்கே வந்தார். அவருடன் நிறையப் பணியாளர்கள் வந்தனர். சிலர் அவர்களுக்கு உதவி செய்யவும், வேறு சிலர் அவர்களைப் பாதுகாக்கவென வில், அம்புகள் என ஆயுதங்களைத் தாங்கியும் வந்தனர். ஒரு சில காட்டுவாசிகளும் வந்திருந்தனர். அவர்கள் வந்த உடனே மூங்கில் மரங்களை வெட்டி அனைவரும் தங்குவதற்காகக் குடில்கள் அமைக்கத் தொடங்கினர்.

குனிகர் கறவைப்பசுக்கள் நான்கை ஓட்டி வந்திருந்தார். அவற்றுடன் ஒவ்வொரு மாட்டையும் கவனிக்க ஓர் இடையனும் இருந்தான். அதைத் தவிர ஒரு பொலிகாளையும் இருந்தது. பசுக்களும் காளையும் சக்கரவர்த்தி சத்யவதியால்  வாடிகாவுக்குப் பரிசாக அனுப்பப் பட்டிருந்தது. பசுக்கள் எல்லாம் பஞ்ச கல்யாணி எனப்படும் மிகவும் அரிதான வகையைச் சார்ந்தது. அதன் தோல் கன்னங்கரேலெனப் பளபளவெனப் பிரகாசித்தது. அதன் உடலில் ஐந்து இடங்களில் புனிதமான சின்னங்கள் காணப்பட்டன. அதன் வாலில் வெள்ளை மயிர் குஞ்சலம் போல் காணப்பட்டது. பொலிகாளையும் நல்ல வளர்த்தியாகக் காணப்பட்டது. கொம்பினால் பூமியைக் கீறிக் கொண்டிருந்தது. இரண்டு இடையர்கள் அதைத் தனியாகக் கொண்டு வைத்திருந்தனர். வாடிகாவுக்கு மஹாராணியிடமிருந்து வந்த இந்தப் பரிசுகளை ஏற்கச் சிறிதும் விருப்பம் இல்லை. ஆனால் அதனால் அவள் கணவன் கோபம் கொண்டால்? அவளுக்குத் தன் கணவன் கோபம் கொள்வதில் சிறிதும் விருப்பம் இல்லை. அதோடு இல்லாமல் மஹாராணி கொடுத்ததை மறுத்தால் அது மன்னிக்கவே முடியாத குற்றமாகப் போய்விடும். ஆகவே அவள் குனிகரிடமே கேட்டாள். “இந்தப் பசுக்களையும் காளையையும் வைத்ஹ்டுக் கொண்டு நான் என்ன செய்வது?” என்றாள்.

அதைக் கேட்ட த்வைபாயனர், “அவை உன் பசுக்கள். உனக்கு என்ன பிடித்தமோ அதைச் செய்!” என்று சிரித்தவர், “ஆனால் காளையின் அருகே மட்டும் போய்விடாதே! உன்னை முட்டித் தள்ளி  விடும். என் மனைவி இறந்துவிட்டால் நான் என்ன செய்வேன்?” என்ற வண்ணம் அவளைப் பார்த்து மேலும், சிரித்த வண்ணம் கூறினார். “ மாட்சிமை பொருந்திய மஹாராணிக்குத் தான் எத்தனை பெரிய உள்ளம்? அற்புதமானவள்! அவள் எதையும் எப்போதும் மறப்பதே இல்லை!” என்றார். தாயிடம் மகனுக்கு ஏற்படும் இயல்பான பாசத்தில் த்வைபாயனர் இதைப் பேசினாலும் விஷயம் தெரியாத வாடிகாவுக்கு அவர் வார்த்தைகள் வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சியது போல் இருந்தது! மனதில் தோன்றிய கடும் வேதனையைப் பொறுத்துக் கொண்டாள். ஆனால் இதனால் பல இரவுகளை அவள் தூங்காமல் கழிக்க வேண்டி இருந்தது. இதற்கு முன்னால் அவள் இப்படித் தூங்காமல் இருந்ததே இல்லை! அப்படியே தன்னை மறந்து அயர்ந்து தூங்கினாலும் அந்தத் தூக்கத்தில் துர் சொப்பனங்கள் அவளைத் தொந்திரவு செய்தன. மஹாராணி சத்யவதி ஒரு பயங்கர மிருகமாக வந்து அல்லது ஓர் சூனியக்காரியாக வந்து அவள் குரல்வளையைப் பிடித்து நெரிப்பதாகவும் கனவுகள் கண்டு நடுங்கினாள். மஹாராணி அங்கே வரும்போது இதற்குத் தக்கதொரு தீர்வு காண வேண்டும் என்று அவள் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டாலும் அதனால் எல்லாம் அவளுடைய தொல்லைகள் தீரவில்லை.

அவள் தந்தையைப் போல் அவளும் அவ்வளவு எளிதில் மனம் சமாதானம் அடைய மாட்டாள். தன் மூளையைக் கசக்கிக் கொண்டு இந்த மஹாராணியின் பிடியிலிருந்து தானும், தன் கணவனும் தப்ப வேண்டிய வழியைத் தேடினாள். முதலில் அவள் நினைத்தது தன் தந்தையின் துணையினால் மஹாராணியின் மேல் மரண வசிய மந்திரத்தை ஏவுவது தான்! ஆனால் பின்னர் மனதை மாற்றிக் கொண்டாள். ஏனெனில் அவள் தந்தை அப்போது முழுவதும் த்வைபாயனரின் நடத்தையினால் கவரப்பட்டு அவருடைய செல்வாக்கில் கரைந்து போயிருந்தார். இந்தச் சமயம் போய் அவரிடம் தன் வேண்டுகோளைச் சொன்னால் அவர் வாடிகாவைப் பரிகாசம் செய்வதோடு அல்லாமல் ஏளனமாகவும் பார்ப்பார். தந்தை மூலம் அவள் கணவன் த்வைபாயனருக்கும் இந்த விஷயம் தெரிய வந்தால் பின் அவர் அவளை ஒரு நாளும் மன்னிக்கவே மாட்டார். இப்படி யோசித்து யோசித்து மனதைக் குழப்பிக் கொண்டாள் வாடிகா.

கடைசியில் ஒரு நாள் அவளுக்கு நம்பிக்கை பிறந்தது. அவள் உர்வி என அழைக்கப்படும் தன் அத்தையிடம் சென்றாள். அவள் மஹா அதர்வரின் மூத்த சகோதரி. வாடிகாவைப் போல அவளும் ஒரு ஸ்ரோத்திரியர்.  மஹா அதர்வரால் பயிராக்கப்பட்டு வந்த மந்திர மூலிகைகளைப் பாதுகாத்து வளர்க்கும் பொறுப்பு அவளுடையது! அதோடு இல்லாமல் அவளுக்குப் பெண்களின் துன்பங்கள், நோய்கள், அவர்களின் மனோ விசாரங்கள் ஆகியவை குறித்தும் அதற்கான மந்திர வித்தை குறித்தும் நன்கு அறிந்தவள். ஆசிரமத்துப் பெண்களுக்கு இந்த வகையில் அவள் பெரும் உதவி செய்து வந்தாள். அவள் தான் இதற்குச் சரியான நபர். அவளால் தான் ஏதேனும் வசியத்தைக் கொடுத்து அவள் கணவன் இந்த மஹாராணியின் பிடியிலிருந்து வெளிவர ஏற்பாடு செய்ய முடியும். அவள் கணவனின் வாழ்க்கையைக் காப்பாற்றிக் கொடுக்க உர்வியே சரியான நபர்! வாடிகா தன் அத்தையிடம் அந்தக் குறிப்பிட்ட மந்திரங்களைத் தனக்குக் கற்றுக்கொடுக்கும்படி கெஞ்சினாள். எதிரிகளை வெல்லும் மந்திரங்களைத் தானும் தெரிந்து கொள்ள வேண்டும் என்றாள். அவள் அத்தை சிரித்தாள்.

“இவ்வளவு விரைவிலா? இப்போது தானே திருமணம் ஆயிற்று உனக்கு? நீ ஏன் சந்தோஷமில்லாமல் இருக்கிறாய்? என்ன ஆயிற்று உனக்கு?” என்று கேட்டாள். “இல்லை, அத்தை! நான் திருமண வாழ்வில் சந்தோஷமாகவே இருக்கிறேன். ஆனால் எனக்கு ஓர் எதிரி உண்டு. அந்த எதிரியிடமிருந்து என்னைப் பாதுகாக்க வேண்டும் அல்லவா? அதற்காக நானே முயல்கிறேன். ஒரு வேளை அந்த எதிரியிடமிருந்து எனக்கு ஏதேனும் ஆபத்து வந்துவிட்டால்! நான் தயாராக இருக்க வேண்டும் அல்லவா?”

உர்வி அவளுக்குச் சில மந்திரங்களைச் சொல்லிக் கொடுத்தாள். அந்த மந்திரங்கள் அனைத்துமே அவள் எதிரியைத் தாக்குவது என்பதை முக்கிய நோக்கமாகக் கொண்டது என்பதோடு எதிரியை மிகவும் அலங்கோலமாகவும், அசிங்கமாகவும் பார்த்தவர் வெறுக்கும் வண்ணமும் மாற்றும் சக்தியையும் கொண்டது!
“இந்தச் செடியை நான் நடுகிறேன்; இது மிக்க வீரியம் கொண்டது!
என் எதிரியான பெண்கள் இதன் மூலம் அவர்கள் அதிகாரத்தை இழப்பார்கள்
என் கணவனின் அன்பு என்பால் மேலும் உறுதி அடையும்
நீண்ட நெடிய செங்குத்தான இலைகளைக் கொண்ட இந்தச் செடி பார்க்க அழகாகத் தான் இருக்கிறது
என்றாலும் அது தன் வேலையைச் செய்யும். கடவுளரின் விருப்பத்துடனும், அவர்களின் ஊக்கத்துடனும் முழு வலிமையுடனும் இது வேலை செய்யும்.
என் எதிரியை விலகிப் போகச் செல்! என் கணவன் எனக்கே உரியவன்! எனக்கு மட்டுமே! ஆம் எனக்கு மட்டுமே!

மேலும் அது இவ்வாறு முடிந்தது.

இந்த மந்திரச் செடி மிகவும் வீரியமுள்ளது
இதனால் நானும் வலிமை படைத்தவள் ஆனேன்
உயர்ந்த பெண்மணிகளிலெல்லாம் உயர்ந்தவள் ஆனேன்
என் எதிரியோக் கீழ்மையானவர்களில் எல்லாம் மிகக் கீழ்மையானவளாக ஆகிவிட்டாள்
ஓ, என் கடவுளே! இந்த அதிக வீரியம் கொண்ட மந்திரச் செடிகளை நான் உனக்கு நிவேதனம் ஆக்குகிறேன்
என் எதிரியின் மனம் பசுவைத் தேடி ஓடி வரும் கன்றைப் போல் என்னிடம் நாடி வரவேண்டும் அதோடு இல்லாமல் நதியின் நீர் எப்படி ஓர் ஒழுங்குடன் ஓடுகிறதோ அப்படி அவள் ஓட வேண்டும்!

அதன் பின்னர் உர்வியிடம் அந்த மந்திரச் செடியைக் காட்டுமாறு வாடிகா கெஞ்சினாள். செடி இல்லாமல் வெறும் மந்திரங்களால் என்ன பயன்? ஆகவே எப்படியேனும் செடியைத் தெரிந்து கொண்டாக வேண்டும். ஆனால் உர்வியோ தன் மருமகளின் இந்த வேடிக்கைப் பேச்சினால் மனம் சந்தோஷம் அடைந்தாள். மருமகளுக்கு இப்போது தான் கல்யாணம் ஆகி இருக்கிறது. அதற்குள்ளாக அவளுக்கு ஓர் எதிரியா? அவளை முறியடிக்க மந்திர வித்தை கற்றுக்  கொள்கிறாளே! சுறுசுறுப்பு மட்டுமல்லாமல் தைரியமும் நிறைந்த பெண் தான் என் மருமகள்! ஆகவே உர்வி அவளை மூலிகைப் பண்ணைக்கு அழைத்துச் சென்று, “பதா” என அழைக்கப்படும் அந்த மந்திரச் செடியைக் காட்டி அதை எப்படிப் பிரயோகம் செய்வது என்பதையும் விளக்கிக் காட்டினாள். அது எப்படிச் செய்தால் உடனடி விளைவு ஏற்படும் என்பதையும் விளக்கினாள்.

“அதை நன்றாகக் கசக்கிப் பிழிய வேண்டும். ஓர் சிவப்பு நிறமுள்ள ஆட்டின் பாலில் அதைக் கலக்க வேண்டும். உன்னுடைய எதிரி யாரோ அவரை இதைக் குடிக்கச் செய்ய வேண்டும். அதோடு இல்லாமல் அவள் படுக்கையைச் சுற்றிலும் இந்தக் கலவையைத் தெளித்தும் விட வேண்டும். உன் எதிரியின் படுக்கையின் அடியில் இந்தச் செடியின் இலைகளைப் பரப்பி வைக்க வேண்டும். உன் கணவனின் படுக்கையின் அடியில் கூட சில இலைகளைப் போட்டு வை. இதெல்லாம் செய்யும்போது இந்த மந்திரங்களை விடாமல் சொல்ல வேண்டும்.”

“இந்த மந்திரத்தினால் அவள் இறந்துவிடுவாளா?” வாடிகா கேட்டாள்.

“இல்லை, இறக்க மாட்டாள். இது மரண வசிய மந்திரமே அல்ல! இதன் மூலம் உன் கணவனுக்கு அவள் மேல் தாங்க முடியாத கோபமும், வெறுப்பும் ஏற்படும். அவளும் கெட்ட குணமுள்ளவளாக மாறிவிடுவாள். அவளுடைய நல்ல குணங்கள் எல்லாம் மறைந்து விடும். ஆனால் எப்படி ஆனாலும் உன் கணவன் அவளுடன் மன முறிவு ஏற்பட்டு அவளை விட்டு விலகி விடுவான். உன் எதிரியின் பிடியிலிருந்து உன் கணவன் விடுபடுவான்.”

இப்போது வாடிகா மந்திரங்களை நன்றாக உச்சரித்துப் பழகி விட்டாள். மந்திர மூலிகையைப் பயன்படுத்தும் விதமும் நன்கு அறிந்து வைத்திருந்தாள். மஹாராணியின் வரவு மட்டுமே பாக்கி! அதற்காகக் காத்திருந்தாள்.


Saturday, July 9, 2016

வாடிகாவின் எதிர்பார்ப்பும் ஏமாற்றமும்!

மூன்றாவது ஏரியின் கரையோரத்தில் சரஸ்வதியின் வாய்க்கால் அகலமாகவும் ஆழமாகவும் பிரவாகம் எடுத்திருக்கும் இடத்தில் கரையோரமாக ஆசிரமம் அமைக்க முடிவாயிற்று. அங்கே புனிதமான அக்னி வளர்க்கப்பட்டு பூமி பூஜையும் முறைப்படி நடந்து முடிந்தது. மஹா அதர்வரும் அவருடைய சீடர்களும் பூமித்தாயை வழிபாடு செய்யும் அதர்வ வேத மந்திரங்களை ஓதினார்கள்.

“சத்தியமே என்றும் நிலைத்திருக்கும், உண்மையானதும் கூட!
ரிடா எனப்படும் விண்ணுலக ஒழுங்குமுறை தனக்குத் தானே கடுமையான கட்டுப்பாட்டுடன் இருக்கிறது. அது ஒரு மாபெரும் தவம்!
தன்னைத் தானே அறிதல் பிரம்மம் எனப்படுகிறது. இந்தப் புனிதமான வேள்விகளில் முதன்மை வகிக்கும் அனைத்துக் கடவுளராலும் பூமி தேவியை வழிபட்டுக் கொண்டாடுகிறார்கள். அவளுக்கு ஆதரவு தருகின்றனர்.
ஏ பூமித்தாயே!
என்றும் உள்ளதற்கும்,என்றும் இல்லாமல் போனதற்கும் துணையாய் இருப்பவளே!
எங்களுக்கு ஒரு மாபெரும் பகுதியை அன்பு கூர்ந்து கொடுப்பாய்!
ஏ, பூமித் தாயே! எங்களை ஒரு நல்ல இடத்தில் தங்கி இருந்து சேவை செய்ய அருள் புரிவாய்!
உன் நாயகனுடனும் விண்ணும், மண்ணும் சேர்ந்து ஒருங்கிணைத்து ஒத்துழைத்து என்றென்றும் நீடித்து இருக்க அருள் புரிவாய்!
ஏ, ஞானத்தின் நாயகியே! ஞான சரஸ்வதியே!
நாங்கள் எப்போதும் இங்கே முன்னேற்றம் கண்டு சந்தோஷத்துடன் வாழ அருள் புரிவாய்!

பூமியில் ஒரு பள்ளம் தோண்டி அது சுத்தம் செய்யப்பட்டது. இரண்டு சீடர்கள் உயிருள்ள ஓர் ஆமையைப் பிடித்துக் கொண்டு வந்திருந்தனர். ஆமை அம்பிகையின் வாகனமாகக் கருதப்படும். இங்கே அது ஸ்திரத்தன்மைக்கு ஓர் சின்னமாகக் கருதப்பட்டது. பூமித் தாய் வரலாற்றுக்காலத்துக்கும் முந்தைய தொன்மையான புராதன காலத்தில் ஆமையின் முதுகில் அமர்ந்த வண்ணம் வந்ததாகச் சொல்லுவார்கள். மஹாவிஷ்ணு கூர்ம அவதாரத்தில் பூமியைத் தன் மேல் தாங்கி வருவார் அல்லவா! அதை நினைவுறுத்தும் வண்ணமாக ஆமையை அந்தப் பள்ளத்தில் வைத்தனர். இதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த வாடிகாவின் நெஞ்சம் ஆனந்தத்தில் தத்தளித்தது. எல்லை மீறிய சந்தோஷத்தில் அவள் இருந்தாள். ஏனெனில் இது தான் அவள் இல்லமாகப் பரிணமிக்கப் போகிறது. வாழையடி வாழையாக, பரம்பரை பரம்பரையாக  அவளும் த்வைபாயனரும் சேர்ந்து உருவாக்கும் சந்ததிகள் இங்கே தான் தங்கி தங்கள் வாழ்க்கையை வாழ்வார்கள். பல தலைமுறைகளுக்கு இது நீடிக்கும். இந்த இடம் அனைத்துக் கடவுளராலும் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறது. மேலும் ஆசிகள் கிடைக்கும். இங்கே தான் பராசர முனிவரின் நினைவால் ஆசிரமம் ஏற்படப் போகிறது. மென்மையான அதே சமயம் ஸ்வரம் பிசகாமல் அனைத்துச் சீடர்களும் வேதங்களைக் கற்றுக் கொண்டு ஓதப் போகின்றனர்.

வாடிகா த்வைபாயனரின்  மனோ வசியத்தில் முழுக்க முழுக்க ஆழ்ந்து போனாள். த்வைபாயனர் அவளை அறியாதவர் போல் நடந்து கொள்ளவே இல்லை! மாறாகப் பல்லாண்டுகள், ஏன், ஜென்ம ஜென்மாந்திரத்துப் பந்தம் இருப்பது போலவே நடந்து கொண்டார். அவர் பேசும்போதெல்லாம் இனம் தெரியாத மகிழ்ச்சியை அடைந்தாள். அவருடைய சிறுபிள்ளைத் தனமான சிரிப்பு அவளை மிகக் கவர்ந்தது. அதன் மூலம் அவருடைய பாரம்பரியக் குடும்பப் பண்பு வெளியாயிற்று! விரைவில் அவருடைய படிப்பும், ஞானம் பரந்து பட்டது என்றும் எல்லையற்றது என்பதையும் கண்டு கொண்டாள். மூன்று வேதங்களையும் முற்றிலும் கற்றுத் தேர்ந்திருந்தார். அவற்றின் முக்கியமான சாராம்சங்கள் குறித்த ஞானம் அவரிடம் அதிகம் இருந்தது. சற்றும் ஸ்வரம் பிசகாமல் உச்சரிப்பு மாறாமல் அவர் வேதம் ஓதுவதைக் கேட்டுக் கொண்டே இருக்கலாம். அவ்வளவு சுத்தமாக இருந்தது. மேலும் அவருக்கு அதர்வ வேதமந்திரங்கள் பலவும் தெரிந்திருந்தன என்பதோடு மூலிகைகளைப் பயன்படுத்தும் விதமும் மூலிகைகளைப் பயன்படுத்துகையில் உச்சரிக்கும் மந்திரங்களும், உச்சரிக்கும் விதமும் நன்கு தெரிந்திருந்தது. அதன் மூலம் அவர் பல வியாதிகளைக் குணப்படுத்தினார். அதோடு இல்லாமல் விண்வெளியைக் கண்காணித்து கிரஹங்களின் போக்குவரத்தைக் கண்காணித்து அதன் மூலம் மக்களுக்கு வரக்கூடிய துன்பத்தைக் கண்டு பிடித்துக் குணமாக்குவதிலும் வல்லவராக இருந்தார்.

இத்தனை இருந்தும் அவளை ஆச்சரியப்படுத்தியது என்னவெனில் அவர் வாயிலிருந்து ஏதும் குறையோ, யாரைக் குறித்தும் புகாரான சொற்களோ ஏதும் வந்ததில்லை என்பதுவே! அனைவரையும் ஊக்கமூட்டி உற்சாகப்படுத்தி வந்தார். யாரையும் எதற்கும் குறை கூறியதில்லை. விடிகாலையில் எழுந்தால் ஆசிரமத்துப் பெண்மணிகளோடு பால் கறக்கும்போது அங்கே கூட இருந்து வேண்டிய உதவிகளைச் செய்வார். அதன் பின்னர் மற்ற ஸ்ரோத்திரியர்களும், பிரமசாரிகளும் அங்கே உள்ள அக்னிகுண்டத்தில் அக்னி உண்டாக்குவதில் அவருடன் ஈடுபடுவார்கள். பின்னர் அவர் கண்டத்திலிருந்து எழுந்திருக்கும் ஓங்கார நாதத்தோடு ஆரம்பிக்கும் வேத கோஷத்தில் மற்றவர்களும் கலந்து கொண்டு அந்த இடத்தையே புனிதப்படுத்தும்.

அங்கிருந்த எவரையும் சுடுசொற்களால் கடுமையாகப் பேசியதே இல்லை! மாறாக யாரேனும் எப்போதேனும் தவறு செய்தால் அவர்களுக்கு அதைத் திருத்திக் கொள்ள உதவிகள் செய்வார். அதன் மூலம் அவர்கள் செய்த தவறை நினைத்து வெட்கமடைய வைத்தார். அவர்களை இன்னும் மேலும் கடுமையாக உழைக்கச் செய்தார். எவ்வளவு சோம்பேறிகளாக இருந்தாலும் அவர்களை மாற்றி அவர்களின் சோம்பேறித் தனத்துக்காக வெட்கம் கொள்ளச் செய்தார். மற்ற வயதான ஸ்ரோத்திரியர்களில் பலரும் பராசர முனிவரின் ஆசிரமத்தில் அவருடைய நேரடிக் கண்காணிப்பின் கீழ் வளர்ந்ததால் அவருடைய கண்டிப்பான நடைமுறைகளையும், பாடங்களையும் அப்படியே சிறிதும் மாறாமல் கடைப்பிடித்தனர். விரைவில் பராசர முனிவரின் காலத்தில் இருந்த கண்டிப்பான ஒழுங்கான நடைமுறை அந்த ஆசிரமத்தில் பழக்கத்துக்கு வந்துவிட்டது. நோயாளிகளைத் தனிப்பட்ட முறையில் கவனித்து வைத்தியம் செய்வதற்கு த்வைபாயனர் தயங்கியதும் இல்லை; மறந்ததும் இல்லை. தவறாமல் நோயாளிகளைக் கவனித்து அவர்கள் நோய்க்குத் தீர்வு கண்டதோடு தன் வழக்கப்படி சின்னஞ்சிறு குழந்தைகளுக்கு உணவு கொடுத்து முடித்ததுமே தானும் உண்ணும் வழக்கத்தை மாற்றாமல் அப்படியே கடைப்பிடித்து வந்தார். அவருடைய உற்சாகமான ஊக்கமூட்டும் வார்த்தைகளாலும், இனிய அன்பான உபசரிப்பாலும் மகிழ்ச்சியான புன்னகையாலும் அனைவர் மனதிலும் இடம் பிடித்தார். அங்கு நாளுக்கு நாள் கூட்டம் அலை மோதியது! அனைவரும் த்வைபாயனர் தங்களைத் தனியே கவனிக்க வேண்டும் என்று விரும்பினார்கள்.

அவர்களின் திருமணம் நடைபெறுவதற்கு முந்தைய நாட்களில் வாடிகா த்வைபாயனரின் சாகசக் கதைகளைக் கேட்க நேர்ந்தது. ஷார்மி அவற்றைக் குறித்து விரிவாகச் சொல்லிக் கொண்டிருப்பாள். ஷார்மி பொதுவாகவே அதிகம் பேசும் சுபாவம் படைத்த பெண்மணி. இப்போது த்வைபாயனரின் சிறு வயது சாகசங்கள் அவளை மிகவும் கவர்ந்ததால் அதைக் குறித்து அதிகம் பேசி வந்தாள். நடந்த அனைத்தையும் ஒன்றுவிடாமல் விவரித்தாள். த்வைபாயனர் சிறு வயதில் கல்பியில் இருந்தது; அங்கிருந்து பராசர முனிவருடன் வந்தது; அவளுடைய “ஆரிய புத்திரர்” ஆன கௌதம முனிவரின் உதவியுடன் பராசர முனிவர் த்வைபாயனருக்கு உபநயனம் செய்வித்தது. கௌதமரைக் குருவாக ஏற்று அவருடைய பயிற்சியில் பிரமசரிய விரதம் பூண்டது, என்றெல்லாம் எடுத்துக் கூறுவாள். அதோடு இல்லாமல் இந்த பால முனிவர் தினந்தோறும் ஆசிரமத்தில் காலை வேளையில் பால் கறக்கும் பெண்களுடன் இதமாகப் பேசி அவர்களுக்கு எப்படி எல்லாம் உதவுவார் என்பதையும், தன் கணவனுடைய பயிற்சியினாலேயே த்வைபாயனர் இத்தனை சிறந்து விளங்குவதாகவும் கூறுவாள். மேலும் பாங்கு முனி என்றும் நொண்டி முனி என்றும் அழைக்கப்பட்ட பராசர முனிவரின் இறந்த உடலை த்வைபாயனர் தனியே சுமந்து கொண்டு வந்து சேர்த்ததைக் கதை கதையாகக் கூறுவாள்.

எல்லாவற்றிலும் அவளுக்கு இன்னமும் வியப்பு ஊட்டும் விஷயம் ஒன்று உண்டென்றால் அது அவர்களுடைய நடமாடும் ஆசிரமம் ஹஸ்தினாபுரம் வழியாக தர்மக்ஷேத்திரத்துக்குப் பயணப்படும்போது ஹஸ்தினாபுரத்தில் தங்கியதும், அங்கே மஹாராணி சத்யவதியைப் பார்த்ததும் தான்! அவள் வாழ்நாளில் மறக்கவே முடியாத ஒளிபொருந்திய நாட்களாக அவற்றை அவள் கருதினாள். ஒரு மஹாராணி அவள் இன்னமும் மஹாராணியாகப் பதவியில் இருக்கையிலேயே அவளைக் கண்டு பேசுவது என்பது எத்தனை பெரிய விஷயம்! ஷார்மிக்கு அது நடந்து விட்டது!

“ஓ,ஓ, அந்த மஹாராணியின் உடல் தான் எத்தனை மெல்லியது! மெல்லிய உடல்வாகைக் கொண்டிருந்தாலும் அவள் அழகை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை! அத்தனை அழகானவள்! மிகவும் பகட்டான பட்டாடைகளை உடுத்திக் கொண்டிருந்தாள். என்ன இருந்தாலும் ஒரு சாம்ராஜ்யத்தின் மஹாராணி அல்லவா?” என்று சொன்னவள் மேலும் தொடர்ந்து, “நாங்கள் அங்கே தங்கி இருந்த நாட்களில் மஹாராணி தினமும் எங்களைக் காணவேண்டி அங்கே வருவாள். பிரதிபேஸ்வரர் கோயிலில் தான் நாங்கள் தங்கி இருந்தோம். அங்கே தினமும் வந்து தன் கையாலேயே பாலமுனிக்கும் என் கணவர் ஆர்யபுத்திரருக்கும் உணவு பரிமாறுவாள்!”

இம்மாதிரி விஷயங்களைக் கேட்கையில் வாடிகாவுக்கு என்ன சொல்வது என்றே தெரியாது. ஒன்றும் புரியாமல் வலிய ஒரு புன்னகையை வரவழைத்துக் கொள்வாள். ஆனாலும் அவள் உள்மனம் இவற்றால் மகிழ்ச்சி அடையவில்லை. ஏனென்று தெரியவில்லை!  விரைவில் ஒரு நல்ல முஹூர்த்த நாளில் வாடிகாவுக்கும் த்வைபாயனருக்கும் திருமணம் நடந்தேறியது. ஆசாரிய கௌதமர் த்வைபாயனரின் தந்தை ஸ்தானத்தில் இருந்தபடியால் மஹா அதர்வர் தாரை வார்த்துக் கொடுத்த அவர் மகள் வாடிகாவை முறைப்படி பெற்றுக் கொண்டார். பின்னர் மணமகனும், மணமகளும் அக்னியைச் சுற்றி சப்தபதி வலம் வந்தனர். ஏழடி எடுத்து வைத்துத் தங்கள் உறவை உறுதி செய்து கொண்டார்கள். காதல் பரிமாற்றங்கள் நடந்தேறின. அதுவரை பிரமசாரிணியாக இருந்த வாடிகாவும் த்வைபாயனருக்கும் சேர்த்து மான் தோல்கள் பரிசளிக்கப்பட்டன. அவர்கள் இருவரும் மட்டும் தனித்திருக்கப் போகும் அந்த இரவை எதிர்நோக்கிய வாடிகாவின் மனதில் உள்ளூர அச்சமும் இருந்தது. ஏனெனில் ஆசிரமத்துப் பெண்மணிகளிடம் பேசித் தெரிந்து கொண்ட வகையில் பெரும்பாலான ஆண்கள் தங்கள் மனைவியை முதல்முறை சந்திக்கும்போது மிகவும் மிருகத்தனமாக நடந்து கொள்வார்களாம். கொஞ்சமும் மென்மையே இருக்காதாம். ஆகவே தன் கணவனும் தன்னைக் காயப்படுத்தி விட்டால் என்னும் அச்சம் அவளை விட்டுப்போகவில்லை. இந்த மாதிரி ஒரு மோசமான கொடூரமான நிலைமை தனக்கு ஏற்படுகையில் தன்னால் அதிலிருந்து மீண்டு வர முடியுமா? தன்னால் அதைத் தாங்க முடியுமா? ஒரு மனைவியாக த்வைபாயனரைத் தன்னால் சந்தோஷமாக வைத்திருக்க முடியுமா?

இரவும் வந்தது, இருவரும் தனித்தும் விடப்பட்டனர். வாடிகாவுக்கு ஆச்சரியத்துக்கு மேல் ஆச்சரியம். ஏனெனில் த்வைபாயனர் நடந்து கொண்ட முறையே முற்றிலும் வேறாக இருந்தது.

Friday, July 8, 2016

வாடிகா அடைந்த மகிழ்ச்சி!

தொன்மையான அந்தக்  கால கட்டங்களில் வேதங்களில் சொல்லி இருந்தது என்னவெனில் ஒரு தந்தை விரும்பினால் தன் மகளுக்கும் உபநயனம் செய்விக்கலாம். பொதுவாகத் தந்தைமார்கள் இதை விரும்பியதில்லை! தங்கள் மகளுக்கு வேதம் கற்பிக்க விரும்பிய தந்தையர் மிகக் குறைவாகவே இருந்தனர். ஆனாலும் அதை விரும்பும் தந்தையர் தங்கள் மகளுக்கும் உபநயனம் செய்வித்து பிரமாசாரிணி என்னும் பெயருடன் கடுமையான நியம நிஷ்டைகளை அனுபவிக்கும்படி விட்டது உண்டு. பனிரண்டு வருடங்கள் அவளும் ஒரு பிரமசாரிக்கு உரிய விரதத்தை அனுசரித்துக் கொண்டு கடுமையான நியமங்களுடன் வேதத்தைக் கற்றுக் கொள்ளுவாள். அதன் பின்னர் அவளுக்கும் ஒரு ஸ்ரோத்திரியனுக்கு என்ன மரியாதை உண்டோ அந்த மரியாதை கிடைக்கும். அவனுக்குள்ள உரிமைகளும் கிடைக்கும். ஆனால் பெரும்பாலான பெண்டிருக்கு இவை மறுக்கப்பட்டே வந்திருக்கிறது. ஏனெனில் பெரும்பாலான தந்தையருக்கு இதில் விருப்பம் இருந்தது இல்லை!

ஆனால் இங்கே ஜாபாலி முனிவர் இந்த வழக்கம் ஆங்காங்கே இருந்து வந்ததை அனுசரித்துத் தன் மகன் சுமாந்துவுடன் இரட்டையாகப் பிறந்த வாடிகாவுக்கும் உபநயனம் செய்வித்திருந்தார். அவளும் சுமாந்துவைப் போல வேதம் கற்றுக் கொண்டு வந்திருந்தாள். பிரமசாரிணியாகத் தன் நியமங்களை அனுஷ்டித்து வந்தாள். இப்போது சில காலம் முன்னரே அவளுக்கும் சுமாந்துவுக்கும் பனிரண்டு வருடம் வேத அத்யயனம் பூர்த்தி அடைந்திருந்தது. அதோடு இல்லாமல் வாடிகா தன் தகப்பனின் பிரியத்துக்கும், பாசத்துக்கும் உகந்த மகளாக இருந்து வந்தாள். அதில் அவள் மிக சந்தோஷம் அடைந்திருந்தாள். தன் தந்தையிடம் அவளும் மிகவும் அர்ப்பணிப்பு உணர்வோடு கூடிய பாசத்தை வைத்திருந்தாள். செல்ல மகள் என்னும் உரிமையுடன் அவள் எல்லாவிதமான சேட்டைகளையும் செய்து வந்தாள். ஆனாலும் ஜாபாலி முனிவர் அவளிடம் கோவித்தது இல்லை! ஒரு உரிமையுடன் கூடிய செல்லக் கண்டிப்புடனும், சிரிப்புடனும் அவளை விட்டு விடுவார். அவள் தந்தையின் ஆதிக்கத்தையும் மீறி வாடிகாவிடம் தனக்கென சுயமாக ஒரு சிந்தனை இருந்தது. தன்னுடைய பனிரண்டு வருடப் பாடங்கள் முடிவடைந்ததும் அவள் ஒரு தக்க ஸ்ரோத்திரியனோடு தனக்கு மணம் ஆகும் என நினைத்திருந்தாள். அதை எதிர்பார்த்திருந்தாள். ஆனால் த்வைபாயனரை எப்போது பார்த்தாளோ அப்போதே அவரின் எவரையும் எளிதில் கவரும் சிரிப்பும், வேதம் ஓதும் பாங்கும் சரஸ்வதி நதிக்கரையின் அருகே அவர் வருணனை அழைத்த விதமும் அவளை மிகவும் கவர்ந்து விட்டது. அவரைத் திருமணம் செய்யும் எண்ணமும் அவளிடம் மெல்ல மெல்லத் தோன்றி இருந்தது.

அதன் பின்னர் த்வைபாயனர் திரும்பி வந்ததும், தன் தந்தையிடம் தான் ஹஸ்தினாபுரம் சென்றதையும் அங்கே ஷாந்தனுவை உயிர்ப்பித்த விதத்தையும் சொல்லக் கேட்டதும் அவளுக்கு மனோ வசிய மந்திரத்தின் தேவையே இல்லாமல் மனம் முழுவதும் த்வைபாயனர் பால் சென்று விட்டது. அவருடைய சாகசங்களையும் நிகழ்த்திய அற்புதங்களையும் கேட்டதும் அவர் மேல் பித்துப் பிடித்தவள் போல் ஆனாள். ஆஹா! தான் மட்டும் அவரை மணந்து கொண்டு தர்மக்ஷேத்திரத்தை நிர்மாணிப்பதில் அவருக்கு உதவிகள் செய்தால்! அதைவிட சொர்க்கம் என்ன பெரியதாக இருக்கப் போகிறது! தன் தந்தை தன்னை வெளியேறச் சொன்னதுமே அவளும் சுமாந்துவுடனும் த்வைபாயனருடனும் வெளியே வந்தாள். அவர்கள் பைலரைச் சந்தித்தார்கள். பைலர் இப்போது பூரணமாய்க் குணம் அடைந்திருந்தார். அவர்கள் அனைவரும் கீழே இறங்கி வந்து அங்கே காத்திருந்த பராசர கோத்திரத்தைச் சேர்ந்த ஸ்ரோத்திரியர்களை அவர்களுடன் வந்தவர்களையும் சேர்த்து மேலே ஆசிரமத்தில் வந்து தங்கும்படி அழைப்பு விடுத்தார்கள். வழிகாட்டிக் கொண்டு சேர்த்தார்கள். 

அவள் இதுவரை ஒரு சில ஆசிரமங்களை அவை நிலைபெற்று இருந்த இடங்களிலேயே பார்த்திருக்கிறாள். அவள் தந்தை எங்கானும் பிரயாணப்படும்போது அவருடன் சென்று பார்த்த ஆசிரமங்களும் ஓரிடத்திலேயே இருந்தவை தான். ஆகவே இப்போது பராசர முனிவரின் நடமாடும் ஆசிரமத்தைப் பார்த்ததும் அவளுக்கு வியப்பு அதிகம் ஆனது. யமுனைக்கரையில் இருந்த பராசரரின் சீடர்களின் ஆசிரமங்களில் இருந்து வந்த முக்கியமான ஆசாரியர்களில் சிலர் இங்கே வந்திருப்பதாக த்வைபாயனர் அவளிடம் சொன்னார். அதைத் தவிரவும் பராசரைன் ஆசிரமத்தின் சீடர்களில் பலரும் வந்திருந்தனர். தர்மக்ஷேத்திரத்துக்கு வந்த நீண்ட நெடிய பாதையிலும் கூட இந்த நடமாடும் ஆசிரமவாசிகள் தங்கள் நித்திய கர்மானுஷ்டானங்களையோ, வழிபாடுகளையோ, யக்ஞங்களையோ விடவில்லை. இடைவிடாத கண்காணிப்பில் அனைத்தும் முறையாகச் செய்யப்பட்டன. இந்த ஆசிரமம் மிகவும் பழைமையான முறையில் நடத்தப்பட்டு வந்தது. இதன் உயிரும் உற்சாகமும் இதில் இருக்கும் அனைத்து உறுப்பினர்களாலும் தொடர்ந்து நிலைநிறுத்தப்பட்டது. த்வைபாயனரைத் தலைமையாகக் கொண்டு அவருடைய நம்பிக்கையைச் சம்பாதித்துக்கொண்டு இந்த ஆசிரமம் தான் புத்துயிர் பெற்றதோடு அல்லாமல் தர்மக்ஷேத்திரத்தையும் புத்துயிர் பெற வைக்க வேண்டி வந்திருந்தது.

இதன் முக்கிய ஆசாரியராக கௌதம முனிவர் இருந்தார். பராசர முனிவரின் சீடர்களிலேயே மிகவும் வயதானவர் அனைவரிலும் மூத்தவர். வாடிகாவை அவருக்கு அறிமுகம் செய்து வைத்தபோது ஒரு தந்தையைப் போல் அவளைப் பார்த்துப் புன்னகை செய்து ஆசிகளை வழங்கினார். ஆசாரிய கௌதமருடன் அவர் மனைவி ஷார்மியும் தன் குழந்தைகளோடு வந்திருந்தாள். இவர்களைப் போல் இன்னும் பற்பல ஆசாரியர்கள் தங்கள் குடும்பத்துடன் இதில் இணைந்திருந்தனர். அவர்களின் சீடர்களும் வந்திருந்தனர். பிரமசாரிகளான மாணவர்கள் மான் தோலை அரையாடையாக உடுத்திக் கொண்டு கைகளில் தண்டங்கள், உணவு உண்ணும் சுரைக்குடுக்கை ஆகியவற்றோடு காட்சி அளித்தனர். ஆசிரமத்தை நம்பி உயிர் வாழ்பவர்களும் தங்கள் குடும்பத்தோடு இடம் பெற்றிருந்தார்கள். சிறுவர்களும், சிறுமிகளும் ஆங்காங்கே ஓடிக் கொண்டும், விளையாடிக் கொண்டும், பாட்டுகள் பாடிக் கொண்டும் அங்கும் இங்குமாக நிறைந்த அந்த இடத்துக்கே ஓர் கலகலப்பை உண்டாக்கி இருந்தார்கள். அவர்கள் அனைவரும் இந்தப் பிரயாணத்தை மிகவும் ரசித்தனர். இந்த ஆசிரமவாசிகளால் வைத்தியம் செய்யப்பட்டு வந்த நோயாளிகள், வயது சென்ற மூத்தோர்கள், நடக்க முடியாதவர்கள், சின்னஞ்சிறு குழந்தைகள் ஆகியோரும் மாட்டு வண்டிகளில் ஏறிப் பயணம் செய்து வந்திருந்தனர். அவர்களை ஆசிரமத்தின் ஆசாரியர்கள் கவனித்து வைத்தியம் செய்தனர். 

வீரியம் நிறைந்த பொலிகாளைகளும் கணக்கற்ற பசுக்களும், கன்றுகளும் உடன் அழைத்து வரப்பட்டிருந்தன. மாடுகளைக் கவனிக்கவென இடையர்கள் இருந்தார்கள். அவர்கள் வேளாவேளைக்கு மாடுகளைக் கவனித்து உணவு  கொடுப்பதும், பால் கறப்பதும் மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்வதுமாக இருந்தனர். இவர்களைத் தவிர சில வில்லாளிகள் சக்கரவர்த்தி ஷாந்தனுவால் அனுப்பப் பட்டிருந்தனர். அவர்கள் இவர்கள் அத்தனை பேருடைய பாதுகாப்புக்காக வந்திருந்தனர். ராக்ஷசர்களிடமிருந்தோ காட்டு மிருகங்களிடமிருந்தோ இவர்களுக்குத் தொந்திரவு வராமல் பாதுகாத்தனர் அவர்கள். அனைவரையும் பார்த்த வாடிகாவுக்குச் சொல்ல முடியாத சந்தோஷம் வந்தது. அவள் மனம் ஆனந்தத்தில் குதித்தது! கூத்தாடியது! அதுவும் பராசர கோத்திரத்து முனிவர்கள் அனைவருமே த்வைபாயனரிடம் பற்றுடனும், பாசத்துடனும் மரியாதையுடனும் இருப்பதைக் காணும்போது அவளுக்கு மனம் நிறைந்து போனது. அவர்கள் அனைவருமே த்வைபாயனரை “பால முனி” என்றோ “சிறிய முனிவர்” என்றோ அழைத்தனர். ஏனெனில் பராசரர் தான் அந்த ஆசிரமவாசிகளின் தலைவராகக் கருதப் பட்டு வந்ததாலும் அவரை அனைவரும் மாட்சிமை பொருந்திய நொண்டி முனி என அழைத்ததாலும் அவரிடமிருந்து அவர் மகனை வித்தியாசப் படுத்திக் காட்ட வேண்டி இப்படி அழைத்தனர்.

பைலர் வாடிகாவை அழைத்துச் சென்று பராசர முனிவரின் சீடர்களுக்கெல்லாம் இவள் த்வைபாயனருக்கு நிச்சயிக்கப்பட்ட பெண் என்றும் மஹா அதர்வரின் ஒரே மகள் என்றும் வேத வித்தையில் தேர்ந்தவள் என்றும் அறிமுகம் செய்து வைத்தார். அவர்கள் அனைவரும் இதைக் கேட்டதும் ஆனந்தத்தில் மெய்ம்மறந்து போனார்கள். வாடிகாவைக் கண்டதுமே ஆசாரிய கௌதமரின் மனைவி ஷார்மி அவளை ஏற இறங்கப் பார்த்தாள். ஷார்மி சற்றே குண்டாகக் கொஞ்சம் ஆண்மைத் தனம் கலந்து இருந்தாள். வாடிகாவைப் பார்த்ததும் ஷார்மிக்குப் பிடித்து விட்டது. அதை அறிவிக்கும் விதமாக ஷார்மி வாடிகாவைத் தன் நெஞ்சோடு சேர்த்து அணைத்துக் கொண்டு உச்சந்தலையில் முத்தங்களைப் பொழிந்தாள். இதன் மூலம் வாடிகாவின் பேரில் தனக்கிருந்த உரிமையை அவள் நிலைநாட்டிக் கொண்டாள். வாடிகாவுக்கோ ஆனந்தம் தாங்க முடியாமல் கண்ணீரே வந்து விட்டது. மற்றும் அங்கிருந்த பெண்மணிகள் அனைவரும் வாடிகாவுக்கு ஆசிகளைத் தெரிவித்தும் அவளை அணைத்துக் கொண்டும் தங்கள் சந்தோஷத்தை வெளிப்படுத்தினார்கள். வாடிகாவுக்கு மூச்சுத் திணறினாலும் இந்த அன்பை, சந்தோஷத்தை அவள் மிகவும் விரும்பியே ஏற்றுக் கொண்டாள். 

இந்த நடமாடும் ஆசிரமம் அவர்கள் இருந்த மலையின் அடிவாரத்துக்கு வந்திருந்தது. காளைகள் வண்டிகளிலிருந்து அவிழ்க்கப்பட்டு மாடுகள் நீர் குடிக்க வண்டிக்காரர்களால் அழைத்துச் செல்லப்பட்டன. மற்றவர்களில் உணவு சமைப்போர் தங்கள் வேலையைத் தொடங்கி இருந்தனர். மற்ற ஸ்ரோத்திரியர்களும், அவர்கள் மனைவிமார்கள், பிரமசாரிகளான மாணாக்கர்களுடன் மஹா அதர்வரைக் கண்டு நமஸ்கரித்து ஆசிகளைப் பெற வேண்டி மலை மேல் ஏறிச் சென்றனர். மறுநாள் மஹா அதர்வர் தன்னுடன் த்வைபாயனர், கௌதமர் மற்றும் முக்கியமான சில ஆசாரியர்களை அழைத்துக் கொண்டு ச்யமந்தக ஏரிக்கரைக்குச் சென்றார். அங்கே அனைவரும் கூடி ஆலோசித்து எந்த இடத்தில் பராசரரின் ஆசிரமம் அமையவேண்டும் என்பதை முடிவு செய்தனர்.                                          

Thursday, July 7, 2016

குருதேவரின் வசிய மந்திரப் பிரயோகத்தில் த்வைபாயனர்!

"மக்கள் கூட்டம் மிகவும் எதிர்ப்பைத் தெரிவிக்கும்.  என்னிடம் அவர்கள் மிகவும் எதிர்பார்ப்பு வைத்திருக்கிறார்கள். ஆகையால் எப்போது என்ன   செய்வார்கள் என்றே கூற முடியாது! என்னை அமைதியாக இருக்கவும் விட மாட்டார்கள்.  ஐயா, இந்த வாஜ்பேய யக்ஞம் குறிப்பிட்ட நேரத்தில் ஆரம்பிக்கப்பட்டால் தான் அங்கே பராசர முனிவரின் பெயரால் ஓர் ஆசிரமம் தர்மக்ஷேத்திரத்தில் நிலை பெற்று இருக்க முடியும்! அதற்கு உதவுங்கள்!” என்றார் த்வைபாயனர்.

ஆனால் ஜாபாலியோ விடாமல், “வேறு என்னவெல்லாம் நீ சாதித்திருக்கிறாய் இளைஞனே!” என்று கேட்டார். த்வைபாயனரோ, “ஏதோ ஒன்றிரண்டு நடந்துள்ளது ஐயா! ஆனால் உங்கள் ஆசிகள் இல்லாமல் அவை எல்லாம் வீணே! நான் எதையும் சாதித்ததாகக் கூற முடியாது. ஒன்றே ஒன்று மட்டும் சொல்லிக் கொள்கிறேன். பரதனுடைய வம்சத்தில் பிறந்த குரு குலத்து சிரேஷ்டமான சக்கரவர்த்தி ஷாந்தனுவிடமும், அவரின் மூத்த மகன் இளவரசன் காங்கேயனிடமும் நான் வேண்டிக் கேட்டுக் கொண்டது ஒன்றே ஒன்று தான். பிரம தேஜஸும் க்ஷத்திரிய தேஜஸும் ஒன்று சேர வேண்டும் என்பதே என் வேண்டுகோள். இவை இரண்டும் எப்போதும் இணைந்து இருந்தால் தான் உலகுக்கு நன்மை! தர்மம் நிலைபெற்றிருக்கும்.”

“அவர்கள் அதற்கு என்ன சொன்னார்கள்?”

“இருவரும் நான் சொல்வதை அங்கீகரித்தார்கள். அப்படி ஓர் இணைப்பு இருந்தால் தான் தர்மம் நிலைபெற்றிருக்கும் என்பதையும் தர்ம சாம்ராஜ்யம் ஏற்படும் என்பதையும், ராஜ்ஜியங்கள் நிலைத்து நின்று புகழைப் பரப்பும் என்பதையும் ஒத்துக் கொண்டாரகள். ஆகவே அதற்காக உழைப்பதாக வாக்குறுதி கொடுத்தார்கள்.”

மஹா அதர்வருக்கு இந்த விஷயத்தில் ருசி ஏற்பட்டது. ஆர்வம் அதிகரித்தது. “ஆனால் நீ இதற்கு பதில் சொல்லவே இல்லையே! பிரமசாரி, நீ நிஜமாகவே இந்தக் காற்றில் கரைந்து போகும் வித்தையைக் கற்றிருக்கிறாயா? அப்படிக் கரைந்து போய்விடுகிறாயா?”

“ஐயா, நான் அப்படி எல்லாம் காற்றில் கரைந்து போவதில்லை. ஆனால் எவரும் எழுந்திருக்கும் முன்னரே அதிகாலையில் எழுந்து ஹஸ்தினாபுரத்தை விட்டு வெளியேறிவிட்டேன். நேரம் ஆயிற்றென்றால் கூட்டம் என்னைச் சூழ்ந்து கொள்ளும். பின்னர் நான் நினைத்தபடி செய்ய முடியாது. பின்னர் நான் கோதுலியில் இருக்கும் என் தந்தையின் ஆசிரமத்துக்குச் சென்றேன். அங்கே தான் அவருக்கான ஈமச்சடங்குகளும் செய்யப்பட்டன. அதன் பின்னர் யமுனைக்கரையில் என் தந்தையால் ஸ்தாபிக்கப்பட்ட சில ஆசிரமங்களுக்கும் அவரின் சீடர்கள் நடத்தி வரும் ஆசிரமங்களுக்கும் சென்றேன். அங்குள்ள ஸ்ரோத்திரியர்களில் சுமார் நாற்பது நபர்கள், அவர்களில் சிலர் ஆசாரியர்கள், தங்கள் குடும்பத்துடன் வசித்து வந்தார்கள். மற்றும் மற்ற ஸ்ரோத்திரியர்களைச் சார்ந்திருப்பவர்கள் என்று பலரும் இங்கே என்னுடன் இப்போது வந்திருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் தர்மக்ஷேத்திரத்தில் ஆசிரமம் அமைத்துக் கொண்டு இருக்க ஆசை தான்!. மேலும் ஐயா, மாட்சிமை பொருந்திய சக்கரவர்த்தினி சத்யவதி சுமார் 300 பசுக்களை எங்கள் ஆசிரமத்துக்குக் கொடையாகக் கொடுத்துள்ளார்கள்!” என்றார் த்வைபாயனர்.

“அவர்களெல்லாம் எப்போது வருகின்றனர்?”

“அனைவரும் வந்து மலையடிவாரத்தில் உங்கள் ஆசிகளுக்காகக் காத்திருக்கின்றனர் ஐயா!”

“இது என்ன முட்டாள் தனம்? நீ அந்த ஓநாய்களின் ராஜ்ஜியத்தில் முற்றிலும் சபிக்கப்பட்ட இடத்திலா ஆசிரமங்களை அமைக்க வேண்டும் என்கிறாய்? முட்டாள்தனம்!”

“நான் மட்டுமல்ல, குருதேவரே! நானில்லை! உங்கள் மரண வசிய மந்திரம் என்னிடம் பலித்துவிட்டால், நானும் என் முன்னோர்களின் இடத்துக்குப் பித்ருலோகத்துக்குச் சென்றுவிட்டால், என் தந்தையின் முக்கியச் சீடர்கள் அனைவரும் என்னிடம் சத்தியம் செய்து தந்திருக்கின்றனர். என்னவென்று தெரியுமா? தர்மக்ஷேத்திரத்தில் ஆசிரமங்கள் அமைக்கையில் நான் உயிருடன் இல்லாவிட்டால் சுமாந்துவைத் தங்கள் தலைவராக ஏற்கச் சம்மதித்திருக்கிறார்கள்.”

மஹா அதர்வர் ஜாபாலியின் கண்களில் குறுநகை ஒளிர்ந்தது. “உன்னை மாதிரி ஒரு அயோக்கியனைக் கடைந்தெடுத்த அயோக்கியனை நான் பார்த்ததே இல்லை!நீ என் மாணாக்கன் என்று சொல்லிக் கொள்கிறாய்! ஆனால் எனக்குக் கீழ்ப்படிவதில்லை. இந்த ஆசிரமத்தை விட்டு என் அனுமதி இன்றி நீ வெளியேறி இருக்கிறாய். அதோடு இல்லாமல் சஞ்சீவனி மூலிகைகளையும் எனக்குத் தெரியாமல் என்னிடம் சொல்லாமல் எடுத்துச் சென்று இருக்கிறாய்! என் அனுமதி இன்றி சக்கரவர்த்தி ஷாந்தனுவை அதர்வ மந்திரங்களின் உதவியால் மரணத்திலிருந்து மீட்டிருக்கிறாய். நீ எப்படி இந்த மாதிரியெல்லாம் செய்தாய் என்பதை என்னால் புரிந்து கொள்ளவே முடியவில்லை. இதோ இங்கே இருக்கும் என் சீடர்களில் எவருக்கும் அதர்வ மந்திரங்களும் அவற்றின் உச்சாடனங்களும் தெரிந்திருந்தும், சஞ்சீவனி மூலிகையைப் பயன்படுத்தத் தெரிந்திருந்தும் இன்று வரை எவரும் மரணத்தின் பிடியிலுள்ள ஒருவரையேனும் உயிர் பிழைக்க வைத்ததில்லை. அதற்கான முயற்சிகளைச் செய்ததில்லை.”

ஒரு குறும்புச் சிரிப்புச் சிரித்தார் த்வைபாயனர். “மன்னியுங்கள் குருதேவரே! நான் உங்கள் மற்ற சீடர்கள் போல் எல்லாம் நடந்து கொள்ளவில்லைதான்! மன்னியுங்கள்! எனக்கே தெரியவில்லை! என்னால் எப்படி இதைச் செய்ய முடிந்தது என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை! சக்கரவர்த்திக்கு நான் வைத்தியம் செய்தபோது நானே அங்கே உடலோடு இல்லை என்ற உணர்வு தோன்றியது. முற்றிலும் மந்திர உச்சாடனங்களில் ஆழ்ந்து போனேன். வேறு நினைவே இல்லை!  வேதத்தின் அனைத்து சக்திகளும் ஒன்று திரண்டு சக்கரவர்த்தியின் உடலுக்குள் புகுந்துவிட்டாற்போன்ற தோற்றம்! அவ்வளவே நான் அறிவேன்! நடந்தது எப்படி என்று எனக்கும் தான் புரியவில்லை!”

மஹா அதர்வர் மௌனத்தில் ஆழ்ந்தார். “ம்ம்ம்ம்ம், அது தான், அதுதான் உன்னுடைய வெற்றிக்கு ஓர் காரணமாக இருந்திருக்க வேண்டும்,”என்று தனக்குள்ளே பேசிக் கொள்பவர் போலச் சொன்னார். இப்போது மீண்டும் அவருக்குள் அந்தக் கோபமான உணர்வு திரும்பி விட்டாற்போல் இருந்தது. “த்வைபாயனா! நீ என் சீடனாக இருக்கத் தகுதி வாய்ந்தவனே அல்ல!அதோடு இல்லாமல் நீ என் சீடன் எனச் சொல்லிக் கொண்டு என்னை ஆலோசிக்காமல் என்னிடம் கலந்து கொள்ளாமல் நீயே ஒரு ஆசிரமத்தை ஸ்தாபிக்கவேண்டும் என்று நினைக்கிறாய்! இது எனக்கு உவப்பாக இல்லை. ஹூம்! உன்னால் என்ன செய்ய முடியும்? நூற்றுக்கணக்கில் பசுக்களையும் மாணாக்கர்களையும் என்னிடம் கொண்டு வந்து நிறுத்துவாய்! எனக்கு இப்படி எல்லாம் தேவையே இல்லை! மேலும் என்னிடம் கேட்கவே இல்லை. நீ சுமாந்துவை உன் ஆசிரமத்தலைவனாக நியமிக்கிறாய்! இத்தனைக்கும் மேலே நீ என்னை குரு வம்சத்தினரின் வாக்குறுதியை ஏற்றுக்கொண்டு செயல்படச் சொல்கிறாய்! நான் அவர்களை ஒருக்காலும் நம்பப் போவதில்லை. அவர்களால் தர்மத்தைக் கடைப்பிடித்து தர்மத்தின் வழியில் நிற்க முடியும் என்றே தோன்றவில்லை!”

முனிவர் கோபத்தின் உச்சத்தில் இருந்தார். “இப்போது நீ என்னை உன் மேல் மரண வசிய மந்திரப் பிரயோகம் செய்யச் சொல்கிறாய்! ஆகவே நீ இறந்துவிடுவாய்! நீ இறந்த பின்னர் தர்மக்ஷேத்திரத்தின் நிர்மாணங்களை ஏற்படுத்தும் மாபெரும் பொறுப்பிலிருந்து தப்பிவிடுவாய்! இப்போது என் மேல் அந்தப் பொறுப்பு சுமத்தப்படும்! எனக்கு இந்த வயதில் இது தேவையா?” என்றவண்ணம் த்வைபாயனரைக் கடுமையாகப் பார்த்தார் ஆசாரியர். “எனக்கு இது தேவை இல்லை! நான் உன் ஆசிரமத்தைப் பார்த்துக்கொள்ளும் பொறுப்பை ஏற்கப் போவதில்லை. நீ கொடுக்கும் சீடர்களோ அல்லது பசுக்களோ எனக்குத் தேவையும் இல்லை!” கோபமாகவும் ஏளனமாகவும் சீறினார் ரிஷி.

“மதிப்புக்குரிய ஆசாரியரே! எனக்கு ஓர் உதவி மட்டும் செய்ய முடியுமா? சுமாந்துவை என் தந்தையின் சீடர்களை ஏற்றுக்கொள்ளச் செய்ய முடியுமா?”

“முடியாது! என்னால் அது முடியாது!” திட்டவட்டமாகக் கூறினார் ஜாபாலி ரிஷி! பின்னர் அவர் குரலில் இருந்த கடுமை கொஞ்சம் குறைந்தாற்போல் தோன்றியது! “நான் உன் மேல் இன்னும் கடுமையானதொரு மந்திரப் பிரயோகம் செய்கிறேன்! செய்யப் போகிறேன்! பார்த்துக்கொண்டே இரு!” என்றார். அவர் கண்கள் கிண்டலாகச் சிரித்தன. த்வைபாயனரோ எதற்கும் கலங்காமல், “ஆம் ஆசாரியரே! நீங்கள் விரும்புவது எதுவானாலும் நிறைவேற்றிக்கொள்ளுங்கள்! என்னாலும் நிறைவேற்றப்படும்!” என்றார். இப்போது கொஞ்சம் சிரிப்பு எட்டிப் பார்த்தது முனிவரின் முகத்தில்!

“நான் உன் மேல் மிகக் கடுமையான மோசமானதொரு வசியத்தை ஏவப் போகிறேன். அது மரண வசிய மந்திரத்தை விடக் கொடுமையானது. உன்னால் தாங்க முடியாது!”மீண்டும் சிரிப்பு வர அதை அடக்கிக் கொண்ட முனிவர், “நான் வாடிகாவை உன் மேல் பற்று வரும்படி செய்யப் போகிறேன். உன் நினைவில் அவள் பைத்தியமாகும்படி செய்யப் போகிறேன். அந்தப் பெண்ணின் தொந்திரவை நான் வேறு எப்படி நீக்குவது? என்னுடைய பேச்சையே அவள் கேட்கவில்லை; கேட்பதும் இல்லை. என் வேலைகளில் உள் புகுந்து குழப்பம் செய்கிறாள். அந்த சஞ்சீவனி மூலிகையை உன்னிடம் கொடுத்ததன் மூலம் அவள் என்னை ஏமாற்றி விட்டாள்!” என்ற முனிவர் சுற்றும் முற்றும் பார்த்தவண்ணம், “எனக்குத் தெரியும், அவள் இங்கே தான் எங்கேயோ சுற்றிக் கொண்டிருக்கிறாள். நாம் பேசுவதை எல்லாம் கேட்டுக் கொண்டிருக்கிறாள். ஏதோ ஓர் மூலையில் ஒளிந்திருக்கிறாள். அனைத்தையும் கவனிக்கிறாள்.” ஒரு நிமிடம் சந்நியாசிக்கு உரிய பாவனைகள் அவர் முகத்திலிருந்து மறைந்தது. பின்னர் மீண்டும் புன்னகை செய்தார்.

த்வைபாயனரோ, “நீங்கள் என் குருநாதர்! உங்களால் என்னிடம் எவ்வித வசியப் பிரயோகம் செய்ய முடியுமோ அதைச் செய்து கொள்ளலாம்.நான் காத்திருக்கிறேன்.” என்ற த்வைபாயனரின் முகத்தில் ஒரு கணம் வெற்றியினால் விளையும் சந்தோஷம் தெரிந்தது. முனிவர் தன் கைகளைத் தட்டவே ஓர் ஊழியன் அங்கே வந்தான். அவனிடம், “உடனே சென்று வாடிகா எங்கிருந்தாலும் அழைத்துவா! இந்தக் குகைக்கு அருகிலேயே அவள் சுற்றிக் கொண்டிருக்க வேண்டும்!” என்று உத்தரவு போட்டார். ஊழியன் சென்றான். சற்று நேரத்தில் வாடிகா அங்கே ஓடோடி வந்தாள். “நான் என்ன சொன்னேன் த்வைபாயனா! அவள் இங்கே தான் சுற்றிக் கொண்டிருப்பாள் என்பதை உன்னிடம் சொன்னேன் அல்லவா? இதோ பார், அவள் வந்துவிட்டாள்!” என்றார். முனிவரின் நடத்தை, பாவனைகள் எல்லாமும் இப்போது மிக மென்மையாக மாறிவிட்டது. வாடிகா அவருடைய கண்ணின் கருமணி!

“என்னிடம் எதை எதிர்பார்க்கிறீர்கள், தந்தையே?” என்று வாடிகா கேட்டாள். தன் தலையை இரண்டாகப் பிரித்துப் பின்னலிட்டிருந்தாள். அவை முன்னால் வந்து விழுந்தன. அலட்சியமாக அதைப் பின்னால் தள்ளிக் கொண்டாள். “நீ எங்கள் சம்பாஷணையைக் கேட்டுக் கொண்டிருந்தாய் அல்லவா?” என்று வினவினார் முனிவர். “இல்லை, தந்தையே!” என்று ஒரு சிரிப்புடன் சொன்னாள் வாடிகா. “நான் பக்கவாட்டுக் கதவின் அருகே சும்மா நின்று கொண்டிருந்தேன். உங்களுக்கு எப்போது நான் தேவை என்றாலும் உடனே உள்ளே நுழைய ஆயத்தமாகக் காத்திருந்தேன்! அதோடு நீங்கள் மிகச் சத்தமாகவன்றோ பேசிக் கொண்டிருந்தீர்கள்! எனக்கு அவை காதில் விழுந்தே தீர்ந்தன!” என்றாள்.

“பொய் சொல்லாதே! நான் இப்போது த்வைபாயனன் மீது மிகக் கடுமையானதொரு வசிய மந்திரத்தை ஏவப் போகிறேன். அவன் எனக்குக் கீழ்ப்படிந்து நடக்கவில்லை. உன் மேலும் வசிய மந்திரப் பிரயோகம் செய்யப் போகிறேன். நீ என் அனுமதி இல்லாமல் சஞ்சீவனியைத் திருடி த்வைபாயனனிடம் கொடுத்ததற்காக உன் மேல் வசியப் பிரயோகம் செய்யப் போகிறேன்.” என்ற வண்ணம் மஹா அதர்வர் தன் கண்களை மூடிக் கொண்டார். அதன் பின்னர் த்வைபாயனரின் மேல் தன் கண்களை ஈட்டி போல் நாட்டியவண்ணம், “த்வைபாயனா! இதோ பார் வாடிகாவை! இவள் மேல் நீ காதல் கொள்வாய்!” என்றார்.

“அப்படியே குருதேவா! உங்கள் ஆணைப்படியே!” என்றார் த்வைபாயனர். அவரையும் அறியாமலேயே அவருடைய உள்ளுணர்வு வாடிகா மீது சென்றது. அவள் மேல் ஆழ்ந்த விருப்பம் கொண்டு அவளுக்காக ஏங்கத் தொடங்கினார். இப்போது முனிவர் வாடிகா பக்கம் திரும்பினார். “வாடிகா, த்வைபாயனன் மேல் அன்பு செலுத்து! மாறாத அன்பு செலுத்து!” என்றார். வாடிகா மிகுந்த நாணத்துடன் த்வைபாயனரைப் பார்த்தாள், அவளுக்கு அவர் ஏற்கெனவே அவள் இதயத்தில் கொலு வீற்றிருப்பதாகத் தோன்றியது. “சரி, தந்தையே! நான் இவர் மேல் அன்பு செலுத்துகிறேன்.” என்றாள். “ ம்ம்ம்ம்ம், இவ்வாறுதான் என் முன்னோர்களான பிருகு மற்றும் ஆங்கிரஸ் ஆகியோரின் மனோ வசிய மந்திர சக்தி பூர்த்தி அடைந்தது!” என்றார் மஹா அதர்வர். வாடிகா தன் பக்கவாட்டில் நின்று கொண்டிருந்த த்வைபாயனரை ஓரக்கண்ணால் பார்க்க த்வைபாயனர் புன்னகை புரிந்தார்.

“இருவரும் இங்கிருந்து செல்லுங்கள்!” என்ற மஹா அதர்வர், “ இங்கே உட்கார்ந்து கொண்டு முட்டாள்களைப் போ விழிக்காதீர்கள். பராசர முனிவரின் சீடர்கள் அனைவரும் இந்த மலை அடிவாரத்தில் காத்துக் கொண்டிருக்கின்றனர். அவர்களை இங்கே இந்த ஆசிரமத்திற்கு அழைத்து வந்து அனைத்து சௌகரியங்களோடும் தங்க வையுங்கள். த்வைபாயனர் தன்னுடைய ஆசிரமத்தை முழுதும் நிர்மாணிக்கும் வரை அவர்கள் இங்கேயே தங்கட்டும். சுமாந்து, அடுத்த நல்ல நாள் எப்போது வருகிறது என்பதைக் கொஞ்சம் பார்! இந்த வாடிகாவை இங்கிருந்து அழைத்துச் செல்! என்னிடமிருந்து அவள் விடுபடட்டும்!” என்றார்.