தன்னைத் தானே பணயம் வைத்தல்லவோ என்னை வெளியேற்றிக் கண்ணனிடம் ஒப்படைத்தாள்!  கண்ணனிடம் அன்பு செலுத்திய காரணத்திற்காக என்னையே இவள் காப்பாற்றி இருக்கையில் கண்ணனுக்காக என்னதான் செய்யமாட்டாள்!  பாதகி.  தன் தியாகத்தின் மூலமும் சுயநலமில்லாச் செய்கைகள் மூலமும் இவள் தன்னை மிக மிக உயர்ந்தவளாய்க் காட்டிக்கொள்கிறாளோ!  ஆஹா!  ருக்மிணிக்கு உள்ளம் கொதித்தது.  சற்று நேரம் முன்னர் இனிமையாகவும், மகிழ்ச்சியாகவும், அழகாகவும் தோன்றிய இவ்வுலகம் இப்போது கசந்தது.  அவளுக்கு வாழவே பிடிக்கவில்லை.  நேற்றெல்லாம் அவளுக்கு இருந்த மிதமிஞ்சிய மனமகிழ்ச்சியில் அவள் ஷாயிபாவைக் குறித்துச் சிறிதும் சிந்திக்கவே இல்லை.  கண்ணனின் மனைவியாகப் போகிறோம்;  அவனுடன் தனிமையில் இருக்கப் போகிறோம்;  அவனும் தானும் ஒருவருக்கொருவர் ஒன்றில் ஒன்றாய்க் கலந்து ஐக்கியம் அடையப் போகிறோம்;  இதற்கு முன்னால் வேறு யாரும், எவரும், முக்கியமாய்த் தெரியவில்லை.  ஆனால் ஆனால், இந்த ஷாயிபா கண்ணனின் ஒரு அன்புப் பார்வை கூடக் கிட்டியிராத நிலையில் அவனுக்காகக் கடற்கரைக்குத் தன்னந்தனியாய்ச் சென்று காத்திருக்கப் போய்விட்டாள்.
இதை உணர்ந்த அடுத்த கணம் ருக்மிணிக்கு தன்னை நினைக்கவே வெட்கமாய் இருந்தது.  அவள், ருக்மிணி, கண்ணனின் மனைவி, அவனின் சகல சுக, துக்கங்களிலும் பங்கெடுத்துக்கொண்டு இல்லறக்கடமை ஆற்றுவதாய் நேற்றுத்தான் அனைத்துப் பெரியவர்கள் முன்னிலையிலும் ஒப்புக்கொண்டு உறுதிமொழி அளித்து அக்னி சாட்சியாய் அவனை மணந்திருக்கிறாள்.  அவன் தர்மமே தன் தர்மமாய்க் கொள்வதாயும் அவனிடம் வாக்களித்திருக்கிறாள்.  இப்போது கண்ணனுக்கு ஒரு துன்பம் நேரிட்டது எனத் தெரிந்ததும் அடுத்து என்ன என்று சிந்திக்காமல் தன்னைக் குறித்தே, தன் எதிர்காலம் இனி என்ன ஆகும் என்றே சுயநலமாய்ச் சிந்திக்கிறாளே!   ருக்மிணிக்குத் தன்னை நினைக்க வெட்கமாய் இருந்தது!  கண்ணீரைப் பெருக்கியவண்ணம் தன் படுக்கையில் நிலையின்றிப் புரண்டாள்.
“ஆஹா, இது என்ன!  நான் இத்தனை சுயநலமாய் இருக்கிறேனே!  நன்றி கெட்டவளாக ஆகிவிட்டேனே! ஷாயிபா என்னருகே வந்து இந்த நேரம் எனக்கும் ஆறுதலும், தேறுதலும் கூறி இருக்கலாமோ!” இப்படி எல்லாம் மனது பொங்கிய வண்ணம் எழுந்த வருத்தத்தை அடக்க முடியவில்லை என்றாலும் உள்ளூர அந்தக் கறுப்பழகி ஷாயிபா கண்ணனின் மனதில் இடம் பிடித்திருப்பாள் என்பதை ருக்மிணியால் ஏற்கத்தான் முடியவில்லை.  ஆனால் கண்ணனின் இதயத்தில் அவள் ஒருத்திக்கு மட்டுமே இடம் என்றும் அவளால் உறுதிபடச் சொல்லமுடியவில்லை.  வசுதேவர், தேவகி அம்மா, அக்ரூரர், உத்தவன், பலராம அண்ணா, ஏன் திரிவக்கரை என எத்தனைபேர் கண்ணனின் அன்பில் திளைந்து ஆனந்திக்கிறார்கள்.  அவ்வளவு ஏன்?  யாதவர்கள் அனைவருக்குமே கண்ணன் கண்ணின் கருமணி எனில் கண்ணனுக்கோ அவர்கள் தான் ஜீவன்.   இந்த யாதவகுலத்தின் சின்னஞ்சிறு குழந்தை கூடக் கண்ணனை நேசிக்கிறது;  அவனும் அவ்வாறே.  அவன் பொதுவானவன்.  அவனை எனக்கு மட்டுமே நான் உரிமை கோர முடியாது.  அவர்கள் வாழ்வின் நம்பிக்கை நக்ஷத்திரம்.  ஒளி விளக்கு. அவள் யார் அவர்களைக் கண்ணனிடமிருந்து பிரிக்க!  மீண்டும் தன்னை நொந்துகொண்டாள் ருக்மிணி.
ஆம்,ஆம், நான் சற்றும் கண்ணனுக்குத் தகுதியில்லாதவள். அவனுடைய மனைவியாவதற்கு ஏற்றவள் அல்ல.  அவன் இயல்பாகவே கடவுள் தன்மை அதிகம் உள்ளவன்;  அப்படிப்பட்ட ஒருவன் என்னை மணந்து என்னையும் அவ்வாறு உயர்த்தி வைக்கப் பார்க்கிறான்.  ஆனால் என்னிடம் அப்படி எந்தவிதமான உயர்வு மனப்பான்மையும் கிஞ்சித்தும் இல்லை.  கண்ணனிடம் சுயநலமாக அன்பு வைத்துள்ளேன்.  ஷாயிபாவிடம் அவன் எப்படி நடந்து கொள்ளப் போகிறான் என்பது குறித்து நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. ஷாயிபாவின் தியாகத்தையும், அவள் தன்னைக் கொடுத்து என்னை மீட்டதையும், கரவீரபுரத்தில் எத்தகையதொரு கஷ்டமான நாட்களை அவள் கழித்திருக்கவேண்டும் என்பதோ என் புத்திக்கு எட்டவே இல்லை.  என்னால் செய்ய முடிந்ததெல்லாம் ஓர் உயர்ந்த இடத்தில் அனைவருக்கும் தலைவனாக இருக்கும் ஒருவனை எனக்கு மட்டுமே உரியவனாக மாற்றும் சுயநல நோக்கத்தோடு செயல்பட்டதே! அவனை இவர்களிடமிருந்து பிரிக்கப் பார்த்தேன். என்னைத் தான் அவன் ஒரு பெண் தெய்வமாக மாற்ற நினைக்கிறான்,
நீண்ட நேரம் யோசித்தாள் ருக்மிணி.  அவள் ஒரு பெண்; சாதாரணப் பெண்; சுயநலமும், ஆசையும், கொண்டதனால் பொறாமை கொண்டுவிட்டாள். இது இயற்கையானதே! ஆனால் கண்ணனின் ஸ்பரிசம் என்னை மாற்றி இருக்கவேண்டாமா?  அதன் பின்னரும் சுயநலத்தோடு இருக்கலாமா?  இருக்கட்டும்; இந்த ஷாயிபாவுக்குத் தான் தியாகம் செய்யத் தெரியுமா? நான் அவளை விஞ்ச மாட்டேனா!  கண்ணனிடம் என்னை முழுதாக ஒப்புக்கொடுப்பதில் அவளை விஞ்சிவிடுகிறேன்.  அவனுடைய நோக்கத்திற்கு முழுமனதாகத் துணை போகிறேன்.  ஷாயிபாவை எப்படியும் கரவீரபுரத்தில் தன்னந்தனியாக வாழ்நாளைக்கழிக்கக் கண்ணன் விடப்போவதில்லை. அது நிச்சயமாய்த் தெரியும்.  கண்ணனுக்கு அவள் அன்பின் சக்தி தெரியும்.  ருக்மிணியின் அன்பின் சக்தியும் தெரியவரும்.  இதன் மூலம் அவள் ருக்மிணி உண்மையானதொரு பெண் தெய்வமாக ஆகிவிடுவாள்.  யாதவர்கள் அவளை உண்மையாகவே ஒரு தேவியாக ஒப்பற்றவளாக வணங்குவார்கள். ஷாயிபா கண்ணனின் சக்கரத்தைத் தானே வழிபடுகிறாள்.
தன்னை மறந்து கத்தினாள் ருக்மிணி: “கோவிந்தா, நீ யாரை விரும்பினாலும், எவர் மேல் அன்பு செலுத்தினாலும், அவர்கள் எனக்கும் அன்புக்குரியவரே.  ஷாயிபாவைத் தனிமை வாழ்க்கை நடத்தக் கரவீரபுரத்திற்குத் திருப்பி அனுப்பப் போவதில்லை.  என் கோவிந்தா!  வா, வந்துவிடு, பத்திரமாய்த் திரும்பி வா.  நான் ஓர் முட்டாளாகவும், சுயநலக்காரியாகவும் இருந்துவிட்டேன்.  என்னை மன்னித்துவிடு.”
ருக்மிணி தன் படுக்கையை விட்டு எழுந்து தன்னைச் சுத்தம் செய்து குளித்துப் புத்தாடை தரித்து, தேவகி அம்மாவின் தினப்படி வேலைகளில் பங்கெடுத்துக்கொண்டு, எல்லாருக்கும் மதிய உணவு அளித்து முடிந்ததும், தன்னை பிரபாஸ க்ஷேத்திரத்துக்கு அனுப்புமாறும் தானும் ஷாயிபாவோடு அங்கே காத்திருக்கப் போவதாகவும் அனுமதி கேட்டாள்.  பின்னர் தனக்கு என வந்த ரதத்தில் ஏறிக்கொண்டு பிரபாஸ க்ஷேத்திரத்தை நோக்கிச் சென்றாள்.  அங்கே கடற்கரையில்  கட்டப்பட்டிருந்த தடுப்புக்களின் பக்கம் ஓர் ஓரமாய் நின்று கொண்டிருந்த ஷாயிபா அலைகள் பொங்கி ஆர்ப்பரித்துக்கொண்டிருந்த கடலும், தொடுவானமும் சேரும் எல்லையைக் கண்ணிமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தாள்.  ருக்மிணி வந்தது கூடத்தெரியாமல் பார்த்துக்கொண்டிருந்த ஷாயிபாவின் முகத்தில் தெரிந்த இளநகையின் வசியம், நக்ஷத்திரங்கள் போல் ஜொலித்த கண்களில் தெரிந்த அன்பின் ஒளி, கண்ணனையே நினைத்திருந்த அவள் மனதின் ஒருமை கண்ணனைக் கட்டி இழுத்து வந்துவிடும் நிச்சயமாய். ருக்மிணி அமைதி கொண்டாள்.
அடுத்துப் பார்ப்போம்.
1 comment:
இந்த அத்தியாயம் ருக்மணியின் மனக்குழப்பம்,சிந்தனை ,தெளிவு என்று போகிறது .,
ம்.. பார்ப்போம்..
Post a Comment