Wednesday, December 28, 2011

கர்ணனின் பின்புலம்!

இள வயதில் துரோணரின் குருகுலத்தில் படிக்கும் நாட்களில் இருந்தே ஐந்து சகோதரர்களின் அபாரமான திறமை, அவர்களின் ஒற்றுமை, பணிவு போன்றவற்றைப் பிறர் பாராட்டிப் பேசுவதும், யாரிடமும் அனுசரித்துச் செல்லும் அவர்களின் சுபாவமும் கண்டு கர்ணனுக்கு அவர்களிடம் தீராத பொறாமை ஏற்பட்டிருந்தது. இதன் காரணமாகவே அவன் துரியோதனனுக்கும், அவன் சகோதரர்களுக்கும் பாண்டவர்களைப் பிடிக்காது என்பதைப் புரிந்து கொண்டு அவர்களிடம் நட்புக் கொண்டு துரியோதனின் பொறாமையையும் கோபத்தையும் வளர்த்து வந்தான். இதற்காகவே துரோணர் மறுத்த பின்னரும் பரசுராமரிடம் தான் பிராமணன் எனச் சொல்லிக்கொண்டு அனைத்துக்கலைகளையும் பிரம்மாஸ்திரப் பிரயோகம் முதல் கற்றுத் தேர்ந்தான் கர்ணன். முக்கியமாகப் பாண்டவர்களில் அர்ஜுனனை அழிப்பதே கர்ணனின் குறிக்கோளும் வாழ்நாள் லட்சியமுமாக இருந்தது. பரசுராமரின் ஆசிரமத்தில் ஓர்நாள் பயிற்சி முடிந்து குரு ஓய்வெடுக்கும் நேரம். பரசுராமர் ஒரு மரத்தடியில் படுக்கச் சென்றார். அப்போது அவர் தலையைத் தன் மடியில் தாங்கிக்கொண்டான் கர்ணன். கர்ணன் மடியில் தன் தலையை வைத்துப் படுத்திருந்தார் பரசுராமர்.


கொஞ்ச நேரத்தில் ஒரு ராக்ஷத வண்டு வந்து அங்கேயே கர்ணனையும், பரசுராமரையும் சுற்றி வந்தது. கர்ணன் விரட்ட விரட்ட அது அங்கிருந்து செல்லாமல் அவன் தொடையில் வந்தமர்ந்து துளைக்கத் தொடங்கியது. வண்டு துளைக்கத் துளைக்க ரத்தம் பெருக்கெடுத்தது. ஆனாலும் கர்ணன் குருநாதரின் உறக்கம் கலைந்து போய்விடுமோ என்றஞ்சி அசையாமல் இருந்தான். கடும் வலியையும் பொறுத்துக்கொண்டான். ஆனால் வழிந்தோடிய ரத்தம் பரசுராமரின் முகத்தில் பட்டு அவரின் தூக்கம் கலைந்தது. விழித்த அவர் எழுந்து பார்த்து ஆச்சரியமடைந்தார். ராக்ஷத வண்டைப் பார்த்ததுமே அவரின் தீர்க்க திருஷ்டியால் அது ஒரு அசுரன் எனவும் சாபவிமோசனத்துக்குக் காத்திருப்பதையும் உணர்ந்தார். அவரின் பார்வை பட்டதுமே வண்டுக்கு சாபவிமோசனம் கிடைக்கிறது. அதன் பின்னரே கர்ணனைப் பார்த்து பரசுராமர், இவ்வளவு பெரிய துளையைப் போட்டும் நீ வலியைப் பொறுத்துக்கொண்டு இருந்திருக்கிறாய் எனில் இது ஓர் அந்தணனால் இயலாதது. நீ நிச்சயம் அந்தணன் அல்ல; க்ஷத்திரியனாகவே இருக்கவேண்டும். யார் நீ?” என்று கேட்கிறார். உடனே உண்மையை ஒளிக்க இயலாத கர்ணன் தான் க்ஷத்திரியன் தான் எனவும் ராதேயனால் வளர்க்கப்பட்டதாகவும் துரியோதனனால் அங்கநாட்டிற்கு அரசனாகி இருப்பதாயும் கூறுகிறான்.


அவன் உள் மனதின் எண்ணங்களைப் புரிந்து கொண்டாலும் தன்னிடம் சீடனாகப் பயின்றுவிட்ட அவனை வேறு வழியில் சபிக்க நினைத்த பரசுராமர் அவன் கற்ற வித்தை அவனுக்கு உரிய காலத்தில் பலிக்காது என்றும் பிரம்மாஸ்திரத்தைப் பிரயோகிக்கையில் அது அவனுக்கு மறந்து போகும் எனவும், ஆனாலும் கர்ணனுக்குச் சமமான க்ஷத்ரியன் இவ்வுலகில் இருக்கமாட்டான்/ஆனால் அதன் முழுப்பலனும் அவனுக்குக் கிட்டாது எனவும் சபிக்கிறார். ஆகக் கூடி க்ஷத்ரியர்களிலேயே சிறந்தவனாகக் கர்ணன் இருந்தும், அர்ஜுனனை விடவும் ஒருபடி கூடவே அவன் வில்வித்தைகளில் தேர்ந்திருந்தும், அவனுக்குத் தக்க இடம் கிடைக்கவில்லை என்பது குருவின் சாபமும் ஒரு காரணம். வேறொரு சமயம் பரசுராமரிடம் அவன் பயின்றுவந்த காலத்தில் வில்வித்தைப் பயிற்சி மேற்கொண்டிருக்கையில் அவனுடைய அம்பு தவறுதலாக ஒரு பிராமணனின் பசுவின் மேல் பட்டுவிடுகிறது. அந்தப் பசுவை நம்பி வாழ்ந்து வந்த பிராமணன் கர்ணனுக்கு ஒரு பாவமும் அறியாப் பசு எவ்வாறு கர்ணனால் துன்பம் அடைந்ததோ அப்படியே கர்ணனுக்கும் தக்க நேரத்தில் உதவி கிட்டாமல் துன்பம் அடைவான் என சாபம் கொடுக்கிறான்.


வேறொரு சமயம் கர்ணன் தன் ரதத்தில் வீதியுலா வந்து கொண்டிருக்கையில் ஒரு சிறுமி நெய்வாங்கிக் கொண்டு வருகையில் நெய்யெல்லாம் கொட்டிப் போய்த் தன் சிற்றன்னை திட்டுவாளே என அழுது கொண்டு நிற்பதைப் பார்த்தான். புதுசாக நெய் வாங்கித் தருவதாகச் சொன்ன கர்ணனிடம் அந்தப் பெண் பிடிவாதமாகத் தனக்குக் கீழே கொட்டிய அந்த நெய்தான் வேண்டும் என்று பிடிவாதமாய்ச் சொல்ல, கர்ணனும் உடனே அந்த இடத்தில் இருந்த மணலை எடுத்துக் கைகளால் பிழிந்தான். அவன் கைகளில் அகப்பட்ட பூமாதேவி வலி தாங்காமல் கதறினாள். ஒரு சிறுமிக்காகத் தன்னைத் துன்புறுத்திய கர்ணனுக்குப் போர்க்களத்தில் அவனுக்கு மிகவும் தேவைப்படும் முக்கியமான தருணத்தில் அவனுடைய தேர் பூமியில் புதைந்து போகும் என்று கூறினாள். ஆக அர்ஜுனனைக் கொல்ல வேண்டி பிரம்மாஸ்திரப் பயிற்சிக்குப் போன கர்ணன் இப்படியாக மூன்று விதமான சாபங்களை வாங்கிக் கொண்டு ஹஸ்தினாபுரம் வந்திருந்தான்.

7 comments:

பித்தனின் வாக்கு said...

karnanin kathaikal nam kelvi patta kathaikalil vithiyasamaka irukinrathu.

but correcta irukku. Good amma innamum eluthungal

அப்பாதுரை said...

பூமாதேவி கதை இப்போ தான் படிக்கிறேன். interesting.

sambasivam6geetha said...

வாங்க பித்தனின் வாக்கு. நன்றி.

sambasivam6geetha said...

அப்பாதுரை, எப்போவோ படிச்சது; நல்லா நினைவும் வரலை; அதனால் லேசாத் தொட்டுக் காட்டினேன். :)))))

priya.r said...

ஒரு சாபம் மட்டும் தான் நினைவில் இருக்கிறது.

மற்ற இரு சாபங்களை பற்றி தெரிந்து கொண்டேன் !

பதிவுக்கு நன்றி கீதாமா

Unknown said...

நல்ல பதிவு .நன்றி!

Unknown said...

நல்ல தகவல்