Wednesday, April 2, 2014

துரியோதனனின் ஆசைகளும், நிராசைகளும்

அத்தோடு முடிந்தது என்று விட முடியுமா?  துரியோதனன் எவ்வளவு முயற்சி எடுத்து கிட்டத்தட்டத் தன் உயிரையே பணயம் வைத்தல்லவோ அந்த ஏற்பாடுகளைச் செய்தான்.  அதை நினைக்கையிலேயே அவன் முகம் விகசித்துப் புன்னகையில் மலர்ந்தது.  அந்தத் திட்டம் தான் எத்தனை அருமையாகச் செயல்படுத்தப்பட்டது!  என்ன இருந்தாலும் ஷகுனி மாமாவைப் போல் சிறந்தவர் உண்டா!  அவருக்குத் தான் நன்றி சொல்ல வேண்டும். அவருக்கு மட்டுமா!  அந்த யக்ஷன் ஸ்தூனகர்ணனுக்கும் தான்.  எவ்வளவு திறமையாகத் திட்டம் போட்டு அரக்கினாலேயே மாளிகை கட்டி,  அதிலேயே கந்தகத்தையும் சேர்த்துக் குழைத்து, ஆஹா!  என்ன அருமையான திட்டம்! பாண்டவர்கள் குடியிருக்க அற்புதமானதொரு மாளிகை கட்டப்பட்டது.  அதை அறியாமல் அவர்களும் அங்கே குடி போய், மாளிகையே தீப்பற்றி எரிந்து ஒருவழியாகச் செத்தொழிந்தனர்.  இதை நிறைவேற்றிய புரோசனனுக்கும் நன்றி சொல்ல வேண்டும் தான்.  ஆனால் இந்தத் திட்டத்தை நிறைவேற்றுகையில் அவன் உயிரையும் சேர்த்து எடுத்துக் கொண்டுவிட்டது இந்தத் திட்டம்.   தான் மேற்கொண்ட கடமைக்காகத் தன் இன்னுயிரையும் கொடுத்துவிட்டான் புரோசனன்.

இவை அனைத்துக்கும் பின்னர்  தானே துரியோதனன் யுவராஜாவாக ஆக முடிந்திருக்கிறது.  அதற்காக எத்தனை பாடுபட்டிருக்கிறான்.  அவன் எடுத்துக் கொண்ட லக்ஷியத்தின் முதல் படியை இப்போது தான் எட்டியுள்ளான். ஆனாலும் அவனுடைய பேராவல் இன்னமும் முற்றுப் பெறவில்லை.  அவன் யுவராஜாவாக ஆவதற்குப் போடப்பட்ட வழிகள் சாமானியமானவையா! முட்கள் நிரம்பிய பாதையில் பயணித்தன்றோ அவன் யுவராஜாவாக ஆகி உள்ளான்.  ஆனாலும் அவனை நம்புபவர்கள் யாருமில்லை.  அவனுடைய ஆசைகள், விருப்பங்கள் முறியடிக்கப்படுகின்றன.  அவன் போடும் திட்டங்களும் பெரும்பாலும் தவறாகப் போகின்றன.  அவனுடைய மதிப்புக்கும், மரியாதைக்கும் உரிய குரு துரோணர் அவரும் அவனை நம்பவில்லை போல் தெரிகிறது.  அவனுக்கு உதவி செய்பவராக அவர் இல்லை.  அன்றைய தினம் சபாமண்டபத்தில் துரியோதனனை அவமானப்படுத்தும் நோக்கத்துடன் தான் புஷ்கரத்தை செகிதனாவுக்குத் திருப்பிக் கொடுக்கும் யோசனையை ஆதரித்தார். ஹூம்!   இதன் மூலம் அவன் அடைந்த மாபெரும் வெற்றியை ஒரு முட்டாள்தனமான செயலாக மாற்ற நினைக்கிறாரோ!  அவர் ஏன் இப்படி எல்லாம் செய்கிறார் என்பதைப் புரிந்து கொள்ள முடியவில்லை.  அவருடைய இந்த மாற்றத்தை  துரியோதனனால் கற்பனை செய்து கூடப் பார்க்க முடியவில்லை.

நிராசையிலும், மனக்கசப்பிலும் ஆழ்ந்து போன அவன் ஒரு மாறுதலை வேண்டிக் காத்திருந்தான். அவன் வாழ்க்கையின் ஒரு புத்தம்புதிய அத்தியாயம் திறக்கக் காத்திருந்தான்.  அந்தக் கசப்பான நாட்கள் ஒவ்வொன்றும் கடக்கக் கஷ்டமாக இருக்கும் சமயங்களில் எல்லாம் அவன் மரணத்தின் தேவன் யமனிடம் கூடப் பிரார்த்தித்துக் கொள்ளத் தயங்கவில்லை.  ஏ, யமதர்மராஜனே, என் பாட்டனார், பீஷ்ம பிதாமகர், கொள்ளுப்பாட்டியார் சத்யவதியார் இன்னும், இன்னும், அவ்வளவு ஏன், என் தந்தை, வெறும் தலையாட்டி  பொம்மையாக அரியணையில் வீற்றிருக்கும் திருதராஷ்டிரனைக் கூட நீ எடுத்துக் கொண்டு விடு.  இவர்களால் என் வாழ்க்கை பாழானது போதும். இனியாவது என்னை நிம்மதியாக வாழவிடு என்றெல்லாம் பிரார்த்தித்திருக்கிறான்.  இவ்விதம் நிராசையில் ஆழ்ந்திருக்கையில் தான் நம்பிக்கையின் ஒளி ஒரு கீற்றுப் போல் பிரகாசிக்க ஆரம்பித்தது.  பாஞ்சால அரசன் துருபதன் தன் மகளுக்குச் சுயம்வரம் வைத்திருப்பதாகச் செய்தி கிடைத்ததோடு அல்லாமல் அதற்குக் குரு வம்சத்தினருக்கு அழைப்பும் விடுத்திருந்தான்.  உடனடியாக அவன்  பாஞ்சாலம் வந்து சுயம்வரத்தில் கலந்து கொண்டு திரெளபதியை வெல்ல வேண்டும் என்றே நினைத்தான்.  இதற்கு துரோணரின் விருப்பத்தைக் கேட்க வேண்டாம் என்றிருந்தான். தேவைப்பட்டால் கூட அவரிடம் இது குறித்துக்கலந்து ஆலோசிக்கக் கூட அவன் விரும்பவில்லை.

அவனுக்கு நிச்சயமாகத் தெரியும்;  அவன் சுயம்வரத்தில் வென்று திரெளபதியின் கரங்களைப் பிடிப்பான் என.  அப்படி மட்டும் நடந்து விட்டால்! ஆஹா, இந்தப் பாட்டனார் பீஷ்மரின் பேச்சையும் அதிகாரத்தையும் கேட்டுக் கொண்டு உட்கார்ந்திருக்கவே வேண்டாம்.  அவர் ஒப்புக் கொண்டாலும் சரி ஒப்புக் கொள்ளாவிட்டாலும் சரி அவன் தான் ஹஸ்தினாபுரத்தின் அங்கீகரிக்கப்பட்ட அடுத்த அரசனாக இருப்பான்.  ஹூம், தந்தையார் இருந்தால் என்ன?  அவருக்கோ வயதும் ஆகி விட்டது.  கண்களும் தெரியப் போவதில்லை. அவரை ஓய்வு எடுக்கச் சொல்லிவிட்டு அவன் அரசனாகவே ஆகிவிடலாம். அவனுடைய அரச பதவி; அவன் நீண்டநாட்கள் ஆசைப்பட்டது கிடைத்துவிடும்.  இதன் மூலம் அவன் தன்  ராஜ்யாதிகாரத்தையும், பதவியையும் தக்க வைத்துக் கொள்ளலாம்.  அதன் பின், அதன் பின்!  அதன் பின்னர் என்ன!  அடுத்து அவன் சக்கரவர்த்தி ஆவது தான்!  அதற்கான வழிகள் இப்போதே அவன் கண்களில் தெரிகின்றன.  அவன் சக்கரவர்த்தி ஆகப் போகும் நாள் வெகு தூரத்தில் இல்லை.  ஆனால் அவன் முதலில் செய்ய வேண்டியது, அவன் முன்னோர் ஆன பரதன் செய்தது போல் ஓர் அஸ்வமேத யாகம் செய்து விட வேண்டும். அப்படித் தானே பரதன் சக்கரவர்த்தி ஆனான்.  ஆகவே அவனும் அஸ்வமேத யாகம் செய்ய வேண்டும்.

இப்போது கிரஹ நிலைமைகள் கூட அவனுக்குச் சாதகமாகவே இருக்க வேண்டும்.  பிடிவாதக்காரர் ஆன ஆசாரியர் துரோணர் கூட விட்டுக் கொடுத்து விட்டார். ஹூம், திறமைகளே இல்லாத, அவன் மனைவி பானுமதி கூட அவனுக்காகக் கிருஷ்ணனிடம் பேசி அவன் நட்பைப் பெற்றுத் தருவதாக உறுதி கூறி இருக்கிறாள்.  அந்த மாட்டிடையன், அவனுக்குத் தான் இந்த ஆர்யவர்த்தத்தில் எவ்வளவு செல்வாக்கு! ஹூம், எப்படியோ போகட்டும். அவன் இத்தனை நேரம் துரியோதனன் பக்கம் வந்திருப்பான்.  தன்னுடைய சாமர்த்தியத்தை நினைத்துத் தானே சிரித்துக் கொண்டான் துரியோதனன். "அந்த ஐந்து சகோதரர்களும் மட்டும் உயிருடன் இருந்திருந்தால் கிருஷ்ணன் உதவியோடு என்னென்னவெல்லாம் செய்திருப்பார்கள்!   இப்போது அவர்கள் இல்லை;  ஆகவே கிருஷ்ணன் என் பக்கம் தான் இருப்பான். நிச்சயமாக சர்வ நிச்சயமாகப் பாஞ்சால இளவரசி என்னைத் தான் தேர்ந்தெடுப்பாள்.   அதில் சந்தேகமே இல்லை. "

" என்னை விடப் பெரிய துணைவன் அந்தப் பாஞ்சால இளவரசிக்குக் கிடைத்து விடுவானா?  ஒரு காலத்தில் சக்கரவர்த்தி பரதன் ஆட்சி செய்த அரியணையில் என்னோடு அமர அந்தப் பாஞ்சால இளவரசி கொடுத்து வைத்திருக்க வேண்டுமே.  ஆர்ய வர்த்தத்தையே ஆண்ட சக்கரவர்த்தி பரதனின் குலத்து வாரிசுக்குத் துணைவியாக ஆகப் போவது அவளைப் பொறுத்தவரை பெரிய விஷயம்.  குரு வம்சத்தினரின் சாம்ராஜ்யத்துக்கு அடுத்த சக்கரவர்த்தியாகப் போகும் அவனை விடப் பெரிய அரசனைப் பாஞ்சால இளவரசிக்குத் தேடிக் கண்டு பிடிக்கத் தான் முடியுமா! " அவன் மன ஓட்டம் அவன் மனைவி பானுமதியைச் சுற்றி ஓடியது.  அவள் அந்த மாட்டிடையன் கண்ணனிடம் வாக்குறுதியெல்லாம் வாங்கி வந்துவிட்டாள்.  துரியோதனனின் தகுதியை நிரூபிக்க ஷகுனிக்கு ஏற்றதொரு தருணத்தை ஏற்படுத்தித் தருவதாகவன்றோ சொல்லி இருக்கிறான். " சின்னப் பெண் தான் இந்த பானுமதி.  ஆனால் எவ்வளவு பெரிய வேலையைச் செய்திருக்கிறாள்.  உண்மையிலேயே நல்ல பெண் தான். திரெளபதியை மணந்துவிட்டேன் என நான் அவளை மறக்க மாட்டேன்;  ஆம் நிச்சயமாக .  அவள் செய்திருக்கும் இந்த மாபெரும் உதவிக்கு நன்றியுடன் அவளையும் ஒரு மனைவியாக ஏற்றுக் கொண்டு வாழ்வேன்.  இது  உறுதி!"

ஆனால், துரியோதனனைப் பொறுத்தவரை இந்தக் கண்ணனை நம்ப முடியுமா என இன்னமும் சந்தேகமாகவே இருக்கிறது.  அவன் பாண்டவர்களிடம் மிகவும் பிரியம் கொண்டவன்;  அவர்களுக்கிடையே எல்லையில்லாப் பாசம் உள்ளது. அவனுக்கு நிச்சயமாகப் பாண்டவர்களின் மறைவுக்கு துரியோதனன் காரணமாக இருக்கக் கூடும் என்ற சந்தேகம் ஏற்பட்டிருக்கும்.  ஏன் நினைக்கவே நினைப்பான்.  துரியோதனன் தான் பாண்டவர்களைத் தன் பாதையிலிருந்து அகற்றி இருப்பான் என்பதைப் புரிந்து கொண்டே இருப்பான்.  அவனால் துரியோதனனுக்கு உதவி செய்ய இயலுமா?  சந்தேகம் தான்;  எனினும் கொடுத்த வாக்குறுதியைக் கண்ணன் தவற விட்டான் என்ற பேச்சுக்கே இடமில்லை.  அது ஒன்று தான் நம்பிக்கை அளிக்கிறது.  அதிலும் தான் தங்கையாக வரித்துக் கொண்ட பானுமதிக்குக் கொடுத்த வாக்குறுதியிலிருந்து அவன் பின் வாங்க மாட்டான் என்றே துரியோதனன் நம்பினான்.  இந்த சாமர்த்தியசாலியான கண்ணனின் நம்பிக்கையை வென்ற அவன் மனைவி பானுமதியும் நிச்சயம் சாமர்த்தியசாலி தான்.

இவ்வளவையும் யோசித்த வண்ணம் தனக்கு உருவி விட்டுப் பிடித்துவிட்டுக் கொண்டிருக்கும் வீரர்களைப் பார்த்தான் துரியோதனன்.  அவர்கள் தங்கள் கடமையே கண்ணாக இருந்தனர்.  நேரமோ சென்று கொண்டிருந்தது.  திடீரென துரியோதனனுக்கு அலுப்பும், சலிப்பும் மேலிட்டது.  ஷகுனி மாமா சென்றவர் ஏன் இன்னும் வரவில்லை.  அந்த மாட்டிடையன் ஏதேனும் தந்திர, மந்திரங்கள் பண்ணிவிட்டானா?  கண்ணனைப் பார்க்கச் சென்றிருந்தான் ஷகுனி.  தன் மாமன் வரவை எதிர்நோக்கிக் காத்திருந்தான் துரியோதனன்.  காலடிச் சப்தம் கேட்டது.  ஷகுனியின் காலடிகள் போலத் தான் தெரிந்தன.  "ஆம், ஆம், இவ்வளவு சப்தமாகவும், வேகமாகவும் காலடிகளை எடுத்து வைத்துக் கொண்டு ஷகுனியைத் தவிர வேறெவரும் வர மாட்டார்கள்.  அதோடு வேகமாக மூச்சு விடும் சப்தமும் கேட்கிறதே!  இதுவும் ஷகுனி மாமாவுடையது தான். அப்பாடா, ஒரு வழியாக வந்துவிட்டார்.  ஹூம், இந்த ஷகுனி மாமா ஒவ்வொரு நாளும் இன்னமும் குண்டாக ஆவதோடு அல்லாமல் அத்தனைக்கு அத்தனை தந்திரமுள்ளவராகவும் மாறி வருகிறார். " ஷகுனி உள்ளே நுழைந்தான்.  ஒரு புன்னகையுடன் அவனை வரவேற்றான் துரியோதனன்.  ஷகுனி உண்மையிலேயே மிகவும் பருமனாக ஆகிவிட்டிருந்தான்;  அதோடு அவன் முகத்துக்கு அந்தக் கண்கள் மிகச் சிறியனவையாக இருந்தாலும் தந்திரத்திலும், சூழ்ச்சியிலும் அவை தேர்ந்தவை என்பதை அவனுடைய ஒரு பார்வையே காட்டியது.  அவன் சிரிப்பில் நல்லெண்ணத்தைக் காட்டினாலும் அதன் பின்னணியில் தந்திரமும், சூழ்ச்சியும் ஒளிந்திருக்கிறது என்பதை அந்தக் கண்கள் தெளிவாகக் காட்டின.2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

ஷகுனி என்றால் சுனாமி...!

ஸ்ரீராம். said...

வேகமான எண்ண ஓட்டங்கள் அழகாக விவரிக்கப்பட்டிருக்கிறது!