Thursday, April 10, 2014

ஜராசந்தனின் கோபம்!

“குழந்தாய், நம்முடைய துரிதமான நடவடிக்கைகளால் அவர்களைத் திகைக்க வைத்து ஆச்சரியப்பட வைத்து நம் காரியத்தை நிறைவேற்றிக் கொள்வதே வெற்றிக்கு முக்கியமான அடிப்படைத் தேவைகளாகும்.  நம்முடைய வீரர்களிலேயே சிறந்தவர்களாகப் பொறுக்கி எடுத்துக் கொண்டு நீ நினைத்ததை நிறைவேற்று.  ஆனால் ஒரு விஷயம், கவனமாகக் கேள், நீ உன் முயற்சியை ஆரம்பித்துவிட்டாயானால் பின்னர் பின்வாங்கக் கூடாது. தயக்கமே இல்லாமல் முழு முயற்சியுடன் உன் வேலையைச் செய்யவேண்டும். “ தன் அருமைப் பேரனுக்கு ஊக்கமளிக்கும் வண்ணம் இதைச் சொன்ன ஜராசந்தன் சற்று யோசித்தான். பின்னர் அதே யோசனையுடனேயே, “குழந்தாய், நீ இந்த முக்கியமான வேலையில் ஈடுபட்டிருக்கையில் நாங்கள் சுயம்வர மண்டபத்திற்குச் செல்லும் வழியில் உள்ள சாலைச் சந்திப்பில் காத்திருப்போம்.  உன் வேலையை முடித்துக் கொண்டு வெற்றி கிட்டியதும் நீ உன் சங்கை எடுத்து வெற்றி முழக்கம் செய்வாயாக!  நாங்கள் அதைக் கேட்டதும் உன்னோடு வந்து மகதம் செல்லும் ராஜபாட்டையில் சேர்ந்து கொள்கிறோம்.  கவனமாகச் செய்ய வேண்டும்.” என்று முடித்தான்.

இவை அனைத்தையும் ரகசியமாகவே தன் மகனும், பேரனும் மற்ற நெருங்கிய படைத்தலைவர்களும் கேட்கும்படி சொல்லிக் கொண்டிருந்தான் ஜராசந்தன்.  அப்போது அவனுக்குக் கப்பம் கட்டும் சிற்றரசன் விதண்டன் என்பவன் தன் மகன் தண்டனோடு ஜராசந்தனின் கூடார வாயிலுக்கு வந்தான். அவன்  உள்ளே வந்ததுமே அவனிடம் மிகுந்த கோபத்தைக் காட்டிய ஜராசந்தன் அவன் தாமதமாக வந்ததன் காரணத்தையும் கேட்டான்.  தாங்கள் அனைவரும் முன்கூட்டியே வந்து விவாதம் நடைபெற்றுக் கொண்டிருக்க விதண்டன் தாமதமாக வந்தது ஜராசந்தனால் சகிக்க முடியவில்லை.  ஆனால் அவன் பதிலளித்ததுமோ!  ஜராசந்தனின் கோபம் கொதிநிலைக்கே போய் விட்டது.  தன்னிரு கரங்களையும் கூப்பி ஜராசந்தனை வணங்கிய விதண்டன் தன் மகனையும் வணங்கச் சொல்லி ஜாடை காட்டினான்.  பின்னர் கைகள் கூப்பிய வண்ணமே, “பிரபுவே, நாங்கள் குறித்த நேரத்துக்கு முன்னதாகவே கிளம்பினோம்.  ஆனால் இங்கே வரும் வழியில் பெரும் கூட்டம் எங்கள் வழியை மறித்துவிட்டது.  அந்தப் பெரும் கூட்டத்தை எதிர்த்துக் கொண்டு எங்களால் இங்கே வர இயலவில்லை.  கூட்டம் கலைந்ததும் தான் வர முடிந்தது. “ என்றான்.

“அப்படிப் பெரும் கூட்டத்தைக் கூட்டியவர் யாரோ? என்ன நடந்தது அங்கே? ” என ஜராசந்தன் அலக்ஷியமாகவே வினவினான்.  “சக்கரவர்த்தி, கிருஷ்ண வாசுதேவனும், அவன் அண்ணன் பலராமனும் சக்கரவர்த்தி துருபதனின் அழைப்புக்கு இணங்க அவன் மாளிகைக்குச் சென்றுவிட்டுத் திரும்பிக் கொண்டிருந்தார்கள்.  அவர்களுடன் யாதவத் தலைவர்கள், அதிரதர்கள், மஹாரதர்கள் எனக் கூட்டமாக வந்தனர்.  அவர்கள் அனைவரும் அவரவர் கூடாரம் சென்ற பிறகே எங்களுக்கு வழி கிட்டியது.” என்றான்.

“ஹூம், கிருஷ்ணா!  கிருஷ்ணா! கிருஷ்ண வாசுதேவன்!  மாட்டு இடையன்!  அவனுக்கும் அழைப்புப் போயிருக்கிறதா என்ன?  அவன் ஒன்றும் அரசனோ, சக்கரவர்த்தியோ இல்லையே?  அவனுக்கு , அந்த இடையனுக்கு இங்கே என்ன வேலை?  எதற்காக வந்திருக்கிறானாம்?”

“என் கடவுளே, பிரபுவே, இந்தக் கிருஷ்ண வாசுதேவன் மற்ற எந்த அரசர்களை விடவும் அதிகச் செல்வாக்குப் பெற்றிருப்பதோடு அனைவரையும் தன் பக்கம் கவர்ந்து விடுகிறான்.  பெரிய மஹாராஜாக்கள், சக்கரவர்த்திகள் அவனைப் பார்த்தால் தேன் குடித்த வண்டைப் போல் ஆனந்தக் கூத்தாடுகின்றனர். உதாரணமாக விராடன், போஜன், சுநீதன், மற்றும் சில குரு வம்சத்து இளவரசர்கள் அனைவருமே அவனைச் சென்று எதிர்கொண்டு அழைத்து வரவேற்றிருக்கின்றனர் என்றால் பாருங்களேன்!  அவன் செல்லும் இடமெல்லாம் பெரும் கூட்டம் கூடுகிறது.  அவன் கூடார வாயிலில் மக்கள் மணிக்கணக்காகக் காத்திருந்து அவன் தரிசனம் பெற விரும்புகின்றனர். அவனைக் கண்டதும், கடவுளையே நேரில் கண்டது போல் மகிழ்ந்து போவதோடு அல்லாமல் சாஷ்டாங்கமாக நமஸ்கரித்து அவனிடம் இருந்து ஆசிகளையும், வாழ்த்துகளையும் வேண்டி நிற்கின்றனர்.  இதில் வயது, வித்தியாசமே பார்ப்பதில்லை.  எப்போது அவனைப் பார்த்தாலும், “வாசுதேவக் கிருஷ்ணனுக்கு ஜயமங்களம்!’ என்று மங்கள கோஷங்களும், வெற்றி முழக்கங்களும் செய்கின்றனர்.”

“எங்கே தங்கியுள்ளான்?”

“இங்கிருந்து கொஞ்ச தூரத்தில் தான் இருப்பதாகத் தெரிகிறது.  அவனோடு 20க்கும் மேற்பட்ட யாதவ அதிரதர்கள் வந்திருப்பதாகப் பேசிக் கொள்கின்றனர்.”

“இத்தனை பேர்களா? ம்ம்ம்ம்ம்ம்?  எதற்காக இத்தனை அதிரதர்கள்?  அந்த இடையன் என்ன செய்யப் போகிறானாம்?  அவன் எண்ணம் தான் என்ன?”

“தெரியவில்லை பிரபுவே.  சொல்வதற்கு மிகவும் கடினமானது.  அடுத்து அவன் என்ன செய்யப் போகிறான் என்பது யாருக்கும் தெரியவும் இல்லை. ஆனால் பெரும் கூட்டத்தைக் கவர்ந்து தன்பால் இழுக்கும் வல்லமை அவனிடம் உள்ளது.  அதை வைத்து அவன் தான் அனைத்தையும் மறைமுகமாக நடத்தி வருகிறானோ என்று தோன்றுகிறது.”

“ம்ம்ம்ம்ம்ம்… நகரத்தின் வாயிலுக்கே சென்று துருபதன் அவனை வரவேற்றானாமா?” என்று ஜராசந்தன் கேட்டான்.

“இல்லை என்றே எண்ணுகிறேன்.  ஏனெனில் கிருஷ்ண வாசுதேவனே துருபதனுக்கு நேரில் வந்து வரவேற்க வர வேண்டாம் எனச் செய்தி அனுப்பி விட்டதாய்க் கேள்விப் பட்டேன்.  இளவரசன் த்ருஷ்டத்யும்னனும், சத்யஜித்தும் சென்றிருக்கின்றனர்.  இந்த யாதவர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா?  நகரத்துக்குள் நுழைந்ததுமே முதல்வேலையாகத் தங்கள் கூடாரங்களுக்குக் கூடச் செல்லாமல், துருபதனை அவன் அரச மாளிகையில் நேரில் சந்தித்து அவனுக்குத் தங்கள் மரியாதையைத் தெரிவிக்க வேண்டிச் சென்றனர்.  அதுவும் கால்நடையாகவே!”

“ம்ம்ம்ம்,…. அவன் திரெளபதியை வென்று மணமுடித்துவிடுவானோ?” ஜராசந்தனுக்கு ஆவல் மீதூறியதோடு அல்லாமல் கிருஷ்ணன் போட்டிக்கு வந்தானெனில் தன் பேரன் கதி என்ன என்னும் கவலையும் ஏற்பட்டது.  தன் புருவங்களை நெரித்தபடி யோசித்தான்.  “இல்லை, பிரபுவே, ஏற்கெனவே திரெளபதியை மணக்க துருபதன் விடுத்த வேண்டுகோளைக் கிருஷ்ண வாசுதேவன் நிராகரித்துவிட்டான்.  உங்களுக்கும் இது தெரியுமே! “ என்றான் விதண்டன்.  “ஆம், ஆம், கேள்விப் பட்டேன்.  ஆனால் அதை நான் நம்பவில்லை.  ம்ம்ம்ம்ம்??? சஹாதேவா, நீ எதற்கும் துருபதனை நேரில் சென்று சந்தித்து விடு.  அவன் மகள் திரெளபதி நம் அருமை இளவரசன் மேகசந்தியைத் தான் மணமகனாய்த் தேர்ந்தெடுக்கவேண்டும் என்பதை வற்புறுத்திச் சொல்லிவிடு.  அப்படி அவளாகத் தேர்ந்தெடுத்துவிட்டால் நம் வேலை பெரிதும் குறையும்.  பல சங்கடங்களைத் தவிர்க்கலாம். “

சஹாதேவன் இடைமறித்து, “தந்தையே, இல்லை, அப்படி நடக்கும் என நிச்சயமாகச் சொல்ல முடியாது.  ஏனெனில் கிருஷ்ண வாசுதேவன் குரு வம்சத்து இளவரசர்களோடு ஏதோ ரகசிய உடன்படிக்கை போட்டிருப்பதாக அறிகிறேன்.  குரு வம்சத்தினர் போரிட்டு ஜெயித்த புஷ்கரத்தை அதன் சொந்தக்காரன் ஆன செகிதனாவுக்கே திரும்பக் கொடுக்கும்படி கிருஷ்ண வாசுதேவன் கேட்டுக் கொண்டுள்ளான்.  அதன்படி செகிதனாவுக்குப் புஷ்கரம் திரும்பக் கொடுக்கப்பட்டுவிட்டது.  இதன் மூலம் குரு வம்சத்து இளவல் துரியோதனனுக்குச் சாதகமாகவே சுயம்வரத்தில்  கிருஷ்ணன் முடிவெடுப்பான் என்கின்றனர்.  புஷ்கரத்தைத் தன் சொந்தக்காரன் ஆன செகிதனாவுக்குத் திரும்பக் கொடுத்ததற்கு துரியோதனனுக்கு திரெளபதியைப் பரிசாகப் பெற்றுத்தரக் கிருஷ்ணன் இசைந்திருக்கிறான் என்கின்றனர்.”

ஜராசந்தனின் கண்கள் ஆச்சரியத்தில் விரிந்தன.  அவனுக்குள் திகைப்பு ஒரு பக்கம்.  இவ்வளவு நடந்திருக்கிறதா என்னும் ஆச்சரியம் இன்னொரு புறம்.  ஹூம், இந்தக் கிருஷ்ண வாசுதேவன்! ஒவ்வொருமுறையும் ஆர்யவர்த்தத்தில் தன் ஆதிக்கத்தை நிலைநாட்டித் தன் சக்கரவர்த்திப் பதவியை உறுதிப் படுத்திக் கொள்ள ஜராசந்தன் முயலும்போதெல்லாம் இவன் எங்கிருந்தோ குறுக்கே வந்துவிடுகிறான்.  அவன் வேலைகளுக்கும், வெற்றி அடைவதற்கும் மாபெரும் தடைக்கல்லாக நிற்கின்றான். இவன் எங்கிருந்து வந்து சேர்ந்தான் இப்போது!  இங்கும் வந்துவிட்டானே!  ஜராசந்தன் மனம் கொதித்தது.  பழைய நினைவுகள் மேலெழுந்து அவன் கண் முன்னே இப்போது தான் நடப்பவை போல் தோன்றின.  இந்தக் கிருஷ்ண வாசுதேவன் சிறுவனாக இருக்கும்போதே ஜராசந்தனின் அருமை மருமகன் ஆன கம்சனைக் கொன்றான்.  அவன் மகள் இருவரையும் விதவைகளாக்கினான்.  ஆர்ய வர்த்தத்தில் ஜராசந்தனின் ஆதிக்கம் அதிகரித்து அவன் செங்கோல் நிலைபெற்று நிற்கப் பெருமளவு உதவி இருப்பான் கம்சன் மட்டும் உயிரோடு இருந்திருந்தால்.  அதைக் கெடுத்தது இந்தக் கிருஷ்ண வாசுதேவன் தான்.  கோமந்தகத்திலும் இவனால் ஜராசந்தனுக்குப் பெரிய அளவில் தோல்வியே கிடைத்தது.  அதோடு அவன் பெரிதும் நம்பி இருந்த சேதி நாட்டு அரசனோடு ஆன உடன்படிக்கையும், விதர்ப நாட்டு அரசனோடு ஆன உடன்படிக்கையும் இவனாலேயே கெட்டது.  இரண்டையும் இவன் கெடுத்து ருக்மிணியைக் கல்யாணம் செய்து கொள்ளாமலேயே தூக்கி வந்துவிட்டான்.   அதுவும் எப்படி!  ஜராசந்தன் கண்ணெதிரிலேயே சுயம்வர மண்டபத்துக்குச் செல்ல இருந்த இளவரசி ருக்மிணி  கிருஷ்ண வாசுதேவனால் தூக்கிச் செல்லப்பட்டாள். ஜராசந்தன் மிகவும் யோசித்து முடிவெடுத்துப் போடும் திட்டங்கள் அனைத்தையுமே இவன் ஒருவனாகவே கெடுத்து விடுகிறான்.


2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அனைத்தும் அவனது ஆதிக்கம்...!

ஸ்ரீராம். said...

கண்ணன் எனும் கள்வன்!