Sunday, April 6, 2014

திரெளபதிக்கு ஆபத்து!

துரியோதனன் தன்னைத் தயார் செய்து கொள்ளட்டும். அதற்குள்ளாக நாம் இந்தப் புதிய நகரத்தை ஒரு சுற்று சுற்றிப் பார்த்துவிடுவோமா?  ஆங்காங்கே பற்பல கூடாரங்கள்; கூடாரங்களின் உச்சியில் பறந்த கொடிகளில் இருந்து அவை எந்த நாட்டைச் சேர்ந்தது என அனுமானிக்கும்படி இருந்தது.  ராஜநடை போட்டவண்ணம் பல இளவரசர்கள், அரசர்கள் நடமாடிக் கொண்டிருந்தனர். அவரவர் செல்வாக்கை நினைத்துப்பெருமிதமும் கொண்டிருந்தனர்.  அதிக அளவில் ஆரிய வர்த்தத்து அரசர்களே கலந்து கொண்டிருந்தாலும் ஒரு சில நாகர்கள், மகத நாட்டு அரசர்கள் என்றும் காணப்பட்டனர்.  மகத நாட்டு அரசர்கள் தங்கி இருந்த பகுதி தனித்துத் தெரிந்தது.  அவர்கள் ஆரியர்களோடு கலக்கவில்லை;  ஆரிய கலாசாரத்தை அவமதிப்பது போல் ஏளனமும் கேலியும் பொங்கப் பார்த்ததோடு அல்லாமல் தங்களுக்குள் பேசிச் சிரித்தும் கொண்டார்கள்.  அவர்களின் கூடாரங்களுக்கு நடுவே ஒரு பெரிய கூடாரம் தனித்துத் தெரிந்தது.


அதில் யாரோ முக்கியஸ்தர்கள் இருக்கிறார்கள் என்னும் எண்ணம் தோன்றும்படி அதனருகில் நெருங்குகையில் அனைவரும் மெதுவாகப் பேசிக் கொண்டனர்.  மிக மரியாதையோடு நடந்து கொண்டனர்.  இதிலிருந்து அங்கே இருப்பவர் யாரோ மிகப் பிரபலமானவர் என்பது தெரிய வருகிறது.  கொஞ்சம் அப்படிச் சுற்றிப் போய் அந்தக் கூடாரத்தை எட்டிப் பார்த்து யாரெனத் தெரிந்து கொள்வோமா? ஆஹா! கெட்டது குடி! வந்திருப்பது ஜராசந்தன் அல்லவோ! ஆம், ஆம், தன் பேரனுக்காகச் சுயம்வரத்தில் கலந்து கொள்ளப் போகிறான் என்றொரு பேச்சு இருந்தது அல்லவா?  அதனால் தான் வந்திருக்கிறான் போலும்.  அவன் கூடாரத்தைச் சுற்றிலும் அவனுக்குக் கீழ்ப்பட்ட சிற்றரசர்கள், தேவைப்பட்டால் அவனுடைய ராணுவத்திலே தளபதிகளாகவும் பணியாற்றுபவர்கள் வந்திருப்பதாகத் தெரிகிறது.  அவர்கள் தான் சுற்றிலுமுள்ள கூடாரங்களில் தங்கி இருக்கின்றனர்.  ஆனால் இவர்கள் அனைவரும் ஒரு குழுவாகத் தங்களுக்குள்ளேயே பேசிச் சிரித்துக் கொள்கின்றனரே!  ஆர்யவர்த்தத்து சாம்ராஜ்யம் ஒன்றின் இளவரசியை மருமகளாக ஏற்றுக்கொண்டால் இவர்களின் போக்கு எப்படி இருக்கும்?

தங்களுடைய பெருமையிலும், வீரத்திலும் தாங்களே ஆழ்ந்து போயிருக்கும் இந்தச் சிற்றரசர்களில் பெரும்பாலோர் மல்யுத்தத்தில் சிறந்தவர்கள் என்பது தெரிகிறது.   ஆர்யவர்த்தத்து அரசர்களையும், இளவரசர்களையும் போல் பட்டுப் பட்டாடைகளையும், ரத்தினங்கள், முத்துக்கள் பதித்த கிரீடங்களையும் அணியாமல், ஆபரணங்களைப் பூணாமல் வெற்று மார்புடன் தங்கள் உடல்கட்டைக் காட்டப் பிரியப்பட்டவர்களைப் போல் நடை போட்டார்கள். நடுவில் இருந்த ஜராசந்தனின் கூடார வாயிலில் போவதும், வருவதுமாக இருக்கும் நபர்களைப் பார்த்தால் அங்கே ஏதோ முக்கியமானதொரு விஷயம் பேசப்படுகிறதோ என்னும் எண்ணம் தோன்றுகிறது.  கொஞ்சம் உள்ளே எட்டித் தான் பார்த்துவிடுவோமா?  மெல்ல, மெல்ல எவ்விதமான ஓசையும் எழுப்பாமல் வாருங்கள்.  ஏற்கெனவே ஜராசந்தன் கோபத்தில் இருப்பான். ஆகவே நாம் வேறு அவன் கோபத்தை அதிகமாக்க வேண்டாம்.

இதோ உள்ளே வந்துவிட்டோம். கூடாரத்தின் நடுவே  நல்ல உடல்கட்டோடும், வலிமையுடனும் கூடிய மல்யுத்த வீரர்களின் மெய்க்காவலில்  ஒரு உயர்ந்த சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கிறான் ஜராசந்தன்.  அவனைச் சுற்றிலும் அவனுடைய முக்கிய ராணுவத் தளபதிகள் ஆன சிற்றரசர்கள் சூழ்ந்து அமர்ந்திருந்தனர்.  அவன் அருகே வலப்பக்கம் அவன் மகன் சஹாதேவன் என்னும் பெயர் கொண்டவன் அமர்ந்திருக்க, அவனுக்கு அருகே சுயம்வரத்தில் திரெளபதியை வெல்ல வேண்டி வந்திருக்கும் ஜராசந்தனின் பேரன் மேகசந்தி அமர்ந்திருந்தான்.  ஜராசந்தனின் இளமைப் பருவத்தில் எப்படி இருப்பான் என்பதைக் காட்டும்படியாக இருவருமே ஜராசந்தனின் அச்செடுத்த பிரதி போல் இருந்தனர்.  இந்த வயதிலும் துடிதுடிப்புடன் காணப்பட்ட ஜராசந்தன்  முகத்தில் காணப்பட்ட தந்திரமும், சூழ்ச்சியும் மட்டும் இவர்கள் முகங்களில் காணப்படவில்லை.   தன் மகனைப் பார்த்துத் தன் வழக்கமான அதிகாரத் தொனியில் , “ நீ உடனே சென்று துருபதனைப் பார் சஹாதேவா!  அவனிடம் நான் ஏன் இங்கே வந்திருக்கிறேன் என்பதைத் தெளிவாகச் சொல்லிவிடு. திரெளபதியும், மேகசந்தியும் திருமணம் செய்து கொண்டே ஆக வேண்டும். அதன் பின்னர் நம்முடைய திட்டங்களைக் குறித்து விரிவாகப் பேசலாம். பிரசாரங்கள் செய்வது குறித்த பற்பல உத்திகளைக் குறித்தும் விவாதிக்கலாம். “

“ஆனால், தந்தையே!  அவனுக்குத் திரெளபதியை மேஹசந்திக்கு மணமுடிக்கும் உத்தேசம் இருக்கிறதா? அப்படி இருந்தால் சுயம்வரம் என ஏற்பாடுகள் செய்து இத்தனை அரசர்கள், சிற்றரசர்கள், இளவரசர்களை வரவழைக்க வேண்டாமே!  சற்று யோசியுங்கள் தந்தையே!”

இத்தனை வயது ஆகியும், மகன் திருமணத்துக்குத் தயார் என்னும் நிலையிலும், தன் மகன் தன்னைக் கண்டு பயப்படுவது ஜராசந்தனுக்கு உள்ளூர மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.  எனினும் வெளிக்காட்டிக் கொள்ளாமல். அலக்ஷியமாகச் சிரித்தான்.  “ஹூம், இந்த ஆரிய அரசர்களைக் குறித்துப் புதிதாய்ச் சொல்ல என்ன இருக்கிறது மகனே!  அவர்கள் தங்கள் குமாரிகளை ஏதோ தேவதைகள் என்றே நினைக்கின்றனர்.  அவர்களின் திருமணங்களும் பெரிய சபையில் பல அரசர்கள், சிற்றரசர்கள் கூடி இருக்க நடைபெற வேண்டும் என எண்ணுகின்றனர்.  முட்டாள்கள்!  அனைத்துமே அர்த்தமற்ற, பொருளற்ற நடைமுறை!”

என்றாலும் சஹாதேவனுக்குச் சந்தேகமே இருந்தது.  “தந்தையே, அந்த இளவரசி தன் தந்தையின் விருப்பத்தின்படி மணமகனைத் தேர்ந்தெடுப்பாள் என்பதை நிச்சயமாக அறிவீர்களா?  நான் அறிந்தவரையிலும் அவள் மிக தைரியமான பெண் என்றும், சுயமாகச் சிந்தித்து முடிவெடுப்பாள் என்றும் அறிகிறேன்.” இதைக் கொஞ்சம் பயத்துடனேயே சொன்னான் சஹாதேவன். ஆனால் ஜராசந்தன் அவன் நினைத்ததற்கு முற்றிலும் மாறாக அவனை ஆதரித்தான்.  “நீ சொல்வது சரியே மகனே!  பல சுயம்வரங்களிலும் பார்த்துவிட்டேன்.  இந்தச் சுயம்வரங்களிலே இந்த இளவரசிகள் மிகவும் கட்டுப்பாடு இழந்து தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப எவனையோ ஒருவனை மணமகனாகத் தேர்ந்தெடுக்கின்றனர்.  இவர்களை நம்ப முடியாது தான்!” என்றான்.

“தந்தையே, இப்போது திரெளபதியும் அப்படியே செய்தாளென்றால்?”

“என் பேரன் மேகசந்தியை அந்த திரெளபதி நிராகரிப்பாளா?  ஆஹா, இத்தகையதொரு அவமானத்தை நான் ஒரு நாளும் மன்னிக்க மாட்டேன்.  “ திடீரென நினைவுக்கு வந்தவன் போல் அவன் சஹாதேவனைப் பார்த்துக் கிட்டே வரச்சொல்லி, அவனிடம் கண்களால் ஜாடை காட்டினான். “சஹாதேவா, சுயம்வரம் நடந்தாலும், சரி இல்லை எனினும் சரி.  நம் மகத தேசத்துக் குதிரைகள் விரைவாகச் செல்லக் கூடியவை.  அதை மறக்காதே. அவை திரெளபதியை மட்டுமில்லை;  துருபதனையும் சேர்த்தே மகதத்தின் தலைநகரம் ராஜகிருஹத்துக்கு அழைத்துச் சென்றுவிடும். நினைவூட்டுகிறேன் உனக்கு!” என்றான்.  சுற்றிலும் கூடி இருந்த தளபதிகள் இதைக் கேட்டதும் மிகப் பெரிய நகைச்சுவையைக் கேட்டது போல் ரசித்துச் சிரித்தனர்.  இதன் பின்னர் சிறிது நேரம் அனைவரும் தங்களுக்குள்ளாக ரகசியமாகவே பேசிக் கொண்டனர்.  நம்மால் சரியாகக் கேட்கமுடியவில்லை.  இன்னும் கொஞ்சம் அருகே செல்வோமா?  இதோ மேகசந்தி ஏதோ சொல்கிறானே!  கொஞ்சம் அருகே சென்றால் தான் நன்றாகக் கேட்கும்.

மிக மெதுவாக மேகசந்தி பேசினான். “யக்ஞசாலையிலிருந்து சுயம்வர மண்டபத்திற்கு வரும் வழியில் திரெளபதிக்குக் காவல் ஏதும் இல்லை எனக் கேள்விப் பட்டேன். ஒரு சில பண்டிதர்களும், அவளுக்குத் தோழிகளான சில இளவரசிகளும் தவிர வேறு எவரும் இருக்க மாட்டார்கள்.  அது தான் சரியான சமயம் திரெளபதியைத் தூக்கிச் செல்ல.  அப்போது நாம் அந்தக் கூட்டத்தில் அனைவரையும் விரட்டி விட்டு அவளைத் தூக்கிச் செல்வது எளிது.  எவரும் ஆயுதம் தரித்தவர் அங்கே இருக்க மாட்டார்கள். “

3 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

சுவாரஸ்யம்... தொடர்கிறேன் அம்மா...

ஸ்ரீராம். said...

ஒருவர் கலாசாரத்தை இன்னொருவர் அவமதிப்பது எந்நாளும் உண்டு போலும்!

//மெல்ல, மெல்ல எவ்விதமான ஓசையும் எழுப்பாமல் வாருங்கள். //

:)))

ஜராசந்தன் தன் முடிவைத் தேடி வந்திருக்கிறான்! இங்கும் ஒரு சகாதேவனா?


பித்தனின் வாக்கு said...

appa irunthu ippa varaikkum nammavarkal sulchikal seivathai vidavillai pola, nammaa arasiyalum ithum onnathan irukku.

mikavum arumai thorunkal amma