Friday, April 4, 2014

மாமனும், மருமகனும் தனிமையில் ஆலோசனை!

தன்னுடைய உடலைப் பிடித்து விட்டுக் கொண்டிருந்த ஆட்களைப்போகச் சொல்லிவிட்டு துரியோதனன் தன் மாமனிடம் “அந்த மாட்டிடையன் என்ன சொன்னான்?” என்று கேட்டான்.”திரெளபதியிடம் என்னை அழைத்துச் செல்வதாக அளித்த உறுதியைக் காப்பாற்றுகிறேன் என்று சொல்லி இருக்கிறான்.  ஆனால்  உன்னைத் தேர்ந்தெடுக்குமாறு திரெளபதியைச் சம்மதிக்க வைப்பது மிகக் கடினம் என்று சொல்கிறான்." என்ற ஷகுனி துரியோதனன் முகத்தில் தெரிந்த ஏமாற்றத்தைக் கண்டு  மகிழ்ச்சி அடைந்தானோ என்னும்படி அவன் முகத்தில் சிரிப்புத் தெரிந்தது.  தன்னிரு கைகளையும் தேய்த்துவிட்டுக் கொண்டே துரியோதனனைக் கூர்ந்து பார்த்தான். “ஓஹோ, அப்படி எனில் அவனுடைய தந்திரத்தையும், சூழ்ச்சிகளையும் அந்த இடையன் ஆரம்பித்துவிட்டான் என்று சொல்லுங்கள்!” என்றான் துரியோதனன். “ஏன் கஷ்டமாக இருக்குமாம்?? என்ன காரணமாம்?” என்றும் கேட்டான்.

“துரியோதனா, துரியோதனா!  எவ்வளவு முறை பேசுகையில் கொஞ்சம் நாக்கை அடக்கிப் பேசு; அக்கம்பக்கம் பார்த்துக் கொள் என்று சொல்லி இருக்கிறேன்.  மீண்டும் மீண்டும் அவனை நீ இடையன் என்றே அழைக்கிறாய்!” உள்ளூர சந்தோஷத்துடனே பேசிய ஷகுனி வேண்டுமென்றே இடையன் என்பதற்கு அழுத்தம் கொடுத்தான்.  “அவன் கிருஷ்ண வாசுதேவன், மனிதர்களில் சிறந்தவன், அவனைப் பார்க்க அவனோடு பேச, அவனோடு நட்பு பூண எத்தனை எத்தனை ராஜாக்கள், இளவரசர்கள் அவனைச் சூழ்ந்து கொண்டு அவனுடைய ஒரு பார்வைக்காகக் காத்திருக்கின்றனர் என்பது தெரியுமா? அவனைக் கண்டதுமே அனைவரும் மரியாதை செய்கின்றனர்.  இனியொரு முறை அவனை, இடையன் என அழைக்காதே!” என்றான் ஷகுனி.  “ஹா, அவன் ஒரு காலத்தில் இடையர்களோடு இடையனாகத் தானே இருந்தான்! இப்போது மட்டும் என்ன புதிதாக வந்திருக்கிறது?   மாறிவிட்டானா என்ன?” மிகவும் ஏளனம் தொனிக்கத் தன் மனதிலுள்ள இழிவை எல்லாம் அந்தப் பேச்சிலே காட்டிப் பேசினான் துரியோதனன்.

“மருமகனே, இதோ பார்!  உனக்கு அவன் நட்பு வேண்டுமா?  அல்லது எதிர்ப்பு வேண்டுமா என்பதை நீ தீர ஆலோசித்து முடிவு செய்யும் வேளை வந்துவிட்டது.  ஒரு வழியாகக் கிருஷ்ணனை நண்பனாக ஏற்பதா, எதிரியாக ஏற்பதா என்பதை விரைவில் முடிவு செய்.  அவன் இப்போது அதிகாலையில் அருணோதயத்துக்குப் பின்னர் எழும்பும் உதயசூரியனைப் போல் ஜொலிக்கிறான்.  விரைவில் அதிவேகமாக மேலெழும்புவான்.  அவனுடைய நட்பு உனக்கு வேண்டுமெனில் அவனைத் துதித்துப் பாடக் கற்றுக்கொள்!” ஒரு முட்டாள் மாணவனுக்குக் கற்பிக்கும் கருணையுள்ள ஆசிரியன் எப்படிக் கவனமாகப் பாடம் எடுப்பானோ அவ்வாறு துரியோதனனைப் பார்த்து உள்ளூரச் சிரித்துக் கொண்டே ஷகுனி கூறினான்.  “சரி, சரி, அப்படியே ஆகட்டும்;  இனி ஒரு முறை அவனை நான் இடையன் என அழைக்கவில்லை.  ஆனால் எப்படியோ என் நாக்கில் அந்த வார்த்தை வந்துவிடுகிறது.  என்ன செய்வேன்! என்னையும் மீறி வருகிறது.  இனி அப்படி வராமல் பார்த்துக்கொள்கிறேன்.  அது போகட்டும், திரெளபதியைச் சம்மதிக்க வைப்பது கஷ்டம் என ஏன் சொல்கிறான்?”

“ஏனெனில் நீ துரோணரின் மாணாக்கன்.  துரோணரின் நேரடி மாணவனை திரெளபதி தேர்ந்தெடுப்பது கஷ்டம் என்று கிருஷ்ணன் நினைக்கிறான். துரோணருக்கும் அது பிடிக்காது எனச் சொல்கிறான்.“ சூழ்ச்சி நிறைந்த கண்கள் தந்திரச் சிரிப்புச் சிரிக்கப் பேசிய ஷகுனி மேற்கொண்டு, “ஆம், அப்படித்தான் மாட்சிமை பொருந்திய கிருஷ்ண வாசுதேவன் சொல்லுகிறான்.” என்று கிருஷ்ண வாசுதேவன் என்னும் பெயருக்குக் கொஞ்சம் அழுத்தம் கொடுத்துக் கூறினான்.  இதன் மூலம் தான் கண்ணனை இடையன் என்று சொல்வதை ஆக்ஷேபிப்பதை உறுதி கூறுவது போல் காட்டிக் கொண்டான் ஷகுனி.  “ஹூம், மாமா அவர்களே, ஆசாரியர் எப்படியாவது ஒத்துக் கொண்டே ஆகவேண்டும். நான் இங்கே சுயம்வரத்தில் கலந்து கொள்ள வரப்போவதை அவர் அறிந்திருக்கிறார் அல்லவா?  சுயம்வரத்தில் நான் கலந்து கொள்வதையும் அவர் ஒத்துக் கொண்டிருக்கிறார்.  பிறகு என்ன?” துரியோதனன் கொஞ்சம் கடுமையான குரலிலேயே கூறினான்.

“ஆஹா, மருமகனே, மருமகனே, அங்கே தான் நீ தவறு செய்கிறாய்!  நீ சுயம்வரத்தில் கலந்து கொள்ள அனுமதித்ததன் மூலம் உன் ஆசாரியர் ஒன்றும் துருபதனோடு நட்புப் பாராட்டப் போவதில்லை.  அவ்வாறு அவர் கூறவும் இல்லை.  அவர் சம்மதம் கொடுத்ததன் அர்த்தம் அதுவல்ல;  ஒருவேளை நீ திரெளபதியை சுயம்வரத்தில் வென்று ஹஸ்தினாபுரத்து அரண்மனைக்கு மருமகளாய் அழைத்து வந்தாயானால், ஹஸ்தினாபுரத்தை விட்டே வெளியேற அவர் தயங்க மாட்டார் எனக் கிருஷ்ண வாசுதேவன் நினைக்கிறான்.” என்றான் ஷகுனி.  “ஒருவேளை திரெளபதி ஆசாரியர் துரோணருக்கு எவ்வித ஆக்ஷேபணையும் இருக்கக் கூடாது என்னும் உறுதிமொழியைக் கேட்டால்???......”

“ஹூம், மாமா, மாமா, அந்த மாட்டு இடையன்….மன்னியுங்கள், அந்தக் கிருஷ்ணன் தேவையில்லாத பிரச்னைகளைக் கிளப்புகிறான்; உருவாக்குகிறான்.” துரியோதனன் பற்களைக் கடித்தான்.  ஷகுனி அதை லக்ஷியம் செய்யாமல் தொடர்ந்தான். “கிருஷ்ண வாசுதேவன் சொல்கிறான். ஒருவேளை துருபதனுக்கும், துரோணருக்கும் இடையில் உள்ள சச்சரவுகளிலும், சண்டைகளிலும் நீ துரோணரின் பக்கமே இருக்க வேண்டும் என துரோணர் கருதுவதாகச் சொல்கிறான்.  அவன் அப்படித் தான் நினைக்கிறான்.”

துரியோதனனின் பொறுமை முற்றிலும் அவனைக் கைவிட்டது.  கோபத்தோடு அவன் தன் தொடைகளில் ஓங்கி ஓங்கி அடித்துக் கொண்டான். “மாமா, மாமா, அந்த இடையன்…..மன்னியுங்கள் வாசுதேவ கிருஷ்ணன் சொல்வதை எல்லாம் கேட்டுக்கொண்டு சும்மாவா வந்தீர்கள்?  அவனிடம் நீங்கள் நேரிடையாகச் சொல்வதற்கென்ன?? துரியோதனன் திரெளபதியைக் கட்டாயமாய் மணக்கப் போகிறான் என்று.  அதற்குத் தயார் நிலையில் வந்திருக்கிறான் என்று. சொல்வதற்கென்ன மாமா?  போங்கள், மாமா போங்கள்.  உடனே சென்று அந்த இடையனிடம், ம்ம்ம்ம்ம் வாசுதேவனிடம், நான் திரெளபதியை மணந்து கொண்டுவிட்டால், என் மாமனாரான துருபதனுக்குத் தான் பக்ஷமாக இருப்பேன் என்பதைத் தெளிவாகச் சொல்லுங்கள்.  துரோணர் அதன் பின்னர் குரு வம்சத்துக்கு ஆசாரியராக இருந்தாலும் சரி; இல்லை என்றாலும் சரி.  அவர் ஹஸ்தினாபுரத்தை விட்டே வெளியேறினாலும் எனக்குக் கவலை இல்லை. இதை அந்தக் கிருஷ்ணனிடம் போய்ச் சொல்லுங்கள் மாமா!”

“மருமகனே, மருமகனே, நீ அந்தப் பாஞ்சால இளவரசியைக்குறித்துப் புரிந்து கொள்ளவில்லை என்றே எண்ணுகிறேன்.  அவள் ஒரு சாமானியப் பெண்ணாக/இளவரசியாகத் தெரியவில்லை.  மன உறுதியும், திட வைராக்கியமும் கொண்டவளாகத் தெரிகிறாள்.  அவள் நீ சொல்வதை ஏற்றுக்கொள்வாள் என்று தெரியவில்லை.  அதற்கு அவள் தயாராக இருக்க மாட்டாள் என்றே நினைக்கிறேன்.  மேலும் கிருஷ்ண வாசுதேவன் என்ன நினைக்கிறான் எனில், “அவள் ஒரு வேளை உன்னை இப்படி வற்புறுத்தலாம்; அவள் ஹஸ்தினாபுரத்துக்கு மருமகளாக வர நேர்ந்தால், அஸ்வத்தாமாவே தன் உயிரைக் கொடுத்தாவது துரோணரை அங்கிருந்து வெளியேறுவதிலிருந்து தடுக்க வேண்டும் என வற்புறுத்தலாம் என்றெல்லாம் கிருஷ்ண வாசுதேவன் சொல்கிறான். “

“ஆஹா, நான் ஹஸ்தினாபுரத்தின் யுவராஜா?  என்னுடைய வார்த்தைகளுக்கு இங்கே மதிப்பே இல்லையா?”  துரியோதனன் கேட்டான்.

ஷகுனியின் சூழ்ச்சி நிறைந்த சிரிப்பு அவன் முகத்தில் விரிந்தது.  கண்களிலும் அதே தந்திரமான சிரிப்புத் தெரிய அவன் கூறினான்:”இதோ பார் மருமகனே, துரியோதனா! இந்த உலகத்தில் சொன்ன வார்த்தைகளைக் காப்பாற்றுவதில் நம்பிக்கைகளைப் பாதுகாப்பதில் வல்லவர்கள் நல்லவர்கள் இருக்கின்றனர். ஆனால் நீ அவர்களில் ஒருவனாக இல்லை!  உன் வார்த்தைகளை எவர் நம்புவார்கள்? அதோடு வாசுதேவனும் அதைத் தான் சொல்கிறான்.  திரெளபதி உன் வாக்குறுதியை ஏற்கமாட்டாள் என்று திண்ணமாய்க் கூறுகிறான்.”

“ஆர்யவர்த்தத்தின் மிகப் பெரிய சக்கரவர்த்தியான பரதனின் வழித் தோன்றலான குருவம்சத்து யுவராஜாவின் வார்த்தைகளை நம்புவதில் ஒரு மாட்டிடையனுக்கு இவ்வளவு சந்தேகமா?” துரியோதனன் முகம் கோபத்தில் சிவந்தது.  அவன் உடலே நடுங்கியது.

“உஷ், உஷ், உஷ்ஷ்ஷ், துரியோதனா!  துரியோதனா!” வாயில் விரலை வைத்து துரியோதனனை எச்சரித்தான் ஷகுனி.  “மீண்டும் அதே வார்த்தைகளைக் கூறுகிறாய்.  அதை மற!  அதைச் சொல்லாதே!  இந்த யாதவர்களின் பலம் உனக்குப் புரியவில்லை.  ஆர்யவர்த்தத்தின் பல ராஜாக்கள், மஹாராஜாக்களை விட செல்வத்திலும்,வலிமையிலும் இவர்கள் சிறந்து விளங்குகின்றனர்.   அதோடு இல்லாமல் இங்குள்ள அரசர்கள் அனைவரும் அவன் வார்த்தைகளுக்குக் கட்டுப்படுகின்றனர்.  அனைவரையும் அவன் பார்வையாலேயே அடக்கி ஆள்கிறான்.”

போலியான பணிவுடன் சிரித்தான் துரியோதனன். அதே போலித் தனம் மாறாமல், “சரி, சரி, நான் உண்மையைத் தானே சொன்னேன்!  சொல்லக் கூடாதெனில் இனி சொல்லவில்லை.  அதுவும் இங்கே அது குறித்துப் பேசுவதில்லை.  விந்தையான உலகம் இது!  அற்பனிலும், அற்பனான ஒரு இளைஞனுக்கு இந்த உலகம் முழுவதும் கட்டுப்படுகிறது.  என்ன ஆச்சரியம்! ஆச்சரியம்!  அனைவரையும் அவன் அடக்குகிறானா?  என்னதான் வேண்டுமாம் அவனுக்கு?”

“அஸ்வத்தாமாவை விட்டு இதற்கெனப் பிரதிக்ஞை எடுத்துக்கொள்ளச் சொல்கிறான்.”

“சரி, சரி, சரி மாமா. நான் அஸ்வத்தாமாவிடம் பேசி ஒப்புக்கொள்ள வைக்கிறேன்.  யாரையானும் அனுப்பி அவனை இங்கே வரவழையுங்கள். “ இதைச் சொல்லிக் கொண்டே துரியோதனன் மீண்டும் பாயில் படுத்துக் கொண்டு தனக்கு எண்ணெய் தடவி உருவி விட்டுக்கொண்டிருந்த மல்யுத்த வீரர்களையும் உள்ளே வரச் சொல்லி அழைத்தான்.2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

தொடர்கிறேன் அம்மா...

ஸ்ரீராம். said...

ஷகுனியின் மர்மம் கடைசி வரை துரியோதனனுக்கு தெரியவே தெரியாதா?