Wednesday, April 23, 2014

திரெளபதியின் கோபம்!

இவர்களிடையே கிருஷ்ணன் தனித்துத் தெரிகிறான்.  அவன் ஒரு தனி ரகம்.  தன்னைத் தானே அவன் “மாட்டிடையன்” என அழைத்துக் கொண்டாலும்,  இங்கு வந்திருக்கும் அனைத்து அரசர்கள், இளவரசர்கள், மாபெரும் சக்கரவர்த்திகளை விட அவன் எல்லாவகையிலும் உயர்ந்தவன்.  அவளுக்குத் தெரிந்த அனைத்து அரசர்களிலும் அவனுக்கு ஈடு, இணை சொல்லக் கூடியவர் எவரும் இல்லை.  என்றாலும் அவன் கிருஷ்ண வாசுதேவன், திரெளபதியை மணந்து கொண்டு அதன் மூலம் அவள்  தந்தைக்கு உதவி செய்யப் போவதில்லை.  ஆனால் அவன் உதவி வேறு வகையில் கிட்டும்.  அவன் தனக்களித்த வாக்குறுதியை நிறைவேற்றி விட்டான்.  யாதவர்களிலேயே சிறந்த அதிரதர்களும், மஹாரதர்களும், பலராமன், அக்ரூரர் ஆகியோரின் தலைமையில் அங்கே வந்து கூடி இருக்கின்றனர்.  இவர்கள் அனைவருமே ஆர்யவர்த்தத்தின் மிகச் சிறந்த அரசர்களை விடச் சிறந்த வீரர்கள்.   யாதவர்கள் காம்பில்யத்துக்கு வந்த தினத்தில் அவள் தன் அந்தப்புரத்தின் மேன்மாடத்தில் தான் நின்று கொண்டிருந்தாள்.  யாதவத் தலைவர்கள் அனைவருமே அவள் தந்தையைச் சந்தித்து வாழ்த்துச் சொல்லவும், நலம் விசாரிக்கவும் அங்கே வந்தனர்.  அவர்களில் அனைவருக்கும் தலைமை வகித்து வந்த பலராமன் அனைவரிலும் உயரமாக, அனைவரிலும் பலவானாக, உடலும் பருமனாக, அதே சமயம் ஒரு தனிப்பட்ட கெளரவம் தொனிக்கும் வண்ணம் காணப்பட்டான்.  உடன் வந்த அக்ரூரர், தன் வயதுக்கேற்ற மரியாதை தொனிக்கும் வண்ணம், கெளரவமான தோற்றத்தோடு பார்க்கவே மனம் நிறைவாக அதே சமயம் புனிதமான எண்ணங்களைத் தோற்றுவிக்கும்படி தன்னடக்கத்துடனும், அதே சமயம் நிதானத்துடனும் வந்தார்.

அவர்களுடன் வந்த அந்த உயரமான இளைஞன், யுயுதனா சாத்யகி என அழைக்கப்பட்டவன், எளிதில் வளையும் தன்மையுள்ள அதே சமயம் உறுதியும் வலுவும் உள்ள உடல்கட்டோடு காணப்பட்டான்.  மிகவும் கெளரவமான உயர்ந்த குடும்பத்தைச் சேர்ந்தவன் என்பது அவன் பார்வையிலும், அவன் நடந்து கொண்ட விதத்திலும் தெரிந்தது.  இப்படி இத்தனை பேர் தனித்துவமாகத் தோற்றமளிக்கும் வண்ணம் வந்த போது கூடக் கிருஷ்ணன் அவர்களில் தனித்துத் தெரிந்தான்.  உன்னதமான ஆற்றலையும், சக்தியையும்  கொண்ட அவனுடைய தனித்துவம் அவன் நடந்து வரும்போதே வெளிப்படும் வண்ணம்  இருந்தது.  எல்லாவற்றிலும் அதிசயமான ஒன்று அவன் உடல் நிறம்.  அது என்ன நிறம்! ஆகாயத்தின் ஆழ்ந்த நீலவண்ணத்தில் அல்லவோ இருக்கிறான்.  அந்த நீல வண்ணத்தில் உடலும், அதற்கேற்ற மஞ்சள் பட்டாடையும், தலையில் சூடிய மயில் பீலிகளும், அவன் பேசும்போதும், தலையை ஆட்டும்போதும் அந்தப் பீலிகள் ஆடுவதும், சிரிக்கும் அந்தக் கண்களும், அதில் காணப்படும் எல்லையற்ற கருணையும், அன்பும், முகத்தில் எப்போதும் காணப்படும் இளமுறுவலோடும், அவனைப் பார்த்தாலே நம் தலையிலிருந்து கால் வரை எல்லாமும் நிறைந்து போகிறது. எந்தக் கவலை இருந்தாலும் பறந்துவிடுகிறது.  அவன் நம்மைப் பார்த்துச் சிரித்தால் தவிர்க்க முடியாமல் நாமும் சிரிக்கத் தான் தோன்றுகிறது.  அந்தச் சிரிப்பிலேயே மனம் லேசாகிறது.  காற்றில் மிதக்கும் எண்ணம் தோன்றுகிறது. அவனுடைய இந்த ஒரு தோற்றமே நம் மனத்தின் அனைத்துக் கசடுகளையும் நீக்கும் வல்லமை பெற்றுள்ளது.  அவன் வாயைத் திறந்து பேசினாலோ! அதில் உள்ள எல்லையற்ற கருணை நம்மை ஆட்கொண்டு முழுக்காட்டுகிறது.

ம்ம்ம்ம், எல்லாவற்றிற்கும் திருஷ்டிப் பரிகாரம் போல கெளரவர்கள் வந்து சேர்ந்திருக்கின்றனர்.  மூத்தவன் துரியோதனன், துஷ்சாசனன் மற்றும் அவர்களுடைய சில சகோதரர்களும் வந்திருக்கின்றனர்.  அவர்களுடன் வந்திருக்கும் அங்க நாட்டு அரசன் தேரோட்டி ராதேயனின் மகனாமே.  ஆனால் அவனைப் பார்த்தால் பெரிய உயர்குடிப் பிறப்பில் பிறந்தவன் போல் அழகும், கம்பீரமும் வாய்ந்து காணப்படுகிறான்.  மிகப் பெரிய வில்லாளி எனவும் சொல்கின்றனர்.  அவர்களுடன் வந்திருக்கிறான் அவனும்.  அதுதான் அந்த துரோணாசாரியாரின் மகன், அஸ்வத்தாமா! பார்க்கவே பயங்கரமாக அன்றோ தோன்றுகிறான்.  அவன் எதற்கு இங்கே வந்தான்?  அவன் மட்டுமா?  குரு வம்சத்து இளவல்களே வருவார்கள் எனத் தந்தையும் எதிர்பார்க்கவில்லை;  யாருமே எதிர்பார்க்கவில்லை.  அவர்கள் வரவினால் தந்தைக்கு தர்ம சங்கடம் தான் எனத் தோன்றுகிறது. எல்லா வகையிலும் சிக்கல்கள் நேர்ந்துவிடுமோ என பயப்படுகிறார்.   இத்தனைக்கும் அவ்வளவு பெரிய பழமையான நாட்டிலிருந்து வந்திருக்கும் இந்த இளவரசர்களால் இந்த சுயம்வர நிகழ்ச்சியின் முக்கியத்துவம் என்னமோ கூடி இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.  இருந்தாலும் அவர்கள் வரவு சற்றும் எதிர்பாரா வரவு தான்.


அன்று காலை அவள் சீக்கிரமே எழுப்பப் பட்டாள்.  வைதிகச் சடங்குகளுடன் கூடியதொரு குளியலுக்கு அவளைத் தோழிப் பெண்கள் தயார் செய்தனர். வாசனை மிக்க திரவியங்கள், மஞ்சள் பொடி, கஸ்தூரி, குங்குமப் பூவில் ஊறிய பால் போன்றவற்றை அவள் உடலில் தடவி, எண்ணெய் முழுக்காட்டினார்கள்.  பின்னர் விலை உயர்ந்த பட்டாடைகளை உடுத்த வைத்துத் தங்க ஆபரணங்களினாலும், வைர ஆபரணங்களினாலும், நவரத்தினங்களாலும் அலங்கரித்தனர்.  ஆனால் அவளை அலங்கரிப்பதாக நினைத்து மேலும் அலங்கோலமாக்கினார்கள் என்றே திரெளபதிக்குத் தோன்றியது. கருகருவெனக் கருநாகம் போலப் பளபளப்பாக இருந்த அவள் நீண்ட கரிய கூந்தல் பல பின்னல்களாகப்பின்னப்பட்டு, பல வகையான வண்ணமுள்ள, வாசனை மலர்களால், தேர்ந்த தலை அலங்கார நிபுணர்களால் அலங்கரிக்கப்பட்டது.  அனைவரும் சேர்ந்து அவளை ஒரு தேவதை போல் தோற்றமளிக்கும்படி அலங்கரித்தனர்.  அவள் மனதிலோ தான் தேவதையாகக் காட்சி கொடுக்காவிட்டாலும், தன்னுடைய கம்பீரமும்,  பிரகாசமான முகமும் மங்காமல் காட்சி கொடுத்தால் போதும் என இருந்தது.  இத்தனை அலங்காரத்துக்குப்பின்னர் அவள் குழந்தையிலிருந்து இப்போது வரை தினமும் செய்து வருகிற வழக்கப்படி தன் தந்தையின் காலடிகளில் விழுந்து வணங்கி எழுந்தாள்.

அப்படித் தன் தந்தையை தினம் தினம் வணங்குவதில் அவள் மனம் திருப்தியும் அடைந்து வந்தது.  அவளைப் பொறுத்தவரை அவள் தந்தை சாமானியமானவரே அல்ல;  கடவுளுக்கும் மேலானவர். ஆகவே அவரை வணங்குவது அவளுக்கு முக்கியக் கடமையாகும்.  அன்று அவ்வாறு வணங்குகையில் தந்தையின் முகத்தைப் பார்த்து மிகவும் துயரம் அடைந்தாள் திரெளபதி.  ஆம்; துருபதனின் முகத்தில் சந்துஷ்டி இல்லை.  ஏதோ அதிருப்தியில் அல்லது வருத்தத்தில் ஆழ்ந்து போயிருக்கிறவனாய்த் தெரிந்தது.  அவன் முகபாவம் மிகவும் கடுமையையும் காட்டியது.  துருபதன் உள்ளூர சந்தோஷமாக இல்லை என்பதை உடனேயே திரெளபதி அறிந்து கொண்டாள்.  என்றாலும் அவள் எதையும் கேட்கவில்லை.  தந்தையிடம் சென்று திரும்பிய பின்னர் அவளும் அவளுடைய மூத்த சகோதரன் த்ருஷ்டத்யும்னனும் குரு வம்சத்து யுவராஜாவான துரியோதனனின் சகோதரன் துஷ்சாசனை வரவேற்றனர்.  அவன் விலை உயர்ந்த பல பரிசில்களைக் குரு வம்சத்தினர் சார்பாகக் கொண்டு வந்திருந்தான்.  அந்தப் பரிசில்கள் அனைத்துமே  மற்ற எந்த அரசர்களின் பரிசில்களோடும் ஒப்பிட முடியா அளவுக்கு விலை உயர்ந்தவையாக இருந்தன.

அவனுடன் குரு வம்சத்து ராஜ்ய சபையில் குரு வம்சத்தினரின் வம்சாவளியையும், வீர, தீரப் பிரதாபங்களையும் இப்போதிருக்கும் மன்னன் திருதராஷ்டிரன், யுவராஜா துரியோதனன் ஆகியோரின் புகழையும் பாடும் வழக்கமுள்ள ஒரு அந்தணனும் கூட வந்திருந்தான்.  அவன் தன் வழக்கப்படி இங்கேயும் குரு வம்சத்தினரின் வம்சாவளியையும், பரத குலத்து வழி வந்தவர்கள் என்பதையும் சொல்லிவிட்டு துரியோதனனின் வீரத்தைக் குறித்துப் பாடல்களாகப் பாடினான்.  அவனுடைய வீரம், திறமை, ஆற்றல், மாட்சிமை பொருந்தியதொரு நல்வாழ்க்கை ஆகியவற்றைப் பாடிவிட்டுப் பின்னர் அங்க தேசத்து அரசன் ஆன தேரோட்டி மகன் கர்ணனின் வீரத்தைக் குறித்தும் பாடல்களின் மூலம் வெளிப்படுத்தினான்.  கர்ணன் மிகச்  சிறந்த வில்லாளி என்பதையும் குறிப்பிட்டுக் கூறினான்.  பின்னர் துரோணாசாரியாரின் ஒரே மகன் அஸ்வத்தாமா, பிரம்மாஸ்திரத்தைக் கற்ற இருவரில் ஒருவன், இன்னொருவன் பாண்டவ புத்திரன் அர்ஜுனன் அவன் மறைந்துவிட்டான்.


இப்போது இவன் ஒருவனுக்கே பிரம்மாஸ்திரப் பிரயோகம் தெரியும்.  மிகச் சிறந்த வீரன், வில்லாளி, நித்ய கர்மானுஷ்டானங்களைத் தவறாமல் செய்யும் அந்தணன் என்றெல்லாம் விவரித்துப் பாடினார்.  இவற்றுக்கெல்லாம் செவி கொடுக்காமல் எங்கோ பார்த்துக் கொண்டு தன் தலையைத் திருப்பிக் கொண்டு வேறு கவனத்தில் ஆழ்ந்தாள் திரெளபதி.  அவர்கள் சென்ற பிறகு, த்ருஷ்டத்யுமனன் திரெளபதியிடம், ‘யுவராஜா துரியோதனனின் தாய் மாமன் ஷகுனி, காந்தார நாட்டு இளவரசனைக், கிருஷ்ண வாசுதேவன் உன்னிடம் அழைத்து வர விரும்புகிறான். துரியோதனனின் மனைவியான காசி தேசத்து இளவரசி பானுமதி, கிருஷ்ண வாசுதேவனின் இளைய சகோதரியாக ஸ்வீகரிக்கப்பட்டவள்.  அவள் கிருஷ்ண வாசுதேவனிடம் உனக்கும், ஷகுனிக்கும் இடையில் சந்திப்பு ஏற்படுத்த வேண்டி அவனிடம் உறுதிமொழி வாங்கி இருக்கிறாளாம்.  அதன்படி ஷகுனியை உன்னிடம் அழைத்துவரக் கிருஷ்ண வாசுதேவன் விரும்புகிறான்.”

திரெளபதி திகைத்தாள்.  துரோணரின் மிகவும் பிரியமான சீடன் துரியோதனன்.  இப்படி  எவ்வகையிலும் கடக்க இயலாத ஆக்ஷேபணைகள் உள்ள குருவை வைத்துக் கொண்டு  அவரை மீறிக்கொண்டு துரியோதனன் இங்கே வந்ததே அதிசயம், அதோடு , அவனுக்கு இருக்கும் புகழோ மிகுந்து அச்சம் ஊட்டும் வகையிலும் உள்ளது.  இவற்றை வைத்துக் கொண்டு இவன் சுயம்வரத்திற்கு வந்ததே அதிசயம்.  அவனுடைய கபடத்தாலும், இடையறா சூழ்ச்சிகள், சதிகளாலும் ஹஸ்தினாபுரத்தின் தன்மையையே விஷமாக்கி வருகிறான் என்றே அனைவரும் சொல்கின்றனர்.  அதோடு மட்டுமா?  அவனுடைய சித்தப்பா பிள்ளைகளான பாண்டவர்களை நாட்டை விட்டும் துரத்தி இருக்கிறான்.   வாரணாவதத்தில் அரக்கு மாளிகையில் அவர்களை உயிருடன் எரித்திருக்கிறான்.  எவ்வகையிலும் கட்டுக்கடங்காமல் இருக்கும் அவனுடைய இந்தத் தீயகுணத்தால் அவன் தாத்தா பீஷ்மராலும் வெறுத்து ஒதுக்கப்பட்டுள்ளான்.  இப்போது….இப்போது அவன் மனைவி பானுமதியை அவன் நினைத்ததை முடிக்கப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறான்.  பாவம் அந்த அப்பாவிப் பெண்!  ஹூம், இப்படி எல்லாம் திரெளபதியை வெல்ல முடியாது!  அதை விடவும் அவள் இறந்து போவாள்.  மணமேடையில் அக்னிசாட்சியாக அவன் கரத்தையா பிடிப்பது.  கறைபடிந்த அந்தக் கரங்களைப் பிடித்து அவனுடன் மண உறவு கொள்வதற்கு பதிலாக இறந்துவிடலாமே!1 comment:

ஸ்ரீராம். said...

திரௌபதி சற்றே குண்டான சரீரம் உடையவள் என்று படித்த ஞாபகம். திரௌபதிக்கு அலங்காரம் படிக்கும்போதெல்லாம் ஒரு குண்டான பெண்ணே மனக்கண்ணில்!