Sunday, April 20, 2014

திரெளபதிக்கு வந்த சந்தேகம்!

நாகர்களும், யாதவர்களும் ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டு பாண்டவர்களைக் குறித்துக் கலந்து ஆலோசிக்க விட்டுவிட்டு, நாம் இப்போது காம்பில்யத்தின் அரண்மனையில் அந்தப்புரத்துக்குள் நுழைய வேண்டும். அவ்வளவு எளிதில் நுழைய முடியாது என்றாலும் நமக்குச் சிறப்பாகச் சலுகை அளித்திருக்கின்றனர்.  அதிலும் திரெளபதி இப்போது குழப்பத்தில் ஆழ்ந்திருக்கிறாள்.  அவள் தீர்மானமான முடிவை தைரியமாக சுயமாகச் சிந்தித்து எடுப்பாள் என்பது ஆர்யவர்த்தம் மட்டுமின்றி தூர தூர தேசங்களுக்கும் பரவி இருந்தது.  அப்படிப் பட்டவள் குழம்பி இருக்கிறாள் எனில்?? அதுவும் அவள் கல்யாண விஷயத்தில்.  அரண்மனை அந்தப்புரத்தின் ஒரு ஓரமாக இருந்து கொண்டு திரெளபதியைக் கவனிப்போம்.  தனக்குள்ளாக ஏதோ யோசித்துக் கொண்டும், தலையை ஆட்டிக் கொண்டும், சிந்தனையில் ஆழ்ந்திருப்பதைக் காட்டிக் கொண்டிருந்தாள் திரெளபதி.  பதினாறு நாட்களாக அவள் சுயம்வரத்திற்கான ஏற்பாடுகளும், கொண்டாட்டங்களும் நடைபெற்று வருகின்றன.  இந்த பெளஷ மாசத்தின் பூர்ணிமை நெருங்கும்போது அவள் சுயம்வரம் நடைபெறும்.  அந்த நாள் நெருங்க நெருங்க திரெளபதி கொஞ்சம் சங்கடத்தில் ஆழ்ந்தாள். இனம் தெரியா பரபரப்பும் அவளைச் சூழ்ந்து கொண்டது.

ஒவ்வொரு சமயமும் அந்த அந்தப்புரத்தின் மேன்மாடத்திற்குச் சென்று பார்ப்பாள் திரெளபதி.  அப்போது தான் அவளுக்குக் கண்ணுக்கு எட்டிய தூரம் முழுவதும் காம்பில்யம் தன் சுயம்வரத்திற்கான ஏற்பாடுகளில் மும்முரமாக இருப்பது தெரிய வரும்.  தன் ஒருத்தியின் திருமணத்துக்காகத் தன் முகத்தையே ஒட்டுமொத்தமாக மாற்றிக் கொண்டு பல்வேறு விதமான அலங்காரங்களில் காட்சி அளிக்கும் காம்பில்யம் அவளைத் திகைப்பில் ஆழ்த்தும்.   நகரின் வெளிப்பகுதியில் வந்திருந்த விருந்தினர்களுக்குத் தங்கவென விஸ்தரிக்கப்பட்டிருந்த பகுதியும், ஆங்காங்கே அடிக்கப்பட்டிருந்த கூடாரங்களும், கூடாரத்தின் உச்சியில் தொங்கிய பல்வேறு தேசக் கொடிகளும், மன்னர்களின் நடை பழகுதலும், அவர்களின் உடற்பயிற்சிகள், ஆயுதப் பயிற்சிகளும் அவள் கண்களில் படும்.  குதிரைகளும், யானைகளும், காலாட்படை வீரர்களும் நகரில் நெரிசலை ஏற்படுத்திக் கொண்டிருந்தனர். இந்தக் கொண்டாட்டங்களில் பங்கெடுக்க வந்திருக்கும் சுற்றுப்புறத்து மக்கள் மட்டுமின்றி சுயம்வரத்தில் கலந்து கொள்ள வந்திருக்கும் மன்னர்களும் சேர்ந்து கொள்வது.  கங்கைக்கரையிலோ எண்ணிலடங்காப் படகுகளிலும், சிறு சிறு பாய்மரப் படகுகளிலும் வந்திறங்கிய பல்வேறு நாட்டு மன்னர்கள், அவர்களின் நம்பிக்கை கலந்த சிரிப்பொலிகள், பேச்சுக்கள், பல்வேறு விதமான மொழிகள் புழங்கினாலும் ஆர்யவர்த்தத்தின் மொழியை அனைவருமே அறிந்து கொண்டு மற்றவருடன் உரையாடுகையில் அந்த மொழியிலேயே உரையாடியது. என அனைத்தையுமே திரெளபதி தினம் தினம் பார்த்துக் கொண்டிருந்தாள்.

இவை அனைத்தும் நடைபெறுவது தனக்காக என்னும் எண்ணம் அவளிடம் ஒரு பிரமிப்பை உண்டாக்கி இருந்தது.  அவள் திருமணத்திற்காக நடைபெறும் இந்தக் கோலாகலங்களில் ஆழ்ந்த இளம்பெண்களும், இளைஞர்களும் மிகுந்த மகிழ்ச்சியோடு ஆரவாரங்கள் செய்வதையும் கண்டாள். இப்படி அனைவருமே அவள் திருமணம் குறித்து ஆவலும் மகிழ்வும் கொண்டிருக்க அவள் மனதில் மட்டும் இனம் தெரியாச் சோர்வு.  மகிழ்வு என்பதே இல்லை.  அவள் மனதில் விதம் விதமான சந்தேகங்கள் ஏற்பட்டுக் கலைந்து கொண்டிருந்தன.  இந்த சுயம்வரத்தின் மூலம் உண்மையிலேயே தகுதி வாய்ந்த கணவன் ஒருவன் அவளுக்குக் கிடைப்பானா?  அப்படி ஒரு கணவன் கிடைத்தாலும் அவன் அவள் தந்தையின் லக்ஷியத்தைப் பூர்த்தி செய்வானா?  அதெல்லாம் போகட்டும்! கணவனைத் தேர்ந்தெடுக்கும் இந்த முறையே உண்மையில் சரியான முறைதானா?  இப்படி சுயம்வரம் மூலமும், போட்டிகள் மூலமும் தேர்ந்தெடுக்கும் ஒரு கணவன் உண்மையிலேயே அவள் தந்தைக்கு விசுவாசமாக இருந்து அவர் கோரிக்கையை நிறைவேற்றுவானா? அப்படிப்பட்டவனாக இல்லை எனில் அவன் மனதை மாற்றித் தன்பால் வசீகரித்து அதை நிறைவேற்றச் செய்யும் ஆற்றல் தன்னிடம் இருக்கிறதா? எண்ணிலடங்காக் கேள்விகள் அவளுள் எழுந்து எழுந்து மறைந்தன.  அவள் குறிக்கோளும், அவள் தந்தையின் குறிக்கோளும் சரி சமமானவையே.  இரண்டும் ஒன்றே.  ஆகவே அது நிறைவேறியே ஆகவேண்டும்.

இப்படிப்பட்ட நிச்சயமற்ற மனநிலையில் இருந்த அவளால், திருமணம் குறித்த எந்தவிதமான கோலாகல நிகழ்ச்சிகளிலும் முழுமனதோடு பங்கெடுக்க முடியவில்லை.  தான் தனியே இருந்து தீவிரமாகச் சிந்திக்கவே விரும்பினாள்.  ஆனால் அவளைத் தனியே இருக்க அரண்மனையில் இருப்பவர்கள் விடவே இல்லை.  பகலில் எப்படியோ தனியே இருந்தாலும் அவள் இரவுகளில் சுற்றிலும் தோழிகள் புடைசூழவே இருக்க வேண்டியதாக இருந்தது.  கணக்கில் இல்லாத சடங்குகள் வேறே.  ஒரு இளவரசியின் திருமணம் என்பதால் ஏற்கெனவே கோலாகலம் நிறைந்த அந்த அரண்மனை இந்தச் சடங்குகளை நிறைவேற்றி அவள் திருமணத்தில் எவ்விதக் குறையும் இருக்கக் கூடாது என்று நினைத்து அதற்கேற்பப் பல்வேறு மதச் சடங்குகளையும் வைத்திருந்தனர்.  அவற்றை அவளால் தட்ட முடியவில்லை. அதோடு மட்டுமில்லாமல் குடும்பத்தில் பெரியவர்கள், சிநேகிதர்கள், சிநேகிதிகள், பல்வேறு நாட்டு இளவரசிகள், அரசிகள் எனப் பரிசுகளை எடுத்துக் கொண்டு அவளைப் பார்க்க வந்த வண்ணம் இருந்தனர். வாழ்த்துகளையும், பரிசுகளையும் தட்டமுடியாமல் ஏற்க வேண்டி இருந்தது. வரமுடியாத அரசர்கள் தங்கள் பிரதிநிதிகள் மூலம் அவளுக்காகப்பரிசுகளை அனுப்பி இருந்தனர்.  அத்தகையோர் அவளை நேரில் பார்த்துத் தங்கள் பரிசுகளை அளிக்க விரும்புவதால் அவர்களையும் அவள் சந்திக்க வேண்டி இருந்தது.

இத்தனையிலும் அவளுக்கு ஏற்பட்டிருந்த முக்கியமான சந்தேகம், தன் தந்தை சுயம்வரத்தில் குரு சாந்தீபனியால் ஏற்பாடு செய்யப்பட்ட கடுமையான போட்டி உண்டு என்பதை அறிவித்துவிட்டாரா இல்லையா என்பது தான்.  அதைக் குறித்து அவளுக்கு இன்னமும் நிச்சயமாக எதுவும் தெரியவில்லை.  போட்டியில் ஜெயிப்பவனைத் தான் தான் மணக்க முடியும் என்பதையும் தந்தையார் தெரிவித்திருக்க வேண்டும்.  இந்த அரசர்கள், இளவரசர்கள் அனைவருமே தான் வெளிப்படையாகத் திறந்த ஒரு சபையில் அவர்களை ஒவ்வொருவராகப் பார்த்துத் தேர்ந்தெடுப்பேன் என நினைத்துக் கொண்டிருக்கலாம்.   அதுவும் ஒவ்வொருவரும் அறிமுகம் செய்து கொண்டுவிட்டு அவரவருக்குப் பழக்கமான ஆயுதப் பயிற்சியிலோ, மல்யுத்தப் பயிற்சியிலோ வேறு பயிற்சியிலோ தன் திறமையைக் காட்டிவிட்டுத் தங்களை அவள் தேர்ந்தெடுப்பாள் என நினைத்துக் கொண்டிருக்கலாம்.  அப்படி எல்லாம் இல்லை எனவும் பொதுவானதொரு போட்டி உண்டென்றும் தந்தை அறிவித்திருக்க வேண்டும்.  செய்தாரா எனத் தெரியவில்லை.  குரு சாந்தீபனியால் ஏற்படுத்தப் படப் போகும் போட்டி நிச்சயம் கடினமான ஒன்றாகவே இருக்கும்;  சந்தேகமே இல்லை.  சிறந்ததொரு வில் வித்தை வீரனால் மட்டுமே வெல்ல முடியும் ஒன்றாகவும் இருக்கும்.  எப்படி இருந்தாலும் அவரவர் திறமையைக் காட்டும்படியான சாதாரணப் போட்டிகளில் எல்லாம் அவள் மனமும் திருப்தி அடைந்திருக்காது.  இப்படி ஒரு கடினமான போட்டி இருக்கத் தான் வேண்டும்.  அப்போது தான் உண்மையான வீரன் வெளிப்படுவான்.  இந்த ஆர்யவர்த்தத்திலேயே சிறந்ததொரு வில் வித்தை வீரனைத் தான் அவள் மணக்க நினைக்கிறாள். சாதாரணமான ஒருவனை அல்ல.

தன் தந்தை இந்த ஆர்யவர்த்தத்திலேயே சிறந்ததொரு அரசனாக இருப்பார் எனக் கிருஷ்ணன் கூறியது உண்மையாகவே ஆகி விட்டது.  இந்த சுயம்வரத்தின் மூலம் தந்தையின் பலம் கூடித்தான் போய்விட்டது. ஆர்யவர்த்தத்திலேயே சிறந்த ஒரு அரசராகவும் முதன்மை ஸ்தானத்தில் இருப்பவராகவும் தந்தை விளங்குகிறார்.   இது நன்மைக்கே என்றாலும் இது முழுக்க முழுக்கப் பூர்த்தியாக ஆனாலும் இதிலும் ஒரு சங்கடம் இருக்கத் தான் செய்கிறது.  ஒருவேளை குரு சாந்தீபனியால் ஏற்படுத்தப் போகும் போட்டியில் எவருமே தேறாமால் போய்விட்டால்??  இது பல்வேறு பிரச்னைகளைத் தான் கிளப்பும்.   இந்த அரசர்கள் கல்யாணத்தையும், அரசியலாக்கவே நினைக்கின்றனர்.  அவரவர் ராஜ்ய விஸ்தரிப்புக்காகவும், அரசின் பாதுகாப்புக்காகவும் திருமணம் செய்து கொள்ள நினைக்கின்றனர்.  இப்படிப்பட்ட அரசியல் பேரங்களில் விலைபோகும் பெண் அவள் அல்ல.  திரெளபதி அனைவரிலிருந்தும் மாறுபட்டவள்.   தன்னை எண்ணித் தனக்குத் தானே சிரித்துக் கொண்டாள் திரெளபதி.  இந்த அரசர்கள் மூடர்கள்; அவரவர் ராஜ்யத்துக்காக அவளை மணக்க நினைக்கின்றனர்.  ஆனால் அவளோ?  தன் தந்தையின் சபதத்தைப் பூர்த்தி செய்யப் போகும் ஒருவனுக்குத் தான் மாலையிடப் போகிறாள்.  ஆம் அவள் திருமணம் செய்து கொண்டால் அப்படி ஒருவனைத் தான் திருமணம் செய்து கொள்வாள்.  அவள் கணவன் அவள் தந்தைக்கு விசுவாசமாக இருக்க வேண்டும்.

   

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

குழப்பம் தீர்ந்து விடும்..

ஸ்ரீராம். said...

திரௌபதியின் நிலையிலிருந்து யோசித்துப் பார்த்தால் இவ்வளவு பெரிய கூட்டம் தன்னை மணக்க வந்திருப்பதைக் காணும்போது எப்படி மனதில் எண்ணங்கள் தோன்றும் என்று எண்ணிப் பார்க்கத் தோன்றுகிறது!