Thursday, November 10, 2016

விடைபெறும் விருந்தினர்!

ஜராசந்தனும், சிசுபாலனும் கொல்லப்பட்டு விட்டதோடு முடிந்திருந்தால் யுதிஷ்டிரன் வாழ்க்கை நன்றாகவே போயிருக்கும். ஆனால் அதோடு முடியவில்லையே! பார்ப்போர் வியந்து அச்சமுறும் வண்ணம் வெளிப்பட்ட கிருஷ்ணனின் அபார சக்தி ஜராசந்தனின் தோழர்கள் அனைவரையும் திகைத்துப் பயப்பட வைத்தது. அவர்கள் தந்தவக்கிரன் தலைமையில் இந்திரப் பிரஸ்தத்தை விட்டே வெளியேறி விட்டார்கள். அந்தச் சூழ்நிலையை முழுவதும் கிருஷ்ணன் தன் கட்டுப்பாட்டுக்குக் கீழ் கொண்டு வந்துவிட்டான். ஆகவே தந்தை இறந்ததால் வருந்திக் கொண்டிருந்த சிசுபாலனின் மகனை அணைத்து ஆறுதல் சொல்லி அவன் மரணத்தின் நியாயங்களை எடுத்துக் கூறினான். சிசுபாலனின் உடல் அரச மரியாதைகளோடு எரிக்கப்படுவதற்கு ஆவன செய்தான். சிசுபாலனுடைய நெருங்கிய உறவினர்கள் அனைவரும் சிசுபாலன் இறந்த பின்னரும் ராஜசூய யாகம் போன்ற புனிதமான யாகம் நடக்கும் இடத்தில் இருக்கக் கூடாது என்று அங்கிருந்து வெளியேறினார்கள். அதன் பின்னர் சிசுபாலனின் மகன் ஆசாரியர் வியாசரின் அறிவுரைப்படியும் ஆசிகளின் படியும் சேதி நாட்டு மன்னனாகப் பொறுப்பேற்க வைக்கப்பட்டான். அங்கு கூடி இருந்த மற்ற அரசர்களும், பேரரசர்களும் அதற்கு ஆதரவு தெரிவித்தனர்.

அந்த ராஜசூய யாகத்துக்கு வந்திருந்தவர்கள் அனைவருக்குமே யுதிஷ்டிரனின் பெருந்தன்மையான போக்கும், அமைதியான சுபாவமும், நேர்மையும், கருணையும் பொருந்திய அணுகுமுறையும் மிகவும் பிடித்திருந்தது. அனைவருமே யுதிஷ்டிரனைப் போற்றினார்கள். அனைவர் மனதிலும் ஓர் அழுத்தமான இடத்தை யுதிஷ்டிரன் பிடித்து விட்டான். ராஜசூய யாகம் தொடர்ந்து நடைபெற்றாலும் அதில் பழையபடி எவருக்கும் ஆர்வமோ, விருப்பமோ இல்லை! அனைவரும் வேறு வழியில்லாமலேயே அதில் கலந்து கொண்டாற்போல் காணப்பட்டனர். அதன் கவர்ச்சியும், அதன் முக்கியத்துவமும் குறைந்து போய் அனைவர் மனதிலும் ஓர் ஆழ்ந்த வருத்தமே காணப்பட்டது. வெளிப்பார்வைக்கு அதை மறைத்துக் கொண்டு அனைவரும் புன்னகையைப் போர்த்திய வண்ணம் நடமாடினார்கள்.

அந்தச் சூழ்நிலையைக் கொஞ்சமாவது மாற்றியவர் எனில் அது வேத வியாசர் மட்டுமே! மக்களும் கூட்டம் கூட்டமாக வந்து அவரது தரிசனத்தைப் பெற்றுப் போய்க் கொண்டிருந்தனர். அவர் தொட்டாலே நோய் குணமாகும் என்று நம்பிய மக்கள் அங்கே வந்து தங்களை நோயிலிருந்து காப்பாற்ற வேண்டி அவர் தொட்டுச் சிகிச்சை செய்ய வேண்டும் என்று வேண்டினார்கள். குழந்தைகள் வழக்கம்போல் அவர் அளிக்கும் உணவுக்காகக் காத்திருந்து உண்டனர். மன்னர்களும், பேரரசர்களும் அவர் ஆசிகளுக்குக் காத்திருந்தனர். புனிதமான வேதத்தைக் காப்பாற்றுவதற்காக ஸ்ரோத்திரியர்கள் தபஸ் இருந்து அதன் புனிதத்தை அதிகப்படுத்தி இருந்தனர். அதற்கு முழு முதல் காரணமே வேத வியாசரும் அவரால் தொகுத்து உலகுக்கு அளிக்கப்பட்ட வேத மந்திரங்களுமே ஆகும். அனைவரும் முழு மனதுடன் பாரம்பரிய வழக்கங்களை விடாமல் கடைப்பிடித்து அதன் புனிதத்தைக் காப்பாற்றினார்கள். தர்மத்தின் வழியில் அவர்கள் சென்றால் தான் தர்மம் நிலைக்கும் என்றும் தர்ம சாம்ராஜ்யம் ஏற்படும் என்றும் திரும்பத் திரும்ப அவர்கள் மனதில் படும்படி வேத வியாசர் எடுத்துச் சொல்லிக் கொண்டே இருந்தார். அதோடு இல்லாமல் ஸ்ரோத்திரியர்கள் தங்கள் தவ வாழ்க்கையிலிருந்து சற்றும் பிறழாமல் வாழ வேண்டும் என்றும் அப்போது தான் அவர்கள் சொல்லுக்கும், செயலுக்கும் மதிப்புக் கிடைக்கும் என்றும் மக்கள் அவர்களை நம்பி மதித்துப் போற்றத் தொடங்குவார்கள் என்றும் புரிய வைத்தார். திரும்பத் திரும்ப காயத்ரி மந்திரத்தை ஓதுவதன் மூலம் கடுமையான சுயக்கட்டுப்பாடுகள் அவர்களுக்குள் ஏற்படும் என்று சொல்லிச் செய்ய வைத்தார்.

ஒரு வழியாக ராஜசூய யாகமும் முடிவுக்கு வந்தது. புனிதமான அக்னியை முறைப்படி அணைத்தார்கள். தந்தவக்கிரனோடு செல்லாமல் யாகம் முடியும் வரை அங்கேயே தங்கி இருந்த மற்ற அரசர்கள் அனைவரும் விடைபெறும் முகமாக யுதிஷ்டிரனை வந்து சந்தித்து வணங்கி நின்றார்கள். இந்த யாகத்தை முடித்ததன் மூலம் யுதிஷ்டிரன் ஒரு சக்கரவர்த்தியாக அங்கீகரிக்கப்பட்டான். அவனும் தன் பங்குக்கு அந்த அரசர்களுக்கு விலைமதிக்க முடியாப் பல பரிசுகளை அளித்து கௌரவித்தான். அவர்களைத் தன் நாட்டின் எல்லை வரை சென்று மரியாதை கொடுத்து அனுப்பி வைக்கும்படி தன் தம்பிகளை அனுப்பி வைத்தான். வசுதேவரும் பலராமனும் தங்களுடன் வந்த யாதவ மஹாரதிகளுடன் அங்கிருந்து கிளம்பினார்கள். கிருஷ்ணன், உத்தவன், சாத்யகி ஆகியோர் சில நாட்கள் அங்கே இந்திரப் பிரஸ்தத்தில் தங்கிச் செல்வதாகத் திட்டம். தாத்தா பீஷ்மரும் ஹஸ்தினாபுரத்திலிருந்து வந்திருந்த மற்ற விருந்தாளிகளும் கூட அங்கேயே தங்கி அந்த மாளிகை மற்றும் சபாமண்டபத்தின் சித்திர, விசித்திரங்களைப் பார்த்துக் களிக்க நினைத்துத் தங்கி விட்டார்கள். மயன் கட்டிக் கொடுத்திருந்த அந்த மாளிகையும் அதன் சபா மண்டபமும் போல் இந்தப் பாரில் எங்கும் காணமுடியாது என்னும் வண்ணம் அதி அற்புதமாக அமைந்திருந்தது.

துரியோதனன் விடைபெறுகையில் தன்னுடைய வழக்கமான விசித்திரப் புன்னகையுடன் விடைபெற்றான். ஆகவே துரியோதனன் விடைபெறுகையில் யுதிஷ்டிரன் தன்னுடைய கௌரவ சகோதரர்கள் இனி தங்கள் ஐவருடனும் நட்புடனும், பாசத்துடனும் பழகுவார்கள் என்று எதிர்பார்த்தான். ஆனால் நடந்ததே வேறு! அந்த விசித்திரமான சபையில் பீமனுடனும், திரௌபதியுடனும் துரியோதனன் நடந்து கொண்டு சுற்றிப் பார்த்து வருகையில் ஓர் இடத்தில் துரியோதனன் சமதரை என்று நினைத்துக் கால் வைக்க அது ஓர் குளமாக இருந்தது. முழுக்க முழுக்க உடையெல்லாம் நனைந்து விட்டது. இன்னொரு இடத்தில் குளம் என நினைத்து உடைகளை அதி கவனமாக மேலே தூக்கிக் கொண்டு நடந்தால் அது சமதரையாகக் காட்சி அளிக்கிறது. இப்படித் தான் துரியோதனன் ஓர் சுவரில் போய் முட்டிக் கொண்டு விட்டான். அங்கே ஓர் வாசல் இருப்பது போல் தோற்றமளிக்க அவ்வழியாக வெளியேற வேண்டும் என்று நினைத்துச் சென்ற துரியோதனன் சுவரில் முட்டிக் கொண்டான். அதைக் கண்ட பீமனுக்கும் திரௌபதிக்கும் அடக்கமுடியாமல் சிரிப்பு வர இருவரும் சத்தம் போட்டுச் சிரித்துவிட்டனர். துரியோதனன் மனதில் மிகவும் ஆழமான வருத்தம் ஏற்பட்டது. அவன் குரோதம் அதிகம் ஆனது. அதிலும் திரௌபதிக்கு முன்னால் தான் அவமானப்பட்டதை நினைத்து நினைத்து வருந்தினான்.

இது இவ்வாறிருக்க கடோத்கஜன் விடைபெற்றுச் சென்றதும் ஓர் குறிப்பிடத் தக்க சம்பவம் ஆகிவிட்டது. அவன் எப்போதுமே உற்சாகம் குறையாமல் இருப்பான். எல்லாவற்றையும் எளிதாக எடுத்துக் கொண்டு விடுவான். அனைவரையும் குறித்துத் தவறாக நினைக்கும் சுபாவமே இல்லை. அந்த அரச குடும்பத்திற்கே மிகவும் பிடித்தமானவனாக அருமையானவனாக ஆகி விட்டான். எல்லோருக்குமே அவனைப்பிரிவதில் வருத்தம் ஏற்பட்டது. இந்திரப் பிரஸ்தத்தின் வாழ் மக்களில் சிலரும் கடோத்கஜனுடன் பழகியதில் அவனை மிகவும் விரும்பத் தொடங்கி விட்டனர். அவன் ராக்ஷஸர்கள் வாழும் அவனுடைய ராஜ்யப் பகுதிக்குச் செல்வதற்கு ஏகப்பட்ட தடங்கல்கள், இடையூறுகள்! எப்படிச் செல்வது என்னும் கலக்கம். ஏனெனில் படகில் செல்ல வேண்டிய இடங்களுக்குப் படகுக்காரர்கள் ராக்ஷசர்களை ஏற்றிச் செல்ல மறுத்தார்கள். கடோத்கஜனோடு சேர்த்துப் பனிரண்டு ராக்ஷசர்கள் வந்திருந்தார்கள்.  ஒருவரையும் ஏற்றிச் செல்லவில்லை படகோட்டிகள்.

பார்த்தான் கடோத்கஜன்! “நான் ஏன் படகில் போக வேண்டும்?” என்றவன் தன் நண்பர்களைப் பார்த்து, “நாம் நீர்வழிப் பயணம் செய்ய வேண்டாம்! அது புனிதமானதல்ல!” என்று சர்வ நிச்சயமாகச் சொல்லி விட்டான். அதில் அவன் உறுதியாகவும் இருந்தான். “நாம் காட்டு வழியிலேயே செல்லலாம்; ஆனால் நான் அதோ அந்தச் சிற்றப்பாவைக் கடத்தி வரப் போகிறேன்.” என்ற வண்ணம் சஹாதேவனைச் சுட்டிக் காட்டினான். பின்னர் குறும்புடன் சிரித்த வண்ணம் அனைவரையும் பார்த்து, “அவரைத் திரும்ப அழைத்துச் செல்ல நீங்கள் எல்லோரும் வந்து தானே ஆக வேண்டும்!” என்றான். கடோத்கஜன் சஹாதேவனுடன் சில மாதங்களைக் கழித்திருந்தான். சஹாதேவன் தென்னாட்டுப் பக்கம் திக்விஜயம் சென்ற போது கடோத்கஜனும் அவனுடன் சென்றிருந்தான். அப்போது பழகியதால் அவனுக்கு சஹாதேவன் மேல் பிடிப்பு ஏற்பட்டு விட்டது. ஆகவே சஹாதேவன் கடோத்கஜனுக்கே உரியவன் என்னும் எண்ணம் அவன் மனதில் பதிந்திருந்தது.

ஆனால் ஏற்கெனவே சஹாதேவனுடன் சில வில்லாளிகளும் சேர்ந்து கடோத்கஜன் காட்டு வழியில் செல்லும்போது துணைக்குச் செல்ல வேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்டிருந்தது. அதன் பின்னர் காட்டு வழியைத் தாண்டினதும் கடோத்கஜன் அவனுடைய ராக்ஷச நாட்டுக்குள் புகுந்துவிடலாம். ஆகவே அதுவரை அவனுக்குத் துணை போவதற்கு சஹாதேவன் தயாராக இருந்தான். தன் தந்தையைப் பிரியும்போது கடோத்கஜனின் கண்கள் குறும்பிலும் சந்தோஷத்திலும் பிரகாசித்தன. தன் தந்தையை ஓர் குழந்தையைத் தடவிக் கொடுப்பதைப் போல் மென்மையாகத் தடவிக் கொடுத்தான். இம்மாதிரியான ஓர் அன்பை இது வரை குந்தி தான் பீமனிடம் காட்டி இருக்கிறாள். தாய் என்னும் முறையில் மென்மையாகத் தடவிக் கொடுப்பாள். வேறு எவரும் இப்படிச் செய்ததில்லை. இன்று கடோத்கஜன் அவ்வாறு செய்தான். பின்னர் அவன், “தந்தையே, உங்களை எனக்கு மிகவும் பிடிக்கிறது. நீங்கள் என்னுடன் ராக்ஷசவர்த்தம் திரும்ப வேண்டும் என்று விரும்புகிறேன். அம்மாவும் அதையே சொல்லி அனுப்பினாள். இப்போது நீங்கள் மிகவும் சந்தோஷத்துடன் ராக்ஷசவர்த்தம் வர விரும்புவீர்கள் என்று எதிர்பார்க்கிறாள்.” என்றான்.

“என் குழந்தாய்! நான் எப்படி வருவேன்? கொஞ்சம் யோசித்துப்பார்! இங்கே எத்தனை பேர்களை நான் கவனிக்க வேண்டி இருக்கிறது என்பதைப் பார்த்தாய் அல்லவா?” என்றான். “ஆம்,” என்று ஒத்துக் கொண்டான் கடோத்கஜன். தொடர்ந்து, “நீங்கள் என்னுடன் வருவதைத் தான் விரும்புவீர்கள்! எனக்கு நன்கு தெரியும். ஆனால் இந்தப் பெரியப்பாவும் சிற்றப்பாக்களும் அதை விரும்ப மாட்டார்கள். அவர்களால் நீங்கள் இல்லாமல் ஒன்றும் செய்ய முடியாது. ஆகவே நீங்கள் அவர்களுடன் தான் வாழ்ந்தாக வேண்டும். ஆனால் ஒரு விஷயம் தந்தையே! நான் அம்மாவிடம் புகார் செய்யப் போகிறேன். ஏன் தெரியுமா? உங்கள் எதிரிகளை நான் அழிக்க நீங்கள் அனுமதி கொடுக்கவே இல்லையே! அதற்காக!” என்றான். பீமன் சிரித்தவண்ணம் விளையாட்டாக மகன் முதுகில் தட்டிக் கொடுத்தான். அவனுக்கும் கடோத்கஜனை மிகவும் பிடித்திருந்தது. என்ன இருந்தாலும் முதல் மகன் ஆயிற்றே! “உன் அம்மாவிடம் சொல்லு! நீ என் பேச்சுக்குக் கட்டுப்பட்டு எனக்குக் கீழ்ப்படிந்து நடந்தாய் என்பதைச் சொல்! அவளுக்கு சந்தோஷமாக இருக்கும்!” என்றான் பீமன்.

கடோத்கஜனுக்கோத் தன் தந்தைக்குத் தான் செய்யாமல் விட்ட உதவியின் மேலேயே கண் இருந்தது. தந்தையின் எதிரிகளைக் கண்டு பிடித்து அவர்களைத் தான் கொல்லவில்லையே என்று நினைத்தான். “ஹூம்! எவ்வளவு நேரம் வீணாகப்போனது! நீங்களும் தான் எவ்வளவு சப்தம் போட்டீர்கள்! அதிலும் உங்கள் எதிரி உங்களைத் தாக்கத் தயாராக இருக்கையில்! உங்களைக் கொல்ல முயற்சித்த போது! எனக்கு மட்டும் அனுமதி கொடுத்திருந்தால், அவனைச் சுத்தமாக முடித்திருப்பேன். அவன் மேல் குதித்து அவனைக் கீழே தரையில் தள்ளி, அவன் கழுத்தை நெரித்து, என் நகங்களால் அவன் இருதயத்தைக் கிழித்து வெளியே எடுத்து”… என்று செய்து காட்டினான்.


1 comment: