Thursday, November 24, 2016

மதி மருண்டவர் விருந்தறஞ் சிதைத்திடினும் கருமமொன்றே உளதாம்!

அவரவர் எண்ணங்களில் மூழ்கிய அனைவரும் மௌனத்தில் ஆழ்ந்திருந்தனர்.  அப்போது யுதிஷ்டிரன் அனைவரையும் பார்த்து, “நாம் அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுத்துவிடக் கூடாது!” என்றவன் தொடர்ந்து, “இன்னும் இரண்டு நாட்கள் இந்த விஷயத்தை நாம் நன்கு யோசித்துவிட்டுத் தான் முடிவெடுக்க வேண்டும்!” என்றான்.”ஆம், ஆம், அதுவும் சரியே! நீ எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் எடுத்துக் கொள், யுதிஷ்டிரா!” என்றார் விதுரர்! ஆனால் பீமனோ மிகக் கடுமையாக, “இன்னும் என்ன யோசிக்கவேண்டுமோ தெரியவில்லை! இது நம்மை அடியோடு அழிக்க, நம் கழுத்தை அறுக்கப் போடப்பட்ட திட்டம் அன்றி வேறில்லை! ஆகவே நாம் இதை மறுக்கவேண்டும், இந்த அழைப்பை ஏற்கக் கூடாது!” என்றான் திட்டவட்டமாக.

அன்றிரவு முழுவதும் யுதிஷ்டிரனுடைய மனம் முழுவதும் எண்ணங்களால் நிரம்பி இருந்தது. எங்கு பார்த்தாலும் இருளாகவே அவனுக்குக் காட்சி அளித்தது. அமைதியையும் சாந்தியையும் கொண்டு வரவே அவன் மிகவும் விரும்பினான். ஆனால் அங்கே அதற்கு இடமில்லாம் போகின்றதே! இனி என்ன செய்வது. “ஆஹா, ஆசாரியர் வேத வியாசரின் தீர்க்க தரிசனமே உண்மையாகி விடுமோ?” என்று தனக்குள்ளே நினைத்துக் கொண்டவன், “ஆம், சித்தப்பா விதுரர் சரியாகத் தான் சொன்னார். ஷகுனி தனக்கு அனுகூலமாக நல்ல நேரத்தைத் தான் தேர்ந்தெடுத்திருக்கிறான். இப்போது யோசனை கேட்கவோ சொல்லவோ யாரும் இல்லை! கிருஷ்ணன் ஷால்வனுடன் போர் புரிவதில் முனைந்திருக்கிறான். அவனை விட்டால் நமக்கு வேறு யாரும் இல்லை. ராஜசூய யாகத்துக்கு வந்து கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்த அரசர்கள் பலரும் மீண்டும் திரும்பி இங்கே வருவதற்கு சாத்தியமே இல்லை! அவர்களிடமிருந்தும் எவ்விதமான உதவியையும் எதிர்பார்க்கவே முடியாது!” என்று தனக்குள்ளாகவே பேசிக் கொண்டாய் யுதிஷ்டிரன். மீண்டும் மீண்டும் மூளையைக் கசக்கிக் கொண்டு யோசித்தான். அவன் அமைதியையும் சமாதானத்தையும் விரும்பிக் கொண்டிருக்க, இங்கே போரும், எதிரிகளுமே தெரிகின்றனர். அவன் வீட்டு வாயிலைத் தட்டி அழைக்கின்றனர்.


அவன் தன் கனவுகளில் கண்ட சித்திரங்கள் அவன் மனதை விட்டு அகலவே இல்லை. ஒரு போர்க்களம், எங்கு பார்த்தாலும் உடைந்த ரதங்களின் சக்கரங்கள் ஆங்காங்கே தெரிய, போர் வீரர்களின் உடைந்த கால்களும், கைகளும் ஆங்காங்கே கிடக்க, அவன், யுதிஷ்டிரன் ஆன அவனே மார்பில் ஓர் அம்பு பாய்ந்து கீழே விழுந்து கிடக்க, அந்நிலையிலும் அவனை எவரோ தன் வாளைக் குறுக்கே பாய்ச்சிக் கொல்ல நினைக்க! இந்தக் கனவில் கண்ட காட்சிகளின் நினைவுகளால் யுதிஷ்டிரன் உடல் நடுங்கினான். எங்கு பார்த்தாலும் தாய்மார்கள், சகோதரிகள் அழுது புலம்புகின்றனர். விதவைகளும், குழந்தைகளும் மனம் உடைந்து வீடு, வாசல் இன்றி அநாதையாக அலைந்து திரிகின்றனர். நூற்றுக்கணக்கில் பசுக்களைக் கொல்கின்றனர். அத்தனைக்கும் நடுவில் அவனுக்கு எங்கிருந்தோ அந்தக் குரல் காதில் கேட்கிறது. எங்கோ தொலைதூரத்திலிருந்து கேட்கும் அந்தக் குரல், “சாந்தி, சாந்தி, சாந்தி என்று எல்லாப் பக்கங்களிலிருந்தும் எதிரொலிப்பது அவனைக் கேலி செய்வது போல் தோன்றியது யுதிஷ்டிரனுக்கு!

அவன் எழுந்திருக்கையில் அவனுக்கு ஓர் நினைவு தோன்றியது. “ஆசாரியர் சொல்வது சரியே! இந்த மாபெரும் துரதிர்ஷ்டத்தைக் கொண்டு வந்த புண்ணியவான் நானாகத் தான் இருக்க வேண்டும். என்னால் தான் இவை நடைபெறப் போகின்றன. நான் என் கடைசிக் காலத்தில் இறைவனுக்கு பதில் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன். இவற்றுக்கான பொறுப்பை ஏற்க வேண்டும்.  இந்தச் சூழ்நிலையை ஏற்கும் மனப்பக்குவமோ தைரியமோ என்னிடம் இல்லை! ஆனாலும் நான் என்னுடைய பாரம்பரியத்தைக் காப்பாற்றவே நினைக்கிறேன். என்ன விலை கொடுத்தாலும் அதைக் காப்பாற்றி என் சகோதரர்களுக்கு நான் அளித்தாக வேண்டும். அவர்கள் அதை இழக்கும்படி செய்யக் கூடாது. என்ன செய்வதென்று தான் எனக்குத் தெரியவில்லை. இதிலிருந்து தப்புவதற்கான வழியையும் நானே கண்டுபிடித்தாக வேண்டும்!”

யோசிக்க யோசிக்க இதற்கான தீர்வு ஓர் மெல்லிய கீற்றாக அவனுள் தோன்றியது. அவன் தன்னுடைய மனோபலம் முழுவதையும் நேர்மையான வாழ்க்கை வாழ்வதில் செலவழித்து வந்திருக்கிறான். இந்தப் போரை மட்டும் எப்பாடுபட்டாவது நிறுத்த வேண்டும். அதனால் யுதிஷ்டிரனுக்குத் தனிப்பட்ட முறையில் என்ன பாதகம் நேர்ந்தாலும் நேரட்டும்!அவனுக்குத் தெரியும்! அவன் சகோதரர்கள், அவன் மனைவி திரௌபதி, அவன் தாய் குந்தி போன்றோர் அவன் என்ன செய்யவேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள் என்பதை அவன் நன்கறிவான். அவர்கள் மனதில் இந்திரப் பிரஸ்தத்தை அவர்களிடமிருந்து பிடுங்குவதற்காக துரியோதனன் செய்யும் சூழ்ச்சிகளில் இது ஒன்று என்னும் எண்ணம் இருக்கலாம்; அது சரியாகவும் இருக்கலாம். ஆனால் அவன் அமைதியைத் தான் விரும்புகிறான். இந்திரப் பிரஸ்தத்தை அவன் ஆண்டால் என்ன, துரியோதனன் ஆண்டால் என்ன? அரச தர்மமும்  க்ஷத்திரிய தர்மமும் கடைப்பிடிக்கப்பட்டால் போதுமே! தர்மம் காப்பாற்றப் பட்டால் போதுமே!

திடீரென அவன் கண்ணெதிரே இதற்கான தீர்வு தோன்றியது. நெருப்பில் எரியும் வாள் ஒளிவீசிப் பிரகாசிப்பது போல் தோன்றியது. அவன் அதை இறுகப் பற்றிக் கொண்டான். போருக்கான காரணங்களையும் சாத்தியங்களையும் அடியோடு ஒழிக்க விரும்பினான். ஆசாரியர் வேதவியாசரின் தீர்க்க தரிசனத்தைப் பொடிப் பொடியாகச் சுக்கு நூறாக ஆக்கி விடுவது என்றும் அதைச் சவால் விட்டுத் தான் வெல்ல வேண்டும் என்றும் எண்ணிக் கொண்டான். மூன்றாவது நாளாக அவர்கள் இந்தச் சிக்கலில் இருந்து தப்பிக்க வழிதேடிச் சந்தித்த வேளையில் யுதிஷ்டிரன் தனக்குள்ளாக ஒரு முடிவை எடுத்து விட்டான். அவனைப் பார்த்த விதுரர், “குழந்தாய், என்ன முடிவு எடுத்திருக்கிறாய்?” என்று வினவினார். “உங்கள் ஆலோசனை என்ன, சித்தப்பா? நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?” என்று யுதிஷ்டிரன் கேட்டான்.

விதுரர் சொன்னார்: “குழந்தாய்! என்னுடைய ஆலோசனையும் புத்திமதியும் இது தான். இப்போது ஹஸ்தினாபுரம் செல்லாதே! இந்த மோசமான வேளை ஓர் புயலைப் போல் கடந்து செல்லட்டும். நீ இப்படிச் சொல்லிவிடு. அதை உண்மையாகவும் ஆக்கிவிடு. நீ இந்த இக்கட்டான சமயத்தில் வாசுதேவனுக்கு உதவி செய்ய வேண்டும் என்றும் அதற்காகச் செல்லப் போவதாகவும் ஹஸ்தினாபுரம் வர இயலாது என்றும் சொல்லிவிடு! என்ன சொல்கிறாய் நீ இதற்கு?” என்று கேட்டார். அதற்கு பீமன், “நான் இப்படி எல்லாம் நொண்டிச் சாக்குச் சொல்லிக் கொண்டு உட்கார்ந்திருக்க மாட்டேன். உண்மையாகவே என்னுடைய அருமையான மஹாரதிகளை அழைத்துக் கொண்டு ஒரு பெரிய ரதப்படையோடு வாசுதேவக் கிருஷ்ணனுக்கு உதவச் செல்வேன்!” என்றான்.

அதற்கு யுதிஷ்டிரன் அவனிடம், “அது அவ்வளவு எளிதல்ல, தம்பி! இந்த அழைப்பை நாம் ஏற்பதா, இந்தச் சவாலை நாம் சந்திப்பதா வேண்டாமா என்பது அவ்வளவு எளிதில் முடிவு செய்யக் கூடியதில்லை. இதோ பார் பீமா, என் அருமைச் சகோதரர்களே, நீங்கள் நால்வருமே என்னுடைய பேச்சையே கேட்பதாகவும் எனக்குக் கீழ்ப்படிந்து என் ஆணைகளை நிறைவேற்றுவதாகவும் நான் கொடுத்த வாக்குறுதிகளை உங்கள் வாக்குறுதிகள் போல் நினைத்து மதிப்புக் கொடுத்து நிறைவேற்றுவதாகவும் வாக்குக் கொடுத்திருக்கிறீர்கள். உறுதி எடுத்திருக்கிறீர்கள். என்னுடைய வழிகாட்டுதலின் படி நடப்பதாகவும் சொல்லி இருக்கிறீர்கள். ஆகவே இந்த உறுதிமொழியை உடைக்காவிட்டால் இந்தப் பிரச்னையை நம்மால் சரியான வழியில் தீர்மானிக்க முடியாது. ஆகவே, என் அருமைச் சகோதரர்களான உங்கள் நால்வரையும் இந்த உறுதிமொழியிலிருந்து நான் விடுவித்து விட்டேன். பீமா, நீ தான் இந்திரப் பிரஸ்தத்தின் நிர்வாகத்திற்கு ஏற்ற தக்க மனிதன் ஆவாய்! இந்த அர்சை நீ ஏற்று நிர்வாகம் செய்வாய்! நான் ஓர் அரசனாக இருப்பதற்குத் தகுதியானவனே இல்லை. நான் காட்டிற்குச் செல்லப் போகிறேன்.” என்றான் முடிவாக.

அனைவரும் அதிர்ந்தனர். குந்தி நீண்ட பெருமூச்சு விட்டாள். “மூத்தவனே, இது என்ன பேச்சு? என்ன சொல்கிறாய் நீ?” என்று பரிதாபமான குரலில் கேட்டாள். கண்கள் கண்ணீரைப் பொழிந்தன. “உங்கள் அனைவரையும் ஒன்றே போல் வளர்த்தேன். நீங்கள் ஐவரும் எந்நாளும் எப்போதும் ஒன்றாகவே இருப்பீர்கள் என்னும் எண்ணத்தையே நான் நினைத்து உங்களுக்கும் அந்த எண்ணத்தையே விதைத்து வந்தேன். நீங்கள் ஐவரும் எப்போதும் ஒன்றாகவே இருப்பீர்கள் என்று நினைத்தேன். நம்பினேன். திரௌபதியும் நீங்கள் அனைவரும் ஒரே பந்தத்தினால் பிணைக்கப்பட்டு இருப்பதைப் பிரிக்கக் கூடாது என்பதற்காகவே உங்கள் ஐவரையும் மணக்கச் சம்மதித்தாள். இப்போது நீங்கள் ஐவரும் பிரிந்து விட்டால், ஆஹா, அதை என்னால் தாங்க முடியாது. இது நாள் வரை நான் உங்களுக்குச் செய்தது எல்லாம் வீணாக வியர்த்தமாக ஆகிவிடும். தர்ம சாம்ராஜ்யத்தை எழுப்ப வேண்டும் என்று நீங்கள் ஐவரும் காணும் கனவு, நேர்மையான, நீதி பரிபாலனம் தவறாத நல்லாட்சி என்பதெல்லாம் ஒன்றுமே இல்லை என்றாகிவிடும்!” என்றாள்.

“ஆம், தாயே, ஆம்! நான் அதை நன்கறிவேன்.” என்று மிக்க வேதனையுடன் கூறிய யுதிஷ்டிரன் தன் முடிவில் உறுதியாகவே இருந்தான். “மாபெரும் பிரச்னை வந்து விட்டது. ஏற்கெனவே ஆசாரியர் வேத வியாசர் தீர்க்கதரிசனமாகக் கூறியது என்னவெனில் ஒரு மாபெரும் யுத்தம் ஒன்று ஏற்படப் போகிறது என்பதே! அந்த யுத்தத்தில் க்ஷத்திரியர்கள் பலர் கொல்லப்படுவார்களாம். இவை எல்லாவற்றுக்கும் காரணகர்த்தாவாக நான் இருப்பேனாம். என்னைச் சுற்றி நடக்கும் விஷயங்கள் சிலவற்றாலேயே இந்தப் போர் ஏற்படுமாம்.” இதைச் சொல்கையிலேயே யுதிஷ்டிரன் கண்களில் கண்ணீர் வழிந்து ஓட அதைத் துடைத்த வண்ணம் அவன் மேலே பேசினான். “உங்கள் அனைவரின் மனங்களையும் உணர்ச்சிகளையும் அழித்து ஒழிக்கவோ உங்கள் இதயத்தை உடைக்கவோ எனக்கு இஷ்டமில்லை. அது எனக்கு மிகுந்த வலியைத் தரக்கூடிய ஒன்று. ஆனாலும் நான் இதை மீண்டும் மீண்டும் மிகக் கவனமாகச் சிந்தித்துப் பார்த்தேன். நான் ஆசாரியர் வேத வியாசரின் தீர்க்க தரிசனத்தை எதிர்த்துச் சவால் விடத் தயாராகி விட்டேன். அவருடைய தீர்க்க தரிசனம் பொய்யாக விரும்புகிறேன். இதை உங்களுடன் சேர்ந்தே செய்யத் தான் ஆவல். ஆனால் நீங்கள் யாரும் சம்மதிக்காவிட்டாலும் நான் தனியாக இதை எதிர்கொள்வேன். நீதி தேவன் தர்ம தேவன் எனக்களித்திருக்கும் ஆன்மிக பலத்தின் மூலம் அதைச் சேர்த்துக் கொண்டு இதை நான் எதிர்கொள்ளத் தயாராக ஆகிறேன்.”

1 comment:

ஸ்ரீராம். said...

இப்படி உரையாடல்கள் நடந்திருக்கலாம் என்பது விரிவான கற்பனை! அருமை.