Monday, November 7, 2016

கண்ணனுக்கே முதல் மரியாதை!

கிரஹங்கள் அனுகூலமான நிலையில் இருப்பது அறியப்பட்டவுடன் யுதிஷ்டிரன் இந்த ராஜசூய யாகத்தின் “யஜமான்” ஆகவும் யாகத்தின் முக்கிய ஆஹூதிகளை அளிப்பவனாகவும் நியமிக்கப்பட்டான். ஏற்கெனவே ஒரு பெரிய மண்டபத்தில் நூற்றுக்கணக்கான அந்தணர்கள் அமர்ந்து கொண்டு யாகம் வளர்த்துக் கொண்டு வேதங்களை ஓதிக் கொண்டு இருந்தார்கள். அங்கே யுதிஷ்டிரன் யாகத்துக்கு வருகை தந்திருந்த அனைத்து அரசர்களோடும் சென்றான். முதல்நாளைய நிகழ்வுகள் முடிந்ததும் அன்றைய தினம் யுதிஷ்டிரன் சக்கரவர்த்தியாக நியமிக்கப்பட்டான். அனைவரும் அதை அங்கீகரித்தனர். இரண்டாம் நாள் எல்லா ஸ்ரோத்திரியர்களும் மற்றும் அரசர்கள் அனைவரும் அந்த யாக மண்டபத்துக்குள் கூடினார்கள். அன்றைய தினம் அக்னி பகவானுக்கு வழிபாடுகள் ஆஹூதிகள் கொடுக்கப்பட்டன. அடுத்த முக்கியமான சடங்கு அக்ரபூஜை என அழைக்கப்படும் முதல் மரியாதை கொடுக்கும் நிகழ்வு. இதற்குத் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் யாகம் முடியும்வரை அந்த யாகத்தையும் வந்திருக்கும் அனைவரையும் பாதுகாக்கும் பொறுப்பை ஏற்பார்கள். யாகத்தின்போது எவருக்கும் இடையில் மனஸ்தாபமோ, சண்டைகளோ, மன வருத்தமோ இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். யாகத்தின் யஜமான் ஆன சக்கரவர்த்தி யாக நிகழ்வுகளில் மனம் பதிந்து இருக்கும் வேளையில் மற்றவரால் யாகத்துக்கு இடையூறு நேராமல் பார்த்துக் கொள்வது அக்ரபூஜையின் வழிபாடு செய்யப்படுபவரின் கடமை ஆகும். இதற்காக பிரபலமாகவும் மிகவும் புனிதமாகவும் வாழ்க்கை நடத்தி வரும் முனிவர்கள் யாரேனும் ஒருவரோ அல்லது மிகவும் புத்திசாலித்தனமும் வீரமும் நிறைந்த பெரிய பேரரசரோ மாமன்னரோ தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அவர்களின் முக்கியத்துவம் இதை வைத்தே அனைவரும் தெரிந்து கொள்வார்கள். ஆகவே இதற்குத் தேர்ந்தெடுக்கப்படுபவர் யார் என்று அறியும் எண்ணம் அனைவர் மனதிலும் இருந்தது. அனைவரும் ஒருவிதமான ஆவலுடன் கூடிய எதிர்பார்ப்பில் காத்திருந்தார்கள்.

சிசுபாலனும் அவன் நண்பர்களும் இப்போதிருக்கும் சூழ்நிலையில் சிசுபாலனை விட்டால் பெரிய மன்னர் எவரும் இல்லை என்பதால் அவனைத் தான் அழைப்பார்கள் என்று எண்ணிக் கொண்டு காத்திருந்தார்கள். யுதிஷ்டிரனுக்குத் தன் தாய்வழிச் சகோதரன் ஆன சிசுபாலனைக் குறித்து நன்கு தெரியும். தங்கள் மாமன் மகன் ஆன வாசுதேவக் கிருஷ்ணனுக்கும் அவனுக்கும் இடையில் உள்ள பிரச்னைகள் குறித்தும் அறிவான். ஆகவே அவன் மனதினுள் வேறொரு முடிவு எடுத்திருந்தான். அக்ரபூஜைக்கான நபரைத் தேர்ந்தெடுக்கும் நேரம் வந்ததாக அறிவிக்கப்பட்டது. பீஷ்மர் யுதிஷ்டிரனைப் பார்த்து, “குழந்தாய், அக்ர பூஜைக்கான வேளை வந்துவிட்டதாக அறிவித்திருக்கிறார்கள். நம் பண்டைய வழக்கப்படி நீ யாரேனும் ஓர்முனிவரையோ அல்லது அரசனையோ இதற்கான பிரதிநிதியாகத் தேர்ந்தெடுத்து அக்ரபூஜையைச் செய்ய ஆரம்பித்து விடு! அதன் பின்னர் யாகத்தின் முக்கிய நிகழ்வுகளைத் தொடர சௌகரியமாய் இருக்கும்!” என்றார்.

யுதிஷ்டிரனுக்கு இருதயம் துடிக்கவே மறந்து விட்டாற்போல் இருந்தது. ஒரு கணம் திகைத்தான். தானே தேர்ந்தெடுப்பதா? கடவுளே! இது பெரியதொரு அழிவில் அல்லவோ கொண்டு விடும்? என்ன செய்யலாம்? இந்த ராஜசூய யாகத்தின் போது சிசுபாலனும் அவன் நண்பர்களும் ஏதோ ஓர் திட்டத்துடன்  குழப்பம் விளைவிக்க வேண்டும் என்று காத்திருக்கிறார்கள். இதை யுதிஷ்டிரன் நன்கு அறிந்திருந்தான். ஆனால் என்ன திட்டம் என்று தான் புரியவில்லை. ஆனால் என்ன ஆனாலும் சிசுபாலனை அக்ரபூஜைக்கு அழைக்கக் கூடாது. அவன் அதற்குத் தகுதியானவன் அல்ல. அவனை விட்டால் வேறு பெரியவர்கள் என்று பார்த்தால்! ஆஹா! தாத்தா! தாத்தா பீஷ்மர் இருக்கிறாரே! இங்கு வந்திருக்கும் அனைத்து அரசர்களாலும் போற்றி வணங்கப்படுபவர் பிதாமஹர் பீஷ்மர். கங்கையின் புத்திரர். அரியணையில் அமர்ந்து அரசாளாவிட்டாலும் அவர் கண்ணசைவிலும், கையசைவிலும் தானே ஹஸ்தினாபுரம் செயல்படுகிறது! இதன் மூலம் அவருடைய புகழும் வீரமும் மேலும் மேலும் பேசப்படுகிறது. எவ்விதத்திலும் குறைவாகப் பேசுவதில்லை.

யுதிஷ்டிரன் தன் தாத்தா பக்கம் திரும்பினான். “தாத்தா அவர்களே! நீங்கள் யாரைக் கையைக் காட்டினாலும் அவர்களை முதல் மரியாதைக்கு அழைத்து வழிபட நான் தயார் தான்! ஆனால் இங்குள்ள அனைவரிலும் நீங்கள் வயதிலும் அனுபவத்திலும் பெரியவர். உங்களால் செய்ய முடிந்தவற்றை இங்கே எவராலும் செய்ய முடியாது! நீங்கள் அனைவராலும் மதிக்கப்படுகிறீர்கள்!....................................”

இதற்குள்ளாகக்குறுக்கிட்டார் பீஷ்மர். சிரித்தார். “குழந்தாய், நான் உன் தாத்தா! இந்தக் குடும்பத்துக்கு பரத குலத்துக்கு  குரு வம்சத்துக்கு மூத்தவன். ஆகவே நீ என்னிடம் இந்த விஷயத்தை விட்டு விட்டாய் அல்லவா? அதற்கு  நான் சந்தோஷப்படுகிறேன்.” என்றார். அடுத்து பீஷ்மர் யோசிக்கவோ யாரையும் கலந்து கொள்ளவோ இல்லை. சிறிதும் யோசிக்கவில்லை. அவர் மனதில் வாசுதேவக் கிருஷ்ணனே நிறைந்திருந்தான். அவன் ஒருவனே இதற்குத் தகுதியானவன். அவனைத் தான் நாம் வணங்க வேண்டும். அவனுடைய வழிகாட்டுதல் இல்லை எனில் இந்தக் குரு வம்சமே அழிந்திருக்கும். பாண்டவர்கள் ஐவரும் இருந்த இடம் தெரியாமல் போயிருப்பார்கள் கிருஷ்ணனின் துணை இல்லை எனில் பாண்டவர்கள் திரௌபதியைத் திருமணம் செய்திருக்க மாட்டார்கள். துருபதனுடன் கூட்டணி வைத்திருக்கவும் முடியாது. இன்று வலுவான கூட்டணியோடு பாண்டவர்கள் நிம்மதியாக இருப்பதற்குக் காரணமே கிருஷ்ணன் தான். அவன் ஒருவன் மட்டுமே! அதிலும் இப்போது சில நாட்கள் முன்னர் ஜராசந்தனை அடியோடு கொன்று ஒழித்ததன் மூலம் ஆரியவர்த்தமே கிருஷ்ணனுக்குக் கடமைப்பட்டிருக்கிறது. அவர்களால் இப்படி நிம்மதியாக இந்த ராஜசூய யாகத்தில் கலந்து கொள்ள வந்திருக்க முடியாது! தன் கைகளால் தன் நீண்ட தாடியைத் தடவி விட்டுக் கொண்டார் பீஷ்மர்.

அந்த சபாமண்டபமே அமைதியில் ஆழ்ந்திருந்தது. “நம்மில் சிறந்த வீரனும், சக்தி வாய்ந்தவனும், மிகப் படித்தவனும், ஞானம் பொருந்தியவனும், சமீபத்தில் மிகச் சமீபத்தில் தர்மத்திற்காகத் தீமையை அழித்து ஒழித்தவனும் தர்மத்தைக் காத்தவனும் ஆன…….”

கூட்டம் இன்னும் அமைதியில் ஆழ்ந்தது.

“………..கிருஷ்ண வாசுதேவன்! ஆம், அவன் ஒருவனே இந்த அக்ரபூஜைக்குத் தகுதி வாய்ந்தவன்!”

கூட்டம் பெருவாரியாக ஆரவாரித்தது. ஒரு சிலர் சாது, சாது என்று கோஷிக்கக் கிருஷ்ணனைச் சார்ந்தவர்கள் அனைவரும், “வாசுதேவக் கிருஷ்ணனுக்கு ஜெய மங்களம்!” என்று ஆர்ப்பரித்தார்கள். ஸ்ரோத்திரியர்கள் அனைவரும், “வெற்றி கிட்டட்டும்! வாசுதேவனுக்கே வெற்றி!” என்று கோஷித்தார்கள். சஹாதேவன் கிருஷ்ணனை நெருங்கினான். அவன் கைகளில் கிருஷ்ணனுக்கு மரியாதை செய்வதற்கான பொருட்கள் நிறைந்த தாம்பாளம் காணப்பட்டது. அவன் கீழே குனிந்து கிருஷ்ணனின் பாதங்களை அலம்பினான். சந்தனம் குங்குமம் வைத்தான். கிருஷ்ணனின் நெற்றியிலும் சந்தனம், குங்குமத்தால் பொட்டு வைத்தான். கிருஷ்ணனுக்கு மாலை அணிவித்தான். பின்னர் நடுவில் விளக்கு ஏற்றி வைத்திருந்த ஆரத்தித் தட்டைக் கைகளில் வாங்கிக் கிருஷ்ணனுக்குச் சுற்றி ஆரத்தி எடுத்தான். ஆரத்தித் தட்டில் வைத்திருந்த விளக்கு ஒளிவீசிப் பிரகாசித்தது. கிருஷ்ணனை முதல் மரியாதையை ஏற்கச் சொல்லி வேண்டினான். வியாசருக்கும், மற்ற ஸ்ரோத்திரியர்களுக்கும் இதில் மகிழ்ச்சி ஏற்பட்டது. ஆகவே கிருஷ்ண வாசுதேவனுக்கும், பாண்டவர்களுக்கும் ஆசிகளை வழங்கும் மந்திரங்களை அவர்கள் முழங்க ஆரம்பித்தனர்.

பாஞ்சால நாட்டு துருபதன், மகத நாட்டு சகாதேவன் மற்றும் பல அரசர்கள் ஒன்று கூடி எழுந்து நின்று “வாசுதேவக் கிருஷ்ணனுக்கு ஜெய மங்களம்!” என்று கோஷித்தார்கள். இந்த ஆர்வமான கூச்சல்கள் கொஞ்சம் குறைந்ததும் வேத வியாசர் எழுந்து கிருஷ்ணனுக்கு அருகே வந்தார். அவன் தலையில் தன் கைகளை வைத்துக் கொண்டார். ஆசிகளை வழங்கினார். பின்னர், இடி முழக்கம் போன்ற குரலில், “கடவுள் அருளால் நீ இன்று முதல் சாஸ்வத தர்மகுப்தாவாக விளங்குவாய்! எல்லையற்ற முடிவற்ற அழியாத தர்மத்தின் பாதுகாவலன் நீயே என்று அறிவிக்கப்படுகிறாய்!” என்றார். உடனே மற்ற ஸ்ரோத்திரியர்கள் அனைவரும் அதை ஆமோதித்து மந்திர முழக்கங்களைச் செய்தார்கள். பாரத வர்ஷம் முழுவதும் அமைதி வேண்டிப் பிரார்த்தனைகள் செய்து மந்திர முழக்கங்கள் செய்யப்பட்டன. அது முடிந்ததும் எங்கும் மீண்டும் அமைதி நிலவியது. அந்த அமைதியைக் கிழித்துக் கொண்டு சிசுபாலன் உரத்த குரலில் கத்தினான்.

“இந்தப் பாவப்பட்ட அனைவரையும் அவமரியாதை செய்யும் நிகழ்ச்சியில் நான் பங்கெடுக்கப்போவதில்லை!”

1 comment:

ஸ்ரீராம். said...

யுதிஷ்டிரன் தயக்கங்கள் நிரம்பிய பயந்த சுபாவம் என்பதை இந்நிகழ்ச்சிகள் மூலம் காட்டி விட்டான்! தொடர்கிறேன்.