Wednesday, November 18, 2015

பாமாவின் தனிமை!

சத்யபாமா படுக்கையை விட்டு எழுந்ததும், தன் வழக்கம் போல் கோயிலுக்குச் செல்வதற்காக அலங்கரித்துக் கொள்ள ஆரம்பித்தாள். அங்கிருந்து அவள் தன் தாயின் சகோதரியைச் சந்திக்கவும் திட்டமிட்டிருந்தாள். அவள் கிருதவர்மாவின் தாய். தன்னை அலங்கரித்துக்கொள்ளும்போதே, காலை நடந்தவை எல்லாம் அவள் கண் முன்னே திரும்பத் திரும்ப வந்து போயிற்று.அவள் தந்தை கிருஷ்ணனைப் பார்த்துக் கத்தியது, “சூரிஅ பகவானின் சாபம் உன்னைச் சும்மா விடாது!” என்று சொல்லிக் கொண்டே கிருஷ்ணனை அவன் அமர்ந்திருந்த ஆசனத்திலே சேர்த்து அழுத்திக் கொல்ல முயன்றது! அப்போது கிருஷ்ணனின் தோள்கள் ஆசனத்தின் பின்னே சாய்ந்திருந்த விதம், அவன் தன்னிரு கரங்களால் ஆசனத்தின் கைப்பிடியை இறுகப்பிடித்திருந்த முறை! அவன் உடல் விறைப்பாகக் காணப்பட்டது! சத்ராஜித்தைத் தாக்கவேண்டும் என்னும் தன் மனோநிலையை அவன் கட்டுப்படுத்திக் கொண்டு அமர்ந்திருந்த விதம்! ம்ம்ம்ம்ம்ம்…….. எப்படிப்பட்ட மனிதராலும், ஏன்! கடவுளரால் கூட இப்படியான சந்தர்ப்பங்களில் தன் மனோபலத்தால் தன்னைத் தானே கட்டுப்படுத்திக் கொள்ள முடியுமா என்பது சந்தேகமே! அதுவும் அவன் சத்ராஜித்தின் கரங்களால் கொல்லப்பட இருக்கையில்! நிச்சயமாய் இது எவராலும் சாத்தியமே இல்லை!

அவள் மனதின்/மூளையின் மூலை, முடுக்குகளில் எல்லாம், “ச்யமந்தகத்தை நானே எடுத்துக்கொண்டுவிடுவேன்!” என்று கண்ணன் கூறியது எதிரொலித்துக் கொண்டிருந்தது. அவன் குரலே திரும்பத் திரும்ப அவள் காதுகளில் மோதியது! என்ன செய்யப் போகிறான் கிருஷ்ணன்? ச்யமந்தகத்தைத் தன் தந்தையிடமிருந்து பிடுங்கப் போகிறானா? அல்லது திருடப் போகிறானா? அப்போது அவளுக்குத் திடீரென ஓர் எண்ணம் தோன்றியது. அது மிகவும் சிறந்தது என்றும் அவள் நினைத்தாள். அதாவது வழிபாட்டு அறைக்குள் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கும் ச்யமந்தகத்தை அவளே எடுத்துச் சென்று கண்ணனிடம் கொடுத்துவிட்டால்? இந்த நினைப்பு அவளுக்குச் சிரிப்பை வரவழைத்தது. ஆனால் அவளால் இதைச் செய்ய முடியாது! ஏனெனில் அவள் தந்தை பகல் முழுவதும் அதை அணிந்து கொண்டிருப்பார்; இரவானதும் அதை வழிபாட்டு அறையில் வைத்துவிட்டு அந்த அறைக்குச் செல்லும் வழியிலேயே உள்ள ஓர் அறையில் தான் படுத்துத் தூங்குகிறார். ஆகவே அவருக்குத் தெரியாமல் அவளால் எதுவும் செய்ய இயலாது. கோயிலுக்குச் செல்லும் முன்னர் தந்தையை விசாரிக்கும் தோரணையில் அவள் அவருடைய அறைக்குச் சென்றாள். அவளுக்கு என்ன நடக்கிறது என்று தெரிந்து கொள்ளும் ஆவல்!

அவள் தந்தை ச்யமந்தக மணிக்குத் தன் வழிபாடுகளை நடத்திக் கொண்டிருந்தார். அங்கிருந்த ஓர் சிறுமேடையின் மேல் அது வைக்கப்பட்டிருந்தது. அதைப் பார்த்துத் தந்தையையும் விசாரித்த பின்னர் அவள் கோயிலுக்குச் சென்றுவிட்டு அங்கிருந்து கிருதவர்மாவின் வீட்டிற்குச் சென்றாள். செல்லும் வழியெல்லாம் ஆங்காங்கே நிறைய மனிதர்கள் காணப்பட்டனர். தெருவோரங்களிலும், அவரவர் வீட்டின் உள்ளேயும், தாழ்வாரங்களிலும் காணப்பட்ட அவர்கள் தங்களுக்குள்ளாக ஏதோ ஆச்சரியமாகப் பேசிக் கொண்டிருந்தனர். அவளுக்கு அவர்கள் என்ன பேசிக் கொள்வார்கள் என்பது தெரிந்தே இருந்தது. அதே சமயம் அவளைப் பார்த்ததுமே அவர்களின் பேச்சு நின்றது. அவளையே முறைத்துப் பார்த்த வண்ணம் அனைவரும் அமைதியானார்கள். அவர்களை எல்லாம் தாண்டிக் கொண்டு கிருதவர்மாவின் வீட்டை அடைந்தாள் சத்யபாமா!

அங்கே சென்றதுமே கிருதவர்மாவின் வீட்டு மனிதர்கள் பாமாவைச் சுற்றிக் கொண்டனர். காலையில் அவள் வீட்டில் நடந்த சம்பவங்கள் அனைத்தும் உண்மையா என விசாரித்தனர்! கிருஷ்ணன் அவர்கள் வீட்டிற்கு வந்தானா? அவள் தந்தையைச் சந்தித்தானா? மற்ற யாதவர்கள் இழந்த சொத்திற்கான நஷ்ட ஈட்டைக் கேட்டுப் பெறுவதற்காக வந்திருந்தானா? சத்ராஜித் கொடுக்க வேண்டிய பங்கைக் கேட்டானா? அவற்றை எல்லாம் மறுத்து சத்ராஜித் கிருஷ்ணனைக் கொல்ல முயன்றானா? அது உண்மையா? அப்போது பாமா உள்ளே புகுந்து தலையிட்டாளா? அதுவும் உண்மையா? சத்ராஜித்தின் தாக்குதலில் இருந்து கண்ணனை பாமா தான் காப்பாற்றினாளா? அப்போது அங்கிருந்து செல்லும் முன்னர் கிருஷ்ணன் சத்ராஜித்திடம் அவன் தானாகவே முன் வந்து ச்யமந்தக மணிமாலையை அக்ரூரரிடம் ஒப்படைக்கச் சொன்னானா? அது உண்மையா? நாளை சூரிய அஸ்தமனத்திற்குள் கொடுத்தாகவேண்டும் என்று கெடு வைத்திருப்பதும் உண்மையா?

சத்யபாமாவால் பேசவே முடியவில்லை. ஏனெனில் அனைத்தும் கசக்கும் உண்மை! நடந்தது என்னவோ உண்மை தானே! அவற்றை அவளால் மறுக்க இயலவில்லை. இதைக் கேட்டதும் கிருதவர்மா கோபத்தில் ஆழ்ந்தான். அவன் தாய்க்கும் கோபம் தான் என்பது அவள் முகத்திலிருந்து தெரிந்தது. சத்ராஜித் செய்த மன்னிக்க முடியாத குற்றம் அது என்பதை பாமா ஏற்கெனவே புரிந்து கொண்டிருந்தாள். யாதவர்களின் வீரதீரக் கதாநாயகனும், அவர்களின் கண்ணின் கருமணி போன்றவனும் ஆன கிருஷ்ணனை சத்ராஜித் தாக்க முயன்றது மிகவும் மன்னிக்க முடியாக்குற்றம்!  யாதவர்கள் அனைவரின் இந்த மனோபாவத்தை அறிந்து கொண்ட சத்யபாமாவால் பேசவே முடியவில்லை. அவளுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. கிருதவர்மாவின் வீட்டிலிருந்து விரைவில் வெளியேறிய அவள் தன் வீட்டுக்கு வந்ததும் தன் வீட்டு மனிதர்களின் போக்கைக் கண்டு திகைத்தாள். அனைவரும் கூடிக் கொண்டு மெல்லக் கிசுகிசுப்பான தொனியில் பேசிக் கொள்வதையும் ஏதோ நடக்கக் கூடாதது நடந்து விட்டாற்போன்ற அவர்கள் நடவடிக்கையையும் பார்த்த அவளுக்குப் பேச்சே வரவில்லை. ஏதோ பிரளயம் வந்துவிட்டாற்போல் அவர்கள் நடந்து கொண்டனர்.

இரவை சத்யபாமா எப்படிக் கழித்தாள் என்றே கூறமுடியவில்லை. இரவு முழுவதும் குளிரால் நடுங்குவது போல் நடுங்கிக் கொண்டிருந்தாள். மிகவும் விரக்தி அடைந்து போயிருந்தாள். காலையில் நடந்த சம்பவங்களினால் அவளுடைய கொஞ்ச நஞ்ச நம்பிக்கையும் செத்து விட்டது. இவ்வளவிற்குப் பிறகும் கிருஷ்ணன் அவளைக் கல்யாணம் செய்து கொள்வான் என்னும் நம்பிக்கை அவளிடமிருந்து விடைபெற்றுக் கொண்டது. இப்போது இருக்கும் நிலையில் அவளுக்கு உதவக் கூட யாருமில்லை! ஆலோசனைகள் சொல்லவும் எவருமில்லை! தனியாக விடப்பட்டிருக்கிறாள் அவள் நம்பிக்கை, அவள் ஆசை, அவள் கனவு, அவள் வாழ்க்கை அனைத்தும் பொடிப் பொடியாகச் சுக்குச் சுக்காகச் சிதறிப் போய்விட்டது! எல்லாம் யாரால்? அவள் தந்தையால்! அவருடைய அசிங்கமான மோசமான நடவடிக்கையால்!

மறுநாள் இந்த வதந்தி கை, கால்கள் முளைத்துக் கொண்டு அருமையான விகிதாசாரத்தில் துவாரகை முழுவதும் பரவி இருந்தது. அவளுடைய சேடிப்பெண் மூலம் அவள் சுபத்ராவுக்கு ஓர் செய்தி அனுப்பி இருந்தாள். சுபத்ராவைக் கிருதவர்மாவின் வீட்டில் சத்யபாமா சந்திக்க விரும்புகிறாள். இது தான் அந்தச் செய்தி! மதியம் போல் அவள் கிருதவர்மாவின் வீட்டிற்குச் செல்கையில் சாலை முழுவதும் சிறு சிறு குழுக்களாக மனிதர்களைக் கண்டாள். அனைவரும் ஏதோ போருக்கு ஆயத்தமாவதைப் போல் ஆயுதபாணிகளாகக் காட்சி அளித்தனர். அனைவர் கண்களிலும் போர் வெறி தெரிந்தது. அதோடு இல்லாமல் யாதவர்களின் முக்கியத் தலைவர்களில் சிலர் உக்ரசேனரின் மாளிகை நோக்கி  நடந்து கொண்டிருந்தனர். அவர்கள் அனைவரும் தன் தந்தையின் மேல் கடுமையான நடவடிக்கை எடுக்கச் சொல்லி வற்புறுத்தவே சென்று கொண்டிருக்கிறார்கள் என்பதையும் பாமா புரிந்து கொண்டாள். எப்படியோ ஒருவாறாக அவள் கிருதவர்மாவின் வீட்டை அடைந்தாள். அங்கே சுபத்ரா அவளுக்காகக் காத்திருந்தாள்.

ஆனால் சுபத்ராவின் முகத்தில் கோபம் கூத்தாடியது. எப்போதும் சிரித்துப் பேசி வேடிக்கையும், விளையாட்டுமாக இருக்கும் சுபத்ரா அன்று கோபத்தின் உச்சியில் இருந்தாள். மிக மிகக் கடுமையான கோபத்தில் இருந்த சுபத்ராவைக் கண்டதுமே பாமாவுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அதோடு இல்லாமல் சுபத்ரா சொன்னதைக் கேட்ட பாமாவுக்கு உயிரையே விட்டு விடலாம் என்றே தோன்றியது. சுபத்ரா பாமாவின் முகத்தைக் கூடப் பார்க்க விரும்பவில்லை என்றும் அவள் இப்போது வந்ததின் காரணமே அவள் தந்தையால் அவள் அருமைச் சகோதரன் கொல்லப்பட இருந்ததைத் தவிர்க்க வேண்டியே வந்ததாகவும் தெரிவித்தாள். பாமா சுபத்ராவைச் சமாதானம் செய்ய முயன்றாள்.

Friday, November 13, 2015

பாமாவுக்குக் குழப்பம்!

சத்யபாமா தன் தந்தையின் அருகிலேயே அவர் கைகளை ஆதரவாகப் பற்றிய வண்ணம் அமர்ந்திருந்தாள். தந்தையின் கைகள் நடுங்குவதை அவளால் உணர முடிந்தது. எழுச்சியுற்ற மனதைக் கட்டுப்படுத்த முடியாமல் அவன் தவிப்பதையும் உணர்ந்தாள். அவன் மனதிலிருந்த கொலை வெறி குறைந்து வருவதை அவன் கண்கள் காட்டியது. ஆனாலும் அவன் இன்னமும் குழப்பமானதொரு மனோநிலையிலேயே இருந்தான். அவன் மனம் இன்னமும் தெளிவுறவில்லை. சத்யபாமாவின் சிற்றன்னைமாரும், அவர்களின் பெண்களும் அங்கே கூடி இருந்தனர். ஆனால் அவர்களால் எதுவும் சொல்ல முடியவில்லை. பேச்சில்லாமல் மௌனமாகப் பார்த்துக் கொண்டிருந்தனர். தெளிவற்றதொரு அச்சம் அவர்களைப் பீடித்திருந்தது. சற்று நேரம் அப்படியே அமைதியாய்ச் சென்றது.

திடீரென சத்ராஜித் கெட்ட கனவு கண்டு விழித்தவன் போலத் தூக்கிவாரிப்போட்டு நிமிர்ந்து அமர்ந்தான். தன்னைச் சுற்றிலும் ஒரு முறை பார்த்தான். அவனையும் அறியாமல் அவன் கைகள் ச்யமந்தக மணிமாலையைத் தொட்டுப் பார்த்துக் கொண்டது. பழக்கவசத்தினால் அவன் கைகள் தானாக அந்த மாலையை எடுத்துத் தன் கண்களில் ஒற்றிக் கொண்டன. சற்றே கரகரத்த குரலில் பாமாவைப் பார்த்து, “சத்யா, என்னைக் கோவிலுக்கு அழைத்துச் செல்! உடனே!” என்றான். “சரி, தந்தையே!” என்ற சத்யா எழுந்து நின்றாள். அவள் தோள்களின் மேல் தன் கைகளை வைத்த வண்ணம் எழுந்து நடந்தான் சத்ராஜித். அவர்களுக்கு என்றிருந்த தனி வாயில் வழியாக சத்யபாமா அவனைக் கோயிலுக்கு வழி நடத்திச் சென்றாள். அங்கே போனதும் தன்னை கர்பகிரஹத்தினுள் அழைத்துச் செல்லச் சொன்னான் சத்ராஜித். பாமா அப்படியே செய்தாள். அங்கு வழிபாடுகள் செய்வதற்கென இருந்த பூஜாரிகளை வெளியேறச் சொன்னான் சத்ராஜித். அவர்கள் அங்கிருந்து அகன்றதும் பாமா கதவுகளை மூடினாள்.

அரண்மனையிலிருந்து வரும்போதிலிருந்து அப்போது வரை மெல்லிய குரலில் காயத்ரி மந்திரத்தைத் திரும்பத் திரும்பப் பாராயணமாகச் சொல்லிக் கொண்டே வந்தான் சத்ராஜித். இப்போதும் அதை நிறுத்தவில்லை. தொடர்ந்து சூரியனை வழிபட்டுக் கொண்டே இருந்தான். கதவுகள் மூடப்பட்டதும், அங்கே கல்லால் செதுக்கப்பட்டிருந்த சூரிய பகவானின் சிற்பத்திற்கு முன்னால் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினான். சூரிய பகவான் தன்னுடைய ஏழு குதிரைகளையும் ஓட்டிக் கொண்டு பயணிப்பது போல் அந்தச் சிற்பம் செதுக்கப் பட்டிருந்தது. கீழே விழுந்து வணங்கிய சத்ராஜித் பின் தன் மகளைப் பார்த்து அவளையும் வெளியேறுமாறு தன் கை அசைவில் சொன்னான். சத்யபாமாவும் அங்கிருந்து வெளியேறினாள். சுமார் அரைமணி நேரம் சென்றது. சத்ராஜித் கர்பகிரஹத்திலிருந்து வெளியே வந்தான். அவன் முகத்தில் காணப்பட்ட குழப்பம் காணாமல் போயிருந்தது. மெல்ல மெல்லத் தன் இயல்புக்குத் திரும்பிக் கொண்டிருந்தான் அவன்.

“பாமா, வா, நாம் இப்போது உணவு உண்ணச் செல்லலாம்!” என்று அவளை அழைத்தான். சத்யபாமா தன் தந்தை தன்னியல்பு நிலைக்குத் திரும்பி விட்டதைப் பெரிதும் விரும்பினாள். அதற்காக சந்தோஷம் அடைந்தாள். ஆனால் அவனிடம் தன்னம்பிக்கை குறைந்திருந்தாற்போல் தோன்றியது அவளுக்கு. முன்னிருந்த தன்னம்பிக்கை இப்போது அவனிடம் காணப்படவில்லையோ என நினைத்தாள். சாப்பாட்டுக் கூடத்தை அடைந்தார்கள் இருவரும். அங்கு கூடி இருந்த பிராமணர்களைப் பார்த்துக் கைகூப்பி வணங்கினான் சத்ராஜித். மற்றும் உணவு உண்ணக் கூடி இருந்த குடும்பத்து ஆண் நபர்களையும் பார்த்து வரவேற்கும் முறையில் வணங்கினான். ஆனால் எங்கும் பேச்சே இல்லை. அசாதாரணமான மௌனம் அங்கே சூழ்ந்திருந்தது. காலையில் நடைபெற்ற நிகழ்ச்சியின் தாக்கம் அனைவர் மனதிலும் இன்னமும் இருந்தது. உணவுக்குப் பின்னர் சத்யபாமா தன்னறைக்குச் சென்றாள். அவள் சிற்றன்னையின் மகள்கள் மூவர் அவளுடன் அந்த அறையைப் பகிர்ந்து கொண்டிருந்தனர். இன்றைக்குத் தன் எஜமானி தன்னுடன் சரியான நேரத்துக்கு உணவு உண்டதில் தானும் வயிறும், மனமும் நிறைய உண்டிருந்த ஊரி தன் எஜமானியின் பின்னேயே சென்றது. அறைக்குப் போனதும் ஊரியை வழக்கம் போல் நன்கு குளிப்பாட்டினால் சத்யபாமா! பின்னர் தன்னோடு அதை அணைத்த வண்ணம் மத்தியானக் குட்டித் தூக்கத்துக்காகத் தன் படுக்கைக்குச் சென்றாள் பாமா.

அவளால் தூங்க முடியவில்லை. அவளருகே நெருக்கமாய்ப் படுத்துக் கொண்டது ஊரி. அதைத் தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டாள் பாமா. பின் மெல்லிய குரலில் அதன் காதில் கிசுகிசுப்பாகப் பேச ஆரம்பித்தாள்.  “ஊரி, ஊரி, உனக்கு சுயநலம் அதிகம் ஆகிவிட்டது. நீ மட்டும் அவனை வழி அனுப்பி வைக்கப் போனாய்! கூடவே என்னையும் அழைத்துப் போவதற்கென்ன? முட்டாள் பெண்ணே!” என்றாள். சொல்லிக் கொண்டே பூனையின் காதைப் பிடித்து இழுக்கத் தன் எஜமானியின் மனநிலையைப் புரிந்து கொண்ட அந்தப் பூனையும், “மியாவ்” என்று கத்தித் தன் சந்தோஷத்தைத் தெரிவித்துக் கொண்டது. சத்யபாமா தொடர்ந்து கிசுகிசுப்பான குரலில் பேசிக் கொண்டிருந்தாள். “ இதைக் கேள் ஊரி! முட்டாள் பெண்ணே! அவன் என்ன சொன்னான் தெரியுமா? நான் நல்ல அழகான இளம்பெண்ணாம். நீ என்ன சொல்கிறாய் ஊரி? என்ன நினைக்கிறாய்? ஆஹா! நான் மெய் சிலிர்த்துப்போனேன் தெரியுமா ஊரி? எப்போது என்கிறாயா? அவன் தோள்களில் இருந்து தகப்பனாரின் கைகளை விலக்குகையில் அவன் தோளின் மேல் என் கைகள் பட்டன. அந்த ஸ்பரிசம்! ஆஹா! ஊரி! ஊரி! அந்த ஸ்பரிசம்!”

“ஆனால் ஊரி! நீ என்ன செய்தாய்? அவனை உனதாக்கிக் கொண்டாய்! திடுமென உள்ளே நுழைந்து அவனைப் பார்த்து உன்னுடையவனாக்கிக் கொண்டு விட்டாய்! எவ்வளவு சுயநலம் உனக்கு! அவனும் உன்னை ஆக்ஷேபிக்காமல் உன் முதுகில் தட்டிக் கொடுத்து உன்னைத் தன் சிநேகிதியாக்கிக் கொண்டு விட்டானே! ஆனால் என்னிடம் ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை! பேச எதுவும் இல்லையா என்ன? என்னிடம்பேசவே இல்லை! ம்ம்ம்ம்ம்? இல்லை….இல்லை. அவன் என்னிடம் பேசினான் அன்றோ! ஆம், பேசினான். என்னிடம் கூறினான். தங்கப் பானைகளை எடுத்துக் கொண்டு நான் வரவேற்பு நிகழ்ச்சிக்குப் போயிருக்கக் கூடாது என்று சொன்னான். ஆம்! அது என் தவறு தான்! எங்களுடைய செல்வத்தை இப்படி எல்லாம் நான் வெளிச்சம் போட்டுக் காட்டி இருக்கக் கூடாது! கோவிந்தன் சொன்னது சரிதான்! ம்ம்ம்ம்ம்… அவன் கூறிய அந்தப் பாடல்! என்னால் அந்தப் பாடலின் முழு வரிகளையும் நினைவு கூர முடியவில்லை. ஒரு வீரக் கதாநாயகனின் மனைவி பாடும் அந்தப்பிரியாவிடைப் பாடல்கள்! ம்ம்ம்ம்ம்? நினைவில் இல்லை!”

“ஊரி, நாம் இன்னமும் நம்மை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். க்ஷத்திரிய தர்மத்தைக் கைவிடாமல் கடைப்பிடிக்கும் க்ஷத்திரியர்களின் மனைவிகளைக் குறித்து அறிய வேண்டும். நான் இவ்வளவு நாட்களாக ஒரு முட்டாளாக இருந்திருக்கிறேன். வீரம் செறிந்த நாயகர்களின் நீதியையும், நேர்மையையும் குறித்து அறியாமல் போய்விட்டேன். அவர்களின் கடமைகளைக் குறித்துத் தெரிந்து கொள்ளவே இல்லை. ஊரி, ஊரி! நானும் அப்படி செயற்கரிய வீரச் செயல் ஒன்றைச் செய்ய வேண்டும். ஆனால் என்ன செய்வது! அதை எப்படிச் செய்வது என்பது ஒன்றும் புரியவே இல்லை!”தன்னையும் அறியாமல் ஒரு நீண்ட பெருமூச்சை விட்டாள் சத்யபாமா. “ஊரி, ஊரி! எனக்கு நம்பிக்கையே இல்லை. நான் திறனற்றுச் செயலற்றுப் போய்விட்டேன்! நான் அவனுக்கு இவ்வுலகத்தில் உள்ள சந்தோஷங்கள் அனைத்தையும் காட்ட வேண்டுமென நினைத்தேன். இதுவரை அவன் யாரிடமும் பெற்றிராத சுகத்தையும் பெறவேண்டும் என எண்ணினேன். எவராலும் கற்பனை செய்ய முடியாததொரு ஆனந்த வாழ்க்கையைக் காட்ட நினைத்தேன். ஆனால்……. ஆனால்…….அவன் சுகத்தையும் சௌக்கியத்தையும், ஆடம்பர வாழ்க்கையையும் விரும்பவில்லை. வெறுக்கிறான். அதைக் கண்டனம் செய்கிறான். நான் இவ்வளவு மோசமானதொரு பெண் என்பதை நான் இன்று வரை அறியவே இல்லை, ஊரி!”

Thursday, November 12, 2015

கண்ணனுக்கு ஆபத்து!

கிருஷ்ணனின் அமைதியான பேச்சும், சாந்தமான சிரிப்பையும் கண்ட சத்ராஜித்தின் கோபம் கொதித்தது. ஆங்காரம் அதிகம் ஆனது.அவனால் தன் கோபத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. தன் கை முஷ்டிகளைக் குவித்தும், விரித்தும், ஓங்கிக் குத்தும் பாவனையில் முஷ்டியை ஓங்கியும் ஏதேதோ செய்தான். விரல்களைப் பிரித்துப் பிரித்து விரித்தான். கண்கள் சிவந்து விட்டன. அவனை அப்போது பார்க்கவே பயமாக இருந்தது. எனினும் கிருஷ்ணன் சிறிதும் அஞ்சவில்லை. திடீரெனத் தன் ஆசனத்தில் இருந்து குதித்து எழுந்தான் சத்ராஜித். தன் கைகளைக் கிருஷ்ணன் தோள்பட்டையின் மேல் வைத்த வண்ணம் அவனை எழுந்திருக்க விடாமல் ஆசனத்தில் அழுத்தியபடியே அவனைப் பார்த்து உறுமினான். உறுமிய வண்ணம் அவனை அப்படியே ஆசனத்தில் பின்பக்கமாக அழுத்திச் சரித்தான். “என் ச்யமந்தகமணிமாலையை என்னிடமிருந்து பிடுங்கி விடுவாயா நீ?” என்ற வண்ணம் கிருஷ்ணனை வேகமாக அழுத்திய வண்ணம், “என் ச்யமந்தகத்தையா என்னிடமிருந்து பிடுங்க நினைக்கிறாய்? சூரிய பகவானின் சாபம் உன்னைச் சும்மா விடாது!” என்று கூறினான். சத்யபாமா வெளியே இருந்து அனைத்தையும் பார்த்தவளுக்குப் பயம் மேலிட்டது. அவள் தந்தை செய்வதை அவள் சிறிதும் ரசிக்கவில்லை. அவள் தந்தை மிகவும் வலுவும், பலமும் பொருந்தியதொரு மனிதர். கோபம் அதிகரித்தால் அவர் என்ன செய்வார் என்றே சொல்ல முடியாது. சமயம் வாய்க்கையில் ஒரு மனிதனைத் தன் வெறும் கரங்களாலேயே கழுத்தை நெரித்துக் கொல்லக்கூடிய வலு வாய்ந்தவர். சில நாட்களுக்கு முன்னர் தான் ஒரு ஊழியன் சொன்னபடி செய்யவில்லை என்பதற்காக அவனைக் கழுத்தை நெரித்துத் தூக்கி எறிந்ததை பாமா நேரிலேயே பார்த்திருக்கிறாள். அதோடு இல்லாமல் எப்போதுமே அவர் இடுப்பில் அரைக்கச்சையில் மெலிதாக இருந்தாலும் கூர் வாய்ந்ததொரு குத்துவாள் மறைந்திருக்கும்.

ஆகவே சிறிதும் தாமதிக்காமல் அவள் அறைக்கதவைப் படீரெனத் திறந்து கொண்டு உள்புகுந்தாள். அவள் தந்தையின் கண்களில் தெரிந்த கொலை வெறியைக் கண்டு அதிர்ச்சி அடைந்தாள். ‘க்ரீச்’சிட்டுக் கத்தினாள். அவள் உடல் அனைத்தும் நடுங்கியது. ஒவ்வொரு பாகமும் துடித்தன. அவளையும் அறியாமல், “அப்பா, அப்பா, தந்தையே, வேண்டாம். வேண்டாம்!” என்றாள். ஆனால் இதை அவள் சொன்னாளா இல்லையா என்பது கூட அவளுக்கு நிச்சயமாகத் தெரியவில்லை. ஏனெனில் அந்த அறையில் அவளின் கூக்குரலே எங்கும் எதிரொலித்துக் கொண்டிருந்தது. பயத்தில் அலறினாள் சத்யபாமா! மாபெரும் வித்தகன் ஆன கோவிந்தன், கம்சனைக் கொன்று யாதவர்களைக் காத்து ரக்ஷித்தவன், எவராலும் தவிர்க்க முடியாத போர் வீரன், யாதவர்களின் கண்ணின் கருமணி போன்றவன், சாம்ராஜ்யங்களின் சச்சரவுகளைத் தீர்த்து வைத்து நன்மை செய்யும் நடுநிலை தவறாத மனிதன், தர்மத்தின் காவலன், இப்படிப்பட்ட வாசுதேவக் கிருஷ்ணன், இதோ இப்போது அவள் தந்தையின் கரங்களால் மடியப்போகிறான். பாமாவுக்கு மயக்கமே வந்துவிட்டது.

தன்னையும் அறியாமல் கிருஷ்ணன் என்ன செய்கிறான் என்று பார்த்தாள். அசையாமல் அமர்ந்திருந்தான் கிருஷ்ணன். அவன் தோள்பட்டைகள் கடினமாக உறுதிப்பட்டிருந்தன. சற்றே சாய்ந்த வண்ணம் அமர்ந்திருந்த கிருஷ்ணன் தன்னிரு கைகளாலும் ஆசனத்தின் கைப்பிடிகளை இருபக்கமும் பிடித்த வண்ணம் அமர்ந்திருந்தான். ஆனால் அவன் தனக்கு உதவிக்காக மட்டும் அப்படிப் பிடித்திருக்கவில்லை. அவ்வாறு தன் கரங்களை அவனே கட்டுப்படுத்தவில்லை எனில் எந்த நேரமும் தான் சத்ராஜித்தைத் தாக்கி விடுவோம் என்னும் எண்ணம் தான் காரணம்.எவ்விதமான கஷ்டமும் படாமல் வெகு இயல்பாக சாதாரணமாக அமர்ந்திருந்தான். அவன் முகம் எவ்விதக் கஷ்டத்தையும் சிறிதும் காட்டவில்லை. இன்னும் சொல்லப் போனால் சத்ராஜித்தின் இந்த நடவடிக்கையின் அவன் சிறிது கூட ஆச்சரியப்பட்டதாகவோ, உணர்ச்சி வசப்பட்டதாகவோ காட்டிக் கொள்ளவே இல்லை. அப்படியே அமர்ந்திருந்தவன் சத்ராஜித்தின் முகத்தையே உற்று நோக்கிக் கொண்டிருந்தான். அவன் கண்களில் பயமோ, திகிலோ, உயிர் போய்விடுமோ என்ற அச்சமோ சிறிதும் காணமுடியவில்லை. ஒளிவீசிப் பிரகாசித்தன அவன் கண்களின் மணிகள். சற்றும் மாறாமல் விழிகளைச் சிறிதும் அசைக்காமல் சத்ராஜித்தையே அவை பார்த்தன.

அவன் தொண்டைக்குழியில் சிறியதொரு அசைவு அவ்வப்போது ஏற்பட்டதை சத்யபாமா பார்க்கவில்லை எனில் அவனைச் சிலை என்றே சொல்லலாம். அவன் முகத்திலும் மிக மிக மெலிதான ஓர் சிரிப்புக் காணப்பட்டது. விளையாட்டின் போது குறும்புச் சேட்டை செய்த குழந்தை கையும் களவுமாகப்பிடிபட்ட போது பெரியவர்களுக்கு ஏற்படும் ஆனந்தச் சிரிப்பு! அதை அனுபவித்துக் கொண்டிருந்தான் கிருஷ்ணன். பாமாவுக்குப் புரிந்து விட்டது. கிருஷ்ணனின் அசையாத உடல் நிலையும், இரு கைகளாலும் மிக இறுக்கமாக ஆசனத்தின் கைப்பிடியைப் பிடித்துக் கொண்டிருந்த அவன் நிலையையும் பார்த்ததுமே இது தன்னைத் தானே மிக லாகவமாகச் சுயக்கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வந்துவிடும் ஒரு மனிதனின் நிலை என்பதையும் இவன் சாதாரணமானவன் இல்லை; அசாதாரணமானவன் என்பதையும் உடனே புரிந்து கொண்டு விட்டாள். அவளுக்கு பயத்தில் வியர்த்தது. கிருஷ்ணன் மனதுக்குள் நினைத்து முடிவும் எடுத்து விட்டான். அவள் தந்தையின் கொலை வெறியைத் தன் வலிமையாலோ உடல் பலத்தாலோ அடக்கக் கூடாது; அது கூடாது என்பதைப் புரிந்து கொண்டு செயலாற்றுகிறான் என்பதை பாமா புரிந்து கொண்டு விட்டாள்.

ஆகவே ஓடோடித் தன் தந்தையின் பக்கம் சென்றாள். தன்னால் இயன்ற மட்டும் வலுவாக முயன்று அவர் கைகளைக் கிருஷ்ணன் தோள்களிலிருந்து நீக்க முயன்றாள். “அவரைத் தடுக்காதே, பாமா! என்னை அவரிடமிருந்து நீ காக்க வேண்டாம்!” என்றான் கிருஷ்ணன். மீண்டும் அவன் இதழ்களில் புன்னகை மிளிர்ந்தது. பாமாவுக்குக் கிருஷ்ணன் சொன்னதை உடனே செய்ய வேண்டும் என்று தோன்ற அப்படியே அவள் தன் கைகளைத் தந்தையிடமிருந்து நீக்கினாள். கிருஷ்ணன் அப்படியே அசையாமல் அமர்ந்திருந்தான். அவனையே பார்த்த சத்ராஜித் தன் கரங்களைக் கிருஷ்ணன் மேலிருந்து விலக்கிக் கொண்டான். ஆனால் அவையோ அவனுக்குக் கட்டுப்படாமல் தொய்ந்து விழுந்தன. ஆசனத்தின் கைப்பிடிகளை இறுகப் பிடித்திருந்த கிருஷ்ணனின் கைகள் மேல் மீண்டும் அமுக்கப் பார்த்த அந்தக் கரங்கள் திடீரென வலுவிழந்து தொய்ந்தன. அதோடு இல்லாமல் சத்ராஜித்துமே தன் பலம் முழுதும் இழந்தவன் போல் தன் ஆசனத்தில் தொப்பென்று அமர்ந்தான். அவனால் எதுவும் செய்ய முடியவில்லை. அவன் என்னமோ இன்னமும் கிருஷ்ணனைக் கொல்லத் தான் நினைக்கிறான். ஆனால் இயலவில்லை.

அப்போது சத்யபாமாவைத் தொடர்ந்து அந்தத் தாழ்வரைக்கு வந்திருந்த பாமாவின் செல்லப் பூனை ஊரிக்கு அங்குள்ள மாறுபட்ட சூழ்நிலையைக் கண்டதும் என்ன தோன்றியதோ தெரியவில்லை. மூவரும் அமர்ந்திருந்த இடத்துக்கு அருகே சென்றதும் நேரே கிருஷ்ணனின் ஆசனத்தின் அருகே சென்று அவனையே பார்த்துக் கொண்டு அமர்ந்து விட்டது. அதன் பச்சைநிறக் கண்கள் ஒருவித ஜொலிப்புடன் கிருஷ்ணனையே பார்த்தன. கிருஷ்ணனும் அந்தப் பூனையைப் பார்த்தான். தன் கரங்களால் அதைத் தடவிக் கொடுத்தான். தன் ஜன்மமே சாபல்யம் பெற்றுவிட்டாற்போல் ஊரி ‘மியாவ்’ என்றது. சந்தோஷத்தில் வாலையும் ஆட்டியது. சில நிமிடங்களில் அந்த அறைக்கதவுகள் மீண்டும் திறக்கப்பட்டு அரண்மனையின் பெண்கள் அனைவரும் அங்கே கூடி விட்டார்கள். அங்கே அசையாமல் அமர்ந்திருக்கும் மூவரையும் பார்த்துத்திகைத்து நின்றார்கள். சத்யபாமா தன் தந்தையின் அருகே அமர்ந்திருந்தாள். உடலின் வலுவை எல்லாம் இழந்தாற்போல் களைத்துச் சோர்ந்து அமர்ந்திருந்த அவர் கைகளின் ஒன்றைத் தன் கரங்களுக்குள் வைத்து ஆறுதலாகத் தடவிக் கொடுத்துக் கொண்டிருந்தாள். அந்தக்கையானது அவள் கரங்களுக்குள்ளாக நடுங்கியது என்பதை அவளால் உணர முடிந்தது. அவன் களைத்துச் சோர்ந்திருப்பதை அவன் முகம் காட்டியது. உடல் முழுக்க வியர்வையில் நனைந்திருந்தான். நெற்றிப் பொட்டில் முத்து முத்தாக வியர்வைத் துளிகள் தென்பட்டன.

சத்யபாமா வீரிட்டுக் கத்திய குரலைக் கேட்ட பங்ககராவும் ஷததன்வாவும் உடனே ஓடோடி வந்திருந்தனர். என்ன நடந்ததோ என்ற ஐயம் அவர்களுக்கும் இருந்தது. யாகம் ஒரு பக்கம் நடைபெற்றுக் கொண்டிருந்தமையால் அதை நடத்தி வைத்த வேத பிராமணர்களில் ஒரு சிலருக்கும் என்னவோ ஏதோ என்னும் அச்சத்தால் ஓடோடி வந்திருந்தனர். வந்தவர்கள் பங்ககராவுக்கும் ஷததன்வாவுக்கும் பின்னால் மறைந்து கொண்டு சத்ராஜித்தையே ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருந்தனர். கிருஷ்ணனிடம் அவன் நடந்து கொண்டிருந்த முறை அவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருந்தது. சற்று நேரம் அங்கே ஆழ்ந்த அமைதி நிலவியது.பின்னர் திடீரெனக் கிருஷ்ணன் பேச ஆரம்பித்தான்.

“மாட்சிமை பொருந்திய சத்ராஜித் அவர்களே! நீங்கள் சொல்வது சரி எனினும் அது உங்கள் அறியாமையின் எல்லைக்குட்பட்டே இருந்தாக வேண்டும். உங்கள் அறியாமை விலகும்போது உங்களுக்கு க்ஷத்திரிய தர்மம் என்னவெனப் புரியும். அப்போது நீங்கள் தானாகவே ஒப்புக் கொள்வீர்கள். நல்லதொரு வாழ்க்கையை வாழ வேண்டுமானால் க்ஷத்திரிய தர்மம் முறையாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதையும் அதன் மூலம் வாழ்க்கையின் மேம்பாடுகள் கிடைக்கும் என்பதை நீங்களாகவே ஒப்புக் கொள்வீர்கள்.” கிருஷ்ணன் தன் ஆசனத்திலிருந்து எழுந்து தன் தலைப்பாகையைச் சரி செய்து கொண்டான். அது அவன் தலையிலிருந்து நழுவிக் கீழே விழுந்திருந்தது. சத்ராஜித் பேச முயற்சித்தான். ஆனால் அவனால் பேச முடியவில்லை. அவன் முகத்தில் இன்னமும் குரோதம் தெரிந்தது.

“மாட்சிமை பொருந்திய சத்ராஜித் அவர்களே, இப்போது நான் விடை பெறுகிறேன். உங்கள் உணர்ச்சிகள் சமன் அடைந்ததும், நான் சொன்னதில் உள்ள நியாயமும், நீதியும் உங்களுக்குத் தானாகவே தெரிய வரும். நாளை மாலை சூரிய அஸ்தமனத்துக்குள்ளாக ச்யமந்தகமணிமாலை அக்ரூரரின் கஜானாவிற்கு வந்துவிட வேண்டும். இல்லை எனில்! நானே அதை எடுத்துக் கொள்வேன்!” என்று சற்றும் இரக்கமே தெரியாத குரலில் சொன்ன கிருஷ்ணன், தன் கரங்களைக் கூப்பி விடைபெற்றுவிட்டு தாழ்வரையை நோக்கி நடந்தான். பங்ககரா அவனை வழி அனுப்பி வைக்கக் கூடவே நடந்தான். ஊரியும் அவர்களைத் தொடர்ந்தது. பிரதான நுழைவாயிலில் கிருஷ்ணன் விடைபெற்றுச் செல்கையில் ஊரியைத் தடவிக் கொடுத்துவிட்டுச் சென்றான். ஊரியும் சந்தோஷமாக, “மியாவ்” என்று அதை வரவேற்றுத் தன் மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்டது.

Sunday, November 8, 2015

ச்யமந்தக மணியைக் கொடுத்துவிடு!

சத்ராஜித்தின் கோபத்தைப்பார்த்துக் கிருஷ்ணன் அவனை எரிச்சலூட்டும் விதத்தில் ஒரு விசித்திரச் சிரிப்புடன், “ கோபம் அடையாதீர்கள், சத்ராஜித் அவர்களே! நீங்கள் உங்கள் விருப்பத்தைச் சொன்னீர்கள்! நான் அதை நிராகரித்துவிட்டேன். இப்போது என் முறை! நான் என் விருப்பத்தைச் சொல்லி இருக்கிறேன். உங்களுக்கு விருப்பமிருந்தால் ஒத்துக்கொள்ளுங்கள் இல்லை எனில் நிராகரிக்கலாமே! கோபம் ஏன்?” என்றான் கிருஷ்ணன் நிதானமாக. “என்ன நடந்தாலும் சரி! நான் ஒரு போதும் ச்யமந்தக மணியை விட்டுப் பிரிய மாட்டேன். அது கடவுளால் எனக்கு அளிக்கப்பட்டது! எனக்கு மட்டுமே உரியது!அதைப் பிரிய நான் சம்மதிக்க மாட்டேன்!” என்று குரலை உயர்த்திப் பேச ஆரம்பித்தான் சத்ராஜித்.

“சத்ராஜித் அவர்களே! இப்போது சற்று முன்னர் தான் நீங்கள் உங்கள் மகள் சத்யபாமாவை மிகவும் விரும்புவதாகச் சொன்னீர்கள். அதோடு மட்டுமில்லாமல் உங்கள் அருமை மகள் சாத்யகனுக்கு மருமகளாக விரும்புவதையும் கூறினீர்கள். சாத்யகன் குடும்பத்தின் மருமகளாக உங்கள் மகள் செல்ல வேண்டுமெனில் அதற்குச் ச்யமந்தகம் ஒரு சிறு பரிசு தான். சிறிய விலை தான்! சாத்யகன் குடும்பத்தின் மதிப்பைக் குறித்து நான் சொல்லி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டாம் என எண்ணுகிறேன். நம் யாதவ குலத்திலேயே மிகவும் அருமையான மனிதர் அவர்.”

“ச்யமந்தகம், ச்யமந்தகம்!” திரும்பத் திரும்பக் கூறிக் கொண்டிருந்தான் சத்ராஜித். அவனால் இன்னமும் கிருஷ்ணன் ச்யமந்தகத்தைக் கேட்டதை நம்பவே முடியவில்லை. தன்னிடம் வந்து கூட ஒருவனால் இப்படி எல்லாம் கேட்க முடியுமா என்னும் வியப்பு அவனை விட்டு மறையவில்லை. “இல்லை, ஒருக்காலும் இல்லை! என்னால் ச்யமந்தக மணியைப் பிரிய இயலாது!” என்று மீண்டும் தனக்குத் தானே கூறிக்கொள்வது போல் கூறினான். “அப்படி எனில் நான் கேட்ட விலையைக் கொடுக்க நீங்கள் தயாராக இல்லை! என் விருப்பம் நிராகரிக்கப்பட்டு விட்டது! அல்லவா?” என்றான் கிருஷ்ணன். “நான் சொல்வது சரிதானே?” என்றும் கேட்டான்.

“வாசுதேவ கிருஷ்ணா! உன் யோசனை மிகவும் அபத்தமானது! இதை எனக்குக் கொடுத்தது சூரிய பகவான் ஆகும். யாதவர்கள் அனைவருக்கும் என்று சொல்லிக் கொடுக்கவே இல்லை! அதை முதலில் புரிந்து கொள். சூரிய பகவானுக்கு நான் கடமைப் பட்டிருக்கிறேன். எனக்கும் சில பொறுப்புகள் இருக்கின்றன.” என்று மிகக் கோபமாகச் சொன்னான். இதை ஒரு வேடிக்கையாக எடுத்துக் கொண்டவன் போல் கிருஷ்ணன் பரிகாசச் சிரிப்புச் சிரிக்க சத்ராஜித்தின் கோபம் அதிகம் ஆனது. ஆனால் கிருஷ்ணன் விடாமல், “எந்தக் கடவுளும் ஒரு தனி மனிதனின் பயன்பாட்டுக்கு மட்டுமே என எதையும் கொடுப்பதில்லை; ஒரு தனிமனிதனின் ஆடம்பர வாழ்க்கைக்காக எதுவும் கொடுப்பதில்லை; இவ்வுலகத்து மாந்தர் அனைவருக்குமாய்த் தான் கொடுக்கிறார்.” என்றவன் தொடர்ந்து, “நாங்கள் உன்னை உன் பொறுப்புக்களிலிருந்து விடுவிக்கிறோம்.” என்றும் கூறினான்.

அதற்கு சத்ராஜித் கிருஷ்ணனை அவமதிக்கும் குரலில், “என் பொறுப்புக்களை நானே சுமக்கிறேன்; அதிலிருந்து விடுபட நான் விரும்பவே இல்லை!” என்றான். கருணையுடன் சிரித்தான் கிருஷ்ணன். “அதனால் பரவாயில்லை, சத்ராஜித் அவர்களே! நீங்கள் விரும்பினாலும், விரும்பா விட்டாலும் நான் உங்களை உங்கள் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்போகிறேன்.” என்றான். மேலும் தொடர்ந்து, “உங்கள் நன்மைக்காகவும் சொல்கிறேன். மற்ற யாதவர்களின் நன்மைக்காவும் சொல்கிறேன். ச்யமந்தமணிமாலை இருக்க வேண்டிய இடம் உக்ரசேன மஹாராஜாவின் கஜானாவில் அக்ரூரரின் பாதுகாப்பில் மட்டுமே! அது இருக்க வேண்டிய இடம் அது தான்!” என்றான் தீர்மானமாக!

“ஹா! ஹா! எப்படி அதை என்னிடமிருந்து எடுத்துச் செல்வாய்? உன்னால் அது முடியுமா? உன்னைத் தானே எல்லோரும் கடவுள் என்று சொல்கின்றனர்? நீ எடுத்துவிடுவாயா? நான் சவால் விடுகிறேன்! எவரால் இயலும் அது? ச்யமந்தக மணியை என்னிடமிருந்து பிரிப்பதற்காகவே நீ கடவுளைப்போல் நடிக்கிறாய்! உன்னால் ஒருக்காலும் இயலாது!” என்றான் சத்ராஜித். “அதை நீங்களாகவே கொடுத்துவிடுவீர்கள்! அது சரி, உக்ரசேன மகாராஜாவின் ஆணை கிடைத்தால்? அப்போது என்ன செய்வீர்கள்? ச்யமந்தகத்தைக் கொடுக்க மாட்டேன் என்று உக்ரசேனரிடம் சொல்வீர்களா?”

“கேட்டுப் பார்க்கச் சொல் அவரை!” வெடுக்கென்று பதில் சொன்ன சத்ராஜித் தன் குரலை உயர்த்தி, “ச்யமந்தகம் உங்களுக்கு வேண்டுமென்று நீங்கள் அனைவரும் விரும்பினால், நான் ஒவ்வொரு யாதவனுடனும் போரிடுவேன். ச்யமந்தகத்தை மீட்கப் போரிடுவேன். கடைசியில் பணபலமும், படைபலமும் உள்ள நானே வெற்றி பெறுவேன்.” என்றான்.

“நான் சொல்வது உங்கள் காதுக்கும், கருத்துக்கும் இனிமையானதாக இருக்காது சத்ராஜித் அவர்களே! உங்கள் சொந்த நன்மைக்காகவே சொல்கிறேன்! ச்யமந்தகத்தை அக்ரூரரிடம் கொடுத்துவிடுங்கள். இந்த ஆபரணம் மெல்ல மெல்ல உங்களை அழித்துவிடும்!” என்றான் கிருஷ்ணன். “என்னை அழிக்குமா? வாசுதேவ கிருஷ்ணா! இதைக் கேள்! நீ ஆர்யவர்த்தத்தில் பெற்றதாகச் சொல்லப்படும் வெற்றிகள், ஆனால் எனக்கு இதைக் குறித்து சந்தேகம் இருக்கிறது! உண்மையாகவே நீ வெற்றி பெற்றிருப்பாயா? தெரியவில்லை! அப்படி ஒரு வேளை வெற்றிகளை அடைந்திருந்தாயானால் அவற்றால் உன் கர்வம் அதிகம் ஆகிவிட்டது. அவை உன் தலையை அதன் இடத்தில் வைக்க மறுக்கிறது. தலை தெரியாமல் நீ ஆடுகிறாய்!” என்று சத்தமாகக் கூவின சத்ராஜித் தன் ஆசனத்திலிருந்து எழுந்து நின்றான்.

ஒரு குழந்தையைப் போல் அவனை வேடிக்கை பார்த்த கிருஷ்ணன், “என் தலை என் உடம்பில் இருக்கிற இடத்திலேயே இருக்கும்! அதைக் குறித்து நீங்கள் கவலைப்படாதீர்கள். நீங்கள் கவலை கொள்ள வேண்டியது உங்களைக் குறித்து! உங்கள் தலையைக் குறித்து! அதை நீங்கள் இழக்காதிருக்க வேண்டுமானால் ச்யமந்தகத்தைக் கொடுத்தே ஆக வேண்டும்!” என்றான் கிருஷ்ணன்.

“ஹா, ஹா, என்னைக் கொன்றுவிடுவதாகப் பயமுறுத்துகிறாயா? வாசுதேவா?”

“இல்லை, ஐயா, இல்லை!நீங்கள் உயிருடன் இருக்க வேண்டும் என்றே நான் விரும்புகிறேன். இதை மட்டும் கவனத்தில் கொள்ளுங்கள்: ச்யமந்தகத்தை விரும்பினால் நானே எடுத்துக் கொண்டிருப்பேன். இப்படிக் கேட்டுக் கொண்டிருக்க மாட்டேன் ஆகவே நீங்களாகவே கொடுத்துவிடுங்கள்!”

Friday, November 6, 2015

கண்ணன் கேட்ட விலை! சத்ராஜித் அதிர்ச்சி!

“மிகச் சரியாகச் சொல்கிறீர்கள். சரியான ஊகமும் கூட! இப்படிப்பட்ட ஒரு அசாதாரண சூழ்நிலையில் சாத்யகி மாட்டிக் கொள்ள வேண்டாம் என்றே அவனைத் தப்புவிப்பதற்காக மாட்சிமை பொருந்திய சாத்யகர் இம்முடிவை எடுத்திருக்கிறார்.” என்றான் கண்ணன். “இதோ பார் வாசுதேவா! அவள் மிகவும் நல்ல பெண். என் குழந்தைகள் அனைவரிலும் இவளே மிகப் பிடித்தமானவள். மற்றக் குழந்தைகளை விடவும் இவளை நான் அதிகம் நேசிக்கிறேன்.” என்றான் சத்ராஜித்.

“அப்படியா? நீங்கள் சத்யபாமாவை மிகவும் அதிகமாக நேசிக்கிறீர்களா? அப்படி எனில் நீங்கள் உங்கள் ஆடம்பரத்துக்காகவும், தற்பெருமைக்காகவும் அவளை சாத்யகிக்குத் திருமணம் முடிக்க நினைப்பதை அவள் அறிய நேர்ந்தால்? அவள் மனம் வருந்த மாட்டாளா? இதை ஏற்றுக்கொள்வாள் என்று நினைக்கிறீர்களா? இதைக் குறித்து யோசித்துப் பார்த்தீர்களா?”

அதற்கு சத்ராஜித் மிகவும் கர்வத்துடனும், அகந்தையுடனும், “என் குழந்தைகள் திருமணம் அவர்களின் நன்மைக்காகவே நான் ஏற்பாடு செய்கிறேன். என் பணபலத்தையோ, தற்பெருமையையோ நிலை நாட்ட அல்ல!” என்றான். பின்னர் என்ன நினைத்தானோ மேலும் கூறினான்:”வாசுதேவா, நாம் பேச நினைத்த விஷயத்திலிருந்து வெகு தூரம் நாம் விலகி வேறு மார்க்கத்தில் பேச ஆரம்பித்துவிட்டோம். இப்போது மீண்டும் கேட்கிறேன். என் கேள்விக்கு என்ன பதில்? நான் கேட்ட விலையைக் கொடுக்க நீ சம்மதிக்கிறாய் அல்லவா?” என்று கேட்டான்.

“ஐயா, இதன் முக்கியத்துவம் குறித்து நான் நன்கு அறிந்துள்ளேன். நீங்கள் சாத்யகரைப் பயமுறுத்த நினைக்கிறீர்கள். அல்லது இதன் மூலம் மற்ற யாதவத்தலைவர்களான எங்கள் அனைவரையும் மிரட்டி அடிபணிய வைக்க நினைக்கிறீர்கள்.’ சத்யபாமா மூச்சு விடக்கூட மறந்து அங்கே நடந்த பேச்சு வார்த்தையைக் கேட்டாள். அவள் இதயம் “தட், தட்” என்று மிகப் பலமாக சப்தித்தது. எங்கே அந்த சப்தம் உள்ளிருந்தவர்களுக்குக் கேட்டுவிடுமோ என்று பயப்படுபவள் போல் அவள் தன் நெஞ்சின் மேல் கையை வைத்து அழுத்திக் கொண்டு மேலும் உன்னிப்பாகக் கேட்டாள்.

“நான் மிரட்ட நினைக்கவில்லை, வாசுதேவா! இந்த உலகில் எல்லாவற்றுக்கும் ஓர் விலை உண்டு. அதைக் கொடுத்தே ஆகவேண்டும். ஏன்! நீ நிலைநாட்டுவதற்கு முயலும் அந்த தர்மம்! அதற்கும் ஓர் விலை உண்டு! அதைக் கடைப்பிடிக்கவும் உரிய விலையைக் கொடுத்தே ஆகவேண்டும்!” ஏளனம் பொங்கச் சிரித்தான் சத்ராஜித்!

“பேரம் பேசியே அனைத்தையும் வாங்கி விடலாம்! அதுவும் உங்கள் பணபலத்தினால் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்! ஆனால் இவ்வுலகில் என்ன விலை கொடுத்தாலும் கிடைக்காத சில நல்ல விஷயங்கள் உண்டு! அவற்றை நம்மால் பணத்தைக் காட்டி வாங்கவோ, விற்கவோ முடியாது!” என்றான் கிருஷ்ணன். வெளியே பாமாவின் இதயம் குதூகலத்தில் ஆழ்ந்தது. “விரைவில் என் உதவிக்கு வா கோவிந்தா! எனக்கு உதவி செய்! நான் என் வாழ்நாள் முழுவதும் உன் அடிமையாக இருப்பேன்! உனக்கே சேவைகள் செய்வேன்!” என்று தன் மனதிற்குள்ளாகப் பிரார்த்தித்தாள் சத்யபாமா.

“நீ வெளிப்படையாகப் பேசுவதாக நீ தான் சொல்லிக் கொண்டாய்! ஆகவே நானும் அப்படியே பேசினேன்! பேசுவேன்! இந்த ஈரேழு பதினாலு உலகங்களிலும் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு விலை இருக்கத்தான் செய்கிறது. அதை எவராலும் மறுக்க இயலாது!” என்றான் சத்ராஜித். கிருஷ்ணன் சற்று நேரம் தான் பேச வேண்டியது என்ன என்று சிந்திப்பவன் போல் மௌனம் காத்தான். அதன் பின்னர் அவன் எவ்விதப் பற்றுதலையும் பேச்சில் காட்டாமல் பேச ஆரம்பித்தான்.” மாட்சிமை பொருந்திய சத்ராஜித் அவர்களே! நீங்கள் ராஜா உக்ரசேனரை அவமதிக்கிறீர்கள் என்பதை உணரவில்லையா? அதோடு மட்டுமில்லாமல் மற்ற யாதவத் தலைவர்களையும் அவமதிக்கிறீர்கள். அவர்களை அவமானம் செய்கிறீர்கள். உங்கள் கால்நடைச் செல்வங்களையும், குதிரைகள், ரதங்கள் போன்றவற்றையும் உங்கள் பண்ணைகளையும் மற்றும் உங்கள் அளப்பரிய செல்வங்களையும் காட்டிப் பிரமிக்க வைத்து உங்களுக்கு அடி பணிய வைக்க நினைக்கிறீர்கள். உங்கள் பங்கைக் கொடுக்காமல் ஏமாற்றியதன் மூலம் மற்ற யாதவர்களை ஏழையாக்கினீர்கள். ஐந்து சகோதரர்களுக்கும் தேவையான நேரத்தில் உதவி செய்ய மறுத்து விட்டீர்கள். அப்படியும் உங்களுக்குத் திருப்தியாக இல்லை. இப்போது மீண்டும் உங்கள் செல்வ வளத்தின் மூலம் அனைத்து யாதவர்களையும் பயமுறுத்த நினைக்கிறீர்கள். உங்கள் அடியாட்களைக் காட்டி மிரட்ட எண்ணுகிறீர்கள். இந்த வீரர்கள், குதிரைகள், ரதங்கள் அனைத்தையும் வைத்து ஒரு சிறுபடையைத் திரட்டி வைத்து இதன் மூலம் ஒரு மாபெரும் சிக்கலை உண்டாக்க நினைக்கிறீர்கள். வீரர்களுக்கும் மோதலை உருவாக்க எண்ணுகிறீர்கள்.   சாத்யகர் தன் மகனுக்கு உங்கள் மகளை மணமுடிக்க மறுத்ததன் மூலம் உங்கள் கௌரவத்திற்குப் பங்கம் ஏற்பட்டுவிட்டதாக எண்ணுகிறீர்கள். அதற்காகவே, அதைச் சரி செய்வதற்காகவே மீண்டும் உங்கள் மகளை வியாபாரப் பொருளாக்கி அவளை சாத்யகிக்கு மணமுடிக்க நினைக்கிறீர்கள். அதன் மூலம் இழந்த கௌரவம் மீண்டும் வந்துவிடும் என்று எண்ணுகிறீர்கள்!” கிருஷ்ணன் சற்றே நிறுத்தினான்.

“வாசுதேவா, சில சமயங்களில் நீ மிகவும் புத்திசாலியாக இருக்கிறாய்! எனக்கு அப்போது உன்னை மிகவும் பிடிக்கிறது. நீ எல்லாவற்றையும் மிக நன்றாக அலசி ஆராய்ந்திருக்கிறாய்! உண்மையை நன்கு புரிந்து கொண்டுள்ளாய்!” என்று ஏளனமாகச் சொன்னான் சத்ராஜித்!  “ஆமாம், நான் உண்மையை நன்கு புரிந்து கொண்டுள்ளேன்! எல்லாவற்றையும் கவனமாகப் பார்க்கிறேன். உங்கள் பார்வையில், உங்கள் நோக்கத்தில் ஒவ்வொன்றுக்கும் ஒரு விலை உண்டு. அந்த விலையைக் கொடுத்து அதை வாங்கிவிடலாம்!” என்றான் கிருஷ்ணன். சத்ராஜித் மௌனமாகத் தலையை அசைத்தான்.

மீண்டும் சற்று யோசித்த கிருஷ்ணன் மெல்லப் பேச ஆரம்பித்தான். அவன் முகத்தில் ஒரு விசித்திரமான புன்னகை விரிந்தது. “ உங்கள் எண்ணங்களின் தாக்கம் என்னிடமும் வந்துவிட்டது போல் தெரிகிறது! மாட்சிமை பொருந்திய சத்ராஜித் அவர்களே! நானும் இப்போது ஒரு சின்ன பேரம் செய்யப் போகிறேன். எனக்கும் இப்போது அதற்கான சமயம் வந்திருப்பதாகவும் தோன்றுகிறது. மனமும் அதை விரும்புகிறது!” என்று புன்னகை மாறாமலேயே சொன்னான். அவன் புன்னகையைப் பார்த்தால் மிகவும் வெகுளித்தனமாகக் கண்ணன் பேசுவதாகவே தோன்றியது. சத்ராஜித் அவனைப் பார்த்து, “என்னவானாலும் கேள், கிருஷ்ணா! உன்னுடைய பேரம் என்ன? அதை வெளிப்படையாகச் சொல்! அப்போது தான் நாம் இருவரும் ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொள்ள இயலும்!” என்றான்.

“நீங்கள் உங்கள் மகள் சாத்யகியைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள் அல்லவா? ரொம்ப நல்லது! அதற்கு நான் இப்போது கேட்கப் போகும் விலையைத் தர நீங்கள் தயாராக இருக்கிறீர்களா?”

“ஆம், தயாராகவே இருக்கிறேன். சாத்யகியை என் மருமகனாக அடைய நான் என்ன விலையைக் கொடுக்க வேண்டும்? சும்மாவானும் வெட்டிப் பேச்சுப் பேசாமல் விஷயத்துக்கு வா!” என்றான் சத்ராஜித்!

“பொறுமை, பொறுமை! சத்ராஜித் அவர்களே! அவசரம் வேண்டாம்! நீங்கள் தான் பேரத்தை ஆரம்பித்து வைத்தீர்கள். அதனால் தான் நான் இப்போது பேரம் பேசவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறேன்.”

சத்யபாமா மனம் உடைந்து நைந்து போனாள். கிருஷ்ணன் அப்படி என்னதான் கேட்கப் போகிறான்? “கிருஷ்ணா, கிருஷ்ணா, கோவிந்தா! என் தந்தை என்னை அவருடைய பணத் திமிரில் விற்கும்படி செய்து விடாதே! என்னைக் காப்பாற்று! அவருடைய கௌரவம் இதன் மூலம் திரும்பி வரும் என அவர் நினைப்பதைப் பொடிப்பொடியாக்கு! கிருஷ்ணா! என்னைக் காத்தருள்வாய்! கோவிந்தா! நீயே சரணம்!” அதற்குள்ளாக அங்கே சத்ராஜித் பொறுமை இழந்து மீண்டும் கேட்டான்.”என்ன விலை கேட்கிறாய்? சீக்கிரம் சொல்!” என்று அவசரப் படுத்தினான்.

கிருஷ்ணன் சாந்தமாகத் தன் சுட்டுவிரலை சத்ராஜித்தின் கழுத்தின் மேல் சுட்டினான். அவன் கைவிரல் சத்ராஜித்தின் ச்யமந்தக மணிமாலையைச் சுட்டியது. சத்ராஜித்தின் முகத்தின் கோபம் அந்த மணிமாலையிலும் பிரதிபலித்தது போல் அதுவும் தன் சிவந்த கதிர்களை அந்த அறை முழுதும் பரப்பி அறையையே ஒரு கோபாகிருகமாக மாற்றிக் கொண்டிருந்தது. “சத்ராஜித் அவர்களே! உங்கள் ச்யமந்தக மணிமாலையை மாமா அக்ரூரரிடம் கொடுத்துவிடுங்கள். அது இருக்க வேண்டிய இடம் உக்ரசேன மஹாராஜாவின் கஜானா ஆகும். அக்ரூரர் தான் அரசனின் பொக்கிஷங்களைப் பாதுகாக்கும் பொக்கிஷாதிகாரியாக இருக்கிறார்! ஆகவே அவரிடம் கொடுங்கள்!” என்றான். சத்ராஜித்திற்கு அவன் காதுகளை அவனாலேயே நம்ப முடியவில்லை. அவன் முகம் கோபத்தில் சிவந்தது. கிருஷ்ணனையே முறைத்துப் பார்த்தான். அவன் கண்கள் கோபத்தில் அங்குமிங்கும் உருண்டன.

“என்ன? என் ச்யமந்தக மணிமாலையையா நீ கேட்கிறாய்?”கோபத்தில் உறுமினான் சத்ராஜித்!



Friday, October 30, 2015

கண்ணன் கேள்வி! பாமா தவிப்பு!

மீண்டும் தன் கண்களை உருட்டி விழித்தான் சத்ராஜித்! தான் அடிக்கடி அப்படிச் செய்வதால் அனைவரும் பயப்படுவார்கள் என்ற எண்ணம் அவன் உள் மனதில் இருந்தது. பின்னர் பேச ஆரம்பித்தான். “வாசுதேவா, நான் வெளிப்படையாகவே சொல்கிறேன். கேள்! நான் ஏன் சாத்யகியின் திமிர்த்தனத்தைக் குறித்து வெளிப்படையாகக் குறை கூற ஆரம்பித்தேன் என்பதை நீ அறிவாயா? சூரியபகவானின் கட்டளை அது! அவரின் உரிமைக்கட்டளை! ஆணை! அதை ஏற்காமல் அவன் மறுதலித்தான்,. இதன் மூலம் சூரிய பகவானையே அவமதித்திருக்கிறான். என்னையும் இவ்வுலகுக்கு முன்னர் அவமானம் செய்து விட்டான். அவன் மனதில் என்ன நினைக்கிறான்? என் மகளுக்கு அவன் மகனைத் திருமணம் செய்து வைப்பதன் மூலம் என் மகளுக்கு மாபெரும் பரிசு கிட்டும் என்ற எண்ணமோ? அவ்வளவு உயர்வானவனா அந்த யுயுதானா சாத்யகி? ஹூம்! இதைத் தவிர வேறே என்ன எண்ணமோ, காரணமோ அந்த சாத்யகனுக்கு இருக்க முடியும். மனதில் குமுறும் எண்ணங்களைக் கட்டுப்படுத்திய வண்ணம் சத்யபாமா கதவுக்குப் பின்னால் கிருஷ்ணனின் பதிலுக்குக் காத்திருந்தாள்.

“சத்ராஜித் அவர்களே! கொஞ்சம் யோசியுங்கள்! உங்கள் மகளை நீங்கள் எவ்வாறு வளர்த்திருக்கிறீர்கள் என்பதை நினைவு கூருங்கள். எங்களுக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு நிகழ்ச்சியில் சில நிமிடங்களே நான் அவளைப் பார்த்தேன். அவள் அழகாகப் பார்க்க லட்சணமாக இளம்பெண்ணாகவும் இருக்கிறாள் தான்! அங்கே கதவின் வெளியே நின்றிருந்த சத்யபாமாவின் இதயம் படபடவென அடித்துக் கொண்டது. நாணம் அவள் முகத்தில் செம்மையைப் போர்த்த அவள் குனிந்து தன் செல்லப் பூனையான ஊரியின் காதில், “ஊரி, ஊரி, கேட்டாயா? வாசுதேவக் கிருஷ்ணன் என்ன சொல்கிறான் கேட்டாயா? நான் அழகான லட்சணமான இளம்பெண்ணாம்! கேட்டாயா?” அதற்குள்ளாக உள்ளே கண்ணன் தொடர்ந்து பேசவே அதைக் கவனித்தாள் பாமா.

“ஐயா, உங்கள் மகளை நீங்கள் மிக ஆடம்பரத்திலும், மிதமிஞ்சிய செல்வத்திலும் வளர்த்திருக்கிறீர்கள். உங்களிடம் இருக்கும் செல்வத்தை வெளிச்சம்போட்டுக் காட்டும் நீங்கள், உங்கள் அதே நடைமுறையை உங்கள் பெண்ணிற்கும் பழக்கப்படுத்தி இருக்கிறீர்கள்.”

“எதனால் அப்படிச் சொல்கிறாய்?”

“அன்று வரவேற்புக்கு வந்த யாதவகுலப் பெண்டிர், எளிமையான ஆடைகளோடும் அனைவரின் தலையிலும் செப்புப் பானைகளையே சுமந்து வந்திருந்தார்கள். ஆனால் உங்கள் பெண்ணோ ஆடை, ஆபரணங்களினாலும் தன்னை அலங்கரித்துக் கொண்டிருந்ததோடு அல்லாமல் தங்கப்பானையைச் சுமந்து வந்திருந்தாள். அத்தனை பெண்களுக்கு நடுவே இவள் ஒருத்தி மட்டும் தங்கப்பானையைச் சுமந்து வருவது அனைவர் மனதையும் புண்படுத்தாதா? அவர்களின் சுய கௌரவத்தைப் பாதிக்காதா?” வெளியே இருந்த சத்யபாமாவுக்குத் தன் கன்னத்தில் கிருஷ்ணன் ஓங்கி ஓர் அறை கொடுத்தாற்போல் இருந்தது. தன் கன்னத்தைத் தன்னையுமறியாமல் பிடித்துக் கொண்டாள்.

“ஐயா, நாம் போர் வீரர்கள். இந்த ஆர்யவர்த்தத்தின் பொறுக்கி எடுக்கப்பட்ட தேர்ந்தெடுத்த க்ஷத்திரியர்கள் ஆவோம். க்ஷத்திரிய தர்மத்தைக் கடைப்பிடிப்பதில் சிறந்தவர்கள். அதற்கென ஒரு தனிப்பாரம்பரியமே நமக்கு உள்ளது. நேர்மையோடு கூடிய ஒரு அற்புதமான வீரம் நிறைந்த முடிவையே நாம் எதிர்பார்க்கிறோம். அதற்காகவே வாழ்கிறோம். நம் வாழ்க்கையை அந்த வீரம் செறிந்த தினத்துக்காகவே அர்ப்பணித்தும் வருகிறோம். நாம் அப்படி வாழ்வதோடு அல்லாமல், நம் குழந்தைகளையும் அத்தகையதொரு வாழ்க்கைக்கே பழக்கப்படுத்திக் கொண்டு வருகிறோம். இப்போது கொஞ்சம் நினைத்துப் பாருங்கள். ஆடம்பரத்திலும் மிதமிஞ்சிய செல்வ வாழ்க்கையிலும் பழகிய உங்கள் பெண்ணுக்கு ஒரு வீரனுக்குப் போருக்குச் செல்லும்போது  விடை கொடுத்து அனுப்பும் மனைவியால் பாடப்படும் “பிரியாவிடைப்பாடல்” ஒன்று இருப்பதாவது தெரியுமா? இந்தப் பாடலைப் பாடித் தான் தன் கணவனை, தன் மகனை ஒவ்வொரு யாதவகுல க்ஷத்திரியப் பெண்ணும் மிகவும் கர்வத்துடனும், பெருமையுடனும் போர்க்களத்துக்கு அனுப்புவதை அவள் அறிவாளா? இதைப் பாடும்போது அவர்கள் அடையும் பெருமிதம் குறித்து அவள் உணர்ந்திருக்கிறாளா?”

அவமதிப்பைக் காட்டும் வகையில் ஒரு சீற்றம் மிகுந்த ஒலியை எழுப்பினான் சத்ராஜித். “இப்படி எல்லாம் சொல்வதன் மூலம், நீங்கள் மட்டுமே மிகவும் ஒழுங்காகவும், கட்டுப்பாடுடனும் வளர்க்கப்பட்டிருப்பதாகச் சொல்கிறாய்! அல்லவா? அப்படியே இருக்கட்டும்! மேலே சொல்! கேட்போம். உன் மனதிலுள்ளதை வெளிப்படையாகக் கூறு!”

கிருஷ்ணன் தொடர்ந்தான்.”ஐயா, சாத்யகரைக் குறித்துத் தாங்கள் அறிவீர்கள் அல்லவா? மாட்சிமை பொருந்திய சாத்யகர் க்ஷத்திரிய தர்மத்திற்கே ஓர் எடுத்துக்காட்டாக வாழ்ந்து வருவதை அறிவீர்கள் அல்லவா? அவருடைய நேர்மையும் வீரமும் இந்த ஆர்யவர்த்தம் முழுவதும் பேசப்படுவதை அறிவீர்களா? அவர் தன் வாழ்நாள் முழுவதையும் இந்த க்ஷத்திரிய தர்மத்தைக் கடைப்பிடிப்பதற்கெனவே அர்ப்பணித்திருக்கிறார். நாங்கள் அனைவரும் அவரை எங்கள் முன் மாதிரியாகக் கொண்டிருக்கிறோம். எங்களுக்கு மானசிகத் தலவர் அவரே!”
“ஹா! எனக்குத் தெரியாதா அவனைப் பற்றி? அவன் ஓர் ஏழை! பரம ஏழை!” என்றான் சத்ராஜித் ஏளனம் தொனிக்க. “ஏழையாக இருப்பது மாபெரும் மன்னிக்கவே முடியாத குற்றம் அல்ல ஐயா! அது கீழான ஒன்றும் இல்லை. ஆனால் அவர் இப்படி ஓர் நிலைக்கு ஏன் வந்தார் என்பதை நீங்கள் அறிவீர்கள்! அவர் ஒன்றும் இல்லாமல் இருந்து விடவில்லை! அவருடைய இந்நிலைக்கு நீங்களே காரணம்! நீங்களே பொறுப்பு!”

“நானா? ஹூம், நான் தான் காரணம் எனில் அதற்குத் தகுந்த மறுக்கமுடியாத காரணம் ஒன்று இருந்தாக வேண்டும்.”

“இல்லை ஐயா, அவர் உங்களுக்கும் மற்றவர்க்கும் தக்க பாடத்தைப் புகட்டி இருக்கிறார். க்ஷத்திரிய தர்மத்தைக் கைவிடாமல் இருந்ததன் மூலம், அவருடைய வீரத்தின் மூலம், நேர்மையின் மூலம் அனைவருக்கும் ஓர் நல்ல பாடத்தைக் கற்பித்திருக்கிறார். அது மட்டுமா? தன்னுடைய செல்வம் முழுவதையும் பாண்டவர்களின் ராஜ்யம் நிலைபெற்று நிற்பதற்காகக் கொடுத்துவிட்டார். அதுவும் நீங்கள் கொடுக்காமல் மறுத்ததால் ஏற்படுத்தப்பட்ட செல்வக் குறைவை ஈடுகட்ட தன்னுடைய அனைத்தையும் கொடுத்தார். அவருடைய இந்தச் செய்கையால் தான் மற்ற யாதவர்களால் அவரளவுக்கு இல்லாவிட்டாலும் ஓரளவுக்குக் கணிசமான செல்வத்தைக் கொடுக்க முடிந்தது. அவர் கொடுப்பதைப் பார்த்துவிட்டே அவர்களும் மனமுவந்து கொடுத்து உதவினார்கள். செல்வக் குறைவினால் ஏற்பட்டிருந்த இடைவெளியை இட்டு நிரப்பினார்கள்.”

“போனதெல்லாம் போகட்டும்! நான் அவனுக்கு ஓர் வாய்ப்புக் கொடுக்கிறேன். என் மகளை அவன் மகனுக்கு மணமுடிப்பதன் மூலம் அவன் மீண்டும் பணக்காரன் ஆகலாம்! இதற்கு அவன் ஒத்துக்கொள்ள வேண்டும்.”

“உங்கள் செல்வத்துக்கு ஈடாகத் தன் மகனைப் பேரம் பேசி விற்க சாத்யகர் ஒருநாளும் சம்மதிக்க மாட்டார்.”

“இது உனக்கும் அவனுக்கும் உள்ள தற்பெருமை! அதனால் விளைந்த அகந்தை! உங்களுடன் பிறந்தது!”

“ஐயா, இந்தத் தற்பெருமையினால் விளைந்த அகந்தை வீரர்களுக்கே உரியது. பணத்துக்கு அடி பணிய மாட்டோம் என்பவர்களுக்கே உரியது. ஒரு பெண், தன் வாழ்நாளில் பணத்தைத் தவிர, செல்வத்தையும் அது அளித்த சுகபோகங்களையும் தவிர வேறொன்றையும் அறியாதவள்! இப்படிப்பட்ட ஒரு பெண்ணால் கடுமையான கட்டுப்பாடுகளும், நியம, நிஷ்டைகளும் கொண்டதொரு பாரம்பரியத்தைக் கடைப்பிடிக்கும் குடும்பமான சாத்யகன் குடும்பத்து மருமகளாக எப்படிப்பொருந்தி வருவாள்? அவளால் அங்கே நிலைத்து வாழ இயலுமா?


“அது மட்டும் இல்லை! சாத்யகன் மட்டுமில்லாமல் அவர் குடும்பத்தின் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் அனைவரும் க்ஷத்திரிய தர்மத்தை விடாமல் கடைப்பிடிப்பவர்கள். அதற்காகத் தங்கள் உயிரையும் அர்ப்பணிப்பவர்கள். அர்ப்பணிக்கத் தயாராக இருப்பவர்கள். போர்க்களத்திற்கு எந்நேரமும் சென்று தங்கள் நாட்டுக்காகவும், நட்புக்காகவும் போரிட்டு மரணத்தைப் புன்னகையுடன் வரவேற்பவர்கள்! அவர்கள் வீட்டுப் பெண்களோ எனில் இத்தகைய ஆண்களைப் போர்க்களத்திற்குப் புன்னகையுடன் அனுப்பி வைப்பதோடு அல்லாமல் அவர்களுக்குத் தங்கள் வாழ்நாள் முழுவதும் விசுவாசத்துடன் வாழ்பவர்கள். இப்படிப்பட்ட ஆண்களையும், பெண்களையும் கொண்ட அந்தக் குடும்பத்தில் உங்கள் மகளால், ஆடம்பரமாகச் செல்வ போகத்தில் வளர்க்கப்பட்டவளால் ஒத்திசைவுடன் வாழ முடியுமா? அவர்களுக்குள் ஒத்துப் போகுமா?”

“என் மகள் மாறலாம். அல்லது அவளுடைய செல்வாக்கைப் பயன்படுத்தி யுயுதானா சாத்யகியைத் தன் பக்கம் அவள் மாற வைக்கலாம். எதுவேண்டுமானாலும் நடக்கலாம்.” என்றான் சத்ராஜித்!

Thursday, October 29, 2015

கண்ணா! எனக்கு வாழ்வு கொடு!

“ஐயா, நீங்கள் உங்களைத் தவிர மற்றவர் எவரைக் குறித்தேனும் எப்போதேனும் சிந்தித்திருக்கிறீர்களா?” என்று சாந்தமாகக் கேட்டான் கிருஷ்ணன். “ஏன்? எதற்காக நான் மற்றவரைக் குறித்துக் கவலைப்பட வேண்டும்?” சத்ராஜித் கோபத்துடனும், திமிருடனும் கேட்டான். “ஆம், அதைத் தான் நானும் காண்கிறேன். உங்கள் பார்வையில், உங்கள் சொந்த சந்தோஷத்தைவிடவும் வேறெதுவும் உயர்வாகத் தெரியவில்லை.” என்ற கிருஷ்ணன் குரலில் கவலையின் தீவிரம் தெரிந்தது. “நான் என்னுடைய சந்தோஷத்தை மட்டும் தான் நினைக்க முடியும். அதைக் குறித்தே கவலைப்படவும் முடியும். மற்றவர் சந்தோஷத்தைக் குறித்து எனக்கு என்ன? அவர்களைக் குறித்து அவர்களே கவலைப்படவேண்டும்! நான் ஏன் கவலைப்பட வேண்டும்?”
“ஐயா, நீங்கள் எதைத் தேடி அலைகிறீர்கள்? ஏற்கெனவே உங்களிடம் இருப்பது போதுமென உங்களுக்குத் தோன்றவில்லையா? தெரியவில்லையா?”
“சூரிய தேவன் எனக்கு இந்த ச்யமந்தக மணியை அளித்தான். இது ஒவ்வொரு நாளும் பொன்னை வாரி வழங்கக் கூடியது. இதன் மூலம் என் கௌரவமும் என் சந்தோஷமும் அதிகரிக்கிறது. என்னையும் என் குடும்பத்தையும் எப்போது சந்தோஷத்தில் வைத்திருக்கிறது. மற்றவர்களை விட நாங்கள் சந்தோஷமாக இருக்கிறோம் இங்கே வந்து யாகங்கள் செய்யும் வேத பிராமணர்களுக்கு மற்றவர்களை விட அதிகமாகப்பொன்னையும், பொருளையும் நான் வழங்குகிறேன். ஆகவே அவர்கள் என்னுடைய வாழ்க்கை செம்மையாகவும், சிறப்பாகவும், அமைதியாகவும் இருக்க வேண்டிப் பிரார்த்தனைகள், வழிபாடுகள் செய்கின்றனர். ஒவ்வொரு யாகத்திலும் நான் கொடுக்கும் அர்க்கியங்களைப் போல் இந்த சௌராஷ்டிரத்தில் எவரும் அளிக்க முடியாது. அவ்வளவு சிறப்பாக இதுவரை கண்டிராத அளவுக்குப் பிரம்மாண்டமாகச் செய்கிறேன்.” என்றபடி தன் உதடுகளைக் கோணலாக மடித்துக் கொண்டான். வக்கிரமான அவன் மனபாவத்தை முகம் காட்டியது. அதே கோபத்தோடு அவன் மேலும் பேச ஆரம்பித்தான். அப்போது அவன் முன்பற்களில் சில இல்லை என்பதைக் கிருஷ்ணன் கண்டான். அது வேறு அவன் வாயைத் திறக்கையில் மேலும் பயங்கரத்தை ஏற்படுத்தியது.
“ஹூம், என்னுடைய எதிரிகளை அழித்தொழிக்க வேண்டி நான் செய்வது……..” என்று இழுத்தவன் கிருஷ்ணனைப் பார்த்து, “ நீ செல்வத்தை இகழ்ச்சியாகக் கருதுகிறாய். நான் அப்படி அல்ல! அதை உயர்வாகக் கருதுகிறேன்.” என்றான். கிருஷ்ணன் அவனைப் பார்த்துப் புன்னகைத்தான்.
“நான் ஒருபோதும் செல்வத்தை இகழ்வாகக் கருதியதில்லை; இனியும் கருத மாட்டேன். நான் செல்வத்தைத் தன்னுடைய சொந்த சுகபோகங்களுக்கு மட்டும் பயன்படுத்துபவர்களை மட்டுமே இகழ்ச்சியாகக் கருதுகிறேன். ஒருவரிடம் சொத்துக்கள் இருப்பது அவர்கள் மட்டுமே பயன்படுத்துவதற்கு அல்ல. அப்படிப் பயன்படுத்துவதை முட்டாள்தனம் என்றே நான் கருதுகிறேன். அவர்களைப் பார்த்துப் பரிதாபப்படுகிறேன். ஒரு வேளை உங்களுக்குத் தெரியாமல் இருக்கலாம்; அல்லது தெரிந்திருக்கலாம்.கடவுளால் நமக்கு அளிக்கப்பட்ட இந்த மாபெரும் செல்வத்தின் மீது தர்மத்திற்கும் ஒரு பங்கு இருக்கிறது என்றும் தர்மத்திற்காகவும் இந்தச் செல்வம் செலவிடப்படவேண்டும் என்றும் அதற்கான உரிமை தர்மத்திற்கும் உண்டெனவும் உங்களுக்குத் தெரிந்திருக்கலாம்; புரிந்திருக்கலாம்; அதை ஒப்புக்கொள்ளலாம்.” என்றான் கிருஷ்ணன்.
“வாசுதேவா, நான் என்னுடைய நிலையைத் தெளிவாக உன்னிடம் கூறிவிட்டேன். என்னுடைய தர்மம் என்னவென்று எனக்குத் தெரியும். அது என் செல்வத்தை நான் பெருக்கிக் கொள்வது மட்டுமே ஆகும். எவருடைய கற்பனைக்கும் எட்டாத உயரத்திற்கு என் செல்வம் என்னைக் கொண்டு சேர்க்கும். மற்ற எவரையும் விட நானும் என் குடும்பமும் வாழ்க்கையை மிக நன்றாக ஆனந்தமாக அனுபவிப்போம்.” என்று சொன்ன சத்ராஜித்தின் குரலில் தெரிந்த மிதமிஞ்சிய கர்வம் கிருஷ்ணனுக்கு ஆச்சரியத்தை அளித்தது. சற்று நேரம் அவன் எதுவும் பேசாமல் மௌனமாகவே இருந்தான். அவன் முகத்தில் எப்போதும் நிலை கொண்டிருக்கும் சிரிப்புக் காணாமல் போனது. பின்னர் மெல்ல சத்ராஜித்தை ஏறிட்டுப் பார்த்தான்.

“ஐயா, உங்கள் தற்பெருமையை விடவும், சுயப் புகழ்ச்சியை விடவும் உயர்ந்ததாக ஒன்று இவ்வுலகில் இருப்பதைத் தாங்கள் உணர்வீர்களா? அதைக் குறித்து அறிவீர்களா?” என்று கிருஷ்ணன் சத்ராஜித்தைப் பார்த்துக் கேட்டான். கிருஷ்ணனையே கோபத்துடன் முறைத்துப் பார்த்தான் சத்ராஜித். சில நிமிடங்கள் சஎன்றன. அதன் பின்னர் கிருஷ்ணனைப் பார்த்து, “வாசுதேவா! நீ மற்றவர்க்கு வேண்டுமானால் ஒரு கடவுளாக இருக்கலாம். உன்னைப் புகழ்ந்து போற்றித் துதித்துக் கொண்டு உன் பின்னே வருபவர்களுக்கு நீ ஒரு கடவுளாக இருக்கலாம். ஆனால் உன்னைப் போன்ற ஒருவன் வாயால் என்னைக் குறித்த விமரிசனங்கள் செய்யப்படுவதை நான் சிறிதும் விரும்பவில்லை. ஆகவே நீ என்னைக் குறித்து எதுவும் பேசாதே!” என்றான். அவன் முகத்தில் தெரிந்த கோபத்தை வேடிக்கை பார்க்கும் மனோபாவத்திலேயே கிருஷ்ணன் எதிர்கொண்டான். “ஐயா, உங்களைக் குறித்த விமரிசனங்களை நீங்கள் தீவிரமாக எதிர்கொள்ள வேண்டும். அதுவே உங்களுக்கு நன்மை பயக்கக் கூடியது! இது தான் உங்கள் கடைசி பதிலா? அப்படி எனில், நான் இங்கே உட்கார்ந்து கொண்டு வெட்டிப் பேச்சுக்களைப் பேசிப் பொழுதைக் கழிக்க விரும்பவில்லை. ஆனால் ஒன்றை மட்டும் உங்களுக்கு நினைவு படுத்துகிறேன்.  யாதவர்களால் தர்மம் நிலைநாட்டப்படும். அது மட்டும் நிச்சயம்!” என்றான்.

பின்னர் தன் தலைப்பாகையைச் சரி செய்து கொண்டான் கிருஷ்ணன். தன் ஆசனத்திலிருந்து விடை பெறும் பாவனையில் எழுந்து கொண்டான். அப்போது திடீரென சத்ராஜித்தின் முகம் மாறியது. அவன் மொத்த உடல் மொழியும் மாறத் தொடங்கியது. ஒரு தேர்ந்த நடிகனைப் போல் தன்னுடைய மனோபாவத்தை அவன் மாற்றிக் கொண்டிருக்கிறான் என்பதைக் கிருஷ்ணன் புரிந்து கொண்டான். அவன் முகத்தில் இதுவரை இல்லாத சிரிப்பு மலர, கிருஷ்ணனைப் பார்த்து ஆசனத்தில் அமரும்படி வேண்டிக் கொண்டான். அதைப் பார்த்து வியந்த கிருஷ்ணன் ஆசனத்தில் அமர்ந்தான். அப்போது சத்ராஜித் பேச ஆரம்பித்தான்.

“வாசுதேவா, யாதவர்களுடைய தர்மம் என்னவென்று எனக்குத் தெரியாது; உன்னுடைய சொந்த தர்மம் என்னவென்றும் நான் அறியேன். அது எனக்குத் தெரியவும் வேண்டாம். தெரிந்து கொள்ளவும் விரும்பவில்லை. ஆனால் மற்ற யாதவர்களால் கொடுக்கப்பட்ட என்னுடைய பங்குச் செல்வத்தை வேண்டியே நீ வந்திருக்கிறாய் என்பதைப் புரிந்து கொண்டேன்.” என்றான் சத்ராஜித். “உங்களுக்கு அது புரிந்திருப்பது குறித்து எனக்கு மகிழ்ச்சி ஐயா!” என்றான் கிருஷ்ணன்.

“வாசுதேவா, நீ உன்னுடைய தர்மம் என்று எதைச் சொல்கிறாயோ அதை நிறைவேற்ற நிலை நாட்ட என்ன செய்ய வேண்டும் என்பதற்கான வழிமுறைகளை நான் சொல்லுகிறேன் கேள்! உன் எதிரே இரண்டு வழிகள் இருக்கின்றன. முதல் வழியில் நீ எனக்கும் மற்ற யாதவத் தலைவர்களுக்கும் இடையே மோதல்களை உருவாக்கலாம். நீ துவாரகைக்குத் திரும்புகிறாய் என்னும் செய்தி கிடைத்த அந்த நாளில் இருந்தே இதற்கான சந்தர்ப்பம் உருவாகும், நீ உருவாக்குவாய் என்பதை எதிர்பார்த்து நான் அதற்கான தக்க ஏற்பாடுகளைச் செய்து வருகிறேன்.” இந்த இடத்தில் சற்று நிறுத்திய சத்ராஜித் தன் கர்வம் பொங்கும் முகத்தில் புன்சிரிப்போடு கிருஷ்ணனைப் பார்த்தான். அதோடு நிற்காமல் எதிரே தெரிந்த பச்சைப்பசும்புற்கள் நிறைந்த மைதானத்தைச் சுட்டிக் காட்டினான். அங்கே அவனுடைய விலை உயர்ந்த குதிரைகள் மேய்ந்து கொண்டிருந்தன. இதன் மூலம் தன் குதிரைப்படை வளத்தைச் சொல்கிறான் என்பதைக் கிருஷ்ணனும் அறிந்தான்.

“ஆம், நீங்கள் ஒரு மோதலுக்குத் தயாராகி வருகிறீர்கள் என்பதை நானும் அறிவேன்.” என்றான் கிருஷ்ணன். பின்னர் மெல்லத் தனக்குத் தானே பேசிக் கொள்வது போல் பேச ஆரம்பித்தான். ஆனால் அவன் குரலில் உறுதியும் தெரிந்தது. ஆழ்ந்து ஆராய்ந்து ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்டதைச் சொல்லும் தொனியும் தெரிந்தது. தன் ஒவ்வொரு வார்த்தைகளையும் திட்டமிட்டு அளந்து பேசினான். யாதவர்களின் மேல் மோதல் ஏற்படுத்தப்பட்டால் அதை நாங்கள் எதிர்கொள்வோம். தைரியமாக எதிர்கொள்வோம். தர்மத்தைக் காக்கவேண்டி அது ஏற்பட்டால், அதை நாங்கள் எதிர்த்து நிற்போம். தர்மம் அதைத் தேவை எனக் கருதினால் நாங்கள் அதை எதிர்கொள்வோம். நான் சொல்வது சத்தியமான வார்த்தை! அதை நீங்கள் உறுதியாக நம்பலாம். இறுதியில் வெல்லப்போவது நீங்கள் அல்ல! அதுவும் நிச்சயம்!” என்றான். பின்னர் திடீரென நினைத்துக் கொண்டவன் போல, “அது என்ன இன்னொரு வழி? அதைக் குறித்து நீங்கள் எதுவுமே சொல்லவில்லையே?” என்றும் கேட்டான்.

“அடுத்த வழியா? அது என்னவெனில் என்னுடைய பங்குச் செல்வத்தை நான் இழந்தே ஆகவேண்டுமெனில் அதற்கான விலையைக் கொடுத்தே ஆகவேண்டும்! அதைக் கொடுங்கள்!” என்றான் சத்ராஜித். “விலை? என்ன விலை? அதைச் சொல்லுங்கள்! யாதவர்கள் உங்களுக்கு என்ன விலை கொடுத்தால் நீங்கள் உங்கள் பங்குச் செல்வத்தைப் பகிர்ந்தளிப்பீர்கள்? அது சரி, ஒன்றை நினைவில் கொள்ளுங்கள் சத்ராஜித் அவர்களே! இந்த பேரத்தைப் பேசுவதன் மூலமாக நீங்கள் மற்ற யாதவர்களோடு ஓர் ஒப்பந்தம் செய்து கொள்ள நினைக்கிறீர்கள்! அதை நினைவில் இருத்தவும்!” என்றான் கிருஷ்ணன்.

“ஆம், அப்படித்தான், என் விலையும் அப்படி ஒன்றும் கடினமான ஒன்றல்ல! எளிதில் கொடுக்கக் கூடிய ஒன்றே! என் ஒரே மகள், அருமை மகள் சத்யபாமாவை உன் அருமைச் சிநேகிதன் சாத்யகி, யுயுதானா சாத்யகி மணந்து கொள்ள வேண்டும். சாத்யகனிடம் உனக்கும், உன் தந்தை வசுதேவனுக்கும் உள்ள செல்வாக்கை நான் நன்கறிவேன். சாத்யகனை என் மகளை மருமகளாக ஏற்றுக்கொள்ளும்படி வற்புறுத்துங்கள். அவனை இந்தத் திருமணத்திற்கு ஒப்புக்கொள்ள வையுங்கள்!”

கதவுகளுக்குப் பின்னர் நின்று கொண்டு அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்த சத்யபாமா மயக்கமுறும் நிலைக்குப் போய்விட்டாள். அவள் தந்தையின் பேரம் அவளை அதிர வைத்தது. அவள் மெல்லக் கதவைக் கொஞ்சம் உள்ளே பார்க்கும்படியாகத் திறந்தாள். அப்போது தான் இந்தப் பேச்சுவார்த்தையின் முடிவைச் சிறிதும் விடாமல் கேட்க முடியும். அவள் தலைவிதியையே நிர்ணயிக்கும் இந்தப் பேச்சு வார்த்தையின் முடிவை அறிய அவள் மிகவும் ஆவலுடனும், ஆத்திரத்துடனும் காத்திருந்தாள்.

“சாத்யகி உங்கள் மகளை மணக்க விரும்பவில்லை. அவன் தற்சமயம் திருமணத்தையே விரும்பவில்லை!” என்றான் கிருஷ்ணன். “அது உங்கள் சொந்த விஷயம்! எனக்கு அதில் சம்பந்தம் ஏதும் இல்லை! என்ன இருந்தாலும் அவன் உன்னுடைய சிறந்த சிநேகிதன்!” என்று கொஞ்சம் வித்தியாசமான குரலில் கூறினான் சத்ராஜித். மேலும் தொடர்ந்து, “சத்யபாமாவை மனைவியாக ஏற்கும்படி அவனிடம் கூறு. உன் நட்பை வைத்து அவனை வற்புறுத்து. நிச்சயமாக என் மகள் ஓர் நல்ல மனைவியாக இருப்பாள். அதற்கு நான் உறுதிமொழி தருகிறேன்.” என்றான் சத்ராஜித்.

கிருஷ்ணன் இதற்குத் தரப்போகும் பதிலில் தான் தன் வாழ்க்கையே அடங்கி இருப்பதாக வெளியே காத்திருந்த சத்யபாமா நினைத்தாள். தன் மனதினுள் மானசிகமாகப் பிரார்த்தனைகள் செய்தாள். “கிருஷ்ணா, கிருஷ்ணா, ஓ, கோவிந்தா! நீ ஒரு கடவுள் என அனைவரும் சொல்கின்றனரே! அது மட்டும் உண்மையானால், தயவு செய்து, ஆம், தயவு செய் கிருஷ்ணா! என்னுடைய இந்தப் பிரார்த்தனைகள் உன் செவிகளில் விழட்டும்! சாத்யகியின் மனைவியாக நான் ஆவதைத் தடுப்பது இப்போது உன் கரங்களில் தான் இருக்கிறது!” என்று மௌனமாகப் பிரார்த்தித்தாள்.

கிருஷ்ணனோ சத்ராஜித்தையே சற்று நேரம் உற்றுப் பார்த்துவிட்டுப் பின்னர் ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்ட விஷயத்தைச் சொல்லும் தொனியில் பேச ஆரம்பித்தான். “மாட்சிமை பொருந்திய சத்ராஜித் அவர்களே! சாத்யகி ஏன் உங்களை மணக்க மறுக்கின்றான் என்பதற்கான காரணத்தை நீங்கள் கண்டு பிடித்தீர்களா? அதற்கான முயற்சிகளைச் செய்தீர்களா?” என்று கேட்டான்.

“ஓ, எனக்கு அது நன்றாகவே தெரியும். அந்த முட்டாள் சாத்யகன், என்னை விட அவன் மிகப் பெரிய தலைவன், சிறந்த தலைவன் என்று நினைக்கிறான். அதனால் என்னை அவமானப்படுத்துவதற்காகவே இந்தத் திருமணத்தை ஏற்க மறுக்கிறான்.  அவன் கண்களின் முன்னால் நான் தீண்டத்தகாதவனாகத் தெரிகிறேன். என் மகள் உயர்ந்த யாதவ குலத்தில் தான் பிறந்திருக்கிறாள் என்பதை அவன் ஏற்க மறுக்கிறான். அவன் கண்களுக்குத் தெரியவில்லை. அவன் மகனைப் போல் என் மகளும் ஒரு யாதவகுலப் பெண் தான் என்பது! அவனுடைய இந்தச் சூழ்ச்சியை நான் முறியடிப்பேன். அவன் தற்பெருமையை அடியோடு அழிப்பேன்!” என்றான் சத்ராஜித். கிருஷ்ணன் சிரித்தான். “நிச்சயமாக நீங்கள் தவறு செய்கிறீர்கள் என்பதை நான் அறிவேன். இந்தத் திருமணம் நடைபெறாமல் போனதற்கு இதைவிட வேறு காரணங்கள் நிச்சயம் இருக்க வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியவில்லையா? நிச்சயமாய் வேறு காரணங்கள் தான்!” என்றான் கிருஷ்ணன்.