Wednesday, September 7, 2016

குனிகருக்கு சந்தேகம்!

விடிவெள்ளி முளைக்கும் முன்னரே ஷார்மியும் அவளுடன் வந்த பதின்மூன்று பெண்களும், ஐந்து பிரமசாரிகளும் கோதுலியின் மண்ணை மிதித்து விட்டனர். காட்டு வழியில் அவர்கள் வேகமாக வந்ததை நடை என்று சொல்ல முடியாது. ஓட்டம் என்றே சொல்லவேண்டும். மூச்சுவிடாமல் ஓடோடி வந்து சேர்ந்திருக்கின்றனர். அதிலும் பெண்கள் முள்ளிலும் கல்லிலும் நடந்து உடை கிழிந்து காலில் இருந்து ரத்தம் வடியச் சோர்ந்து காணப்பட்டனர். கோதுலியை அடைந்து விட்டோம் என்பது நிச்சயம் ஆனதும் ஷார்மி தன்னுடன் வந்த தன் இளைய சகோதரனின் முதுகில் அன்புடன் தட்டிக் கொடுத்து அவனை உடனே திரும்பும்படி கூறினாள். அவனையும் காணவில்லை என்பதைக் காட்டுவாசிகள் கண்டுபிடித்து விட்டால் பின்னர் அவன் இந்தப் பெண்களுக்கு உதவியது வெளியே தெரிந்து விடும். அவனுக்கு மிகக் கொடூரமான தண்டனை கொடுக்கப்படும். ஆகவே அவன் விரைவில் திரும்ப வேண்டும் என்று ஷார்மி அவனை வற்புறுத்தினாள். அந்தப் பெண்கள் ஒரு காலகட்டத்தில் தாங்கள் தங்கள் வாழ்க்கையை இனிமையாகவும் மகிழ்ச்சியாகவும் கழித்த இடத்தை இப்போது பார்க்கையில் மனம் விம்மினார்கள். அவர்கள் இதயமே வெடித்துவிடும் போல் இருந்தது. குறிப்பாக ஷார்மிக்கு! அவள் அங்கே அவள் மனம் கவர்ந்த ஆசாரியருடனும், தங்கள் குழந்தைகளுடனும் எத்தனை இனிய இல்லறத்தைக் கழித்திருக்கிறாள். அதோடு அல்லாமல் அவள் மனம் கவர்ந்த பசுக்கூட்டங்கள்! வாழையடி வாழையாகத் தொடர்ந்து வந்த பசுக்களின் பரம்பரையே அழிக்கப்பட்டு விட்டதே!

இப்போது அவளிடம் எதுவுமே மிச்சம் இல்லை. அவளைத் தவிர! ஆனாலும் அவளால் தன் துக்கத்தை வாய்விட்டுச் சொல்லிக் கொள்ள முடியாது! உரத்த குரலில் புலம்பவும் முடியாது! அவள் துக்கத்தை அடக்கிக் கொண்டே ஆகவேண்டும். இல்லை எனில் அவளுடன் புதியதொரு விடியலைத் தேடி நம்பிக்கையுடன் வந்திருக்கும் அந்த இளம்பெண்கள் தைரியத்தை இழந்து விடுவார்கள். இந்தச் சூழ்நிலையை எதிர்கொண்டு போராடத் தயங்குவார்கள். அங்கே மோசாவால் காவல் வைக்கப்பட்டிருந்த இரு பழங்குடியினரின் காவல்காரர்களும் மரத்தடியில் படுத்து உறங்கிக் கொண்டிருந்தனர். தன் படகைக் கரையில் கவிழ்த்து வைத்துவிட்டுக் க்ரிவியும் அவன் மகன்களும் கூட உறங்கிக் கொண்டிருந்தனர். க்ரிவியின் தோள்பட்டையை அசைத்துச் சத்தம் போடாமல் அவனை எழுப்பினாள் ஷார்மி! “க்ரிவி, க்ரிவி, எழுந்திரு! உன் படகைத் தயார் செய்! நாங்கள் அனைவரும் உன் படகில் பிரயாணம் செய்யப் போகிறோம்!” என்று மெதுவான குரலில் கூறினாள்.

க்ரிவி திடுக்கிட்டுக் கண் விழித்தான். தன் கண்களையே நம்பாமல் அவளை விழித்துப் பார்த்தான். “நீங்கள் ஷார்மி அன்னையாரா? அவர் தானே! என் கண்கள் என்னை மோசம் செய்யவில்லையே!” என்றெல்லாம் கேட்டவண்ணம் அவளையே உற்றுப் பார்த்தான். தான் தூக்கத்தில் கனவு காண்கிறோமோ என்று கூட எண்ணினான். “ஆம், நான் ஷார்மி தான்!” என்றாள் ஷார்மி. பின்னர் அவன் காதுகளைப் பிடித்து முயல்குட்டியைத் தூக்குவது போல் அவனைத் தூக்குவதாக பாவனை பண்ண வலி தாங்க முடியாத க்ரிவி தான் காண்பது கனவல்ல, நனவே என நிச்சயம் கொண்டான். பின்னர், “ஓ, எருமைக் கடவுளே! இந்த ஏழையும் முதியவனும் ஆன க்ரிவிக்குக் கருணை காட்டு!  தாயே, என்னை விட்டு விடு! நீ ஷார்மி அன்னைதான் என்பதை ஒப்புக்கொள்கிறேன்!” என்றான் க்ரிவி.

“அப்போது சீக்கிரமாய் உன் படகைத் தயார் செய்! அதில் ஏறி நாங்கள் அரசப் படகுக்குச் செல்ல வேண்டும்.” என்ற வண்ணம் அவனைத் தன் பிடியிலிருந்து விடுவித்தாள் ஷார்மி. “என்ன அரசப் படகுக்கா? அப்படி எனில் நீங்கள் அனைவரும் அங்கிருந்து தப்பியா வந்திருக்கிறீர்கள்?” என்று கேட்டான் க்ரிவி. “பாலமுனி எங்களை எல்லாம் சூரிய உதயத்துக்கு முன்னரே அரசப்படகில் ஏறிவிடும்படி சொல்லி அனுப்பி உள்ளார்.” என்றாள் ஷார்மி சுருக்கமாக. “பாலமுனி? அப்படி எனில் அவர் எங்கே இப்போது? அவர் ஏன் வரவில்லை?” என்று க்ரிவி கேட்க, “அவர் இப்போது எங்களை அடைத்து வைத்திருந்த சிறைச்சாலையில் இருக்கிறார். எங்களை எல்லாம் அங்கிருந்து தப்புவதற்கு உதவி செய்து இங்கே வந்து அரசப் படகுக்குச் செல்லும்படி கூறியுள்ளார். க்ரிவி, மேலும் மேலும் கேள்விகளைக் கேட்டுக் கொண்டு நேரத்தை வீணாக்காதே!” என்றாள் கண்டிப்புடன் ஷார்மி.

“ஆனால் நான் எப்படி உங்களுக்கு உதவுவேன்? மஹிஷாசுரனின் மகனைப் போன்றவனும் நம் பழங்குடியினரின் தலைவனுமான மோசா என்னை இங்கேயே இருக்கும்படி கட்டளை இட்டிருக்கிறாரே! நான் எப்படி வருவேன்?” என்று செய்ய முடியாத தவிப்புடன் கேட்டான் க்ரிவி.  “இதோ பார் க்ரிவி! நாங்கள் அனைவரும் கிட்டத்தட்ட இறப்பிலிருந்து தப்பி வந்திருக்கிறோம். இதை விட மோசமான நிலை ஏற்பட முடியாது! நீ மட்டும் இப்போது எங்களை ஏற்றிச் செல்ல மறுத்தாயானால் எங்களுக்கெல்லாம் யமுனையில் குதித்து உயிர் விடுவதைத் தவிர வேறு வழியே இல்லை! நாங்கள் இத்தனைக்கும் பின்னர் திரும்பி அந்த நரகத்துக்குச் செல்ல விரும்பவில்லை!”

“ஆனால் பாலமுனி எங்கே? அவர் ஏன் வரவில்லை?” க்ரிவி மீண்டும் மீண்டும் கேட்டான். சுகர் இப்போது தலையிட்டார். “க்ரிவி, தந்தை தன்னைக் கடவுளரிடம் ஒப்படைத்து விட்டார். ஆகையால் அவர் அங்கேயே தங்கி இருக்கிறார். நீ இப்போது செய்யவேண்டியதெல்லாம் உடனே எங்களை உன் படகின் மூலம் அரசப் படகில் கொண்டு விட வேண்டியது தான். தந்தை எங்களை எல்லாம் ஹஸ்தினாபுரத்துக்கு உடனே செல்லும்படி பணித்திருக்கிறார்.” என்றார். அதற்குள்ளாகத் தொடர்ந்த பேச்சுக்குரல் கேட்டுக் க்ரிவியின் இரு மகன்களும் எழுந்து அங்கே வந்துவிட்டனர். “ஆஹா, நான் ஓர் துரதிர்ஷ்டமான மனிதன்!” என்ற வண்ணம் தன் தலையில் அடித்துக் கொண்டான் க்ரிவி.பின்னர் பரிதாபமான குரலில் தொடர்ந்து கூறினான். “நான் மட்டும் உங்களை அழைத்துச் சென்றேன் என்பது தெரிந்தால் தலைவர் கைகளிலிருந்து நானும் என் மகன்களும் தப்ப முடியாது. மரணம் எங்களுக்குக் காத்திருக்கும். அப்படி நான் உங்களை அழைத்துச் செல்லவில்லை எனில் உங்கள் அனைவரது சாபமும் எல்லாவற்றுக்கும் மேல் பாலமுனியின் சாபமும் எனக்குக் கிட்டும்! நான் என்ன செய்வேன்!” என்றான் க்ரிவி. “சரி, அப்பா, சரி! இப்போது உடனே சென்று எங்களை அரசப் படகுக்கு அழைத்துச் செல்வாய்!” என்றார் சுகர்.  மீண்டும் அவன் தோள்களில் தட்டி அவனைச் சமாதானப் படுத்தினார்.

கருக்கிருட்டு கலைந்து விடியும் நேரம். அரசப் படகின் தலைமைப் படகோட்டி விழித்துக் கொண்டிருந்தான். சற்று தூரத்தில் ஓர் படகு வருவது தெரிந்தது. கூர்ந்து கவனித்தபோது அது க்ரிவியின் படகு என்பதும் அதில் சில பெண்களும் சில பிரமசாரிகளும் வருவதும் தெரிந்தது. உடனே மந்திரி குனிகரை அழைத்துக் காட்டினான். குனிகர் அப்போது நதியில் இடுப்பளவு ஆழத்தில் நின்ற வண்ணம் தன் அதிகாலை அனுஷ்டானங்களைச் செய்து கொண்டிருந்தார். அவருடன் கூடவே வியாசருடன் வந்து  பின்னர் அவரால் அரசப் படகில் ஏற்றப்பட்ட ஸ்ரோத்திரியர்களும் தங்கள் காலைக் கடமைகளைச் செய்து கொண்டிருந்தனர். ஒரு சில படகோட்டிகள் அந்தக் காலை இளங்குளிரில் குளிக்கும் சுகமான அனுபவத்தைப் பெற்றுக் கொண்டிருந்தனர். ஒரு சில வில்லாளிகளும்ல அந்த அதிகாலை அனுஷ்டானங்களில் ஈடுபட்டிருந்தனர்.

மந்திரி குனிகர் படகோட்டியால் சுட்டிக்காட்டப்பட்ட படகைப் பார்த்ததுமே அது க்ரிவியின் படகு என்பதைப் புரிந்து கொண்டு ஆச்சரியம் அடைந்தார். அந்தப் படகில் இருந்த மனிதர்களையும் பார்த்து அதிசயித்த அவர் அவர்களில் யார் முக்கியமாய் இருக்க வேண்டுமோ அந்த வேத வியாசர் இல்லாததைக் கண்டு மனம் வருந்தினார். அதிர்ச்சியும் அடைந்தார். படகு இழுத்துக் கட்டப்பட்டு நிறுத்தப்பட்டது. அதிலிருந்த ஷார்மியும் மற்றப் பெண்களும் படகிலிருந்து குதித்து இறங்கினார்கள். இளம்பெண்களும் தூக்கக் கலக்கம் கலையாமல் படகிலிருந்து குதிக்க முயன்றனர். அதற்குள் மந்திரி குனிகரைப் பார்த்த ஷார்மி, “மந்திரியாரே, குனிகரே!” என்று அழைத்த வண்ணம் அவரை நெருங்கினாள். அவளைப் பார்த்த குனிகருக்கு அவள் உடை கிழிந்து தொங்கியது கண்களில் பட்டது. அவள் மார்பகம் முழுவதும் சரியாக மூடப்படவில்லை. மூடியும் மூடாமலும் கிடந்த அவள் உடலின் வளமும் செழுமையும் மட்டுமே குனிகரின் கண்களில் பட அவளையே வெறித்தார். ஷார்மிக்குக் கோபம் வந்தது.

“ஏ, மந்திரி! ஏன் என்னை அப்படி வெறித்து வெறித்துப் பார்க்கிறாய்? நான் என்ன தேவலோகத்திலிருந்து நேரே கீழே இறங்கி விட்ட அப்சரஸா என்ன? நான் உன் தாயை விட வயதானவளாகவே இருப்பேன். உனக்கு ஆசாரிய கௌதமரின் மனைவி ஷார்மியை மறந்து விட்டது என்று தோன்றுகிறது. நீ என் உடலை மட்டும் பார்க்காதே! எங்கள் கோலத்தைப்பார்! நாங்கள் காட்டு வழியில் அங்குமிங்கும் அலைந்து திரிந்து வழி கண்டு பிடித்து முட்களிலும் கற்களிலும் விழுந்து காயம்பட்டுக் கொண்டு ரத்தம் வழியும் கால்களோடும் கிழிந்த ஆடைகளோடும் வந்திருப்பதை மட்டும் பார்! அது உன் மாசு பட்ட கண்களில் தெரிகிறதா இல்லையா?” என்று கத்தினாள்.

அவளின் ஒவ்வொரு வார்த்தையும் சாட்டை அடி போல் குனிகரின் மேல் விழுந்தது. அவருக்கு வெட்கம் மீதூற ஷார்மியின் உடலிலிருந்து தன் கண்களை அகற்றிக் கொண்டார். “மன்னிக்கவும், ஷார்மி அம்மையாரே! நீங்கள் எல்லோரும் எப்படி இங்கே வந்து சேர்ந்தீர்கள்? நீங்கள் அனைவருமே மோசாவால் கொல்லப்பட்டிருப்பீர்கள் அல்லது கடுஞ்சிறையில் இருப்பீர்கள் என்று அல்லவோ எண்ணினேன்!” என்று கேட்டார். அதற்கு ஷார்மி தன் உதடுகளின் மேல் கையை வைத்து ஜாடை காட்டினாள். “இதோ பார், மந்திரி, நான் இப்போது மிகவும் களைத்துச் சோர்ந்திருக்கிறேன். ஒவ்வொருவரிடமும் நான் தப்பி வந்த கதையைச் சொல்லிக் கொண்டிருக்க எனக்கு நேரமும் இல்லை. என்னால் முடியவும் இல்லை. நாங்கள் பழங்குடியினரின் தலைமையகத்துக்குக் கொண்டு செல்லப்பட்டதும், அங்கே சிறை வைக்கப் பட்டதும், எந்த நேரமும் எங்களைக் கொல்ல முயற்சி செய்யப் போகிறார்கள் என்பதை எதிர்பார்த்துக் கொண்டு நரக வாழ்க்கை வாழ்ந்ததும் உண்மை தான். அப்போது தான் விடிவெள்ளியைப் போல பாலமுனி எங்கள் உதவிக்கு வந்தார். எங்களைத் தப்புவித்தார். அவர் தான் எங்களை கோதுலிக்குச் சென்று அங்கிருந்து க்ரிவியின் படகில் அரசப் படகைச் சென்றடையச் சொன்னார். இப்போது நீ செய்ய வேண்டியதெல்லாம் எங்களை ஹஸ்தினாபுரம் அழைத்துச் செல்லவேண்டியது ஒன்றே!” என்றாள்.

Tuesday, September 6, 2016

மோசாவுக்கு நேர்ந்தவை!

“நான் குளிக்கவே முடியவில்லை! குளிக்காமல் எங்கள் கடவுளரை வணங்கி அனுஷ்டானங்கள் செய்ய முடியாது. இவை எல்லாம் முடித்தால் தான் சாப்பிடுவேன். அதோடு சாப்பிட்டாலும் நீ கொடுத்திருப்பதை உண்ணமாட்டேன். அதில் பெரும்பாலும் பசுவின் இறைச்சி இருக்கிறது. கோமாதா எங்கள் குல தெய்வம். அவளின் இறைச்சியை நான் உண்டால் தாயை வெட்டிக் கொன்று உண்பது போல் ஆகும். அதை நான் தொடவே மாட்டேன்.”

“ஹூம், நான் கொடுத்திருக்கும் உணவை நீ குறை சொல்கிறாயா? அதை உண்ண மறுக்கிறாயா?” என்று கேட்டான் மோசா. அவன் கோபம் நிமிடத்திற்கு நிமிடம் அதிகரித்து வந்தது. ஆனால் அதை எப்படி வெளிப்படுத்துவது என்று புரியவில்லை அவனுக்கு. “இதை உண்ண மறுத்தாயெனில் உனக்கு ஒரு கவளம் கூட உண்ணக் கிடைக்காது! நீ பசியில் வாடிப் போய்க் கடைசியில் இறப்பாய்! அது தான் நடக்கப் போகிறது!” என்றான் மோசா. “மிகவும் நல்லது தான். பசியினால் வாடினால் நான் மிகவும் ஒல்லியாக ஆகிவிடுவேன். ஆகவே உனக்கு உண்பதற்கு என் உடலின் மாமிசம் கிடைக்காது! எனக்கு அதில் சந்தோஷமே!” என்றார் த்வைபாயனர் பதிலுக்கு! அப்போது இரண்டு, மூன்று வயது முதிர்ந்த பழங்குடிகள் அவர்களில் ஷார்மியின் தந்தை க்ருபா என்பவரும் இருந்தார். ஓடோடி வந்தனர். வரும்போதே, “தலைவா, தலைவா! மஹிஷாசுரனின் அங்கீகாரம் பெற்ற புத்திரனே! ஓர் மஹாப் பிரளயமே நம் குடியிருப்பில் நடந்து விட்டது! ஒரு அக்கிரமம் நடந்திருக்கிறது! அநியாயம் நடந்து விட்டது!” என்று கூவிய வண்ணம் வந்தனர். “என்ன ஆயிற்று உனக்கு? ஏன் இப்படிப் புலம்புகிறாய்?” என்று க்ருபாவைப் பார்த்து மோசா கேட்டான். “என் மகள், ஷார்மி! அவளைக் காணவில்லை. மாயமாக மறைந்துவிட்டாள். ஒருவேளை இவருடைய மந்திர, தந்திர வித்தையாக இருக்கலாம், தலைவா!” என்றான் க்ருபா.

“என்ன, ஷார்மியைக் காணோமா?”

“அது மட்டுமல்ல, பிரபுவே! கூடவே என்னுடைய இரு மகள்களையும் காணவில்லை!” என்று இன்னொரு வயது முதிர்ந்த காட்டுவாசி கூறினார். அவர்களில் இன்னொரு முதிர்ந்தவரைத் தான் அந்தப் பெண்கள் இருந்த பகுதிக்குக் காவலாகப் போட்டிருந்தான் மோசா. இப்போது பெண்களைக் காணவில்லை என்றதும் தலைவன் என்ன செய்யப் போகிறானோ என்ற அச்சத்தில் நடுங்கியவண்ணம் அவர் நின்று கொண்டிருந்தார். “என்ன ஆயிற்று உனக்கு? ஏன் இப்படி உடல் நடுங்கப் பதட்டத்துடன் காணப்படுகிறாய்?” என்றான் மோசா. “பெரிய மோசடியே நடந்திருக்கிறது, என் கடவுளே! நாம் இங்கே சிறைப்பிடித்து அழைத்து வந்து சிறை வைத்த எல்லாப் பெண்களையுமே இப்போது காணவில்லை! எங்கே, எப்படிப் போனார்கள் என்பதே புரியவில்லை!” என்று நடுங்கியபடி கூறினார்.

மோசா குரோதத்துடன் த்வைபாயனர் பக்கம் திரும்பினான். “போக்கிரி, மோசடி செய்து விட்டாய்! வஞ்சகா! நயவஞ்சகா! எனக்குத் தெரியும் இது உன்னுடைய வேலையாகத் தான் இருக்க வேண்டும். உன் மந்திர, தந்திரங்களை இங்கே பிரயோகம் செய்திருக்கிறாயா?” என்றவன் திரும்பித் தன்னுடன் வந்தவர்களில் தனக்கு விசுவாசியாக இருக்கும் ஒருவனை அழைத்து அவனிடம், “ பில்லி, சூனியம் வைக்கும் மந்திரவாதியிடம் உடனே செல்! கை தேர்ந்தவனாக இருக்கட்டும். அவனிடம் கேள் இதைச் செய்தது யார் என்று! பதிலுக்கு அவனை விட்டே இவர்களுக்குச் சூனியம் வைக்கச் சொல்! இது என் கட்டளை!” என்றவன் த்வைபாயனரிடம் திரும்பி, “உண்மையைச் சொல்! முனிவா! எங்கே உன்னுடன் இருந்த இளைஞர்களும், இந்தப் பெண்களும் சென்றனர்?”

“நான் ஏற்கெனவே உன் காவலர்களைக் கேட்கச் சொல்லிவிட்டேன்!” என்றார் த்வைபாயனர்.

மோசா ஷார்மியின் தந்தை பக்கம் திரும்பி, “மாமா, ஷார்மி எங்கே சென்றிருப்பாள்?” என்று வினவினான். “எனக்கெப்படித் தெரியும், தலைவரே! நான் அவளைக் காணவில்லை என்றதுமே இதில் ஏதோ சூழ்ச்சி, மோசடி இருப்பதை உணர்ந்து நேரே உங்களிடம் வந்து விட்டேன்.” என்றார் க்ருபா. “அதோடு இல்லை, தலைவா! ஆசிரமத்திலிருந்து அழைத்துவரப்பட்ட பெண்கள் அடங்காமல் தான் இருந்தார்கள். இங்குள்ள மக்களையும் அவர்கள் மதித்ததில்லை. நம் பழங்குடியினரின் சம்பிரதாயங்களையும்,சடங்குகளையும் லட்சியம் செய்யவில்லை. அவர்களுக்குள்ளேயே பழகிக் கொண்டனர். இங்குள்ளவர்களுடன் கலந்து பழகவில்லை. அவர்கள் எதற்கு லாயக்கானவர்களாக இருந்தார்கள் என்பதே தெரியவில்லை; புரியவும் இல்லை. அவர்களும் தாங்கள் இனிமேல் இங்கே என்ன செய்வது என்ற குழப்பத்தில் இருந்தார்கள். இங்குள்ளவற்றோடு அவர்களால் ஒத்துப் போகமுடியவில்லை. ஆகவே ஒருவேளை அனைவருமாகச் சேர்ந்து யமுனை நதியின் வெள்ளத்தில் மூழ்கி இருக்கலாம்.”

அப்போது அவர்கள் இனத்தின் தலைவர்களில் ஒருவன் ஓட்டமாக ஓடி வந்து கொண்டிருந்தான். “மஹிஷாசுரனின் அவதாரமான எங்கள் அன்புத் தலைவரே! ஈடு இணையற்றவரே!” என்றெல்லாம் அழைத்தபடி ஓடி வந்தான். மூச்சு வாங்க அவன் சொன்னதாவது! “மதிப்புக்குரிய தலைவா! உங்கள் இரு சகோதரிகளும்………” என்றான். அவனால் மேலே பேச முடியவில்லை. அவனைப் பார்த்து மோசா கோபத்தால் சிவந்த கண்களுடன், “என்ன ஆயிற்று என் சகோதரிகளுக்கு?” என்று வினவினான். “அவர்கள் மறைந்துவிட்டனர்!” என்றான் அந்தத் தலைவன். “என்ன? மறைந்துவிட்டனரா? நீ நிச்சயமாகத் தான் சொல்கிறாயா?”

“ஆம், ஐயா, நம் குலதெய்வமான அந்த மஹிஷாசுரன் மேல் ஆணை!”

“எங்கே போயிருப்பார்கள் அவர்கள்?”

“எனக்கெப்படி ஐயா தெரியும்?”

மோசாவுக்கு மிகவும் ஆச்சரியமாகவும் அதிசயமாகவும் இருந்தது. அடுத்து என்ன செய்யவேண்டும் என்பதும் குழப்பமாக இருந்தது. என்ன செய்வது என்றே அவனுக்குப் புரியவில்லை. அவன் வாய் ஒட்டி உலர்ந்து போயிற்று. பின்னர் தன் மனதுக்கு இனிய நண்பர்கள் பக்கம் திரும்பினான். “நீங்கள் அனைவரும் அந்தப் பெண்களைத் தேடிச் செல்லுங்கள். அவர்களை உயிருடனோ அல்லது பிணமாகவோ பிடித்து வாருங்கள். உயிருடன் பிடித்து வந்தால் உடனே என்னிடம் கொண்டுவாருங்கள்!” என்று ஆணையிட்டான். பின்னர் வியாசரிடம் திரும்பி, “நீ எங்கள் மந்திரவாதி வரும்வரை காத்திருக்க வேண்டும். ஏன் சிரிக்கிறாய்? என்னைப் பார்த்தா சிரிக்கிறாய்? பொல்லாதவனே! மஹிஷாசுரனுக்கு நீ எதிரியா?” என்று கோபத்துடன் கத்தினான்.

த்வைபாயனருக்குச் சிரிப்புப் பொங்கிக் கொண்டு வந்தது. தாங்க முடியாமல் சிரித்தவர் எழுந்து நின்றார். மோசா அவரைப் பார்த்துக் கோபத்துடன், “எதற்குச் சிரிக்கிறாய்?” என்று கேட்டான். “தலைவா, விதி என்பது கடவுளால் கூட மாற்ற முடியாது. ஒருவனுக்கு மரணமோ, வாழ்வோ ஏற்கெனவே நிச்சயிக்கப்பட்டது. அதை மாற்ற உன்னால் இயலாது. நீ வேத கோஷத்தைக் கேட்க ஆசைப்பட்டாயல்லவா? இப்போது கேள்!” என்றவர் தன் கைகளை விண்ணைப் பார்த்து மேலுயர்த்தினார். திடீரென முனிவரிடம் ஏற்பட்ட இந்த மாற்றத்தைக் கண்டு மோசாவுக்குள் ஏதோ செய்தது. அவனும் அந்த மாற்றத்தினால் பாதிக்கப்பட்டான். இனம் தெரியாததொரு ஒளி அவரைச் சூழ்ந்து கொண்டிருப்பதைப் போல் அவர் முகம் ஒளிர்ந்தது. கண்களும் ஒளிர்ந்தன. அவர் உடல் விறைத்துக் கொண்டது. குரல் ஓங்கி ஒலித்தது. கம்பீரமான குரலில் மந்திரங்களைச் சொல்ல ஆரம்பித்தார்.

“ஓ, சர்வ வல்லமை படைத்த கடவுளே, வலிமை மிக்க வருண தேவா!
விண்ணிலும் மண்ணிலும் சதா சர்வ நேரமும் உலா வந்து விண்ணையும் மண்ணையும் ஆட்சி புரியும் கடவுளே
எல்லையற்ற இந்தப் பிரபஞ்சத்தின் தேவனே!
ஓ, கடவுளே, பராசர முனிவரின் புத்திரனும், மஹா வசிஷ்டரின் கொள்ளுப் பேரனும் ஆன த்வைபாயனன் ஆகிய நான் உங்களிடம் பிரார்த்திக்கிறேன்.
என் பிரார்த்தனைகளைச் செவி மடுத்து நிறைவேற்றுங்கள்.
ஓ, சர்வ வல்லமை படைத்த கடவுளே,
இங்கே நேர்மையற்றும் நியாயமற்றும் நடப்பவர்களைப் பொறி வைத்துப் பிடிப்பாயாக!
அவர்கள் உன்னுடைய கோபத்திலிருந்து விலகாமல் பார்த்துக் கொள்!
ஓ, கடவுளே, மனிதர்களை நன்கு கவனித்துச் செயலாற்றுபவனே!
இந்த மாபெரும் அண்டத்தின் ஒழுங்குமுறையைக் குலைப்பவரை, அதன் புனிதத்தைக் கெடுப்பவரை இதன் பிரதானமான ஒழுங்கைக்குலைப்பவரைத் தண்டிப்பவனே!
இந்த ஒழுங்குமுறையில் தான் மனிதகுல வாழ்க்கையே இருக்கிறது. இந்தப் பிரபஞ்சமும் இயங்குகிறது.
இதோ இவனுடைய கெட்ட எண்ணங்களும் கெடுதலான செயல்களாலும் நெருப்பிலிட்ட தழும்புகளைப் போல் காண்கிறோம்.
ஓ கடவுளே, விண்ணிலிருந்து இந்த பூமியைக் கண்காணித்து ஆட்சி புரியும் வருண தேவா
உன்னுடைய ஆற்றல் ஓர் நெருப்பைப் போல் இவனைச் சூழ்ந்து கொள்ளட்டும்
நேர்மையையும் நீதியையும் உண்மையையும் இவன் அவமதிக்கிறான்!
இவனை நெருப்புச் சூழட்டும்!”

அப்போது திடீரென மோசாவின் இளைய சகோதரன் ஓடோடி வந்தான். “அண்ணாரே, அண்ணாரே, அவள் மறைந்துவிட்டாள்!” என்ற வண்ணம் மேலே பேச முடியாமல் மேல் மூச்சு வாங்க நிற்க முடியாமல் நின்றான். அவனால் தொடர்ந்து பேச முடியவில்லை. மோசா அவனைப் பார்த்து, “யார்? யார் மறைந்துவிட்டார்கள்?” என்று வினவினான். “உன்னுடைய முதல் மனைவி!” என்றான் அவன். அங்கிருந்த வயது முதிர்ந்த பழங்குடித் தலைவர்களுக்குப் பயம் கலந்த ஆச்சரியம் ஏற்பட்டது. அனைவரும் த்வைபாயனரையே பார்த்தார்கள். மோசாவுக்கு நிலை கொள்ளவில்லை. என்ன செய்வதென்று தெரியாமல் தன் கைகளில் இருந்த தண்டாயுதம் போன்ற எருமைத் தொடை எலும்பு ஆயுதத்தைத் தூக்கிக் கொண்டு த்வைபாயனர் மேல் பாய்வதற்குப் பார்த்தான். ஆனால் ஷார்மியின் தந்தை அவனை இறுகப் பிடித்துக் கொண்டு விடவே இல்லை. மோசா தன்னை உலுக்கி விடுவித்துக் கொண்டான். தன் கையிலிருந்த ஆயுதத்தைத் தரையில் வீசி விட்டு அங்கிருந்து உயிருக்குத் தப்பி ஓடுபவன்போல் ஓடிப் போனான்.

Monday, September 5, 2016

சுகரும் மற்றவர்களும் தப்பிக்கின்றனர்!

“இல்லை, அம்மா! நீங்கள் வாழவேண்டும். வாழ்ந்தே ஆகவேண்டும். உங்களுக்காக இல்லை. இங்குள்ள அநேகப் பெண்களுக்காகவும், அவர்களின் நலனுக்காகவும், எங்களுடைய நலனுக்காகவும் நீங்கள் வாழ்ந்தே ஆகவேண்டும், தாயே! இப்போது நீங்கள் உடனே சென்று எத்தனை பெண்கள் தப்பிக்க விரும்புகின்றனரோ அனைவரையும் அழைத்துக் கொண்டு வாருங்கள். இந்தப்  பிள்ளைகளுடன் தப்பிச் செல்லுங்கள். கோதுலி ஆசிரமத்தை அடையுங்கள்.”என்றார் முனிவர். “கிருஷ்ணா, நீ என்ன சொல்கிறாயோ அப்படியே நாங்கள் செய்கிறோம். ஆனால் கிருஷ்ணா, என் உயிர் போவது எனில் அது எங்கள் ஆசிரமத்தில் தான் போகவேண்டும்.” என்ற ஷார்மி, “இதோ, இந்த உணவை எடுத்துக் கொள்ளுங்கள். இளைஞர்களே, நீங்களும் உணவு உண்ணுங்கள். நான் போய் அந்தப் பெண்களிடம் பேசிப் பார்க்கிறேன்.” என்ற ஷார்மி அவர்களிடம் பழங்கள், கொட்டைகள் அடங்கிய கூடையைக் கொடுத்தாள்.

“விரைவில் உங்கள் சிநேகிதிகள் அனைவரையும் அழைத்து வாருங்கள் தாயே! எவ்வளவு விரைவில் முடியுமோ, அவ்வளவு விரைவில்!” என்றார் த்வைபாயனர். “விரைவில் திரும்பி வருகிறேன்.” என்ற ஷார்மி அங்கிருந்து இருட்டுக்குள் சென்று மறைந்தாள். “தந்தையே, இது என்ன? நீங்கள் எங்களுடன் வரவில்லையா?” என்று சுகர் கேட்டார்.  “இல்லை, மகனே, நான் இப்போது உங்களுடன் வரவில்லை! எனக்கு என்னமோ கடவுள் ஏதோ ஓர் காரணத்துக்காகவே இவற்றை எல்லாம் நடத்தி வைக்கிறார் என்று தோன்றுகிறது. இல்லை எனில் நான் இங்கே ஏன் வந்திருக்கவேண்டும்? அவர்கள் தான் என்னை ஏன் இங்கே கொண்டு வந்து சேர்க்கவேண்டும்? நீங்கள் அனைவரும் முதலில் செல்வதே சரியாக இருக்கும்.” என்றார் த்வைபாயனர். பின்னர் தன் மகனைப் பார்த்து மேலும், “உன் தாய் மிகுந்த மன வருத்தத்தில் ஆழ்ந்திருக்கிறாள் மகனே! நீ ஹஸ்தினாபுரம் வந்து உனக்கென ஓர் இல்லற வாழ்க்கையைத் தேடிக் கொள்ளவில்லை என்று அவளுக்கு மிகவும் வருத்தம். அவள் சௌனகரின் மகளை உனக்கேற்ற மணமகளாகத் தேர்ந்தெடுத்திருக்கிறாள்.” என்று சொன்னார்.

“தந்தையே! நான் வாழ்நாள் முழுவதும் பிரமசாரியாகவே இருக்க விரும்புகிறேன். அல்லது சந்நியாசியாக ஆகி இவ்வுலகைத் துறந்து வாழ விரும்புகிறேன்.” என்றார் சுகர். “மகனே, இப்போது இந்த நிலைமையில் நாம் இவற்றைக் குறித்து நினைக்கவோ பேசவோ வேண்டாம்.” என்ற சுகர் மகனின் முதுகில் தட்டிக் கொடுத்து ஆசுவாசப்படுத்தினார். “இப்போது முதலில் நீ செய்யவேண்டியது எல்லாம் அரசப் படகை எவ்வளவு விரைவில் சென்றடைய முடியுமோ அவ்வளவு விரைவில் சென்று அடைந்து விடு. அதற்கு முன்னர் ஷார்மி அன்னை கொண்டு வந்த உணவை நீங்கள் உண்ணுங்கள்!” என்றார் த்வைபாயனர். இளைஞர்கள் அனைவரும் அந்தப் பழங்களையும், கொட்டைகளையும் உண்ண த்வைபாயனர் ஏதும் உண்ணாமல் தீவிர சிந்தனையில் இருந்தார். அவர்கள் அனைவரும் நெஞ்சம் பதைக்க ஷார்மியின் குரலில் மயில் கத்துவது போல் வரும் சப்தத்துக்காகக் காத்திருந்தனர். நேரம் சென்றது. நடுஇரவில் மயில் அகவும் சப்தம் கேட்டது.

உடனே த்வைபாயனர், “குரு பத்தினி வந்துவிட்டார். மக்களே எழுந்திருங்கள். நான் இந்த மூங்கிலால் இந்த முட்புதர்களைக் கொஞ்சம் அகற்றி வழி உண்டாக்குகிறேன். நீங்கள் அனைவரும் ஒவ்வொருவராக எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவில் தவழ்ந்தவாறே இங்கிருந்து தப்பிச் செல்ல வேண்டும்.” அதற்குள் ஷார்மி வர அவளுடன் பதினோரு பெண்கள் இருந்தனர். ஷார்மியைப் பார்த்து த்வைபாயனர், “இந்தப் பதினோரு பெண்களும் உங்களுடன் வரச் சம்மதிக்கின்றனரா தாயே?” என்று வினவினார். “ஆம், இன்னும் இரண்டு மூன்று பேரும் வருகின்றனர். அனைவருமே ஆசிரம வாழ்க்கையில் மிகவும் மகிழ்ச்சியோடு இருந்து வந்தனர். ஆகவே இங்கிருந்து தப்பிச் செல்வதில் அனைவருக்கும் சம்மதமே!” என்ற ஷார்மி, “கிருஷ்ணா, நீ வரப் போவதில்லையா?” என்று த்வைபாயனரைப் பார்த்து வினவினாள். “இல்லை, தாயே, நான் வரப்போவதில்லை!” என்றார் த்வைபாயனர். “ஆஹா, மோசா உன்னைக் கொன்றே விடுவான்!” என்றாள் ஷார்மி பயத்துடன்.

“தாயே, மோசாவால் நான் கொல்லப்படவேண்டுமென்பது கடவுளின் விருப்பம் எனில் அதற்கு மாறாக என்னால் என்ன செய்ய முடியும்? இப்போது இதை எல்லாம் பேசிக்கொண்டு நாம் நேரத்தை வீணாக்கவேண்டாம், தாயே! அந்தக் காவலர்கள் எங்காவது திடீரென வந்து விடப் போகிறார்கள். இங்கே ஏதோ வித்தியாசமாக நடப்பதை உணர்ந்துவிடப் போகின்றனர்!” என்றார் த்வைபாயனர் ஓர் புன்சிரிப்புடன்.  அதற்கு ஷார்மி சிரித்த வண்ணம், “காவலர்கள் எல்லோரும் நன்கு உறங்குகின்றனர். அனைவரும் மதுவை தாராளமாகக் குடித்திருக்கின்றனர். எப்படியானாலும் அவர்கள் கைகள் அவர்களுடைய கண்களைத் தானாகவே மூடிக்கொள்ளச் செய்யும். நாமெல்லாம் இங்கிருந்து சென்ற பின்னரே அவர்கள் விழித்துக் கொள்ளலாம்.” என்றாள் ஷார்மி.

த்வைபாயனர் அதற்கு, “தாயே, நீங்கள் நன்றாகவே திட்டமிட்டிருக்கிறீர்கள். உங்களுக்குத் தலை நரைத்துவிட்டாலும் புத்தி நன்றாகவே வேலை செய்திருக்கிறது.” என்று பாராட்டிய த்வைபாயனர் மேலும் அவளிடம், “இந்த இருட்டில் காட்டில் வழி கண்டுபிடித்துச் செல்ல உங்களால் முடியுமா?” என்று கேட்டார். “ஓ, அதற்குக் கவலைப்படவே வேண்டாம். என் சகோதரர்களில் ஒருவன் இந்தக் கிராமத்தை விட்டுச் செல்லும் புறவழியில் எங்களுக்கு வழி காட்டுவதற்காகக் காத்திருக்கிறான்.” என்றாள் ஷார்மி. “சரி, அம்மா, என்ன நடந்தாலும் சரி, நாளை சூரியோதயத்துக்குள்ளாக நீங்கள் அனைவரும் அரசப் படகைச் சென்றடைந்துவிட வேண்டும்.” என்றவர் சுகர் பக்கம் திரும்பினார்.”மகனே! உன் தாய் உனக்காக ஹஸ்தினாபுரத்தில் காத்திருக்கிறாள். அவளிடம்போய்ச் சொல்லு. பராசர கோத்திரத்தைச் சேர்ந்த இந்தப் பெண்களை எல்லாம் நான் ஸ்வீகாரம் செய்து கொண்டிருக்கிறேன் என்று சொல்வாய்! இங்குள்ள பெண்களில் திருமணம் ஆகாதவர்களுக்காக குரு பத்தினி ஷார்மி அம்மையாரால் தக்க மணாளன்கள் தேடித் தரப்படும்.” என்றார். சுகரும் மற்ற இளைஞர்களும் த்வைபாயனரில் கால்களில் விழுந்து வணங்கினார்கள். “தந்தையே, உங்களை இங்கே இந்தக் காட்டுமிராண்டிகளின் கூட்டத்தில் தன்னந்தனியே விட்டுச் செல்வதை நினைத்தால் என் மனம் சுக்கு நூறாக உடைந்து விடும் போல் இருக்கிறது!” என்று நாத் தழுதழுக்கக் கூறினார் சுகர்.

“இல்லை, மகனே இல்லை! வேத  பாராயணங்கள் சரிவர நடக்கவேண்டும். வேதங்கள் பாதுகாக்கப்பட வேண்டும். நானோ வயதானவன். நீ இளைஞன், வாழ வேண்டியவன். என்னை விட மிகவும் அழகாகவும் திறமையாகவும் உன்னால் இந்த வேலையைச் செய்ய முடியும். ஆனால் ஒரு விஷயத்தை நினைவில் கொள்வாய். எந்த மனிதனும் தன் தாயை வருந்த வைத்துவிட்டு அவன் சந்தோஷமாக இருக்க முடியாது!” என்ற வண்ணம் தன்மகனின் தோளில் தட்டிக் கொடுத்தார் த்வைபாயனர். அனைவரும் அங்கிருந்து அகன்றனர். த்வைபாயனர் கடவுளரிடம் அவர்கள் அனைவரின் பாதுகாப்புக்கும் தொந்திரவு இல்லாமல் அரசப் படகை அவர்கள் அடையவேண்டும் என்பதற்காகவும் பிரார்த்தனைகள் செய்தார். இம்மாதிரி அதிர்ஷ்டவசமாகவும் தெய்வாதீனமாகவும் தப்ப முடியும் என்பதையே எண்ணிப்பார்க்காத அந்தப் பெண்களில் கால்களில் இப்போது இறக்கைகள் முளைத்திருந்தன. அனைவரும் வேகமாய் ஓடினார்கள். கிராமத்தின் வெளிப்புறப்பகுதியை அவர்கள் அடைந்த்தும் அங்கே ஷார்மியின் சகோதரன் காத்திருந்ததைப் பார்த்தார்கள். அனைவரும் ஒருவர் கையை மற்றொருவர் பிடித்துக் கொண்டு ஓர் மனிதச் சங்கிலியை உருவாக்கினார்கள். ஒருவருக்குத் தெரியாமல் மற்றவர் தப்ப முடியாது. விலகியும் செல்ல முடியாது. இருட்டுக்கருமையாக அப்பி இருந்தது. எனினும் வழி கண்டுபிடிக்க அவர்களுக்குக் கஷ்டமாக இல்லை.

விடிந்தது. அந்தக் காட்டுவாசிகளின் குடியிருப்புக்களில் ஓர் எரிமலையே வெடித்தது. அனைவரும் சத்தமாகப் பேசிக்கொண்டும், கோபமாகக் கத்திக் கொண்டும், வேகமாக ஓடிக் கொண்டும் காட்சி அளித்தனர். ஆச்சரியத்திலும், அதிர்ச்சியிலும் மக்கள் வேகமாகவும் கோபமாகவும் பேசும் குரல்கள் தொனித்தன.  ஆபத்துக் கால பேரிகைகளும், எக்காளங்களும் ஊதப்பட்டன. அனைவருக்கும் ஏதோ ஆபத்து நேர்ந்திருப்பது தெரிய வந்தது. வெகு விரைவில் அங்கே சிறைச்சாலைக்கு அருகே கூட்டமாகக் கூடிய மக்கள் பேசிக் கொண்டிருந்தது குழப்பமான தொனியில் கேட்டது. சிறைச்சாலைக்குள் செல்லும் வழியில் காணப்பட்ட முட்புதர்கள் அகற்றப்பட்டன. செக்கச் சிவந்த கண்களுடன் இறந்த ஓர் எருமையின் தொடை எலும்பை தண்டாயுதத்தைப் போல் கைகளில் ஏந்திக்கொண்டு உள்ளே நுழைந்தான் மோசா. தன்னுடைய இரு முக்கியத் தளபதிகளுடன் அந்தச் சிறைச்சாலையின் எல்லாப் பகுதிகளிலும் சுற்றிச் சுற்றி வந்து பார்த்தும் இளைஞர்கள் எங்கும் இருப்பதற்கான அடையாளங்களே தென்படவில்லை. உடனே தரையில் அமர்ந்து மௌனமாக அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்த த்வைபாயனரிடம் போனான். அவரைத் தாக்கக் கையை ஓங்கினான். ஆனால் த்வைபாயனர் சாவகாசமாகத் தன் கைகளால் அவனைப் பேசாமல் இருக்கும்படி ஜாடை காட்டிவிட்டு அவனைப் பார்த்து, “அது சரி அப்பா! நீ ஏன் இவ்வளவு கோபமாக இருக்கிறாய்?” என்று வினவினார்.

மோசா கோபத்துடன் அவரைப் பார்த்து, “மற்றவர்கள் எல்லாம் எங்கே காணவில்லை?” என்று கேட்டான். தன் கண்களில் விசித்திரமாகத் தெரிந்ததொரு ஒளியுடன் த்வைபாயனர் அவனைப் பார்த்து, “அதை நீ உன் காவலர்களிடம் அல்லவோ கேட்கவேண்டும்?” என்றார். மோசா காவலர்களைப் பார்த்துத் திரும்பினான். அவர்கள் ஏற்கெனவே பயத்தில் நடுங்கிக் கொண்டிருந்தனர். இப்போது இன்னும் அதிக பயத்தில் முழங்கால்களிட்டுக் கீழே அமர்ந்து மோசாவைத் தலை குனிந்து வணங்கினார்கள். “தலைவா, தலைவா!” என்ற வண்ணம் கைகளைக் கூப்பி அவர்கள் உயிருக்காக இறைஞ்சினார்கள். மோசா தன் கையிலிருந்த ஆயுதத்தால் அவர்களில் ஒருவனைத் தாக்கிக் கொண்டே, “எங்கே மற்றவர்கள் எல்லாம்? எங்கே போய்விட்டனர்?” என்றும் கேட்டான்.

“அவர்கள் இங்கே தான் இருந்தார்கள். இங்கே தான் இருக்கவேண்டும். நேற்றிரவு முழுக்க நாங்கள் விழித்துக் கொண்டு தான் காவல் காத்தோம். நாங்கள் இந்தக் கதவை மூடும்போது கூட அவர்கள் இங்கே தான் அமர்ந்திருந்தார்கள்.” என்றனர் நடுங்கிக் கொண்டே. அப்போது தான் மோசா நேற்றிரவு முனிவருக்காக அளிக்கப்பட்ட உணவு அவர் சாப்பிடாமல் அங்கேயே கிடந்த்தைக் கவனித்தான். “ஏ, முனிவா, நீ ஏன் நேற்றிரவு உணவு உண்ணவே இல்லை!” என்று கூச்சல் போட்டான்.

Sunday, September 4, 2016

ஷார்மிக்கு ஏற்பட்ட கொடூரம்!

த்வைபாயனரை அடையாளம் கண்டு கொண்ட மற்ற இளைஞர்களும் ஓடோடி வந்து அவர் கால்களில் விழுந்து ஆசிகளைப் பெற்றனர். அப்போது இருட்ட ஆரம்பித்து விட்டது. என்றாலும் த்வைபாயனர் மனதில் மகிழ்வுடனேயே சுகரைத் தொட்டுத் தொட்டுப் பார்த்தார். அவர் உயரமாகவும், நல்ல கட்டுமஸ்தான உடலுடனும் இருப்பதைக் கண்டு மனதினுள் மகிழ்ந்தார். பின்னர் சுகர் தந்தையைப் பார்த்து, “நீங்கள் எப்படி இங்கே வந்து சேர்ந்தீர்கள் தந்தையே!!” என்று கேட்டார். “உன்னைக் காணவேண்டும் என்றும் ஹஸ்தினாபுரத்துக்கு உன்னை அழைத்துச் செல்ல வேண்டும் என்றும் நினைத்துக் கொண்டு கோதுலிக்கு வந்தேன்!” என்ற த்வைபாயனர் மகனைப் பார்த்து, “ஆனால் மகனே, நீ எவ்வாறு இங்கே வந்து சேர்ந்தாய்? ஏன் இங்கே இருக்கிறாய்? அதுதான் அனைத்தையும் விட மிக முக்கியமானது!” என்றார்.

“தந்தையே, மோசாவுக்குத் தன் தந்தையைப் பிடிக்காது என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். அந்தத் தலைவன் இருந்தபோது மோசாவுடைய நடமாட்டங்களையும் மற்ற அக்கிரமங்களையும் ஓர் கட்டுக்குள் வைத்திருந்தான். இங்கே தலைமையகத்துக்குக் கூட அவனுக்கு வர அனுமதி கொடுத்ததில்லை. ஆனால் திடீரென பழைய தலைவன் இறந்து அவன் இடத்தில் மோசா அமர்த்தப்பட்டதும், அவன் உடனேயே ஆசிரமங்களுக்குச் செய்தியை அனுப்பினான். நம் ஆசாரியர் கௌதமரிடம் அனைத்து ஆசிரமப் பெண்களையும் தன்னிடம் சரண் அடையச் செய்ய வேண்டும் என்றும் முக்கியமாக அவர்களில் ஷார்மியும் இருக்க வேண்டும் என்றும் கட்டாயப்படுத்தினான். ஆனால் நம் மதிப்புக்குரிய ஆசாரியர் அதைச் செய்ய மறுத்துவிட்டார்.” என்றார் சுகர். “அப்படியா? இப்போது மோசாவுக்கு என்ன மனக்குறை இருக்கிறதாம்? அனைத்துக் காட்டுவாசிப் பெண்களும் அவரவர் பெற்றோரின் சம்மதத்தோடு தான் ஆசிரமத்து ஆண்களை மணந்து கொண்டிருக்கின்றனர். இதில் எந்த சந்தேகமும் இல்லை. இதற்குப் பழைய தலைவன் போப்பாவின் சம்மதமும் கிடைத்திருக்கிறது!” என்றார் த்வைபாயனர். “அதோடு இல்லை. அவர்களுக்குத் திருமணம் முடிந்து பல வருடங்கள் ஆகிவிட்டன என்பதோடு அனைவரும் குழந்தைகளையும் பெற்றெடுத்திருக்கின்றனர். முழுக்க முழுக்க ஆரிய சம்பிரதாயங்களையும் சடங்குகளையும் கடைப்பிடிக்கத் தொடங்கி விட்டனர். இனி என்ன? அவர்களை ஏன் பிரிக்க வேண்டும்? அடுத்து என்ன நடக்கப் போகிறதோ, தெரியவில்லை!” என்றார் த்வைபாயனர் தொடர்ந்து.

சுகர் மேலும் தொடர்ந்தார். “மறுநாள் மோசா நூற்றுக்கணக்கான காட்டுவாசிகளுடன் வந்து ஆசிரமத்தைச் சூழ்ந்து கொண்டான். ஆசிரமக் குடில்களுக்கு எரியூட்டினான். நம் மதிப்புக்குரிய ஆசாரியர் கௌதமரைக் கொன்றான்.அவருடைய குழந்தைகளையும் கூடக் கொன்று விட்டான். குரு பத்தினி ஷார்மியும் அவருடன் இங்கே வந்து வாழ்க்கை நடத்திய அனைத்துக் காட்டுவாசிப் பெண்களும் சிறைப்பிடிக்கப்பட்டு  சாட்டையால் அடிக்கப்பட்டு இங்கே காட்டுவாசிகளின் தலைமையகத்திற்குக் கொண்டு வரப்பட்டனர். மிருகங்களைப்போல் அவர்களை நடத்தினான். ஒருசில ஆசிரமப் பெண்களும், ஆண்களும் எப்படியோ தப்பி ஓடி விட்டனர். அவர்கள் சாம்பல் பிரதேசத்துக்குச் சென்றிருப்பதாகக் கேள்விப் பட்டேன். ஆசிரமம் முழுதும் எரிந்து சாம்பலான பின்னரும் அவர்களின் கொடூரம் நிற்கவில்லை. ஒரு சில ஸ்ரோத்திரியர்களைப் பிடித்துக் கொன்று விருந்து சமைத்துச் சாப்பிட்டார்கள். ஆனால் எங்களை ஏன் விட்டுவிட்டான் என்பது தான் புரியவில்லை. ஒருவேளை இன்றிரவு நடக்கப் போகும் பெரிய விருந்தில் புத்தம்புதிய இளைஞர்களான எங்கள் மாமிசத்தை விருந்தாகப் படைக்கப் போகிறானோ என்னவோ! தெரியவில்லை!” என்றார் சுகர்.

சூரியன் மறைந்து கொண்டிருந்தான். அதைச் சுட்டிக்காட்டிய த்வைபாயனர், “நமக்கு மாலை நேர அனுஷ்டானங்களைச் செய்யும் நேரம் வந்து விட்டது. ஆனால் இங்கே குளிக்க வசதி இல்லை! குளிக்காமல் எப்படி அனுஷ்டானங்களைச் செய்வது? ஆகவே மௌனமாகக் கடவுளை வேண்டிக் கொள்வோம். நம்மை எதிர்நோக்கி இருக்கும் பிரச்னைகளை நாம் தைரியமாக எதிர்கொள்ள வேண்டிய தைரியத்தைக் கடவுள் நமக்கு அளிக்கும்படி வேண்டுவோம்.” என்றார். ஐந்து பிரமசாரிகளும் த்வைபாயனருடன் சேர்ந்து மௌனமாக தியானத்தில் ஆழ்ந்தனர்.  அப்போது அங்கே இருந்த மௌனம் திடீரெனக் கேட்ட பேரிகை முழக்கங்களிலும் கொம்புகள் ஊதும் சப்தத்திலும் கலைந்தது. எங்கும் வெற்றி முழக்கம் கேட்டது. காட்டுவாசிகள் அனைவரும் அவர்களுடைய சமுதாயக் கூடத்தில் கூடினார்கள். சிறிது நேரத்தில் அங்கிருந்து கேட்ட சீரான சப்தத்தில் இருந்து அனைவரும் வாத்தியங்கள் முழங்க நடனம் ஆடத் தொடங்கி விட்டார்கள் என்பது தெரிந்தது.

அது நிலவில்லாத கருமையான இரவாக இருந்தது. காட்டுவாசிகளின் நடனம் முழு வீச்சில் நடைபெற்றுக் கொண்டிருக்கையில் எங்கிருந்தோ ஓர் மயில் அகவும் சப்தம் கேட்டது. அப்போது சுகர் த்வைபாயனரிடம், “தந்தையே, இது குருபத்தினி ஷார்மி அவர்களின் குரல்!” என்றார்.
“என்ன?” என்று ஆச்சரியத்துடன் கேட்டார் த்வைபாயனர். “ நமக்கு அளிக்கப்படும் உணவு மனித மாமிசமாகவோ அல்லது பசுவின் மாமிசமாகவோ இருக்கக் கூடும். நாம் இரண்டையும் உண்ண மாட்டோம். ஆகவே நாங்கள் உணவே இல்லாமல் இங்கே இருந்து வருகிறோம். நேற்றிரவு நடு இரவு இருக்கும். குரு பத்தினி ஷார்மியும் அவருடன் மற்ற ஆசிரமப்பெண்களும் சேர்ந்து கொண்டு இங்கே உள்ள ஓர் புதருக்கருகே இருக்கும் இடைவெளியின் மூலம் எங்களுக்கு உணவளித்தார்கள். அவர்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் உறவென்பதால் விஷயம் வெளியே கசியவில்லை. ஆகவே இப்போதும் குருபத்தினி அதே காரணத்துக்காக இங்கே வந்திருக்க வேண்டும்.” என்றார் சுகர்.

அவர்கள் அனைவரும் அந்த வேலியின் மறுபக்கத்து வாயிலுக்கருகே சென்றனர். ஷார்மி அங்கிருந்து உணவைச் சிறிய இடைவெளியின் மூலம் இங்கே உள்ள இளைஞர்களிடம் அளித்தாள். சுகர் ஷார்மியிடம், “அன்னையே, என் தந்தை இங்கே வந்திருக்கிறார்!” என்றார். த்வைபாயனரும் ,”அன்னையே, எனக்கு உங்கள் ஆசிகள் தேவை!” என்றார். ஷார்மி, “கிருஷ்ணா, என் மகனே! நீ எப்படி இங்கே வந்து சேர்ந்தாய்?” என்று வினவினாள். அவள் நினைவில் தாய் இல்லாமல் கோதுலிக்கு வந்து சேர்ந்த சின்னஞ்சிறிய கிருஷ்ணனே இன்னமும் நினைவில் இருந்தான். அவளால் வளர்க்கப்பட்டான். பனிரண்டு ஆண்டுகள் அவள் அவனை வளர்த்தாள். த்வைபாயனரைப் பார்த்து ஒரு கணம் தன்னை மறந்து பழைய நினைவில் மூழ்கி இருந்த ஷார்மிக்குத் திடீரென அவள் இழப்பு நினைவுக்கு வந்து மனம் பதறியது. “கிருஷ்ணா, கிருஷ்ணா, என்ன நடந்தது என்பது தெரியுமா? உன் மதிப்புக்குரிய குருவும் எங்கள் குழந்தைகளும் என் கண்ணெதிரேயே கொல்லப்பட்டனர். எனக்குக் கஷ்டகாலம் மட்டுமல்ல தீய காலமும் ஆரம்பம் ஆகி இருக்கிறது! இனி நான் என்ன செய்வேன்!” என்று தழுதழுத்த குரலில் கூறினாள்.

“அழாதீர்கள், தாயே! பழைய விஷயங்களை நினைக்காதீர்கள். இப்போது அவற்றை நினைக்கும் நேரம் அல்ல. கடவுள் அருளால் உங்கள் கிருஷ்ணன் ஆகிய நான் உங்களைச் சந்திக்க இங்கே வந்துள்ளேன்!” என்று கருணையுடனும் அளவற்ற பாசத்துடனும் கூறினார் த்வைபாயனர். “கேளுங்கள் தாயே! க்ரிவியின் படகு எனக்காக யமுனைக்கரையில் காத்துக் கொண்டிருக்கிறது. அரசரின் படகு சாம்பல் பிரதேசத்துக்கு அருகே உள்ளது. மந்திரி குனிகர் அதன் பொறுப்பில் இருக்கிறார். நாம் இந்த இடைவெளியைச் சிறிதே பெரிதாக்கி முதலில் இந்த இளைஞர்களை வெளியே அனுப்ப வழி செய்வோம். உங்களில் எத்தனை பெண்கள் நான் சொல்லும் இந்த வழியைக் கடைப்பிடித்துத் தப்பத் தயாராக இருக்கிறீர்கள்?” என்று கேட்டார் த்வைபாயனர்.

“இங்கே இருக்கும் நாங்கள் மட்டுமில்லாமல், இன்னும் சிலரும் காத்திருக்கின்றனர்.” என்றாள் ஷார்மி. “இங்கே மோசாவால் அவர்கள் வாழ்க்கை நரகமாகத் தான் இருக்கப் போகிறது. அவன் இந்தப் பெண்களின் மூக்கையும், மார்பகங்களையும் வெட்டப் போகிறான். இளம்பெண்கள் இங்குள்ள காட்டுவாசிகளிலேயே முரடர்கள் கைகளில் சிக்கிக் கொண்டு திண்டாடப் போகின்றனர். ஆனால் நாங்கள் அனைவரும் புனிதமான அக்னிக்கு வாக்குறுதி கொடுத்திருக்கிறோமே! எங்களை மணந்து கொண்டு எங்களுக்கு நல்வாழ்க்கையைக் காட்டித் தந்த ஸ்ரோத்திரியர்களுக்கு உண்மையாகவும், விசுவாசத்துடனும் நடப்பதாகச் சத்தியம் செய்திருக்கிறோமே! அதுவும் அக்னிக்கு முன்னால்! எங்களால் எப்படி இன்னொருவனுடன் இனி வாழ்க்கை நடத்த முடியும்? என்னைத் துண்டு துண்டாக வெட்டப்போகிறான் மோசா என்றும் கேள்விப் பட்டேன். செய்யட்டும். என் அருமைப் பிரபு ஆசாரிய கௌதமரும் போய்விட்டார். என் கண்ணின் கருமணிகளான குழந்தைகளும் போய்விட்டனர். இனி நான் இருந்து என்ன செய்வது? நான் வாழ்வதில் அர்த்தமே இல்லை!” என்றாள் ஷார்மி துக்கத்துடன்.


Saturday, September 3, 2016

தந்தையும் மகனும்!

மோசா த்வைபாயனரை முறைத்துப் பார்த்தான். “என்ன! என்னை நீ அசுத்தமானவன் என்றும் புனிதமற்றவன் என்றுமா சொல்கிறாய்? ஏ, முனிவா! ஜாக்கிரதை! யாரைப் பார்த்து என்ன வார்த்தை சொல்கிறாய்? நான் யாரென நினைத்தாய்? தெய்விக மஹிஷத்தின் பரம்பரையில் பிறந்து வந்து தலைவனாகி இருக்கும் என்னைப் பார்த்தா நீ புனிதமற்றவன் என்கிறாய்? நான் பாவப்பட்டவன் என்கிறாய்? இரு, இரு, உன் கழுத்தை வெட்டுகிறேன். நீ தலைவேறு, முண்டம் வேறாக ஆகப் போகிறாய்!” என்று கூச்சலிட்டான்.

த்வைபாயனர் அதைக் கேட்டு ஏதோ நகைச்சுவையைக் கேட்டது போல் கலகலவெனச் சிரித்தார். “எதைக் கண்டு நீ இப்படிச் சிரிக்கிறாய்?” என்று கத்தினான் மோசா. “நீ சொல்வதைக் கேட்டுத் தான். உன்னுடைய தவறான முட்டாள் தனமான எண்ணங்களைக் கண்டு தான். நீ ஆசாரியரை உயிருடன் எரித்துக் கொன்றிருக்கிறாய். அவர் வாயிலிருந்து வேதங்கள் வரும். ஆனால் இப்போது? எப்படி வரும்?” என்று கேட்டார் த்வைபாயனர்.

“அதுதான் உன்னை உயிருடன் விட்டிருக்கிறேன். நீ உயிருடன் தானே இருக்கிறாய்? நீ சொல் வேதங்களை! உன் வாயிலிருந்து அவை வரட்டும். அதோடு என் மாமா க்ருபா சொல்கிறார். நீ வேதங்கள் ஓதுவதோடு அல்லாமல் பல அதிசயங்களையும் நிகழ்த்தி இருக்கிறாயாமே. உன்னுடைய ஆசிகளையும் மருத்துவத்தையும் பெற்றவர்கள் நன்றாக வாழ்கின்றனராமே! பல மக்களுக்கு நன்மையைச் செய்திருக்கிறாயாம்!” என்று கேட்டான் மோசா!

“நான் எதையும் என் முயற்சியால் செய்யவில்லை! இவற்றைச் செய்ய வைத்தது வேதங்களே! உன்னைப் போன்ற பாவப்பட்டவர்களின் முன்னால் ஓதப்படும் வேத மந்திரங்களால் எவ்வித பலனும் இருக்காது. மாறாகக் கடவுளரின் கோபமே வந்து சேரும்!”

“என்ன, மீண்டும் மீண்டும் என்னை பாவம் செய்பவன், பாபி என்றெல்லாம் சொல்கிறாய்?” மோசா கோபத்துடன் கத்தினான். அவன் கத்தியதால் எந்தவிதமான பாதிப்பும் இல்லாமல் அமைதியாகவே காணப்பட்டார் த்வைபாயனர். “பின்னர் நீ யாரென நினைத்துக் கொள்கிறாய்? உன்னை நீயே பெரிய தலைவனாக எண்ணுகிறாய்! அவ்வளவே! அதனால் நீ ஆசிரமத்தை முற்றிலும் எரித்திருக்கிறாய்! ஆசிரமத் தலைவரான மிகவும் உயர்ந்த தகுதி பெற்ற ஆசாரியரை எரித்துக் கொன்றிருக்கிறாய்! ஆசிரமப் பசுக்களை ஓட்டிச் சென்று விட்டாய். ஆசிரமத்துப் பெண்களை வலுக்கட்டாயமாக இங்கே இழுத்து வந்திருக்கிறாய்! அவர்கள் சம்மதம் பெறாமல் கூட்டி வந்திருக்கிறாய்! உன்னைப் பின்னர் எப்படிச் சொல்வது? அதோடு நீயே ஒத்துக் கொண்டாய்! என் குருநாதரும் ஆசாரியருமான கௌதமரின் மாமிசத்தை நீ தின்றதாக ஒத்துக் கொண்டிருக்கிறாய்! இதை விட வேறென்ன வேண்டும் நீ பாபி என்பதற்கு!”

மோசா த்வைபாயனரையே முறைத்துப் பார்த்துக் கொண்டு இருந்தான். சற்று நேரம் அவரையே பார்த்தான். அவனை நேருக்கு நேர் எவரும் இதுவரை இப்படிப் பேசியதில்லை. முதல்முறையாகத் தன் மேல் குற்றம் சுமத்தும் ஒருவரைக் காண்கிறான் மோசா. பற்களைக் கடித்துக் கொண்டு அவன்,”உன் குரல் வளையைப் பிடித்து நெரிக்கப் போகிறேன் இப்போது. உடனே எனக்கு வேதம் என்றால் என்ன, எப்படி இருக்கும் என்பதைக் காட்டிவிடு! இல்லையெனில்……..” என்ற வண்ணம் தன் கைவிரல்களை த்வைபாயனரின் குரல்வளையை நெரிக்கும்படியாக வைத்துக் கொண்டு அவரை நெருங்கினான். அவனைப் பார்த்தால் இரையைப் பிடிக்க வரும் கழுகைப் போல் இருந்தான். ஆனால் த்வைபாயனரோ அசைந்து கொடுக்கவே இல்லை.

“நீ ஒவ்வொரு முறை வாய் திறக்கும்போதெல்லாம் என்னை அப்படிக் கொல்வேன், இப்படிக் கொல்வேன் என்றெல்லாம் சொல்லிக் கொண்டே இருக்கிறாய் தான்! ஆனால் உன்னால் அதெல்லாம் செய்ய முடியாது,. உன்னுடைய இந்த பயமுறுத்தலுக்காக நான் பயந்து போய் அருமையான இனிமையான வேத கீதங்களை உன் முன் இசைப்பேன் என்று சிறிதும் எண்ணாதே!” என்றார்.

“அதையும் பார்க்கலாம். நீ உயிருடன் இருக்க வேண்டுமா வேண்டாமா என்பதை நாளைக்குள் நான் முடிவு செய்துவிடுவேன்.” என்றான் மோசா.  அவர்கள் இப்போது முட்புதர்களால் சூழப்பட்டதொரு இடத்தினருகே வந்திருந்தனர். கையில் ஈட்டிகளுடன் இரண்டு காட்டுவாசிகள் அங்கே காவலுக்கு இருந்தனர். மோசா தலையை ஆட்டிக் கைகளால் சைகை செய்ததும் அவர்கள் வழியிலிருந்து விலகி மரியாதையுடன் ஓரமாக நின்றனர். பின்னர் த்வைபாயனரைப் பார்த்து அவரை உள்ளே போகும்படி சொன்னார்கள். மோசாவின் கட்டளையின் பேரில் அவர்கள் அவ்வாறு சொல்கிறார்கள் என்பதை த்வைபாயனர் புரிந்து கொண்டார். ஆகவே அவர் மறுபேச்சில்லாமல் உள்ளே செல்ல, மோசா அவரைப் பார்த்து, “ நான் உன்னை நாளை சந்திப்பேன். நான் வேதம் என்ன என்றும் அதன் விளைவுகள் என்ன என்றும் அறிய விரும்புகிறேன். நீ விடாப்பிடியாக மறுத்தால், என்னிடம் வேதத்தைப் பங்கிட மாட்டாயெனில், உன் நாக்கை இழுத்து அறுத்துவிடுகிறேன்! அது தான் உனக்கு நான் அளிக்கப் போகும் தண்டனை! பிறகு எப்படி யாரிடம் வேதத்தைப் பற்றிக் கூறுவாய்?” என்றான் கோபமாக.

த்வைபாயனர் அவனைப் பார்த்து மீண்டும் சிரித்தார். அவர் அலட்டிக்கொள்ளவே இல்லை. “இதோ பார், தலைவனே! நீ என் கழுத்தை நெரித்துக் கொன்றாலும் சரி, அல்லது என் நாக்கை அறுத்தாலும் சரி! எனக்குக் கவலையே இல்லை. வேதத்தின் ஒரு சிறிய சப்தத்தைக் கூட உன்னால் கேட்க முடியாது. புனிதமான வேதம் புனிதமானவர்கள் கேட்பதற்கும் கற்பதற்கும் ஏற்பட்டது. உன்னைப் போன்ற பாபிகளுக்கு அல்ல! நீ புனிதமானவனாக மாறு அல்லது கடவுளரால் உனக்களிக்கப்படும் தண்டனையை ஏற்றுக் கொள்! உன் மோசமான துர் நடத்தைகளுக்குத் தக்க தண்டனை கிடைக்கும்!” என்றார். மோசா கோபத்தில் கொதித்தான். “ஏ, முனிவா, நீ இதையே இரண்டாம் முறையாக என்னிடம் சொல்கிறாய்! என்ன நினைத்துக் கொண்டாய் நீ? இன்னொரு முறை சொல்லிப் பார்! உன் நாக்கை இதோ இப்போதே இந்த நிமிஷமே அறுத்துவிட்டுத் தான் வேறு வேலையே பார்ப்பேன்!” என்றான்.

த்வைபாயனர் கண்களில் விசித்திரமானதொரு ஒளி தெரிந்தது. “ஆக நீ என்னை எப்படிக் கொல்வது என்று மனதுக்குள் யோசித்து முடிவு செய்து கொண்டிருக்கிறாய்! அல்லவா! அது சரி அப்பா! உன்னை எது தடுக்கிறது? என்னை இப்போதே இந்த நிமிடமே இந்த இடத்திலேயே ஏன் கொல்ல மாட்டேன் என்கிறாய்? உடனே அதைச் செய்! வா! நான் தயார்! நீ ஏன் தயங்குகிறாய்? உடனே வா! என்னைக் கொல்!”

மோசா அவரின் இந்தக் கேள்விகளால் திணறிப் போனான். “நான் உன்னை இப்போது கொல்லப் போவதில்லை. ஏன் தெரியுமா? நீ நான் உன்னைக் கொல்லவேண்டும் என்று விரும்புகிறாய்! உன் விருப்பத்துக்கு நான் அடி பணியப் போவதில்லை. எனக்கு உன்னை எப்போது கொல்ல வேண்டும் என்று தோன்றுகிறதோ அப்போது உன்னை நான் கொல்வேன். இது நிச்சயம்!” என்றான்.

“அப்படி எனில், தலைவா, உடனே என்னிடம் வா! அதாவது உனக்கு என்னைக் கொல்லவேண்டும் என்னும் உணர்வு எப்போது தோன்றினாலும் உடனே என்னிடம் வா!. ஒரு விஷயத்தை மறவாதே! நீ என்னைக் கொல்லலாம். ஒரு ஸ்ரோத்திரியனை, அதுவும் தபஸில் இருப்பவனை, கடுமையாக சுயக்கட்டுப்பாட்டுடன் இருப்பவனை, வேதங்களின் எழுச்சிக்காகத் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டிருப்பவனைக் கொல்வது சாதாரணப் பாபம் அல்ல! மஹா பாபம்! ஒருவன் செய்யக் கூடிய மிகப் பெரிய பாபம் அது. கடவுளர் எவரும் உன்னை எப்போதும் மன்னிக்கவே மாட்டார்கள். ஏனெனில் ஒரு ஸ்ரோத்திரியனின் வாயில் தான் வேதம் குடி கொண்டிருக்கிறது. அது எல்லையற்றது. எல்லையற்ற சக்தி படைத்ததும் கூட! அதோடு மட்டுமில்லை. ஒரு ஸ்ரோத்திரியனின் சாபத்தால் நீயும் உன் குடிமக்களும் அடியோடு அழிந்தும் போவீர்கள்!” என்றார் த்வைபாயனர்.

“மேலும் மேலும் உன் பேச்சால் என்னை எரிச்சல் அடைய வைக்காதே!” என்று கத்தினான் மோசா. “ஆகட்டும், இப்போது பெருவிருந்துக்கான நேரம் நெருங்கி விட்டது. நான் அதற்குத் தயாராக ஆக வேண்டும். உன்னை நான் நாளை சந்திப்பேன். இப்போது உள்ளே சென்று அங்குள்ள உன் மக்களில் சிலருடன் நட்புப் பாராட்டி மகிழ்ந்திரு!” என்றான் மோசா!  “நாளைக்குள்ளாகக் கடவுள் உனக்கு நல்ல புத்தியைக் கொடுக்கட்டும்!” என்று ஆசீர்வதித்தார் த்வைபாயனர். அந்த வேலியைக் கடந்து உள்ளே சென்றார். வேலியை மீண்டும் மூடினார்கள் காவல்காரர்கள். மோசா அவர்களுக்குக் கண்டிப்பான கட்டளை பிறப்பித்தான். “ இந்த மனிதன் மட்டும் தப்பிச் செல்ல முயன்றால் உடனடியாகக் கேள்வியே கேட்காமல் அவனைக் கொன்று விடுங்கள்!” என்றான்.

அப்போது மாலை நேரம் முடியும் நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது. த்வைபாயனர் அந்த வேலிகட்டிப் பாதுகாத்திருந்த பிரதேசத்தின் மற்றொரு பகுதியில் குத்த வைத்து அமர்ந்து கொண்டிருந்த ஐந்து இளைஞர்களையும் பார்த்தார். அவர்கள் அந்த வேலியின் கதவு மூடியதையும் சிறிது நேர இடைவெளியில் மீண்டும் மூடிக் கொண்டதையும் கவனித்திருந்தார்கள். காட்டுவாசிகள் எவரோ உள்ளே நுழைந்து தங்களைக் கொல்லப்போகிறார்கள் என்று நினைத்திருந்தார்கள். இப்போது த்வைபாயனரைப் பார்த்ததும் எழுந்து அவர் அருகே வந்தார்கள். அப்போது அந்த இளைஞர்களில் ஒருவன் திடீரென்று ஓட்டமாக ஓடி வந்தான். த்வைபாயனரின் பாதங்களில் விழுந்து வணங்கினான்! “தந்தையே! தந்தையே!” என்று புலம்பினான். “ஆஹா! என் மகன்!” என்று கூவிய த்வைபாயனர் கீழே குனிந்து சுகரை மேலே எழுப்பித் தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டு உச்சி முகர்ந்தார்.

Friday, September 2, 2016

மோசாவின் பிடியில் த்வைபாயனர்!

“என்ன, சந்தோஷமா? அந்தப் பெண்கள் அனைவரும் நச்சுக்கள். நஞ்சு நிறைந்த பெண்கள். எங்கள் காட்டுவாசிகளின் கிராமத்துக்குள் புகுந்து எங்கள் பெண்களிடம் யாருக்கும் அடங்காதவர்களாகவும் எங்கள் பழக்கவழக்கங்களை வெறுப்பவர்களாகவும் மாற்றி வந்தனர்.”

“அப்படியா? அப்படி எனில் அந்த அடங்காத பெண்களை நீ ஏன் இங்கே சிறைப்பிடித்து வைத்துள்ளாய்? அவர்களை என்னுடன் அனுப்பி விடு!” என்றார் த்வைபாயனர். “அதெல்லாம் முடியாது! அவர்கள் அதற்கான தண்டனையை அனுபவித்தே ஆகவேண்டும். கடுமையான தண்டனையை அனுபவிக்க வேண்டும். எத்தகையது எனில் இனி எந்தப் பெண்ணும் இப்படி இங்கே வந்து செயல்படும்படி நினைத்துக் கூடப் பார்க்கக் கூடாது. அத்தகைய கொடிய தண்டனையை அந்தப் பெண்களுக்குத் தர வேண்டும். இனி எந்தப் பெண்ணும் எங்கள் பழங்குடியினரின் சம்பிரதாயங்களிலிருந்தும், கட்டுப்பாடுகளிலிருந்தும் விலக முடியாதபடி தண்டனை கொடுக்கவேண்டும். சரி, சரி, மேலே பேச்சு எதற்கு? முனிவரே, நீ இங்கிருந்து உடனே சென்று விடு! இல்லை எனில்………” என்று நிறுத்தினான் மோசா.

அப்போது ஷார்மியின் தந்தையும் அந்தப் பழங்குடியினரிடையேயே மிகவும் மூத்தவரும் ஆன க்ருபா என்பவர் த்வைபாயனரைக் கண்டும் காணாதது போல், அடையாளமே அறியாதவர் போல் அங்கே மோசாவிடம் வந்தார். த்வைபாயனரை அவர் நன்கு அறிவார். எனினும் இப்போது அவர் பக்கமே பார்க்கவில்லை. மோசாவின் அருகே வந்து மோசாவின் காலடிகளில் வீழ்ந்து வணங்கினார். ஒரு தலைவனுக்கு உரிய மரியாதையைக் கொடுத்தவுடன், மோசாவுடன் ஏதோ ரகசியமாகப் பேசினார். பின்னர் கொஞ்சம் தள்ளி நின்று கொண்டார். மோசா த்வைபாயனரிடம் திரும்பினான். “என்னுடைய மதிப்புக்குரிய மாமா அவர்கள், எங்கள் குடியிலேயே மூத்தவர் சொல்கிறார். நீ சொல்வது எல்லாம் உண்மை என்கிறார். நீ இங்கே ஒவ்வொரு வருடமும் வந்திருக்கிறாய். அதே போல் பாங்கு முனிவரின் இறந்த உடலையும் நீ தூக்கிக் கொண்டு வந்திருக்கிறாய். அவருடைய உடலை நீ தான் எரியூட்டி இருக்கிறாய்.” என்ற மோசா மேலும் க்ருபாவைச் சுட்டிக்காட்டிய வண்ணம், “அது மட்டும் இல்லை, பெரியவர், சொல்கிறார். என் தந்தைக்கு உன்னை மிகவும் பிடிக்குமாம். ஆகவே எங்கள் பழங்குடியினரின் விருந்துக்குக் கூட உன்னை அழைத்து விருந்தோம்பல் செய்திருப்பதாகவும் சொல்கிறார்.” என்றான்.

“ஆமாம், அது தான் உண்மை. அதனால் தான் நீயுடன் என்னுடன் நட்புடன் இருக்கவேண்டும் என்றே நான் விரும்புகிறேன்.” என்றார் த்வைபாயனர். மோசா மீண்டும் க்ருபாவுடன் ரகசிய சம்பாஷணை நடத்தினான். பின்னர் த்வைபாயனரிடம் திரும்பி, “மாமா சொல்கிறார். ஆசிரமவாசிகள் அனைவரும் உன்னைக் கடவுளாகவே மதித்தனராம். இப்போது என்னுடைய விருப்பம் என்னவெனில் நீ வந்து எங்கள் எருமைக்கடவுளான மஹிஷாசுரனையும் வணங்கியாக வேண்டும். கிளம்பி வா என்னுடன்!” என்றவன் படகோட்டியிடம் திரும்பினான். “க்ரிவி, நீ இங்கேயே இரு! நான் சொல்லும்வரை இங்கேயே இரு. அதன் பின்னர் உன்னுடைய சுற்றலை நீ ஆரம்பிக்கலாம்.” என்றவன் தன் ஆட்களிடம் திரும்பி, க்ரிவிக்கும் அவன் ஆட்களுக்கும் தேவையான உணவை அளித்து உபசரிக்குமாறு கூறினான். க்ரிவி கீழே விழுந்து தரையை முத்தமிட்டுத் தன்மரியாதையை மோசாவுக்குத் தெரியப்படுத்தினான்.

த்வைபாயனர் மெல்ல நீரில் நடந்து கரையை அடைந்து மோசாவின் அருகே வந்தார். அவனைப் பார்த்து, “தலைவா, தயவு செய்து என் குருவின் இறந்த உடலையாவது என்னிடம் மீட்டுக் கொடுக்கிறாயா? அவருடைய உடலுக்காவது நான் மரியாதை செலுத்தித் தக்க மரியாதையுடன் ஈமச் சடங்குகளையும் செய்வேன்.” என்றார். அதற்கு மோசா பெரிதாகச் சிரித்தான். “அவர் உடலை நான் பாதுகாத்து வைத்திருப்பேன் என்றா எதிர்பார்த்தாய்? உடலின் ஒரு பகுதி இதோ இங்கே இருக்கிறது!” என்று தன் பெரிய வயிறைக்காட்டிச் சிரித்தான். பின்னர்”அவர் எலும்புகளைத் தின்ன முடியவில்லை. யமுனையில் எறிந்துவிட்டேன்!” என்று சொல்லி மீண்டும் கடகடவெனச் சிரித்தான். “ஆனால், உன்னுடைய தகப்பனார் மனித மாமிசம் தின்பதை ஆதரித்தது இல்லை என்றல்லவோ கேள்விப் பட்டிருக்கிறேன்.” என்றார் த்வைபாயனர் ஹீனமான குரலில்.  மோசா மிகவும் கர்வத்துடன் அவரைப் பார்த்து மீண்டும் கடகடவெனச் சிரித்தான். “என்னிடம் என் தந்தையைக் குறித்து நினைவூட்டாதே! அவர் ஓர் ஏமாற்றுக்காரர். எங்கள் குல தெய்வமான எருமைக்கடவுள் மஹிஷாசுரனை ஏமாற்றினார். கடவுளை மதிக்கவே இல்லை. எல்லாம் எதற்காக! ஆசிரமங்களுடன் நட்புப் பாராட்டுவதற்காக! எங்கள் பாரம்பரியமான விருந்துணவில் மனித மாமிசம் இடம் பெறுவதை அவர் தவிர்த்தார். அதிலும் உன்னைப் போலவும் ஆசாரிய கௌதமர் போலவும் ஆசாரியர்கள் அந்த விருந்தில் கலந்து கொள்கையில் மாமிசங்களே இடம் பெறாமல் போய்விட்டன. ஆனால் நான் அப்படி இல்லை! என் ராஜ்ஜியத்தில் குடிமக்கள் அனைவரும் மாமிசம் சாப்பிடலாம். அதிலும் மனிதனின் மாமிசத்தைத் தின்பதின் மூலமே தைரியமும், ஒருவனின் மனோநிலையும் ஸ்திரமடையும். வலுவானவனாக ஆவான். இன்று நீ என் விருந்தினனாக வரப் போவதால் உனக்கும் அதைப் பழக்கப் படுத்தித் தருகிறேன். சாப்பிட்டுப் பார்!” என்றான் கேலியாகச் சிரித்தவண்ணம்.

த்வைபாயனர் புன்னகையுடன், “முயன்று பார்! அது சரி! ஷார்மி அன்னையாரும் மற்றப் பெண்களும் எங்கே இருக்கின்றனர்? அவர்கள் என்னவானார்கள்?” என்று கேட்டார். “ஹா, ஷார்மி! அவளும் அவளுடன் பிடிக்கப்பட்ட மற்றப் பழங்குடிப் பெண்களும் எங்கே இருக்க வேண்டுமோ அங்கே பத்திரமாக இருக்கின்றனர். நீ அதற்கெல்லாம் கவலைப்படவே வேண்டாம். அவர்களை மீண்டும் பார்க்கலாம் என்று எண்ணாதே! ஹூம்! ஷார்மி என் மாமாவின் மகளாக இருந்ததால் பிழைத்தாள்! இல்லை எனில் அவளை நூற்றுக்கணக்கான துண்டுகளாக வெட்டிப் போட்டிருப்பேன். இப்போது ஏற்பட்டிருக்கும் அனைத்துத் தொந்திரவுகளுக்கும், பிரச்னைகளுக்கும் அவள் தான் முக்கியக் காரணம்!” என்றான் மோசா. அவற்றைச் சொல்கையில் அவன் கிரீடம் அங்குமிங்குமாக வேகமாக அசைந்தது ஓர் எருமை தன் தலையை ஆட்டுவதைப் போலவே இருந்தது.

த்வைபாயனரைத் தன்னைத் தொடர்ந்து வரச் சொன்ன மோசா தன் ஆட்களுடன் தன் தலைமையகத்தை நோக்கி நடந்தான். த்வைபாயனருக்கு வேறு ஏதும் வழி புலப்படவே இல்லை. அவரைச் சுற்றிக்கொண்டு ஏழு, எட்டு பழங்குடியினர் சூழ்ந்த வண்ணம் பாதுகாவல் போல வந்து கொண்டிருந்தனர். ஆகவே தப்பிக்கவும் வழி இல்லை. எல்லோர் கையிலும் காணப்பட்ட ஈட்டி அவரையே குறி பார்த்துக் கொண்டிருந்தது. அவர் தப்பிக்கச் சிறிதளவு முயன்றாலும் அத்தனை ஈட்டிகளும் அவர் மேல் பாயும் என்பதில் ஐயமில்லை. மதிய நேரத்துக்கு அனைவருமாக அந்தக் காட்டு வழியில் நடந்து பழங்குடியினரின் தலைமையகத்துக்கு வந்து சேர்ந்தனர். அப்போது மோசா த்வைபாயனரிடம் திரும்பி, “என் மாமா சொல்கிறார், நீ வருங்காலத்தைக் கண்டு சொல்வாயாமே! அதோடு தீராத நோய்களை எல்லாமும் தீர்த்து வைப்பாயாமே! உன்னிடம் அந்தத் திறமை உண்டென்று சொல்கிறார்.” என்றான்.

“ஆம், என்னால் முடியும். ஆனால் உனக்கு வேதத்திடம் வேத கோஷங்களில் நம்பிக்கை இருக்க வேண்டும்.” என்றார் த்வைபாயனர். “அது என்ன வேதம் என்றால் என்ன? அது யார்? எங்கே வசிக்கிறது? அதன் இருப்பிடம் என்ன?” என்று மோசா திருப்பிக் கேட்டான். “ஹா, அதற்கெனக் குறிப்பிட்ட இடம் எல்லாம் இல்லை. தகுதி வாய்ந்த ஸ்ரோத்திரியர்களின் மனதிலிருந்து வாய் வழியாகவே வெளியே வரும். அது எழுதிப் படிப்பதில்லை. எங்கும் படிக்க முடியாது. கண்டறிய வேண்டிய ஒன்று. நீ கொன்றாயே ஆசாரிய கௌதமர், அவரைப்போன்ற பல ஸ்ரோத்திரியர்களால் தினம் தினம் ஓதப்படுவது!” என்றார் த்வைபாயனர்.

“ஓஹோ, ஸ்ரோத்திரியர்களின் வாயிலா குடி இருக்கிறது? அப்படி எனில் உன் வாயிலும் அது குடி இருந்தாக வேண்டுமே?” என்று கேலியாகக் கேட்டான் மோசா. “அப்படித் தான் நான் நினைக்கிறேன்.” என்றார் த்வைபாயனர். “எங்கே, உன் வாயைத் திற்ந்து சொல், பார்க்கலாம்!” என்றான் மோசா. “ஹா, அதை அப்படி எல்லாம் எளிதில் கேட்க முடியாது! முதலில் நீ சுத்தமாக, இல்லை, இல்லை, புனிதமானவனாக இருக்க வேண்டும். உன்னுடைய இந்தக் கொலை வெறியை எல்லாம் அடக்கிக் கொண்டு சாந்தமாக இருக்க வேண்டும்.”

Thursday, September 1, 2016

கோதுலி ஆசிரமத்தில் த்வைபாயனர்!

அதற்கு வியாசர், “அது கடவுளின் விருப்பம்! கடவுளர் அனைவரும் இந்த சேவைக்கு நான் தேவையில்லை என நினைத்தார்களானால் மோசா நிச்சயமாக என்னைக் கொன்று விடுவான்! அவர்களுக்கு விருப்பம் இல்லை எனில் எனக்கு எதுவும் நடக்காது!” என்று தீர்மானமாகச் சொன்னார். சற்றே நிறுத்தியவர் பின்னர் மேலும் தொடர்ந்து, “ஒரூ வேளை அவர்கள் என்னைக் கொல்ல முயன்றால் பிரமதேஜஸால் க்ஷத்திரிய தேஜஸை வெல்ல முடிகிறதா? தனித்து பிரம்ம தேஜஸால் இயங்க முடிகிறதா என்று நீங்கள் பரிக்ஷை செய்து பார்க்க நல்லதொரு வாய்ப்புக் கிட்டும்!” என்றார். அதற்கு குனிகர், “அந்த மலைஜாதி மக்களை நாங்கள் எளிதில் வென்றுவிடுவோம்!” என்று திட்டவட்டமாகக் கூறினார். “ம்ம்ம்ம், உங்கள் வில்லாளிகளால் இந்த மலைஜாதி மக்களை வெல்ல முடியலாம். ஆனால் சச்சரவு பெரிதாகி விட்டால்! அப்போது ஒன்றும் செய்ய முடியாது! மோசா கோபம் கொண்டு அங்கு சிறைப்பிடித்து வைத்திருக்கும் ஆசிரமவாசிகளின் மேல் பாய்ந்து கொல்வான்! என்னுடைய பிரார்த்தனைகள் எல்லாம் இப்போது எப்பாடுபட்டாவது ஆசிரமவாசிகளைக் காப்பாற்ற முயல்வது ஒன்றே தான்!” என்றார் த்வைபாயனர்.

குனிகருக்கு ஏதும் பதில் சொல்ல முடியவில்லை. தன் கைகளை விரித்துச் செய்வதறியாது குலுக்கினார். “மாட்சிமை பொருந்திய முனிவரே! அனைத்தும் தங்கள் விருப்பம் போல் நடக்கட்டும். ஆனால் உங்களுக்கு ஏதேனும் நேர்ந்து விட்டால்? உங்களுக்கு ஆபத்து நேரிடும் பட்சத்தில் இளவரசர் காங்கேயர் உங்களை எப்பாடுபட்டேனும் காப்பாற்றியே ஆகவேண்டும் என எனக்குத் தனிப்படக் கட்டளை பிறப்பித்திருக்கிறார்.” என்றார் குனிகர். த்வைபாயனரின் சீடர்கள் அதன் பின்னர் அரசப் படகிற்கு மாற்றப்பட்டனர். அரசப்படகு நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டது. க்ரிவியின் படகு கோதுலியின் கரைக்கு வந்து சேர்ந்தது. அதைப் பார்த்த அங்கிருந்த மலைவாசி மக்கள் பெருத்த குரலில் கோஷமிட்டனர். ஒரே கூச்சலும், குழப்பமுமாகச் சற்று நேரம் நீடித்தது. ஒரு சிலர் படகைச் சுட்டிக் காட்டி ஏதேதோ பேசத் தொடங்க, இருவர் மோசாவை அழைத்துவர ஓடினார்கள். மோசா விரைவில் அங்கே வந்தான். படகில் இருந்த வேத வியாசரையும் அவரை அழைத்துக் கொண்டு படகை ஓட்டி வந்திருக்கும் க்ரிவியையும் மாறி மாறிப் பார்த்தான். அவன் பார்வையில் கொடூரம் தெரிந்தது.

திடீரென க்ரிவியும் அவன் மகன்களும் விசித்திரமானதொரு குரலில் இயற்கைக்குப் புறம்பாகக் கிரீச்சிட்டுக் கத்திக் கொண்டே வணங்கும் பாவனையில் முழந்தாளிட்டனர். அதற்கு மோசா க்ரிவி இந்தப் படகைக் கரைக்கு இங்கே இந்தப் பக்கம் கொண்டு வந்தது தவறு என்றும் அப்படி வந்திருக்கக் கூடாது என்னும்படியும் ஒரு கூச்சல் போட்டான். அது கிட்டத்தட்ட ஓர் ஆணையாக இருந்தது. மோசா பார்க்க கறுப்பாக, அகன்ற மார்புடன் சற்றே குட்டையாகக் காணப்பட்டான். அவன் கண்களைச் சுற்றிப் பூசப்பட்டிருந்த சிவப்பு வண்ணம் அவன் முகத்துக்கே ஓர் பயங்கரத்தைக் கொடுத்தது. தன் காதுகளில் செம்பினால் ஆன பெரிய வளையங்களை மாட்டி இருந்தான். அதோடு கொம்புகளோடு கூடிய எருமைத்தலை மட்டும் காணும்படியாக வடிவமைக்கப்பட்டதொரு கிரீடத்தைத் தலையில் அணிந்திருந்தான். இது அவனைக் காட்டுவாசிகளின் தலைவன் என்று அடையாளம் காட்டுவதாகும். அவன் மஹிஷாசுரனின் பிரதிநிதியாக அங்கே ஆட்சி புரிவதாக ஐதீகம். எருமைக்கடவுளை அவர்கள் வணங்கி வந்தார்கள். ஆகவே மஹிஷாசுரனை வணங்கினார்கள்.

வேதவியாசர் அந்தப் படகிலிருந்து மிகவும் சிரமப்பட்டுக் கீழே முழங்கால் அளவு நீரில் இறங்கினார். அதற்குள்ளாக மோசா அவரைத் தன் சைகையினால் இருந்த இடத்திலேயே இருக்கும்படி சொன்னான். தன் ஆட்களைப் பார்த்து இந்தப் புதிய விருந்தாளியைக் கொல்லத் தயாராக இருக்கும்படி ஆணையிட்டான். த்வைபாயனர் இதற்கெல்லாம் கலங்கவே இல்லை. “என் ஆசிகள், உனக்கு,மோசா, ஈடு இணையற்றக் காட்டுவாசிகளின் தலைவனே! உன்னை ஆசீர்வதிக்கிறேன்.” என்றார் தன் கைகளைத் தூக்கிய வண்ணம். அவர் முகம் புன்னகையில் மலர்ந்தது. அந்தப் புன்னகை மோசாவுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. அவரைப் பார்த்து, “யாரடா நீ?” என்று கூச்சலிட்டான். த்வைபாயனர் அதற்கும் புன்னகை புரிந்தார். பின்னர் மோசாவைப் பார்த்து, “மோசா, மோசா, அமைதி! உன் தந்தை என்னிடம் இப்படி நடந்தது இல்லை. எப்போதும் என்னிடம் அன்பாகவும் கருணையுடனும் நடந்து கொள்வார். எனக்கு ஐந்து வயதாக இருக்கும்போதிலிருந்தே அவரை நான் நன்கறிவேன். சில மாதங்கள் முன்னர் கோதுலிக்கு வந்திருந்தபோது கூட அவரைச் சந்தித்தேன்.” என்றார் த்வைபாயனர்.

“அதெல்லாம் இருக்கட்டும், ஐயா! நீ யார்! அதைச் சொல் முதலில்!” என்று தன் முகத்தைக் கோணிக் கொண்டான் மோசா. தயையுடன் சிரித்தார் த்வைபாயனர். “மோசா, நீ பாங்கு முனிவரைக் குறித்துக் கேள்விப் பட்டிருக்கிறாயா?” என்று கேட்டார். “ஆம், ஆம், நான் அவரைக் குறித்துக் கேள்விப் பட்டிருக்கிறேன். ஓநாய்களின் பிரதேசத்தில் அவற்றால் கடித்துக் குதறப்பட்டுக் கொல்லப்பட்டார் என்பதையும் அறிந்திருக்கிறேன். ஆனால் உனக்கும் அவருக்கும் என்ன சம்பந்தம்?” என்று கேட்டான் மோசா. “மோசா, நான் பாங்கு முனியின் மகன். பராசர புத்திரன், க்ருஷ்ண த்வைபாயனன். அதோடு இல்லாமல் இந்த கோதுலி ஆசிரமத்தை நடத்தி வந்த ஆசாரிய கௌதமரின் பிரதம சீடனும் ஆவேன். இங்கே தான் நான் பனிரண்டு வருடங்கள் குருகுல வாசம் இருந்தேன். அதன் பின்னரும் நான் அடிக்கடி இங்கே வந்து போவேன்.” என்றார் வேத வியாசர்.

அதைக் கேட்ட மோசா ஏதோ நகைச்சுவையைக் கேட்டது போல் கடகடவெனச் சிரித்தான். “ஹா,ஹாஹாஹா, நீ யாருடைய மகனாக இருந்தால் எனக்கு என்ன? நீ அந்த நொண்டி முனிவரின் மகனாக இருந்தாலும் எனக்கு அதில் எவ்விதமான மறுப்பும் இல்லை. அல்லது இருகால்களும் உள்ளதொரு முனிவரின் மகனாக இருந்தாலும் எனக்கு அதிலும் எதுவும் சிறப்பாகத் தெரியவில்லை. எனக்குஅதில் எவ்விதமான லாபமோ, நஷ்டமோ இல்லை. சரி, சரி, நீ அந்த யமுனை நதியிலிருந்து வெளியேறிவிடாதே! அங்கேயே நில், அல்லது படகுக்குத் திரும்பிச் செல். ஓர் அடி எடுத்து வைத்தாயானாலும் என் வில்லாளிகளின் அம்புகள் உன்னைத் துளைத்து விடும்!” என்றான் மோசா. அப்படிச் சொல்லிக் கொண்டே தன் தோளில் தொங்கிக் கொண்டிருந்த வில்லை எடுத்து நாணேற்றி அதில் ஓர் அம்பை அம்பறாத்தூணியிலிருந்து எடுத்துப் பூட்டினான். த்வைபாயனருக்குக் குறி வைத்துக் கொண்டே, “இங்கே இப்போது எதற்காக வந்தாய்?” என்று மேலும் வினவினான்.
“நான் இங்கே ஏன் வந்தேனா? மோசா, இது என்னுடைய இருப்பிடம், என் இடம், என் ஆசிரமம். நான் பலகாலம் வாழ்ந்திருந்த இடம். ஆசாரிய கௌதமருக்கு ஓர் பிள்ளையைப்போலவே நான் வளர்க்கப்பட்டேன். இப்போது அவர் எங்கே? நான் அவரைக் கண்டு என் நமஸ்காரங்களை அவருக்குத் தெரிவிக்க வேண்டும்.” என்றார் த்வைபாயனர். மோசா அலட்சியமாகச் சிரித்தான். சிரித்தவண்ணம் ஆசிரமம் எரிந்து கொண்டிருந்ததையும் எரிந்து முடிந்த பகுதிகளையும் காட்டி மீண்டும் ஏளனமாகச் சிரித்தான். “அதோ அங்கே போய்த் தேடு! முடிந்தால் கண்டு பிடித்துக் கொள்!” என்று சொல்லி மீண்டும் சிரித்தான். “ம்ம்ம்ம்” என்று ஒரு பெருமூச்சு விட்ட த்வைபாயனர், “மற்றவர்கள்? அவர்கள் எல்லோரும் எங்கே?” என்று ஆவலுடன் கேட்டார். “ஆஹா, அது எனக்குத் தெரியவில்லையே! ம்ம்ம்ம், தெரியாமல் போயிற்றே!” என்றான் மோசா.

“மோசா, மலைவாசிகளின் ஈடு இணையற்ற தலைவா! உன்னால் இந்த ஆசிரமம் எரிக்கப்பட்டதா? அதுவா உண்மை?” என்று த்வைபாயனர் மீண்டும் கேட்டார். “ஆம், ஆம், நான் தான் அதை எரித்தேன். போதுமா! இப்போது இதோ அந்தப் படகில் ஏறி ஓட்டமாய் ஓடிவிடு! உன்னுடைய இந்த முகத்தை மீண்டும் நான் பார்க்க நேர்ந்தால்! ஹூம், காட்டாதே உன் முகத்தை என்னிடம்!” என்று கடுமையாகக் கூறினான் மோசா. த்வைபாயனர் பேச்சை நிறுத்தவில்லை. “தலைவா, ஆசிரமவாசிகள் உன்னை என்ன செய்தார்கள்? அவர்களிடம் ஏன் உனக்கு இவ்வளவு கோபம்? சென்ற வருடம் நான் இங்கே வந்திருந்தபோது உன்னுடைய தந்தை இருந்தார். கௌதம முனிவரிடமும் ஆசிரமவாசிகளுடனும் மிகவும் நட்புப் பாராட்டி வந்தார்.” என்ற வண்ணம் மீண்டும் நட்பாகச் சிரித்தார். ஆனால் மோசாவின் அகந்தை தலை தூக்கியது. இந்த முனிவரை எப்படியேனும் அனுப்பிவிடவேண்டும் என்னும் தன்னுடைய ஆணையே கடைசியாக இருக்கவேண்டும் என நினைத்தான். மேலே பேச ஆரம்பித்தான்.

“நான் என் தந்தையைப் போல் இல்லை.” கிட்டத்தட்ட இதைச் சொல்கையிலேயே கோபத்தில் சீறினான் அவன். “அவர் என்ன செய்தார், என்பதைக் குறித்தோ, யாரிடம் நட்புப் பாராட்டினார், யாரிடம் பகைமை பாராட்டினார் என்பது குறித்தோ எனக்கு எவ்விதமான கவலையோ அக்கறையோ இல்லை. ஆனால் ஒரு விஷயம் உறுதி! உன்னைப் போன்றவர்களை இந்தக் காட்டினுள் நான் மீண்டும் அனுமதிக்க மாட்டேன். என் தந்தை செய்த தவறை நான் திரும்பச் செய்ய மாட்டேன். ஹூம், எங்கள் ஈடு இணையற்ற கடவுளான மஹிஷாசுரனின் ஆட்சியில் இருந்து வரும் எங்கள் குலப் பெண்களை நீங்கள் திருடிச் செல்ல அல்லது இழுத்துக்கொண்டு ஓடிச் செல்ல நான் இனிமேல் அனுமதிக்க மாட்டேன். இங்கே அந்த வேலை இனி நடக்காது!” என்று தீர்மானமாகச் சொன்னான் மோசா.

“ஆசாரிய கௌதமரின் மனைவி, ஷார்மீ எனக்குத் தாயைப் போன்றவர். என்னிடம் மிகவும் அன்பு செலுத்தினார். அவர் உன்னுடைய இந்தப் பழங்குடியிலிருந்து வந்தவரே! ஆனால் எவ்வளவு சந்தோஷமாக வாழ்க்கை நடத்தினார் என்பதை நீ அறியாயா? தன்னிடம் அடைக்கலமாக வரும் அனைவரையும் அன்புடன் ஒரு தாயைப் போல் நேசித்து வந்தாள். அதே போல் ஆசிரமவாசிகளும் அனைவரும் அவளிடம் மிகவும் மரியாதை பாராட்டி வந்தனர். தர்மக்ஷேத்திரத்தில் பதினேழு நாட்கள் நடந்த வாஜ்பேய யக்ஞத்தின் போது அவள் அனைவரையும் அதாவது ஸ்ரோத்திரியர்கள் மட்டுமின்றி யக்ஞத்துக்கு வந்திருந்த மஹாராஜாக்கள், ராஜாக்கள், சிற்றரசர்கள், பரிவாரங்களிலிருந்து சாதாரண மக்கள் வரை அனைவரையும் ஒன்று போல் பாவித்து விருந்துபசாரம் அளித்து வந்தாள்.” என்றார் முனிவர்.

மெல்ல மெல்ல சிறிது சிறிதாக நதியிலிருந்து கரை நோக்கி முன்னேறத் தொடங்கினார் ஆசாரியர் வியாசர். அதைத் தன் கூரிய கண்களால் கவனித்து விட்ட மோசா மீண்டும் கூச்சல் போட்டான். “அப்படியே நில் முனிவா! இருந்த இடத்தை விட்டுச் சிறிது கூட அசையாதே!  என்னிடம் வருவதற்கு முயலாதே! ஷார்மியைப் பற்றியா பேசுகிறாய் நீ? அவள் மிகவும் கொடூரமான பெண்மணி. எங்கள் இனத்துக்கே ஓர் அவமானம். எங்கள் இனத்தின் எதிரி அவள். அவள் தான் எங்கள் குலப் பெண்களை ஆசை காட்டி மோசம் செய்து ஆசிரமவாசிகளோடு வாழ்வதற்காக இழுத்துச் சென்றாள். மேலும் முயன்றாள். ஆசிரமவாசிகளோடு எங்கள் குலப் பெண்களுக்குத் திருமணமும் செய்து வைத்தாள். அவளா நல்லவள்? அவள் கொடூரி!” என்றான் மோசா! “அதில் என்ன தவறைக் கண்டாய் மோசா? ஆசிரமவாசிகளைத் திருமணம் செய்து கொண்ட பெண்களிடம் பேசிப் பார்த்திருக்கிறாயா? அனைவருமே சந்தோஷமாகத் தானே வாழ்க்கை நடத்தி வந்தார்கள்?” என்றார் த்வைபாயனர்.