Friday, February 3, 2017

கண்ணன் வருவான், குருக்ஷேத்திரம், சபையில் கொடூரம்!

சால்வன் மிகப் பெரிய தர்மசங்கடமான நிலையில் இருந்தான். சௌராஷ்டிரத்தில் இருந்து திரும்பியதில் இருந்து ஷால்வன் தன்னுடைய அணுகுமுறை மூலமும் பேச்சுக்கள் மூலமும் தன் நாட்டு மக்கள் மனதில் தான் சௌராஷ்டிரத்தில் இருந்து மிகப் பெரிய வெற்றியுடன் வந்திருப்பதாக நிரூபிக்க விரும்பினான். அதற்காக மிகவும் முயன்றான். உண்மையில் அவன் மிகவும் மன அழுத்தத்துடனேயே இருந்தான். மனம் வெறுத்துப் போயிருந்தான். சௌராஷ்டிரத்துடன் தொடர்ந்த போரில் துவாரகையில் அவனுடைய நம்பிக்கைக்கு உகந்த மூன்று தளபதிகளை அவன் இழந்து விட்டான். அவர்களில் வேகவன் மிகவும் நம்பிக்கைக்கு உரியவன் என்பதோடு எவரோடும் போட்டி போட மிக வல்லவன். விவிந்தன் என்னும் தானவ வீரன் மிகவும் பிரபலமானவன். அடுத்தவன் க்ஷேமவிருத்தி என்னும் அவன் மந்திரி! இம்மூவரையும் இழந்ததில் ஷால்வனுக்குத் தன் உடலின் ஒரு பாகமே இழந்து விட்டாற்போல் இருந்தது.

வெற்றி அடைவதற்கு முன்னரே அவனே அந்தப் போர்க்களத்தில் இருந்து திரும்ப வேண்டி வந்தது. அது மட்டுமல்ல மிகவும் அவமானமான சூழ்நிலையில் அல்லவோ அவன் திரும்ப வேண்டி வந்தது! அவசரம் அவசரமாக மேலும் அவமானம் ஏற்படும் முன்னர் திரும்பி விட்டான். அவனுடைய மொத்தப் படைகளுக்கும் தலைவனாக வேகவன் தான் இருந்தான். அவனுக்கு அடுத்து இப்போது அவன் மகன். வஜ்ரநப்! ஷால்வனின் படை வீரர்களுக்குத் தலைவனாக இருப்பதோடல்லாமல் அவர்களுக்கு இப்போது மிச்சம் இருப்பதை எல்லாம் அவன் தான் கவனித்துக் கொண்டிருந்தான்.  ஷால்வனுக்கு வஜ்ரநபிடம் கொஞ்சம் நம்பிக்கை இருந்தாலும் அவன் தகுதியில்லாதவன் என்றோ அல்லது விசுவாசமில்லாதவன் என்றோ சொல்வதற்கு எந்தவிதமான முகாந்திரமும் இல்லை. அவன் எவ்விதமான சூழ்ச்சியோ கிளர்ச்சியோ செய்ததாகத் தெரியவில்லை. அப்படி நடந்திருந்தால் அதில் பங்கெடுத்ததற்கான அறிகுறிகளும் இல்லை.

ஷால்வன் வஜ்ரநபைத் தன்னருகே அழைத்தான். ஷால்வனின் அருகே வந்த வஜ்ரநப் முறையான மரியாதைகளை மன்னனுக்குத் தெரிவித்தான். அவனைப் பார்த்து ஷால்வன், “வஜ்ரநப், நான் உன்னிடம் எல்லாவிதமான அதிகாரங்களையும் கொடுத்து இருக்கிறேன். உன் தந்தை எனக்கு எப்படி அருமையானவராக இருந்தாரோ அதே போல் நீயும் எனக்கு அருமையானவன். நெருக்கமானவன்.” என்றான். “உங்கள் கட்டளைக்குக் கீழ்ப்படிகிறேன், அரசே!” என்று வணக்கத்துடன் கூறினான் வஜ்ரநப்.

“ஆம், அதனால் தான் நான் உன்னையே மிகவும் நம்பி இருக்கிறேன். படைவீரர்களையும் உன்னை நம்பி ஒப்புவித்திருக்கிறேன். நமக்கு எதிரிகள் இருக்கின்றனர். அவர்களை நாம் தக்கபடி கவனிக்க வேண்டும். கவனிக்க வேண்டிய விதத்தில் கவனிக்க வேண்டும்.” என்றான் ஷால்வன்.  அதன் பின்னர் அவன் மீண்டும் வஜ்ரநபைப் பார்த்துச் சொன்னான். “ நீ பிரத்யும்னனுக்கு விருந்தோம்ப வேண்டும்.  இந்தக் கோட்டையே உன்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. உன்னுடைய குடும்பத்தை அங்கே மாற்றச் சொல்லிக் கட்டளைகள் ஏற்கெனவே பிறப்பிக்கப்பட்டுள்ளது!” என்றான் ஷால்வன். வஜ்ரநப் ஷால்வனுக்கு வணக்கம் தெரிவித்தான். “தங்கள் கட்டளைப்படியே பிரபு!” என்றான்.

“அவனுக்கு நன்றாக உணவளி! விருந்துகளைக் கொடு! இங்கே உள்ள பெண்களிலேயே சிறந்தவளை அவனுக்கு தாசியாக்கு!” என்றான். பின்னர் தன் கைகளைத் தட்டிவிட்டுக் கத்தினான். “”அப்பயா! இங்கே வா!” என்றான். அப்பயாவின் அருகே அமர்ந்திருந்த இரண்டு வீரர்கள் அவனைப் பிடித்து மன்னர் மன்னன் ஷால்வனின் எதிரே கொண்டு வந்து நிறுத்தினார்கள். அவன் தலைப்பாகையும் உடைவாளும் அவனிடமிருந்து எடுக்கப்பட்டு அவன் கைகள் பின்னால் கட்டப்பட்டுக் காணப்பட்டது.  ஷால்வனின் முகம் இறுக்கம் அடைந்தது. அவன் சீறினான். “எனக்கு விசுவாசமாக இல்லாதவர்களை நான் சிறிதும் சகித்துக் கொள்ள மாட்டேன். என்னால் பொறுக்க இயலாது. உனக்கு அது நன்றாகத் தெரியும். அல்லவா?” என்று கேட்டான்.

அந்தக் கைதி தனக்குத் தெரியும் என்பதாகத் தலையை ஆட்டினான். “அப்படித் தெரிந்திருந்தும் நீ அரசர்களின் கோட்டையைக் குறித்த தகவல்களை உன் நண்பர்களிடம் சொல்லிக் கொண்டிருக்கிறாய்!” என்றான் ஷால்வன் கடுமையாக. அப்பயா பயந்து விட்டான். நடுங்கிப் போனான். அவன் முழந்தாள்கள் மடிந்தன. அவனால் நிற்கக் கூட முடியவில்லை. ஷால்வனின் முகம் முற்றிலும் மாறியது. அவனை இப்போது பார்த்தால் ஓர் கோபம் கொண்ட புலியைப் போல் காணப்பட்டான். அப்பயாவை பார்த்து, “வா, இங்கே! உன் தலையைக் குனிந்து கொள்!” என்று கர்ஜித்தான்.

அப்பயா மிகவும் சிரமப்பட்டுத் தன்னை மன்னன் அருகே கொண்டு போனான்.  அவன் உடலைப் பின்னால் இழுத்துக் கொண்டு தலையை மன்னன் அருகே மிகவும் சிரமத்துடன் கொண்டு போனான். ஆனால் ஷால்வனோ கண் மூடித் திறக்கும் நேரத்துக்குள்ளாகத் தன் உடைவாளை உருவி அப்பயாவின் கழுத்தருகே கொண்டு சென்று விட்டான்.  ஒரே வெட்டு. அப்பயாவின் தலை அவன் உடலிலிருந்து தனியே வந்து கீழே உருண்டது. அவன் உடல் துடிதுடித்துக் கீழே சாய்ந்தது. ரத்த வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இப்போது ஷால்வன் வெற்றிப் புன்னகையுடன் பிரத்யும்னன் பக்கம் திரும்பினான். “எப்படி? நான் ஓர் நல்ல அரசனா? நான் வெறும் அரசன் மட்டுமல்ல! எனக்கு விசுவாசமாக இல்லாத மனிதர்களை எவ்வாறு நடத்த வேண்டும் என்பதையும் நான் நன்கறிந்திருக்கிறேன். “ பின்னர் வஜ்ரநபிடம் திரும்பி, “நினைவு வைத்துக்கொள் வஜ்ரநப்! இதனால் தான் நான் மன்னர் மன்னன். அரசர்க்கரசன்! இதை மனதில் வைத்துக்கொள்! என் சபையில் விசுவாசமாக இருப்பவர்கள் மதிக்கப்படுவார்கள். அவர்களுக்கு விரும்பியது விரும்பியவண்ணம் நடக்கும். எனக்கு விசுவாசமில்லாதவர்களுக்கு இது தான் நேரிடும்!” என்றான் ஷால்வன்.

ஷால்வன் தன் சிம்மாசனத்தில் இருந்து எழுந்திருக்க, அனைவரும் அவனைத் தொடர்ந்து எழுந்தார்கள்.  தன் வாளை உயரத் தூக்கித் தன் வீரர்கள் அனைவரிடமும் காட்டினான். அங்கிருந்த அனைவருக்கும் ஷால்வன் மாபெரும் வெற்றி ஒன்றைச் சந்தித்து விட்டாற்போல் தோன்றியது. அந்த சபாமண்டபமே அந்த வெற்றியைக் கொண்டாடுவதில் முனைந்தது.

Wednesday, February 1, 2017

கண்ணன் வருவான், எட்டாம் பாகம், குருக்ஷேத்திரம்! ஷால்வன் சபையில்!

மறுநாள் காலை ஓர் அடிமை வந்து பிரத்யும்னனும் மற்றவர்களுக்கும் குளிக்க ஏற்பாடுகள் செய்து வைத்துப் பின்னர்  பிரத்யும்னனுக்கு விலை உயர்ந்த ஒரு சால்வையை மன்னன் பரிசாக அனுப்பியதாகக் கொடுத்துச் சென்றான்.  அன்றைய தினமும் மன்னன் அழைக்கவில்லை. மறுநாள் காலை பிரத்யும்னன் எழுந்திருக்கையிலேயே அந்தக் கறுத்த பெரிய உடல் படைத்த அடிமை அவன் கட்டிலருகே முழங்காலிட்டு அமர்ந்து கொண்டிருந்தான்.  இன்னொரு அடிமை நுழைவாயில் கதவருகே நின்றிருந்தான்.  அவன் உள்ளே அருகே வந்து தலை குனிந்து வணக்கம் சொல்லிவிட்டு, “ பிரபுவே, தாங்கள் இந்த அடிமையைத் தொடர்ந்து வர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். உங்களை இந்த அடிமை அரசனின் அறைக்கு மன்னாதி மன்னனைச் சந்திக்க அழைத்துச் செல்கிறேன். உங்களை இன்று ராஜசபைக்கு அழைத்து வரும்படி மன்னாதி மன்னரின் கட்டளை!” என்றான்.

பிரத்யும்னன் தன்னுடன் வந்தவர்கள் அனைவரையும் தயாராகச் சொன்னான்.  மதிய நேரம். சூரியன் ஒளிவீசிப் பிரகாசித்துக் கொண்டிருந்தது. அவர்களுடன் வந்திருந்த மல்லன் பூர்ணா பிரத்யும்னன் அரசனைச் சந்திக்கப் போவதால் நல்ல உடை அணியத் தயார் செய்து கொடுத்து உதவினான். பிரத்யும்னன் தன் தோழர்களையும் அழைப்பதைக் கண்ட அந்த அடிமை மெதுவாக அதற்கு ஆக்ஷேபம் தெரிவித்தான். மிகப்பணிவுடனேயே அவன் அதை மறுத்தான். “என்னை மன்னியுங்கள், பிரபுவே!நீங்கள் மட்டும் தான் வரலாம். உங்களை மட்டும் அழைத்து வரும்படி எனக்குக் கட்டளை!” என்றான்.

அப்போது மல்லன் பூர்ணா பிரத்யும்னனிடம், “எதுவும் நடக்காது, குழந்தாய்! கவலைப்படாதே! அப்படி நம்மை ஏதாவது செய்ய வேண்டும் என்று அவர்கள் நினைத்திருந்தால் நம்மை இவ்வளவு மரியாதையுடனும் கௌரவமாகவும் பாலைவனத்தைத் தாண்டி அழைத்து வந்திருக்க மாட்டார்கள்.   ஏதோ குழப்பம் நேர்ந்திருக்கிறது என நினைக்கிறேன். ம்ம்ம்ம், இப்போது இந்தத் தலைவன் யார் என்பது எனக்குப் புரிந்து விட்டது. இவனை நான் ஏற்கெனவே பார்த்திருக்கிறேன். ஆனால் எங்கே என்று சொல்ல முடியாது. முடியவில்லை. வெகு விரைவில் நாம் இங்கே வந்திருப்பதின் உண்மையான அர்த்தத்தைப் புரிந்து கொள்வோம். இந்தப் புதிர் விரைவில் விடுபடும்!” என்றான்.

பிரத்யும்னன் அந்த அடிமையுடன் கூடச் சென்றான். அவன் ராஜசபைக்கு அவனை அழைத்துச் சென்றான். ஒரு சிறிய அளவிலான உயரம் குறைவானதொரு மேடையில் புலித்தோலால் மூடப்பட்டிருந்த அறைக்கு அவர்கள் சென்றார்கள்.  அந்த மேடைக்குப் பின்னால் சில சேவகர்கள் அசையாமல் நின்று கொண்டிருந்தனர். அவர்கள் கைகளில் உருவிய வாளுடன் காணப்பட்டனர்.  அங்கே பலர் அமர்ந்திருக்கையில் ஓர் மனிதன் மட்டும் கால் மேல் கால் போட்டுக் கொண்டு கம்பீரமாக அமர்ந்திருந்தான். மிக ஆடம்பரமாக உடை அணிந்து அமர்ந்திருந்த அவன் மேல் அனைவர் கண்களும் மொய்த்திருந்தன.  சுமார் ஐம்பது வயதிருக்கும் அவன் உட்கார்ந்திருக்கும் நிலையிலேயே மிகுந்த ஆகிருதியுடனும் அந்தஸ்து புலப்படும்படியும் காணப்பட்டான். பிரத்யும்னனுக்கு அவனைப் பார்த்ததுமே இவன் தான் தான் தேடி வந்த ஷால்வ மன்னன் என்பது புலப்பட்டது. இவன் தான் சௌராஷ்டிரத்தின் மேல் படை எடுத்து வந்தவன் என்பதும் புலப்பட்டது.  அவன் மிகவும் கர்வத்துடனும் வீரமாகவும் கம்பீரமாகவும் அவனுக்கு எதிரே நின்றான்.  இதழ்களில் மெல்லிய புன்னகை இழையோட நின்ற பிரத்யும்னனுக்குத் தான் யார் என்பதை ஷால்வனும் புரிந்து கொண்டு விட்டான் என்பது தெரிந்தது.

பிரத்யும்னனை ஓர் புன்சிரிப்புடன் பார்த்த ஷால்வன் அவனருகே இருந்த ஓர் இருக்கையைக் காட்டி அமரச் சொன்னான். பின்னர், “நீ இந்த மன்னாதி மன்னனின் ராஜசபைக்கு வரவேற்கப்படுகிறாய்! உனக்கு நல்வரவு!  இங்கே வா, இளைஞனே! இப்படி என்னருகே வந்து அமர்ந்து கொள்! பயப்படாதே!” என்றான். பிரத்யும்னன் சிறு பிள்ளை போல் சிரித்தான். அவனால் இதை நம்பவே முடியவில்லை. “மன்னாதி மன்னரே, நீங்கள் சொல்லி இருந்தால் நானே இங்கே வந்திருப்பேனே! ம்ம்ம் நீங்கள் மன்னாதி மன்னர் தான் என்றால், அதுவும் க்ஷத்திரிய தர்மத்தைக் கடைப்பிடிப்பவராகவும் இருந்து விட்டால், நீங்கள் என்னுடன் மல்யுத்தம் நேருக்கு நேர் செய்ய வேண்டும்!” என்றான்.

“ஆஹா, இப்போது எனக்கு நினைவுக்கு வருகிறது. நீ யார் என்பதைப் புரிந்து கொண்டு விட்டேன். நீ அந்த இளம் யாதவன், என்னால் அழிக்கப்பட்டிருக்க வேண்டியவன், ஆனால் உன்னை நான் விட்டு வைத்தேன்! உன்னை நான் நன்கறிவேன். இளைஞனே! நீ துவாரகையில் மிகவும் தீரத்துடன் என்னுடன் போரிட்டாய்! எனக்கு உன்னுடன் நேருக்கு நேர் எந்தச் சண்டையும் இல்லை! உன்னுடன் எனக்கு எந்தப் பகையும் இல்லை! உன் தந்தையுடன் தான் எனக்குப் பகை! அவனுடன் தான் நான் சண்டை இட வேண்டும்!” என்றான்.

“பின்னர் என்னை ஏன் பிடித்து வந்திருக்கிறீர்கள் அரசர்க்கரசே! என்னுடைய சிநேகிதத்தை விரும்பியா? அல்லது வேறு ஏதானும் காரணமா?” என்று கேட்டான் பிரத்யும்னன். அவனைப் பார்த்து இழிவாகச் சிரித்தான் ஷால்வன். “நாங்கள் விருந்தோம்புதலில் சிறந்தவர்கள். எங்கள் கடமை அது! அதிலிருந்து பின்வாங்க மாட்டோம்!” என்றான். பின்னர் அவன் ஆணையின் பேரில் அங்கே ஓர் அடிமைப்பெண் வந்தாள். அவளுடன் கூடவே பாடகர்கள் சிலரும் வந்தனர். “இவள் மிக அற்புதமான பெண்!” என்றான் ஷால்வன். அந்தப் பெண் கனவில் ஆடுவது போல் ஆடினாலும் அதில் சிற்றின்ப உணர்வைத் தூண்டும் விதமாகவே அசைவுகள் காணப்பட்டன. தன்னுடைய முகத்திரையை முதலில் அவிழ்த்த அவள் பின்னர் ஒவ்வொரு ஆடையாக அவிழ்த்துவிட்டுக் கடைசியில் ஓர் சிலையைப் போல் அசையாமல் நின்றாள்.

ஷால்வன் பிரத்யும்னன் பால் சாய்ந்தவண்ணம் கேட்டான். “எப்படி? இந்தப் பெண்? கவர்ச்சியாக இருக்கிறாள் அல்லவா? உனக்குப் பிடித்திருக்கிறதா?” என்று கேட்டான். பிரத்யும்னன் அதற்கு, “உண்மையில் இவள் அழகி தான்!” என்றான்.

“நான் இவளை சந்தோஷமாக உனக்கே அளிக்கிறேன். இவள் பழகுவதற்கு மிகவும் இனிமையானவள், பண்பானவள். ஒத்துப் போவாள். கீழ்ப்படியும் சுபாவம் உண்டு.  கலைகளில் தேர்ந்தவள்!” என்றான். அதற்குப் பிரத்யும்னன், “மன்னாதி மன்னருக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.  ஆனால் இந்தப் பரிசு எனக்குச் சிறிதும் பயன்படாத ஒன்று.  நான் திருமணம் செய்து கொண்ட என் மனைவியைத் தவிர்த்து மற்ற எந்தப் பெண்ணையும் தொட மாட்டேன் என்று சபதம் செய்திருக்கிறேன்.  நான் க்ஷத்திரிய தர்மத்தைக் கடைப்பிடிக்க வேண்டி எடுத்த சபதங்களில் இது மிகவும் முக்கியமான ஒன்று!” என்றான் பிரத்யும்னன்.  ஷால்வன் அதற்கு மறுமொழி சொல்லாமல் தன் தலை அசைவால் அந்தப் பெண்ணை அங்கிருந்து போகச் சொன்னான். அந்தப் பெண்ணும் தன் துணிகளைச் சுருட்டி எடுத்துக் கொண்டு தன்னுடன் வந்த பாடகர்கள் பின் தொடர அங்கிருந்து சென்றாள்.

Tuesday, January 31, 2017

கண்ணன் வருவான், குருக்ஷேத்திரம், சௌபநாட்டுத் தலைநகரில்!

அவர்கள் மாட்ரிகோவட்டாவுக்குள் நுழைந்ததுமே அங்கே காணப்பட்ட பரந்து விரிந்த வீட்டையும் அந்த வீட்டின் சுவர்கள் ஆட்டுத் தோலால் அமைந்திருப்பதையும் கண்டு பிரத்யும்னன் ஆச்சரியம் அடைந்தான்.  அவர்கள் ஓர் பெரிய அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.  மிக ஆடம்பரமாக அலங்கரிக்கப்பட்டிருந்தது அந்த அறை. அவர்கள் எந்தத் திக்கில் சென்றாலும் அங்கே இருந்த பணியாட்கள் அவர்களை மிகுந்த கவனத்துடனும் அக்கறையுடனும் மரியாதையுடனும் கவனித்துக் கொண்டார்கள்.  அன்றிரவு பிரத்யும்னனுக்கும் அவனுடன் வந்தவர்களுக்கும் ஒரு பெரிய அறை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த அறை அவர்களுக்கு விருந்தோம்பல் நடந்த சமூகக் கூடத்திற்குள்ளேயே அமைந்திருந்தது.

பிரத்யும்னன் தான் நன்கு உணவளிக்கப்பட்டுக் கொழுத்துச் செழித்த காட்டுப் பன்றியைப் போல் உணர்ந்தான்.  இப்படித் தனிப்பட்ட முறையில் தனக்கு அதிகக் கவனம் கொடுத்துக் கொண்டிருப்பது தன்னை முற்றிலும் கெடுப்பதற்காக என்று பிரத்யும்னன் புரிந்து கொண்டான். பிரத்யும்னன் மற்றும் அவனுடன் வந்தவர்கள் இன்னொரு அறையிலிருந்த ஒரு சிறிய நீச்சல் குளத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். அந்த அறைக்கு அப்போது யாருமே வராததால் அனைவரும் தங்கள் உடைகளைக் களைந்து நீராட ஆரம்பித்தனர்.  அப்போது அங்கே ஒரு பருத்த கொழுத்த வேலையாள் அந்த அறைக்குள் நுழைந்தான். வந்தவன் நேரே பிரத்யும்னன் அருகே வந்து வணங்கி விட்டுத் தன் இரு கரங்களையும் தட்டினான். உடனே ஏதோ அற்புதம் போல் ஆறு பெண்கள் உள்ளே நுழைந்தனர். பிரத்யும்னன் குளத்திற்குள் மீண்டும் பாய்ந்து நீந்த ஆரம்பிக்க அந்தப் பெண்களும் குளத்துக்குள் நுழைந்து அவனைப் பார்த்துச் சிரித்தனர். பிரத்யும்னன் வெறுப்பில் பின்னே சென்று விட்டான்.

குளித்து முடிந்ததும் வேலையாட்கள் அவர்களுக்கு உண்ண உணவும் குடிக்கப் பழச்சாறுகளும் கொண்டு வந்தனர்.  அதன் பின்னர் அவர்கள் தங்களுக்கு எனக் கொடுக்கப்பட்ட படுக்கைகளில் படுத்து உறங்க ஆரம்பித்தனர். தங்களிடமிருந்து வஜ்ரநப் விடை பெறு முன்னர் பிரத்யும்னன் அவனைப் பார்த்து, “உங்கள் வேலையாட்களால், ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, அவர்களால் எல்லாவிதமான சௌகரியங்களையும் செய்து கொடுக்க இயலுமா?” என்று கேட்டான். மேலாடை அணியாத அங்கிருந்த பணிப்பெண்கள் இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தனர்.  அந்தப் பெண்கள் அனைவரும் அடிமைகள். தாசிகள். அவர்களில் சிலர் மட்டுமே குடும்பம் உள்ளவர்கள். ஆகவே பிரத்யும்னன் மீண்டும் வஜ்ரநபைப் பார்த்துச் சொன்னான். “க்ஷத்திரிய தர்மத்தில் அடிமைகளை ஆதரிப்பதில்லை. அடிமைகள் என எவரும் இல்லை.  இங்கே யாருமே க்ஷத்திரிய தர்மத்தைக் கடைப்பிடிப்பதில்லை போலும்! உயர்குடிப் பிறப்பில் பிறந்த பெண்கள் உட்பட!” என்று கேட்டான்.

வஜ்ரநப் அதற்கு நக்கலாகச் சிரித்துவிட்டுச் சொன்னான். “இங்குள்ள பெண்களில் புனிதமானவள், கற்புள்ளவள் யார் என்று கண்டிபிடிப்பது கடினம். “ என்றவன் பிரத்யும்னனின் தோளின் மேல் தன்னிரு கரங்களையும் வைத்த வண்ணம்” நான் முன்னரே உன்னிடம் சொன்னேன். எங்களுடைய பழக்க, வழக்கங்கள் உனக்குப் பிடிக்காது என்று கூறினேன்.  ஆகவே இங்கு நடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடையாதே! எங்கள் பெண்கள் இப்படியெல்லாம் கண்டனங்கள் செய்வதை விரும்ப மாட்டார்கள்.” என்றவன் தன் குரலை மேலும் தழைத்துக் கொண்டு, “எங்கள் மன்னாதி மன்னருக்குச் சேவை செய்ய வேண்டித் தங்கள் பங்குக்குச் செய்ய வேண்டியதைச் செய்யாதவர்கள் தங்கள் உயிருக்குப் பயந்து வாழ வேண்டி இருக்கும்!” என்று கிசுகிசுப்பாகச் சொன்னான்.

பிரத்யும்னன் முகம் போன போக்கைப் பார்த்துவிட்டு அவன் மேலும் கூறினான். “ஒன்று உறுதியாகச் சொல்கிறேன். எல்லாமே இப்படி இருக்காது! இங்கே பல நூற்றுக்கணக்கான பெண்கள் இருக்கின்றனர். நல்லவர்கள்! அவர்களில் யாருமே இந்தப் பெண்களைக் குறித்து அவதூறாகவும் பேச மாட்டார்கள்.”

“அவர்கள் ஆண்களை எப்படி வழிக்குக் கொண்டு வருகின்றனர்?” என்று பிரத்யும்னன் கேட்டான்.  அதற்கு வஜ்ரநப் சிரித்த வண்ணம், “நம்மிடம் இருக்கும் ஆயுதங்களை விட வலிமையான ஆயுதம் அவர்களிடம் உள்ளது!” என்றான்.  பிரத்யும்னன் அதற்கு, “நம்மிடம் இல்லாத ஆயுதமா? அப்படி என்ன அவர்களிடம் உள்ள ஆயுதம்?” என்று கேட்டான்.  வஜ்ரநப் அதற்குச் சிரித்த வண்ணம், “விஷம், விஷம்! இந்த ஆண்கள் அனைவரும் அந்தப் பெண்களின் மடியில் படுக்கையில் நடக்கும்!” என்றான்.

“அதெல்லாம் என் வீரர்களிடம் நடக்காது!” என்ற பிரத்யும்னன், “ என் வீரர்களின் மன வலிமையையும் அவர்களிடம் தீரா நெருப்பாக எரியும் நம்பிக்கையையும் சிதைக்க நினைக்காதே!” என்றான்.

“நல்லது! உன் நம்பிக்கையை உன்னோடு பாதுகாத்து வைத்துக்கொள்! இளம் யாதவனே! பொக்கிஷம் போல் வைத்துக் கொள். பாதுகாத்துக்கொள்! ஆனால் எங்கள் இளம்பெண்களிடம் நீ கவனமாகவே இருந்தாக வேண்டும்.” என்றான் வஜ்ரநப்! வஜ்ரநபுக்கு பிரத்யும்னனை மிகவும் பிடித்து விட்டது. இவ்வளவு அழகான இளைஞன். நேர்மையானவனும் கூட.  மீண்டும் தன் குரலைத் தழைத்துக் கொண்டு வஜ்ரநப் சொன்னான். “ நீ ஓர் அர்ப்பணிப்பு உணர்வு நிறைந்த க்ஷத்திரியனாகத் தெரிகிறாய், இளைஞனே! என் குமாரனைப் போன்றவன் நீ!” என்று பாராட்டும் குரலில் தெரிவித்தான். வஜ்ரநப் சொன்ன விஷயங்களில் மனம் சிந்தனையில் ஆழ்ந்து போன பிரத்யும்னன் அதனால் பாதிக்கப்பட்டவனாகத் தனக்கென ஒதுக்கப் பட்ட அறைக்குச் சென்றான்.

Monday, January 30, 2017

கண்ணன் வருவான், குருக்ஷேத்திரம்! சௌப நாட்டில்!

பிரத்யும்னன் அந்த ஒட்டகங்களில் அமர்ந்து ஓட்டி வந்த வீரர்களைப் பார்த்தான். அவர்கள் அனைவருமே ஷால்வனின் படையில் மிக உயர்ந்த இடத்தைச் சேர்ந்தவர்கள் என்பது புரிந்தது. அவர்களில் ஒருவன் பிரத்யும்னனைப் பார்த்து, “நீ ஏன் இங்கே வந்தாய்?” என்று வினவினான். “நான் உங்களுடைய மன்னர் மன்னனைச் சந்திக்க வந்திருக்கிறேன். அவரைக் குறித்து நான் நிறையக் கேள்விப் பட்டிருக்கிறேன்.” என்றான் பிரத்யும்னன். “உன் பெயர் என்ன?” என்று அந்தத் தலைவன் கேட்டான். அதற்கு பிரத்யும்னன் நேரிடையாக பதில் கூறாமல், தலைவனிடம், “என்னை உங்கள் மன்னர் மன்னரிடம் அழைத்துச் செல் தலைவா! அவரிடம் நான் யாரென்று கூறுகிறேன். நான் ஏற்கெனவே சொன்னதைப் போல் நான் அவரிடம் நேரிடையாகச் சென்று அறிமுகப்படுத்திக் கொண்டு வந்த வேலையைக் குறித்துச் சொல்லும்படி ஆணையிடப் பட்டிருக்கிறேன்.” என்றான்.

“உங்கள் தரப்பு வீரர்களிடம் உன்னுடைய தகுதி எவ்வகைப்பட்டது? நீ தலைவனா? அல்லது வெறும் படை வீரன் மட்டுமா?” தலைவன் கேட்டான்.

“நான் ஓர் மஹாரதி! உங்கள் அரசன் ஷால்வன் சௌராஷ்டிரத்தை முற்றுகை இடாவிட்டால் நான் மஹாரதி என்னும் நிலையிலிருந்து அதிரதியாக ஆகி இருப்பேன்!” என்றான் பிரத்யும்னன்.

தலைவன் மற்றவர்களைப் பார்த்து, “நான் இன்று திரும்பிச் சென்று விட்டு நாளை மறுநாள் திரும்பி வருகிறேன். இவர்கள் அனைவரும் நம் விருந்தாளிகள். இப்போது நாம் அவர்களின் ஒட்டகங்களை மட்டுமல்லாமல் அவர்கள் சேமித்து வைத்திருந்த சாப்பாடையும் எடுத்துச் செல்கிறோம். ஆகவே அவர்களுக்கு உணவு கொடுத்துப் பாதுகாக்கவும்!” என்றான். அவர்கள் அந்த ஒட்டகங்களின் மேல் மேலும் இரு நாட்கள் பயணம் செய்தனர். முழுக்க முழுக்கப் பாலைவனமாக இருந்த அந்தப் பாதையில் எங்கெல்லாம் சோலைகள் தென்படுகின்றனவோ அங்கே அவர்கள் தங்கி ஓய்வெடுத்தனர். மூன்றாம் நாள் மாலை அவர்கள் ஓர் பெரிய பாலைவனச் சோலைக்கு வந்து சேர்ந்தனர். அன்றிரவை அங்கேயே கழித்தனர். நான்காம் நாள் அவர்கள் கிளம்பும்போது சில வீரர்கள் ஒட்டகங்களில் பயணம் செய்து கொண்டு அங்கே வந்தனர். அவர்களை நெருங்கினார்கள். அவர்களில் பலரிடமும் வில்லும் அம்புகளும் இருந்தன.  தலைவனாகக் காணப்பட்டவன் ஆயுதம் தரித்திருக்கவில்லை. அவர்கள் அருகே நெருங்கியதும் ஒட்டகங்களை நிறுத்திவிட்டு அதிலிருந்து கீழே இறங்கினார்கள்.

தொடர்ந்து சீராகத் தலைவன் அவர்கள் மேல் மரியாதை காட்டி வந்தாலும் அவர்களிடம் அக்கறையுடன் நடந்து கொண்டாலும், அவர்கள் செல்லுமிடம் குறித்த எந்தத் தகவலையும் அவன் பகிர்ந்து கொள்ள மறுத்தான்.  ஐந்தாம் நாள் அவர்கள் இன்னும் பெரியதொரு பாலைவனச் சோலைக்கு வந்து சேர்ந்தனர். அங்கே ஆயுதபாணியாகப் பல தலைவர்கள் அவர்களை வரவேற்றனர். அவர்களுடன் வந்த தலைவனின் யோசனைப்படியும் வழிகாட்டுதலின் பேரிலும் இரண்டு வீரர்கள் பிரத்யும்னனுக்குப் புதிய ஆடைகளைக் கொண்டு வந்து கொடுத்தனர். அவன் அணிந்திருந்த பழைய துணிகளை அவர்கள் வாங்கிக் கொண்டு விட்டனர். இது என்ன புதிய உத்தி என்னும் சிந்தனையில் பிரத்யும்னன் ஆழ்ந்தான்.

அப்போது தலைவன் அவனிடம், “எவ்விதத் தந்திரமும் செய்ய நினைக்காதே! நீ இப்போது அரசர்க்கரசர், மஹா சக்கரவர்த்தியைப் பார்க்கப் போகிறாய்! ஆகவே நீ உன்னுடைய இந்தப் பழைய ஆடை மண்ணும், புழுதியும் நிரம்பிக் காணப்படுவதால் அதை அணிந்து செல்ல முடியாது!” என்றான்.  ஆறாவது நாள் வந்தது. விடிகாலை வேளை!அவர்கள் ஓர் நகரத்துக்கு வந்து சேர்ந்திருந்தனர். அங்கே பல உயர் பதவிகளை வகிக்கும் அதிகாரிகள் தங்கி இருக்கிறார்கள் என்னும் வண்ணம் மாளிகைகள் காட்சி அளித்தன. தெருவின் இரு பக்கங்களிலும் மாளிகைகள் காணப்பட்டன. ஆனால் தெருக்கள் எல்லாம் குப்பைகள் மிகுந்து காணப்பட்டது. ஆடையே அணியாத சின்னஞ்சிறு குழந்தைகள் அங்குமிங்கும் ஓடிக்கொண்டு அந்தப் புழுதியில் விளையாடிக் கொண்டு இருந்தன. அவர்கள் தெருக்களைக் கடந்து செல்கையில் பிரத்யும்னனுக்கு இது ஒட்டகம் சார்ந்த பொருளாதாரம் என்பது திடீரென உதயம் ஆனது. சில ஒட்டகங்கள் அங்கே உள்ள கம்பங்களில் கட்டிப் போடப்பட்டிருந்தன. சிலவற்றிலிருந்து பால் கறந்து கொண்டிருந்தனர். இவற்றைத் தவிர அங்கே ஆடுகள், செம்மறியாடுகள், கோவேறு கழுதைகள் ஆகியனவும் காணப்பட்டன. ஆனால் அங்கே மாடுகளையோ பசுக்களையோ அல்லது குதிரைகளையோ காணமுடியவில்லை.

வீரர்களின் தலைவன் பிரத்யும்னனையும் மற்றவர்களையும் ஒரு முகாமுக்கு அழைத்துச் சென்று அவர்களுக்கு வயிறு நிரம்ப உணவளித்தான். ஆடம்பரமான உணவாக அது இருந்தது. மீண்டும் அவர்கள் பயணத்தைத் தொடங்குகையில் தெருக்கள் எல்லாம் அங்குமிங்கும் சென்று கொண்டிருந்த பல மேன்மையான மனிதர்கள் காணப்பட்டனர். அவர்களில் யாரேனும் ஒருவரிடம் பேசுவதற்கு பிரத்யும்னன் முயற்சி செய்தான்.  ஆனால் வீரர்களின் தலைவன் அவனைப் பிடித்து இழுத்து, “இப்போது நீயும் உன்னுடன் வந்தவர்களும் என் கைதிகள்!” என்று பேசுவதிலிருந்து அவனைத் தடுத்தான்.

“நாங்கள் கைதிகள் அல்ல! இங்கே என்ன யுத்தமா நடந்தது? யுத்தத்தில் தோற்பவர்களைத் தான் கைதிகளாகப் பிடித்துச் செல்வார்கள். நாம் எந்த யுத்தத்திலும் ஈடுபடவே இல்லையே! இங்கே எந்தப் போரும் நடைபெறவே இல்லையே!” என்று பிரத்யும்னன் அதை மறுத்தான்.

“நான் உன்னுடன் ஒத்துப்போகிறேன். போரினாலும் யுத்தத்தினாலும் என்ன கிடைக்கிறது! எதுவும் இல்லை. ஆகவே போரும் யுத்தமும் தேவையற்ற ஒன்று!” என்று சிரித்தான் அந்தத் தலைவன். “ஆனால் ஒன்று! எங்கள் மன்னாதி மன்னர் எனக்குச் சில தனிப்பட்ட முக்கியமான கட்டளைகளைப் பிறப்பித்திருக்கிறார்.  உன்னுடைய உடலின் எந்த பாகத்திலும் சின்னக் கீறல் கூட இல்லாமல் உன்னைக் கொண்டு சேர்க்கவேண்டும் என்பதே அது!  ஆகவே நான் உன்னைப் பாதுகாக்கவே வந்தேன்!” என்றான்.

“என் தோழர்கள்? அவர்கள் கதி என்ன?” பிரத்யும்னன் கேட்டான்.

“ஓ, அவர்கள் இல்லாமலா! அவர்களும் எங்கள் விருந்தினர்களே! சரி, சரி, சீக்கிரம் வா! நாம் இன்னமும் சில யோஜனை தூரம் பிரயாணித்துச் செல்ல வேண்டும்!” என்றான்.  அவர்கள் சூரிய உதயத்திற்கு முன்னால் சில மணி நேரங்கள் பயணம் செய்தனர்.  சூரிய உதயம் ஆகி வெப்பம் அதிகரித்ததும் அவர்கள் ஏதேனும் ஓர் பாலைவனச் சோலையில் தங்கி ஓய்வெடுத்தார்கள்.  இந்த சௌப நாட்டுக்காரர்களின் விசித்திரமான நடத்தையை பிரத்யும்னனால் புரிந்து கொள்ளவே முடியவில்லை. அவர்கள் எங்கே தங்கினாலும் சரி! அங்கே முன் கூட்டியே செய்திருந்த ஏற்பாடுகள் மூலம் அவர்களுக்கெல்லாம் நல்ல உணவும் மற்ற சௌகரியங்களும் தடையின்றிச் செய்து கொடுக்கப்பட்டது.  பார்க்கிறவர்கள் பிரத்யும்னன் தான் அந்த நாட்டின் இளவரசனோ என்று நினைக்கும் வண்ணம் அவர்கள் உபசாரம் இருந்தது.

ஓர் களிமண்ணால் கட்டப்பட்ட கோட்டை வந்தது. தன் ஒட்டகத்தை அதன் அருகே நிறுத்தினான் அந்த வீரர் தலைவன். “நாம் இப்போது மாட்ரிகோவட்டாவை அடைந்து விட்டோம். இது தான் நாம் வந்து சேரவேண்டிய இடம்.  நம் பயணம் இத்துடன் முடிவடைந்தது!” என்ற வீரர் தலைவன் சற்று நிறுத்தி யோசித்துவிட்டுத் தொடர்ந்தான். “உனக்கு என்னுடைய பெயர் தெரியவேண்டும் அல்லவா? என் பெயர் வஜ்ரநப் ஆகும். சௌபவீரர்களின் படைத்தலைவன் நான். ஹூம்! உன் பெயர் என்னவென்று நீ சொல்லவில்லை அல்லவா? அல்லது உனக்குத் தெரியாதா? நான் சொல்லட்டுமா? உன் பெயர் பிரத்யும்னன். கிருஷ்ண வாசுதேவனின் குமாரன். “ அதைக் கேட்ட பிரத்யும்னன் சிரிக்க தலைவனும் சிரித்துக் கொண்டே பிரத்யும்னன் இறங்க உதவி செய்தான். இருவரும் ஒருவரை ஒருவர் ஏமாற்ற நினைத்ததை எண்ணிச் சிரித்துக் கொண்டே பிரத்யும்னனும் கீழே இறங்கினான்.

Sunday, January 29, 2017

கண்ணன் வருவான்! எட்டாம் பாகம்! குருக்ஷேத்திரம்! ஷால்வனைத் தேடி!

ஷால்வனால் பிரத்யும்னன் பிடித்துக் கொல்லப்படக் கூடும் என்பதாலும் மற்ற பல்வேறு காரணங்களினாலும் கிருஷ்ணன் அவனருகே தான் இருக்க வேண்டும் என்று விரும்பினான். அதே சமயம் துவாரகையிலும் கிருஷ்ணன் இருந்தாக வேண்டி இருக்கிறது. தர்மசங்கடமான நிலையில் தவித்தான் கிருஷ்ணன்.  அப்போது பிரத்யும்னன் சொன்னான். “தந்தையே, நான் உங்களிடம் சொன்னதைப் போலவே ஷால்வன் இங்கிருந்து பறந்துவிட்டான். அதுவும் நான் அவனைக் கொன்று விடுவேன் என்று தெரிந்து கொண்டு ஓடி விட்டான். அவன் தன்னுடைய சௌப விமானத்தில் ஏறிப் பறந்து விட்டான். போர்க்களத்தை விட்டு ஓடி விட்டான்.  க்ஷத்திரிய தர்மத்தின்படி எதிர்ப்பைச் சமாளிக்க முடியாதவர்களை எதிர்த்து நான் சண்டை போட முடியாது!” என்றவன் தொடர்ந்து மேலும் குறும்பாக, “அதோடு இல்லை, தந்தையே! நீங்கள் யாதவ குலத்தையே தனி ஒருவனாகக் காப்பாற்றி வந்திருக்கிறீர்கள்! ஒரு முறை அல்ல, பல முறை! ஆகவே இது இப்போது என் முறை! இந்த பயங்கரத்திலிருந்து அனைவரையும் காப்பாற்றி எல்லோரையும் பாதுகாப்பாக உணர வைப்பது என் கடமை! ஒரேயடியாக இந்த பயங்கரத்தை அழிக்க வேண்டும்!” என்றான்.

கிருஷ்ணன் சிரித்தான். “நல்லது, குழந்தாய்! உன்னால் முடியும்!  இந்தக் கடுமையான பிரச்னையைக் கையில் எடுத்துக் கொண்டு தீர்த்து வைக்க முயல்வது உன்னுடைய மாட்சிமையைக் காட்டுகிறது. இதற்கு என்னுடைய ஆசிகள் எப்போதும் உனக்கு உண்டு!” என்றவன் மேலும் சிரித்த வண்ணம், “சீக்கிரமாய்த் திரும்பி வா மகனே! ஆனால் இன்னும் ஒரு வயதான பெண்ணை உன் மனைவியாகக் கொண்டு வந்து விடாதே! உன் தாய் இதிலே கவனமாக இருந்து வருகிறாள்.  அதோடு இல்லாமல் ஒரு திருமணம் ஆன இளைஞன் தன் தாயின் நன்மையையும் மறக்கக் கூடாது! தாயை முக்கியமாகக் கவனிக்க வேண்டும்.  அதோடு எப்போதுமே க்ஷத்திரிய தர்மத்தையும் மறக்கக் கூடாது!” என்றான்.

“நான் முயற்சி செய்கிறேன், தந்தையே!” என்றான் பிரத்யும்னன். கிருஷ்ணன் தொடர்ந்தான். “ இந்த அபாயகரமான வேலையில் நீ ஈடுபடுவதை நான் தடுத்திருக்கலாம். உன்னை இன்னும் கொஞ்சம் நிதானப்படுத்தி இருக்கலாம்.  ஆனால் நீ இளைஞன். தன்னந்தனியாகப் பல்வேறு சாகசங்களை நிகழ்த்த நீ விரும்புவாய்! விரும்புகிறாய்! நீயாகவே வெற்றித் திருமகளை உன்னிடம் சேர்த்துக் கொள்ள விரும்புகிறாய்! அதில் தான் நீ சந்தோஷமும் அடைவாய்! ஆகவே நான் உன்னைத் தடுக்கவில்லை!”

அதன் பின்னர் பிரத்யும்னன் தன்னுடைய இரண்டு தோழர்களுடன் லாவனிகா நதியைக் கடந்து பாலைவனத்துக்குள் நுழைந்தான்.  அங்கே ஓர் சோலையைக் கண்டு அங்கே சற்று அமர்ந்து அவர்கள் ஓய்வு எடுத்தார்கள். அங்கே போதிய தண்ணீர் கிடைத்ததோடு அல்லாமல் மரங்களும் சுட்டெரித்துக் கொண்டிருந்த சூரிய வெப்பத்திலிருந்து கொஞ்சம் இதமான பாதுகாப்பைக் கொடுத்தது.  அங்கே சில மாதங்கள் முன்னர் ஒரு மாபெரும் ஒட்டகப் படை வந்து இருந்து தங்கி விட்டுச் சென்றதற்கான அடையாளங்கள் இன்னமும் மிச்சம் இருந்தன.  பிரத்யும்னனுக்கு அந்தச் சோலையைப் பார்த்ததுமே இந்த வழியில் நேரே சென்றால் ஷால்வனின் தலைநகரை நாம் அடைவோம் என்பதில் சிறிதும் சந்தேகம் இருக்கவில்லை! பிரத்யும்னனும் அவன் படை வீரர்களும் அந்தச் சோலையில் இரவைக் கழித்தனர்.

அடுத்த நாள் விடிகாலையில் காலைக்கடன்களை முடித்துக் கொண்டு உணவு உண்டு விட்டு அவர்கள் மேலே தொடர்ந்து செல்ல ஆரம்பித்தனர். அந்தப் பாலைவனத்து மணற்பாங்கான பாதையில் சுட்டெரிக்கும் வெயிலில் தொடர்ந்து நடந்து செல்வதோ குதிரைகளைச் செலுத்துவதோ கடினமாகவே இருந்தது.  நேரம் ஆக ஆகச் சூரியனின் வெப்பமும் அதிகம் ஆகிக் கொண்டிருந்தது. அங்கே பத்தே பத்து குடிசைகள் நிறைந்த ஒரு சின்னக் கிராமத்தில் சற்றுத் தங்கினார்கள். அங்கே சில ஒட்டகங்களும், பல நூற்றுக்கணக்கான  ஆடுகளும் மேய்ந்து கொண்டிருந்தன.  அங்கே ஒரு ஆழமான கிணறும் அருகே ஓர் நீர்த்தொட்டியுடன் காணப்பட்டது. அந்தத் தொட்டியில் நிரப்பும் நீரைத் தான் அந்தக் கால்நடைகள் குடிக்கும் என்பது புரியும்படி இருந்தது.

அங்கிருந்த குடிசைகளிலிருந்து இவர்கள் வருகையைக் கண்டதும் இரு ஆண்கள் வெளிவந்தார்கள். அவர்களில் ஒருவன் கைகளில் வில்லும் அம்புகளும் காணப்பட்டன. அவர்கள் தங்கள் கைகளைத் தங்கள் காதுகளில் வைத்து ஜாடை காட்டினார்கள். தலையை ஆட்டினார்கள். பிரத்யும்னன் என்ன சொல்கிறான் என்பது தங்களுக்குப் புரியவில்லை என்பதை இதன் மூலம் தெரிவிக்கிறார்கள் என்பதை அவர்கள் புரிந்து கொண்டார்கள்.  அவர்கள் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள முயற்சித்துக் கொண்டிருந்த சமயத்தில், இன்னொரு வீரன் குடிசையிலிருந்து வெளியே வந்தான். அவன் பூரண ஆயுதபாணியாகக் காட்சி அளித்தான்.

ஈட்டி, வாள், கவசம், கேடயம் ஆகியவற்றோடு அவன் கைகளில் வில்லும் அம்புகளும் கூடக் காணப்பட்டன. அந்த வீரர்களின் தலைவனாக இருக்கலாம் என்று பிரத்யும்னன் எண்ணினான். அவன் பிரத்யும்னன் பக்கம் வந்து தன் கை, முகம் ஆகியவற்றால் ஜாடை காட்டி பிரத்யும்னனை அங்கிருந்து செல்லும்படி வற்புறுத்தினான். ஆனால் பிரத்யும்னன் தனக்குத் தெரிந்த சௌப மொழியில் பேச ஆரம்பித்தான். அவனுக்கு நன்றாகப் பேசத் தெரியாது என்றாலும் ஓரளவு பேசுவான். ஆகவே தனக்குத் தெரிந்த சௌப மொழியில், தான் கிருஷ்ண வாசுதேவன் சார்பில் வந்திருப்பதைத் தெரிவிப்பான். கிருஷ்ண வாசுதேவன் தர்மத்தின் பாதுகாவலன் என்றும் நீதி, நேர்மையில் சிறந்தவன் என்றும் அவற்றைப் பாதுகாப்பதைத் தன் வாழ்நாள் லட்சியமாகக் கொண்டிருப்பவன் என்பதையும் ஆரிய வர்த்தத்தின் அனைத்து அரசர்களையும் சந்தித்துத் தன் நோக்கத்திற்கு ஆதரவு திரட்டுகிறான் என்பதையும் இப்போது ஷால்வனையும் சந்திக்க வேண்டும் என்பதையும் கூறினான்.

ஷால்வனைச் சந்தித்துக் கிருஷ்ண வாசுதேவனின் செய்தியைத் தான் கூற விரும்புவதாகவும் தெரிவித்தான். ஆகவே அந்த இணையற்ற அரசன் ஷால்வனைத் தான் சந்திக்க வேண்டும் என்றும் கூறினான். அதைக் கேட்ட அந்த வீரர் தலைவன் ஏதோ நகைச்சுவையைக் கேட்டது போல் பெருங்குரலெடுத்துச் சிரித்தான். அதோடு தன் ஜாடை மொழியிலேயே அவர்களை அங்கேயே இருக்கச் சொல்லிக் கட்டளை இட்டான். மீறினால் அவர்கள் தன் வீரர்களினால் கொல்லப்படுவார்கள் என்றும் கூறினான். பிரத்யும்னன் மற்றும் அவன் கூட வந்தவர்களின் ஆயுதங்களை அந்தத் தலைவன் வாங்கிக் கொண்டான். பின்னர் பிரத்யும்னனும் அவன் நண்பர்களும் அதுவரை பயணித்து வந்த ஒட்டகங்கள் பால் தன் கவனத்தைத் திருப்பினான்.  அவற்றில் ஒன்றின் மேல் தான் ஏறிக் கொண்டு மற்றவற்றையும் அங்கிருந்து ஓட்டிக் கொண்டு சென்றான்.

Saturday, January 28, 2017

கண்ணன் வருவான், எட்டாம் பாகம்! குருக்ஷேத்திரம்! மாயாவதி!

பிரத்யும்னனுக்குத் தன் தந்தையை அழைத்துச் சென்று மாயாவதியின் பொறுமையைச் சோதிக்கத் தயக்கமாகவே இருந்தது. அதையும் மீறியே தந்தையை அழைத்துச் சென்றான். காட்டுக்குள்ளே சரியாகத்தெரியாத தடங்களிலேயே செல்லும்படியாக இருந்தது.  பின்னர் ஓர் வெற்றிடம் வந்து சேர்ந்தனர். அங்கே மாயாவதி உணவு தயாரித்துக் கொண்டு இருந்தாள். அவர்கள் மாயாவதியைப் பார்த்ததும் கிருஷ்ணன் அவளைப் பார்த்துக் கேட்டான். “இந்தக் குடும்பத்தின் மற்றப் பெண்களோடு நீயும் ஏன் கிரிநகர் செல்லவில்லை? ஏன் காட்டில் தங்கி இருக்கிறாய்?” என்றான்.  அதற்கு மாயாவதி, “நான் உங்கள் குடும்பத்தின் அகந்தை மிக்க பெண்களோடு சேர்ந்து தங்கி இருப்பேன் என நினைக்கிறீர்களா? அப்படி எதிர்பார்க்கிறீர்களா?  அவர்களில் எவரும் என்னை அங்கீகரிக்கவில்லை; நானும் அவர்களை அங்கீகரிக்கவில்லை!” என்றாள்.

“ஆனால் நீ ஏன் அவர்களுடன் செல்லவில்லை?” மீண்டும் அதே கேள்வியைத் தான் கிருஷ்ணன் கேட்டான். “என்னுடைய திட்டங்களை ஏற்கெனவே நான் போட்டுவிட்டேன்.” அவள் கொஞ்சம் ஏளனம் கலந்த வெறுப்புடன் பார்த்தாள். “எனக்குப் பிடித்த வகையில், பிடித்த வழியில் என் சொந்த வாழ்க்கையைத் திட்டம் செய்திருக்கிறேன்!” என்றாள்.

“ஆஹா, அது சரிதான்! ஆனால் நீ எப்படி பிரத்யும்னனுடன் செல்ல முடியும்? அவன் தன்னந்தனியாக ஆரியர்களின் முக்கிய எதிரியான ஷால்வனைச் சந்திக்கவன்றோ செல்கிறான். ஷால்வனின் தலை நகரத்துக்குள்ளே உன்னைப்போன்ற பெண்கள் பிரத்யும்னன் துணையாக இருந்தாலுமே செல்வது சரியல்ல!” என்றான்.

“இந்த விஷயத்தை இங்கே பேசுவது பொருளற்றது! நான் இதைக் குறித்து முதல் நாளே பிரத்யும்னனிடம் விரிவாகப் பேசிவிட்டேன். அன்று தான் பிரத்யும்னன் ஷால்வனைத் தேடிச் செல்வது குறித்த கேள்விகள் எழுந்தன!” என்றாள்.

“ஆனால் நீ எப்படி அவனுடன் போக முடியும்? நீ அவனுடன் சென்றால் அது பெரியதொரு பிரச்னையில் வில்லங்கத்தில் கொண்டு விடும். ஏனெனில் அவன் ஷால்வன், நமது எதிரியைச் சந்திக்கப் போகிரன். தெரியும் அல்லவா?” என்று கிருஷ்ணன் குறுக்கிட்டான்.

“பிரச்னை! வில்லங்கம்! ஆஹா! அதுவும் அப்படியா? நான் இல்லை எனில் பிரத்யும்னன் என்ன ஆகி இருப்பான் தெரியுமா? இன்று அவன் உயிருடன் இருப்பதே என்னால் தான். அவனுக்கு ஐந்து வயது தான் இருக்கும். அவன் திருடப்பட்டுக் கடத்திச் செல்லப்பட்டான். அவனுக்குத் தான் எங்கிருந்து வந்தோம் என்பதே தெரியாது! தன் பெற்றோர் யார் என்றும் தெரியாது! நான், நான், என்னை மட்டுமே அவன் அறிவான். நான் அவனுக்குத் தந்தையாக, தாயாக, ஒரு சகோதரியாக,ஒரு சகோதரனாக எல்லாமுமாக இருந்தேன்.  ஆனால் அதையும் மீறியதொரு பந்தம் எங்கள் இருவருக்கிடையே உருவாகி இருந்தது. இந்த உறவுகளுக்கெல்லாம் அப்பாற்பட்டதொரு பந்தம்!”

“நாங்கள் இருவரும் ஒருவரில் ஒருவர் அடங்கினவர்கள். ஈருடல், ஓருயிர்! நான் மட்டும் இல்லை எனில் பிரத்யும்னன் இருந்த இடமே தெரியாமல் போயிருப்பான். உயிருடன் இருந்திருக்க மாட்டான். அவன் என்னை ஒரு தாயை விட அதிகமாக நேசிக்கிறான். தாய் மாதிரியே நினைக்கிறான்.”

சற்றே நிறுத்திய மாயாவதி ஒரு பெருமூச்சுடன் தொடர்ந்தாள். “ஒரு நாள் இரவு! அந்த நாள்! அந்தக் கொடுமையான கொடூரமான கொலைகாரர்கள் தங்கள் புதிய தேடல்களில் சென்றிருந்த அந்த நாள்! நாங்கள் இருவரும் வழக்கம் போல் தூங்கச் சென்றோம். ஆனாலும் நான் நடு இரவில் திடீரென விழித்து விட்டேன். அப்போதிருந்த என் மனோநிலை என் அமைதியைக்குலைத்து விட்டது! நான் திடுக்கிட்டுப் போனேன். அப்போது தான் எனக்குப் புரிந்தது. பிரத்யும்னன் இன்னமும் ஓர் குழந்தை அல்ல! வளர்ந்த இளைஞன் என்றும் தனக்கான துணையைத் தேடுகிறான் என்பதையும் புரிந்து கொண்டேன்.”

“அப்போது தான் அப்போது தான் நான் புதியதொரு மனுஷியாக ஆனேன். புதியதொரு பெண்! முற்றிலும் புதியவள். நான் பாதி தான் விழித்திருந்தேன். அவன், பிரத்யும்னன் தன் கைகளை மெதுவாக மிகமிக மெதுவாக மென்மையாக என் மேல் போட்டிருந்தான். ஒருவேளை அவன் தூக்கத்தில் அது தற்செயலான ஓர் நிகழ்வாகக் கூட இருக்கலாம்.  ஆனால் அந்த நிமிடத்தில் நான் எல்லையற்ற பரவசத்தில் ஆழ்ந்து போனேன். பிரத்யும்னனும் அதே போல் அந்த நிமிடத்திலிருந்து தான் மாறிப் போனான். அவனுள்ளும் மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன.  அவனும் எல்லையற்ற உணர்ச்சிப் பிரவாகத்தில் நடுங்கிக் கொண்டிருந்தான். அந்த நிமிடத்திலிருந்து தான் நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் வாழ்க்கைத் துணையாக ஏற்றுக் கொண்டோம். ஒன்றோடு ஒன்றாகக் கலந்து போனோம்.”

“எங்கள் திருமணத்தைக் கொண்டாட எங்களால் பெரிய அளவில் விருந்துகள் ஏதும் அளிக்க முடியவில்லை; முடியவும் முடியாது! அதே போல் எங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்க எந்த ஸ்ரோத்திரியர்களும் அங்கில்லை!  நானே எழுந்து அக்னியை மூட்டினேன்.  பின்னர் நாங்கள் இருவரும் அந்த அக்னியை ஏழு முறை வலம் வந்து வணங்கினோம். அதன் மூலம் எல்லாம் வல்ல அந்தப் பரம்பொருள் எங்களை இணைத்துவிட்டதாகவே நம்புகிறோம். ஆனால் அடுத்த நாள் தான் இந்தக் கஷ்டமான காரியத்தைச் செய்ததில் உள்ள எல்லையற்ற பிரச்னைகளைக் குறித்த அறிவு என் மனதுக்கு எட்டியது. என் கண்கள் திறந்தன!”

“ஆனால் உங்களுக்குத் தெரியாது! அந்த நாளிலிருந்து பிரத்யும்னன் என் வாழ்க்கையில் எவ்விதமான பாகத்தை ஏற்று வந்திருக்கிறான் என்பதை நீங்கள் அறிய மாட்டீர்கள்! நான் அன்றே முடிவு எடுத்து விட்டேன். பிரத்யும்னனை அந்தக் கொடுமைக்காரர்கள் கருணை காட்டி உயிருடன் விடும்படி வைக்கக் கூடாது. அவனை அந்தத் தளையிலிருந்து விடுவிக்க வேண்டும்.  ஏனெனில் பிரத்யும்னன் என் வாழ்க்கைத்துணை மட்டுமல்ல! என் உயிர், என் காதலன், என் நெஞ்சம், என் கண்ணின் மணி, என் பாதுகாவலன், எல்லாமும் அவனே! ஒவ்வொரு நாளும் அன்றிலிருந்து நான் வாளின் முனையில் நடப்பது போன்ற உணர்வுடன் இருக்கிறேன். எந்நேரமும் என் தலைக்கு மேல் கத்தி தொங்குவதைப் போல் உணர்கிறேன். அதன் பின்னரே நான் சித்தப்பா உத்தவரைச் சந்தித்தேன். அவர் தான் எங்களுக்கு ஒரு சின்ன வீட்டைக் கட்டிக் கொடுத்திருக்கிறார். அந்த வீட்டில் நாங்கள் எங்களால் முடிந்தவரை சந்தோஷமாக வாழ்ந்து வருகிறோம். எங்களுக்கென சிறியதொரு பரிவாரங்களையும் சித்தப்பா உத்தவர் அளித்திருக்கிறார். அவர்கள் எங்களைஆபத்திலிருந்து காப்பாற்ற உதவுகிறார்கள்.”

“”நீங்கள் அவரை முதன்மையான மஹாரதியாக ஆக்கி இருக்கிறீர்கள். அவர் மிகவும் அன்பானவர். நான் அவரை உங்களிடம் அழைத்து வந்திருக்கிறேன். ஏனெனில் உங்களால் அவருடைய கௌர்வத்தை இந்த ஆரிய வம்சத்து அரசர்களிடையே மீட்டுத் தர இயலும். அதிகாரத்தைப் பெற்றுத் தர முடியும். அவர் இன்னமும் பல இடங்களுக்கும் சென்று பல்வேறு சாகசங்களைப் புரிந்து நன்மைகளையும் நல்லவைகளையும் செய்ய வேண்டுமென்று விரும்புகிறேன்.  அவற்றைச் செய்வதற்காக அவர் சற்றுப் பொறுமை இல்லாமலேயே காத்திருக்க வேண்டி இருக்கிறது. பிரத்யும்னர் இவற்றை எல்லாம் முடிக்கும்படி நீங்கள் தான் உதவ வேண்டும்!”

“என் வாழ்க்கையே பிரத்யும்னனைச் சுற்றி அவரால் கட்டுண்டு இருக்கிறது! நீங்கள் ஏன் திரும்பத் திரும்ப ஒரே கேள்வியைக் கேட்கிறீர்கள்? அதையே நான் திரும்பத் திரும்பச் சொல்ல வேண்டும் என்று ஏன் விரும்புகிறீர்கள்? அவர் எங்கே சென்றாலும் நானும் அங்கேயே செல்வேன்! அவர் எங்கும் செல்லாமல் துவாரகையில் இருக்க விரும்பினால் நானும் இங்கேயே இருப்பேன். ஒரு வேளை அவரை ஷால்வன் கொன்று விட்டால், நீங்கள் பயப்படுவது போல் நடந்து விட்டால்! நானும் அவருடன் உடன்கட்டை ஏறி விடுவேன்.  நான் ஏன் இதை எல்லாம் உங்களிடம் சொல்கிறேன் தெரியுமா? இது வரை சித்தப்பா உத்தவரிடம் மட்டுமே சொல்லி இருக்கிறேன். அவரைத் தவிர நீங்கள் ஒருவர் மட்டுமே எங்கள் வாழ்க்கையைக் குறித்துச் சிறப்பாக நினைக்க முடியும். எங்கள் வாழ்க்கை எவ்வளவு அழகானது என்பதைப் புரிந்து கொள்ளவும் முடியும்!”

Wednesday, January 25, 2017

கண்ணன் வருவான், எட்டாம் பாகம், குருக்ஷேத்திரம்! பிரத்யும்னன் கதை!

பிரத்யும்னனுக்கு சுமார் இருபது வயது இருக்கும்.  அவனைப் பார்த்தால் காலத்திற்கு ஒவ்வாதவனாக, அராஜகவாதியாகத் தெரிவான். ஆனால் அவனுக்குத் தன்னுடைய யாதவ குலத்திடமும், யாதவ மக்களிடமும் ஆழ்ந்த அன்பும் அதீதமான கூட்டுறவும் இருந்தது. அவன் ஓர் நல்ல தலைவனாகப் பரிணமிப்பான் என்றே அனைவரும் நினைத்தனர். மேலும் சற்றும் பயமின்றி தர்மத்துக்காகப் போராடினான். அங்குள்ள அனைவராலும் மிகவும் விரும்பப்பட்டான். அனைவரும் அவனை மிகவும் நேசித்தனர். கடந்த ஐந்து வருடங்களாக அவன் க்ஷத்திரிய தர்மத்தைக் குறித்த பயிற்சிகளைப் பல்வேறு விதங்களில் கிருஷ்ணனின் மேற்பார்வையில் கற்று வந்தான்.  அவன் வரையில் கடவுளருக்கும் அசுரருக்கும் இடையில் முடிவுறாத பிரச்னைகள் இருந்து வந்தன.  அவன் கற்றுக்கொள்ளும் ஒவ்வொரு விஷயமும் அவனை ஓர் திடமான தைரியம் படைத்த க்ஷத்திரிய தர்மத்தைக் காப்பாற்றுவதில் முதன்மையானவனாகக் காட்டி வந்தது.  எதையும் முழு மனதுடன் தீவிரமாகக் கற்றுக்கொள்ளும் அவனுடைய இயல்பான சுபாவமும் தீரம் நிறைந்த உள்ளுணர்வும் அவனை இந்தப் பயிற்சிகளில் முழு மனதுடன் ஈடுபடச் செய்தது. அவனும் அதை நன்கு உணர்ந்திருந்தான்.

பிரத்யும்னன் முழு மனதுடன் இதில் ஈடுபட்டதோடு ஊக்கத்துடனும் உற்சாகத்துடனும் இருந்து வந்தான். இது வரையிலும் அவன் செய்தவை அனைத்தும் அவன் தந்தையாகிய கிருஷ்ணனின் தலைமைக்குக் கீழ் அவன் மேற்பார்வையிலேயே அவனுடைய நிழலிலேயே அவன் செய்து வரும்படி இருந்தது.  ஆனாலும் கிருஷ்ணன் அதைத் தன் மகனுக்கு உரியது என்றே சொல்லியும் அதை அப்படியே வெளிப்படையாகப் பாராட்டியும் வந்தான்.  உண்மையில் கிருஷ்ணனின் தூண்டுதலும், அவன் கொடுத்த ஊக்கமும் இல்லை எனில் பிரத்யும்னனால் இவ்வளவு தூரம் செய்ய முடியுமா என்பதும் சந்தேகம் தான்! இளைஞன் ஆன பிரத்யும்னன் மல்லன் பூர்ணாவின் மோசமான நடத்தையை வெறுக்கவோ அதற்காகச் சினம் கொள்ளவோ இல்லை.  ஏனெனில் அவன் பிரத்யும்னனின் இடத்தில் துவாரகையில் அமர்த்தப்பட்டிருந்தான். பூர்ணாவிடம் பாசமே அதிகம் காட்டி வந்தான் பிரத்யும்னன்.

அவன் தாய் ருக்மிணி, விதர்ப்ப நாட்டின் இளவரசி அவனை ஓர் ஆரியர்களின் தலைவனாகவே வளர்த்து வந்தாள்.  அவன் க்ஷத்திரிய தர்மத்தைக் கற்பதிலும் அதைக் காப்பதிலும் காட்டிய ஈடுபாட்டை அவள் ஊக்குவித்தாள். அதன் பின்னர் தான் அந்த எதிர்பாரா நிகழ்வுகள் நடந்தன!  பிரத்யும்னன் ஷாம்பர் என்பவனால் கடத்தித் திருடிக் கொண்டு செல்லப்பட்டான். மாதங்கள் ஓடின. ஏன் வருடங்கள் கூடச் சென்றன. மகன் எங்கே இருக்கிறான் என்பதே தெரியவில்லை ருக்மிணிக்கு! அவள் மனம் உடைந்தது. ஒரு முறை நடந்த சிறு போரில் பிரத்யும்னன் ஷாம்பாரைக் கொன்றான். அவன் அழிந்ததும் தன் மனைவி மாயாவதியுடன் துவாரகை திரும்பினான்.  அங்கு அவளைத் திருமணமும் செய்து கொண்டான். அவள் அவனை விடப் பத்து வயது பெரியவளாக இருந்த போதிலும் அவளையே திருமணம் செய்து கொண்டான். அவள் பிரத்யும்னனுக்கு மனைவியே அல்ல, தாய் என்று யாதவர்கள் அனைவரும் கேலி பேசியதோடு அல்லாமல் இப்படி நடந்ததற்கு வெட்கமும் அடைந்தனர்.

ருக்மிணி தன் மகன் இப்படி க்ஷத்திரிய தர்மத்திலிருந்து விலகி நடந்து கொண்டதை ஒருக்காலும் மன்னிக்கவே இல்லை. அவள் மனம் புண்பட்டது. அவள் மாயாவதியையும் தன் மருமகளாக ஏற்கவில்லை. பிரத்யும்னனையும் மகனாக ஏற்கவில்லை.  தற்செயலாக அவர்களைச் சந்திக்க நேர்ந்தால் கூடத் தாங்கொணா வெறுப்பில் முகத்தைத் திருப்பிக் கொள்வாள். பிரத்யும்னன் செய்த அனைத்து முயற்சிகளும் பலனற்றுப் போயின. அவன் தாயின் மனதை அவனால் மாற்ற முடியவில்லை. ஆனால் கிருஷ்ணன் இதை ஏற்கவில்லை. அவன் ருக்மிணியை மனதை மாற்றிக்கொள்ளும்படி கூறினான். நம் பையன் நம்மிடம் இருக்கிறான். நம்மிடம் அளவிலாப் பாசம் கொண்டிருக்கிறான். இளைஞன், கடவுள் நம்பிக்கை உள்ளவன், நன்றாகப் பேசக் கூடியவனும் ஆவான். இதை விட என்ன வேண்டும்! இப்போதும் கிருஷ்ணன் அதே மனோநிலையில் இருந்தான்.

அவர்கள் கடைசியில் தனிமையில் விடப்பட்டதும் கிருஷ்ணன் பிரத்யும்னனிடம் கேட்டான். “எங்கே உன் மனைவி மாயாவதி? அவள் இந்த அரச குடும்பத்தின் மற்றப் பெண்களோடு தங்கி இருக்கிறாளா? அல்லது பிருகுகச்சாவுக்கோ கிரிநகரத்துக்கோ சென்றிருக்கிறாளா? அனைவரும் அவளைக் குறித்துப் பேசிக்கொள்ளும் மர்மம் என்ன? என்ன ரகசியம்?”

“நீங்கள் அவளை ஒருக்காலும் கண்டுபிடிக்க முடியாது!” என்றான் பிரத்யும்னன்.

“ஓ, அப்படியானால் அவள் எங்கே இருக்கிறாள்?” கிருஷ்ணன் கேட்டான்.

“அவள் காட்டில் தங்க விரும்பினாள். “

“ஓ, அப்படியா? காட்டில் அவள் என்ன செய்கிறாள்?”

“அவள் ஷால்வனை நான் போய் சந்திக்கையில் என்னுடன் வருவதற்காகத் தன்னையும் தயார்ப் படுத்திக் கொண்டு இருக்கிறாள்.”

“மகனே, நீ மனைவியைத் தேர்ந்தெடுத்த விதம் மிகவும் துரதிர்ஷ்டவசமானது! போகட்டும்! நீ ஷால்வனைச் சந்திக்கப் போவது குறித்து உன் மனைவியுடன் கலந்து ஆலோசித்து விட்டாயா?”

“தந்தையே, தன்னால் விளைந்திருக்கும் பாவத்தை நிவர்த்தி செய்ய அதை இவள் ஓர் பரிகாரமாகச் செய்ய விரும்புகிறாள். அப்படித் தான் இதை அவள் பார்க்கிறாள்.” என்றான் பிரத்யும்னன்.

“அவள் இன்னமும் காட்டில் தான் இருக்கிறாளா? மகனே நீ அதை நிச்சயமாக அறிவாயா?”

“தந்தையே, நான் அவளுடன் கடந்த பதினைந்து வருடமாகச் சேர்ந்து வசித்து வருகிறேன்.”

“அவள் ஏன் இங்கே வந்து மற்ற அரசகுலப் பெண்டிரோடு சேர்ந்து இருக்கக் கூடாது?” என்று கிருஷ்ணன் கேட்டான்.