Tuesday, April 10, 2012

தர்மத்தின் வாழ்வதனைச் சூது கவ்வும்!

சந்தோஷத்தில் துள்ளிக் குதித்த பீமன் ,”நான் துரியோதனனின் மண்டையையும், அவன் நண்பன் அந்தத் தேரோட்டி மகன் கர்ணனின் கழுத்தையும் முறிக்க ஆசைப்படுகிறேன்.” இதைச் சொல்கையிலேயே தான் அந்தக் காரியத்தைச் செய்து முடித்துவிட்டாற்போல் பூரணத் திருப்தி அடைந்தான் பீமன். “அண்ணா, நடு அண்ணா, இவ்வளவு கொடூரக் காரனாய் இருக்காதே. நமக்கெல்லாம் எதுவும் ஆகாது; நாம் நன்றாகவே இருப்போம்.” அர்ஜுனன் பீமனைக் கண்டிக்கும் தோரணையில் கூறினான். அதே சமயம் உத்தவனைப் பார்த்துச் சிரித்ததில் இருந்து இது அடிக்கடி நடக்கும் ஒன்று என உத்தவன் புரிந்து கொண்டு அவனும் சிரித்தான். பீமனோ அதை லக்ஷியம் செய்யாமல், “நான் தீமைகளை அழிக்கவே பிறந்துள்ளேன்.” என்று பெருமையுடன் கூறினான். மேலும், அர்ஜுனனைப் பார்த்து, “நான் உன்னைப் போல் மனம் பலஹீனமானவன் அல்ல; அதே சமயம் பெரியண்ணா யுதிஷ்டிரனைப் போல் ஒரு துறவியும் அல்ல. நான் யதார்த்தமான விஷயங்களை அதன் போக்கிலேயே புரிந்து கொண்டு நடப்பவன். அவங்க என்னோடு சண்டை போட்டாங்கன்னா நானும் சண்டை போடுவேன். சும்மா விட மாட்டேன்.” என்றான்.

“ஓஹோ, பீமா, நீங்கள் ஒருவருக்கொருவர் இப்படி அடித்துக் கொண்டால் உங்கள் வம்சமே பாழாகிவிடுமே! இந்தக் குருவம்சத்தினரின் மாபெரும் சாம்ராஜ்யத்தின் அஸ்திவாரமே ஆட்டம் கண்டு விடும் போல் இருக்கிறதே. இது உங்களை மட்டுமில்லாமல் ஆர்யவர்த்தத்தையே பாதிக்கும். “ என்று உத்தவன் கவலையுடன் கூறினான். பீமனோ அதைக் குறித்துக் கவலைப்படாமல், “ஆர்யவர்த்தம் இதை அனுபவித்தே ஆகவேண்டும். அதன் அஸ்திவாரம் ஆட்டம் கண்டதெனில் பலப்படுத்த உதவியாக இருக்கும். எத்தனை நாட்கள் இப்படிப் பயந்து கொண்டு வாய் மூடி மெளனியாக இருப்பது? எப்போது, எங்கே இருந்து, எம்முறையில் தாக்கப் போகிறார்கள் என்ற நிச்சயமற்ற சூழ்நிலையில் எப்படி வாழ்வது? உண்ணும் உணவில் கூட விஷத்தைக் கலந்தார்கள். எத்தனை நாட்கள் பயந்து பயந்து உணவு உண்ண முடியும்?? அவர்கள் பக்கம் நீதியோ, நியாயமோ, உண்மையோ இல்லை. இந்த அநீதிக்குப் பயந்தல்லவோ வாழவேண்டி உள்ளது? ஆகவே அர்ஜுனா, உன் ஆயுதங்களை நன்கு கூர் தீட்டி வைத்துக்கொள். இப்போது நிஜமாகவே துரியோதனாதியரோடு யுத்தம் செய்ய வேண்டி இருக்கும்.” பீமன் பெருமூச்சு விட்டான்.

அப்போது அவர்களை மதிய உணவு உண்ண வேண்டி அழைக்க வந்த குந்தி, பீமனின் கடைசி வார்த்தைகளைக் காதில் வாங்கிக் கொண்டாள். ஆனால் இளைஞர்கள் மூவரும் அதை அறியவில்லை. “பீமா, எப்போதும் யுத்தம், போர் என்றே பேசாதே! எனக்குப் பயமாய் இருக்கிறது.” என்று கவலையோடு கூறினாள் குந்தி. குந்தியின் உண்மைப் பெயர் ப்ரீத்தா என்பதாகும். குந்திபோஜனுக்கு தத்துக் கொடுக்கப்பட்டு அவனால் வளர்க்கப்பட்டதால் குந்தி என்ற காரணப்பெயரைப் பெற்றாள். பார்த்தாலே மரியாதை கொடுக்கும் விதமாய்க் காணப்பட்டாள் குந்தி. முக காந்தி மெய் சிலிர்க்க வைத்தாலும் அதில் காணப்பட்ட நிரந்தர சோகம் அனைவர் மனதையும் வருத்தியது. தன் மக்களைப் பார்க்கையில் அவள் கண்கள் அன்பு நிரம்பியதொரு கடல் போல் காணப்பட்டது. அதோடு தன் குழந்தைகள் வளர்ந்து இளைஞர்களாக ஆகி இருப்பதை ஏற்காதவள் போல அவர்கள் இன்னமும் சிறுகுழந்தைகள் என்று தோன்றும்படியாகப் பேசினாள் குந்தி.

“அம்மா, நாம் க்ஷத்திரியர்கள். போர் செய்வதும் ரத்தம் சிந்துவதும் நம் தொழில்; தர்மம்; கடமை. “

“தர்மத்தைக் காக்க மட்டுமே ஆயுதங்களைக் கையில் எடுக்க வேண்டும் பீமா!” குந்தி கண்டிப்பான குரலில் கூறினாள்.

“அதே தான் தாயே! நம் அனைவரையும் அதர்மத்தில் இருந்தும் அதர்மமான முறையில் நாம் தாக்கப்படுவதில் இருந்து காக்கவேண்டிய கடமை எனக்கு இருக்கிறது. துரியோதனாதியரின் அதர்மமான செயல்களில் இருந்து நம் அனைவரையும் காக்கவேண்டும் என்றே நான் நினைக்கிறேன். அதற்காகவே போர் செய்ய எண்ணுகிறேன். உங்கள் மகனான எனக்கு இது கடமையன்றோ!” பீமன் கூற, “உத்தவன் போன்ற சிறந்த வீரர்கள் துணை இருக்க உங்களுக்கு ஆபத்து எங்கிருந்து வரும்?” என்று கூறினாள் குந்தி.

“அத்தையாரே, எங்களில் கூட ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டிருந்தோம். இப்போது தான் எதிரிகளிடம் மட்டுமே சண்டையிடுவது என வைத்திருக்கிறோம். இதை எங்களுக்கு உணர்த்திய வாசுதேவ கிருஷ்ணனுக்குத் தான் நன்றி சொல்ல வேண்டும்” என்றான் உத்தவன்.

“ஆஹா, கிருஷ்ணன் மட்டும் இங்கிருந்தால்?” குந்தி பெருமூச்சு விட்டாள்.

Wednesday, April 4, 2012

பீமன் விவரிக்கிறான்!

“உத்தவா, தாத்தாவைக் குறை சொல்லாதே! அவர் என்ன செய்வார் பாவம்! இந்த மாபெரும் சாம்ராஜ்யச் சுமையைத் தன்னந்தனியாகத் தோள்களில் சுமந்து கொண்டு வந்திருக்கிறார். அவருடைய நீண்ட நெடிய வாழ்க்கையில் அவர் கண்ட சுகம் தான் என்ன?? வாலிபப் பருவத்திலேயே தன் தந்தையார் ஷாந்தனுவுக்காக, அவருடைய இல்வாழ்க்கைக்காக மாபெரும் சபதம் ஒன்றைச் செய்தார். அப்போதே தன் தந்தையாரிடம் தாம் உயிருடன் இருக்கும்வரையில் இந்தக் குருவம்சத்தினரின் மேன்மையைக் குறித்து மட்டுமே நினைப்பது, அதற்காகாவே பாடுபடுவது, தர்மத்தின் வழியில் அரசாட்சி நடைபெறுகிறதா எனக் கண்காணிப்பது என்ற பொறுப்புக்களையும் தாம் ஏற்றுக்கொண்டு இன்று வரை அதைச் செவ்வனே நிறைவேற்றியும் வருகிறார். இந்த நாட்டிற்காகவும், நாட்டு மக்களுக்காகவும் அவர் செய்திருக்கும் தியாகம் அளப்பரியது. வேறு எவரும் செய்யக் கூடியதல்ல. இப்போது என் பெரியப்பா குமாரர்கள் கட்டுப்பாட்டுக்குள் வராமல், அடங்காமல் இருப்பதைக் கண்டு அவர் மனம் நொந்து போயிருக்கிறார் என்பதையும் நாங்கள் அறிவோம். எங்களாலேயே ஓரளவுக்கு சாந்தி அவருக்குக் கிடைத்து வருகிறது. இந்த நாட்டிற்காக அவர் படும் கஷ்டங்கள் அனைத்தும் எங்களால் தீர்த்து வைக்கப்படும் எனவும் நம்புகிறார்.”

“இன்னொரு விஷயம் அறிவாயா நீ? இதே தான் பகவான் வேதவியாசரும் நினைக்கிறார். சென்ற முறை இங்கே அவர் வந்திருந்த சமயம், எங்களை அழைத்து என்ன கூறினார் தெரியுமா, “குழந்தைகளே, அரச தர்மத்திலிருந்தும், க்ஷத்திரிய தர்மத்திலிருந்தும் சிறிதும் பிறழாமல் உங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளுங்கள். ஒரு நாள் நீங்கள் இந்த ஹஸ்தினாபுரத்தின் அரியணை ஏறுகையில் தர்மத்தின் பாதையில் செல்வதைக் குறிக்கோளாய்க் கொள்ளுங்கள்.” என்று கூறினார். “ அர்ஜுனன் நீண்டதொரு பிரசங்கம் செய்த களைப்பில் காணப்பட்டான்.

“பின் ஏன் அவர்களால் துரியோதனாதியரைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முடியவில்லை?” உத்தவனுக்குப் புரியவே இல்லை. அர்ஜுனன் சிரித்துக் கொண்டான். “நீதிக்கும், அநீதிக்கும் இடையே நடக்கும் போர் இது. இதில் எப்போது சரியான சமயம் வருகிறதோ அப்போதே நீதி ஜெயிக்கும். அதுவரை காத்திருக்க வேண்டியது தான். இப்போதைக்கு துரியோதனாதியர் தங்களுக்கென ஓர் அணி அமைத்துக் கொண்டிருப்பதாய்க் கேள்விப் படுகிறேன்.” சட்டெனத் தன் குரலைத் தழைத்துக் கொண்ட அர்ஜுனன் சுற்றுமுற்றும் பார்த்து அங்கே யாரும் இல்லை என்பதையும் வேறு யாரும் கதவருகிலேயோ, சாளரத்தருகிலேயோ நின்று ஒட்டுக் கேட்கவில்லை என்பதை நிச்சயப்படுத்திக் கொண்டு ரகசியம் பேசும் குரலில் உத்தவனிடம் கூறினான்:”ஆசாரியர் துரோணர் கூட இப்போது எங்களை ஆதரிக்கவில்லை என்று செய்தி காதில் விழுகிறது.” அர்ஜுனன் பேசிக் கொண்டிருக்கையிலேயே தடதடவெனக் காலடிச் சப்தங்கள் கேட்டன. இருவரும் நிமிர்ந்து பார்த்தனர். பீமனின் உற்சாகக் குரலும், உற்சாகம் ததும்பும் முகமும் தென்பட்டன.

பீமனே உள்ளே நுழைந்தான். பாண்டவர்களில் இரண்டாவது ஆன பீமன் அர்ஜுனனை விடவும் நல்ல உயரமாகவும், அவன் கழுத்தே ஒரு தூண் போல நின்று கொண்டு அவனிரு தோள்களும் அந்தக் கழுத்தைத் தாங்குவது போலவும் தோன்றியது உத்தவனுக்கு. சாதாரண மனிதனை விடவும் உயரமும், பருமனும் அதிகம் கொண்டிருந்த அவன் உத்தவனை வரவேற்கும் தோரணையில் பார்த்துவிட்டு, “அர்ஜுனா, நான் எல்லா ஏற்பாடுகளும் செய்துவிட்டேன்.” என்று அறிவித்தான். மீண்டும் தன்னுடைய விசாலமான முகமே மேலும் விசாலம் ஆகும்படியான புன்னகை ஒன்றைச் செய்து கொண்டு உத்தவனைக் கட்டியணைத்துக் கொண்டு ஆசிகளை வழங்கினான். “நடு அண்ணா, என்ன ஏற்பாடுகள்? எதைச் செய்துவிட்டீர்?” அர்ஜுனன் புரியாமல் கேட்டான். அவர்களுக்கு எதிரே இருந்த ஓர் ஆசனத்தில் அமர்ந்தான் பீமன். “துரியோதனனும், அவன் சகோதரர்களும், அவர்களின் தாய்க்கு சகோதரரும், காந்தார இளவரசரும் ஆன சகுனி மாமாவுடன் சேர்ந்து கொண்டு ஒரு மோசமான திட்டம் போட்டு நம்மைக் கவிழ்க்க அல்லது அடியோடு அழிக்க இருந்தனர். அஸ்வத்தாமாவும் இந்தப் போட்டா போட்டியில் தீவிரமான உணர்வுகளோடு கலந்து கொண்டிருக்கிறான். வரும் இரவுகளில் ஓர் இரவு நம் அனைவரையும், அவர்கள் கொன்றுவிடத் திட்டம் போட்டிருக்கின்றனர். “ பீமன் சொல்லி முடிக்கையில் ஏதோ வேடிக்கை விளையாட்டைப் பற்றிப் பேசுவது போன்ற தொனியில் கூறினான். கூறிவிட்டு இடி இடியெனச் சிரிக்கவும் செய்தான்.

“நீர் இதை எவ்வாறு அறிந்தீர்?” அர்ஜுனன் கேட்க, பீமன், “சஹாதேவனுக்கு எப்படியோ தெரிந்திருக்கிறது. ஒருவேளை சித்தப்பா விதுரர் கூறி இருக்கலாம். அவன் என்னிடம் கூறினான். அவர்கள் நமக்காகச் செய்திருக்கும் ஏற்பாடுகளின் மூலமே அவர்களைக் கவிழ்க்க ஏற்பாடுகள் செய்கிறேன்.” ஒரு குழந்தையின் குதூகலத்தோடு கூறிய பீமன், “அர்ஜுனா, உன் வில், அம்புகளைத் தயார் செய்து கொள். இவ்வளவு நேரம் பாடுபட்டு அவற்றை நீ தீட்டிக் கூர் செய்து வைத்தது வீணாகலாமா?? இந்த மாளிகையைச் சுற்றிலும் நான் பலத்த காவலுக்கு ஏற்பாடு செய்துவிட்டேன். அவர்கள் நம்மைத் தாக்கவேண்டியது தான். நாம் அவர்களை உடனே முடித்துவிடலாம். என்ன அர்ஜுனா, நான் சொல்வது சரிதானே?” பீமன் குதூகலம் பொங்கக் கேட்டான்.

Tuesday, April 3, 2012

அர்ஜுனனுக்குக் கலக்கம்!

சற்று நேரம் அர்ஜுனன் தான் பேசவேண்டியதை யோசித்துப் பின்னர் பேசத் தொடங்கினான். அவன் நிதானமாகப் பேசுவதில் இருந்து தான் அதன் முக்கியத்துவத்தை உத்தவன் உணர்ந்து கொண்டான். “உத்தவா, எங்கள் பெரியப்பாவின் மக்களுக்கு எங்களைக் கண்டால் சுத்தமாய்ப் பிடிக்கவில்லை. மனப்பூர்வமாய் வெறுக்கின்றனர். அதுவும் எங்கள் மூத்தவரான யுதிஷ்டிரர் யுவராஜா ஆனதை துரியோதனனால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. அவனுக்குச் சேரவேண்டிய உரிமையை அவர் பிடுங்கிக் கொண்டதாகவே நினைக்கிறான். தன் தந்தை திருதராஷ்டிரன் இப்படிப் பிறவிக் குருடாகப் பிறந்ததை அவனால் ஏற்கவும் முடியவில்லை; அதற்காகத் தந்தையை அவன் மன்னிக்கப் போவதும் இல்லை. ஏனெனில் அவர் பிறவிக் குருடராகப் பிறந்ததன் காரணமாகவே அரசுக்கட்டில் ஏறமுடியவில்லை. எங்கள் தந்தையான பாண்டு அரசரானார். திருதராஷ்டிரனுக்குச் சேரவேண்டியதைப் பாண்டு பிடுங்கிக் கொண்டு எங்களிடம் கொடுத்துவிட்டார் என்றே எண்ணுகிறான். “ அர்ஜுனன் மீண்டும் சிரித்தான்.

“ம்ம்ம்ம்… உன் தந்தை தானே குருவம்சத்தில் கடைசி அரசராக இருந்தார். மக்கள் போற்றும் நல்ல அரசராகவும் ஆட்சிபுரிந்தார். “ உத்தவன் தொடர்ந்தான். “நம் நாட்டின் அரசகுல வழக்கப்படி யார் அரசராக இருந்தார்களோ அவர்களின் மூத்தமகனே அடுத்த அரசனாக முடியும்; ஆகவேண்டும். அதோடு வயதில் மூத்தவரே அரியணை ஏறுவதும் வழக்கம். அப்படிப் பார்த்தாலும் யுதிஷ்டிரனுக்கே அந்தத் தகுதி இருக்கிறது. ஆகவே இது முறைகேடானது அல்ல.”

“உண்மைதான். அதனால் தான் தாத்தா பீஷ்மர் அவர்கள் மூத்தவனான யுதிஷ்டிரனை யுவராஜாவாகத் தேர்ந்தெடுத்தார். ஆனால் எங்கள் பெரியப்பாவின் குமாரர்களுக்கு இது பிடிக்கவில்லை; அவர்கள் யுதிஷ்டிரனை ஒத்துக்கொள்ளவும் இல்லை.” அர்ஜுனனுக்குத் தன் தகப்பனைக் குறித்துக் கொஞ்சம் பெருமையும் ஏற்பட்டது.
“எப்படிப் பார்த்தாலும் நீங்கள் பாண்டுவின் புத்திரர்களே அரசாளத் தகுதி படைத்தவர்கள். “ உத்தவன் கூறினான். “பிரச்னையே அது தான்.” அர்ஜுனன் புன்னகை புரிந்தான். “எங்கள் பெரியப்பாவின் குமாரர்கள் எங்களை வெறுக்கின்றனர். எங்கள் திறமையை வெறுக்கின்றனர். நாங்கள் எல்லாவற்றிலும் திறமைசாலிகளாக இருப்பதையும் வெறுக்கின்றனர். நாங்கள் ஹஸ்தினாபுரத்துக்காக நடந்த சில போர்களில் கலந்து கொண்டு ஹஸ்தினாபுரத்துக்கு செல்வத்தையும், புகழையும் கொண்டு வந்ததை அவர்களால் சகிக்க முடியவில்லை. இதனால் நாட்டு மக்களுக்கு எங்கள் மேல் அளவற்ற அபிமானம் இருப்பதையும் அவர்களால் பொறுக்க முடியவில்லை. குறிப்பாக பீமனை அவர்கள் எப்படியேனும் கொல்லவே முயன்றார்கள். ஏனெனில் ஒவ்வொரு முறையும் எங்களை அவர்கள் அவமானம் செய்ய நினைத்தபோதெல்லாம் பீமன் அவர்களை முட்டாளாக்கிவிட்டுச் சிரிப்பான். “

“அவர்களையும் குற்றம் சொல்ல முடியாது. அல்லவா?” உத்தவன் கொஞ்சம் நடுநிலையோடு பேசினான். “ஏனெனில் நீங்கள் ஐவருமே திறமைசாலிகளாகவும், தைரியசாலிகளாகவும், அனைவராலும் விரும்பப் படுபவர்களாகவும் இருக்கின்றீர்கள். உங்களைப் பார்த்தால் எனக்கே பொறாமை வருகிறதே.”

“சகோதரா, உத்தவா! நாங்கள் அரச குடும்பத்தில் பிறக்காமல் ஒரு சாதாரணக் குடும்பத்தில் பிறந்திருக்கலாம். “ பெருமூச்சு விட்டான் அர்ஜுனன். “அப்போது நாங்கள் ஐவரும் துவாரகைக்கு வந்து உன்னோடும், கிருஷ்ணனோடும், பலராமனோடும் எங்கள் வாழ்நாட்களை கழிக்கலாம். இன்பமயமாக இருந்திருக்கும்.”

“நீங்கள் எங்களைத் தேடி வந்தால் நாங்கள் கட்டாயமாய் முழுமனதோடு உங்களை வரவேற்போம்.” உத்தவன் குரலில் ஒரு ஆதுரம் தொனித்தது. “அதிலும் கிருஷ்ணனுக்கு உன்னை மிகவும் பிடிக்கும். உன்னை அதிகமாய் நேசிக்கிறான். உன்னுடன் கழித்த இனிய நாட்களை அவன் மறக்கவில்லை.”

அர்ஜுனன் மன்னிப்புக் கேட்கும் குரலில், “பீமனுக்கு கிருஷ்ணனும், பலராமனும் செய்திருக்கும் உதவிகளை நாங்கள் மறக்க முடியுமா? மதுராவில் இருக்கையில் கழிந்த அந்த ஆனந்தமயமான நாட்கள். நானும், கிருஷ்ணனும் அருகருகே படுத்துக் கொண்டு இரவு முழுதும் பேசிக் கொண்டிருப்போம். சில நாட்கள் விண்ணில் சுக்கிரோதயம் கூட ஆகிவிடும். அவ்வளவு நேரம் பேசிக் கொண்டிருப்போம்.” அர்ஜுனன் கண்கள் அந்தப் பழைய நினைவுகளில் ஆழ்ந்தது. “பீமனின் வெகுளித்தனத்தையும், அவனுடைய நல்ல குணத்தையும் மறக்க இயலுமா? அவனும் எங்கள் அனைவரையும் மிகவும் நேசிக்கிறான்.” உத்தவன் ஆமோதிக்க, அர்ஜுனன் கொஞ்சம் யோசனையோடு கூறினான். “ஹஸ்தினாபுரத்தை விட்டு நாங்கள் எப்போதோ வெளியே செல்ல எண்ணினோம். ஆனால் அப்படிச் செய்ய முடியாமல் தாத்தா பீஷ்மரின் அன்பு எங்களைக் கட்டிப் போட்டு வருகிறது. நாங்கள் இங்கிருந்து கிளம்பினால் அவர் மனம் உடைந்து போவார்.”

“ஏன்? உங்கள் பெரியப்பா குமாரர்களைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர அவரால் இயலவில்லை எனில் உங்களுக்கென ராஜ்யத்தைப் பிரித்துக் கொடுத்துத் தனியாக உங்களை அனுப்பி வைக்கலாமே? அவருக்கு அத்தகைய அதிகாரம் இல்லையா என்ன? இம்மாதிரி தினம் தினம் நீங்கள் படும் அவஸ்தைகளுக்கும், மன வேதனைகளுக்கும் ஒரு முடிவு வருமே! அவர் அதைச் செய்யலாமே!” உத்தவன் கொஞ்சம் கோபமாகவே சொன்னான்.

Saturday, March 31, 2012

என்னதான் நடக்கும், நடக்கட்டுமே!

அன்று காலை உத்தவன் அங்கே வந்து சேர்ந்தபோது பீமனும், அர்ஜுனனுமே கோட்டை வாயிலுக்குச் சென்று அவனை எதிர் கொண்டு அழைத்து வந்தனர். சம்பிரதாயப்படி குந்தியைச் சந்தித்து வணங்கி மூத்தவரான யுதிஷ்டிரரையும் பார்த்துத் தான் கிருஷ்ண வாசுதேவனின் செய்தியைச் சுமந்து வந்திருப்பதை உத்தவன் தெரிவித்தான். கிருஷ்ண வாசுதேவன் ஹஸ்தினாபுரத்துக்கு வரப் போகிறான் என்பதைக் கேட்டுக் கொண்டு யுதிஷ்டிரர் அன்றாட ராஜரீக நிர்வாகங்கள் குறித்தான ஆலோசனைகளில் கலந்து கொள்வதற்காக அரச சபைக்குப் புறப்பட்டுச் சென்றார். சாத்திரங்களில் வல்ல சஹாதேவனும் உடன் சென்றிருந்தான். அவன் இந்த ராஜநீதியிலும், நிர்வாக சம்பந்தமான விஷயங்களிலும் மற்ற சாத்திரங்களிலும் நிபுணனாக இருந்ததோடு இத்தனை சிறிய வயதில் ராஜரீக நிர்வாகக் குழுவில் முக்கியமானதொரு உறுப்பினராகவும் நியமிக்கப் பட்டிருந்தான். இந்த ராஜரீக நிர்வாகக் குழுவே யுதிஷ்டிரருக்கு அவ்வப்போது தக்க ஆலோசனைகளை வழங்கி வந்தது.

பீமனும், நகுலனும் தங்கள் தங்கள் வேலைகளைக் கவனிக்க குந்தியோ அன்றாட வீட்டு நிர்வாகங்களைக் கவனிக்கவும், அன்றைய மதிய உணவுக்கான சிறப்பு ஏற்பாடுகளைக் குறித்துச் சொல்லவும் சென்றுவிட்டாள். உத்தவன் மெல்ல அர்ஜுனனிடம் ஹஸ்தினாபுரத்தின் அப்போதைய சூழ்நிலையைக் குறித்து விசாரித்தான். அர்ஜுனனும் சிறிதும் மறைக்காமல் அனைத்தையும் உத்தவனிடம் பகிர்ந்து கொண்டான். யுதிஷ்டிரரை யுவராஜாவாக ஆக்கினாலும் கூட அவர்களுக்கு நிம்மதி என்பதோ, மனதிலே உற்சாகமோ ஏற்படவில்லை என்பதையும் குறிப்பாகத் தெரிவித்தான். உத்தவனோ பிதாமஹர் பீஷ்மரின் ஆதரவும், நாட்டு மக்களின் ஆதரவும் குறைவற இருக்கும்வரையில் ஏன் கவலைப்படவேண்டும் எனக் கேட்டான். அர்ஜுனன் அவனை நிமிர்ந்து பார்த்தான். அவன் முகத்தில் விசித்திரக் கலவையானதொரு உணர்வு.

வேறொரு அம்பை எடுத்து அதன் கூர்மையைத் தன் கைகளால் பரிசோதித்த அர்ஜுனன், அதைத் தீட்டிய வண்ணமே பேச ஆரம்பித்தான். “ஆம், எங்கள் மூத்தவர் யுவராஜாதான். இந்த நாட்டு மக்களுக்குக் கட்டளையிடக் கூடிய அதிகாரம் படைத்தவரே. ஆனால் அவருடைய கட்டளைகள் எங்கள் தந்தை வழிச் சகோதரர்கள் ஆன பெரியப்பா மகன்களிடம் சிறிதும் எடுபடவில்லை; அவர்கள் யுவராஜா யுதிஷ்டிரரையோ அவரிடும் கட்டளைகளையோ ஒரு பொருட்டாக மதிப்பதே இல்லை. மக்கள் எங்களை எவ்வளவு ஆழ்ந்து நேசித்தாலும், இவர்கள் செய்யும் காரியங்களும் போடும் திட்டங்களும் எங்களைப் படுகுழியில் தள்ளிவிடும் போல் உள்ளன. அவர்கள் எங்களை அடியோடு அழிக்க நினைக்கின்றனர்.” ஒரு சிரிப்போடு சொன்ன அர்ஜுனனைக் கூர்ந்து கவனித்தான் உத்தவன்.

அவனால் அர்ஜுனனின் இந்தச் சிரிப்பைக் கண்ணனின் சிரிப்போடு ஒப்பிடாமல் இருக்க முடியவில்லை. ம்ம்ம்ம்?? அர்ஜுனனும் கண்ணனும் ஒரே மாதிரிச் சிரிக்கின்றார்களே?? இல்லை; இல்லை. ஒரு வித்தியாசம் இருக்கிறது. ஆம், கண்ணனின் புன்னகை மனதை மயக்குவதோடு அல்லாமல் அனைவரின் இதயத்தையும் கவரும்; இல்லை; அது கூடச் சொல்ல முடியாது. அனைவரின் இதயத்தையும் வெல்லும் தன்மையுடையது. அர்ஜுனனின் சிரிப்போ கண்களைக் கவர்வது என்னவோ உண்மைதான்; அதில் நட்பும் தெரிகிறது தான். ஆனால் கண்ணனின் புன்னகையை விட அந்த மாசு மருவில்லாச் சிரிப்பை விட இதயத்தின் ஆழத்தில் சென்று நமக்கு நம்பிக்கையையும், உறுதியையும், பாதுகாப்பையும் கொடுக்கும் புன்னகையை விட இந்த அர்ஜுனனின் புன்னகை பல மாற்றுக் குறைவுதான்.

அர்ஜுனன் இது எதையும் அறியாதவனாகத் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தான். உத்தவன் உடனே, “ உங்கள் ஐவரால் குரு வம்சத்திற்கு எவ்வளவு பெருமை சேர்ந்திருக்கிறது என்பதை அறிவாய் அல்லவா?? தன்னுடைய நியாயமான நேர்மையான வழிகளா யுதிஷ்டிரனும், பீமனும், நீயும் உங்கள் திறமையாலும், வலிமையாலும், மூத்தவனை மதிக்கும் பண்பாலும், நகுலன் குதிரைகளைப் பழக்குவதிலும், உங்களோடு ஒத்து இருப்பதிலும், “ உத்தவன் பேசுகையில் அர்ஜுனன் குறுக்கிட்டு, “அதே போல் சஹாதேவன் இந்த இளம் வயதில் சாத்திரங்களைப் பூரணமாக அறிந்திருப்பதோடு எங்கள் அனைவருக்கும் கட்டுப்பட்டு இருப்பதிலும், எங்கள் ஐவரின் ஒற்றுமையும், பலமும் குருவம்சத்துக்கு மேன்மேலும் பெருமையைத் தேடித் தரும் என்பதில் சந்தேகமே இல்லை.” உத்தவன் நகுலனையும், சஹாதேவனையும் விட்டுவிட்டதில் அர்ஜுனனுக்கு இருந்த வருத்தத்தை அவன் புரிந்து கொண்டான். தன் மாற்றாந்தாயின் மகன்களாக இருந்தாலும் அவர்களைத் தன் சொந்த சகோதரர்களாகவே அவன் மட்டுமின்றி மற்ற இருவரும் கருதுவதையும் புரிந்து கொண்டான்.

Friday, March 30, 2012

அர்ஜுனனும், உத்தவனும் பேசுகின்றனர்.

ஹஸ்தினாபுரத்தின் அரசனாக இருந்த திருதராஷ்டிரனின் அரண்மனைக்குப்பக்கத்திலேயே ஒரு அழகான அரண்மனை. அதன் வாயிலில் பலத்த காவல் போடப் பட்டிருந்தது. அதோடு பல்வேறு மக்களும் அங்கே காத்துக்கொண்டிருப்பதைப் பார்த்தால் யாரோ முக்கியமானவர்கள் அங்கே வசிப்பதாய்த் தெரிய வருகிறது. அதோடு அரசவையின் நிர்வாகத்தில் சம்பந்தப்பட்ட தளபதிகள், அமைச்சர்கள் என வந்து போய்க் கொண்டிருந்தனர். அதன் நீள நீளமான தாழ்வாரங்களில் ஆங்காங்கே விற்கள், அம்புகள், கதைகள், வாள்கள், வேல்கள் எனக் குவிந்து கிடந்தன. பார்த்தால் ஒரு ஆயுதசாலையே அங்கே இருந்தது எனலாம். அங்கே கங்கையைப் பார்த்த வண்ணம் ஒரு நீண்ட தாழ்வாரம். அங்கே உத்தவன் ஒரு ஆசனத்தில் அமர்ந்திருந்தான். அவனுக்கு எதிரே பாண்டுவின் புத்திரர்களில் மூன்றாவதான அர்ஜுனன் தன்னருகே இருந்த மாபெரும் வில்லின் அம்புகளின் கூரைச் சரிபார்த்துக்கொண்டு மேலும் கூர் தீட்டிக் கொண்டிருந்தான். அவன் முகத்தின் பாவமும், உத்தவன் முகத்தின் பாவமும் விஷயம் ஏதோ முக்கியமானது என்பதைச் சுட்டிக் காட்டியது.

அர்ஜுனன் வில் வித்தையில் மட்டும் சிறந்து விளங்காமல், ஆயுதங்கள் தயாரிப்பதில் அவனுக்கு நிகரில்லை என்னும்படி விளங்கினான். தனக்குத் தேவையான ஆயுதங்களை அவனே தயாரித்துக் கொண்டதோடு அல்லாமல் அதில் ஏதேனும் ஒரு தனிப்பட்ட சிறப்பம்சத்தைப் புகுத்தியும் சோதனைகள் செய்து அதில் வெற்றியடைந்தான். அவனுக்கு இருந்த கூரிய கண் பார்வையும், திறமையும் அவனுக்குக் கடவுள் தந்த வரம் என்றே அனைவரும் பேசிக்கொண்டனர். கிட்டத்தட்டச் சம வயது இளைஞர்களான இருவரும் உயரம், பருமன், ஆகிருதியில் ஒன்றாகத் தெரிந்தாலும், அவர்களுக்குள்ளே வித்தியாசங்களும் காணப்பட்டன. வெளிப்பார்வைக்குக் கவர்ச்சியாகக் காணப்பட்டாலும் உத்தவனின் கண்டிப்பான மனம் அவன் கண்களிலும், முகபாவத்திலும் தெரிந்தது. அவன் வயது இளைஞர்களிடம் காணப்படாத ஒரு தீவிரமான பொறுப்பும், மன முதிர்ச்சியும் அவனிடம் காணப்பட்டது.

ஆனால் அர்ஜுனனோ? உத்தவனுக்கும் அவன் அத்தை மகன் தான். அவன் தந்தை தேவபாகனுக்கும் குந்தி சகோதரியே. அர்ஜுனன் நன்றாக ஆகிருதியோடு இருந்ததோடு அல்லாமல் நல்ல சிவந்த முகத்துடனும், அழகான முகத்துடனும் எடுப்பான உடல்கட்டோடும் காணப்பட்டான். அவனுடைய ஒவ்வொரு அங்கமும் பார்த்துப் பார்த்துச் செதுக்கியது போல் வசீகரத்துடனும், இணையற்ற எழிலுடனும் காணப்பட்டது. பார்ப்பவர்களை மறுமுறை திரும்பிப் பார்க்க வைக்கும் விதம் அவன் காணப்பட்டான். ஈடு இணையற்ற புத்திசாலித் தனம் பளிச்சிட்ட கண்களில் மேலே வளைந்திருந்த புருவங்கள் பெண்களுக்கு இருப்பது போல் வில்லைப் போல் காணப்பட்டது. உணர்ச்சிகள் ததும்பும் கண்களைக் கொண்டிருந்த அவன் குரலும் வசீகரமாக இருந்ததோடு பேசும் ஒவ்வொரு வார்த்தையும் உணர்வுகளில் தோய்ந்து எதிராளியைக் கவர்ந்தது. அவன் அணிந்திருந்த உடையும், ஆபரணங்களும் கூட அவன் உணர்வுகளை எடுத்துக்காட்டுவது போல் அமைந்திருந்தது. இருவரும் என்ன பேசிக் கொள்கிறார்கள்?????

Tuesday, March 27, 2012

ஏகலவ்யனின் தியாகம்!

அஸ்வத்தாமா வேகமாய்ச் சென்றுவிட்டான்; துரோணர் தனக்குத் தானே சிரித்துக் கொண்டு மீண்டும் மீன்களுக்கு உணவிடும் வேலையை ஆரம்பித்தார். அவர் கைகள் இயந்திரத்தனமாய் அந்த வேலையைச் செய்கையில் மனம் பின்னோக்கிச் சென்றது. தன்னைத் தானே மெச்சிக்கொண்டார் துரோணர். எந்தவிதமான உணர்ச்சிகளுக்கும் இடம் கொடுக்காமல் அவரால் எப்படிப்பட்ட சிக்கலான அரசியல், வாழ்நாள் சூழ்நிலைகளையும் அவற்றின் புதிர்களையும் அவிழ்த்துத் தன்னுடைய விருப்பத்திற்கேற்ப மாற்றி அமைக்க முடியும். ஆம்! அவர் என்ன நினைக்கிறாரோ, என்ன எண்ணுகிறாரோ அதற்கேற்ற சூழ்நிலைகளை உருவாக்கும் திறன் அவரிடம் உள்ளது. இதற்கானதொரு அழிக்க முடியாச் சான்றும் கடந்த காலங்களில் உண்டு. ம்ம்ம்ம்ம்??? அந்த நிஷாத இளவரசன் ஏகலவ்யன்!

துரோணரின் முன்னே சில வருடங்களுக்கு முன்னர் நடந்த அந்த நிகழ்ச்சிகள் விரிந்தன. துரோணரின் வில் வித்தைத் திறமை குறித்தும், ஆயுதப் பயிற்சி குறித்தும் அறிந்த நிஷாத இளவரசன் ஏகலவ்யன் அவரிடம் வந்து பாதம் பணிந்து தன்னையும் அவர் சீடனாக ஏற்றுக்கொள்ள வேண்டினான். ஆனால் துரோணர் அவனாலோ அவனின் நிஷாத நாட்டினாலோ தனக்குப் பயன் ஏதும் விளையாது என்பதைப் புரிந்து கொண்டார். ஆகவே தனக்கு இவன் சீடனாக ஆனால் பிற்காலத்தில் இவனால் பயன் ஏதும் இராது என்பதைத் தெரிந்து கொண்டார். தன்னுடைய திறமையைப் பயனற்ற சீடர்களிடம் செலுத்த விருப்பமில்லாத துரோணர் அவனை நிராகரித்துவிட்டார். குரு வம்சத்து இளவரசர்களை, முக்கியமாய் அர்ஜுனனை, தன்னிரு கைகளாலும் மாற்றி, மாற்றி ஒரே வேகத்தோடு வில்லையும் அம்பையும் பிரயோகிக்கத் தெரிந்தவனை மேலும் திறமைசாலியாக்க வேண்டும். ஏகலவ்யன் சென்றுவிட்டான். காட்டில் அவனுடைய வேடுவ நாட்டுக்குச் சென்றவன் துரோணரிடம் கொண்டிருந்த கண்மூடித்தனமான பக்தியில், அவரைப் போன்றதொரு சிலையைச் செதுக்கி, தனக்கு குருவாக மேற்கொண்டு தன் வில் வித்தையைத் தானே ஆரம்பித்துக் கொண்டான். விரைவில் அர்ஜுனனை விடவும் திறமைசாலியாக மாறினான்.

தற்செயலாக இது குறித்து அறிய நேர்ந்தார் துரோணர். முதலில் தன்னுடைய நேரடியான இருப்பை விடவும் தன்னுடைய நினைவிலேயே ஒருவன் வில் வித்தையில் தேர்ந்தது குறித்துப் பெருமையும், கர்வமும் ஏற்பட்டது என்னவோ உண்மைதான். ஏகலவ்யனின் வித்தையை நேரில் பரிசோதிக்கச் சென்றார். அவனுடைய திறமையும், வேகமும், ஒழுங்கும் கட்டுப்பாடான பிரயோகத்தையும் கண்டு பிரமித்தார். ஒரு வேட்டுவ நாட்டு இளவரசனிடம் இத்தனை திறமையா என வியந்தார்! ஆனால்,,,, ஆனால் இது நமக்கு நன்மை தருமா?? ஒரு வேட்டுவனிடம் இத்தனை திறமைகள் குவிந்திருப்பது; அதுவும் வில் வித்தையில் நவீனமான பாணிகளை அவன் புகுத்தித் திறமையுடன் பிரயோகம் செய்வது நாட்டுக்கும், அதன் அரசர்களுக்கும் நன்மை பயக்குமா? அவன் யாருக்கு உதவி செய்கிறானோ அவர்கள் பக்கமே நிச்சயம் ஜெயம் ஏற்படும். கூடாது; இதை வளரவிடக் கூடாது. துரோணருக்குத் தன் நிலைமை குறித்த அச்சமும் ஏற்பட்டது. என்றாவது ஒரு நாள் இந்த இளைஞன் அர்ஜுனனை விடவும் சிறந்து விளங்குவான். ஆஹா, குரு வம்சத்து இளவரசர்கள் மூலம் என் நிலைமையை மேம்படுத்திக்கொள்ள இருக்கும் என் கதி என்னாவது! இவனை வளரவிட்டால் அதோகதிதான். என்ன செய்யலாம்??

அப்போது அந்த இளைஞனே அதற்கும் வழி வகுத்துக் கொடுத்தான். தான் குருவின் நேரடி மேற்பார்வையில் வித்தைகள் கற்காவிட்டாலும் துரோணரின் பெயரையும், அவரின் உருவச் சிலையையும் வைத்துக் கற்றிருப்பதால் இப்போது நேரடியாகத் தன்னை வாழ்த்த வந்திருக்கும் குருவுக்கு குரு தக்ஷிணை கொடுக்க ஆசைப் பட்டான். துரோணரிடம் குரு தக்ஷிணையாக எது வேண்டுமெனக் கேட்டான். உடனே துரோணரின் மனதில் ஒரு எண்ணம் தோன்றியது. அவனைப் பார்த்து அவன் வலக்கைக் கட்டை விரலைத் தனக்குக் காணிக்கையாகக் கொடுக்கும்படி சொல்ல இளைஞன் திகைத்தான். துரோணரின் கால்களில் வீழ்ந்து வேறு எதை வேண்டுமானாலும் கேட்கும்படி வேண்ட, துரோணரோ பிடிவாதமாய் அவன் வலக்கைக் கட்டைவிரலைத் தவிர வேறெதையும் தனக்கு குரு தக்ஷிணையாகக் கொடுக்க வேண்டாம் எனச் சொல்லிவிடுகிறார். இல்லை எனில் தாம் அவனுக்கு இலவசமாய்க் கற்றுக் கொடுத்ததாய் இருக்கட்டும் எனச் சொல்லிவிட்டு எழுந்து விடுகிறார். குருவுக்கு தக்ஷிணை கொடுக்கவில்லை எனில் வித்தை பூர்த்தி இல்லை என்பதை அறிந்த ஏகலவ்யன் கண்ணீர் மல்கும் கண்களோடு தன் வலக்கைக் கட்டை விரலை அறுத்து துரோணரின் காலடிகளில் வைக்கிறான். ஒரு நிமிடம் துரோணரின் மனம் கலங்கியது. பின்னர் தன்னைச் சமாளித்துக் கொண்டார். கூடாது; கூடாது; இத்தகையதொரு பாசத்தினால் என் மனதை நான் இளக வைக்கக் கூடாது. பின்னர் என்னுடைய விருப்பங்கள், ஆசைகள், கனவுகள் நிறைவேறுவது எங்கனம்?? அந்த ரத்தம் ஒழுகும் கட்டைவிரலை ஏற்றுக்கொண்டு ஏகலவ்யனை ஆசீர்வதித்துவிட்டு துரோணர் அங்கிருந்து கிளம்பினார்.

இப்போதும்…. இப்போதும் கிட்டத்தட்ட அப்படி ஒரு சூழ்நிலைதான். ஆனால்…..ஆனால் இப்போது கட்டை விரல் தேவை இல்லை துரோணருக்கு. அவருக்கு மிகவும் பிடித்த அவருடைய பாசத்துக்கும், நேசத்துக்கும் உகந்த ஐந்து மாணவர்களை அவர் அப்புறப்படுத்தியே ஆகவேண்டும்; அவர்களில் ஒருவன் ஆன அர்ஜுனன் அவருக்கு மிகவும் நெருங்கியவனாகவும், பாசத்துக்கு உகந்தவனாகவும் அவர் நம்பிக்கைக்குப் பாத்திரனாகவும் இருந்தால் கூட.

அவர் யார்? துரோணர்! தன் வழியில், தன் கனவுகளை நிறைவேற்றுவதில் தடையாக எவர் வந்தாலும் அவர்களை அப்புறப் படுத்தியே ஆவார். அவர் வழியில் யாரும் குறுக்கே வரக் கூடாது!

Saturday, March 24, 2012

அஸ்வத்தாமாவின் ஆச்சரியம்!

வெளிப்படையாகக் காட்டிக்கொள்ளாவிட்டாலும் திருதராஷ்டிரனுக்குப் பாண்டுவின் புத்திரன் யுவராஜாவானது உள்ளூரப் பிடிக்கவில்லை என்பதை துரோணர் அறிவார். திருதராஷ்டிரன் மகனான துரியோதனன் இருக்கப் பாண்டு புத்திரன் யுவராஜா ஆனதைக் கெளரவர்கள் எவருமே விரும்பவில்லை. துரியோதனனோ கொதித்துக்கொண்டிருந்தான். அவனுடைய நெருங்கிய நண்பர்களிடம் சொல்லிப் புலம்பினான். அவனை அடக்கி வைத்துக்கொண்டிருப்பது அஸ்வத்தாமா தான். மீண்டும் துரோணருக்குப் பெருமை ஏற்பட்டது. ஆம், துரியோதனன் எப்படி இருந்தாலும் அஸ்வத்தாமாவுடனான அவன் நட்பு பிரிக்க முடியாத ஒன்று. தன் வசதிக்காகவே துரோணர் தன் அருமைப் பிள்ளை அஸ்வத்தாமா மூலம் துரியோதனனை அடக்கி வைத்துக் கொண்டிருந்தார். ஆனால் இப்போதோ நிலைமை மாறுகிறது. குருவம்சத்தினருக்கும், யாதவர்களுக்கும் வாசுதேவ கிருஷ்ணன் மூலம் கூட்டணி ஏற்பட்டுவிட்டால்?? இந்தக் கூட்டணிக்குப் பிதாமகர் பீஷ்மர் முழு மனதோடு சம்மதமும் கொடுப்பார்! அப்படி மட்டும் நடக்கக் கூடாதெனில்! துரியோதனின் பொறாமைத் தீக்கு நெய் வார்க்க வேண்டும். துரியோதனன் யுவராஜாவாக இருந்தால் மட்டுமே துரோணர் நினைத்தது நடைபெறும். அதிகாரமும், செல்வாக்கும் அவர் கையில் இருக்கும்.

துரியோதனன் நம்பிக்கைக்கு உகந்தவன் அல்லதான். துடுக்காகவும் அவமரியாதையாகவும் பேசக் கூடியவனே. அவனுக்கு ஆலோசனைகள் சொல்பவர்களும் நல்லவிதமாய்ச் சொல்வதில்லை; என்றாலும் எல்லா விதத்தில் திறமையும், வலிமையும், நீதி, நேர்மை, நியாயத்துக்குக் கட்டுப்பட்டவனாயும் இருக்கும் யுதிஷ்டிரனைக் காட்டிலும் துரியோதனனைச் சீக்கிரம் நம் இஷ்டத்துக்கு வளைக்க முடியும். தனக்குள் புன்னகைத்துக்கொண்ட துரோணர் கைகளைத் தட்டி ஒரு வேலையாளை அழைத்துத் தன் மகன் அஸ்வத்தாமாவை உடனடியாகக் கூட்டி வரச் சொன்னார். பின்னர் மீண்டும் மீன்களுக்கும், ஆமைகளுக்கும் உணவு கொடுப்பதில் முனைந்தார். சற்று நேரத்தில் அஸ்வத்தாமா வந்தான்.

நல்ல உயரமாகவும், வலிமையான உடல்கட்டோடும் காணப்பட்ட அஸ்வத்தாமா சிறிதும் பொறுமையின்றிக் காணப்பட்டான். அதுதான் அவன் இயல்பான குணமோ என்னும்படிக்குக் காணப்பட்டான். தந்தையை வணங்கிவிட்டு அவரின் உத்தரவுக்குக் காத்திருந்தான். “மகனே, உன்னிடம் சிறிது பேசவேண்டும்.” என்றார் துரோணர். “காத்திருக்கிறேன் தந்தையே!” என்ற அஸ்வத்தாமன் தந்தையைக் கூர்ந்து நோக்கினான்.

“அஸ்வத்தாமா, நான் பாண்டவர்களுக்கு ஆதரவாகவும், யுதிஷ்டிரன் யுவராஜாவாய்த் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு ஆதரவும் ஆசிகளும் தெரிவித்த போது உனக்கு என் மீது பயங்கரக் கோபம் இல்லையா? கெளரவர்களுக்கு, முக்கியமாய் துரியோதனனுக்கு நான் கேடு இழைத்துவிட்டதாய்க் கூறினாய். அவர்களுக்கு நியாயம் கிடைக்கவில்லை என்றும், நானும் அதற்குத் துணை போனதாகவும் கூறினாய்.”

அஸ்வத்தாமாவின் கண்கள் கோபத்தில் சிவந்தன. தந்தையிடம் உள்ள மரியாதையை நினைவு கூர்ந்து தன் பார்வையைத் தாழ்த்திக்கொண்டான் அவன். “அதனால் என்ன தந்தையாரே! நான் சொன்னது தவறாகவும் இருக்கலாம். அப்படிச் சொன்னதற்கு வருந்துகிறேன். ஆனால் என் மனதில் உள்ளவற்றைத் தங்களிடம் அல்லாமல் வேறு எவரிடம் நான் பகிர்ந்து கொள்ள இயலும்?” பணிவோடு பேசுவது போல் காட்டிக்கொண்டாலும் உள்ளூரத் தனக்கு இருந்த வெறுப்பை அஸ்வத்தாமாவால் மறைக்க இயலவில்லை. துரோணருக்கும் அது புரியவே செய்தது.

புன்னகையுடன், “மகனே! நான் அநீதி தான் செய்துவிட்டேன். என் மாணாக்கர்களுக்குள் நான் வேறுபாடுகளைக் காட்டி வருகிறேன். நீ சொல்வதில் உண்மை உள்ளது. “ தூக்கிவாரிப் போட்டது அஸ்வத்தாமாவுக்கு. அவனுக்கு விபரம் தெரிந்ததில் இருந்து தான் தவறு செய்துவிட்டதாக துரோணர் ஒத்துக்கொண்டது இதுவே முதல் முறை. அடுத்து அவர் என்ன சொல்லப் போகிறார் என்பதற்குக் காத்திருந்தான் அஸ்வத்தாமா. “நாம் பேசிக்கொள்வதை துரியோதனனுடம் பகிர்ந்து கொள்வாயா மகனே?”

“ஆம் தந்தையே, அவன் என் நெருங்கிய நண்பன்.”

“எனில் இப்போதும் அவனிடம் இதைக் கூறு. கெளரவர்களுக்கும் பாண்டவர்களுக்குமான இடையே உள்ள பங்கீட்டுப் பிரச்னைகளில் நான் கலந்து கொள்ளப் போவதில்லை. நான் எவர் பக்கமும் சார்ந்து எதுவும் கூறப்போவதில்லை. இதை நீ துரியோதனனிடம் தாராளமாய்க் கூறலாம்.”

“தந்தையே, மகிழ்ந்தேன். உண்மையாக மகிழ்ந்தேன். “ ஆனந்தக் கூச்சலிட்ட அஸ்வத்தாமா, “இதை நான் இப்போதே போய் துரியோதனனிடம் சொல்லி அவனும் மகிழ்வதைக் காண வேண்டும். தங்கள் அனுமதியுடன் போய்ச் சொல்லட்டுமா? கடைசியில் இதற்கு ஒரு வழி கிடைத்ததே!”

“சென்று வா மகனே, உனக்கு என் ஆசிகள்.”