Sunday, August 7, 2011

ஷ்வேதகேது வெளியேறுகிறான். கண்ணன் வருவான் 2-ம் பாகம்

அன்று காலை எப்போதும்போல் எழுந்த ஷ்வேதகேது தன் காலைக்கடன்களை விரைவாக முடித்துக்கொண்டு அநுஷ்டானங்களையும் செய்துவிட்டு, நகரை விட்டுச் சற்றே தள்ளி இருந்த தன் ஆசிரமத்தை வந்தடைந்தான். கைசிகனுக்கும் சரி, பீஷ்மகனுக்கும் சரி ஆசாரியர்களிடம் இருந்த மதிப்பும், மரியாதையும் சற்றும் குறையவில்லை. ஆகவே ஒரு படித்த அந்தணன் வந்தாலே எல்லா மரியாதைகளையும் செய்து அவனுடைய சுக, துக்கங்களைக் கவனிக்கும் அவர்களுக்கு அஸ்திர, சாஸ்திரங்களில் நிபுணனும், ஆயுதப் பயிற்சிகளில் வல்லவனும் ஆன ஷ்வேதகேதுவிடம் இயல்பாகவே மதிப்பு ஏற்பட்டது. அதுவும் குரு சாந்தீபனியின் முதன்மை சீடன் என்றும் தெரிந்ததில் இருந்து இன்னும் மரியாதை காட்டி ஷ்வேதகேதுவுக்கு வேண்டிய வசதிகளைத் தாங்களே மனமுவந்து செய்து கொடுத்திருந்தார்கள். குண்டினாபுரத்தின் சாதாரண மக்களே ஷ்வேதகேதுவை மிகவும் மதித்து மரியாதையுடன் நடத்தினார்கள். அவன் மாணாக்கர்களுக்குக் கேட்கவும் வேண்டுமா? வேதங்கள் கற்றுக்கொள்ளும் இளைஞர்களானாலும் சரி, ஆயுதப் பயிற்சி கற்பவரானாலும் சரி, ஷ்வேதகேது கண்ணால் காட்டுவதை உடனடியாக நிறைவேற்றுபவர்களில் வல்லவர்களாக இருந்தனர். ஷ்வேதகேதுவே ஒரு இளைஞனாக இருந்தாலும், அவனுடைய பிரமசரிய தபஸ் காரணமாயும், அவன் கற்ற அஸ்திர, சாஸ்திர வித்தைகளின் காரணமாயும், அவன் உடல் வஜ்ராயுதம் போல் உறுதியுடன் இருந்ததல்லாமல், தபஸின் காரணமாய் முகமும் ஒளிவிட்டுப் பிரகாசித்தது. மாணவர்கள் அனைவருக்கும் ஷ்வேதகேதுவின் சீடர்களாய் இருப்பதில் பெருமை மிகுந்தது.

அன்றைய பாடங்களைக் கவனிக்க உள்ளே நுழைந்த ஷ்வேதகேதுவை மாணாக்கர்கள் நமஸ்கரித்து வணங்கினர். சற்று நேரம் வேத பாடங்களைச் சொல்லிக் கொடுத்தான் ஷ்வேதகேது. யாகத்திற்கு என வளர்க்கப் பட்டிருந்த அக்னியில் யாக மந்திரங்களைச் சொல்லி அவற்றை நிறைவு செய்தான். பின்னர் தன்னிரு கரங்களையும் உயர்த்தி மாணாக்கர்களை ஆசீர்வதித்த ஷ்வேதகேது தன் மாணாக்கர்களை நோக்கிக் கூறினான்.
“என்னருமைக் குழந்தைகளே! உங்களிடம் இப்போது நான் விடைபெறவேண்டிய நேரம் நெருங்கிவிட்டது. ஒரு வருடம் முன்னால் நான் இங்கு வந்தேன். போஜ அரசர்களின் தயவாலும், அவர்களின் விருந்து உபசாரங்களாலும் இங்கே என்னால் ஆசிரமத்தைச் சிறப்பாக நடத்த முடிந்தது. குழந்தைகளே, நீங்களும் என்னிடம் நீங்காத பிரியமும், பாசமும் வைத்துள்ளீர்கள். உங்கள் தகுதிக்கு ஏற்பச் சிலர் வேதங்களை அப்யசிப்பதிலும், சிலர் ஆயுதப் பயிற்சிகளிலும், சிலர் சிற்ப, சித்திரக்கலைகளிலும் திறமை வாய்ந்தவர்களாய் உள்ளீர்கள். எனக்குத் தெரிந்ததை எல்லாம் உங்களில் அனைவருக்கும் நான் சொல்லிக் கொடுத்துவிட்டேன். ஆகவே இப்போது நான் இங்கிருந்து செல்ல வேண்டும். விடை கொடுங்கள்.”

மாணவர்கள் வியப்பிலும், அதிர்ச்சியிலும் ஆழ்ந்து போய்ப் பேசமுடியாமல் தவித்தனர். அதைப் பார்த்த ஷ்வேதகேதுவுக்கும் உணர்ச்சி மேலிட்டது. “நான் இந்தக் கோட்டையின் காவலனை இங்கே வரச் சொல்லி இருக்கிறேன். ஒரு வருடம் முன்னர் இந்த நாட்டு அரசன் இந்த ஆசிரமத்தை நடத்த வேண்டி எனக்குக் கொடுத்த அனைத்துச் சொத்துக்களையும், பசுக்களையும் இந்தக் கோட்டைக்காவலனிடம் நான் திரும்ப ஒப்படைக்கிறேன். பின்னர் இவை முறைப்படி அரசன் பீஷ்மகனைப் போய்ச் சேரும். நானும் தனிப்பட்ட முறையில் பீஷ்மகனைச் சென்று சந்தித்து விட்டே விடைபெறுகிறேன். என்னை விட்டுப்பிரிய நேர்ந்ததற்காக எவரும் வருந்த வேண்டாம். நீங்கள் எங்கே சென்றாலும் என் ஆசிகள் உங்களை விட்டுப் பிரியாது. உங்களுடனேயே இருக்கும். நீங்கள் எங்கே சென்றாலும் மாட்சிமை பொருந்திய பரசுராமரின் சீடரும், குருவுமான சாந்தீபனியின் முதன்மைச் சீடனான ஷ்வேதகேதுவின் வழியில் மகத்தானதொரு குரு பரம்பரையில் வருகிறீர்கள் என்பதை மறவாதீர்கள்.


“பிரமசாரிகளே, உங்கள் தபஸ் தான் இவ்வுலகத்தை அதர்மத்தில் இருந்து மீட்டு என்றென்றும் தர்மத்தின் பாதையில் செல்ல வைக்கும் என்பதை மறவாதீர்கள். மேலும் நான் உங்களுக்குக் கற்றுக்கொடுத்த ஆயுதப் பயிற்சியை நீங்கள் தர்மத்தைக் காக்கவேண்டியே பயன்படுத்த வேண்டும். அதர்மத்திற்குத் துணை போகப்பயன்படுத்தக் கூடாது. சுயநலத்திற்காகவோ, பணம் சம்பாதிக்கவோ பயன்படுத்தாதீர்கள். பாவங்களைச் சேர்த்துக்கொள்ளாமல் தர்மத்தின் பாதையில் சென்றீர்களானால் செல்வம் உங்களை நாடி வரும். பாவங்களைச் சேர்த்துக்கொள்ளாதீர்கள். பாவங்களில் பங்கெடுக்காதீர்கள். உங்களுடைய தவத்தின் சக்தியாலும், தர்மத்தின் பாதையில் செல்வதாலும் நீங்கள் அனைவரும் மேன்மையடைவீர்கள். இது தான் விடைபெறும் முன்னர் நான் உங்களுக்கு அளிக்கும் மகத்தான பரிசு என்பதையும் மறவாதீர்கள்."

கீழே இருந்த மான் தோலை எடுத்துத் தன் இடுப்பில் கட்டிக்கொண்ட ஷ்வேதகேது, தன் தண்டத்தையும், கமண்டலத்தையும் எடுத்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பினான். ஆனால் அவன் மாணாக்கர்களோ அவனைச் செல்ல விடாமல் சூழ்ந்து கொண்டனர். அவர்கள் ஷ்வேதகேதுவின் இந்தத் திடீர் அறிவிப்பில் திகைத்திருந்ததால் தாங்கள் என்ன செய்கிறோம் என்றே அறியாமல் ஷ்வேதகேதுவை நோக்கித் தலைக்குத் தலை கேள்விகள் கேட்க ஆரம்பித்தனர். "குருதேவரே, எங்களை இப்படிப் பாதியில் விட்டு விட்டு நீர் செல்லலாமா?" என்று சிலரும், "நாங்களும் உம்மோடு வருவோம்." என்று சிலரும், கூற ஷ்வேதகேது அவர்களைப் பார்த்து, " என் அருமைக் குழந்தைகளே! உங்களில் எவரையும் நான் அழைத்துச் செல்ல இயலாது. நீங்கள் அனைவரும் போஜராஜனின் படைத் தளபதிகளின் அருமை மக்கள். நான் செல்லப் போவது ஒரு கடினமான பாதையில். அந்தக் கடினமான பாதையில் செல்லும் அளவுக்கு உடல் வலுவோ, மனப்பக்குவமோ உங்களுக்கு இல்லை." என்றான்.

"குருதேவா, உங்களுக்கு என்ன நடக்குமோ அது எங்களுக்கும் நடக்கட்டும். நாங்கள் உங்களுடன் வந்து உங்கள் சுக, துக்கங்களைப் பகிர்ந்து கொள்கிறோம்." என்றனர் மாணவர்கள். அவர்களில் அப்லவன் என்பவனை மட்டும் ஷ்வேதகேது பார்த்து விட்டுத் தலை அசைத்தான். "அப்லவா, நீ வேறு மாதிரியானவன். உனக்கு என யாருமில்லாதவன். தாயோ, தந்தையோ இல்லாதவன். ஆகவே உனக்கு எவர் அநுமதியும் தேவையும் இல்லை. நீ என்னுடன் வரலாம், ஆஹா, நீயும் தான் ஜஹ்னு, உனக்கும் எவரிடமும் அனுமதி கேட்கத் தேவை இல்லை அல்லவா? நீயும் வரலாம். உங்கள் இருவரையும் அழைத்துச் செல்ல எனக்குத் தடை ஏதும் இல்லை. ஆனால் என்னுடன் வந்தால் பல நாட்களுக்கு, ஏன் பல மாதங்கள் கூட ஆகலாம். சரியான சாப்பாடோ, இரவு படுக்கச் சரியான படுக்கையோ கிடைக்காது. உங்களால் இயலுமா?" என்று கேட்டான் ஷ்வேதகேது.

"எல்லாம் சரியே குருதேவா? ஆனால் ஏன் இந்த திடீர்ப் பயணம்?? என்ன ஆயிற்று? இவ்வளவு விரைவில் இங்கிருந்து கிளம்பும்படி என்ன நடந்தது?" என்று இன்னொருவன் கேட்டான்.

1 comment:

priya.r said...

இந்த அத்தியாயம் 84 ஐ படித்து விட்டேன் கீதாம்மா .,

பாவ தர்மங்கள் பற்றி குரு மாணவர்களுக்கு போதித்தது இந்த அதிதாயத்தின் சிறப்பு