Monday, August 1, 2011

சுயம்வரத்திற்கான ஏற்பாடுகளில் ருக்மி! கண்ணன் வருவான்!

நாட்கள் நகர்ந்தன. மாகமாதம் வசந்தோற்சவம் நடக்கும் மாதம் ஆகும். மாக பெளர்ணமியில் ஆரம்பிக்கும் வஸந்தோற்சவம். பெளர்ணமி கழிந்த ஐந்தாம் நாளன்று தான் ருக்மிணியின் சுயம்வரத்திற்கான நாள் நிச்சயிக்கப் பட்டிருந்தது. பெளஷ மாதத்தின் முடிவில் இருந்தே இளவரசர்களும், அரசர்களும் ஒவ்வொருவராக வர ஆரம்பித்து விட்டனர். குண்டினாபுரமே அவர்களின் பரிவாரங்களால் நெருக்கடியும், நெரிசலும் மிகுந்து காணப்பட்டது. எங்கே பார்த்தாலும் அரசர்களின் ராஜ்யச் சின்னத்தைக் குறிக்கும் கொடிகள். பதாகைகள், அவர்களின் மெய்க்காவலர்களின் அணிவகுப்பு. அரசர்கள் வருவதைக் குறிக்கும் கட்டியக்காரர்களின் ஓங்கிய குரலோசை என ஒரே சப்தமயமாய்க் காட்சி அளித்தது குண்டினாபுரத்துக் கோட்டையின் தலைவாயில். அவர்களில் பல அதிரதர்களும், மஹாரதர்களும் இருந்தனர். அவர்கள் கொண்டு வந்த விதவிதமான ரதங்களின் தோற்றமும், அழகும் கண்ணைக் கவர்ந்தது. சில இளம் அரசர்களும், இளவரசர்களும் தங்கள் ரதங்களை வேகமாய் ஓட்டிக்கொண்டு ஒருவரை ஒருவர் மிஞ்சப் பார்த்தார்கள். இங்கனம் மறைமுகப் போட்டிகளும் ஒரு பக்கம் நடந்த வண்ணம் இருக்க, மறுபக்கம் கூட்டுச் சதியாலோசனையும் நடந்து வந்தது.

தன் ஒரே மகளின் சுயம்வரத்தை முன்னிட்டு அரசன் பீஷ்மகன் மிக ஆடம்பரமாகவும் விமரிசையாகவும் எல்லா ஏற்பாடுகளையும் செய்திருந்தான். வந்திருந்த அரச விருந்தாளிகளுக்கு மட்டுமின்றி சுயம்வரத்தையும், அதன் ஏற்பாடுகளையும், நகர அலங்காரங்களையும், எல்லாவற்றுக்கும் மேல் வந்திருக்கும் அரச விருந்தினர்களையும் காணவேண்டி அக்கம்பக்கத்துக் கிராமங்களிலிருந்து வரும் ஜனங்களுக்கும் சேர்த்து விருந்து ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. அரசர்கள் அனைவரும் ஒருவரை ஒருவர் சந்தித்துப் பேசவும், கலந்து பழகவும் வேண்டி நகரின் முக்கியமான ஒரு இடத்தில் அரங்கம் ஒன்று ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. பேரிகைகளும், எக்காளங்களும், முரசுகளும், சங்குகளும் ஒலித்தவண்ணமும் யாரானும் ஒரு அரசர் வருகையைக் குறித்துக் கூறியவண்ணமும் இருந்தன. ஒரு சில அரசர்கள் நகருக்கு வெளியே தங்களுக்கென அழகிய கூடாரங்களும் அமைத்துத் தங்கினர். பீஷ்மகன் தனிப்பட்ட முறையில் சிறப்பு விருந்தாளியாக அழைத்திருந்த ஜராசந்தன் அனைவருக்கும் முன்னர் கிளம்பி வந்துவிட்டான். அவனுடன் அவனுடைய ராஜ்யத்தைச் சேர்ந்த சில சிற்றரசர்களும், இளவரசர்களும் வந்திருந்தனர். எங்கும் ஒரே கோலாகலமாக இருக்கச் சேதி நாட்டு மன்னன் தாமகோஷனும் வந்து சேர்ந்தான். அவனுடன் அவன் மகன் சிசுபாலனும் வந்தான். எல்லாரையும் விட முக்கிய விருந்தாளிகள் அல்லவோ இவர்கள்? அதுவும் ஆர்யவர்த்தம் முழுதும் பேசப்படும் அழகு வாய்ந்த இளவரசி ருக்மிணியின் கரம் பிடிக்கப் போகும் பாக்கியசாலி அல்லவா சிசுபாலன்?? மணமகனின் முக்கியத்துவம் கருதி அவர்கள் இருவருக்கும் பீஷ்மகன் மிகச் சிறப்பானதொரு அரண்மனையை அலங்கரித்துக் கொடுத்திருந்தான்.

செளப நாட்டு மன்னன், சால்வன், கருஷ நாட்டின் அரசன் தந்தவக்ரன், அவந்தி தேசத்து விந்தன், அநுவிந்தன் மற்றும் ஆர்யவர்த்தத்தின் முக்கியமான அரசர்கள், இளவரசர்கள் என அனைவராலும் நிரம்பி வழிந்தது குண்டினாபுரம். எல்லா அரசர்களுக்கும் இந்தச் சுயம்வரத்தின் தன்மை குறித்தும் சிசுபாலன் தான் மணமகன் எனவும் ஏற்கெனவே அறிவிக்கப் பட்டிருந்ததால் தங்களுடன் சிறு பரிவாரம் ஒன்றுடன் மட்டுமே வந்திருந்தனர். சாதாரணமாக மற்ற சுயம்வரங்களில் நடப்பது போல் இங்கே போட்டியோ, வீரத்தைக் காட்டும் நிகழ்வோ எதுவும் இல்லை என்றும், இருக்கும் ஒரே நிகழ்ச்சியும் சிசுபாலனைத் தேர்ந்தெடுக்க வேண்டி நடைபெறப்போகும் நிகழ்ச்சி என்பதாலும் அனைவரும் கோலாகலமான ஒரு நிகழ்வுக்கும், ஆட்டம், பாட்டம், கொண்டாட்டத்துக்கும் தயாராக வந்திருந்தனர். பீஷ்மகனை விடவும் ருக்மியே வந்திருந்த விருந்தினர்களை மகிழ்விக்கும் முயற்சியில் முழு மனதுடன் ஈடுபட்டிருந்தான். எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பான் ருக்மி! இந்த முட்டாள் பெண்ணைச் சம்மதிக்க வைத்து இப்படி ஒரு சுயம்வரத்திற்கு ஜராசந்தனையும் ஒப்புக்கொள்ள வைத்துத் தானும் அவனின் மருமகனாக ஆவதற்கும் முயற்சிகள் எடுத்து!! அப்பப்பா! ஒரு சாம்ராஜ்யத்தை ஸ்தாபித்து அதன் சக்கரவர்த்தியாகப் பெயர் எடுக்க வேண்டுமென்றால் என்னென்ன தகிடுதத்தங்கள் எல்லாம் செய்ய வேண்டி இருக்கிறது? நான் போடப் போகும் இந்த அஸ்திவாரம் பலமாக இருக்க வேண்டுமே! முட்டாளும், பிடிவாதக்காரியுமான ருக்மிணி எந்த நேரம் என்ன செய்வாளோ யார் அறிவார்? ருக்மிக்கு உள்ளூரக் கலக்கம் தான்.

ருக்மி யோசித்தான்: “ஆஹா, இந்த ருக்மிணி ஒரு மிகப்பெரிய தொந்தரை பிடித்தவளாகிவிட்டாளே. என்னமோ அவளுக்குத் தான் நியாயமும், தர்மமும் தெரியும் என்பது போல் பேச்சு வேறு. எப்போ என்று தெரியாத காலகட்டத்திலேயே பல யுகங்கள் முன்பிருந்தே பெண்கள், அதுவும் இளவரசிகள் சாம்ராஜ்யங்களை நிறுவவும், அதன் ஸ்திரத்தன்மையை பலப்படுத்தவுமே கருவிகளாகப் பயன்படுத்தப் பட்டிருக்கிறார்கள். இவர்களை அடித்தளமாகப் போட்டே பல சாம்ராஜ்யங்கள் எழும்பி இருக்கின்றன. எங்கோ ஒன்றிரண்டு இளவரசிகள் தங்கள் இஷ்டம் போல் மணமுடிக்க நினைத்திருக்கலாம். தாய், தகப்பனின் ஆசைகளை மிதித்துத் தங்கள் மனம் போல் நடந்திருக்கலாம். என்றாலும் பின்னர் அவர்கள் உணர்ந்திருப்பார்கள். இதெல்லாம் இந்த முட்டாள் பெண் ருக்மிணிக்குப் புரியுமா? சின்ன வயசில் இருந்தே அவள் மனம் போன போக்கில் நடந்து கொள்வாள். யாருக்கும் அடங்க மாட்டாள். எல்லாம் இந்தப் பாட்டனாரும், தந்தையாரும் கொடுத்த அளவுக்கதிகமான செல்லம் தான் காரணம். ம்ம்ம்ம்ம்??? ஆனால் அவளுடைய தற்போதைய நடத்தை மாறிவிட்டதே? என்ன ஆயிற்று அவளுக்கு?

முதலில் என்னோடு சண்டையிட்டாள். சிசுபாலனை மணக்க முடியாது என்றும் சொன்னாள். கன்னிமாடத்தின் கதவுகளை அடைக்கவும் உத்தரவிட்டாள். எவரும் அவளைச் சென்று பார்க்க இயலாவண்ணம் தன்னைத் தானே சிறைப்படுத்திக்கொண்டாள். உண்ணாவிரதமும் இருந்தாள். சில நாட்களில் இந்தச் சுயம்வர ஏற்பாடுகளைக் குறித்துக் கேலி பேசுவதும், துச்சமாய்க் கருதுவதும் அனைவருக்கும் எதிரே என்னைக் குறை கூறுவதுமாய் இருந்தாள். ஆனால் இப்போது எல்லாம் அடங்கி விட்டதோ?? ஆம் அப்படித்தான் இருக்க வேண்டும். இந்த மாதிரி தலைக்கனம் பிடித்து அடங்காமல் இருக்கும் பெண்கள் இப்படித் தான் அடங்குவார்கள். இனி ஒன்றும் செய்ய முடியாது என்பது அவர்களுக்குப் புரிய நேரமாகும். ருக்மிணி அந்த நிலைக்கு வந்துவிட்டாள். ஆம்… இனி என்ன செய்ய இயலும் அவளால்?? நல்லவேளை, அந்த மதுரா யாதவர்களில் எவனாவது வந்து இங்கே தொந்தரவு கொடுப்பானோ என எண்ணினேன். அது மாதிரி எதுவும் நடக்கவில்லை. சுயம்வரம் எந்தத் தடையும் இல்லாமல் நடைபெறும் என்பது உறுதியாகிவிட்டது. மதுராவில் கிழவன் உக்ரசேனன் அவனுடைய பெண் வயிற்றுப் பேரன் எவனுக்கோ அரசன் என்ற பதவியைக் கொடுக்கப் போவதாய் ஒற்றர்கள் கூறினார்கள். ம்ம்ம்?? அவனைக் கூட உக்ரசேனன் அழையா விருந்தாளியாகச் சுயம்வரத்தில் கலந்து கொள்ளச் சொன்னான் எனக் கேள்விப் பட்டோமே? வந்திருக்கிறானா அவன்? தன் ஒற்றர்களை அழைத்தான் ருக்மி.

அவர்கள் மூலம் ப்ருஹத்பாலன் தான் அரசனாக முடிசூட்டிக்கொள்ளப் போவதில்லை என்றும் மதுராவின் சார்பில் சுயம்வரத்தில் கலந்து கொள்ளப் போவதில்லை என்றும் கூறியதாகத் தெரிந்து கொண்டான். ருக்மியின் மனதில் நிம்மதி பிறந்தது. அதோடு சுயம்வர தினத்தன்று தான் மதுராவில் ரதப் போட்டி ஒன்றும் ஏற்பாடாகி இருக்கிறதாம். மதுராவின் இளைஞர்கள் அனைவரும் அதில் கலந்து கொள்ளத் தயார் செய்து கொண்டு வருகின்றனராம். ஆகவே எவனும் இங்கே வரமுடியாது. ருக்மிக்குக் கொஞ்சம் தைரியம் பிறந்தது. மேலும் மாக மாத ஆரம்பத்தில் பெரும்படையுடன் ஆர்யவர்த்தத்தின் மிகப் பெரிய அரசன் ஒருவன் சுயம்வரத்தில் கலந்து கொள்ள வருகிறான் என்ற செய்தியும் ஒரு வதந்தியே என்பது நிரூபணமாகிவிட்டது. பெரும்பாலான அரசர்கள் வந்துவிட்டார்கள். அழைத்தவர்களில் வந்தவர்களைத் தவிர மற்றவர்கள் தங்களால் வர இயலாது என்பதைத் தெரிவித்ததோடு அல்லாமல், பரிசுகளையும் கொடுத்து அனுப்பி இருந்தார்கள். பரிசுகள் மூலமாவது இந்த சுயம்வரத்தை அங்கீகரிக்கவில்லை எனில், ஜராசந்தன் என்ன செய்வானோ என்ற அச்சமே காரணம் என்பது ருக்மிக்குப் புரிந்திருந்தாலும் அவன் வெளிப்படையாக சந்தோஷத்தையே காட்டினான். ஆர்யவர்த்தத்தின் மிகப் பெரிய அரசர்களில் இன்னும் இருவரான அஸ்தினாபுரத்து திருதராஷ்டிரனோ, அவன் மக்களோ இதில் கலந்து கொள்ள இயலாமைக்குத் தங்கள் வருத்தத்தைத் தெரிவித்துவிட்டார்கள். அவ்வாறே பாஞ்சாலத்து துருபதனும் வர இயலாது என்றும் தன் மகனுக்கும் வர முடியாது என்றும் கூறி உள்ளான். ஆகவே இந்த சுயம்வரத்தை எதிர்ப்பவர்கள் எவரும் இல்லை. நிம்மதி பரிபூரணமாய் மனதை ஆக்கிரமிக்க ருக்மி தன் ஏற்பாடுகளில் தானே திருப்தி அடைந்தவனாய் அவ்விடத்தை விட்டு அகன்றான்.

1 comment:

priya.r said...

இந்த அத்தியாயம் 83 ஐ படித்து விட்டேன் கீதாம்மா .,

கண்ணன் எப்போது வருவான் என்று ருக்மணியுடன் சேர்ந்து நாமும் எதிர்பார்க்க ஆரம்பித்து விட்டோம்