Saturday, August 27, 2011

தர்மம் என்னும் தேரில் ஏறிக் கண்ணன் வந்தான்!

பாட்டனார் கெளசிகரின் அரண்மனை குண்டினாபுரம் நகருக்கு வெளியே அமைந்திருந்தது இந்தச் சமயம் மிகவும் வசதியாக அமைந்தது. அவரின் அரண்மனையின் முன்முற்றம் மிகவும் அழகாக அலங்கரிக்கப் பட்டிருந்தது. அருகேயே இருந்த ஷ்வேதகேதுவின் ஆசிரமப் பகுதியிலும் யாதவத் தலைவர்கள் தங்க இடம் ஒதுக்கப்பட்டுத் தக்க ஏற்பாடுகள் செய்யப் பட்டிருந்தன. செய்தி வந்ததுமே இந்த ஏற்பாடுகளை விரைவில் செய்து முடித்தார் கெளசிகர். கண்ணனைக் காணக் கோட்டை வாயிலுக்குச் சென்றும் விட்டார். அவருடன் விந்தன், அநுவிந்தன், சேதி நாட்டு அரசனும் கண்ணனின் அத்தை கணவனுமான தாமகோஷன் ஆகியோரும் சென்றிருந்தனர். மக்கள் கூட்டத்தைப் பிளந்து கொண்டு கண்ணன் வரும் திசையில் எதிர் கொண்டு அழைத்தனர் கெளசிகரும் அவருடன் வந்தோரும். மக்கள் கூட்டம் ஜெய் வாசுதேவா! வாசுதேவனுக்கு மங்களம்! கிருஷ்ணன் புகழ் ஓங்கட்டும்! என்றெல்லாம் கோஷங்கள் போட்டனர். கடைசியில் ஜராசந்தனுக்கும், அவன் தோழர்களுக்கும் பயந்து, பீஷ்மகன் நேரில் செல்லாமல் தன் மந்திரியை அனுப்பிவிட்டான். ஆனால் அந்த மந்திரியோ மிகவும் திறமை வாய்ந்த பண்டிதர்களான பிராமணர்களைத் தன்னுடன் அழைத்து வந்து வேத கோஷங்கள் முழங்கக் கண்ணனுக்குப் பூரண மரியாதையைக் கொடுத்துவிட்டார். மந்திரி கண்ணனிடம், பீஷ்மகன் உடல்நிலை சரியில்லை எனவும், உடல்நிலை சரியானதும், கண்ணனை நேரில் சந்தித்து வரவேற்பான் என்றும் சமாதானங்களைக் கூறினார்.

“ஓ, அப்படியா! கற்றறிந்த பண்டிதரான மஹா மந்திரியே! உம் அரசரின் உடல்நிலை சரியில்லை என்பது என் மனதுக்கு உவப்பைத் தரவில்லை. அவரை நான் சந்தித்தே ஆகவேண்டும். அப்போது தான் நான் ஆசீர்வதிக்கப்பட்டவனாவேன். ஆனால் அவசரமெல்லாம் எதுவும் இல்லை. நான் இங்கே வசந்தோற்சவம் முடியும் வரை இருந்துவிட்டுச் செல்வதாகவே எண்ணம்.” கண்ணனின் திடமான தீர்மானம் அவன் சுயம்வரத்தின் போது இரண்டில் ஒன்று பார்க்காமல் செல்லப் போவதில்லை என்பதை மறைமுகமாய்த் தெரிவித்தது. கூட்டத்திலிருந்த பலருக்கும் கருட இனத்தவரின் பறவை முக அலங்காரமும், அவர்களின் நடவடிக்கைகளும் மிகவும் வேடிக்கையைத் தந்தது. தன் கன்னிமாடத்தின் உப்பரிகையில் இருந்து கண்ணன் வருவதையும், ரதத்தில் இருந்து இறங்குவதையும் பார்த்துக்கொண்டு இருந்த ருக்மிணி, தன் அருகே இருந்த தன் அண்ணியின் கழுத்தைக் கட்டிக்கொண்டாள். “அண்ணி, என் அருமை அண்ணி, அதோ பார்! வாசுதேவக் கிருஷ்ணனை! எவ்வளவு அற்புதமாக இருக்கிறான் இல்லையா? அவன் நளினமும், எழிலும் எவ்வளவு உயர்ந்ததொரு ரசனையோடு உள்ளது?” சுவ்ரதாவின் கழுத்தில் அவள் கைகள் இறுகின. சுவ்ரதா போலிக்கோபத்தோடு, “அடி, பெண்ணே, என்னை விட்டு விடு. அந்தக் கண்ணன் என்ன பொல்லாத கள்ளனோ! இல்லை மந்திரவாதியோ! உன்னை இப்படி மயக்கி வைத்திருக்கிறானே! லேசில் மயங்குபவளா நீ!” என்று கேலி செய்தாள்.

கண்ணன் தங்கி இருந்த பகுதிக்குப் பாட்டனார் கெளசிகர் விஜயம் செய்தார். கண்ணனைப் பார்த்து, “வாசுதேவா, சென்ற முறை நீ வந்தபோது எவருக்கும் தெரியாமல் ஒரு பரதேசியைப் போல் வந்திருந்தாய்! உன்னைச் சரியான முறையில் என்னால் கவனித்து உபசரிக்க இயலவில்லை. இம்முறை என் முழுச் செல்வாக்கையும், பலத்தையும் காட்டி உன்னை உபசரிக்கப் போகிறேன்.” என்று சந்தோஷமாய்க் கூறினார். கண்ணனோ அடக்கம் குரலில் பூரணமாய்த் தெரிய, “தாத்தா அவர்களே, எனக்கெனத் தனியான உபசாரங்கள் எதுவும் தேவையில்லை. என்னை அதிகம் கவனித்தீர்களெனில் மற்ற அரசர்கள் மனம் புண்பட்டுவிடும். அவர்களை விடவும் நான் பெரியவனுமில்லை; நான் ஓர் இளவரசனுமில்லை. மரியாதைக்குரிய பாட்டனார் அவர்களே, ஜராசந்தனிடமிருந்து என்னைக் காத்துக்கொள்ள வேண்டி நான் ஓடிக்கொண்டிருந்த சமயம் எனக்குத் தக்க அடைக்கலம் கொடுத்தீர்கள். அதை நான் மறக்கவே மாட்டேன். என் உயிருள்ள வரையிலும் மறக்க மாட்டேன்.என் உயிர் உம்முடையது. நான் எவ்விதத்திலாவது உமக்கு என் நன்றிக்கடனைச் செலுத்தவும் விரும்புகிறேன்.” கண்ணன் தான் கிழவருக்குக் கொண்டு வந்த பரிசுகளை அவரிடம் அளித்து அவர் கால்களில் விழுந்து வணங்கினான்.

“வாசுதேவ கிருஷ்ணா, பீஷ்மகன் உன்னை சுயம்வரத்திற்கு அழைக்காதது எனக்குப் பெரிய குறைதான்; அவனிடம் எடுத்துக் கூறியும் அவன் கேட்கவில்லை. அதனால் இந்தச் சுயம்வரத்தின் ஏற்பாடுகளில் மாபெரும் குறை ஏற்பட்டுவிட்டது. ஆசாரியர்கள் அந்தக் குறையை நிவர்த்தி செய்யப் படாத பாடுபட்டனர். அவர்களாலும் இயலவில்லை.” சற்றே தயக்கத்துடன் கெளசிகர் பேசினார். மேலே பேசத் தயக்கமும் காட்டினார். ஆனால் கண்ணனோ புரிந்து கொண்டவனைப் போல், “ தாத்தா, தாத்தா, நான் என்ன இளவரசனா? அல்லது எந்த நாட்டுக்காவது யுவராஜாவாக இருக்கிறேனா? எனக்குத் தெரியும் தாத்தா நான் யார் என்று. யாதவர்களின் ஒரு குழுவின் தலைவனான ஷூரத் தலைவன் வசுதேவனின் பிள்ளை என்று தானே எண்ணுகிறீர்கள்?? இல்லை தாத்தா, இல்லை. நான் ஒரு காலத்தில் மாடுகளை மேய்த்துக்கொண்டிருந்த இடையன்; ஆனால் தாத்தா, ஒரு விஷயம்; அதற்காக நான் என்றுமே வருந்தியதில்லை.” கண்ணன் குரலில் இனம்புரியா மென்மை. “அவை என் உயிர் நண்பர்கள் தாத்தா, இந்த அரசர்களோடு சேர்த்து வைத்துப் பேச எந்தவிதமான தகுதியும் இல்லாதவன் நான். ஜராசந்தனோ அல்லது ருக்மியோ எனக்கு இதைக் கஷ்டப்பட்டுப் புரிய வைக்க வேண்டாம் தாத்தா. எனக்கே மிக நன்றாய்ப் புரிந்த ஒரு விஷயம் இது.” கண்ணன் குரலில் எந்தவிதமான வருத்தமோ, கோபமோ, அசூயையோ இல்லை. இயல்பாகப் பேசினான் கண்ணன்.

“கோவிந்தா! அப்படி எல்லாம் பேசாதே! இங்கே வந்திருக்கும் மன்னர்கள் அனைவரையும் விட நீ உயர்ந்தவன். பெருமைகள் பல அடைந்தவன்; இன்னும் அடையப் போகிறவன். இங்கிருக்கும் அதிபுத்திசாலிகளான அரசர்களையும், இளவரசர்களையும் விட நீ மிகவும் புத்திசாலி. இளையவன் தான்; வயதில் சிறியவனே நீ; ஆனால் உன்னுடைய திறமையும், புத்திசாலித்தனமும் அவர்கள் எவரிடமும் இல்லை. ஆனால் குழந்தாய், உன்னை சுயம்வரத்திற்கு அழைத்திருந்தால் நீ போட்டியில் கலந்து கொண்டிருக்க முடியாது. க்ஷத்திரியர்களின் சட்டப்படி நீ அதற்கான தகுதி வாய்ந்தவன் அல்ல. அதோடு அமர்வதற்கு உன்னை விடவும் உயரமாகவும், உனக்குக் கொடுப்பதைவிடவும் அதிக மரியாதைகளோடும் மற்ற அரசர்கள் எதிர்பார்ப்பார்கள். குழந்தாய் நீ புரிந்து கொள்கிறாய் அல்லவா? அந்த மாதிரியான தர்மசங்கடத்தைத்தவிர்க்க வேண்டியே உன்னை அழைக்க வேண்டாம் என முடிவெடுத்ததற்கு நானும் ஒரு மாதிரியாகச் சம்மதம் கொடுக்க வேண்டியதாகிவிட்டது.”

“எனக்கு நன்றாகவே புரிகிறது பாட்டனாரே!உங்களைப் போன்ற பரம்பரைப் பெருமை வாய்ந்த ஒரு அரசன் என் போன்ற சாமானிய இடையனை எதிர்கொண்டு அழைத்தது கூடத் தகாதுதான். என் அத்தை கணவர் தாமகோஷனிடமும், விந்தன், அனுவிந்தனிடமும் நான் இதற்கான ஆக்ஷேபணையைத் தெரிவித்தேன்.” இதைச் சொல்கையில் கண்கள் மினுமினுத்தன கண்ணனுக்கு. முகம் மட்டுமின்றி உடலே குறும்பில் கொப்பளித்தது.

“வாசுதேவா! நீ தர்மத்திற்கென வாழ்கிறாய். அதை நிலை நிறுத்தப் பாடுபடுகிறாய். உன்னைக் குறித்து அனைவருமே தர்மதேவதை எனச் சொல்கின்றனர். உன் போன்ற ஒருவனுக்கு இவ்வகையில் எங்கள் வணக்கங்களைத் தெரிவிப்பதில் தவறே இல்லை; ஏனெனில் இந்தப் பரந்த பூமியில் உன்னை விட்டால் இதற்குத் தகுதியானவர்கள் எவரும் இல்லை. தெய்வமே மனித உருக்கொண்டு வந்தாற்போல் நீ வந்திருக்கிறாய். நீ வேறு; அந்த தெய்வம் வேறு அல்ல. சகலவிதமான வழிபாட்டுக்கும் நீ தக்கவனே; அதில் சந்தேகமே வேண்டாம். உன்னைக் கடவுள் என்று சொல்பவர்கள் தவறேதும் செய்யவும் இல்லை; நீ கடந்து வந்த பாதையைச் சற்றே திரும்பிப் பார். எவருக்கும் ஒரு சின்ன அடி கூடக் கொடுக்காமல் நீ ஜெயித்து வந்திருக்கிறாய்.”




4 comments:

பித்தனின் வாக்கு said...

good nalla irukku. pending vaitha muunu article padiththu vitten.

Thanks amma

sambasivam6geetha said...

நல்வரவு பித்தனின் வாக்கு.

sambasivam6geetha said...

நல்வரவு பித்தனின் வாக்கு.

priya.r said...

இந்த அத்தியாயம் 90ஐ படித்து விட்டேன் கீதாமா
கண்ணனின் தன்னடக்கம் தெரிகிறது