Saturday, August 13, 2011

ஷ்வேதகேதுவின் வெளியேற்றம்!

இந்த பிராமணன் தான் கற்றறிந்தவன் என்ற திமிரிலே பேசுகிறான். ஆஹா, இதுவே மகதமாக இருந்திருந்தால்! கற்றறிந்தவன் என்பதாலோ, ஆசாரியன் என்பதாலோ சக்கரவர்த்தியை மீறிப் பேசினால்! அவன் தலை இரண்டாகத் துண்டிக்கப்பட்டிருக்குமே! என் எதிரில் எவரும் வாய் திறக்கவே அஞ்சுவார்களே! என் தளபதிகள் துண்டிக்கவில்லை எனில் நானே துண்டித்திருப்பேனே! இது என்ன அநியாயம்! இங்கே வந்திருப்பதால், பீஷ்மகனும், தாமகோஷனும் கடைப்பிடிக்கும் அதே தர்மத்தை, ஆரியர்களின் தர்மத்தை நானும் கடைப்பிடித்துத் தொலைக்கவேண்டியுள்ளதே! முட்டாள்கள் இந்த ஆரியர்கள்! மூட நம்பிக்கை மிகுந்தவர்கள். இந்த பிராமணன் நாட்டை விட்டே போய்த் தொலைந்தால் தான் என்ன குடி முழுகிவிடும்! இப்படிக் கெஞ்சுகிறான் இந்த பீஷ்மகன்!

ஆனால் ஷ்வேதகேதுவின் குரலில் அதே விநயம், மரியாதை! ஜராசந்தனைப்பார்த்து, “எல்லாமுமே இங்கே அதர்மத்தின் போக்கில் தான் செல்கிறது சக்கரவர்த்தி! இதை இந்தக் குண்டினாபுரத்து மக்கள் வாய்விட்டுச் சொல்ல முடியாமல் அவரவர்கள் கூடிப்பேசிக்கொள்வதிலிருந்து புரிந்தாலும் நேற்று அவந்தி நாட்டு இளவரசன் அனுவிந்தனின் பேச்சிலிருந்து பூரணமாய்த் தெரிய வந்தது. மணமகனை நீங்கள் ஏற்கெனவே தேர்ந்தெடுத்து இருக்கின்றீர்கள். இங்கே சுயம்வரம் என்பது பெயரளவில் தான் நடைபெறப் போகிறது. அதற்கென நீங்கள் அழைப்பு அனுப்பி வரவழைத்திருக்கும் அரச விருந்தாளிகள் அனைவரும் சக்கரவர்த்தியான உம்முடைய கட்டளையின் பேரில் உம்முடைய விருப்பத்தை நிறைவேற்றச் சம்மதித்திருக்கின்றனர். அப்படிச் சம்மதம் கொடுத்தவர்கள் மட்டுமே அழைக்கப் பட்டிருக்கின்றனர். உங்களுக்குப் பயந்து வீரனும், திறமைசாலியுமான எந்த இளவரசனும் ஆயுத, சாஸ்திர வித்தைப்போட்டிகளில் கலந்து கொண்டு சிசுபாலனை எதிர்க்கப் போவதில்லை.”

“ஒருவேளை சிசுபாலனைத் தவிர வேறொரு இளவரசன் மணமகளை மணக்க எண்ணி இருந்தாலும் அவன் தன் ஆசையைக் குழி தோண்டிப் புதைக்கத் தான் வேண்டும். உம்மை மீறி சிசுபாலனைத் தவிர வேறெவரும் அவளை மணக்க முடியாது. அல்லது இளவரசியே தனக்குப் பிடித்த இளவரசனைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம் என்றால்! ஹூம் அதுவும் இயலாது. இளவரசி சிசுபாலனைத் தான் தான் தேர்ந்தெடுத்திருப்பதாய் அவையோருக்கு அறிவிக்க வேண்டும். இது ஒரு சுயம்வரம்! குண்டினாபுரத்தின் இளவரசியும், பீஷ்மகனின் கண்ணின் கருமணியுமான ருக்மிணி தேவியை நான் என் சொந்த சகோதரி போல் கருதி அன்பு செலுத்துகிறேன். இளமையும், அழகும், புத்திசாலியுமான அவளை உம்முடைய அரசியல் வியாபாரத்தில் விற்கப் படும் ஒரு பொருளாய்க் கருதி பேரம் பேசி உள்ளீர்கள். அவள் வாழ்க்கையைப் பணயம் வைத்து உம்முடைய பேத்திக்கு ஒரு வாழ்க்கையைத் தேடி இங்கே உங்களை ஸ்திரப் படுத்த நினைக்கிறீர்கள். அதற்கு ருக்மிணி தேவி ஒரு பகடைக்காய். “

“ஈசா, மஹாதேவா! ஏதேனும் அற்புதம் செய்து இந்த நிலையை மாற்றுவாய் என நேற்று வரை நினைத்திருந்தேனே! உன்னுடைய கருணைப்பார்வை எங்கள் மேல் படவில்லையே! ஆம், சக்கரவர்த்தி! அந்த மஹாதேவன் அருளால் அனைத்தும் சரியாகிவிடும் என நேற்று வரை நினைத்தேன். ஆனால் அவனோ என் வேண்டுகோளை நிராகரித்துவிட்டானே. என்ன நடக்கக் கூடாதோ அது நடக்கப் போகிறது. அரசியல்காரணங்களுக்காக இளவரசி ருக்மிணியின் வாழ்க்கை பணயம் வைக்கப் படுகிறது. தன் சொந்த நாட்டின் நலனுக்காக ருக்மிணி தன் வாழ்க்கையைத் தியாகம் செய்யப் போகிறாள். மஹாதேவா! என்னால் இதைத் தடுக்க இயலவில்லையே! ஈசா, எந்த முகத்துடன் நான் அவளை ஆசீர்வதிப்பேன்! ஆம், சக்கரவர்த்தி, என்னால் இதைத் தடுக்கவும் இயலவில்லை; அதே சமயம் என்னால் ருக்மிணிக்கு ஆசிகள் வழங்கவும் இயலாது; ஆகவே நான் இங்கிருந்து செல்கிறேன்.”
மூச்சுவிடாமல் தன் உணர்ச்சிகளைக் கொட்டித் தீர்த்த ஷ்வேதகேது எழுந்து நின்று மூன்று அரசர்களையும் ஒரு முறை உற்றுக் கவனித்தான். பீஷ்மகனைப் பார்த்து, “மாட்சிமை பொருந்திய மன்னா! உண்மைகள் கசக்கும். அந்தக் கசக்கும் உண்மையை நான் இங்கே இப்போது பேச நேர்ந்ததற்காக வருந்துகிறேன். உனக்கும் அவை பிடித்திருக்காது; ஆனால் என் செய்வேன்! சக்கரவர்த்தியின் தொடர்ந்த வற்புறுத்தல் என்னைப் பேச வைத்துவிட்டதே! நான் உங்கள் அனைவரையும் விட்டு இப்போது பிரிந்து செல்கிறேன் மன்னா! சேதி நாட்டு அரசனும் இந்தச் சூழ்ச்சியில் பங்கு கொண்டிருப்பது என்னை மிகவும் வருத்துகிறது. அரசர்களே, எது எப்படி ஆனாலும் என் ஆசிகள் உங்களுக்கு உண்டு. இந்த அதர்மத்தின் பாதையிலிருந்து நீங்கள் மீண்டு தர்மத்தின் பாதையில் தொடர்ந்து செல்ல எல்லாம் வல்ல மஹாதேவன் அருளுவானாக!”

ஷ்வேதகேது அரண்மனையிலிருந்து வெளியே வந்தபோது அவன் மாணாக்கர்கள் மூலம் ஊர் மக்கள் அனைவருக்கும் விஷயம் தெரிந்திருக்க மாளிகை வாசலில் பெரும் கூட்டம் கூடி இருந்தது. கூட்டத்தைத் தலைமை வகித்த அவன் மாணாக்கர்கள் அவன் காலில் விழுந்தனர். கூட்டமோ செய்வதறியாமல் தங்களை ஆசீர்வதிக்கச் சொல்லிக் கெஞ்சியது. ஷ்வேதகேது கண்களில் பட்டவர்களை ஆசீர்வதித்துக்கொண்டே தன் தண்டத்தையும் கமண்டலத்தையும் எடுத்துக்கொண்டு அங்கிருந்து கோட்டை வாயிலை நோக்கி நடந்தான். அவனை அப்நவியும், ஜாஹ்னுவும் பின் தொடர்ந்தனர். ஷ்வேதகேதுவின் ஆயுதங்களான வில், அம்புகளையும், வாள், கதை போன்றவற்றையும் இருவரும் தூக்கிக்கொண்டு சென்றனர். குண்டினாபுரத்து மக்கள் ஷ்வேதகேது போன்றதொரு ஆசாரியன் தங்கள் நாட்டை விட்டுக் காட்டை நோக்கிச் செல்ல வேண்டுமானால் எப்படிப் பட்ட அதர்மம் நடக்கிறது என ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டனர். அந்தக் கடவுளுக்கே வெறுத்துப் போய்த் தங்கள் நாட்டு மன்னனை அதர்ம வழியிலிருந்து காக்கவில்லையோ எனவும் பேசிக் கொண்டனர். நடக்கப் போகும் போலியான சுயம்வரத்தின் பின்னர் எப்படிப் பட்ட நிகழ்வுகளை இந்த நாடும், நாமும் சந்திக்கப் போகிறோமோ என்ற கவலையிலும் ஆழ்ந்தனர்.

குண்டினாபுரத்தில் இத்தனையும் நடக்க மதுராவிலோ கண்ணன் புன்னகை புரிந்து கொண்டிருந்தான். அதற்குக் காரணம் பாட்டன் உக்ரசேனன் அவனிடம் கூறிய செய்திதான். ப்ருஹத்பாலன் யுவராஜா பட்டத்தை வேண்டாம் என மறுத்துவிட்டானாம். இது தான் பாட்டன் தன் அருமைப் பேரனிடம் கூறிக்கொண்டிருந்தது. ஆஹா, கண்ணனுக்கா தெரியாது! இது இப்படித் தான் நடக்கும் என! ஆனால் யாதவத் தலைவர்கள் கண்ணனையே யுவராஜாவாக வற்புறுத்தினார்கள். கண்ணனோ திடமாக மறுத்தான். அப்போது அங்கே ருக்மிணியின் சுயம்வரம் குறித்த பேச்சும் எழுந்தது.

1 comment:

priya.r said...

இந்த அத்தியாயம் 87 ஐ படித்து விட்டேன் கீதாம்மா .,

ஷ்வேதகேதுவின் வெளியேட்ரமும் அதை தொடர்ந்து நடக்க இருப்பவைகளும் படிக்கும் ஆர்வத்தை அதிகப்படுத்தி கொண்டு இருக்கின்றன