Thursday, August 11, 2011

ஜராசந்தனின் கோபம்! ஷ்வேதகேதுவின் உறுதி!

ஜராசந்தனுக்கு ஷ்வேதகேதுவின் வார்த்தைகளில் ஏதோ உள் அர்த்தம் பொதிந்திருப்பதாயும், சூது இருப்பதாயும் மனதில் பட்டது. ஆனால் பீஷ்மகனுக்கோ எதுவும் புரியவில்லை. அவனுக்கு ஆச்சரியமாகவே இருந்தது. அவன் பேசுவதற்குள்ளாக ஜராசந்தன் குறுக்கிட்டு, “இதோ பார், பிராமணனே, இங்கே அப்படி என்ன தவறு நடந்திருக்கிறது?? எல்லாம் சரியாகவே நடந்து வருகிறது. உன்னுடைய தர்மம் எதுவோ அதை நீ இங்கே அனுசரிப்பதில் என்ன ஆகிவிடும்?? பீஷ்மகன் உன்னை எவ்வளவு உயர்ந்த ஸ்தானத்தில் வைத்துப் பூஜிக்கிறான் என்பதை நீயே நன்கறிவாய்; மேலும் அவனுடைய உபசாரங்களில் என்ன குறை கண்டாய் நீ?” கோபம் கண்களில் மட்டுமின்றிக் குரலிலும் தெரியப் பேசினான் ஜராசந்தன்.

ஷ்வேதகேது சற்று நேரம் ஜராசந்தனையே உற்றுப் பார்த்தான். ஜராசந்தன் தர்ம சங்கடமாய் உணர்ந்தான். பின்னர் ஷ்வேதகேது, “பீஷ்மகனைப் போன்ற அரசர்களைக் காண்பது அரிது. உயர்ந்த மனிதர் அவர். அவரால் எனக்கு எந்தவிதமான மனக்கிலேசமும் ஏற்படவில்லை. வேத சாஸ்திரங்களுக்கோ, தர்மத்திற்கோ விரோதமாய் எதுவும் செய்ய நினைக்கக் கூட இல்லை அவர்.”

“பின்னர்?? என்ன தடை உனக்கு?” அதிகாரம் தொனித்தது ஜராசந்தன் குரலில்.

“மன்னர் கருணை உள்ளவர். அதிலும் என் போன்ற பிராமணர்களிடம் மரியாதை மிக்கவர். என்னிடம் மிகவும் மரியாதை கொண்டு எனக்கு வேண்டிய வசதிகளை எல்லாம் நான் கேட்காமலேயே செய்து கொடுத்தார். நானும் அதற்குத் தகுந்தவனாக, நல்லதொரு ஆசாரியனாகவே நடந்து கொண்டேன். நான் ஒரு ஆசாரியன். அனைத்துக்கலைகளையும் கற்றுத் தேர்ந்தவன். ஆகவே எனக்குத் தெரிந்த வித்தையை நான் கற்றுக்கொடுத்தே ஆகவேண்டும். இது என் முக்கியமான தர்மம். அதற்கிணங்க இங்கே உள்ள மாணாக்கர்களில் வேதப் பயிற்சி தேவைப்பட்டோருக்கு அதைக் கற்றுக் கொடுத்திருக்கிறேன். ஆயுதப் பயிற்சி தேவைப்பட்ட வீரர்களுக்கு எனக்குத் தெரிந்த சகல அஸ்திர, சாஸ்திர வித்தைகளையும், வில், வாள், வேல், போன்ற பயிற்சிகளையும் சொல்லிக் கொடுத்திருக்கிறேன். மந்திரப் பிரயோகங்களின் மூலம் வில்லில் அம்பு தொடுத்துப் பிரயோகம் செய்யும் வித்தையையும் சிலருக்குக் கற்றுக் கொடுத்தேன். அவர்களில் சிலர் போஜனின் படைத் தளபதிகள்; தளபதிகளின் பிள்ளைகள்; பெரும் வீரர்கள். இதற்கு மேல் நான் செய்வதற்கு எதுவும் இல்லை; நான் இங்கே வரும்போது எதையும் கொண்டு வரவில்லை. வெறும் கைகளுடன் தான் வந்தேன். இங்கிருந்து செல்கையிலும் அதே வெற்றுக்கைகளோடு செல்கிறேன், சக்கரவர்த்தி அவர்களே!”

ஷ்வேதகேது மேற்கண்ட வார்த்தைகளை மிக்க மதிப்புடனும், மரியாதையுடனும் சொன்ன விதத்தில் பீஷ்மகனுக்கும் ஜராசந்தனுக்கும் உள்ளூரக் கூச்சம் ஏற்பட்டது. தங்களை மிகவும் சிறியவர்களாக உணர்ந்தனர் இருவரும். மன்னிப்புக் கேட்கும் குரலில் பீஷ்மகன், “ ஆசாரியரே, நீர் எமக்குப் பலவிதங்களிலும் உதவி இருக்கின்றீர். மிகச் சிறு காலமே இங்கே இருந்தாலும் அந்தக் காலத்துக்குள்ளே குண்டினாபுரத்தையும், அதன் மக்களையும் கல்வி, கேள்விகளிலும், வீரத்திலும் சிறந்தவர்களாக மாற்றிவிட்டீர்கள்; இங்குள்ள இளம் போஜ வீரர்களுக்கு நீர் ஓர் ஆதர்ச புருஷர் எனவும், அவர்களுக்குப் புத்துணர்ச்சி ஊட்டி ஊக்கமளித்த மகான் நீர் என்பதையும் நான் நன்கு அறிவேன். உம்முடைய தபஸும், அதில் விளைந்த அதீத ஞானமும், வித்தைகளின் தேர்ச்சியும் விதர்ப்ப மக்களால் ஒரு நாளும் மறக்கவொண்ணாதது. அவர்கள் உம்மை மிகவும் மதிக்கின்றனர். ஆகவே இந்தச் சமயம் நீர் இங்கிருந்து சென்றால் மக்கள் மனம் புண்பட்டுவிடும். தயவு செய்து நீர் இங்கேயே இரும்.”

ஜராசந்தன் சற்றே இறுமாப்புடன் சிரித்துக்கொண்டான். பீஷ்மகன் ஷ்வேதகேதுவைப் புகழ்ந்து அதன் மூலம் தன் காரியத்தைச் சாதித்துக்கொண்டு விடுவான் என உள்ளூர மகிழ்ச்சி அடைந்தான். ஆனால் ஷ்வேதகேதுவோ, “நான் செல்ல வேண்டும். என் சங்கல்பத்தை உடைக்க முடியாது.” என்றான். “உம்முடைய சங்கல்பம் நீர் இங்கே இருப்பதை எவ்வாறு குறுக்கிட்டுத் தடுக்கிறது ஐயா? எனக்குப் புரியவில்லையே? இவ்வளவு நாட்கள் இங்கே இருந்தவர் இப்போது போகிறேன் என்றால் என்ன அர்த்தம்? நாங்கள் ஏதேனும் தவறு செய்திருந்தால், உம்மை அவமதித்திருந்தால் எங்களை மன்னிக்கவும். தவறைச் சரி செய்துவிடுகிறேன். என்ன ஆணையிட வேண்டும். அதை மட்டும் சொல்லுங்கள்.”

“மன்னர்களின் உயர்வான போஜமன்னனே! “ ஷ்வேதகேதுவின் கண்களில் எதற்கும் மசிய மாட்டேன் என்ற உறுதி தெரிந்தது. “ மன்னா, உன்னால் இயலாத ஒன்றைக்குறித்துப் பேசி என்ன பயன்? நீ நினைத்தாலும் உன்னால் எதுவும் செய்ய இயலாது; உதாரணமாக இந்தச் சுயம்வரத்தை உன்னால் நிறுத்த இயலுமா?”

ஷ்வேதகேதுவை எவ்விதமேனும் பயமுறுத்திப் பணிய வைக்க நினைத்த ஜராசந்தன், சற்றே கர்வத்துடன், “உன்னுடைய எந்த விரதத்துக்கு இந்தச் சுயம்வரத்தால் பங்கம் ஏற்பட்டது? இதற்கும் அதற்கும் என்ன சம்பந்தம்? “ என்றான்.

“மரியாதைக்குரிய மன்னா! உம் எதிரில் ஒரு சின்ன உண்மையை நான் கூற அனுமதி உண்டா?”

“ஏன்? என்ன ஆயிற்று? நான் எப்போது வேண்டாம் என்று சொன்னேன்?” ஜராசந்தன் கொஞ்சம் ஆச்சரியமும், திகைப்பும் கலந்து கேட்டான்.

“ஓ,ஓ, ஓ, சக்கரவர்த்தி, உம் மனதுக்கு எது சம்மதமோ, எதை நீர் கேட்க விரும்புகிறீரோ அதை மட்டுமே உம்மிடம் பேசலாம் அல்லவா? அப்போது தான் மக்களை நீர் பேசவே இடம் கொடுப்பீர். இது எனக்குத் தெரிந்தே இருக்கிறது. அதனால் தான் கூறுகிறேன்; நான் என்ன சொல்ல நினைக்கிறேனோ அதை நீர் கேட்க விரும்ப மாட்டீர்.”


"நான் என்ன அவ்வளவு பொல்லாதவனா?" ஜராசந்தன் கேட்டான்.

"உலகம் அப்படித் தான் சொல்கிறது. நான் இங்கே வந்ததன் காரணமே இங்கிருந்து செல்கையில் என் ஆசிகளையும், நல்வாழ்த்துகளையும் மன்னன் பீஷ்மகனுக்குத் தெரிவிக்க வேண்டும் என்பதே. அதோடு இங்கிருந்து அமைதியாகவே செல்ல விரும்புகிறேன். ஆனால் நீர் என்னைப் பேசச் சொல்கிறீர்; காரணங்கள் கேட்கிறீர். அதை நான் சொல்லாமலேயே இங்கிருந்து செல்ல விரும்பினேன். ஆனால் இப்போது நான் சொல்லவில்லை எனில் உம்மிடம் உள்ள பயம் காரணமாகச் சொல்லவில்லை என்று ஆகிவிடும். உம்மிடம் எனக்குப் பயம் ஏதுமில்லை, சக்கரவர்த்தி! நான் ஏன் இங்கிருந்து செல்கிறேன் தெரியுமா? நடைபெறப் போகும் சுயம்வரம் உம்முடைய கட்டளையின் பேரில், விருப்பத்தின் பேரில் உம்முடைய ஆணையின் பெயரில் பெயரளவுக்கு நடைபெறப் போகிறது என்பதை நான் தெரிந்து கொண்டேன். இது தர்மத்திற்கு விரோதம். ஆகவே நான் இங்கிருந்து செல்கிறேன்."

"தர்மம்! அதர்மம்! எங்கிருந்து வந்தது இவை? என்ன அதர்மத்தைக் கண்டாய் இந்தச் சுயம்வரத்தில்? என்ன தவறைக் கண்டாய்?" ஜராசந்தனின் கோபம் அதிகமானது. கஷ்டப்பட்டு அடக்கிய கோபம் இப்போது எரிமலை பொங்குவது போல் பொங்கியது.


1 comment:

priya.r said...

இந்த அத்தியாயம் 86 ஐ படித்து விட்டேன் கீதாம்மா .,

ஷ்வேதகேதுவின் பண்பு ,பேச்சு ,துணிவு வீரம் எல்லாம் தெரிந்து கொள்ள முடிந்தது