Tuesday, May 31, 2016

த்வைபாயனரின் சாந்தம்! காங்கேயனின் கோபம்!

ஹஸ்தினாபுரம் வந்து சேர்ந்த த்வைபாயனர் நேரே கடவுளருக்கெல்லாம் கடவுளான பிரதிபேஸ்வரர் கோயிலுக்குச் சென்றார். இந்தக் கோயில் மஹாராஜா பிரதிப்பால் ஆரம்பிக்கப்பட்டு அவன் மகன் ஷாந்தனுவால் கட்டி முடிக்கப் பட்டது. முன்னொரு சமயம் பத்ரிநாதரை தரிசிக்கப் புனித யாத்திரை சென்றபோது த்வைபாயனர் தன் தந்தையுடன் இந்தக் கோயில் வளாகத்திலே தான் தங்கி இருந்தார். கோயிலுக்குள் நுழைந்ததுமே தான் தங்கி இளைப்பாறத் தக்க இடம் ஏதும் இங்கே இருக்கிறதா என த்வைபாயனர் விசாரித்தார். அவரை அங்குள்ள மாந்தோப்புக்கு அழைத்துச் சென்றனர். அங்கு பல துறவிகள், சந்நியாசிகள், வேத விற்பன்னர்கள், ஸ்ரோத்ரியர்கள் தங்கி இருந்தனர். அங்கே சென்றடைந்ததும் அவர் முதலில் கங்கையில் குளித்துவிட்டு மத்தியான நேரத்துக்கான அனுஷ்டானங்களை முடித்துக் கொண்டார். திரும்ப அவர் தோப்புக்கு வந்தபோது அனைவருக்கும் உணவு அளித்து முடிந்து விட்டது என்பதைத் தெரிந்து கொண்டார். உணவளிக்கும் நேரம் முடிந்து விட்டதால் இனி யாரிடமும் போய்த் தனக்கு உணவு வேண்டும் என்று கேட்பதை விடப் பட்டினியாக இருந்துவிடலாம் என்றும் முடிவெடுத்தார்.

த்வைபாயனர் மனதில் அவநம்பிக்கையே குடி கொண்டிருந்தது. ஏனெனில் அவர் ஹஸ்தினாபுரத்துக்கு வந்திருக்கும் இந்த நேரம் சரியல்ல. சக்கரவர்த்தி ஷாந்தனு மரணப்படுக்கையில் இருக்கிறான். இந்தச் சமயம் எவருக்குமே தர்மக்ஷேத்திரத்தைக் குறித்த கவலையோ அதை மீட்டெடுப்பது குறித்த யோசனையோ இருக்கப் போவதில்லை. தான் எவரிடமும் இதைக் குறித்துப் பேச முடியாது. ஷாந்தனுவைப் போன்ற மிக்க அதிகாரம் படைத்த சக்கரவர்த்திகளைச் சந்திக்கும் முறை குறித்தும் அதன் நியதிகள் குறித்தும் த்வைபாயனருக்கு எதுவும் தெரியாது.

ஆனால் அங்கே இருந்த சில ரிஷிகள், முனிவர்கள், துறவிகள் ஷாந்தனுவைத் தரிசித்து ஆசிகள் வழங்கச் சென்று கொண்டிருந்தனர். அவர்கள் அனைவரும் ஷாந்தனுவின் அரசவையின் இளைய மந்திரி குனிக் என்பவனால் இணைக்கப்பட்டு அங்கிருந்து அரச மாளிகை நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். த்வைபாயனர் தம்மையும் அந்தக் கூட்டத்தோடு இணைத்துக் கொண்டார். த்வைபாயனருக்குத் தன் தோற்றம் குறித்துக் கொஞ்சம் கவலையாகவே இருந்தது. அவர் தம் தோற்றம் சரியில்லை என்பது குறித்து நன்கு அறிந்திருந்தார். நாட்கணக்காக நடந்ததால் களைத்துப் போன முகம்! கிழிந்தும், அழுக்காகவும் போயிருந்த மான் தோல் ஆடை! நீண்ட நாட்கள் உணவு உண்ணாததால் பார்க்கும்போதே தெரிந்த பலஹீனம். அவர் கூட்டத்தில் சேர்ந்து  கொண்டதைப் பார்த்த மந்திரிக்கு இவர் தோற்றமே பிடிக்கவில்லை. ஆனாலும் இவர்களுக்கு மரியாதை கொடுத்தாகவேண்டும்.

“இளந்துறவியே! நீர் எங்கிருந்து வருகிறீர்?” என்று த்வைபாயனரிடம் வினவினார். அவர் குரலில் ஏதோ ஒரு இனம் தெரியாத கவலையும், சந்தேகமும் இருப்பது தெரிந்தது. இருந்தாலும் த்வைபாயனர் சற்றும் தயங்காமல், “தர்மக்ஷேத்திரத்திலிருந்து வருகிறேன்.” என்றார்.

“என்ன தர்மக்ஷேத்திரமா? அந்த ஓநாய்களின் உலகிலிருந்தா? அங்கிருந்து உயிருடன் எப்படி ஐயா வந்தீர்கள்?”

அவர் தம்மை மறைமுகமாகச் செத்து ஒழிந்திருக்க வேண்டியவன், உயிருடன் வந்திருக்கிறான் எனச் சொல்லாமல் சொல்வதைப் புரிந்து கொண்டாலும் த்வைபாயனர் அதைத் தள்ளி விட்டு விட்டார். “ஆம், நான் தர்மக்ஷேத்திரத்திலிருந்து தான் வருகிறேன். கடவுளர் கருணையால் உயிர் தப்பி வந்திருக்கிறேன்.”

“உம்முடைய கோத்திரம் என்ன?”

“பராசர கோத்திரம்!”

இந்த இளம் துறவி நம்மை ஏமாற்றுகிறான் என்றே எண்ணினான் அந்த மந்திரி. அவன் அவரிடம் கேட்டான். “பராசர முனிவர் இப்போது எங்கே இருக்கிறார் என்பதாவது உனக்குத் தெரியுமா? அவர் வசிஷ்டரின் பேரன் என்பதை அறிவாயா?”

“பராசர முனிவர் இப்போது பித்ரு லோகத்துக்குச் சென்றுவிட்டார்.”

“மதிப்புக்குரிய பராசர முனிவர் எங்கே இறந்தார்?”

“பராசர முனிவரின் தன் சொந்த ஆசிரமம் இருந்த இடமான சாம்பல் பிரதேசத்துக்குச் சென்ற போது அங்கிருந்த ஓநாய்களால் தாக்கப்பட்டு மரணம் அடைந்தார். அவர் ஆசிரமம் இருந்த அந்த இடம் சஹஸ்ரார்ஜுனனால் எரிக்கப்பட்டு இப்போது சாம்பல்பிரதேசமாகக் காட்சி அளிக்கிறது.”

“இதை எல்லாம் நீ எப்படி அறிந்தாய்?”

“நான் அப்போது அங்கே தான் இருந்தேன்!”

குனிக் என்னும் அந்த மந்திரி இன்னமும் அதிக சந்தேகத்துடன் த்வைபாயனரையே பார்த்தான். அவன் சந்தேகம் முற்றிலும் தீரவில்லை. ஆனால் இவர் ஒருவருக்காக மற்றத் துறவிகளைக் காக்க வைக்க முடியாது. ஆகவே வேறு வழியில்லாமல் அவரையும் சேர்ந்து கொள்ளச் சொல்லிச் சைகை செய்து விட்டு அனைவரையும் அரச மாளிகை நோக்கி அழைத்துச் சென்றான். அரசமாளிகையில் மன்னன் மரணப்படுக்கையில் படுத்திருந்த அறைக்குள்ளே அனைவரும் அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கே ஒரு பெரிய அக்னிகுண்டம் ஸ்தாபிக்கப்பட்டு அரண்மனையின் மிகச் சிறந்த வேத விற்பன்னர்களாலும், அரச குருவாலும் மாபெரும் யாகம் ஒன்று மன்னனின் உடல் நலத்துக்காக நடந்து கொண்டிருந்தது. அரசகுருவானவர் மன்னனின் படுக்கைக்கு அருகே இடப்பட்டிருந்த ஆசனம் ஒன்றில் கம்பீரமாக அமர்ந்திருந்தார். அந்த அறை பெரியதாகவும் காற்றோட்டமாகவும் இருந்தது. அனைவரும் அவரவருக்குத் தெரிந்த பிரார்த்தனை மந்திரங்களைச் சொல்ல, ஸ்ரோத்ரியர்கள் ஒரு பக்கம் அஸ்வினி தேவர்களை அழைத்து மன்னன் உடல் நலத்துக்காகப் பிரார்த்தித்துக் கொண்டிருந்தனர்.

மன்னன் அருகே யுவராஜா காங்கேயன் கடுமையான முகபாவத்துடன் நின்று கொண்டிருந்தான். மயக்க நிலையில் ஆழ்ந்திருந்த தன் தந்தையின் முகத்தையே ஆவலுடன் அவ்வப்போது பார்த்துக் கொண்டிருந்தான். படுக்கையின் மறுபக்கம் அரசனின் தலைமாட்டின் அருகே போடப்பட்டிருந்த ஆசனத்தில் மஹாராணி சத்யவதி அமர்ந்திருந்தாள். அவள் கண்கள் மன்னனின் நிலையை எண்ணிக் கண்ணீரைச் சொரிந்து கொண்டிருந்தன. ஆனால் அது தெரியாவண்ணம் அவள் முகம் ஒரு வேலைப்பாடுள்ள துணியால் மூடப்பட்டிருந்தது. அவள் கண்கள் மட்டுமே வெளியே சிறிதளவு தெரிந்தன. அவளருகே அவளுடைய இரு பிள்ளைகளான சித்திராங்கதனும், விசித்திர வீரியனும் அமர்ந்திருந்தார்கள்.

அவள் அருகே நின்றிருந்த இரு பெண்கள் அந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் இல்லை என்பது பார்த்த உடனே தெரிந்தது. அவர்கள் முகத்தை மூடி இருக்கவில்லை. அழகாகவும் வெண்மை நிறத்துடனும் இருந்தார்கள். தங்கள் கைகளில் இருந்த மயிலிறகு விசிறியினால் மன்னனுக்கு அவ்வப்போது விசிறினார்கள். த்வைபாயனரும் அவருடன் வந்தவர்களும் உள்ளே நுழைந்ததுமே காங்கேயன் தன்னிரு கரங்களைக் கூப்பி அவர்களை வரவேற்றான். அனைவரையும் மன்னனின் படுக்கைக்கு அருகே வந்து பிரார்த்திக்கச் சொன்னான். த்வைபாயனர் பக்கவாட்டில் தனியாக நின்று கொண்டார். அனைவரும் பிரார்த்தனை மந்திரங்களைச் சொல்லி மன்னனை ஆசீர்வதித்தார்கள். அது முடிந்ததுமே காங்கேயன் தன் கரங்களை மீண்டும் கூப்பிக் கொண்டு வந்திருந்தவர்கள் அனைவரையும் உடனே அறைக்கு வெளியே செல்லும்படி சைகையினாலேயே ஆணையிட்டான்.

அனைவரும் அறையை விட்டு வெளியேறினார்கள். ஆனால் த்வைபாயனர் மட்டும் வெளியேறாமல் அங்கேயே நின்றிருந்தார். ஏற்கெனவே இப்படிக் குழுக் குழுவாக ரிஷிகள், முனிவர்கள் என்று வந்து தந்தையைப் பார்த்து ஆசிகள் வழங்கிச் சென்றும் அதில் முன்னேற்றம் ஒன்றையும் காணோம் என்பதில் காங்கேயனுக்குக் கோபம் மிகுந்திருந்தது. ஆர்யவர்த்தத்தின் அனைத்து நாடுகளிலிருந்து வந்து பிரார்த்தனைகளும் ஆசிகளும் கொடுத்தும் எவ்வித நன்மையும் மன்னனுக்குக் கிட்டவில்லை. ஆகவே இப்போது அங்கேயே நின்று கொண்டிருந்த த்வைபாயனரைப் பார்த்ததும் காங்கேயனுக்கு எரிச்சலே மிகுந்தது. மேலும் த்வைபாயனரின் கிழிந்த அழுக்கான மான் தோல் வேறு காங்கேயனின் கோபத்தை அதிகப்படுத்தியது. அவர் பசியோடு பல நாட்கள் உண்ணாமல் இருந்திருப்பதை அவர் முகமும் கண்களும் சொன்னது.

ஆனாலும் த்வைபாயனர் எதையும் லட்சியம் செய்யாமல், “ யுவராஜா, நான் சக்கரவர்த்தியின் படுக்கைக்கு அருகே கொஞ்சம் செல்ல உங்கள் அனுமதி வேண்டும்!” என்று வேண்டினார். பொறுமையின்மை காங்கேயனின் முகத்தில் அப்பட்டமாகத் தெரிந்தது. அவர் சற்றும் தயங்காமல் உடனேயே, “இல்லை, அதெல்லாம் முடியாது. தயவு செய்து நீங்கள் இங்கிருந்து வெளியேறுங்கள்!” என்றார்.  மேற்பார்வைக்கு அவை வேண்டிக் கொள்வதைப் போல் தெரிந்தாலும் உள்ளூர காங்கேயன் தன்னை அவமதிப்பதைப் புரிந்து கொண்டார் த்வைபாயனர். த்வைபாயனரின் இன்முகமும், அடக்கமான நடவடிக்கைகளும், மென்மையான பேச்சும் கூட காங்கேயனின் மனதை அசைக்க முடியவில்லை. மற்றவர்கள் யாராக இருந்தாலும் அவர் மேல் ஏற்படும் கோபத்தைக் கொஞ்சமாவது குறைத்துக் கொள்வார்கள். ஆனால் காங்கேயனோ சிறிதும் மாற்றமின்றி, “உனக்கு என்ன வேண்டும்?” என்று அலட்சியமாகக் கேட்டார்.

1 comment:

ஸ்ரீராம். said...

ஆர்வமாக அடுத்த பகுதிக்காக...