Monday, February 13, 2017

கண்ணன் வருவான், எட்டாம் பாகம்! பிரத்யும்னன் ஆலோசனை!

“போகலாம். ஆனால் அடுத்த நாளே என் தந்தையும் மற்றும் உள்ள என் குடும்பத்தவர்கள் அனைவரும் கொல்லப்படுவார்கள்.” என்றாள் பிரபாவதி.

“உன்னை நான் மணக்கவில்லை எனில், நானும் தான் கொல்லப்படுவேன். அதோடு மட்டும் இல்லை. உனக்கு என்ன கதியாகும் என்பதும் எனக்குத் தெரியாது!” என்றான் பிரத்யும்னன்.

“என் அம்மாவுக்குத் தந்தையிடமிருந்து இந்தச் செய்தி வந்ததும் என் அம்மா உடனே என்னிடம் என்ன விஷயம் என்பதைச் சொல்லி விட்டாள். அதோடு இந்தக் கட்டளைக்கு நாம் கீழ்ப்படிந்தே ஆகவேண்டும் என்றும் தெரிவித்தாள்.  என் தந்தையால் உங்களை வற்புறுத்தி என்னை மணக்க வைக்க முடியவில்லை எனில் மன்னர் மன்னர் என் தந்தைக்கு என்ன தண்டனை கொடுப்பாரோ தெரியவில்லை!” என்றாள் பிரபாவதி!

“இந்த வழிமுறையின் மூலம் உங்கள் மன்னாதி மன்னர் யாதவர்களை வெல்வதற்கு ஓர் உபாயம் கண்டு பிடித்திருக்கிறார் என்றே நினைக்கிறேன்.” என்ற பிரத்யும்னன் மேலும் தொடர்ந்து, “என் தந்தையையே நான் ஏமாற்றிஅவருக்கு துரோகம் செய்ய வேண்டும் என்றும் இருக்கும் அனைத்து யாதவர்களையும் மனதைக் கெடுத்து விட வேண்டும் என்றும் உங்கள் அரசர்க்கரசர் நினைக்கிறார் போலும். அது சரி, நீ எப்படி உன் தாயின் பாதுகாப்பிலிருந்து தப்பப் போகிறாய்?”

“இந்தத் தனிமையான இடத்தில் உங்களைச் சந்திப்பதற்கு என் தாயிடம் அனுமதி வாங்குவது கடினமாக இல்லை. எளிதாகவே இருந்தது. நானும் என் தாயிடம் உங்களைத் திருமணம் செய்து கொள்வதற்கான ஏற்பாடுகளின் முதல் படி இது தான் என்று சொல்லி இருக்கிறேன்.  என் தாய் அவளுடைய சேடிப் பெண்களில் எவரையேனும் இங்கே அனுப்பி வைத்து நான் உங்களுடன் என்ன பேசுகிறேன் என்பதைக் கண்காணிக்கக் கூடச் சொல்லி இருக்கலாம். சரி, அதெல்லாம் போகட்டும். இப்போது வெளிப்படையாக உண்மையைச் சொல்லுங்கள்! நீங்கள் என்னை மணந்து கொள்வீர்கள் அல்லவா?”

பிரத்யும்னன் ஒரு நீண்ட பெருமூச்சு விட்டான். ஒரு நிமிடம் யோசித்தான். “ நான் உன்னிடம் ஏற்கெனவே சொல்லி விட்டேன். என் முக்கியக் குறிக்கோளே என் தாத்தாவுக்கு என்ன நடந்தது என்பதைக் கண்டு பிடிப்பது தான். நான் அதற்காகவே இங்கே வந்திருக்கிறேன்.  அதை நான் கண்டுபிடிக்கவில்லை எனில் என் தந்தை என்னை மன்னிக்கவே மாட்டார். உங்கள் மன்னரின் இந்தக் கட்டளையை ஏற்கும் முன்னால் நான் இறந்திருக்கலாமே என்றே அவர் நினைப்பார்.  ஆனால் உண்மையைச் சொல்லப் போனால் என் தந்தையைப் போல் அப்படி எல்லாம் துணிச்சலாக ஒரு முடிவை எடுப்பதற்கு வேண்டிய தைரியமோ தகுதியோ என்னிடம் இல்லை!” என்றான் பிரத்யும்னன்.

சற்று நேரம் மௌனம் நிலவியது. பிரத்யும்னன் மீண்டும் தொடர்ந்தான். “சரி, உன்னுடைய மன்னாதி மன்னரிடம் நம் திருமணத்துக்கான அனுமதியைக் கேட்டு வாங்கு. உன் தந்தையை விட்டு அதை முறைப்படியும் சம்பிரதாயப்படியும் கொண்டாடச் சொல்லலாம். அதன் மூலம் நாம் எப்போது எங்கே சந்திக்க வேண்டுமென்றாலும் நம் விருப்பப்படி சந்திக்கலாம்.”

“ஆஹா! நான் உங்களை அடிக்கடி சந்திக்க விரும்புகிறேன்.  எப்போதெல்லாம் முடியுமோ அப்போதெல்லாம் சந்திக்க விரும்புகிறேன். நீங்கள் வந்ததிலிருந்து உங்களையும் உங்கள் நடவடிக்கைகளையும் மிகவும் ரசித்துப் பாராட்டிப் போற்றி வருகிறேன். வாசுதேவக் கிருஷ்ணனின் குமாரரே! உங்களை அந்த அம்பிகை தான் என்னிடம் அனுப்பி வைத்திருக்க வேண்டும்.”

பிரத்யும்னனிடம் திடீரென ஓர் மாற்றம் தென்பட்டது. அவன் அவளைப் பார்த்துப் புன்னகைத்தான். பின்னர் சொன்னான். “ நாம் ஒரு வேளை திருமணம் செய்து கொண்டால், சரி திருமணம் செய்து கொள்ளவே போகிறோம் எனில், வா, என்னிடம்! நாம் முதலில் இருந்து ஆரம்பிக்கலாம். என்னிடம் வா! எனக்கு என்ன நடந்தாலும் அதிலிருந்து என்னை அந்தக் காதல் கடவுள் காப்பாற்றுவான்.” என்றான்.  அதற்கு பிரபாவதி, “நாம் எப்போதோ திருமணம் செய்து கொண்டுவிட்டோம். என்னை நீங்கள் தொட்டீர்களே அந்த நிமிடமே நம் திருமணம் நடந்து முடிந்து விட்டது! இந்த இனிய இரவு முழுவதும் இனி நம்முடையதே! நான் உங்களிடம் என்ன சொன்னேன்! இரவில் இடியும் மின்னலுமாக இருக்கப் போகிறது என்றேன் அல்லவா?”

“இடியும் மின்னலும்! இந்தக் க்‌ஷ்டங்களிலிருந்து வெளியே வரும் வழியை நாம் பார்ப்போம். ம்ம்ம்ம், “தாய் மாயாவதி” இங்கே இருந்திருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அவளால் எவ்விதமான கஷ்டமான சூழ்நிலைகளிலும் அதிலிருந்து வெளியேற வழி கண்டுபிடிக்க முடியும்!” என்றான் பிரத்யும்னன்.

நிதானமாகவும், மென்மையாகவும் அதிகம் ஆரவாரமில்லாமலும் ஒரு காட்டுப் பறவையை மென்மையாகக் கையாளுவது போன்ற கவனத்துடனும் அவன் பிரபாவதியுடம் நடந்து கொண்டான்.  பிரபாவதியிடம் தர்மம் என்றால் என்ன என்றும் ஒரு க்ஷத்திரியன் எப்படி க்ஷத்திரிய தர்மத்துக்குக் கட்டுப்பட்டவன் என்பதையும் அவளுக்கும் அது எப்படிப் பொருந்தும் என்பதையும் எடுத்துச் சொன்னான்.  ஆனாலும் அவனுக்குத் தன் மீது அவ்வளவு நம்பிக்கை இல்லை! எனினும் பிரபாவதி மிகவும் ஆவலுடன் அவன் சொல்வதைக் கேட்டுக் கொண்டாள்.

ஆனால் அவன் அந்த விஷயத்தின் முக்கியத்துவத்தைச் சொல்ல ஆரம்பித்தான். அதை அவளுக்கு எப்படி அறிமுகம் செய்வது என யோசித்து யோசித்துத் தன் தந்தையின் தெய்விகத் தன்மையைக் குறித்துச் சொல்ல ஆரம்பித்ததும் அதைப் பிரபாவதியால் நம்பவே முடியவில்லை.  தான் நம்பவே இல்லை என்பதை வெளிப்படையாகவும் சொன்னாள். “ஆஹா! இதை என்னால் நம்ப முடியவில்லையே! எப்படி ஒரு மனிதன் கடவுளாக ஆக முடியும்?” என்று வியப்புடன் கேட்டாள்.

“பிரபாவதி, நீ என்னுடன் துவாரகைக்கு வா! அப்போது நேரில் பார்த்தாயானால் உனக்கே புரியும்.  நீ என் தந்தையை ஒரு கடவுள் என்று நினைப்பதோடு அல்லாமல் அவர் கடவுளே தான் என்பதை ஒத்துக்கொண்டு உணரவும் ஆரம்பிப்பாய்!” என்றான் பிரத்யும்னன்.

“அப்படி எனில் அவர் வானத்தில் பறப்பாரா? என் தந்தையிடம் உள்ளதை விடச் சிறப்பான விமானம் ஏதும் அவரிடம் உள்ளதா?” என்று வினவினாள் பிரபாவதி!

“அதெல்லாம் இல்லை. இவற்றை எல்லாம் விடச் சிறந்தது அவரிடம் உள்ளது. மிகவும் சக்தி வாய்ந்தது.  அதன் மூலம் ஒரு மனிதனின் தீய எண்ணங்களையும் தீய நடத்தைகளையுமே முழுவதுமாக நீக்கி அந்தச் சூழ்நிலையையே சுத்தமானதாகவும் நன்மைதரக் கூடியதாகவும் மாற்றி அமைப்பதைப் பார்க்கலாம். ம்ம்ம்ம், நான் இங்கே வந்ததிலிருந்து நீ ஒரு விஷயத்தைக் கவனித்திருக்க வேண்டுமே! இங்குள்ள அனைவருமே என் தந்தையின் சாகசங்களைக் குறித்தே பேசிக் கொள்வார்களே! அதை நீ கேட்கவில்லையா?” என்று கேட்டான் பிரத்யும்னன்.

“நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்பதே எனக்குப் புரியவில்லை!” என்றாள் பிரபாவதி.

“உங்கள் மன்னர் மன்னர் என் தந்தையிடம் ஏன் விரோதம் பாராட்டுகிறார் என்பது உனக்குத் தெரியுமா?” என்று கேட்டான் பிரத்யும்னன்.

“தன் வாழ்நாள் முழுவதும் ஒரு மாபெரும் தானவ சாம்ராஜ்யத்தை உருவாக்கும் கனவிலேயே எங்கள் அரசர் இருந்தார்.  தன் சாம்ராஜ்யத்திற்குள் ஆரியவர்த்தம் முழுமையையும் கொண்டு வரும் எண்ணத்திலும் இருந்தார். அதற்கு வாசுதேவக் கிருஷ்ணன் மாபெரும் தடைக்கல்லாக இருப்பதாக அவர் உணர்ந்தார். தன் வழியை அவன் அடைப்பதோடு இல்லாமல் இடையூறாகவும் நிற்கிறான் என்பதையும் உணர்ந்தார். ஆரிய வர்த்தத்தை இதன் பாதிப்பெல்லாம் இல்லாமல் தனித்து நிற்கச் செய்து கொண்டிருந்தார் வாசுதேவக் கிருஷ்ணன். அது எங்கள் அரசருக்குப் பிடிக்கவில்லை. அது சரி, நீங்கள் உங்கள் தாயை அழைத்தீர்களே! அப்படி எனில் அவள் உங்கள் தந்தையைப் போல் மிகவும் சக்தி வாய்ந்தவளா?” என்று கேட்டாள் பிரபாவதி!

Friday, February 10, 2017

கண்ணன் வருவான், எட்டாம் பாகம்! நடு இரவில்!

பிரபாவதிக்கும் சரி, பிரத்யும்னனுக்கும் சரி, தாங்கள் இருவரும் தனித்திருப்பதும், சேர்ந்திருப்பதும் எத்தனை ஆபத்து என்பதை உணர்ந்தே இருந்தார்கள். பிரபாவதி மெல்லக் கிசுகிசுத்தாள். “நீங்கள் உங்கள் குடிசைக்குச் சென்று விடுங்கள். நான் சிறிது நேரம் கழித்து வருகிறேன். நாம் அங்கே விரிவாகப் பேசுவோம்.” என்றாள் பிரபாவதி! இந்த நிகழ்ச்சிகளின் முக்கியத்துவத்தை உணர்வதற்குப் பிரத்யும்னனால் இயலவில்லை. என்ன நடக்கிறது என்பதையே அவன் சிறிதும் புரிந்து கொள்ளவே இல்லை. அவன் இவ்வாறு அங்குமிங்கும் சுற்றிக் கொண்டிருப்பது எந்த ஊழியன் கண்களிலாவது பட்டால் அடுத்த கணமே அவன் உயிர் அவனிடம் இருக்காது. ஆனால் பிரபாவதியின் வேண்டுகோளை மீறுவது அவன் மனதையே உடைத்து விடும் போல் இருக்கிறது. அதையும் மீற முடியாது!

பிரத்யும்னன் அவனுடைய குடிலுக்குச் சென்றுச் சிறிதும் பொறுமையின்றிப் பிரபாவதியின் வரவுக்காகக் காத்திருந்தான்.  அவள் எடுத்திருக்கும் இந்த நடவடிக்கைகள் அவளை மட்டுமின்றித் தன்னையுமே அதிகம் பாதிக்கும் என்பதை அவன் உணர்ந்திருந்தான்.  அவள் எத்தனையோ கடுமையான சூழ்நிலைகளில் வேறு வழியின்றித் தான் இந்த முடிவை எடுத்திருக்கிறாள் என்பதும் அவனுடன் இரவில் இங்கே சந்திக்க ஏற்பாடுகளைச் செய்திருக்கிறாள் என்பதும் அவனுக்குத் தெளிவாகப் புரிந்தது. யோசனையில் இரவு கழிந்துவிடுமோ என நினைக்கையில் நடு இரவுக்குச் சற்று நேரம் கழித்துப் பிரபாவதி அவனுடைய குடிலுக்கு வருவதைப் பார்த்தான். அவள் அருகே வருகையில் அவள் ஏதோ புதியதொரு உணர்வுக்கும், உற்சாகத்துக்கும் ஆளாகி இருக்கிறாள் என்பதைக் கண்டு கொண்டான்.

“இந்த நடு இரவில் நீ உன் வீட்டை விட்டு எப்படி வெளியேற முடிந்தது?” என்று பிரத்யும்னன் அவளிடம் கேட்டான்.  அதற்கு அவ்ள் வாய் மூடிச் சிரித்த வண்ணம், “நீங்கள் எவ்வளவு அற்புதமானவர் என்பதை உங்களிடம் சொல்லச் சரியான நேரத்தை எதிர்பார்த்திருந்தேன்! ஆனால் இந்த முறை அதற்காகவெல்லாம் வரவில்லை. எங்கள் மன்னாதிமன்னரின் விருப்பத்தை நிறைவேற்றவே வந்திருக்கிறேன். அவர் கட்டளைக்குக் கீழ்ப்படிந்தே வந்திருக்கிறேன்.” என்றாள்.

“என்ன? நீ உன் மன்னர் மன்னரின் கட்டளைக்கிணங்க வந்திருக்கிறாயா? உங்கள் உலகத்தில் பல அதிசய நிகழ்வுகள் ஏற்பட்டிருக்கின்றனவே!” என்றான் ஆச்சரியத்துடன்.

“இங்கே எங்களிடம் இம்மாதிரி விசித்திரங்களையும், அதிசயங்களையும் தவிர வேறொன்றும் இல்லை! நான் அவற்றைக் குறித்து நாளை தான் அறிய முடியும். ஆனால் இப்போதைய நேரத்தில் எங்கள் மன்னரின் கட்டளை குறித்துச் சிந்திப்போம். யோசிப்போம்.” என்றாள் பிரபாவதி.  “என்ன கட்டளை? யார் அவ்வளவு தைரியமாகக் கட்டளையை அளித்தது?” என்று கேட்டான் பிரத்யும்னன்.

“இன்னும் பதினைந்து நாட்களுக்குள்ளாக நீங்கள் என்னை மணந்து கொள்ள வேண்டும்.” என்ற பிரபாவதி வெட்கத்துடன் அவனைப் பார்த்தாள். “இந்தக் கட்டளைகள் எல்லாம் அற்புதமானவை. அழகானவை. இந்தக் கட்டளைகளுக்கு நீங்கள் கீழ்ப்படியவில்லை எனில் எங்கள் அரசர்க்கரசரால் தக்க தண்டனை விதிக்கப்படுவீர்கள்!” என்றும் கூறினாள்.

பிரத்யும்னன் ஒரு புன்னகையுடன் கூறினான். “உன் தந்தை இதற்கு ஒப்புக் கொண்டாரா?”
“அவரால் வேறென்ன செய்ய முடியும்? அவரால் சொல்ல முடிந்தது எல்லாம் இது தான்.”மன்னர் மன்னா! உங்கள் கட்டளைக்கிணங்க செய்து முடிப்பேன்!” என்பது மட்டுமே. அதன்படியே செய்வார். அந்த ஒரே ஒரு பதிலைத் தான் அவரால் கொடுக்க முடியும். அவர் அதையே தான் கொடுப்பார்.”

“நான் கொல்லப்படுவேன் என்று அவர் குறிப்பிட்டாரா?” பிரத்யும்னன் கேட்டான். “இல்லை! மாறாக அவர் உங்களை மிகவும் புகழ்ந்து உயர்வாகப் பேசுகிறார். அப்படித் தான் முந்தாநாள் தந்தை சொல்லிக் கொண்டிருந்தார்.”

மேலும் தொடர்ந்த பிரபாவதி, “தானவ குலப் பெண்கள் தங்கள் கணவர், காதலர்கள் ஆகியோரை மடியில் இருத்தித் தூங்க வைத்து விஷத்தைக் கொடுத்து விடுவார்கள்!” என்றாள்.

“ஆஹா, எவ்வளவு மோசமானது இது!  ம்ம்ம்ம், சரி, நேரம் இப்போது இல்லை. மிகக் குறைவான நேரமே இருக்கிறது. என்றாலும் ஆபத்துக்களை நான் மிகவும் சந்தோஷமாக வரவேற்கிறேன். அவற்றை ஓர் புன்சிரிப்போடு எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறேன். இப்போது நம்மைப் பற்றி யோசிப்போம். நாம் ஒருவரை ஒருவர் அணைத்த வண்ணம் ஒரே படுக்கையில் உறங்குவோம். ஆனால் உங்கள் மன்னர் மன்னரின் ஒப்புதல் இல்லாமல் இங்கே வேறேதுவும் நடக்க முடியாது என்பதும் புரிகிறது!” என்றான் பிரத்யும்னன்.

“ம்ம்ம்ம்ம், நான் பதினைந்து நாட்களுக்கு மேலும் வாழ விரும்பினால்……….” பிரபாவதி பிரத்யும்னனை நம்பிக்கையுடன் பார்த்தாள்! “ அப்படி ஆனால், ………… ஒரு வேளை அப்படி நடந்தால்…………………… நீங்கள் என்னைத் திருமணம் செய்து கொள்வீர்களா?” என்று ஆவலுடன் கேட்டாள்.

“ஆகா, நிச்சயமாக! நான் உன்னைத் திருமணம் செய்து கொள்வேன். ஆனால் அதன் மூலம் சந்தோஷம் கிடைக்குமா என்பது கொஞ்சம் கஷ்டம் தான்! சந்தேகமும் கூட! “ என்றான் பிரத்யும்னன்.

“நான் எதிர்பார்க்கும் திருமணம் என்பது எப்படி நடக்குமோ தெரியவில்லை. கட்டாயத்தின் பேரில் நடக்கும் போல் தெரிகிறது.  ஆனால் எங்கிருந்தும் உதவியை எதிர்பார்க்க முடியாது!” என்றாள் பிரபாவதி! “ஆனால் ஒரு விஷயம்! மன்னரின் கட்டளையிலிருந்து நான் தெரிந்து கொண்டது என்னவென்றால் அவருக்கு நான் எப்போதும் இங்கேயே இருந்து உங்களுடன் வசிக்க வேண்டும் என்பதுவே!” என்று தொடர்ந்து கூறினாள் பிரபாவதி.

“ஓ, தயவு செய்து வேறு ஏதேனும் வழி கண்டு பிடியுங்கள்.  பிரபாவதி, நான் மனம் உடைந்து போய்விட்டேன். உன்னைப் பார்த்ததில் இருந்து நம்முடைய திருமணம் ஆட்டம், பாட்டம் கொண்டாட்டங்களுடனும், வாத்திய முழக்கங்களுடனும் நடப்பதை எதிர்பார்த்திருந்தேன்.  இம்மாதிரி ஒரு மோசமான சூழ்நிலையை எதிர்பார்க்கவில்லை. இதிலிருந்து வெளியேற ஒரு வழியைக் கண்டு பிடி! நாம் இங்கிருந்து ஓடிப் போய்விடலாமா?” என்று பிரத்யும்னன் சிரித்த வண்ணம் கேட்டான்.

Wednesday, February 8, 2017

கண்ணன் வருவான், குருக்ஷேத்திரம், உள்ளங்கள் இணைந்தன!

“நான் எப்படித் தங்க முடியும்? என் வாழ்நாள் முழுவதும் நான் இங்கேயே இருக்க முடியுமா என்ன? அது நடவாத ஒன்று. உன்னைக் கல்யாணம் செய்து கொண்டு நான் இந்த மட்ரிகோவடாவிலேயே தங்கினேன் எனில் என் தந்தைக்கு நான் செய்து கொடுத்த சத்தியம் என்ன ஆவது? அந்த வாக்குறுதியை நான் மீறிவிட்டேன் என்றாகி விடும் அல்லவா?” என்றான் பிரத்யும்னன். இரு கைகளையும் விரித்துக் கொண்டு தலையையும் மறுப்பாக அசைத்தான்.  பின்னர் சற்று நேரம் மௌனமாகச் சென்றது. மீண்டும் பிரத்யும்னன், “ஏன்? எங்கள் யாதவ இனமே என்னை வெறுத்து ஒதுக்கி விடும்! அது சரியானதும் கூட! அதோடு மட்டும் இல்லை. மாயாவதி, என் தாய் என்ன நினைப்பார்கள் என்னைக் குறித்து! வாழ்நாள் முழுதும் என்னுடன் இருக்கும் மாயாவதி அவள் என்னுடன் பாடுபட்ட நாட்கள் எல்லாம் வீணாகி விட்டது என்றும் நினைப்பாள். க்ஷத்திரிய தர்மத்தைக் காப்பாற்ற நான் ஓர் கூரிய ஆயுதமாக இருப்பேன் என அவள் எதிர்பார்த்தாள். அந்த நம்பிக்கை அற்றுப் போய்விடும். வெறுத்துப் போய் விடுவாள். என் நிலைமை மிகவும் இரங்கத்தக்கதாகத் துன்பம் நிறைந்ததாக ஆகிவிடும்.” என்றான்.

“ம்ம்ம், உன் தாய் வருந்துவது ஒன்றும் ஆச்சரியமே அல்ல. எல்லாத் தாய்மாரும் தங்கள் குழந்தைகள் தங்களை விட்டுப் பிரிந்தால் துன்புறுவார்கள். எல்லாம் சிலகாலம் மட்டுமே!” என்றாள் பிரபாவதி.

“உன் குடும்பம் வரவிருக்கும் பேரழிவு ஒன்றைக்குறித்து நினைத்துக் கவலையும் பயமும் கொண்டிருக்கிறது. அந்தப் பேரழிவு என்னுடைய எதிர்காலத்துடன் சம்பந்தப் பட்டிருக்கிறது என்பதையும் நான் நிச்சயமாக உணர்வேன்.  ஆனால் உன் குடும்பத்தில் எவரும் அதைக் குறித்து என் முன்னே பேசுவதில்லை. ஒரு வேளை, உன் தந்தை வலிமை மிக்க வஜ்ரநபுக்கு அதைக் குறித்துத் தெரிந்திருக்கலாம். எனக்கு என்ன நடக்கப் போகிறது என்பதை அவர் அறிந்திருக்கலாம். ஆனால் அவர் அதைக் குறித்து என்னுடன் பேசுவதற்குத் தயங்குகிறார். ஏன் என்று தான் தெரியவில்லை!”

“நீங்கள் எப்படி இந்தக் கோட்டையை விட்டு வெளியேறுவீர்கள்? அதுவும் மன்னர் மன்னனின் அனுமதி இல்லாமல் உங்களால் என்ன செய்ய முடியும்?” என்று கேட்டாள் பிரபாவதி!

“அது தான் நானும் அறிய விரும்புகிறேன்.  மேலும் நான் இங்கே வந்ததற்கான காரணமும் பூர்த்தி அடைய வேண்டும். அது நடக்கவில்லை எனில் நான் துவாரகைக்குத் திரும்பிச் செல்ல முடியாது.  ஆனால் இங்கே நடப்பது என்னவெனில் நான் இங்கேயே என் வாழ்நாளைக் கழிப்பதற்காக வந்திருக்கிறேன் என்பது போல் நீங்கள் அனைவரும் நடந்து கொள்கிறீர்கள்!” என்றான் பிரத்யும்னன்.

“ஆஹா! அது மட்டும் நடந்து விட்டால்! நீங்கள் மட்டும் இங்கே தங்கி விட்டால்! என்னை விட சந்தோஷம் அடைபவர்கள் வேறு எவரும் இருக்க மாட்டார்கள்!” என்றாள் பிரபாவதி!

“ஆனால் என்னால் இங்கே வசிக்க முடியாது. என் இடம் இதுவல்ல! நான் எதற்காக இங்கே வந்தேனோ அது நடக்கவில்லை எனில் நான் இறப்பதே மேல்! என் தாத்தாவுக்கு என்ன நடந்தது என்பதை நான் கண்டு பிடிக்க வேண்டும். என் தாத்தா வசுதேவர் உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்பதைக் கண்டறிய வேண்டும்.  அவர் உங்கள் மன்னாதி மன்னர் ஷால்வனிடம் இன்னமும் கைதியாக இருந்தாரெனில் அவரை எப்படி விடுவிப்பது என்பதைக் குறித்து நான் யோசிக்க வேண்டும். அவரை விடுவிக்க வேண்டும். ஆனால் அதை எவ்விதம் நடத்தப்போகிறேன் என்பது தான் தெரியவில்லை. ஏனெனில் நானுமே இங்கே இந்தக் கோட்டையின் சுவர்களுக்குள் அடைபட்ட ஓர் சிறைக்கைதியாகத் தானே இருக்கிறேன்.”

சிறிது நேரம் மீண்டும் மௌனமாக இருந்த பிரத்யும்னன் மேலும் தொடர்ந்தான். “பிரபாவதி, உனக்குத் தெரியாது! என்னுடைய இந்த வேலையைச் செய்ய முடியாமல், என் தாத்தாவை விடுவிக்காமல் நான் அதில் தோல்வி அடைந்தேன் எனில் அது எப்படி இருக்கும் என்பதை உன்னால் உணர முடியாது!  துவாரகையின் யாதவர்கள் அனைவருக்கும் அது ஓர் நீங்காக் கறையாக ஆகிவிடும்.”

“ஆனால் துவாரகையைத் தான் எரித்தாகி விட்டதே!” என்றாள் பிரபாவதி!

“ஆம், எரித்தீர்கள், எரித்தார்கள். ஆனால் நீ இப்போது பார்க்க வேண்டும் துவாரகையை. அது எப்படி இருக்கிறது என்று. அதற்குப் புத்தம்புதியதொரு சக்தியை என் தந்தை கொண்டு வந்து விட்டார். முன்னை விட மிக நன்றாகப் பரிமளிக்கிறது! ம்ம்ம்ம்ம். நான் என்னை மட்டும் காப்பாற்றிக் கொண்டால் போதாது பிரபாவதி! ஷால்வனின் கைகளில் அகப்பட்டுக்கொண்டிருக்கும் என் தாத்தாவின் தலைவிதியையும் மாற்றியாக வேண்டும்.”

“நீண்ட நாட்களுக்கு முன்னரே அவர் கொல்லப்பட்டிருக்கலாம்!” என்றாள் பிரபாவதி.

“பிரபாவதி! உனக்குத் தெரியுமா? உங்கள் மன்னர் மன்னர் என் தாத்தாவை எவ்விதம் நடத்தினார் என்பது குறித்து நீ ஏதேனும் அறிவாயா? அவர் உயிருடன் இருக்கிறாரா இல்லை இறந்துவிட்டாரா? அப்படி அவர் இறந்துவிட்டால் எப்படி இறந்தார்?”

“ம்ம்ம்ம்ம்… நீங்கள் இப்படிச் சொல்கிறீர்கள். ஆனால் என் தந்தையின் உயிரும் இங்கே ஆபத்தில் தான் இருக்கிறது.  உங்களை அவர் இங்கே அனுப்பி வைத்திருப்பதின் உண்மையான காரணமும் அது தான். என் தந்தையை ஒழிக்க வேண்டும் என்பதற்கு ஓர் காரணம் கற்பிக்க வேண்டுமே! அதனால் தான் உங்களை இங்கே அனுப்பி வைத்திருக்கிறார். அவருக்கு இரண்டு வேலையும் நடந்து விடும். உங்களையும் அழித்துவிடுவார். என் தந்தையையும் அழித்து விடுவார். என் தந்தையையும் அவர் நம்புவதும் இல்லை. அவர் மேல் பிரியமும் வைக்கவில்லை.  உங்களிடமும் எவ்விதமான பற்றும் அவருக்கு இல்லை. உங்களை இங்கே பிணைக்கைதியாகத் தான் அனுப்பி வைத்திருக்கிறார்.” என்றாள் பிரபாவதி.

“எதற்காக என்னைப்பிணைக்கைதியாக்கி இருக்கிறார்?”

“என் தந்தை நினைப்பது என்னவெனில் நான் உங்களைத் திருமணம் செய்து கொள்வதன் மூலம் உங்களை வாழ்நாள் முழுவதும் இங்கேயே தங்க வைக்கலாம் என்பதே! நீங்கள் இங்கே எங்களுடன் தங்கினீர்கள் எனில் என் தந்தைக்கு யாதவர்கள் மேல் ஓர் பிடிப்புக் கிடைக்கும். அவர்களுடன் ஓர் இணைப்பு இருந்து கொண்டே இருக்கும். ஆனால் அதற்கு மாறாக நீங்கள் மட்டும் தப்பிச் சென்று விட்டால் நீங்கள் மட்டுமல்ல எங்கள் மொத்தக் குடும்பமுமே அழிந்து விடும்!”

“ஆஹா, அது சரி! நான் இங்கே சௌக்கியமாக இருந்து வருகிறேன். ஆனால் என் தாத்தா? அவர் மட்டும் இறந்திருந்தார் எனில் நான் அவருக்குச் செய்ய வேண்டிய ஈமச் சடங்குகளை முறைப்படி செய்தாக வேண்டும். அவர் இறக்கவில்லை எனில் நான் எவ்வகையிலேனும் அவரைக் காப்பாற்றி ஆக வேண்டும்!” இதைக் கேட்ட பிரபாவதி கண்களில் கண்ணீருடன் சிறிது நேரம் பிரத்யும்னனையே பார்த்தாள். “நீங்கள் ஏன் என் தந்தையுடன் பேசக் கூடாது?” என்று கேட்டாள். “என் தந்தை மற்றவர்களைப் போல் இல்லை. ரொம்ப அன்பானவர். எங்களிடம் எல்லாம் மிகவும் பாசத்துடன் இருப்பார். கருணையுள்ளவர்.  என் தந்தையும் சரி, தாயும் சரி நீங்கள் என்னைத் திருமணம் செய்து கொண்டால் மிகவும் மகிழ்ச்சியுடன் இருப்பார்கள்.” என்றாள்.

“ஓஹோ! அதனால் தான் என்னை மிகவும் கௌரவத்துடன் நடத்துகிறார்களா? ஒரு வேளை உங்கள் மன்னர் மன்னர் எதிர்பார்க்கலாம். நான் உன்னைத் திருமணம் செய்து கொள்வதன் மூலம் இங்கேயே நான் தங்கிவிடலாம் என்று நினைக்கலாம்.  ஒருவேளை நான் உன்னைத் திருமணம் செய்து கொண்டேன் என்றாலோ உன்னை என் மனைவியை விட அதிகமாக நேசித்தேன் என்றாலோ அப்போது கூட என் தந்தை என்னிடம் வைத்திருக்கும் அன்பையும், நேசத்தையும் என்னால் ஒதுக்கித் தள்ள முடியாது. என் தந்தையின் அன்புக்காக நான் எதையும் செய்வேன்.” என்றான் பிரத்யும்னன்.

“ஓர் நிச்சயமற்ற தன்மை, நிலையற்ற சூழ்நிலை இங்கே தெரிகிறது. எல்லார் முகத்திலும் அது அப்பட்டமாகத் தெரிகிறது.  நீ எப்படியோ என் வாழ்க்கைக்குள் புகுந்து விட்டாய்! ஆனால் இங்கே நம் எவருக்கும் ஓர் நல்ல எதிர்காலம் தெரியவில்லை. பயங்கரமான எதிர்காலமே தெரிகிறது. அதிலும் நீங்கள் அனைவரும் தானவர்கள். யாதவர்களுக்கும் தானவர்களுக்கும் இடையில் என்ன சம்பந்தம் எப்படி ஏற்பட முடியும்?” என்றான் பிரத்யும்னன்.

“நீங்கள் ஏன் எங்கள் மன்னாதி மன்னரை ஓர் கொடுமைக்காரர் என்றெல்லாம் நினைக்க வேண்டும்?” என்று பிரபாவதி கேட்டாள்.

“ம்ஹூம், கொடுமைக்காரர் என்றா சொன்னேன்! அப்படி அல்ல! பல வருடங்களாக யாதவர்கள் மத்ராவில் இருந்த போதிலிருந்தே அவர்களை அழிக்கவேண்டும் என்றே ஷால்வன் நினைத்தார். என் தந்தை வாசுதேவக் கிருஷ்ணனை மட்டுமல்ல. யாதவர்கள் மொத்தப் பேரையும் அழித்துவிடுவதாகச் சபதம் செய்தார்.  இந்த உலகில் யாதவர்களே இருக்கக் கூடாது என்பது அவர் எண்ணமாக இருந்தது. “

இத்தகையப் பெரும் பிளவை அவர்கள் இருவருக்கும் இடையில் இருக்கும் என்பது பிரபாவதி அறியாத ஒன்று. அவனைக் கண்ணீருடன் பார்த்தாள்.  பிரத்யும்னன் தன் கைகளின் ஒன்றை நெற்றியின் மேல் வைத்துக் கொண்டு தன் உள்ளுணர்ச்சிகள் வெளித்தெரியா வண்ணம் மறைத்துக் கொண்டான்.  பிரபாவதி தன் கையால் பிரத்யும்னனின் இன்னொரு கையைப் பற்ற இருவர் கைகளும் தங்களையும் அறியாமல் இணைந்தன.

“கவலைப்படாதீர்கள். எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவில் நான் என் தந்தையிடம் இதைக் குறித்துப் பேசுகிறேன். அவர் இதற்கு ஒரு தீர்வை விரைவில் கண்டு பிடிப்பார்!” என்றாள் பிரபாவதி.  பின்னர் தொடர்ந்து, “அவருக்கு என் மேல் மிகவும் அன்பு உண்டு. நான் உங்களைத் திருமணம் செய்து கொண்டால் அவரை விட சந்தோஷப்படுபவர்கள் வேறு யாரும் இருக்க முடியாது!” என்றாள் பிரபாவதி.

“ம்ம்ம்ம், திருமணம் என்றால் என்ன என்பது அவருக்குப் புரியவில்லையா? ஒருவேளை அதன் தாக்கம் என்ன என்பதை அவர் அறிந்திருக்கவில்லை என்றே நினைக்கிறேன்.  உங்கள் மன்னர் மன்னரே இதற்கு ஒத்துக்கொள்ள மாட்டார். சூழ்ச்சி செய்து உன் தந்தை ஏமாற்றி விட்டதாக நினைப்பார்.” என்றான் பிரத்யும்னன்.

“நாளைய கவலையை நாளைக்குப் பட்டுக் கொள்வோம். எழுந்திருங்கள். மனதைத் தளர விடவேண்டாம்!” என்ற பிரபாவதி தன் கைகளைக் கொடுத்துப் பிரத்யும்னனைத் தூக்கியும் விட்டாள். தன்னையும் அறியாமல் அவளை அணைத்துக் கொண்டான் பிரத்யும்னன்.

“ம்ம்ம் இரவுகளில் எனக்கு ஒரு பெண்ணின் அருகாமை தேவைப்பட்டது தான். அடிக்கடி தோன்றும். ஆனால் இங்கே நீங்கள் அனைவரும் திரும்பத் திரும்ப அனுப்பிய அடிமைப் பெண்களை நான் வேண்டாம் என்றே நிராகரித்தேன். மன்மதனிடம் நான் பிரார்த்தித்துக் கொண்டேன். எனக்கு இப்படி ஓர் துராசை வேண்டாம். பிரபாவதியிடம் கொஞ்சமாவது எனக்கு அன்பு தோன்றினால் அதையும் வளர்த்து விட்டு விடாதே என்றெல்லாம் நினைத்துக் கொண்டேன். ஆனால் அது நடக்காது என்பது எனக்கு எப்போதோ புரிந்து விட்டது!”

“ஆஹா! அதற்காகவெல்லாம் வருந்தாதீர்கள். இந்த இரவு நமக்கானது. நம் இருவருக்கானது. என்னுடன் வாருங்கள். இன்றைய இரவு இடியும் மின்னலுமாக மழையுடன் கூடி இருக்கப் போகிறது என்று நினைக்கிறேன்.” என்ற பிரபாவதி பிரத்யும்னனை அழைத்துக்கொண்டு சென்றாள்.

Sunday, February 5, 2017

கண்ணன் வருவான், குருக்ஷேத்திரம், பிரபாவதியின் வேண்டுகோள்!

அந்தக் கோட்டையில் பிரத்யும்னனின் நாட்கள் கொண்டாட்டங்களில் கழிந்து ஒரு பக்கம் சந்தோஷத்தையும் இன்னொரு பக்கம் ஓயாத வேதனையையும் கொடுத்தது. அவனை விருந்தாளி என்னும் போர்வையில் முட்கள் நிறைந்த ரோஜாக்களினால் ஆன விடுதியில் சிறை வைத்திருந்தான் ஷால்வன்.  அது பிரத்யும்னனுக்கு நன்றாகப் புரிந்தது. பார்க்க மிகவும் அழகாக இருந்தாலும் அது ஓர் சிறைதான். வஜ்ரநபின் குடும்பம் கூட இந்தத் தன்னந்தனியான கோட்டையில் இருப்பதையும் பிரத்யும்னனை அங்கே கொண்டு வந்து வைத்ததும் சிறிதும்விரும்பவில்லை என்பதையும் அதை நினைத்து அவர்கள் வருந்துவதையும் பிரத்யும்னன் நன்கு புரிந்து கொண்டான்.  வஜ்ரநபின் பெரிய பெண் பிரபாவதிக்கு சுமார் 16 வயதிருக்கும். நன்கு செழித்து வளர்ந்திருந்த அவள் தன்னுடைய உடல் அசைவுகள் மூலமும், தன் கவர்ச்சிகள் மூலமும் பிரத்யும்னனை நெருங்க மிகவும் முயற்சிகள் செய்தாள். அவனைத் தனக்குக் கணவனாக ஆக்கிக் கொள்ள வேண்டும் என்று அவள் முயல்வது வெளிப்படையாகத் தெரிந்தது.

பிரபாவதியுடன் தனிமையில் இருப்பதும் ஒரு பக்கம் கவர்ச்சியாகவும் மனதைக் கவரும் வண்ணமும் இருந்தாலும் இன்னொரு பக்கம் மாபெரும் துன்பமாகவும் இருந்தது.  அவள் அருகே இருந்தால் தான் எதற்காக ஷால்வனைத் தேடி வந்தோம் என்பதையே பிரத்யும்னன் மறந்து விடுவான். அதோடு தன் தாத்தா வசுதேவர் குறித்த நினைவும் அவனுக்கு வராது! பிரபாவதியின் இரு தங்கைகள் முறையே எட்டு வயதும், ஐந்து வயதும் ஆன சிறு பெண்கள். அவர்கள் இருவருக்கும் பிரபாவதியும் பிரத்யும்னனும் தனிமையில் இருந்தால் அங்கே சென்று தொந்திரவு செய்ய வேண்டாம் என்று எச்சரிக்கப் பட்டிருப்பார்கள் என்று பிரத்யும்னன் ஊகித்தான். ஏனெனில் அவர்கள் வந்தால் பிரபாவதியுடன் பிரத்யும்னனைப் பார்த்தால் உடனே அவர்களைத் தனிமையில் விட்டு விட்டு வெளியே சென்று விடுவார்கள்.

ஒரு நாள் மதியவேளையில் வஜ்ரநப் அன்றிரவு கோட்டைக்குத் திரும்பப் போவதில்லை என்று செய்தி வந்தது. பிரபாவதியுடன் தனிமையில் இருப்பதைத் தடுத்து வந்த சமயங்களில் எல்லாம் அவனுக்கு அவள் மேல் மோகம் அதிகம் ஆகி வந்தது. ஆனால் அவ்ள் அருகே நெருங்கினால் அந்த மோஹம் காணாமல் போயிற்று. அன்று மாலை உணவுக்குப் பின்னர் பிரபாவதியின் இளைய சகோதரிகள் இருவரும் அவர்களைத் தனிமையில் விட்டு விட்டுச் சென்று விட்டனர்.  அங்கிருந்த இரண்டு அடிமைப் பெண்களைக் கூடக் காணவில்லை. திடீரென மறைந்து விட்டார்கள்.  அவர்களைப் பிரபாவதி தான் தன் ஜாடைகளால் வெளியே அனுப்பி இருக்க வேண்டும் என்று பிரத்யும்னன் ஊகித்தான்.

சற்று நேரம் மௌனத்தில் சென்றது. இருவருக்கும் முதலில் என்ன பேசுவது என்று புரியவே இல்லை. பின்னர் பிரபாவதி அந்த மௌனத்தை உடைத்தாள். “உங்களுக்கு என்னுடன் இருக்கப் பிடிக்கவில்லையா? ஏன் அப்படி? இப்போது சில நாட்களாகவே நீங்கள் மிகவும் துன்பத்துடனேயே காணப்படுகிறீர்கள்.  ஏன் மௌனமாகவும் இருக்கிறீர்கள்?” என்று கேட்டாள். “எனக்கு என்ன பேசுவது என்றே தெரியவில்லை!” என்றான் பிரத்யும்னன்.

“நான் என்ன சொல்ல விரும்புகிறேனோ அதை உங்களிடம் சொல்லவே பெரும் முயற்சிகள் எடுக்கிறேன். ஆனால் நான் அப்படி உங்களிடம் சொல்வது மன்னர் மன்னருக்குப் பிடிக்காது! அவருக்குக் கோபம் வந்து விடும்!” என்றாள் பிரபாவதி!

“ம்ம்ம்ம், வரவிருக்கும் ஏதோ ஓர் ஆபத்தைக் குறித்து நீங்கள் அனைவருமே பயப்படுகிறீர்கள். கவலைப்படுகிறீர்கள்!” என்றான் பிரத்யும்னன்.

“அதெல்லாம் சரி, ஆனால் நான் கேட்பது எல்லாம் உங்களை எது தொந்திரவு செய்கிறது? உங்களுக்கு என்ன மனக்கஷ்டம்?  ஏன் மிகுந்த மன இறுக்கத்தோடு இப்போதெல்லாம் காணப்படுகிறீர்கள்?” என்று புன்னகையுடன் கேட்டாள் பிரபாவதி. “நீங்கள் அனைவரும் ஏன் பயப்படுகிறீர்களோ, எதற்குக் கவலைப்படுகிறீர்களோ அதுவே தான் எனக்கும் காரணம்!” என்றான் பிரத்யும்னன்.

பிரபாவதி மனம் உடைந்து போனாள். “உங்களிடம் எல்லாவற்றையும் சொல்லிக் கொண்டிருக்க முடியாது. எந்த வழியில் நான் திரும்பினாலும் பேரழிவைத் தான் சந்திக்க வேண்டும். வேறு வழியே இல்லை!” என்றவள் கண்கள் கண்ணீரைப்பொழிந்தன. “ம்ம்ம்ம், நாங்கள் அனைவரும் மன்னர் விளையாடும் சதுரங்க விளையாட்டில் ஓர் காய்கள். மன்னர் தான் எங்களை நகர்த்துகிறார். அவருக்கு விரும்பிய இடத்தில் விரும்பிய வண்ணம் எங்களை நகர்த்தி வருகிறார்.” என்றாள்.

“விளையாட்டா? என்ன விளையாட்டு? எனக்கு எதுவும் புரியவில்லையே!” என்றான் பிரத்யும்னன். “நீர் இங்கே ஓர் அரச குடும்பத்து விருந்தாளியாக நடத்தப்படுகிறீர்கள். அல்லவா? அதைவிட வேறென்ன வேண்டும் உங்களுக்கு?” என்று பிரபாவதி கேட்டாள்.

“இதைவிடச் சிறந்த நகைச்சுவை கிடையாது. நான் ஓர் அரச விருந்தாளியாக இங்கே மதிக்கப் படுகிறேன் என்பதென்னமோ உண்மை. ஆனால் நான் சுதந்திரமாக எங்கும் செல்ல முடியாது. தங்கக் கூண்டில் அடைத்த கிளி நான்.  அதை விட என்னை உங்கள் மன்னாதி மன்னர் கொன்றிருந்தால் அதைப் புரிந்து கொண்டிருக்கலாம். “ என்றான் பிரத்யும்னன்.

“எப்போது எங்களிடமிருந்து நீங்கள் செல்வீர்கள்?” என்று கேட்டாள் பிரபாவதி.

“ஆஹா, நான் கேட்க வேண்டிய கேள்வியை நீ கேட்கிறாய்? எனக்கும் இப்போது அது தான் தெரிய வேண்டும். நீங்கள் அனைவருமே என்னை உங்கள் குடும்பத்தில் ஒருவனாகவே நடத்தி வருகிறீர்கள். அதிலும் நீ எப்படி எல்லாம் என்னிடம் நடந்து கொண்டிருக்கிறாய் தெரியுமா? உன் நடத்தைகளின் மூலம் உன் மேல் எனக்கு நல்லெண்ணம் மிகுதியாக ஆகி இருக்கிறது!”

“உங்களை இங்கேயே தக்க வைத்துக்கொள்ள வேண்டுமானால் நாங்கள் அதற்காக என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டாள் பிரபாவதி.

பிரத்யும்னன் ஒரு பெருமூச்சு விட்டான். “அதிகமாய் ஏதும் இல்லை.  இவ்வளவு அன்பான உங்களை விட்டு எல்லாம் பிரிந்து செல்வதை விட எனக்கு மனக்கஷ்டம் வேறில்லை!” என்றான்.

“அப்படி எனில், ஏன் நீங்கள் எங்களுடன் வசிக்கக் கூடாது? என் தந்தையும் தாயும் இதைக் கேட்டால் மிகவும் சந்தோஷப்படுவார்கள். நீங்கள் இங்கே இருக்கிறதாக முடிவெடுத்தால் அவர்கள் மகிழ்ச்சி அடைவார்கள்!” என்றாள் பிரபாவதி!

Saturday, February 4, 2017

கண்ணன் வருவான், குருக்ஷேத்திரம், ஷால்வனின் கோட்டையில்!

“நீ இப்போது இங்கிருந்து செல்லலாம் வஜ்ரநப்!” என்று சொன்ன ஷால்வன் பிரத்யும்னன் பக்கம் திரும்பினான். “ நீ, எங்கள் மரியாதைக்கு உரிய விருந்தாளி! நீயும் இப்போது வஜ்ரநபுடன் செல்!அவனும் அவன் குடும்பத்தாரும் மற்ற எவரையும் விட உன்னை மிக அருமையாய்ப் பார்த்துக் கொள்வார்கள். இல்லையா வஜ்ரநப்?” என்றான் ஷால்வன். “தங்கள் கட்டளைப்படியே மஹாராஜா!” என்று தலை குனிந்து பதில் சொன்னான் வஜ்ரநப். “இன்னும் எவ்வளவு காலம் நான் உன் விருந்தாளியாக இருப்பேன்?” என்று பிரத்யும்னன் ஷால்வனிடம் கேட்டான். “எங்கள் விருந்தோம்பலில் குறை கண்டு அற்பத்தனமாக நாங்கள் மாறும் வரை அல்லது நீங்களாகவே இங்கிருந்து செல்ல விரும்பும் வரை என வைத்துக்கொள்ளலாமே!” என்றான் ஷால்வன். சொல்லிவிட்டுப் பெரிதாகச் சிரிக்க, பிரத்யும்னன் பதிலுக்குத் தன் புன்னகை ஒன்றைப் பரிசாகக் கொடுத்தான்.

பிரத்யும்னனை வஜ்ரநப் தன்னுடைய குடியிருப்புப் பகுதிக்கு அழைத்துச் சென்றான். அங்கே இருந்த விருந்தாளிகளோடு அனைவரும் உணவு உண்டனர். “நம்முடன் மல்லன் பூர்ணாவை அழைத்துச் செல்வோம். மற்றவர்கள் இங்கேயே காத்திருக்கட்டும்.” என்றான் வஜ்ரநப்.  பிரத்யும்னனுக்குத் தான் ஆயுதம் எதுவும் பயன்படுத்தாமலேயே வெல்வதற்கான சந்தர்ப்பம் இப்போது தான் கிட்டி இருப்பதாகத் தோன்றியது.  வஜ்ரநபைப் பார்த்து, “என் உயிர் உன் கையில் இப்போது இருக்கிறது வஜ்ரநப்!” என்று கூறினான்.  மூன்றாம் நாள் விடிகாலையில் அவர்கள் அனைவரும் கோட்டையை நோக்கிப் பயணித்தார்கள்.

வஜ்ரநப் தன்னுடன் ஒரே ஒட்டகத்தில் பயணம் செய்யுமாறு பிரத்யும்னனை அழைத்தான். “என்னுடன் வா இளைஞனே!” என்று அழைத்தான்.  அடிவானத்தில் தூரத்தில் தெரிந்த மூன்று மலைக்கோட்டைகளில் ஒன்றிற்கு பிரத்யும்னனை அழைத்துச் சென்றான் வஜ்ரநப். “நாம் ஏன் அதை நோக்கிப்போகிறோம்?” என்று கேட்டான் பிரத்யும்னன்.

அதற்கு வஜ்ரநப்,”நாங்கள் எல்லோரும் கோட்டைகள் குறித்த தகவல்களை எவருடனும் பகிர்ந்து கொள்ள மாட்டோம் என்று உறுதிமொழி எடுத்திருக்கிறோம். அதோடு நீயே நேரில் பார்த்தாயல்லவா? அப்பயாவுக்கு எப்படிப் பட்ட தண்டனை கிடைத்தது! அவன் இந்தக் கோட்டைகள் குறித்த தகவல்களை இன்னொரு சௌப வீரனுடன் தான் கலந்து ஆலோசித்தான்.  அம்மாதிரி அவன் பேசி இருக்கக் கூடாது. அப்படி எவனாவது பேசினால் அவர்கள் மிகவும் கடினமான தண்டனைக்கு உள்ளாவார்கள்!” என்றான்.  ஆனால் வஜ்ரநபின் மனதில் இந்த இளம் யாதவன் இந்தக் கோட்டையைப் பார்ப்பது இதுவே கடைசித் தடவை என்ற எண்ணம் தோன்றியது.  ஆகவே இவனுடன் இந்தக் கோட்டையைக் குறித்த விஷயங்களையும் இவை எதற்காகக் கட்டப்பட்டது என்பதையும் பகிர்ந்தால் தப்பில்லை என்றே தோன்றியது.

“நடுவில் இருக்கிறதே, அந்தக் கோட்டை தான் மன்னர் மன்னரும் அவர் குடும்பத்தாரும் தங்கும் கோட்டை.  நம்பிக்கைக்கு உகந்த திறமைசாலியான வீரர்களால் அது எந்நேரமும் பாதுகாக்கப்படுகிறது. மன்னர் மன்னன் அனுமதியின்றி அந்தக் கோட்டைக்குள் எவரும் புகுந்து விட முடியாது!” என்றான்.  பின்னர் சற்று நேரம் மௌனமாகச் சென்றது. பின்னர் அவன் தொடர்ந்து, “இடப்பக்கம் இருப்பது தான் பிரபலமான கோட்டை. அந்தக்கோட்டையை என் தந்தை நிர்வகித்து வந்தார். அவர் அப்போது எல்லாப் படைகளுக்கும் தளபதியாக இருந்தார். அங்கேயே வசித்தும் வந்தார். மூன்றாவது கோட்டை, மிகவும் அதிகமாகக் கண்காணிக்கப்பட்டும் பாதுகாக்கப்பட்டும் வருகிறது.  அந்தக் கோட்டையில் தேசத் துரோகிகளாகக் குற்றம் சாட்டப்பட்டவர்களும், அதனால் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களும் இருக்கிறார்கள்.  இந்தத் தகவல்களை எல்லாம் நான் உனக்கு அளிப்பதால் நீ என்னையும் இப்படி தேசத் துரோகியாக ஆக்கி மரணத்தை எதிர்பார்க்கும்படி செய்து விடமாட்டாய் என்று நம்புகிறேன். அப்பய்யாவின் திடீர் மரணம் எனக்குக் கொடுக்கப்பட்ட ஓர் எச்சரிக்கை ஆகும். உன்னை நான் இந்தக் கோட்டையில் இருந்து தப்ப விட்டேன் எனில் எனக்கும் அதே கதி தான் என்பதை மன்னர் மன்னர் சொல்லாமல் சொல்லி இருக்கிறார். எச்சரித்திருக்கிறார்.” என்றான்.

“இன்னும் கொஞ்சம் தகவல்களை அந்தக் கோட்டையைக் குறித்து நீ சொன்னாய் எனில் உனக்கு இதே மாதிரி தண்டனை தானே கிடைக்கும்? இதை விட அதிகமாகக் கிடைக்கப்போவதில்லையே! அது சரி, எனக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம்? நான் என்ன அவ்வளவு பெரிய மனிதனா? எனக்குப் புரியவில்லை!”

வஜ்ரநப் மிகச் சிறிய குரலில் குறுக்கிட்டுப் பேசினான். “அதோ அந்தக் கோட்டையின் கதவுகளை நன்றாகப் பார். அவை எவ்வளவு வலுவாக இருக்கின்றன என்பதோடு எப்படிப் பாதுகாக்கப்படுகிறது என்பதையும் கவனி! நீ இங்கிருந்து வெளியேறக் கூடாது என்பதற்கான ஓர் முன்னெச்சரிக்கை அது என்பதைப் புரிந்து கொள்!” என்றான். பின்னர் அவன் மௌனத்தில் ஆழ்ந்தான்.  பிரத்யும்னனுக்கு வஜ்ரநபுக்கு மன்னன் ஷால்வன் தன்னைப் பாதுகாக்கும் பொறுப்பை அளித்தது பிடிக்கவில்லை என்றும் அதை அவன் உள்ளூர வெறுக்கிறான் என்பதும் புரிந்தது.  அவர்கள் தளபதியின் கோட்டைக்கு அருகே வந்ததும் அங்கே காவலுக்கு இருந்த வீரர்களில் பத்துப் பேர் முன்னே வந்தனர். அவர்கள் பூரண ஆயுதம் தரித்திருந்தார்கள். அருகே வந்தவர்கள் வஜ்ரநபைப் பார்த்ததும் வணக்கம் செலுத்தினார்கள்.

வஜ்ரநப் அவர்களை அழைத்துக்கொண்டு கோட்டையின் நிலா முற்றத்துக்குச் சென்றான். அப்போது அங்கே சில இளம்பெண்களின் கலீர் என்ற சிரிப்புச் சப்தம் கேட்டது. அந்தப் பெண்கள் கோட்டையின் மேல் தளத்தில் நின்று கொண்டு சிரித்துக் கொண்டிருந்தார்கள்.  அவர்கள் வஜ்ரநபின் பெண்கள் என்பது அவன் அவர்களை அங்கே அழைத்த போது புரிந்தது. பிரத்யும்னனுக்குத் தன் பெண்களை அவன் அறிமுகம் செய்து வைத்தான். அவர்கள் வஜ்ரநபுக்கும் பிரத்யும்னனுக்கும் வரவேற்புக்கூறி வணக்கம் தெரிவித்தனர். அவர்களில் யாருமே இன்று வரை ஒரு யாதவனை நேரில் பார்த்ததில்லை என்பதோடு இத்தனை அழகான வாலிபனையும் கண்டது இல்லை. அங்கிருந்து வஜ்ரநப் அவனை அங்கிருந்து கோட்டையின் மறுபக்கத்துக்கு அருகிலிருந்த ஒரு அழகான குடிலுக்கு அழைத்துச் சென்றான். பிரத்யேகமான விருந்தாளிகளுக்கென அது கட்டப்பட்டிருக்க வேண்டும் என்பதைப் பிரத்யும்னன் புரிந்து கொண்டான்.

Friday, February 3, 2017

கண்ணன் வருவான், குருக்ஷேத்திரம், சபையில் கொடூரம்!

சால்வன் மிகப் பெரிய தர்மசங்கடமான நிலையில் இருந்தான். சௌராஷ்டிரத்தில் இருந்து திரும்பியதில் இருந்து ஷால்வன் தன்னுடைய அணுகுமுறை மூலமும் பேச்சுக்கள் மூலமும் தன் நாட்டு மக்கள் மனதில் தான் சௌராஷ்டிரத்தில் இருந்து மிகப் பெரிய வெற்றியுடன் வந்திருப்பதாக நிரூபிக்க விரும்பினான். அதற்காக மிகவும் முயன்றான். உண்மையில் அவன் மிகவும் மன அழுத்தத்துடனேயே இருந்தான். மனம் வெறுத்துப் போயிருந்தான். சௌராஷ்டிரத்துடன் தொடர்ந்த போரில் துவாரகையில் அவனுடைய நம்பிக்கைக்கு உகந்த மூன்று தளபதிகளை அவன் இழந்து விட்டான். அவர்களில் வேகவன் மிகவும் நம்பிக்கைக்கு உரியவன் என்பதோடு எவரோடும் போட்டி போட மிக வல்லவன். விவிந்தன் என்னும் தானவ வீரன் மிகவும் பிரபலமானவன். அடுத்தவன் க்ஷேமவிருத்தி என்னும் அவன் மந்திரி! இம்மூவரையும் இழந்ததில் ஷால்வனுக்குத் தன் உடலின் ஒரு பாகமே இழந்து விட்டாற்போல் இருந்தது.

வெற்றி அடைவதற்கு முன்னரே அவனே அந்தப் போர்க்களத்தில் இருந்து திரும்ப வேண்டி வந்தது. அது மட்டுமல்ல மிகவும் அவமானமான சூழ்நிலையில் அல்லவோ அவன் திரும்ப வேண்டி வந்தது! அவசரம் அவசரமாக மேலும் அவமானம் ஏற்படும் முன்னர் திரும்பி விட்டான். அவனுடைய மொத்தப் படைகளுக்கும் தலைவனாக வேகவன் தான் இருந்தான். அவனுக்கு அடுத்து இப்போது அவன் மகன். வஜ்ரநப்! ஷால்வனின் படை வீரர்களுக்குத் தலைவனாக இருப்பதோடல்லாமல் அவர்களுக்கு இப்போது மிச்சம் இருப்பதை எல்லாம் அவன் தான் கவனித்துக் கொண்டிருந்தான்.  ஷால்வனுக்கு வஜ்ரநபிடம் கொஞ்சம் நம்பிக்கை இருந்தாலும் அவன் தகுதியில்லாதவன் என்றோ அல்லது விசுவாசமில்லாதவன் என்றோ சொல்வதற்கு எந்தவிதமான முகாந்திரமும் இல்லை. அவன் எவ்விதமான சூழ்ச்சியோ கிளர்ச்சியோ செய்ததாகத் தெரியவில்லை. அப்படி நடந்திருந்தால் அதில் பங்கெடுத்ததற்கான அறிகுறிகளும் இல்லை.

ஷால்வன் வஜ்ரநபைத் தன்னருகே அழைத்தான். ஷால்வனின் அருகே வந்த வஜ்ரநப் முறையான மரியாதைகளை மன்னனுக்குத் தெரிவித்தான். அவனைப் பார்த்து ஷால்வன், “வஜ்ரநப், நான் உன்னிடம் எல்லாவிதமான அதிகாரங்களையும் கொடுத்து இருக்கிறேன். உன் தந்தை எனக்கு எப்படி அருமையானவராக இருந்தாரோ அதே போல் நீயும் எனக்கு அருமையானவன். நெருக்கமானவன்.” என்றான். “உங்கள் கட்டளைக்குக் கீழ்ப்படிகிறேன், அரசே!” என்று வணக்கத்துடன் கூறினான் வஜ்ரநப்.

“ஆம், அதனால் தான் நான் உன்னையே மிகவும் நம்பி இருக்கிறேன். படைவீரர்களையும் உன்னை நம்பி ஒப்புவித்திருக்கிறேன். நமக்கு எதிரிகள் இருக்கின்றனர். அவர்களை நாம் தக்கபடி கவனிக்க வேண்டும். கவனிக்க வேண்டிய விதத்தில் கவனிக்க வேண்டும்.” என்றான் ஷால்வன்.  அதன் பின்னர் அவன் மீண்டும் வஜ்ரநபைப் பார்த்துச் சொன்னான். “ நீ பிரத்யும்னனுக்கு விருந்தோம்ப வேண்டும்.  இந்தக் கோட்டையே உன்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. உன்னுடைய குடும்பத்தை அங்கே மாற்றச் சொல்லிக் கட்டளைகள் ஏற்கெனவே பிறப்பிக்கப்பட்டுள்ளது!” என்றான் ஷால்வன். வஜ்ரநப் ஷால்வனுக்கு வணக்கம் தெரிவித்தான். “தங்கள் கட்டளைப்படியே பிரபு!” என்றான்.

“அவனுக்கு நன்றாக உணவளி! விருந்துகளைக் கொடு! இங்கே உள்ள பெண்களிலேயே சிறந்தவளை அவனுக்கு தாசியாக்கு!” என்றான். பின்னர் தன் கைகளைத் தட்டிவிட்டுக் கத்தினான். “”அப்பயா! இங்கே வா!” என்றான். அப்பயாவின் அருகே அமர்ந்திருந்த இரண்டு வீரர்கள் அவனைப் பிடித்து மன்னர் மன்னன் ஷால்வனின் எதிரே கொண்டு வந்து நிறுத்தினார்கள். அவன் தலைப்பாகையும் உடைவாளும் அவனிடமிருந்து எடுக்கப்பட்டு அவன் கைகள் பின்னால் கட்டப்பட்டுக் காணப்பட்டது.  ஷால்வனின் முகம் இறுக்கம் அடைந்தது. அவன் சீறினான். “எனக்கு விசுவாசமாக இல்லாதவர்களை நான் சிறிதும் சகித்துக் கொள்ள மாட்டேன். என்னால் பொறுக்க இயலாது. உனக்கு அது நன்றாகத் தெரியும். அல்லவா?” என்று கேட்டான்.

அந்தக் கைதி தனக்குத் தெரியும் என்பதாகத் தலையை ஆட்டினான். “அப்படித் தெரிந்திருந்தும் நீ அரசர்களின் கோட்டையைக் குறித்த தகவல்களை உன் நண்பர்களிடம் சொல்லிக் கொண்டிருக்கிறாய்!” என்றான் ஷால்வன் கடுமையாக. அப்பயா பயந்து விட்டான். நடுங்கிப் போனான். அவன் முழந்தாள்கள் மடிந்தன. அவனால் நிற்கக் கூட முடியவில்லை. ஷால்வனின் முகம் முற்றிலும் மாறியது. அவனை இப்போது பார்த்தால் ஓர் கோபம் கொண்ட புலியைப் போல் காணப்பட்டான். அப்பயாவை பார்த்து, “வா, இங்கே! உன் தலையைக் குனிந்து கொள்!” என்று கர்ஜித்தான்.

அப்பயா மிகவும் சிரமப்பட்டுத் தன்னை மன்னன் அருகே கொண்டு போனான்.  அவன் உடலைப் பின்னால் இழுத்துக் கொண்டு தலையை மன்னன் அருகே மிகவும் சிரமத்துடன் கொண்டு போனான். ஆனால் ஷால்வனோ கண் மூடித் திறக்கும் நேரத்துக்குள்ளாகத் தன் உடைவாளை உருவி அப்பயாவின் கழுத்தருகே கொண்டு சென்று விட்டான்.  ஒரே வெட்டு. அப்பயாவின் தலை அவன் உடலிலிருந்து தனியே வந்து கீழே உருண்டது. அவன் உடல் துடிதுடித்துக் கீழே சாய்ந்தது. ரத்த வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இப்போது ஷால்வன் வெற்றிப் புன்னகையுடன் பிரத்யும்னன் பக்கம் திரும்பினான். “எப்படி? நான் ஓர் நல்ல அரசனா? நான் வெறும் அரசன் மட்டுமல்ல! எனக்கு விசுவாசமாக இல்லாத மனிதர்களை எவ்வாறு நடத்த வேண்டும் என்பதையும் நான் நன்கறிந்திருக்கிறேன். “ பின்னர் வஜ்ரநபிடம் திரும்பி, “நினைவு வைத்துக்கொள் வஜ்ரநப்! இதனால் தான் நான் மன்னர் மன்னன். அரசர்க்கரசன்! இதை மனதில் வைத்துக்கொள்! என் சபையில் விசுவாசமாக இருப்பவர்கள் மதிக்கப்படுவார்கள். அவர்களுக்கு விரும்பியது விரும்பியவண்ணம் நடக்கும். எனக்கு விசுவாசமில்லாதவர்களுக்கு இது தான் நேரிடும்!” என்றான் ஷால்வன்.

ஷால்வன் தன் சிம்மாசனத்தில் இருந்து எழுந்திருக்க, அனைவரும் அவனைத் தொடர்ந்து எழுந்தார்கள்.  தன் வாளை உயரத் தூக்கித் தன் வீரர்கள் அனைவரிடமும் காட்டினான். அங்கிருந்த அனைவருக்கும் ஷால்வன் மாபெரும் வெற்றி ஒன்றைச் சந்தித்து விட்டாற்போல் தோன்றியது. அந்த சபாமண்டபமே அந்த வெற்றியைக் கொண்டாடுவதில் முனைந்தது.

Wednesday, February 1, 2017

கண்ணன் வருவான், எட்டாம் பாகம், குருக்ஷேத்திரம்! ஷால்வன் சபையில்!

மறுநாள் காலை ஓர் அடிமை வந்து பிரத்யும்னனும் மற்றவர்களுக்கும் குளிக்க ஏற்பாடுகள் செய்து வைத்துப் பின்னர்  பிரத்யும்னனுக்கு விலை உயர்ந்த ஒரு சால்வையை மன்னன் பரிசாக அனுப்பியதாகக் கொடுத்துச் சென்றான்.  அன்றைய தினமும் மன்னன் அழைக்கவில்லை. மறுநாள் காலை பிரத்யும்னன் எழுந்திருக்கையிலேயே அந்தக் கறுத்த பெரிய உடல் படைத்த அடிமை அவன் கட்டிலருகே முழங்காலிட்டு அமர்ந்து கொண்டிருந்தான்.  இன்னொரு அடிமை நுழைவாயில் கதவருகே நின்றிருந்தான்.  அவன் உள்ளே அருகே வந்து தலை குனிந்து வணக்கம் சொல்லிவிட்டு, “ பிரபுவே, தாங்கள் இந்த அடிமையைத் தொடர்ந்து வர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். உங்களை இந்த அடிமை அரசனின் அறைக்கு மன்னாதி மன்னனைச் சந்திக்க அழைத்துச் செல்கிறேன். உங்களை இன்று ராஜசபைக்கு அழைத்து வரும்படி மன்னாதி மன்னரின் கட்டளை!” என்றான்.

பிரத்யும்னன் தன்னுடன் வந்தவர்கள் அனைவரையும் தயாராகச் சொன்னான்.  மதிய நேரம். சூரியன் ஒளிவீசிப் பிரகாசித்துக் கொண்டிருந்தது. அவர்களுடன் வந்திருந்த மல்லன் பூர்ணா பிரத்யும்னன் அரசனைச் சந்திக்கப் போவதால் நல்ல உடை அணியத் தயார் செய்து கொடுத்து உதவினான். பிரத்யும்னன் தன் தோழர்களையும் அழைப்பதைக் கண்ட அந்த அடிமை மெதுவாக அதற்கு ஆக்ஷேபம் தெரிவித்தான். மிகப்பணிவுடனேயே அவன் அதை மறுத்தான். “என்னை மன்னியுங்கள், பிரபுவே!நீங்கள் மட்டும் தான் வரலாம். உங்களை மட்டும் அழைத்து வரும்படி எனக்குக் கட்டளை!” என்றான்.

அப்போது மல்லன் பூர்ணா பிரத்யும்னனிடம், “எதுவும் நடக்காது, குழந்தாய்! கவலைப்படாதே! அப்படி நம்மை ஏதாவது செய்ய வேண்டும் என்று அவர்கள் நினைத்திருந்தால் நம்மை இவ்வளவு மரியாதையுடனும் கௌரவமாகவும் பாலைவனத்தைத் தாண்டி அழைத்து வந்திருக்க மாட்டார்கள்.   ஏதோ குழப்பம் நேர்ந்திருக்கிறது என நினைக்கிறேன். ம்ம்ம்ம், இப்போது இந்தத் தலைவன் யார் என்பது எனக்குப் புரிந்து விட்டது. இவனை நான் ஏற்கெனவே பார்த்திருக்கிறேன். ஆனால் எங்கே என்று சொல்ல முடியாது. முடியவில்லை. வெகு விரைவில் நாம் இங்கே வந்திருப்பதின் உண்மையான அர்த்தத்தைப் புரிந்து கொள்வோம். இந்தப் புதிர் விரைவில் விடுபடும்!” என்றான்.

பிரத்யும்னன் அந்த அடிமையுடன் கூடச் சென்றான். அவன் ராஜசபைக்கு அவனை அழைத்துச் சென்றான். ஒரு சிறிய அளவிலான உயரம் குறைவானதொரு மேடையில் புலித்தோலால் மூடப்பட்டிருந்த அறைக்கு அவர்கள் சென்றார்கள்.  அந்த மேடைக்குப் பின்னால் சில சேவகர்கள் அசையாமல் நின்று கொண்டிருந்தனர். அவர்கள் கைகளில் உருவிய வாளுடன் காணப்பட்டனர்.  அங்கே பலர் அமர்ந்திருக்கையில் ஓர் மனிதன் மட்டும் கால் மேல் கால் போட்டுக் கொண்டு கம்பீரமாக அமர்ந்திருந்தான். மிக ஆடம்பரமாக உடை அணிந்து அமர்ந்திருந்த அவன் மேல் அனைவர் கண்களும் மொய்த்திருந்தன.  சுமார் ஐம்பது வயதிருக்கும் அவன் உட்கார்ந்திருக்கும் நிலையிலேயே மிகுந்த ஆகிருதியுடனும் அந்தஸ்து புலப்படும்படியும் காணப்பட்டான். பிரத்யும்னனுக்கு அவனைப் பார்த்ததுமே இவன் தான் தான் தேடி வந்த ஷால்வ மன்னன் என்பது புலப்பட்டது. இவன் தான் சௌராஷ்டிரத்தின் மேல் படை எடுத்து வந்தவன் என்பதும் புலப்பட்டது.  அவன் மிகவும் கர்வத்துடனும் வீரமாகவும் கம்பீரமாகவும் அவனுக்கு எதிரே நின்றான்.  இதழ்களில் மெல்லிய புன்னகை இழையோட நின்ற பிரத்யும்னனுக்குத் தான் யார் என்பதை ஷால்வனும் புரிந்து கொண்டு விட்டான் என்பது தெரிந்தது.

பிரத்யும்னனை ஓர் புன்சிரிப்புடன் பார்த்த ஷால்வன் அவனருகே இருந்த ஓர் இருக்கையைக் காட்டி அமரச் சொன்னான். பின்னர், “நீ இந்த மன்னாதி மன்னனின் ராஜசபைக்கு வரவேற்கப்படுகிறாய்! உனக்கு நல்வரவு!  இங்கே வா, இளைஞனே! இப்படி என்னருகே வந்து அமர்ந்து கொள்! பயப்படாதே!” என்றான். பிரத்யும்னன் சிறு பிள்ளை போல் சிரித்தான். அவனால் இதை நம்பவே முடியவில்லை. “மன்னாதி மன்னரே, நீங்கள் சொல்லி இருந்தால் நானே இங்கே வந்திருப்பேனே! ம்ம்ம் நீங்கள் மன்னாதி மன்னர் தான் என்றால், அதுவும் க்ஷத்திரிய தர்மத்தைக் கடைப்பிடிப்பவராகவும் இருந்து விட்டால், நீங்கள் என்னுடன் மல்யுத்தம் நேருக்கு நேர் செய்ய வேண்டும்!” என்றான்.

“ஆஹா, இப்போது எனக்கு நினைவுக்கு வருகிறது. நீ யார் என்பதைப் புரிந்து கொண்டு விட்டேன். நீ அந்த இளம் யாதவன், என்னால் அழிக்கப்பட்டிருக்க வேண்டியவன், ஆனால் உன்னை நான் விட்டு வைத்தேன்! உன்னை நான் நன்கறிவேன். இளைஞனே! நீ துவாரகையில் மிகவும் தீரத்துடன் என்னுடன் போரிட்டாய்! எனக்கு உன்னுடன் நேருக்கு நேர் எந்தச் சண்டையும் இல்லை! உன்னுடன் எனக்கு எந்தப் பகையும் இல்லை! உன் தந்தையுடன் தான் எனக்குப் பகை! அவனுடன் தான் நான் சண்டை இட வேண்டும்!” என்றான்.

“பின்னர் என்னை ஏன் பிடித்து வந்திருக்கிறீர்கள் அரசர்க்கரசே! என்னுடைய சிநேகிதத்தை விரும்பியா? அல்லது வேறு ஏதானும் காரணமா?” என்று கேட்டான் பிரத்யும்னன். அவனைப் பார்த்து இழிவாகச் சிரித்தான் ஷால்வன். “நாங்கள் விருந்தோம்புதலில் சிறந்தவர்கள். எங்கள் கடமை அது! அதிலிருந்து பின்வாங்க மாட்டோம்!” என்றான். பின்னர் அவன் ஆணையின் பேரில் அங்கே ஓர் அடிமைப்பெண் வந்தாள். அவளுடன் கூடவே பாடகர்கள் சிலரும் வந்தனர். “இவள் மிக அற்புதமான பெண்!” என்றான் ஷால்வன். அந்தப் பெண் கனவில் ஆடுவது போல் ஆடினாலும் அதில் சிற்றின்ப உணர்வைத் தூண்டும் விதமாகவே அசைவுகள் காணப்பட்டன. தன்னுடைய முகத்திரையை முதலில் அவிழ்த்த அவள் பின்னர் ஒவ்வொரு ஆடையாக அவிழ்த்துவிட்டுக் கடைசியில் ஓர் சிலையைப் போல் அசையாமல் நின்றாள்.

ஷால்வன் பிரத்யும்னன் பால் சாய்ந்தவண்ணம் கேட்டான். “எப்படி? இந்தப் பெண்? கவர்ச்சியாக இருக்கிறாள் அல்லவா? உனக்குப் பிடித்திருக்கிறதா?” என்று கேட்டான். பிரத்யும்னன் அதற்கு, “உண்மையில் இவள் அழகி தான்!” என்றான்.

“நான் இவளை சந்தோஷமாக உனக்கே அளிக்கிறேன். இவள் பழகுவதற்கு மிகவும் இனிமையானவள், பண்பானவள். ஒத்துப் போவாள். கீழ்ப்படியும் சுபாவம் உண்டு.  கலைகளில் தேர்ந்தவள்!” என்றான். அதற்குப் பிரத்யும்னன், “மன்னாதி மன்னருக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.  ஆனால் இந்தப் பரிசு எனக்குச் சிறிதும் பயன்படாத ஒன்று.  நான் திருமணம் செய்து கொண்ட என் மனைவியைத் தவிர்த்து மற்ற எந்தப் பெண்ணையும் தொட மாட்டேன் என்று சபதம் செய்திருக்கிறேன்.  நான் க்ஷத்திரிய தர்மத்தைக் கடைப்பிடிக்க வேண்டி எடுத்த சபதங்களில் இது மிகவும் முக்கியமான ஒன்று!” என்றான் பிரத்யும்னன்.  ஷால்வன் அதற்கு மறுமொழி சொல்லாமல் தன் தலை அசைவால் அந்தப் பெண்ணை அங்கிருந்து போகச் சொன்னான். அந்தப் பெண்ணும் தன் துணிகளைச் சுருட்டி எடுத்துக் கொண்டு தன்னுடன் வந்த பாடகர்கள் பின் தொடர அங்கிருந்து சென்றாள்.