Saturday, October 15, 2016

யுதிஷ்டிரனுடைய குழப்பம்!

“என்ன? என் தந்தையிடமிருந்தா?” யுதிஷ்டிரன் ஆச்சரியத்துடன் அந்த முனிவரைப் பார்த்தான். தன் கண்ணிமைகளை அசைத்துப் பார்த்தான், அவன் விழித்திருக்கிறானா? தூங்குகிறானா? ஒன்றுமே புரியவில்லை. என்றாலும் முனிவரிடம், “என்ன செய்தி கொண்டு வந்தீர்கள்? முனிவரே! அதைத் தெரிவியுங்கள்.” என்றான். “உன் தந்தை தான் வருத்தத்தில் இருப்பதாக உன்னிடம் தெரிவிக்கச் சொன்னார்.” என்றார் முனிவர். “ஆஹா! அது ஏன்? எப்படி? என் தந்தைக்கு என்ன வருத்தம்? அதை நீக்க நான் என்ன செய்ய வேண்டும்?” என்று யுதிஷ்டிரன் கேட்டான். அதற்கு முனிவர், “மாட்சிமை பொருந்திய சக்கரவர்த்தி பாண்டு கீழ்க்கண்ட செய்தியை உன்னிடம் தெரிவிக்கும்படி என்னை அனுப்பி வைத்தான். “நான் தூர தூர தேசங்களுக்கு எல்லாம் சென்று வெற்றிக்கொடி நாட்டி வந்தேன். அரசர்களின் விசுவாசத்தைப் பெற்று அவர்களை அதிகாரம் செய்யும் வல்லமை பெற்றிருந்தேன். இத்தனை இருந்தும் என்னால் ராஜசூய யாகத்தைச் செய்ய முடியவில்லை. ஆனால் நீ, யுதிஷ்டிரா, என் மகன், மிகுந்த அதிகாரம் படைத்துள்ளாய்! ஆனால் நீ இந்த யாகத்தைச் செய்ய யோசிக்கிறாய்! இன்று வரை அதைச் செய்யாததோடு அதற்கான முயற்சிகளிலும் இறங்கவில்லை. இது உனக்குக் கடமை. எனக்காக இதைச் செய்ய நீ கடமைப்பட்டிருக்கிறாய்! நீ இதைச் செய்து முடிக்கும்வரையிலும் எனக்கு மேலுலகில் ராஜசூய யாகத்தை முடித்துவிட்டு வந்த சக்கரவர்த்திகளிடமோ அல்லது சக்கரவர்த்தி குமாரர்கள் செய்து முடித்து அதன் மூலம் உயர்ந்த இடத்தைப் பெற்ற சக்கரவர்த்திகளிடமோ வசிக்க இயலாது! நான் அதற்கு அருகதை அற்றவனாகி விடுவேன்.”

“ராஜசூய யாகம்!” என்று திரும்ப ஒருமுறை கூறினான் யுதிஷ்டிரன். “ஆம், யுதிஷ்டிரா! ஓர் மகனுக்கு முக்கியக் கடமையே அவன் தகப்பனை இவ்வுலகில் மட்டுமில்லாமல் பித்ருலோகத்திலும் சந்ஹ்டோஷமாக வைக்க வேண்டியது என்பதே! “ என்றார் முனிவர். முனிவரைச் சுற்றிக் காணப்பட்ட நீல நிற ஒளிவட்டம் மெல்ல மெல்லப் புகை வடிவில் மறைய ஆரம்பித்தது. எங்கோ தொலைதூரத்திலிருந்து பேசுவது போல் முனிவரின் குரல் கேட்டது! “யுதிஷ்டிரா, இது தான் உன் தகப்பனின் செய்தி! ராஜசூய யாகத்தை ஏற்று நடத்து!” என்றார் முனிவர். “ஆனால்…….ஆனால்…….” என்று ஏதோ சொல்ல வந்தான் யுதிஷ்டிரன். அவனால் சொல்ல வந்ததைச் சொல்லி முடிக்கும் முன்னரே, எல்லாத் திசைகளிலிருந்தும் குரல்கள் ஒலித்தன! அனைத்துமே “ராஜசூய யாகத்தை நடத்து!” என்றன. யுதிஷ்டிரனுக்கு நடுங்கியது. தன் கண்களைத் தேய்த்து விட்டுக் கொண்டான். கண்களைத் திறப்பது கடினமாக இருந்தது. தன் தலையை உலுக்கிக் கொண்டு மீண்டும் கண்களை முயற்சி செய்து திறந்தான், அவன் யமுனை நதிக்கரையில் தான் அமர்ந்திருந்தான். ஆகவே அவனுக்குள் மீண்டும் குழப்பம் ஏற்பட்டது.

இப்போது அந்தப்பாறையையே பார்க்கமுடியவில்லை! முனிவர் எவரையும் காணவில்லை! இசை கேட்கவில்லை! முனிவரைச் சுற்றிக் காணப்பட்ட நீல நிற ஒளிவட்டத்தைக் காணவில்லை. ஆனால் அவன் மனதுக்குள்ளாக அந்தக் குரல் மட்டுமே திரும்பத் திரும்பக் கேட்டது! “ராஜசூய யாகத்தை நடத்து!” என்று திரும்பத் திரும்ப அவனுள்ளே குரல்கள் கேட்டன. மெல்ல எழுந்து மீண்டும் மாளிகைக்கு வந்து மேன் மாடத்திற்கு வந்து கீழே படுத்தான், கண்களை மூடி உறங்கப் பிரயத்தனம் செய்தான். அவனால் உறங்க முடியவில்லை. அவன் காதுகளில் அந்தக் குரல், அவன் தந்தையின் கட்டளை என்று சொன்ன அதே குரல் ஒலித்துக் கொண்டே இருந்தது. மெல்ல மெல்லப் பொழுதும் விடிந்தது.

விடிகாலையிலேயே ஐந்து சகோதரர்களும் எழுந்து விட்டனர். நதியில் ஸ்நானம் செய்து காலைக்கடன்களை முடித்துக் கொண்டு சூரியனுக்கு அர்க்யம் கொடுத்துத் தங்கள் வழிபாட்டை நடத்திக் கொண்டார்கள். பிராணாயாமம் போன்ற பயிற்சிகளை வழக்கம்போல் முடித்தார்கள். இவை அத்தனையையும் யுதிஷ்டிரன் ஒரு இயந்திரத்தைப் போல் செய்து கொண்டிருந்தான். எல்லாம் முடிந்ததும் பீமன் யுதிஷ்டிரனிடம் வந்தான். அவன் தோள்களில் கைகளை வைத்துக் கொண்டு, “மூத்தோனே, உன்னைப் பார்த்தால் உடல் நலமில்லாதவன் போல் தெரிகிறது! என்ன விஷயம்?” என்று கேட்டான். “ஒன்றும் இல்லை, சகோதரா!” என்றான் யுதிஷ்டிரன். அவன் உதடுகளில் ஒரு சிரிப்பை வலிய வரவழைத்துக் கொண்டான். “இல்லை, ஏதோ பிரச்னை என்று தெரிகிறதே!” என்று விடாமல் கேட்டான் பீமன். “இல்லை, இல்லை, ஒன்றுமே இல்லை! நேற்றிரவு நான் சரியாகத் தூங்கவில்லை!” என்றான் யுதிஷ்டிரன். அதன் பின்னர் அன்றிரவு உணவு நேரத்தில் வழக்கம் போல் தன் பிள்ளைகளுக்கு உணவு பரிமாறக் குந்தி வந்தாள்.

அப்போது அவளும் யுதிஷ்டிரனைப் பார்த்தாள். “குழந்தாய், மூத்தவனே! என்ன விஷயம் அப்பா? ஏன் இப்படிச் சோர்ந்திருக்கிறாய்? உடல் நலமில்லையா? நீ ஏதோ வருத்தத்தில் இருப்பது போல் தெரிகிறதே!” என்று கேட்டாள். யுதிஷ்டிரன் அங்கிருந்த ஊழியர்களைத் தன் கை அசைப்பால் வெளியேறச் சொன்னான். அனைவரும் வெளியேறியதும், தன் சகோதரர்கள் மற்றும் வீட்டுப் பெண்களைத் தவிர வேறு யாரும் இல்லையே என நிச்சயம் செய்து கொண்டான். குந்தி மீண்டும் கேட்டாள்! “என்ன வருத்தம் மகனே!” என்று கேட்டாள். “நேற்றிரவு நான்சரியாகத் தூங்கவில்லை!” என்ற யுதிஷ்டிரன் தான் வாழ்நாள் முழுவதும் உண்மையே பேசுவதாகச் சத்தியம் செய்தது நினைவில் வந்தது. அவனால் பொய் சொல்ல முடியாது! ஆகவே தன் தொண்டையைக் கனைத்துச் சரி செய்து கொண்டான். “எனக்கு ஏதும் ஆகவில்லை! ஆனால் எனக்கு ஒரு செய்தி கிடைத்திருக்கிறது!” என்று சொன்னான். இதைத் தன் குரலைத் தஃணித்துக் கொண்டு மெதுவாகச் சொன்னான்.

“செய்தியா? என்ன செய்தி? யாரிடமிருந்து?” குந்தி கவலையுடன் கேட்டாள்.

“தந்தையிடமிருந்து!” என்ற யுதிஷ்டிரன் அங்கே எங்கானும் ஓரத்தில் நின்று கொண்டு வேலை ஆட்களோ, சேடிப்பெண்களோ தான் பேசுவதைக் கேட்கின்றனரா என்று பார்த்துக் கொண்டான். கண் பார்வைக்கு எட்டிய தூரத்திலும் ஒலி கேட்கும் தூரத்திலும் எவரும் இல்லை என்றாலும் தன் குரலைத் தணித்துக் கொண்டே பேசினான். “என்ன? உன் தந்தையிடமிருந்தா?” என்று குந்தி ஆச்சரியத்துடன் கேட்டாள். அவள் முகம் வெளிறிப் போய்க் காணப்பட்டது. “ஆம், அம்மா! ஆம்! இதை இந்தச் செய்தியை நேற்றிரவு எனக்கு நாரதமுனிவர் கொண்டு வந்தார்.” என்று பதிலளித்தான் யுதிஷ்டிரன். பீமனுக்கு இப்போது தான் கனவு காண்கிறோமோ என்ற சந்தேகம் தோன்றியது. தன் தலையை ஆட்டிக் கொண்டு கண்களை மூடி மூடித் திறந்தான். “அண்ணாரே, அது நாரத முனிதான் என்பதில் உமக்கு நிச்சயம் ஏற்பட்டு விட்டதா? அவர் தானா என்று தெரியுமா? ஆஹா, நான் அங்கு இல்லாமல் போனேனே! இருந்திருந்தால் யார் அது என்று கண்டு பிடித்திருப்பேன்!” என்றான் பீமன்.

“ஆம், தம்பி! அதில் எவ்வித சந்தேகமும் இல்லை! அவரே தான் அது! முனிசிரேஷ்டரும், கடவுளரின் நம்பிக்கைக்கும் அவர்களின் மனசாட்சிக்கும் பாத்திரமானவருமான நாரத முனிவரே தான் அது! மூவுலகும் மட்டுமில்லாமல் பிரபஞ்சம் முழுதும் சுற்றி வரும் நாரத முனியே தான் அது! வேறு எவரும் இல்லை! அவருடைய தெய்விகமான இன்னிசை மூலம் நான் அவர்தான் வந்திருப்பது என்பதைப் புரிந்து கொண்டேன்.” என்றான் யுதிஷ்டிரன். அப்போது திரௌபதி, “இப்போது அவர் எங்கே இருக்கிறார், பிரபுவே?” என்று கேட்டாள். “அவர் எனக்குச் செய்தியைக் கொடுத்துவிட்டு மறைந்துவிட்டார். “ என்றான் யுதிஷ்டிரன். “நிச்சயம் தானா, அண்ணாரே, ஒரு வேளை உமக்கு நிச்சயமில்லை எனில்? என்னை அழைத்திருக்கலாமே அப்போது!” என்று மனக்குறையுடன் சொன்னான் பீமன்.

“உண்மையில் சொல்லப் போனால் அது நிஜம் போலவும் இருந்தது; இல்லை போலவும் இருந்தது. நிஜமா, கனவா, நனவா என்று என்னாலும் சொல்ல முடியவில்லை. ஆனால் நான் அவரைப் பார்த்தேன், இதோ இப்போது இங்கே உங்கள் அனைவரையும் எப்படிப் பார்க்கிறேனோ அதே போல் அவரைப் பார்த்தேன். அது நிச்சயம் அவரே தான். நிச்சயமாக அது கனவாக இருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் அவ்வளவு தெளிவாக அவரைக் கண்டேன்.” என்ற யுதிஷ்டிரனிடம், “குழந்தாய், உன் தந்தையின் செய்தி என்ன?” என்று குந்தி கேட்டாள். அந்தச் செய்தி யுதிஷ்டிரனுடைய மனதில் இடைவிடாமல் தோன்றிக்கொண்டே இருந்தது. ஆகவே அவன் உடனே சொன்னான். என்றாலும் அவன் மனதில் கொஞ்சம் பயமும் இருந்தது. “அந்தச் செய்தி என்னவெனில் தந்தை என்னை ராஜசூய யாகத்தை ஏற்று நடத்தப் பணிக்கிறார்.” என்றான்.

குந்தியின் கண்கள் கண்ணீரை மழையென வர்ஷித்தன. “குழந்தாய், இந்தச் செய்தி உன் தந்தை, என் பிரபு, சக்கரவர்த்தி பாண்டுவிடமிருந்து வந்தது தானா என்பதை உறுதிபடத் தெரிவிப்பாயா?” என்று கேட்டாள். “ஆம், தாயே, ஆம்! அந்த முனிவர் தான் இந்தச் செய்தியை என் தந்தை எனக்குச் சொல்லி அனுப்பி இருப்பதாகக் கூறினார். அங்கே பித்ருலோகத்தில் இடம் பெற்றிருக்கும் மற்றச் சக்கரவர்த்திகளுடன் ஆன உன்னதமான ஸ்தானம் தந்தைக்கு இப்போது கிடைக்கவில்லையாம். நான் இந்த ராஜசூய யாகத்தைச் செய்து முடித்தால் தான் அப்படித் தானும் இடம்பெற முடியும் என்று சொல்லி அனுப்பி இருக்கிறார்.” என்றான் யுதிஷ்டிரன். அப்போது அர்ஜுனன், “அண்ணா, உன்னிடம் இதைச் சொன்னது நாரத முனிவர் தான் என்பதில் உனக்குச் சந்தேகம் ஏதும் இல்லையே! நிச்சயம் தானா?” என்று கேட்டான். விண்ணிலிருந்தோ மண்ணிலிருந்தோ, மற்ற உலகங்களிலிருந்தோ! எங்கிருந்தானும் இப்படி ஓர் வரவைச் சற்றும் எதிர்பார்க்காத அர்ஜுனனுக்கு இது கொஞ்சம் உறுத்தலாகவே தோன்றியது.

“ஆம், அர்ஜுனா! அது பார்க்க உண்மையில் நடந்தது போலத் தான் இருந்தது. பொய்யெனச் சொல்ல முடியவில்லை. அது என் கனவா இல்லை நனவா என்பதைக் குறித்து என்னால் சொல்ல முடியாது! என்றாலும் இந்தச் செய்தியை நம் தந்தையைத் தவிர வேறு யாரும் கொடுத்திருக்க வாய்ப்பில்லை. நேற்றுத் தான் நம் அன்னை நம்மிடம் தந்தையின் இந்த நிறைவேறாத ஆசையைக் குறித்துச் சொல்லிக் கொண்டிருந்தார். தந்தையால் ராஜசூய யாகத்தைத் திறம்படச் செய்து முடிக்க முடியாமல் போய்விட்டது என்பதைக் கூறினார்.” யுதிஷ்டிரனின் பரிதாபமான நிலையைக் கண்ட குந்தி அங்கிருந்து அனைவரையும் வெளியேறும்படி கூறிவிட்டுத் தானும் வெளியேறினாள், யுதிஷ்டிரன் தனியாக இருந்து சிந்திக்கட்டும் என்றே அப்படிச் செய்தாள். ஆனால் யுதிஷ்டிரனோ சில நாட்களுக்கு மயக்க நிலையிலேயே இருந்தான். அவன் தந்தையின் அந்தச் செய்தி நிச்சயம், உறுதி என்பது வரை அவன் புரிந்து கொண்டிருந்தான். அதை அவனால் மறுக்கவே இயலாது!

2 comments:

ஸ்ரீராம். said...

//அங்கே பித்ருலோகத்தில் இடம் பெற்றிருக்கும் மற்றச் சக்கரவர்த்திகளுடன் ஆன உன்னதமான ஸ்தானம் தந்தைக்கு இப்போது கிடைக்கவில்லையாம்.//

:)))))

அங்குமா பேதம்!

முனிவரைச் சந்தித்த விவரங்களை யுதிஷ்டிரன் இன்னும் விளக்கமாக மற்றவர்களிடம் பகிர்ந்திருக்கலாமோ!

sambasivam6geetha said...

இதை நானும் யோசித்தேன். எனக்கும் அது கொஞ்சம் உறுத்தலாகத் தான் இருக்கிறது. ஆனால் ஒருமுறைக்குப் பலமுறை புத்தகத்தைப் பார்த்துவிட்டேன். இப்படித் தான் சொல்லி இருக்கார் முன்ஷிஜி! :)