Thursday, October 27, 2016

ஜராசந்தன் இறந்தான்!

இந்த நிகழ்ச்சியைக் காண வந்திருந்த க்ஷத்திரியர்கள் அனைவரும் அங்கே ஜராசந்தனின் நிர்வாகத்தால் அனுமதிக்கப்பட்ட ஆயுதங்களை எடுத்து வந்திருந்தனர். கோயிலுக்கு முன்னிருந்த விசாலமான பெரிய முற்றம் அங்கே வந்திருந்த கூட்டத்தால் நிரம்பி இருந்தது. பீமன் கண்ணனும், அர்ஜுனனும் புடைசூழ அங்கே வந்து சேர்ந்தான். அவனைக் கண்டதும் முதலில் கூட்டத்தில் அமைதி நிலவியது. பின்னர் மெல்லக் கிசுகிசுவென்று அவர்களுக்குள் முணுமுணுப்பாகப் பேச ஆரம்பித்தனர். பலரும் பீமனின் தைரியத்தைப் பாராட்டிப் பேசினார்கள். அதோடு பீமனை அடையாளம் காணுவதும் சிரமமாக இல்லை. நல்ல உயரமாக அதற்கேற்ற பருமனுடன் வலுவான தேக அமைப்புடன், நீண்ட கைகள், கால்களுடன் காணப்பட்டான். அதோடு கிருஷ்ண வாசுதேவனையும் அடையாளம் கண்டு பிடிப்பது எளிதாகவே இருந்தது. அமைதியும், சாந்தமும், கருணையும் நிறைந்த அவன் முகமே பார்ப்போர் மனதில் மரியாதையைத் தூண்டி விட்டது. அவனுடைய சரீரம் மிகவும் மென்மையாகவும் ஒரு பெண்ணின் தோலைப் போல் மிருதுவாகவும் காணப்பட்டது. இவன் கைகளால் ஆயுதத்தையே எடுத்திருக்க மாட்டான் என்று எண்ணும்படியான மென்மையான கைகள். நீளமான விரல்கள். இன்னொருவன் ஆன அர்ஜுனனோ பார்க்கவே இளமையான தோற்றத்துடன் கம்பீரமாகக் காணப்பட்டான். இவன் உடலும் மெல்லியதாகக் காணப்பட்டாலும் எளிதில் வளையக் கூடியதாக இருந்தது. ம்ம்ம்ம், இவன் தான் அந்த பீமசேனனின் தம்பி அர்ஜுனனாக இருக்க வேண்டும். இவன் நீண்ட கைகளைப் பார்த்தாலே வில் வித்தையில் சிறந்தவனாகத் தான் தெரிகிறது. ஆகவே இவன் தான் திரௌபதி தேர்ந்தெடுத்த மணாளனாகவும் இருப்பான். இந்த சுயம்வரத்தில் தானே ஜராசந்தனை வலுக்கட்டாயமாக வெளியேறச் சொல்லிக் கிருஷ்ணன் நிர்ப்பந்தித்தான்.

சற்று நேரத்தில் சக்கரவர்த்தி ஜராசந்தன் வந்துவிட்டான் என்பது அறிவிக்கப்பட்டது. அவனுடன் பழைய ராஜகுருவும் வந்தார். அவர் அங்கே வருகை தந்திருந்த விருந்தாளிகளைப் பார்த்த பார்வையிலிருந்து அவர்கள் மேல் அவர் பரிதாபப் படுகிறார் என்பது தெரிந்தது. என்னவென்று தெரியாமல், புரியாமல் வந்து மாட்டிக் கொண்டிருக்கின்றார்களே! அவர்கள் மரணத்தின் திசை நோக்கி நடக்கிறார்கள் என்பது அவர்களுக்குப் புரியவில்லையே! அவர் மிகவும் பரிதாபம் அடைந்தார். சுற்றிக் குழுமி இருந்த மக்கள் அனைவரும் மௌனமாக எழுந்து நின்று சக்கரவர்த்தியை வரவேற்றார்கள். தங்கள் தலையைக் குனிந்து கொண்டு கைகளைக் கூப்பிக் கொண்டு தரையில் விழுந்து வணங்கினார்கள் அனைவரும். புலித்தோலால் ஆன ஆடையை இடையில் தரித்துக் கொண்டு தன் வயதை மீறிய கம்பீரத்துடன் ஜராசந்தன் அந்த மாபெரும் மக்கள் கூட்டத்ஹ்டின் முன்னே தோன்றியதும் அவன் மிக வலிமை மிக்கவன் என்பதை அனைவரும் ஒரே சமயத்தில் உணர்ந்தார்கள். அவனுடைய நீண்ட தாடியும், தலை மயிரும் எடுத்துக் கட்டப்பட்டிருந்தது. தாடியைச் சுருட்டிக் கன்னத்தோடு சேர்த்துக் கட்டி இருந்தான். தலை மயிர் உயரே எடுத்துக் கட்டி இருந்த விதம் அவன் வெள்ளை நிறக் கிரீடம் ஒன்றை அணிந்திருப்பது போலவும் சில சமயம் வயதான சிங்கத்தின் வெண்மையான பிடரி மயிர் போன்றும் காணப்பட்டது.

பீமன் மல்யுத்தம் நடைபெறப் போகும் பகுதிக்குள் உள்ளே சென்றான். தன்னுடைய அரை ஆடையை இறுக்கிக் கட்டிக் கொண்டு மேலே போர்த்திருந்த மான் தோலை அர்ஜுனன் கைகளில் கொடுத்தான். மல் யுத்தம் செய்யத் தயாராக நின்றான். ஜராசந்தன் மிகவும் கம்பீரமாக ஓர் ஆண் சிங்கத்தைப் போல் வீர நடை போட்டு வந்தான். முதலில் ருத்ரனின் சந்நிதிக்குச் சென்று அங்கே அவருக்கு வழிபாடுகள் நடத்தினான். கீழே விழுந்து வணங்கி நீரால் அபிஷேஹம் செய்து மலர்களைச் சார்த்தி வணங்கினான். பீமன் பக்கம் திரும்பி அவனையும் அருகே வந்து ருத்ரனுக்கு வழிபாடுகள் செய்யச் சொன்னான். பீமனும் மௌனமாக அங்கே வந்து மனதுக்குள்ளாகப் பிரார்த்தனைகள் செய்து கொண்டான். முதலில் ருத்ரனை வணங்கித் தனக்கு பலத்தையும் வலிமையையும் தரும்படி கேட்டுக் கொண்டு பின்னர் அவன் குருவிடம் தனக்கு தைரியத்தைத் தரும்படி கேட்டுக் கொண்டு கடைசியில் தன் அன்னையிடம் மானசிகமாக ஆசிகளைக் கேட்டுக் கொண்டான். பின்னர் திரும்பி கிருஷ்ணனையும் அர்ஜுனனையும் பாசம் பொங்கப் பார்த்தான். அவர்கள் அவன் மேல் நம்பிக்கை மிகவும் வைத்திருக்கிறார்கள் என்பது அவர்களைப் பார்த்தாலே தெரிந்தது. அதில் மகிழ்ச்சி அடைந்த பீமன் அவர்கள் நம்பிக்கையைத் தான் பொய்யாக்கக் கூடாது என்று உறுதி பூண்டான்.

பின்னர் அவன் மல்யுத்தம் செய்யும் குறிப்பிட்ட வட்டத்துக்குள் வந்து தன்னிரு கரங்களாலும் தொடையைத் தட்டி ஆக்ரோஷித்துத் தான் தயார் என்பதைத் தெரிவித்துக் கொண்டான். அதைப் பார்த்த ஜராசந்தனும் தன் ஆடையான புலித்தோலைத் தன் அருகே இருந்த தலைமை மல்லனிடம் கொடுத்துவிட்டு பீமனுக்கு பதில் சொல்லும் விதமாகத் தானும் தன் தொடைகளைத் தட்டினான். உடனடியாக அவன் குதித்து பீமன் மேல் பாய்ந்தான். பீமன் லேசாக நகர்ந்து கொண்டான். கொஞ்ச நேரம் இருவரும் ஒருவரை பிடிக்க முயன்று கொண்டிருந்தனர். ஆனால் இருவராலும் மற்றவரைப் பிடிக்க முடியவில்லை. கூடி இருந்த கூட்டம் முழுவதும் அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தது. இருவருமே இணையான ஜோடியாக இருந்தனர். நல்ல உயரமாக திடகாத்திரமான மேனியுடனும் இறுக்கமான தசைகளோடும் வலுவான உடல் அமைப்புடனும் ஒரே மாதிரியான பருமனுடனும் காணபப்ட்டனர். ஜராசந்தன் வயதுக்கு மீறிய சுறுசுறுப்புடன் காணப்பட்டான். ஒரு கை தேர்ந்த ஆசானைப் போல் அவன் மல்யுத்தம் செய்தான். பீமனின் ஒவ்வொரு அசைவையும் முன் கூட்டியே எதிர்பார்த்து அதைத் தன் திறமையால் எதிர்கொண்டான்.

கொஞ்ச நேரம் இப்படிப் பட்ட மோதல்களுக்குப் பின்னர் இருவரும் ஒருவரை ஒருவர் கட்டித் தழுவிக் கொண்டு பலவிதமான பிடிகளின் மூலம் மற்றவரைத் தோற்கடிக்க முயன்றனர். இருவருக்குமே மூச்சு வாங்கினாலும் ஜராசந்தனுக்கு வயதின் காரணமாக அதிகமாக மூச்சு வாங்கியது! ஜராசந்தனால் மூச்சு விடுவதற்குத் திணற ஆரம்பித்ததும் அவன் பீமனைக் கழுத்தை நெரிக்க முயன்றான். அதே சமயம் அவன் இடுப்புக்குக் கீழ் அவனை ஓங்கி ஓர் உதை உதைத்துக் கீழே தள்ளுவதற்கும் முயன்றான். பீமன் ஜராசந்தனின் தந்திரமான வேலைகளைப் புரிந்து கொண்டான். ஜராசந்தன் தன் யுத்த முறையை மாற்றிக் கொண்டு விட்டதையும் கவனித்துக் கொண்டான். ஆகவே அவனைக் கொல்வதற்காக அவன் மேல் குனிந்தான். இப்போது போட்டி ஓர் பயங்கரமான நிலைக்கு வந்து சேர்ந்து விட்டது. பீமன் சத்தம் போடாமல் கிருஷ்ணனைப் பார்த்தான். அவன் ஓர் இலையைக் கையில் எடுத்து அதை நேர் கீழாகக் கிழித்துப் போட்டான். கிருஷ்ணன் கொடுத்த குறிப்பை பீமன் புரிந்து கொண்டான்.

மிகவும் முயற்சி செய்து ஜராசந்தனைக் கீழே தள்ளினான். தன் கால்களில் ஒன்றை ஜராசந்தனின் பாதத்தின் மேல் வைத்து அமுக்கிக் கொண்டான். மற்றொரு காலைத் தன்னிரு கரங்களிலும் பிடித்துக் கொண்டான். தன்னுடைய பலம் அனைத்தையும் பிரயோகித்து ஜராசந்தனின் உடலை இருகூறாகப் பிளக்க பீமன் முயற்சித்தான். ஓர் பயங்கரமான அலறல் ஜராசந்தனின் வாயிலிருந்து கிளம்பியது. அந்த அலறல் மெல்ல மெல்லத் தேய்ந்து போய் களகளவென்னும் ஓசை கேட்டுப் பின்னர் அதுவும் மறைந்தது. எலும்புகள் நொறுங்கும் சப்தம் கேட்டது. ஜராசந்தன் உடல் இரு கூறாகப் பிளக்கப்பட்டிருந்தது. அவன் தலையிலிருந்து கால் வரையிலும் இரு கூறாகக் கிடந்தான். பீமன் அந்த இரு பாதி உடல்களையும் தன் கைகளிலிருந்து தூக்கி எறிந்தான். அவனுக்கு இப்போது தான் நிம்மதியாக இருந்தது. ஒரு பெருமூச்சு விட்டுக் கொண்டான். அவன் ஜெயித்து விட்டான்.

அவன் ஜராசந்தனின் உடலைப் பார்த்தான். என்ன ஆச்சரியம்! பீமனின் கண்களில் விழி பிதுங்கி விடும் போல் இருந்தது. ஜராசந்தனின் உடல் இருகூறாகப் பிளக்கப்பட்டவை சுற்றிக்கொண்டும் திரும்பிக் கொண்டும் மீண்டும் ஒன்று சேரப் பிரயத்தனப்பட்டுக் கொண்டிருந்தது. இத்தனைக்கும் அந்த உடல் பாகங்களிலிருந்து ரத்தம் கொட்டிக் கொண்டிருந்தது. பீமனால் தன் கண்களையே நம்ப முடியவில்லை. இரண்டு பாகங்களும் மெல்ல மெல்ல ஒன்று சேர்ந்து ஒட்டிக் கொண்டன. ஜராசந்தன் தன் கண்களைத் திறந்தான். மெல்ல எழுந்து உட்கார்ந்தான். தன் உடலை உலுக்கிக் கொண்டு எழுந்து நின்று பீமனைப் பார்த்து ஹூங்காரம் செய்தான். பீமனைப் பார்த்துப் போட்டி முடியவில்லை என்றும் இன்னும் இருக்கிறது என்றும் நினைவூட்டினான். மீண்டும் பொருதத் தயாரானான்.

களைப்பிலும் சோர்விலும் தள்ளாடிக் கொண்டிருந்த பீமனுக்கு இப்போது மயக்கமே வந்துவிடும் போல் இருந்தது. உடல் நடுங்கியது. நிச்சயமாக இந்த ஜராசந்தன் அழிவற்றவன். இவனுக்கு மரணமே இல்லை! எல்லோரும் சொல்வது உண்மைதான் போலும். மீண்டும் கிருஷ்ணன் பக்கம் திரும்பிப் பார்த்தான் பீமன். ம்ம்ம்ம், இது தான் நான் கிருஷ்ணனைப் பார்க்கும் கடைசிப் பார்வை என்றும் நினைத்துக் கொண்டான். ஆனால் கிருஷ்ணனை அவன் பார்க்கையில் கிருஷ்ணன் கலவரமே படவில்லை. பீமனைப் பார்த்துப் புன்னகைத்தான். அவன் கைகளில் மீண்டும் ஓர் இலை இருந்தது. அந்த இலையை அவன் இரு பாகங்களாகக் கிழித்து வலப்பக்கத்து இலையை இடப்பக்கமும் இடப்பக்கத்து இலையை வலப்பக்கமும் மாற்றிப் போட்டான். பீமனுக்கு இப்போது தான் செய்ய வேண்டியது என்னவென்று புரிந்தது.

பீமனுக்குள்ளாக புதிய சக்தி ஊற்று எடுத்து ஓடுவது போல் உணர்ந்தான். ஆகவே இப்போது புத்துணர்ச்சியோடு ஜராசந்தன் மேல் பாய்ந்தான். மீண்டும் அவனைக் கீழே தள்ளி அவன் உடலை இரு கூறாகக் கிழித்து எறிந்தான், இம்முறை நினைவாக வலப்பக்கத்து உடலை இடப்பக்கமாகவும் இடப்பக்கத்து உடலை வலப்பக்கமாகவும் மாற்றிப்போட்டான். சற்று நேரம் அந்த உடல் பாகங்களையே கண்காணித்தான். அவை இருந்த இடத்திலேயே இருந்தன. ரத்தம் குளம் போல் தேங்கி நின்றது. பீமன் பார்த்துக் கொண்டே இருந்தான். அந்த உடல் பாகங்கள் போட்ட இடத்திலேயே இருந்தன. அவை இப்போது ஒன்று சேரவில்லை. ஜராசந்தன் உண்மையாகவே இப்போது இறந்து விட்டான் என்பதும் பீமனுக்குப் புரிந்தது. ருத்ரனுக்குப் பிரியமானவன், அவனின் அத்யந்த சீடன் ஜராசந்தன் இறந்து விட்டான். பீமன் உடலிலிருந்து வியர்வை வெள்ளமாகப் பெருக அவன் உடலெல்லாம் ரத்தக்களறியாகக் காட்சி அளிக்க அந்த மல்யுத்த மேடையிலிருந்து கீழே இறங்கினான்.

1 comment:

ஸ்ரீராம். said...

ம்ம்ம்ம்.... ஒரு கணம் பீமனுக்கும் மரண பயம்!