Saturday, September 24, 2016

துரியோதனனுக்கே பட்டம்!

ஷகுனி ஒல்லியாக உயரமாக ஆனால் திடமான உடலுடன் இருந்தான். நெற்றி கொஞ்சம் மேடிட்டிருந்ததால் கண்கள் ஆழத்தில் இருப்பது போல் காணப்பட்டன. அந்த ஆழமான கண்களால் அவன் தனக்கு எதிரிலிருப்பவரைப் பார்க்கும்போது அந்தப் பார்வை இதயத்தின் ஆழத்தில் ஊடுருவுவது போலவும் தோன்றியது. உயர்ரகப் பட்டாடை அணிந்து கைகளிலும் தோள்பட்டைகளிலும் ராஜ வம்சத்துக்கே உரிய ஆபரணங்களை அணிந்து கொண்டு தலையிலும் இளவரசுக் கிரீடம் தரித்துக் காணப்பட்டான். அவன் அரைக்கச்சையிலிருந்து சிறிய வாள் ஒன்று நீட்டிக் கொண்டிருந்தது. பீஷ்மர் தனக்குரிய ஆசனத்தில் அமர்ந்து கொண்டதும், அவருடன் கூடவே வந்திருந்த அரசு ஊழியர் அறைக்கதவின் அருகே சென்று நின்று கொண்டார். பீஷ்மர் ஷகுனியையே சிறிது நேரம் உற்றுப் பார்த்தார். அவர் கண்கள் எப்போதும் போல் மின்னலைப் போல் பிரகாசித்துப் பார்ப்பவருக்கு மனதிற்குள் ஓர் மரியாதையை உண்டாக்கியது. அந்த அறையிலிருந்த மற்ற ஊழியர்களைத் தன் கையசைப்பால் வெளியேறச் சொன்னார் பீஷ்மர். பின்னர் ஷகுனியை அழைத்துத் தன்னருகே போடப்பட்டிருந்த சற்றே சிறியதாக இருந்த அரியணையில் அமரச் சொன்னார். இதன் மூலம் ஷகுனியும் ராஜவம்சம் என்பதை அவர் அங்கீகரிக்கிறார் என்பது வெளிப்படையானது.

ஆனால் பீஷ்மருக்கு உள்ளூர ஷகுனியைப் பிடிக்காது. அவன் இங்கே ஹஸ்தினாபுரத்திற்குத் தன் சகோதரியோடு சேர்ந்து வந்ததே அவருக்கு இஷ்டமில்லை. வந்ததிலிருந்து அவனைப் பிடிக்காமலும் போனது. ஷகுனி கபடமாக நடந்து கொள்வதோடு அல்லாமல் கபடம், சூழ்ச்சி செய்பவர்களை மிகவும் ஆதரித்துப் பாராட்டி வந்தான். அதோடு இப்போது அவன் பாண்டுவின் புத்திரர்கள் ஐவரையும் காட்டிலிருந்து வரவழைத்து ஹஸ்தினாபுரத்தின் மக்களுக்கும் மற்றக் குரு வம்சத்தினருக்கும் அறிமுகம் செய்விப்பதையோ அவர்களையும் இந்த ராஜ்யத்துக்கு உரிய ராஜகுமாரர்கள் என்ற அங்கீகாரம் கொடுப்பதையோ சற்றும் விரும்பாமல் அதற்கு எதிராகக் குரு வம்சத்துத் தலைவர்கள் சிலரைத் தனக்காக ஆதரவு அளிக்கும்படி கேட்டுக் கொண்டிருந்தான். இந்தச் செய்தியும் பீஷ்மர் காதுகள் வரை எட்டி இருந்தது. பாண்டுவுக்கு மனைவியுடன் கூடி இருந்து பிள்ளைகளை அழிக்கும் பாக்கியம் இல்லை என்பதால் அவன் வாரிசில்லாமல் இறந்துவிடுவான் என்றே திருதராஷ்டிரனும், காந்தார அரசனும், திருதராஷ்டிரன் மாமனாரும் ஆன சபலும் நினைத்திருந்தார்கள்.  ஆகவே அடுத்து துரியோதனன் தான் யுவராஜாவாக அறிமுகம் செய்யப்பட்டு குரு வம்சத்து அரியணைக்கும் உரியவனாக ஆகப் போகிறான் என்றே எதிர்பார்த்திருந்தனர். ஆனால் இப்போதோ! பாண்டவர்கள் இங்கே வரப் போகின்றனர் என்பதும் அவர்களுக்கு அங்கீகாரம் கிடைத்துவிடும் என்பதும், அடுத்து யுதிஷ்டிரன் யுவராஜாவாக நியமிக்கக் கூடும் என்பதும் அவர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது.

அதை எல்லாம் நினைத்த பீஷ்மர் ஷகுனியை இப்போது இங்கே பார்த்ததும் என்ன சொல்வதென்று தெரியாமல், “இளவரசே, தங்கள் தகப்பனார் சபல் நல்ல உடல் நலத்துடன் இருக்கிறாரா?” என்று நல விசாரணை செய்தார். இந்த சம்பிரதாயப் பேச்சுக்களால் ஷகுனி பதட்டம் அடைந்தான். தன் கைகளைக் கூப்பிய வண்ணம், “பிதாமகரே, என் தந்தை உடல் நலத்துடனேயே இருக்கிறார். அவர் தங்களுக்கு அனுப்பியுள்ள செய்தியைத் தங்களிடம் சமர்ப்பிக்கவே நான் இங்கே வந்திருக்கிறேன்.” என்றான். பீஷ்மர் அப்படியே அசையாமல் சற்று நேரம் ஷகுனியையே பார்த்த வண்ணம் அமர்ந்திருந்தார். பின்னர் ஷகுனியிடம் கேட்டார்;” என்ன செய்தி?” என்று கேட்டார்.

ஷகுனிக்கு மீண்டும் பதட்டம் ஏற்பட்டது. தன் தலையைத் தடவுகிறாப்போல் தன் கிரீடத்தைச் சரி செய்து கொண்டு தன்னைக் கொஞ்சம் சமாளித்துக் கொண்டான். இப்போதுள்ள மனநிலையில் அவன் பீஷ்மரைச் சந்திக்கவோ அவருடன் பேசவோ விரும்பவில்லை. ஆனால் வேறு வழியில்லை. அவன் பேசித்தான் ஆகவேண்டும். நேரடியாக விஷயத்துக்குப் போய்விடுவோம் என்று ஷகுனி நினைத்தான். தொண்டையைக் கனைத்துச் சரி செய்து கொண்டான். “என் தந்தை மாட்சிமை பொருந்திய காந்தார அரசர் அவர்கள் கூறியது இது தான்;” குரு வம்சத்து அரசரான பாண்டு அவர்கள் முன்னோர்களூடன் கலந்திருக்கப் பித்ரு லோகம் சென்று விட்டார். ஆகவே இப்போது நாடு ராஜா இல்லாமல் இருப்பதால் திருதராஷ்டிரனின் மூத்த மகன் ஆன துரியோதனனை யுவராஜாவாக ஆக்க வேண்டும். இதுவே அவர் வேண்டுகோள்.” என்றான். இதைச் சொல்வதற்குள்ளாக அவனுக்கு வேர்த்து விறுவிறுத்துவிட்டது.

பீஷ்மர் ஏதும் பேசாமல் அமர்ந்திருந்தார். பின்னர் ஷகுனியிடம், “அவ்வளவு தானே! வேறொன்றும் இல்லையே!” என்று கேட்டார். இந்த அதிரடியான கேள்வியால் ஷகுனி திகைத்துப் போனான். ஒருவாறு தன்னைச் சமாளித்துக் கொண்டு, “மதிப்புக்குரிய என் தந்தை உங்களிடம் பெரு மதிப்பு வைத்திருக்கிறார். உங்களைப் போற்றி வணங்குகிறார். துரியோதனனுக்குத் தக்க நீதியை நீங்கள் செய்வீர்கள் என்றும் நம்புகிறார்.” என்று கூறினான். “அதெல்லாம் சரி இளவரசே, காந்தார நாட்டு மன்னர் இதை மட்டுமே கூறினாரா? பாண்டவர்களுக்கு எவ்வகையில் நீதி வழங்க முடியும் என்பதைக் குறித்து அவர் ஒன்றும் சொல்லவில்லையா? துரியோதனனுக்கு மட்டும் நீதி வழங்கினால் போதும் என்று எண்ணி விட்டாரா? இத்தகைய நீதியை துரியோதனனுக்கு வழங்குவது போல் பாண்டவர்களுக்கும் வழங்க வேண்டாமா? அது குறித்து என்ன கூறினார்?”

“என் தந்தை மதிப்புக்குரிய காந்தார அரசர், பாண்டுவின் புத்திரர்கள் எனப்படும் ஐவரையும் நீங்கள் இளவரசர்களாகவும் குரு வம்சத்துக் குழந்தைகளாகவும் ஏற்றுக்கொள்வதற்கு எந்தத் தடையும் கூறவில்லை. தாராளமாக உங்களை அந்தக் குழந்தைகளைப் பாண்டுவின் புத்திரர்களாகவே ஏற்றுக் கொள்ளச் சொல்லி விட்டார். ஆனால் பாண்டுவிற்குப் பின்னர் குரு வம்சத்து அரியணையை திருதராஷ்டிரன் பெற்றெடுத்த பிள்ளையான துரியோதனனுக்கே சேர வேண்டும். அவனுக்கே குரு வம்சத்து அரியணை உரிமையானது!” என்று திக்கித் திணறிச் சொல்லி முடித்தான் ஷகுனி. பீஷ்மர் மீண்டும் சிறிது நேரம் மௌனம் காத்தார். பின்னர், “இன்னும் ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா, காந்தார இளவரசே!” என்று கேட்டார். ஷகுனி, “வேறே ஏதும் இல்லை, பிதாமகரே1” என்று பணிவுடன் கூறினான். பின்னர் தொடர்ந்து, “என் தந்தை ஒரு நல்ல பதிலை இந்தச் செய்திக்கு எதிர்பார்க்கிறார். நீங்கள் நல்ல நீதிமான் என்று பெயரெடுத்தவர். ஆகவே துரியோதனனுக்குத் தக்க நீதியைச் செய்ய வேண்டும்.” என்றும் கூறினான்.

அவன் கேள்விக்குப் பதிலே சொல்லாத பீஷ்மர் மேலும் தொடர்ந்து ஷகுனியிடம் கேட்டார். “காந்தார இளவரசே! நீங்கள் குரு வம்சத்துத் தலைவர்கள் சிலரிடம் பேசிப் பாண்டுவின் புத்திரர்களை இளவரசர்களாக அங்கீகாரம் செய்யக் கூடாது என்று கேட்டு அதற்காக ஆதரவு திரட்டுவதாகக் கேள்விப் பட்டேன்! அது உண்மையா?” என்று அதிகாரத் தொனியில் கேட்டார். இவ்வளவு வெளிப்படையாகத் தன்னிடம் நேரிலேயே பீஷ்மர் இப்படி ஒரு கேள்வியைக் கேட்பார் என்பதை எதிர்பார்க்காத ஷகுனி சற்றே மன்னிப்புக் கேட்கும் தோரணையில், “நான் அப்படி ஒரு காரணத்துக்காக அவர்களிடம் பேசவில்லை!” என்று கூறினான். “அப்படியா? பின்னர் அவர்கள் தாமாகவே உம்மை நாடி வந்தார்களோ?” பீஷ்மர் கேட்டார். இந்தக் கேள்வியைத் தவிர்க்க விரும்பினான் ஷகுனி. நேரடியான பதிலை மட்டும் பின்னர் தவிர்த்துவிட்டு, “அவர்கள் அனைவரும் நீங்கள் பாண்டுவின் புத்திரர்களை அங்கீகாரம் செய்துவிட்டு யுதிஷ்டிரனை யுவராஜாவா அங்கீகாரம் செய்து அறிவிக்கப் போகிறீர்களா என்பதை அறிவதில் ஆர்வமுடன் இருக்கின்றனர்.” என்று சுற்றி வளைத்து பதில் கூறினான்.

“இதற்காக நீர் சில ஸ்ரோத்திரியர்களையும் கண்டு பேசி இருக்கிறீர்கள்.” பீஷ்மரின் இந்த நேரடித் தாக்குதலை ஷகுனி சிறிதும் எதிர்பார்க்கவே இல்லை. ஏனெனில் அவன் மிகவும் ரகசியமாக ஒரு சில ஸ்ரோத்திரியர்களைக் கண்டு இது குறித்துப் பேசி இருந்தான். ஆனால் எப்படியோ அது பீஷ்மருக்குத் தெரிந்திருக்கிறதே! ஷகுனிக்கு அதிர்ச்சியாக இருந்தது. “அப்படி எல்லாம் இல்லை, பிதாமகரே! ஸ்ரோத்திரியர்களைக் கண்டு நான் பேசினதன் காரணம் என்னவெனில் அவர்களிடம் இருந்து குரு வம்சத்துப் பழைய நடைமுறைகளின் படியும் இப்போதுள்ள சூழ்நிலைகளின் படியும் துரியோதனன் யுவராஜாவாக ஆக முடியுமா என்பதைத் தெரிந்து கொள்வதற்காகவே அவர்களிடம் பேசினேன்.”

“ம்ம்ம்ம், நம் அரண்மனையின் முன்னாள் ராஜகுரு ஆசாரிய விபூதியையும், இப்போதைய ராஜகுருவான ஆசாரிய பாரத்வாஜரையும் கண்டு பேசினீர்களா?”

“இல்லை, பிதாமகரே, இல்லை!”

“ஓ, அப்படியா? அப்படி எனில் நீங்கள் அவர்களுடன் எங்கள் வம்சத்துப் பாரம்பரிய நடைமுறைகள் குறித்துக் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.” என்ற பீஷ்மர் தனக்குத் தானே பேசிக்கொள்ளும் தோரணையில் மேலும் பேசினார்;” ஆனால் அவர் ஒரு வித்தியாசமான ஸ்ரோத்திரியர். வித்வத் சன்ஸதின் கருத்துக்களையே எதிர்கொண்டு சவாலை எதிர்நோக்கி இருக்கிறார். தர்மக்ஷேத்திரத்தில் ஆசாரியரால் அங்கீகரிக்கப்பட்டதையே எதிர் கொண்டிருக்கிறார்.”

“இதைக் குறித்து ஆசாரியரின் கருத்து என்ன பிதாமகரே!” என்ற ஷகுனி தனக்குள் மேலும், “அதை நான் தெரிந்து கொண்டே ஆகவேண்டும். ஆசாரியரையே எதிர்த்து நிற்கும் ஓர் ஸ்ரோத்திரியன் எப்படிப்பட்டவனாக இருப்பான்?”” என்று தனக்குள்ளாக முணுமுணுத்தான். பீஷ்மர் அதற்குக் கிட்டத்தட்ட ஓர் ஆணையாக, “குரு வம்சத்துக் கடைசி அரசன் பாண்டு தான்! இப்போது அவன் இறந்து விட்டான். ஆகவே அவனுக்குப் பின்னர் அவன் குழந்தைகளே அவனுடைய வாரிசாக ஆகின்றனர். இந்த அரியணையும் அவர்களுக்கே உரியது! இப்போது பாண்டு உயிருடன் இருந்திருந்தாலும் இது தான் நடந்திருக்கும். பாண்டு இல்லாத இந்த நிலையில் இதை நடத்தி வைக்கவேண்டிய பொறுப்பு என்னுடையது!” என்று முடிவாகக் கூறினார்.

1 comment:

ஸ்ரீராம். said...

//பிள்ளைகளை அழிக்கும் பாக்கியம் இல்லை //

அளிக்கும்

துரியோதனன், தர்மர் இருவரில் யார் மூத்தவர்?